தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,072 
 

சிறந்த நிர்வாகத்தில் இயங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளங்கோ ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார்கள். கல்யாணத்துக்குத் தயாராக ஒரு அக்காவும் இருந்தார்.

வாடகை வீட்டில் வசித்து வந்த அவர்களால் வயதுவந்த பெண்ணின் கல்யாணத்துக்காக பணம் சேமிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இளங்கோவைப் படிக்க வைப்பதற்கே பெருமளவு செலவாகிப் போய்விடும். எப்படியோ கடன்பட்டு, கல்வி உதவித் தொகை வாங்கியும் பிறரிடம் கையேந்தியும்தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கனவே கலையாதேஅவனுக்கு நன்றாகப் படிப்பு வந்த ஒரே காரணத்தால்தான் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது குடும்பத்தின் எதிர்காலம் தன்னை நம்பித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த இளங்கோவும் நன்றாகப் படித்து வந்தான்.

அக்காவுக்குக் கல்யாணம், அப்பாவுக்கு வேலையிலிருந்து ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதுதான் படிக்கும் காலத்தில் அவனது கனவாக இருந்தது.

தான் படித்ததை வைத்து ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆதங்கமும் அவனுக்குள் இருந்தது.

அதே வேளையில், படித்த எத்தனையோ பேர் வேலை தேடுவதையே வேலையாகக் கொண்டிருப்பதைப் பார்த்து மனதுக்குள் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க வேண்டியவர்கள் நல்ல வேலை கிடைக்காததால் வெறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்வதைப் பார்த்து மனதில் கலக்கம் ஏற்பட்டது.

இறுதியாண்டில் படிக்கும் அவன் இறைவன் தனது எதிர்காலத்தை எப்படி எழுதியிருக்கின்றானோ என்றும் அவ்வப்போது எண்ணிக் கொள்வான்.

குடும்பமே கஷ்டப்பட்டுத் தன்னைப் படிக்க வைப்பதால் இறைவன் நிச்சயம் நல்ல வழி காட்டுவான் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தான்.

கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடக்கப் போவதைக் கேள்விப்பட்டு, இறைவனிடம் பிரார்த்தனை செய்தான் இளங்கோ. எப்படியும் தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல்கூட செய்து கொண்டான்.

வெளிநாட்டுக் கம்பெனி ஒன்றும் உள்நாட்டுப் பெரிய கம்பெனி ஒன்றும் ஒரே நாளில் இண்டர்வியூ நடத்தி, படிப்பில் கெட்டிக்கார மாணவர்களைப் பொறுக்கி எடுத்தன. படிக்கும் காலத்தில் ஆட்டம்போட்ட மாணவர்களும் பொறுப்பற்று இருந்த மாணவர்களும் அந்த நாளில் உண்மையிலேயே வேதனைப்பட்டனர். படிப்பின் பெருமையை உணர்ந்தனர்.

அந்த இரண்டு கம்பெனிகளுமே நன்றாகப் பதில் சொன்ன இளங்கோவைத் தேர்வு செய்திருந்தன. இதனை அறிந்த அவனுடைய பேராசிரியர் பெருமாளுக்குப் பேரானந்தம். மகிழ்ச்சியோடு வந்தவர் அவனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்…

“இளங்கோ… கங்கிராஜுலேஷன்ஸ்… உன் ஒருத்தனைத்தான் இரண்டு கம்பெனிகளுமே தேர்வு செய்திருக்கின்றன. மற்ற மாணவர்களைவிட நீதான் மதிப்பு மிக்கவன் என்பது தெரிந்துவிட்டது. எங்கிட்ட படிச்ச நீ, சீக்கிரமே வெளிநாட்டுக்கு வேலைக்குப் போகப் போவதை நினைத்தால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. உனக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்…’ என்று அவனது கைகளைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்துக் கூறினார்.

“சார்… நீங்க சொல்றது உண்மையென்றால், நான் வெளிநாடு போகப் போவதில்லை. உள்நாட்டுக் கம்பெனியில்தான் வேலைக்குச் சேருவேன்’ என்றான் இளங்கோ. இதைக் கேட்டுப் பேராசிரியரின் முகம் சிறுத்துவிட்டது.

“உனக்கென்ன பைத்தியமா? அது எவ்வளவு பெரிய கம்பெனி… எத்தனை நாடுகளில் அதற்கு கிளைகள் இருக்கின்றன தெரியுமா? அந்தக் கம்பெனியோட ஆரம்ப மாத சம்பளமே இரண்டு லட்ச ரூபாய்கள். விமான டிக்கெட், தங்கும் வசதி எல்லாம் அவர்களே செய்து தருவார்கள். ஆனால், நீ சொல்கிற உள்நாட்டுக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால், வெறும் இருபத்தையாயிரம்தான் கொடுப்பாங்க. கார், பங்களா வசதியெல்லாம் தரமாட்டாங்க. உன்னைப் பெத்தவங்க, எத்தனை பாடுபட்டு உன்னைப் படிக்க வைத்தார்கள்? அவர்களை நீ வசதியாக வாழவைக்க வேண்டாமா? நீ என்னடான்னா தானாகவே கிடைத்த வேலையை வேண்டாம் என்கிறாய். பின்னால் இதற்காக நீ ரொம்ப வருத்தப்படுவாய்…’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“சார்… தெளிவாகச் சிந்தித்துதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கேன். பல வெளிநாடுகள் முன்னேற இந்தியர்கள்தான் முக்கிய காரணமாக இருந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் இல்லாத தேசமே இல்லையென்று சொல்கிற அளவுக்கு எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். தங்களோட அறிவையும் உழைப்பையும் அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா பெற்றெடுத்த நல்முத்துக்களையெல்லாம் வெளிநாட்டுக்காரங்க பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிடறதாலதான் இந்தியா ஆமை வேகத்தில் முன்னேறுது சார். ஒவ்வொரு மாணவனையும் படிக்க வைக்க இந்திய அரசு பலவகைகளிலே செலவு செய்யுது சார்… உங்களுக்கே தெரியும்… ஆனா, அதற்கு உண்டான பலனை வெளிநாடுகள் தட்டிப் பறிச்சிக்கிட்டுப் போயிடுதே சார்…

சிறந்த சில இந்தியர்களுடைய படிப்பும் உழைப்பும் தாய்நாட்டுக்குப் பயன்படாமல் பல வெளிநாடுகளுக்குத்தான் பயன்படுகிறது. அதுமட்டும் தாய்நாட்டுக்குப் பயன்பட்டிருந்தா, நம்ம முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமோட இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவு எப்போதோ நிறைவேறியிருக்குமே சார்…’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் இளங்கோ.

“நல்லாப் படிச்சவங்களுக்கு வெளிநாடுகள் பணத்தை எண்ணிக் கொடுக்காம அள்ளிக் கொடுக்கின்றனவே இளங்கோ, அதனாலதானே அங்கே வேலைக்குப் போறாங்க…’

“பணத்தைவிட, பாரத தேசம் முக்கியமில்லையா சார்?’ என்று திருப்பிக் கேட்டான் இளங்கோ.

“இளங்கோ… பல வெளிநாடுகள் பொருளாதாரத்தில் மிதமிஞ்சிப் போய்விட்டன. அதனாலதான் இந்த நிலைமை. இந்தியா ஒரு ஏழை நாடாக இருக்கின்றதால் சீக்கிரமாக முன்னேற முடியவில்லை. மிகச் சிறந்த பொறியாளர்கள் கேட்கின்ற வசதிகளை இங்கே செய்துகொடுக்க முடியவில்லை. அதனால்தான் புத்திசாலி மாணவர்களெல்லாம் வெளிநாடுகளையே தேர்வு செய்கிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இளங்கோ’ என்று விளக்கமளித்தார் பேராசிரியர்.

“எனக்கு ஏனோ, இது சரியாகப் படவில்லை சார்… ரொம்ப வசதி படைத்தவர்களும் வசதியே இல்லாதவர்களும் எல்லா நாட்டிலேயும் இருக்கத்தான் செய்கிறார்கள்… அதனால்தான் காவல்துறை எல்லா நாடுகளிலும் இருக்கின்றது.

உலகப் போரில் ஜப்பான் நாடு அணுகுண்டினால் பாதிக்கப்பட்டும் சோர்ந்து போகாமல் முன்னேறியதற்கு என்ன காரணம்? அந்த மக்களின் தேசப்பற்றும் கடின உழைப்பும் சிறந்த அறிவும்தானே சார்…

கெட்டிக்கார இந்திய மாணவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து இங்கே இருக்கின்ற வசதிகளைக் கொண்டே இந்தியாவை முன்னேற்றம் அடைய வைக்க வேண்டுமென்ற உறுதியை எடுத்துக் கொண்டால் ஐந்தாறு ஆண்டுகளில் இந்தியா வல்லரசாக முடியும் சார்… அவ்வளவு திறமைசாலிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் பணத்துக்கும் வசதிக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு தனக்குள் இருக்கின்ற திறமைகளை வெளிநாடுகளுக்கு அடமானம் வைத்து விடுகிறார்கள்… அதுபோல நான் இருக்கப் போவதில்லை சார்…’ என்று சொல்லி நிறுத்தினான் இளங்கோ.

பெருமாள் கேட்டார், “இளங்கோ, நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’

‘அப்துல் கலாம் சொன்ன “கனவு காணுங்கள்…’ என்ற ஒரு வாக்கியம் என் அடிமனதில் ஆழமாகப் பதிந்து விட்டது சார். இந்திய தேசம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் சாட்டைப் புலவன் பாரதி ஒரு கனவு கண்டான்… ஆடுவோமே பள்ளு பாடுவோமே… ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்… என்று. அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறோமே சார்…

எனக்குள்ளும் ஒரு கனவு இருக்கிறது. பெட்ரோலியத்துக்கு மாற்றுப் பொருள் இங்கேயே கண்டுபிடித்து இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் அது. அதை நிச்சயம் நனவாக்கிக் காட்டுவேன் சார்… உள்நாட்டுக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து முதலில் எனது குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவேன். ஓய்வு நேரத்தில் படித்த படிப்பை வைத்து புதுக் கண்டுபிடிப்பு ஒன்றுக்காக முயற்சி செய்வேன்… அதில் நிச்சயம் வெற்றி பெறுவேன்…’ என்று உறுதிபடக் கூறினான் இளங்கோ.

பேராசிரியர் மனதிற்குள் சொல்லிக் கொண்டார் –

“இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட இளைஞர்களின் கனவு கலையாமல் இருந்தால், என் இந்தியா நிச்சயம் வல்லரசு ஆகியே தீரும். தாய்ப்பற்றோடு தாய்நாட்டுப் பற்றும் வேண்டும் என்று உணர்த்திய இவனுடைய எண்ணம் நிறைவேற வேண்டும்!’

– தளவை மாசு.செüந்தரராசன் (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *