கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2023
பார்வையிட்டோர்: 911 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆப்பிரிக்காவின் சகாராப் பாலைவனத்தினூடாக அந்த இரு ஒட்டகங்களும் நடந்து கொண்டிருந்தன.

‘கெய்ரோ’ நகரத்தை நோக்கி அவற்றின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. சற்று இளைப்பாறலாம் என்று கீழே விழுந்து கிடக்கும் நிழல் துண்டங்களை ஆவலுடன் தேடின.

வெகுதூரத்திற்கு ஒன்றுமே தென்படவில்லை. மணல்! மணல்! ஒரே மணல்!

கால்களில் மௌனமாய் உள்ளுக்குள்ளே தெறிக்கும்

ஊமை வலி!

நேரம் உச்சி மத்தியானம்.

“இனிமேல் என்னால் நடக்கவே முடியாது” என்றது ‘பண்டேலா’ என்ற ஒட்டகம்.

“எனக்கும்தான் படுக்க வேண்டும் என்று ஒவ்வொரு உறுப்பும் கெஞ்சுகிறது. ஆனால் என்ன செய்வது? புறப்பட்டு விட்டோம். யாத்திரையை இடையில் நிறுத்தக் கூடாது. இன்னும் கொஞ்சம் வா பார்ப்போம்” என்றது. ‘மோத்தா’ என்ற மற்ற ஒட்டகம்.

உடலை எளிப்பது போல் தாக்கும் வெயில். மெதுவாக நடந்தன இரண்டும்.

“முதுகில் பாரம் இல்லாமலே இப்படி மெல்லமாய் நடக்கிறம்” என்று அலுத்துக் கொண்டது பண்டேலா

‘ஆ… அந்தா… அந்தா…. பேரீச்சமரமும் தண்ணீரும் தெரியுது வா… வா… கெதியாய் வா …” என்று திடீரென துள்ளியது மோத்தா.

அது சுட்டிய திசையில் மற்றதும் பார்த்தது.

“ஆமாம்.. ஆமாம்.. இரண்டு பேரீச்ச மரங்களும் நீரும்..” என்று துள்ளி ஓடியது மற்றது.

“ஒட்டகம் தண்ணீர் குடிக்காமல் பல நாள் இருக்கும் என்று பெயர் எடுத்த நாங்களே இந்தப் பாடுபட வேண்டி இருக்கு” என்று கூறிக் கொண்டே இரண்டும் விரைந்தன. இவை ஓட ஓட.. நீரும் அப்பால் ஓடிக் கொண்டே இருந்தது.

“இதென்னப்பா? கைக்கெட்டினது வாய்க்கெட்டு தில்லை…

“கானல் நீர் போலத் தள்ளித் தள்ளிப் போகுது..”

“அப்ப… இதுதான் கானல் நீரோ ?”

“அப்படித்தான் இருக்க வேணும்”

“உனக்கு எப்படித் தெரியும்?’

“நான் பள்ளிக்கூடம் போனேன் சிறிது காலம் அப்ப ரீச்சர் படிப்பிச்சவ”

“கானல் நீர் தெரியும் கவனம் என்றோ?”

“ஓம் .. விஞ்ஞான ரீச்சர்..”

“எனக்கு விளங்கேல்லை..”

‘நான் விளங்கப்படுத்திறன்’ என்று பேரீந்து மர நிழலில் குந்திக் கொண்டது பண்டேலா.

“சரி சொல்லு..” “இந்தப் பேரீச்ச மரத்தின் விம்பம் கீழே தெரிஞ்சிருக்கு. அதுதான் நாங்கள் நீர் நிற்குதென்று நினச்சு ஏமாந்திட்டம்.”

“நீர் இல்லாமல் விம்பம் எப்படித் தெரியும்?” “சூரியனின் வெப்பம் காற்றினூடாக வந்தாலும், பூமியின் மேற்பரப்புத்தான் அதிகம் வெப்பமாகுது.”

“ம்..”

“இந்த வெப்பம் அருகிலுள்ள காற்றுப் படைகளுக்கு மெதுவாக போய்ச் சேருகிறது”

“சொல்லு”

“கீழே உள்ள காற்றுப்படை அதற்கு மேலே உள்ள காற்றுப் படையைவிட அடர்த்தி குறைஞ்சு இருக்கு..” “சரி” சூரிய” ஒளி அடர்த்தி கூடிய ஊடகத்தில் இருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்திற்கு வருது .. “வரட்டன்”

“அப்ப.. செவ்வனை விட்டு விலகி முறியுது”

“ம்..”

“ஒரு நேரத்திலை முற்றாக முழு அகத் தெறிப்பு அடையுது ..”

“கீறிக் காட்டு பாப்பம்…”

சூரிய ஒளிக்கதிர் முழு அகத் தெறிப்பு அடையும் முறையை மணலில் கதிர்ப்படமாய்க் கீறிக் காட்டியது பண்டேலா.

“விளங்கிட்டுது..”

“எங்கடை கண் ஒளி நேர்கோட்டில் வரும் என்றுதான் நினைக்கும் “

“அதனால் விம்பம் கீழே தெரியுது..”

“பாத்தியே உனக்கும் விளங்கிட்டுது..”

“இந்த மனிதருக்கெல்லாம் விளங்குது எனக்கு விளங்காதோ?”

“அப்ப, நீ மனிசரை விடக் கெட்டிக்காறனோ?”

“ஓ அதுதானே அவை எனக்கு மேலே ஏறிப்பிரயாணம் செய்யினம்… அவையை ஒருக்கா இந்தப் பாலைவனத் திலை நடந்து போகச் சொல்லு பாப்பம்…”

“சரி.. கதை சொல்லிக் களை மாறிட்டுது. இனி நடப்பம்” என்று எழுந்தது பண்டேலா..

கைதேர்ந்த ஓவியன் தூரிகையில் அகப்பட்ட வர்ணத்தை அங்கு மிங்கும் அள்ளித் தெளித்தாற் போல் அந்திவானம் தென்பட மாலை நேரத்தில் அவை “கெய்ரோ “நகரை அண்மித்துவிட்டன.

– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.

Print Friendly, PDF & Email
கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *