(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நம்மை ஒருவர் புகழ்ந்துகொண்டு வருவார்க ளானால், நாமும் அவர்களைப் போற்றி ஆவன செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் நம்மைப் புகழ்ந்து வருபவர்களை நாம் இகழ்ந்திருப்போமானால், அச்செயல் மக்கட்டன்மையுடன் பொருந்தியது ஆகாது.
முன்னாளிலே நமது நாட்டில் முதலெழு வள்ளல் கள் என்றும், இடையெழு வள்ளல்கள் என்றும், பல வள்ளல்கள் இருந்தார்கள். அவர்களை அறிவு மிக்க புலவர்கள் பலர் புகழ்ந்து பாடிச் சென்றார்கள். அப் புகழ்ச்சியினை யேற்றவர்கள் தம்மைப் புகழ்ந் தாரைப் போற்றிச் சிறப்புச் செய்தனர்.
ஆத்திசூடியை அருளிச் செய்த ஒளவையார் பழந் தமிழ் மன்னர்களையும் செல்வர்களையும் புகழ்ந்து பாடியே காலம் போக்கிக்கொண்டு இருந்தார். ஒளவை யாருடைய பாட்டைப் பெற்றவர்கள் மிகவுஞ் சிறந்து விளங்கினார்கள். ஒருநாள் ஒளவையார் செல்வம் படைத்த அறிவிலி ஒருவனைப் புகழ்ந்து பாடினார். அவனுடைய தன்மையை உணராமல் தான் ஒளவை யார் புகழ்ந்து அவனைப் பாடிவிட்டார். அக் கீழ் மகனோ, “என்னை ஏன் புகழ்ந்து பாடினாய்? உனக்கு வேறு வேலை இல்லையா? போ போ,” என்று இகழ்ந்து விரட்டினான்.
அவ் வறிவிலியின் செயல்களைக் கண்ட ஒளவை யார் வியப்படைந்தார். ‘இத்தகைய அறிவிலியும் உள்ளானோ? நாம் அறியாமற் போனோமே’ என்று எண்ணினார். “நீ இவ்வாறு இருத்தல் கூடாது. உன்னை யாரேனும் இகழ்ந்து வசைபாடித் தொலைத்து விடுவார்கள். ஆகையால், நீ உன்னைப் புகழ்ந்தாரைப் போற்றி வாழ்வாயாக!” என்று அறிவுறுத்திச் சென்றார்.
“புகழ்ந்தாரைப் போற்றி வாழ்” (இ – ள்.) புகழ்ந்தாரை – உன் பெருமைகளைக் கூறி வாழ்த் தியவர்களை, போற்றி – காப்பாற்றி, வாழ் – வாழ்வாயாக!
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955