தினந்தோறும் ஞாயிறாய்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 25,114 
 

அறிவழகனுக்கு “ஞாயிறு’ என்றால் ரொம்பப் பிடிக்கும். தினந்தோறும் ஞாயிறாய் இருக்கக் கூடாதா என்று ஏங்காத நாளே இல்லை எனலாம்.
அவனுக்கு அவ்வளவு பிடிக்குதே, அந்த ஞாயிறில் அப்படி என்னதான் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். உங்களுக்குத் தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்.

ஞாயிறென்றால், அதிகாலையில் எழத் தேவையில்லை. ஜாலியாக 8, 8.30 வரை கூடத் தூங்கலாம். ஞாயிறன்றுதான் அம்மா அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்வார்.

தினந்தோறும் ஞாயிறாய்சனிக்கிழமையே வீட்டுப்பாடம் எல்லாம் முடித்து விடுவதால் ஞாயிறன்று தம்பியுடன் சேர்ந்து நன்றாக விளையாடுவான். வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாட, சிறிது நேரம் அதிகமாக அம்மா அனுமதிப்பாள். தாத்தாவோ நிறையக் கதைகள் சொல்வார். ஓவ்வொரு ஞாயிறன்றும் அப்பா தவறாமல் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்வார். அது பூங்காவோ, மியூசியமோ, “பீச்”-ஓ எதுவாகவும் இருக்கும். கம்ப்யூட்டர் கேம் கூட விளையாட அனுமதி கிடைக்கும். அன்று எத்தகைய கட்டுப்பாடும் இருக்காது. ஜாலியோ ஜாலி. அட, அதனால்தான் அறிவழகனுக்கு ஞாயிறு கொள்ளைப் பிரியம், பின்னே இருக்காதா? என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.

அன்றும் அப்படித்தான்… ஞாற்றுக்கிழமை முடிந்து விட்டதே, மீண்டும் “ஞாயிறு” வருவதற்கு இன்னும் 6 நாட்கள் காத்திருக்க வேண்டுமே எனும் வருத்தத்துடன் படுக்கைக்குச் சென்றான் அறிவழகன்.

மறுநாள் காலை அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், மறுநாளும் “ஞாயிறு’தான்.

ஆனால் நேற்றுப் போன ஞாயிறைவிட இன்று கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. அம்மா அவனை இன்று அதிகாலையிலேயே எழுப்பிவிட்டார். நேற்றைவிட சற்றுக் குறைவான அளவே விளையாடவும் அனுமதித்தார். அப்பாவும் சிறிது நேரமே வெளியே கூட்டிச் சென்றார். தாத்தா ஒரே ஒரு கதை சொன்னார். தம்பியும் விளையாட சோம்பல்பட்டான். அன்றைய நாளும் கழிந்தது.

மறுநாள் காலை, என்ன ஆச்சரியம்! காலண்டரைப் பார்த்தான். அன்றும் “ஞாயிறு’ என்றே எழுதியிருந்தது. அப்பாடா! ஆனால் இது என்ன தம்பியைக் காணோம்! “அம்மா தமிழ் (தம்பி பேர் தமிழழகன்) எங்கேம்மா?’ “அவனா, ஸ்கூலுக்குப் போய்ட்டான்’

“ஸ்கூலா” என்று கேட்க,

“நீதான் எவ்வளவு எழுப்பியும் எழவில்லையே’ என்று அம்மா சொல்ல அவனுக்கு ஓன்றுமே புரியவில்லை.

நேராகத் தாத்தாவிடம் சென்றான். “தாத்தா கதை சொல்லுங்க’ என்றான். அவர் அன்றைய தினமணி பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். “எனக்கு டைம் இல்லை. பேப்பர் படிக்கணும், காய் வாங்கப் போகணும், என் பிரண்ட் வீட்டுக்குப் போகணும்’ என்றார். அறிவழகனுக்கு வருத்தமாகப் போய்விட்டது.

அம்மாவிடம் ஓடி வந்தவன் “அம்மா எனக்கு அதிரசம் சுட்டுத் தாம்மா’ என்றான் அன்பொழுக. அம்மாவோ “காலையிலேர்ந்து வேலையே சரியா இருக்கு. மதியம் சாப்பாடு செய்யணும். கோதுமை கிளீன் பண்ணி அரைக்கக் கொடுக்கணும். அரிசி கழுவி காய வைக்கணும். எல்லோருடைய டிரஸ்ûஸயும் அயர்ன் செய்யணும். போ, போய் டிபன் சாப்பிடு’ என்று கொஞ்சம் சத்தமாக சொல்லவே அவனுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது.

டிபன் சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் விளையாட வெளியில் வந்தால், தெருவில் யாரையும் காணோம். போர் அடித்தது.

எப்படியோ மாலை வந்தது. அப்பா வந்து விட்டார். ‘அப்பா, அப்பா பார்க்குக்கு போலாம்பா’

அலுவலகப் பணி விஷயமாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அவர் “போ போயீ வேலையைப் பார்’ என்று அதட்டினார். அழுது கொண்டே தன் அறைக்கு வந்தால் தம்பி அங்கு வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தான். அம்மா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். சோர்வுடன் வந்த தன் மகனை கூப்பிட்டார் அம்மா, “ஏய் அறிவு! இங்க வா!’ அம்மா இந்த மாதிரி அதட்டிப் பேசறதில்லையே… என்று எண்ணியவனுக்குக் கண்ணில் குபுகுபுவென்று கண்ணீர் கொட்டியது.

“நானும் காலையிலேர்ந்து பார்க்கிறேன். முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டிருக்கே. செல்லம் அதிகமாயிடுச்சு… உன்னை ஏதாவது ஹாஸ்டல்லே சேர்த்திடலாமான்னு யோசிக்கறேன்’

“அம்மா, வேண்டாம்மா, உன்னைவிட்டு நான் எங்கும் போகமாட்டேன் அம்மா, அம்மா’ என்று புலம்பியவனை, அம்மா வந்து எழுப்பினார். “அறிவு, செல்லம், என்னடா ஆச்சு? தூக்கத்தில் கெட்ட கனவு ஏதாவது கண்டியா?’
அட இத்தனையும் கனவா? தன் அம்மாவிடம் தான் கனவாகக் கண்டதைக் கூறினான் அறிவழகன். மடியில் முகம் புதைத்தவனின் தலைமுடியை அம்மா செல்லமாகக் கோதிவிட்டார்.

“அறிவு! இங்கே பாருப்பா, உலகத்திலே எந்த ஒரு உயிரும் தினமும் ஓய்வா இருக்க விரும்பறதில்லை. இது இயற்கையோட நியதி. சின்னக் குருவி கூட உணவு தேடிப் போகும். உழைச்சாதான் நாம உடல்நலத்தோட இருக்கமுடியும். நானும் உன் அப்பாவும் ஓய்வாகவே இருக்க நினைச்சிருந்தா, உங்களை எல்லாம் யார் கவனிப்பாங்க? இப்ப பாரு, உங்க தாத்தா இளமையிலே உழைச்சாரு… இப்ப ஓய்வா இருக்காரு. அதே போலத்தான் நானும், நீயும். இப்ப நீ டெய்லி ஸ்கூலுக்குப் போய் உழைச்சா, எதிர்காலத்திலே நிம்மதியா இருக்கலாம். நிழலின் அருமை வெயிலில் தெரியும்பாங்க. இந்தத் திங்கள்,செவ்வாய் எல்லாம் இருக்கறதாலதான் “ஞாயிறு” நமக்கு நல்லா இருக்கு!’ என்று நிதானமாக அம்மா விளக்க, தெளிவடைந்தவனாக, அறிவு புன்னகைத்தான்.

என்ன நீங்களும் டெய்லி அம்மாவுக்குத் தொல்லை தராம ஸ்கூலுக்குப் போற பிள்ளைங்கதானே!

– அ.ரிஸ்வானா (அக்டோபர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *