சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்னும் ஊர், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம். அந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, கர்நாடக நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கட்குச், “சுந்திரகிரி மன்னர்கள்’ என்று பெயர். அம்மன்னர்களது ஆட்சியை, அவர்களுடைய அழிந்த கோட்டைகளும், அகழியும் நினைவுபடுத்துகின்றன. அவற்றைச் சார்ந்துள்ள மலைக்கு, “சந்திரகிரி’ என்று பெயர். அந்த மலைச்சரிவில் அமைந்த தலைநகரும், சந்திரகிரி என்னும் பெயரையே பெற்றிருந்தது.
அந்நகரத்தில், நாகம்மாள் என்னும் பெண்மணி வாழ்ந்து வந்தாள். அப்பெண்மணி ஓர் அந்தணனின் மனைவி. நாகம்மாளின் நல்வினைப் பயனால், அவளுக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்கு, “திம்மரசு’ என்னும் பெயர் சூட்டி, அருமைமிகு வளர்ந்து வந்தனர்.
நாகம்மாள், அதன் பின்னர் பிறந்த ஓர் ஆண் குழந்தைக்கு கோவிந்தராசு என்னும் பெயரையும், பெண் குழந்தைக்கு கிருஷ்ணாம்பாள் என்னும் பெயரையும் சூட்டி மகிழ்ந்தாள்.
திம்மரசு, கோவிந்தராசு, கிருஷ்ணாம்பாள் ஆகிய மூவரும் சிறுவர்களாக இருந்தபோதே, அவர்களுடைய பெற்றோர் இறந்து விட்டனர். தாய்ப் பறவையை இழந்த, சிறகு முளைக்காத குஞ்சுகள் போலப் பிள்ளைகள் மூவரும் அல்லலுற்றனர்.
அவர்களுக்கு உண்ண உணவில்லை; உடுத்த உடை இல்லை. அவர்கள் மிகவும் வறுமையில் வாடினர். உடன் பிறந்தாரைப் பாதுகாக்கும் பொறுப்பு திம்மரசுக்கு உரியதாயிற்று. திம்மரசு இளைஞர். அவர் என்ன செய்வார் பாவம்!
திம்மரசு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி வந்து, தம்முடன் பிறந்தவர்களுக்குக் கொடுத்து, தாமும் உண்டு ஒருவாறு காலத்தைக் கழித்து வந்தார்.
திம்மரசு பிச்சை வாங்கச் செல்லும்போது, அவரது உள்ளம் உருகும்; உடல் நடுங்கும்; மென்மையான முகத்தில் துன்பம் தோன்றும்; கண்களில் நீர் நிறைந்து வழியும்; பிச்சை இடாதவரின் கடுஞ்சொல்லும், சுடுமுகமும், அவரது துன்பத்தை மேலும் மேலும் வளர்த்த வண்ணம் இருந்தன.
அந்நிலையில், திம்மரசின் பிஞ்சு உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றி, அவரை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது. “எப்படியாவது நாம் படித்துவிட்டால் இந்த இழி தொழிலை விட்டு விடலாம்!’ என்று நினைத்தார்.
அந்த வருத்தத்தினிடையே திம்மரசு, “படித்தேயாக வேண்டும்’ என்னும் முடிவைக் கொண்டார். உடனே அந்த ஊரில் இருந்த ஆசிரியரை அடைந்து, வணங்கி நின்று, “”ஐயா! படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகிறது. நான் எடுப்பதோ பிச்சை, உடுப்பதோ கந்தல் ஆடை. நீங்கள் அருள்கூர்ந்து அடியேனுக்குக் கல்விச் செல்வத்தைக் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளில் அடியேனும் ஒருவன்!” என்று கூறினார்.
அதைக் கேட்ட ஆசிரியர், தம் கையில் இருந்த பிரம்பைக் கீழே வைத்தார்; சிறுவனாகிய திம்மரசை நோக்கினார். “”சிறுவனே! உன் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது. அது எல்லாருடைய உள்ளத்திலும் உண்டாகிற அழுக்கில்லாத ஆசை. இங்குக் கிடக்கும் பனையோலைகளே உனக்குப் பெருவாழ்வளிக்கும் பொன்னேடுகள். இப்பனையோலையில் எழுதி தருகிறேன். நீ படித்துக்கொள்!” என்று கூறினார்.
திம்மரசின் உள்ளம் குளிர்ந்தது; முகம் மலர்ந்தது.
அன்றே திம்மரசு படிக்கத் தொடங்கினார். “இன்ன நேரத்தில் இன்ன வேலை செய்ய வேண்டும்’ என்று ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்; முறைப்படி கடமை புரிந்தார்.
திம்மரசு தெலுங்கில் ஓரளவு அறிவு பெற்ற பின், வடமொழியையும் பயின்றார். அவர் இரு மொழிகளிலும் உள்ள இலக்கிய இலக்கணங்களை நன்கு பயின்றார். அதன் பின்னர், மனு முதலியோர் இயற்றிய பொருள் நூல்களையும், வியாசர் முதலியோர் இயற்றிய நீதி நூல்களையும், நீதி சாஸ்திர நூல்களையும் கற்றுப் பெரும்புலமை பெற்றார்.
திம்மரசு இரவு பகலாக இருபது வயது வரை கற்றார். கல்வியும், ஒழுக்கமும் அவருக்கு இரு கண்களாக இருந்தன. தமக்கு உண்டாகும் ஐயங்களைப் போக்கிக் கொள்ளவும், நூற்பொருளை அறிந்து கொள்ளவும் பலர் அவரது குடிசைக்குச் சென்றனர்.
உணவு தேடி வீடு வீடாகச் சென்ற திம்மரசை, பொருள் தேடி வந்து சேர்ந்தது. அவரது ஓலைக் குடிசை, உயர்ந்த மாளிகை ஆயிற்று. பின்னாளில் நாட்டின் முதல் மந்திரியாக உயர்ந்து பேரும் புகழும் பெற்றார்.
– செப்டம்பர் 03,2010