அன்பே மனிதமாய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 38,105 
 

அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது.

இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை உண்டு.

நேரம் நடு இரவையும் தாண்டிவிட்டது. தூக்கமும் போய்விட்டது. ரகுநாதன் சொல்லிக்கொண்டே வந்தார். காதுகள்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றன; மனசு எங்கெல்லாமோ போய்ப் போய் வந்துகொண்டு இருக்கிறது.

வாங்கக் கவிஞர். ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர்.

இந்தக் கதை சொல்லிகளுக்கே ஏதாவது ஒரு பழக்கம் இருக்கும் போலிருக்கு! ஒரு பாக்குப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வாய்குள் தட்டி, அந்தத் தாளைச் சுருட்டி அதை ஜேபிக்குள் போட்டுக்கொண்டு தீப்பெட்டியையும் சிகரெட்டையும் எடுத்தார், சுற்றிலும் பார்த்துக்கொண்டு.

நடராஜனுக்கு முன்னால் அவர் புகைப்பது இல்லை; பாக்குப் பொட்ட லத்தோடு நிறுத்திக்கொள்வார் (ஒரு மரியாதைதான்).

ரகுநாதன் அளவுக்கு நான் ஹரீந்திரநாத்தைப் படித்தது இல்லை. அப்படி ஓர் ஈடுபாடு அவருக்கு.

அந்தச் சமயத்தில் – நாற்பதுகளில் – ஹரீந்திரநாத்தின் ‘கூண்டுக்கிளி’ என்ற நாடகங்கள் அய்ந்து கொண்ட ஒரு தொகுதி தமிழில் வந்திருந்தது. அதை மட்டுமே நான் படித்து இருந்தேன். அதை இப்போது – கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கழித்தும் – நினைத்துப்பார்த்தால்… பெண்ணுக்கு நாம் கொடுத்திருப்பது தங்கத்தால் செய்த கிளிக்கூண்டு மட்டும்தான் என்பதே நினைவுக்கு வருகிறது.

முன்னொரு சமயம் நான் நெல்லை டவுனுக்குப் போயிந்தபோது, பருவத சிங்கராஜ மேலத் தெருவுக்குப் போனேன். ரகுநாதனுக்கு தலைக்குழந்தை – ஆண் – பிறந்து இருந்தது.

“என்னவே பெயர் வெச்சி ருக்கீர்?” – கேட்டேன்.

“ஹரீந்திரன்” என்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து, அதன்பின் கூடிய மக்கள் சபைக் கூட்டங்களில் அப்போது – எம்.பி-யாகி இருந்த கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய பாடிய கவிதைகளை பிரதமர் நேருவும் விரும்பிக் கேட்பார் என்று தின இதழ்களில் படித்து இருக்கிறேன்.

வாயினுள் போட்டுக்கொண்ட பாக்குத்தூள் பதத்துக்கு வந்ததும், ரகுநாதன் சிகரெட்டைப் பற்றவைத்துச் சுகமாக ஓர் இழுப்பு இழுத்து அனுபவித்துப் புகையை விட்டார். “அப்பேர்ப்பட்ட ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவும் அவரது காதலியான கமலாதேவி சட்டோபாத்யாயவும் இதே இந்தக் குற்றாலத்துக்குத்தான் தேனிலவுக்காக வந்திருந்தார்கள். அது திருமணமான புதுசு. ஹரீந்திரநாத் இசைப் பிரியர். பிரமாதமாக ஆர்மோனியம் வாசிப்பாராம். வடநாட்டு இசைக்கும் ஆர்மோனியத்துக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்; நமது இசைக்கும் வயலினுக்கும் போல.

தேன்நிலவு, எந்த இடத்தில் கைப்பு தோன்றியதோ தெரியவில்லை. அந்த அழகு ஜோடியின் பேரில் எந்தக் கண் விழுந்ததோ என்றும் தெரியவில்லை. வந்த வேகத்திலேயே அவர்கள் பிரிந் தார்கள்! பிறகு ஒன்று சேரவே இல்லை.”

மௌனம் ஆனோம் நாங்கள்.

ஹோ… என்ற அருவிகளின் சத்தம் மட்டுந்தான் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஏன்… எதனால்?

அந்த அபஸ்வர ஒலிப்பு முதலில் எந்தப் பக்கத்தில் கிளம் பியது. அல்லது மௌனமாகப் பிரிந்தார்களா?

இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார் ரகுநாதன்.

எதிரொலிபோல என்னுள் ஒரு சம்பவம் மனக்கண்ணில் தோன்றியது. விவரிக்க ஆரம்பித் தேன்.

என்னுள் முதலில் ஒரு சிரிப்பு தோன்றி மறைந்தது. ‘ஒருவருக்குச் சிரிப்பு மற்றவருக்குக் கைப்பு’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. புறணி அல்ல இது.

கொத்தூர் நாயக்கர் வீட்டுச் சண்டை என்றால், மற்றத் தெருச் சண்டையைப்போலத் தெரு கூடி நின்று வேடிக்கை பார்க்க முடியாது! சர்…. சர் என்று கல்லெறிகள் பறக்கும் அவர்களுக்குள். ஒரு விநோதமான புருஷன் பெண்டாட்டிச் சண்டை!

மனஸ்தாபம், சண்டை என் றால் வார்த்தைகள் அல்லவா வர வேண்டும். அப்படி வந்தால் அல்லவா அது என்ன ஏது என்று தெரியும். அதனால்தானோ என்னமோ அவர்களுக்குள் பேச்சுவார்த்தையே கிடை யாது.

மனம்விட்டுப் பேசலாமே; பேசித் தீர்த்துக்கொள்ளலாமே.

பேசித் தீர்க்கிறதா! வாயைத் திறந்தாலே அது சண்டையாக மாறிவிடும்போது, ‘மனசைத் தொறந்து’ எங்கே பேசுறது? அப்படி ஒரு கோபம்; அண்டகிடாரம் முட்டிப் புறப்படும் கோபம் அவர்களுக்குள்.

வருத்தங்களையும் கோபங்களையும் மனசுக்குள்ளேயே போட்டுப் பொசுக்கி நீராக நீர்த்துவிடுகிறது என்று சொல்வார்கள். ‘முடியலையே, ஐயோ முடியலையே’ என்று குமுறிக் குமுறி அழுவார்கள். அப்படி அழுதாலே குறைந்துவிடும்.

இவர்கள் அப்படிச் செய்த தாகவும் தெரியவில்லை.

எங்கள் வீட்டு மாட்டுத்தொழு சன்னல் வழியாகப் பார்த்தால், கிட்டத்தட்டஅவர் கள் வீட்டுக்குள் நடக்கும் காரியங்கள் தெரியும். கொளத்தூர் நாயக்கர் வேலைக்குப் போய் விட்டு அலுத்துச் சலித்து வீட்டுக்கு வருவார். நேராகப் பானயடிக்குப் போய் கால் கை முகம் கழுவுவார். அந்தச் சத்தம் கேட்டவுடன் சாப்பிட வருகிறார் என்று அர்த்தம். எல்லாத்தையும் எடுத்துவைத்துவிட்டு வெளியே வந்துவிடுவார் அவருடைய மனைவி.

அம்மா, அப்பா வீட்டுக்குள் இருந்தால் பிள்ளைகள் வெளியேறிவிடுவார்கள். ஒரே ஒரு பையனால் வெளியே போக முடியாது. அவனால் நடக்க ஏலாது. மூளை வளர்ச்சி இல்லாதவன். யாரைப் பார்த்தாலும் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் மேலுங்கீழுமாக அசைத்துக்கொண்டு இருப்பான். விட்டுவிட்டுக் கொன்னலாகப் பேசும் பொருள், அந்தக் குடும்பத்தாருக்குத் தவிர வேற யாருக்கும் விளங்காது. அம்மா, அப்பா போடும் கல்லெறிச் சண்டையை இந்த ‘அளகில்’தான் பார்த்துக்கொண்டு இருப்பான், சிரித்துக்கொண்டே தலையை மேலும் கீழும் அசைத்து.

கொத்தூர் நாயக்கருக்கு ‘வீடு நிறைய்ய’ப் பிள்ளைகள்; எல்லாம் அவருடைய முக ஜாடையில்.

“இது மாத்திரம் எப்படி வே!” என்று கேட்டார் சீனி நாயக்கர்.

“அது நம்ம கையிலா இருக்கு” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டிச் சிரித்தார் ஓவு ரெட்டியார்.

இந்தச் சண்டை எப்படி ஓர் அதிசயமோ அப்படித்தான் பிள்ளை குட்டி உண்டாவதும்!

இவர்களுடைய முதல் இரவு எப்படி இருந்து இருக்கும் என்று ஒருநாள் என்னிடம் கேட்டார் சீனி நாயக்கர்.

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. யூகங்களின் அடிப்படையில் பேசுவது சரியாக இருக்காது என்றேன். ஒன்று மட்டும் தெரிகிறது, இவர்களுக்குள் கல்யாணம் ஆகியிருக்கக் கூடாது. அதில் இருந்து எப்படி மீள என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்க மனசுதான் வலிக்கிறது.

இவர்களுடைய சண்டை எந்தப் பஞ்சாயத்துக்கும் போனது இல்லை. இப்படியே முக்கால் வாசி வாழ்நாள் கழிந்துபோய்விட்டது.

கொத்தூர் தம்பதியின் கதையை விரிவாகச் சொல்லாமல் சுருக்கியே சொன்னேன். ரகுநாதன் ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாய்க்குள் தட்டி, சிகரெட்டுக்காகப் பாக்கெட்டைத் தடவினார். சிகரெட் பெட்டி காலி.

நேரம் விடியலை நெருங்கிக்கொண்டு இருந் தது. மழை கொட்ட ஆரம்பித்தது. வெரிக்க நீண்ட நேரம் பிடித்தது.

பெரிய அருவியை நோக்கிப் போனோம். தொம்தொம் என்று ஆரவாரமாகக் குதித்துக் குதித்துக் கொட்டிக்கொண்டு இருந்தது; அழுங்கல் நிறத்தில். இப்போதைக்குள் குளிக்க முடியாது. திரு நீற்றைப்போல வெண்மைநிறமாக அருவி மாறும்வரை காத்து இருக்க வேண்டும்.

மலை மேல் ஏறிக் காட்டினுள் போவோமே என்று தோன்றியது. அங்கே சில் வண்டுகள் தம்புரா ஸ்ருதி போல் ஓசைவிடும். காடு நிறைந்து கேட்கும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அருவிகளின் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அருவியே இல்லாத குற்றாலமும் உண்டு.

குறும்பாலா ஈஸ்வரரின் கோயில் வடமேற்கு மூலையில் குமந்தான் ஊற்று என்று இருக்கிறது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்; அடக்க மாக.

கடினமான மலைப் பாறைகளுக்கு இடையில் இருந்து அன்பு கசிந்து வருவதைப்போல அந்தக் கொமந்தான் ஊற்று நீர் ஒரு குழாய் வழியாக இரவும் பகலும் வருஷம் முந்நூற்று அறுபத்து ஐந்து நாட்களுமே கொட்டிக்கொண்டே இருக்கிறது இந்த உலகத்தினருக்காக!

– ஆகஸ்ட் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *