கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 40,247 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதை உறுப்பினர்

ஆடவர்
1. இரண்டாம் ரிச்சர்டு மன்னன் : பேரரசன் மூன்றாம் எட்வர்டின் பேரன் – அவன் மூத்த மகனாகிய எட்வர்ட் இளவரசன் மகன் – தனி மனிதன் என்ற முறையில் அன்பும், பெருமிதமும், நல் உணர்ச்சிகளும் உடையவன் – அரசன் என்ற முறையில் தன்னாண்மையும், பண ஆர்வமும், பெருங்குடி மக்களை அடக்கி ஆளும் குணமும் உடையவன்.
2. ஜான் ஆவ் காண்டு : அரசன் மூத்த சிற்றப்பன் – அரசியல் திறமுடையவன் – நாட்டுப் பற்றுடையவன் – கண் கண்டது சொல்லி முதுமையில் அரசன் அவமதிப்பைப் பெற்றவன்.
3. கிளஸ்டர் கோமகன் : அரசன் சிற்றப்பன் – ஜான் ஆவ் காண்டு தம்பி – அரசன் விருப்பத்தை எதிர்த்ததனால் அரசன் தூண்டுதலால் கொல்லப்பட்டவன் – அரசள் அழிவுக்கு விதையாய் அமைந்தது இக்கொலை.
4. யார்க் கோமகன் : அரசனது இன்னொரு சிற்றப்பன் அவன் செயல் பொறுத்தும் பணிந்து கொடுத்தவன் – கோழை – ஹென்றியை எதிர்க்கவும் துணியாது விட்டுக் கொடுத்தவன்.
5. ஹென்ரி ஹெரிபோர்டு – பாலிங் புரோக் கோமகன் – லங்காஸ்டர் பெருமகன் – பின் நான்காம் ஹென்ரி அரசன் :- ஜான் ஆவ் காண்டின் மகன் – அரசனை நயமான முறையில் எதிர்த்து வெற்றி பெற்று, நான்காம் ஹென்ரி அரசன் ஆனவன்.
6. நார்போக் கோமகன் : கிளஸ்டர் கோமகன் கொலையில் அரசனுக்கு உடந்தையாயிருந்த நண்பன் – அரசனழிவுக்கு முன் பீடிகையாக ஹென்ரி ஹெரிபோர்டால் எதிர் வழக்காடப்பட்டு, அவனுடன் பத்தாண்டு நாடு கடத்தப் பட்டவன். ஹெரிபோர்டு தண்டனை குறைக்கப்பட்டும், தனது தண்டனை குறைக்கப்படாமையால் முணு முணுத்தவன்.
7. நார்தம்பர்லந்துப் பெருமகன் : நார்தம்பர்லந்தை நேரிடையாக எதிர்த்த பெருமகன் – ரிச்சர்டிடம் ஹென்ரி ஹெரிபோர்டின் தூதனாய்ச் சென்று அவமதித்து இறுதியில் பழிச்சொல் ஏற்றவன்.
8. வொர்ஸ்டர் பெருமகன் : நார்தம்பர்லந்துப் பெருமகன் உடன் பிறந்தான் – அரண்மனைக்காரன் – நார் தம்பாலந்துடன் சேர்ந்து அரசனை எதிர்த்தவன்.
9. கார்லைல் தலைமகன் : அரசர் தெய்வீக நிலையில் உறுதி கொண்டவன் – மாறா நண்பனாயிருந்து அறவுரை கூறியவன்.
10. ஆமெர்ல் பெருமகன் : யார்க் கோமகன் மகன் – தந்தை அரசனைத் துறந்தபின்னும் உடனிருந்தவன்.
11. புஷி, பாகட், கிரீன் : அரசன் இன்ப வாழ்வுக்குதவிய நண்பர்கள் – மக்கள் வெறுப்புக்காளானவர் – ஹென்ரி ஹெரிபோர்டின் வெற்றிகரமான கிளர்ச்சியின் தொடக்கத்திலேயே தூக்கிலிடப்பட்டவர்கள். 14. தோட்டக்காரன் : அரசி கேட்க அரசாட்சியைத் தோட்டப் பயிர்த்தொழிலுடன் ஒப்பிட்டு அரசனைக் குறை கூறியவன்.

பெண்டிர்
1. அரசி : ரிச்சர்டின் மனைவி – பிரான்சு அரசன் உடன்பிறந்தாள் – கற்பு மிகுந்து துயருழந்த மெல்லியலாள்.

கதைச் சுருக்கம்

இரண்டாம் ரிச்சர்டு மன்னன் இன்ப வாழ்வினன்; சோம்பேறி; ஆனால் பண ஆவலும் தன்னாண்மையும் மிக்க வன். பெருமக்கள் அவனை வெறுத்தனர். அவன் செயலைக் கண்டித்த அவன் சிற்றப்பனாகிய கிளாஸ்டர் கோமகனை மறைவாக அவன் கொலை செய்வித்தான். அவன் உடன் பிறந்தாராகிய யார்க் கோமகனும், ஜான் ஆவ் காண்டும் வெறுத்தும் வெளியிட்டுச் சொல்லா சிருந்தனர். ஜான் ஆவ் காண்டின் மகன் ஹென்ரி ஹெரிபோர்டு ரிச்சர்டுக்கு, உடந்தையாய் நின்று கிளஸ்டரைக் கொன்ற நார்போக் கோமகன் மீது வழக்காடினான். இருதிறத்தாரும் பத்தாண்டு நாடு கடத்தப்பட்டனர். ஹென்ரி ஹெரிபோர்டின் தண்டனை குறைக்கப்பட்டும் அதே கவலையால் முதியவனான ஜான் ஆவ் காண்ட் இறந்தான்.

இறக்கும் போதும் அரசன் ஜான் ஆவ் காண்டை அவ மதித்ததுடன் பண ஆவலால் அவனுரிமையையும் செல்வத் தையும் பறித்தெடுத்தான். இதனை வைத்து ஹென்ரி ஹெரி போர்டு இங்கிலாந்தில் ஒரு பிரஞ்சுப் படையுடன் இறங் கினான். அச்சமயம் அயர்லாந்து சென்றிருந்த அரசன் எதிர் காற்றினால் திரும்பிவரத் தாமதமாக, ஹென்ரியுடன் நார் தம்பாலந்துக் கோமகனும் வொர்ஸ்டர் பெருமகனும் சேர்ந்தனர். யார்க் கோமகனும் ஹென்ரிக்கு நண்பனாயினான்.

கடைசியாக ரிச்சர்ட் இங்கிலாந்து வந்திறங்கினான். நாட்டு நிகழ்ச்சிகளை ஒன்றன் பின் ஒன்றாய் அறிந்து மனங் கலங்கினான்.

ஹென்ரியும் தந்தையிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்ட பாலிங் புரூக் நிலக்கிழமையைத் தன தாக்கியதோடு அரசனைப் போலவே விளங்கிப் படையுடன் மேற்சென்று கொண்டிருந்தான்.

பாலிங் புரூக்கை நோக்கி வந்துகொண்டிருந்த ரிச்சர்ட் நண்பருடன் பிளின்ட் கோட்டை யருகில் வந்ததும், ஹென்ரி இரண்டாம் ரிச்சர்டு மன்னன் படையுடன் அண்மையிலேயே வருகிறானென்று கேள்வியுற்று அக்கோட்டையிலேயே தங்கினான். சின்னேரத்தில் நார்தம் பாலந்து ஹென்ரியின் தூதனாக வந்து ஹென்ரிக்கு நீதி வழங்கவேண்டு மென்று கூறினான்.

ரிச்சர்ட் தன் வலிமையின்மை தோன்றுமாறு சினத்தால் பலவாறு அவனிடம் பேசி ஹென்ரியை அழைத்து வருமாறு கூறினான். நார்தம்பர் லந்து மூலம் இதை உணர்ந்த ஹென்ரி பிளின்ட் கோட்டைக்கு வந்து நின்று அரசன் தன்னை வந்து பார்க்குமாறு மீண்டும் நார் தம்பாலந்தை ஏவினன் . ரிச்சர்ட் வந்ததும் அவனை ஹென்ரி பணிந்தான். அதுகண்ட ரிச்சர்ட் தன் சினம் வெளிப்படப் பலவாறு பேசி, ‘உமக்கு உரியதையும் தந்தேன்; என்னையும் தந்தேன்’ என்று கூறினான். ஹென்ரி ரிச்சர்டைக் கொண்டு படையுடனும், துணை வருடனும் லண்டன் நோக்கிச் சென்றான்.

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டரை யடைந்ததும் ரிச்சர்டே மன வெறுப்புற்று , “என் முடியை உம் தலைவர் ஏற்பாராக!” என்று நார்தம்பர்லந்திடம் கூறினன், ஹென்ரியும் முடி சூட்டப் பெற்றான்.

ரிச்சர்ட் சிறையில் வைக்கப்பட்டான். அவன் மனைவி மடத்தில் சென்றுறைந்து சின்னாளில் உயிர் நீத்தாள்.

யார்க் கோமகன் மகன் திரும்பவும் ரிச்சர்டை அரசனாக்க முயன்றான். இதை யார்க் கோமகனே ஹென்ரிக்குக் காட்டிக் கொடுத்தான். பின் ஹென்ரியின் நண்பர் மூவர் ரிச்சர்டை வலியச் சண்டைக் கிழுத்துக் கொன்றனர்.

ஆயினும் ஹென்ரி தனக்குற்ற மாசு துடைப்பானாய் அம் மூவரையும் வெறுத்துத் தூக்கிலிட்டான் ; யார்க் கோமகன் மகனையும் மன்னித்து விட்டான்.

இங்ஙனம் முடிவில் ரிச்சர்டின் குணமே மேலோங்கி விளங்கிப் புகழ் பெற்றது.

இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (RICHARD II)

1.மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக் காயும் முன் துவர்க்கும் பின் இனிக்கும்

மனிதன் சிறப்புக்களுட் பல அவனது இன்ப வாழ்வினுட் காணாவிடினும், துன்பவாழ்விற் காணப்படுவது உறுதி. துன்ப வாழ்விலும் சிறப்படையாதவன் கீழ்மகனேயாவன்.

இரண்டாம் ரிச்சர்டின் (Richard II) வாழ்வு இவ்வுண்மைக்கு ஒரு சான்று ஆகும். மணி முடி யுடன் மாநிலம் ஆளுங் காலையில், அவன் குற்றங் களே தலைசிறந்து விளங்கின. அரசுரிமை அவனை விட்டகலும்போது தான், அவன் அரசர்க்குரிய பெருமை எய்தி விளக்கமுற்றான் என்னல் வேண்டும்.

இங்கிலாந்தில் முடியிழந்த மன்னர் ரிச்சர்டு நீங்கலாக மூவராவர். அவர், இரண்டாம் எட்வர்டு (Edward II), முதல் சார்லஸ் (Charles I), இரண்டாம் ஜேம்ஸ் (James II) ஆகியோர். அவருள் பின் இருவரும் பொதுமக்கள் விழிப்படைந்த பின் அவர்களது விடுதலை யுணர்ச்சியின் பயனாக முடியிழந்தவராவர்.

ஆனால், ரிச்சர்டும் எட்வர்டும் முடியிழந்தது பொதுமக்கள் விழிப்பாலன்று. அரசியல் வாழ்வில் அன்று பொதுமக்களோ நடுநிலை மக்களோ இடம் இரண்டாம் ரிச்சர்டு மன்னன் பெறவில்லை. பெருங்குடி மக்களே ஒரு புறம் பொது மக்களைத் துன்புறுத்தியும், இன்னொரு புறம் மன் னரை எதிர்த்தும் நின்று, அன்று மேலோங்கியிருந்தனர். இவர்களின் எல்லையற்ற வன்மையால் எங்கும் உள்நாட்டுச் சண்டையே மலிந்திருந்தது.

ரிச்சர்டு ‘கரிய வீரன்’ எனப் புகழ் பெற்ற எட்வர்டு இளவரசன் (Edward the Black Prinee) மகன். பேரரசரான மூன்றாம் எட்வர்டு இறந்தபின், எட்வர்டு இளவரசனே பட்டம் பெறவேண்டும். ஆனால், அவன் எட்வர்டு காலத்திலேயே போரிற் பட்டபடியால், ரிச்சர்டு அரசனானான்.

அரசனாகும்போது ரிச்சர்டு சிறுவனாகவேயிருந் தான். ஆகவே, அவன் சிற்றப்பனாகிய ஜான் ஆவ் காண்டு (John of Gaunt) அவன் இடத்தில் இருந்து அரசாட்சி செய்து வந்தான். ஆனால், ரிச்சர்டு செருக்கும் தற்போக்கு விருப்பும் உடையவன். விரைவில் அரசுரிமையைத் தன் கையிலேயே பறித்தெடுத்ததோடு, தன் விருப்பம் போல் நாட்டையாண்டும், நாட்டின் பொருட்குவையைத் தானும் தன்னைச் சேர்ந்த வருமாக, மட்டின்றிச் செலவு செய்தும் வந்தான். யாரேனும் இந்நடைகளை வெறுத்துப் பேசினால் அவர்களை அவன் ஈவிரக்கமின்றி அழித்தடக்கி வந்தான்.

இத்தகையோருள். ஜான் ஆவ்காண்டுக்கு இளையவரான கிளஸ்டர் கோமகன் (Du

ரிச்சர்டு இன்ப விருப்பினனும் சோம்பேறியு மாதலால் அரசியல் வல்லுநராகிய தன் சிற்றப்பரை அரசியல் வாழ்வில் ஈடுபடுத்தாது, தன் மனப்போக்கிற்கொத்த சமயசஞ்சீவிகளான புஷி (Bushy), பாகட் : (Bagot), கிரீன் (Green) முதலியவர்கள் உறவையே நாடினான். இவர்களுதவியால் நாட்டின் சீர்திருத்தங் களுக்கென ஒதுக்கி வைத்திருந்த பொருளை அவன் ஊதாரித்தனமாகச் செலவு செய்துவந்தான். இப்படியும் வருவாயற்றுப் போகவே நாட்டின் செழித்த வட்டங்களைத் தனி மனிதருக்குப் பணயம் வைத்தும் வரிப்பணத்தை ஈடுவைத்தும் பொருள் திரட்டலானான். மேலும், அவன், செல்வர்களான வணிகரிட மிருந்து கடன் என்ற பெயரால் பெருந்தொகைகளைக் கொள்ளையுங் கொண்டான்.

எதை மூடி வைத்தாலும் கொலையையும் வஞ் சத்தையும் மூடிவைக்க முடியாதன்றோ? அதன்படி கிளஸ்டர்முடிபு இயற்கையான தன்று; படுகொலையின் பயனே என்றும், அதுவும் ரிச்சர்டின் கைவரிசையே என்றும், ஆங்காங்கு மக்கள் கூறத் தலைப் பட்டனர். அதிலும், இக் கிளஸ்டர் பெருமகன் பேரரசன் மூன்றாம் எட்வர்டின் மகனும் பெருமக் களுள் தலைசிறந்தவனும் ஆனதனால், பெருமக்களி டையேயும் மிகவும் கிளர்ச்சி ஏற்பட்டது . ரிச்சர்டின் வாள் வலிக்கும் பொதுமக்களிடையே அவனுக்கிருந்த செல்வாக்குக்கும் அஞ்சியே, அவர்கள் வெளிப்படையாக அவனை எதிர்க்காதிருந்தனர்.

இங்கிலாந்தின் பெருமக்களுள் செல்வாக்கிற் சிறந்தவன் நார் தம்பாலந்துப் பெருமான் (Earl of Northumberland) ஆவன். அவனும் அரண்ம னைக் காரியக்காரனான அவன் உடன் பிறந்தான் வொர்ஸ்டர் பெருமகனும் (Earl of Worcester) துணிந்து ரிச்சர்டின் கொடுங்கோன்மையைப் பற்றியும் தீச் செயல்களைப்பற்றியும் பலபடத் தமக்குள்ளும் பிறரிடமும் பேசலாயினர். ரிச்சர்டின் மற்றச் சிற்றப்பர்களாகிய ஜான் ஆவ் காண்டும் யார்க்கும் இவர்களுடன் நேராகக் கலக்கவில்லையாயினும் இவர்களை யொப்ப ரிச்சர்டின் போக்கை மட்டிலும் வெறுத்தே வந்தனர். இவர்கள் ரிச்சர்டின் ஆட்சியுடன் ஒத்துழைத்ததெல்லாம் கடமையுணர்ச்சியாலும் நாட்டுப் பற்றாலுமே யன்றி வேறன்று.

ரிச்சர்டின் தீச்செயல்களால் ஏற்பட்ட மனக் கொதிப்பாலும் ஆண்டு முதிர்வாலும் ஜான் ஆவ் காண்டின் உடல் நிலை மிகுதியும் தளர்வுற்றது. இத்தருணத்தில் அவன் மகன் ஹெரிபோர்டு கோமகனாகிய ஹென்ரிக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சி அவன் நோயைப் பெரிதும் மிகைப்படுத்தியது.

ஹென்ரி ஹெரிபோர்டு முதியோராகிய தன் தந்தை சிற்றப்பர் முதலியோரைப்போல் ரிச்சர்டின் தீச்செயல்களைப் பொறுத்திருக்க விரும்பவில்லை. அவர்களை ஒத்த உயர்ந்த கடமையுணர்ச்சியும் நாட்டுப் பற்றும் உடையவன் அல்லன் அவன். வாள் வலியால் பெருங்குடி மக்களையும் நயமொழிகளாலும் பகட்டாலும் நடுநிலை மக்களையும் அவன் தன் வயப்படுத்தி வைத்திருந்தான். அதன் பயனாக அவன் ரிச்சர்டின் தீச்செயல்களைச் சாக்காக வைத்துக்கொண்டு நாட்டு மக்களை அவனுக்கெதிராகத் திருப்பியதோடு அவனை வீழ்த்தித் தன் நிலையை உயர்த்தவும் எண்ணங்கொண்டான்.

Shakespear26இவ்வெண்ணங்களை வெளிப்படையாக முதல் லேயே காட்டாமல் படிப்படியாக எதிரிகளையும் அவர் களைச் சேர்ந்தோர்களையும் தொலைக்க எண்ணி அவன் முதலில் கிளஸ்டர் கொலையில் அரசனுக்குத் துணை நின்ற நார்போக் கோமகனை நாட்டுப்பகைவன் என அரசவையிற் குற்றஞ் சாட்டினான். தன் கைக்கரு வியைப் பழிப்பது தன்னையே பழித்ததாகும் என்றறிந்தும் ரிச்சர்டு, ஹென்ரியை நேரே எதிர்ப்பதை விடப் பிறருடன் மாறுபடச் செய்வதே நன்று என்று எண்ணி அக்குற்றச்சாட்டு வழக்கை மற்போரால் இருவரும் தீர்த்துக் கொள்ளுமாறு பணித்தான் ஆனால், தன் நண்பருடன் உசாவியபின், இம்மற்போர் ஒருவேளை பெரும்போராகித் தன் நிலைக்கு இடுக்கண் விளைக்குமோ என அஞ்சி அவன் அதனை நிறுத்தி இருதிறத்தாரையும் பத்தாண்டு நாடு கடத்தினான்.

இச்செயலால் தன்னை நடு நிலையாளன் என யாவரும் கொள்வர் என்று அவன் நினைத்தான் போலும்! ஆனால், உண்மையில் இதனால் இருதிறத்தாரும் முணுமுணுத்தனரேயன்றி வேறன்று. நார் போக், ஒருபுறம் அரசனிடம் தான் கொண்ட பற்றை அவன் எண்ணிப்பாராமல் தன்னைப் பகைவனோ டொப்ப நடத்திப் பகைவனுக்குக் காட்டிக்கொடுத் தான் என்று எண்ணினான். ஹென்ரியோவெனில், நார்போக்கினிடம் பழிவாங்குவதினின்றும் தடுக்கப்பட்டோம் என்று குமுறினான்.

ரிச்சர்டு இடுக்கண் வந்த நேரத்தன்றிப் பிற நேரங்களில் ஒரு கோழையேயாவன். அவன் நண்பனைப் புண்படுத்துவதைவிடப் பலமடங்கு பகைவனைப் புண்படுத்தவே அஞ்சினான். முகம் ஒளியிழந்து வாட்டமுற்றுக் கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற நார் போக்கை அவன் ஏறெடுத்துக்கூடப் பாராமற் சீறிக் கொண்டு, புன்முறுவலுடன் ஹென்ரி பக்கம் திரும்பித் “தாம் என் நெருங்கிய உறவினர் ஆயினும் ஒழுங்கை முன்னிட்டு இந் நடவடிக்கை எடுக்கிறேன். பத்தாண்டுகளையும் பத்து நொடிகளாகக் கழித்து வருக,” என்றான்.

இதனைக் கேட்டிருந்த ஹெரி போர்டின் தந்தை யாகிய ஜான் ஆவ் காண்டு, “அரசே, தமக்கு ஓர் ஆண்டு ஒரு நொடிதான். எமக்கு ஒரு நொடி ஓர் ஆண்டாகும் என்பதில் ஐயமில்லை. அதிலும் என் இறுதி நாட்களில் பத்தாண்டு பிரிவதென்பது என்றென்றைக்கும் பிரிவதாகவே ஏற்படும். பத்தாண்டுகளுக்குள் என் காலம் கழிந்துவிடும்,” என்றான்.

ரிச்சர்டு இயற்கையில் இளகிய நெஞ்சுடைய வன். அதோடு ஜான் ஆவ் காண்டின் செல்வாக் குக்கும் உயர்வுக்கும் சற்று அஞ்சியவன். ஆகவே அவனைச் சற்று மதித்து, ஹென்ரியின் ஒறுப்பு நாட்களை ஆறாண்டுகளாகக் குறைத்தான். ஆனால், அப் போதும் ஜான் ஆவ் காண்டு முணு முணுத் துக் கொண்டே , “தமக்கென்ன அரசே, தாம் ஒரு நாவ சைப்பால் நாலு ஆண்டு குறைக்கவும் செய்யலாம்; நாற்பது ஆண்டு கூட்டவும் செய்யலாம். மனிதர் வாழ்க்கை எல்லாம் தம்போன்ற அரசர்க்கு ஒரு பந்தாட்டந்தானே,” என்றான்.

இங்ஙனம் மகனும் தந்தையும் தன்னை ரு பொருட்டாய் எண்ணாமற் பேசினது ரிச்சர்டின் அமைதியையும் தற்பெருமையையும் குலைத்தது. அவன் அன்று முதல் அவர்களுக்கு எவ்வகையிற் பாடம் படிப்பிக்கலாம் என்றெண்ணலானான்.

மகன் நாட்டைவிட்டுப் போன நாள் முதலே ஜான் ஆவ் காண்டின் உடல் நிலை முன்னிலும் பன் மடங்கு சீர்கெட்டு அவன் படுக்கையும் பாயும் ஆனான். ரிச்சர்டு அதனைக் கேள்வியுற்றும் சற்றும் பரிவு காட்டாது அவனிடம் கொடுமையாகவே “இன்னும் இறுதிநாள் எவ்வளவு தொலைவிலுள்ளது?” என்று கேட்டான். பின் இறக்கும் தறுவாயில் ஜான் ஆவ் காண்டு தானாகவே ரிச்சர்டைப் பார்க்க விரும்புவதாகச் சொல்லியனுப்பினான். அப்போதும் சமயத்தின் அருமையைக் கூடப் பாராமல் ரிச்சர்டு அவனிடம் அசட்டையான மொழிகள் பேசினான். ஜான் ஆவ் காண்டு தன் அரசாட்சியையும் தன் போக்கையும் குறை கூறுவதைப் பொறாமல் அவனை வெளியேற்றும்படியும் கூறினான். வெளியேறிய சில நொடிகளில் அவன் இறந்தும், ரிச்சர்டு தன் குற்றத்தை ஏற்றுக் கழிவிரக்கங்கொள்ளத் தவறினான்.

2.பகைப் புயல்

மேலும், தந்தையிடம் கொண்ட. சீற்றத்தை மகனிடமும் காட்ட ரிச்சர்டு தயங்கவில்லை. கருவூலம் வெறுமையாயிருந்ததை உன்னி ஜான் – ஆவ்-காண்டின் நிலங்களையும் உடைமைகளையும் அரசியலுக்கெனப் பறிமுதல் செய்தான். அதோடு அவனது பெருநிலக்கிழமைக்குரிய பாலிங் புரோக் கோமகன் (Duke of Boling broke) என்ற பட்டத்தையும் அவன் மகன் ஹென்ரி ஹெரிபோர்டுக்குச் செல்லாமல் தடை செய் தான். அரசவையிலுள்ள நண்பரும் பிறரும் இஃது அடாத செயலெனக் கூறயும் ரிச்சர்டு அவர்களனை வரையும் பொருட்படுத்தாது வாயடக்கினான்.

ரிச்சர்டின் வாழ்க்கைக்கோள் உச்சநிலையடைந்து திரியத் தொடங்கியது இப்போதுதான் என்னலாகும்.

இதுசமயம் ரிச்சர்டின் தீவினைப்பயனாக அயர் லாந்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை அடக் கும் எண்ணத்துடன் ரிச்சர்டு தன் படைகளைத் திரட்டிக்கொண்டு போனான். அயர்லாந்துக் கிளர்ச்சியை அடக்கப் பல வாரங்களாயின. அது கழிந்து திரும்பும் சமயத்தில் காற்று எதிர்ப்புறமாயடித்ததனால் பின்னும் சிலநாள் தாமதமாயிற்று.

இத்தனைக்குள்ளாக, இங்கிலாந்தில் ரிச்சர்டுக்கு எதிர்ப்பு வலுத்தது. பகைப்புயல் கிளம்பி அரசியல் வானெங்கும் பரந்தது.

முதன் முதல் அது வடகிழக்கு மூலையில் ஒரு சிறு வெண்முகிலுருவில் காணப்பட்டது.

ஹென்ரி தன் தந்தைவழி உடைமைகளை மீட்கும் சாக்குடன் இங்கிலாந்தில் வந்திறங்கினான். நார் தம்பர்லந்து உடன்தானே அவனுடன் வந்து சேர்ந்தான். விரைவில் பெருமக்கள் பலரும் அவன் பக்கம் வந்தனர் : வொர்ஸ்டர் பெருமகன் தன் பணியைத் துறந்து, தன் ஆட்களுடனும், அயர்லாந்து போகாது எஞ்சிய படைகளுடனும் எதிரி பக்கம் சென்றான். இங்ஙனம் ஹென்ரி உருவில் எழுந்த சிற்றோடை, பார்க்லிக் கோட்டையருகே வருவதற்குள் தடங்கரைக் காவிரியாய்ப் பெருகிற்று.

பார்க்லிக் கோட்டையில் யார்க் கோமகன் தன் சிறுபடையுடன் தங்கியிருந்தான். அவனும் ரிச்சர் டின் தீவழிகளைக் கண்டிப்பவனே யாயினும், கொண்ட கொள்கையை நிலைநிறுத்தும் உரமற்றவன். இக் கோழைத்தனத்துடன் தன்னலமும் சேர்ந்து அவனது தயக்கத்தை மிகைப்படுத்திற்று. முதலில் அவன் கிளஸ்டர் பக்கம் நலிந்திருந்தபோது ரிச்சர்டு பக்கம் சேர்ந்தான். இப்போது ரிச்சர்டு பக்கம் நலிந்து வருவது கண்டு அவன் மெல்ல மெல்ல அதினின்றும் நழுவலானான். இதற்கியையக் கிளஸ்டர் கோமாட்டியும் அவனிடம் சென்று, தன் கணவனும் அவன் உடன் பிறந்தானுமாகிய கிளஸ்டர் கோமகன் கொலைக்குப் பழிவாங்குமாறு அவனைத் தூண்டி வந்திருந்தாள்.

இவற்றின் பயனாக யார்க் ஹென்ரியை எதிர்க் கத் துணியவில்லை. ஆயினும், நன்றியற்றவனாய்விடவும் அவன் துணியாது நாக்கடிப்பாக ஹென்ரியின் செயல் அடாததெனக் கண்டித்துப் பேசினான். ஹென்ரி தன் உரிமைக்கு மட்டுமே போராட வந்த தாகக் கூறியபோதும், அவன் குடிகளுள் யாரும் தன் உரிமைக்காகக்கூட மன்னனை எதிர்க்கக்கூடாதென்ற ஒழுங்கை நினைவூட்டினான். இறுதியில் இவையனைத் தும் ஹென்ரியின் படைவலிக்கு முன் பயனற்ற தென்று கண்டு தான் நடுநிலைமை தாங்குவதாகக் கூறி அவனைப் பார்க்லிக் கோட்டைக்குள் விருந்தினனாய் வரவேற்றான். இவ்வளவு இடம் பெற்ற ஹென்ரி விரைவில் மூக்கிடம் பெற்ற ஒட்டகம் போல் கோட்டை கொத்தளம் முதலிய யாவற்றையும் படையையும் தன் வயமாக்கிக் கொண்டான்.

Shakespear27ரிச்சர்டின் மனைவி பிரான்சு நாட்டரசனுடைய உடன் பிறந்தாள் அவள். அவள் சூது வாதற்றவள்; அன்பும் அருளும் பொருந்தியவள். அவள் அரண் மனையில் தனியே தன் கணவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளைச் சுற்றிலும் அரசியல் புயல் குமுறியடிக்கக் காத்திருந்தது. அதனிடையே, பூந்தோட்டத்தில் பொலிந்தொளிர வேண்டும் மலர்போன்ற அவள், வற்றற்பாலையில் வெயிலில் கிடந்து வாடினதுபோல் வாடலானாள். மாசற்ற அவள் உள்ளத் தில்கூட உலகைச் சுற்றியடிக்கும் அப்புயலின் தொலைவான எதிரலை தட்டிற்று. ரிச்சர்டின் பெயர் மதிப்பின்றி ஆங்காங்கு அடிபடுவதும் மக்களது நடமாட்டத்திலும் பேச்சிலும் ஏதோ அமைதியின்மையும் பரபரப்பும் காணப்படுவதும் அவள் உள்ளத்தின் தூய அமைதியைக் குலைத்து அதில் இன்னதென்று விளங்காத ஓர் நுண்ணிய கவலையை உண்டு பண்ணிற்று. அதனால் அவள் ஊணும் தடைப்பட்டது. உறக்கமும் தடைப்பட்டது. தோட்டத்திலேனும் சென்று உலாவலாம் என அவள் புறப்பட்டாள்.

அவளது தோட்டத்தில் அன்று தோட்டக்கார னுடன் அவன் நண்பர் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். தோட்டத்தின் நேர்த்தி கண்டு நண்பர்கள் தோட்டக்காரன் திறத்தை மெச்சினர். அப்போது அவன் மகிழ்வதற்கு மாறாகக் கோணிய முகத்துடன் “அன்பரீர், இத்தோட்டத்தை நீங்கள் மெச்சுவதற்கு மாறாகப் பழித்திருக்க வேண்டும். இதன் நேர்த்தி கொண்டு என்ன பயன். இன்றைய நம் இங்கிலாந்து இதனினும் பெரியதோர் தோட்டம் என்னலாம். அதுவன்றோ நேர்த்தியா யிருக்க வேண்டும். ஆனால், அது அங்ஙனம் இல்லையே / அதன் தோட்டக்காரன் நல்லவனும் நன் முயற்சி உடையவனுந்தான். ஆனால், பூவை வளர்த்துப் புழுவையும் வளர்த்துவிட்டது போல் நாட்டு மக்களிடம் காட்டும் அதே அன்பை அவர்கள் உயிரை உறிஞ்சும் சமயசஞ்சீவிகளிடமும் காட்டுவதால் நாட்டை அவன் அவர்களுக்கு இரையாக்கிவிட்டான். மேலும், பெருமக்களைக் களைகள் போல் வளர விட்டுப் பொது மக்களாகிய பயிர்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியும் வந்திருக்கிறான். தன் கவனககுறைவால் நேர்ந்த தீங்குகளைப் பாவம் அவன் அறியான்! இத்தோட்டத்தை நீங்கள் மெச்ச நேர்ந்ததை விட அம்மாபெருந் தோட்டத்தை மெச்ச நேர்ந்திருப்பின் எத்தனையோ நலமாயிருந்திருக்கும்,” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

தோட்டத்தைக் காக்கும் முறையில் தனக்கிருக் கும் திறன் இங்கிலாந்தைக் காக்கு முறையில் ரிச்சர் டுக்கு இல்லை என்று அத்தோட்டக்காரன் கூறிய குறிப்பைக் கேட்டு முதலில் கனன்றெழுந்த அரசி. கணவனுக்கு ஏதோ தீங்கென உள்ளூரக் கண்டதன் பயனாகத் தோட்டக்காரனை அணுகி, “நேயனே, அரசன் அயல்நாடு சென்று பல நாளாகியும் வரக்காணேன்; கவலைப்படுகிறேன்; அவன் அரசியலுக்கு ஊறு நேர்ந்ததெனக் கண்டால் எனக்குக் கூறுவாய்,” என்றாள்.

தோட்டக்காரன் தன் புன்மொழிகள் இங்ஙனம் எதிர்பாராத பெரிய இடத்தைச் சென்று சேர்ந்ததே என வருத்தமும் வெட்கமும் அடைந்தான். பின் அரசியின் முகநோக்கி ஆண்டு அரசியல் பெருமைக்கு மாறாகப் பெண்மையின் மெல்லியல்பும் கவலையும் குடிகொண்டிருக்கக் கண்டு பரிவுற்று, ஹென்ரி ஹெரி போர்டு படையுடன் வந்திருப்பதையும் நார்தம்பர் லந்து முதலியோர் எதிரி பக்கம் சேர்ந்திருப்பதையும் விளங்கக் கூறினான். கேட்ட அரசி தீக்காற்று வீசப் பெற்ற மாந்தளிரெனச் சாம்பத் தலைப்பட்டாள்.

3.அலைமேல் அலை

அயர்லாந்திலிருக்கும் ரிச்சர்டுக்கு இச்செய்தி களின் முழு விவரமும் எட்டவில்லையாயினும் நிலைமை நெருக்கடியானது என்ற அளவிலேனும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. காற்று தொடர்ச்சியாகப் பல நாட்கள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து நோக்கி அடித்ததனால், இச்செய்திகள் இங்கிலாந்தினின்று அயர்லாந்து வந்து சேர்ந்தும் ரிச்சர்டு அயர்லாந்திலிருந்து இங்கிலாந்து வரமுடியாமலிருந்தது. இக் கால தாமதத்தால் ஒவ்வொரு நொடியும் ஹென்ரியின் வலிமை வளர்ச்சியடைந்தும் ரிச்சர்டின் வலிமை குன்றியும் வந்தன. ரிச்சர்டு இங்கிலாந்தில் வந்திறங் கியபோது, தீச்செய்திகள் பல அவன் காதில் வந்து விழக் காத்திருந்தன. அவற்றுள் முதன்மையானது வேல்ஸில் ஸாலிஸ்பரி தலைமையிலுள்ள படைகள் கலைந்து போயின என்பதே. அவற்றிடையே, ரிச்சர்டு இறந்து போனான் என்ற பொய்ச் செய்தி பரந்ததே அவை கலைந்து போனதன் காரணம் என்று தெரிய வந்தது. தன் தாமதத்தால் நேர்ந்த இப் பெருந் தீங்கைக் கேள்வியுற்று ரிச்சர்டு பொறி கலங்கி நின்றான். சற்றுக் கழிந்தபின், அவன் தன் பக்கம் நின்ற யார்க் கோமகன் மகனாகிய ஆமெர்ல் பெருமகனை (Lord Aumerle) நோக்கிச் சற்று மனத் தேர்தலுடன், “ஆயினும் என்ன, கேடொன்றும் இல்லை; நின் தந்தையிடம் இன்னும் நம் நாட்டுப் படையின் ஒரு பகுதி உண்டன்றோ? அதன் வலியே நமக்குப் போதும்,” என்றான்.

அவ்வமயம் தூதன் ஒருவன் வந்து, யார்க் கோமகன் பார்க்லிக் கோட்டையினுள் ஹென்ரியை வர விட்டதையும், அக்கோட்டையும் அதிலுள்ள யார்க் கோமகன் படைகளும் எதிரி பக்கம் சேர்ந்ததையும் கூறினான். அதனையடுத்தாற்போல் இன்னொருவன் வந்து, வொர்ஸ்டர் கோமகன் எதிரியிடம் மீதிப் படைகளுடன் சென்றதையும் நார் தம்பாலந்து முதலியோர் எதிரிக்குத் துணையாக வருவதையும் கூறினன்.

அலைமேல் அலை அடித்ததுபோல் வந்த இச்செய்தி களால் மோதுண்டு சற்றே அமிழ்ந்து நின்ற ரிச்சர்டின் உள்ளமாகிய கட்டுமரம், அதன் இயற்கை நொய்ம்மையால் மீண்டும் மீண்டும் மேலெழுந்து கடல்மீது பாய்ந்து செல்லவே தொடங்கிற்று. நன்மையே நிறைந்த வெற்றி நாட்களில் செருக்காய்த் தோன்றிய அவனது தற்பெருமை, தோல்வியின் நிழல் கண் முன் ஆடும் இந்நாட்களில் வீரமாகவும் பெருமிதமாகவும் மாறி அவனுடைய உடலெழிலுக்கு ஓர் அரசுரிமைப் பெருமை நல்கியது. தன்னை அடுத்தோரை இச்சமயம் அவன், தன் வனப்பாலும் தன்னைச் சூழ்ந்த துயரத் தின் குறிகளாலும் தன் கவித்திற மிக்க மொழிச் சித்திரங்களாலும் தன் பக்கமாக ஈர்த்து, அவர்கள் மீது புதுவகையானதோர் ஆட்சி செலுத்தினான்.

‘சாவப் போகிறவன் துரும்பையும் புணையாகக் கொள்வான்’ என்பது பழமொழி. ஆனால், அத்தகையோர் அத்துரும்பைப் புணையாக நம்புவதுமில்லை; நம்புவதாகக் காட்டுவதுமில்லை. ஆனால், குழந்தை போல் சூதற்ற தன்மையுடைய ரிச்சர்டுக்கு, இச்சமயம் துரும்புகூட உண்மையில் புணையாகவே தோன்றிற்று. ஒருவேளை துயர் நீக்க அது புணையாகத் தோன்றியிராவிட்டாலுங்கூட அத்துயரிடையேதான் சிறுமைப் படாது காக்கும் அளவுக்கேனும் அவன் அத்தகைய துரும்பைப் புணையெனக் கொண்டான் என்னல் வேண்டும். ஏனெனில், நம்பிக்கை யிழந்த அந்நிலையிலும் சமய உண்மை கண்ட அந்தணாளனாகிய கார்லைல் தலைமகன் (Bishopof Carlisle) அவனை நோக்கி, “அரசே, மனிதர் துணை அகன்றதெனக் கொண்டு கவலற்க; இறைவனது துணையின் நிறைவு தமக்கு உளது. உமக்கு அரசுரிமை தந்தது மனிதரல்லவே! அவ் அரசுரிமை தந்த அதே இறை இன்று அதன் பகைவரை அழித்து உமக்கு அது நிலைக்கு மாறும் செய்யும்” என்றதே , ரிச்சர்டு தன் நிலை மறந்து அவன் ஆறுதலே ஒரு தேறுதலாகக் கொண்டு, “ஆம் ஐயனே, எனக்குப் பற்றுக்கோடாயுள்ள அப் பேருண்மையை மறந்தேன். நீர் நன்கு நினைவூட்டினீர் இனிக் கவலைப் படக் காரணமில்லை,” என்று நகைத்தான். உலகின் மோசடி நடைகளை உணர்ந்த அவன் வெள்ளை யுள்ளம் கண்டு அவன் நண்பரும் பிறரும் பரிவு கொண்டு வருந்தினர்.

ஹென்ரியின் படை வலி மேன்மேலும் பெருகிக் கொண்டே வந்தது. ரிச்சர்டின் மீது பொறாமை கொண்ட பெருமக்கள், அவனது கட்டுப்பாடற்ற இன்ப வாழ்க்கையை வெறுத்த மடத்துத் துறவியர், அவன் நண்பர்களான சமயசஞ்சீவிகளையும் அவனையும் வெறுத்த பிறமக்கள் முதலிய பலரும் லண்டன் நோக்கி வரும் ஹென்ரியின் படையில் வந்து சேர்ந்தனர்.

இங்ஙனம் படை வலி மிகுதியாக மிகுதியாக ஹென்ரியின் தற்பெருமையும் பெருநோக்கும் கூடவே வளர்ந்துகொண்டு வந்தன. அவன் அரசன் என்ற பெயர் இல்லாமலேயே அரசனுரிமைகளை ஒவ் வொன்றாய் மேற்கொள்ளலானான். முதன் முதல் அவன் தனதாக்கியது, தந்தையினிடமிருந்து ரிச்சர்டு பறிமுதல் செய்த பாலிங் புரோக் பெருநிலக்கிழமை யாகும். உடனே அப்பெருநிலக்கிழமைக்குரிய பட் டத்துடன் அவன் ஹென்ரி பாலிங் புரோக் என்று அழைக்கப்பட்டான். இதுவரை அவனோடொத்த வராயிருந்த பெருமக்கள், அவன் படைவலியும் செல்வாக்குங் கண்டு அரசர் முன் பணிவதுபோல் அவன் முன் பணியத் தலைப்பட்டனர். அவனும், அங்ஙனம் பணியாதவரையும் ரிச்சர்டுக்கு உடந்தை யானவரையும் அச்சுறுத்தவும் ஒறுக்கவும் தொடங்கினான்.

இத்தகைய பெரு நிலைகளுடன் ஹென்ரி வரும் வழியில் ரிச்சர்டின் சமய சஞ்சீவிகளான புஷியும் கிரீனும் தென்பட, அவன் ஆட்கள் அவர்களைச் சிறைப்பிடித்து அவன் முன்னிலையிற் கொண்டுவந்து நிறுத்தினர். ஹென்ரி பாலிங் புரோக், அவர்களை வழக்கு மன்றத்தில் உசாவுவது போல் உசாவிக் குற்றஞ்சாட்டித் தானே அரசனென்றாற்போல அவர் களைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டான்.

பாலிங் புரோக்கை நோக்கி வந்துகொண்டிருந்த ரிச்சர்டு, தன் நண்பர் ஒவ்வொருவராகத் தன்னை விட்டு அகன்றது கண்டு ஒருபுறம் வெகுண்டான் ; தன் நிலை ஓர்ந்து ஒருபுறம் துயரடைந்தான். மற்றொருபுறம், இறைவன் கடைசி நொடியிலேனும் தன் னால் அரசனாகப் படைக்கப்பட்டதோர் பேருயிரைக் காப்பானோ என்ற ஆவல், அவன் உள்ளத் தடத்தின் இருளிடையே மின்னிற்று. அச்சமயம் திடீரென்று அவனுக்குக் கிரீன், புஷி முதலிய நண்பர்களின் நினைவு வந்தது. வந்ததும், அவர்களேனும் இன்னும் உதவு வர் என்ற நம்பிக்கை சற்றே தலை தூக்க, அவன் அவர் கள் எங்கே என்று உசாவினான். அருகில் இருந்தவர் எவரோ அச்சமயம், “அவர்கள் அப்பாற் சென்று சேர்ந்தனரே” என்ன, அவர்களும் தன்னைக் கைவிட்டு எதிரியிடம் சென்று சேர்ந்தனர் என்று தவறாகக் கருதித் தீ மிதித்தவன் போல் மனங்கொதித்து, “ஆ பதடிகள், நன்றி கெட்டவர்கள் / அவர்களும் சென்றனரா? ஆ, இவ்வுலக வாழ்வனைத்தும் எத்துணை வெளிப்பூச்சு” என அரற்றினான். அச்சமயம் நண்பர் அவன் கொண்ட தப்பெண்ணத்தைத் திருத்தி, “அரசே! அவர்கள் உம்மைக் கைவிட்டு அப்பாற் செல்லவில்லை; உமக்காக உயிர்விட்டு உலகை நீத்து அப்பால் எமனுலகுக்குச் சென்று சேர்ந்தனர்,” என்றனர். அது கேட்டதும் ரிச்சர்டு சினமனைத்தும் மாறித் தன் துயரையும் மறந்து அவர்களுக்காகக் கண்ணீருக்குத்து மன மாழ்கினான்.

4.ஊழிற் பெருவலி யாவுள?

ரிச்சர்டு தன் நண்பருடன் வேல்ஸ் எல்லையிலுள்ள – பிளின்ட் கோட்டைக்கு (Flint Castle) வந்ததும். ஹென்ரி படையுடன் அண்மையிலேயே எதிர் நோக்கி வருகிறான் என்று கேள்விப்பட்டான். அவனை எதிர்க்கவேண்டிவரின் கோட்டையே பாதுகாப்பான இடம் என்றெண்ணி ரிச்சர்டு அக்கோட்டையிலேயே தங்க அவனை எதிர்பார்த்திருந்தான்.

சின்னேரத்தில் ஹென்ரி பாலிங் புரோக்கின் படையைச் சேர்ந்த பேரிகை ஒலியும், படைவீரர் ஆர வாரமும் பிளின்ட் கோட்டையருகே வந்தெட்டியது. கோட்டை வாயில் வந்ததும் ஹென்ரி நார்தம்பர்லந் தைத் தூதனாக அனுப்பினான். நார்தம்பர்லந்து ரிச் சர்டு முன் வந்து, “நான் ஹென்ரி ஹெரிபோர்டு பாலிங்புரோக் கோமகனிடமிருந்து வருகிறேன். எம் தலைவர், ரிச்சர்டினிடம் சில செய்திகள் பகரவேண்டு மென்று விரும்புகிறார்,” என்றான்,

அரசனை அரசனுக்குரிய முறையிலன்றி ரிச்சர்டு என்று மட்டுங் கூறியது கண்டு, காவலரும் துணைவ ரும் உள்ளூரச் சீற்றங்கொண்டனர். ஹென்ரி பாலிங் புரோக்கின் படை வலியும் செல்வாக்குமே அன்று நார்தம்பர்லந்தைக் காத்தன என்னல் வேண்டும். ரிச்சர்டு முன்னிலையில் அவன் பணியாது நின்று பேசி னான். இத்தகைய நடைகளிலிருந்தும் மக்கள் பர பரப்பிலிருந்தும் ஹென்ரியின் உள்ளார்ந்த நோக்கம் தனக்கு உரிமையான பாலிங் புரோக் பெருநிலக் கிழமையினை மட்டும் பெறுவதன்று, அதனை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு இங்கிலாந்தின் மீது படையெடுத்து அரசுரிமையைக் கைப்பற்றுவதே யாம் என்பது தெற்றென விளங்கிற்று.

ஹென்ரியின் செல்வ வெறியிலும் செல்வாக்கிலும் மயங்கிப் பெருமக்களும் நடுநிலை மக்களிற் பலரும், அவனை அரசனாக்க ஒருப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் ரிச்சர்டு காதில் விழுந்தே இருந்தது.

இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு ரிச்சர்டைச் சேர்ந்தோர் நார்தம்பர்லந்து ஹென்ரி ஆகியவரின் நடைமீதுள்ள சீற்றத்தை வெளிக் காட்டாது அடக்கிக் கொண்டனர். ரிச்சர்டோ , கடலி னுள் புதைந்து கனன்று கொண்டிருக்கும் வடவைத் தீப்போன்று குமுறிக் குமுறி மேலெழுவதும் அடங்கி நிற்பதுமாக இருந்தான்.

வணங்காமுடி மன்னனாய் நிற்கும் நார்தம்பர் லந்தை அவன் எரியெழ உறுத்து நோக்கி, “ஐய, தாம் அரசர் முன்னிலையில் நின்று பேசுகிறீர் என் பதை மறக்கச்செய்த தமது தற்பெருமை அல்லது தம் தலைவரது தற்பெருமை யாதோ? அல்லது அரசர் யாம் அல்லேம் என்று கூட நீங்கள் உங்களுக்குள் ளாகவே முடிவு கட்டி விட்டீர்களோ?” என்றான்.

தனது திட்டம் முற்றும் அரசர் வாயிலிருந்து வருவது கேட்டு நார் தம்பாலந்து உள்ளூர மகிழ்ச்சியடைந்தும் வெளிக்கு ஒன்றும் அறியாதவன் போலச், “சிவசிவ, என்ன சொற்கள் சொன்னீர்? குடிகளா கிய எமக்குத் தமது அரசுரிமையை எதிர்க்கத் துணிவு வருமோ? யாம் வறிதே எம் உரிமைக்காக மன்றாட வந்துள்ளோம். தாம் எம் தலைவர் ஹென்ரி ஹெரி போர்டு பாலிங் புரோக் கோமகனுக்குச் செய்த தீங்கை அகற்றி அவரை ஏற்றுக்கொள்ளும்படி மட்டும் வேண்டுகிறோம்,” என்றான்.

தேன் பூசிய நஞ்சே போன்ற அவனது நய வஞ்சக மொழிகள் கேட்டு ரிச்சர்டு தான் இதுகாறும் இயற்றிய பிழைகளை ஒரு நொடி எண்ணிப்பார்த்து,

“ஆம், இன்று வருந்துவதாற் பயனென்? இப்பெரு மக்கள் குழுவை வரம்பில் வைக்கத் தவறினேன். பொதுமக்களின் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப் பையும் பெறத்தவறினேன். நகத்தாற் கிள்ளி எறியத்தகும் பகைவன் இப்போது கோடரியால் தறிப்பினும் தறிபட முடியாத அளவு வளர்ந்து விட்டானே! என் அரசாட்சி இருந்தவாறு என்?” என்று வருந்தினான்.

பின் அணை கடந்த வெள்ளத்துக்கு என் செய்வ தென்று மனந்தேறி நார் தம்பாலந்தை நோக்கி அவன் “சரி, உம் தலைவனிடம் போய் அரசனைக் காணலாம். கண்டு தம் உரிமைகளைப் பெறலாம் என்று சொல்க!” என்றான்

இத்துடன் ரிச்சர்டின் நா நின்றிருந்தால் கூட ரிச்சர்டின் வீழ்ச்சி தடைப்பட்டிருக்கலாகும். ரிச்சர்டு பாலிங் புரோக்கின் பெருநிலக்கிழமையை விட்டுக் கொடுத்திருந்தால், தற்காலிகமாகவாவது பாலிங் புரோக் தன்படைகளைக் கலைக்க வேண்டி வந்திருக் கலாம். ஆனால், பெரிய தேரின் போக்கை மாற்றும் சிறு சறுக்குக் கட்டை போன்றதோர் நிகழ்ச்சி இச் சமயம் ரிச்சர்டின் தீவினைப் பயனால் நிகழ்ந்து, அவ னது தீய நாவைத் தூண்டிற்று. வெளியே சென்று கொண்டிருந்த நார்தம்பர்லந்து, ‘தன் தலைவர் வர இணக்கம் பெறவில்லையே’ என்று நினைத்துத் திரும்பி வந்தான். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல் லாம் பேய்’ என்றபடி ரிச்சர்டுக்கு, ‘அவன் தன் மறைப்பையும் நடிப்பையும் முற்றிலும் துறந்து நேரே தன் முடிவைக் கேட்கிறானோ என்று தோன்றிற்று. தோன்றவே, தன் மன அமைதியையும் பகுத்தறிவையும் சற்றே பறிகொடுத்து விட்டு, “ஏன் ஐயன்மீர், இத்துணை நான் விட்டுக்கொடுத்தது போதாது என்றா இன்னும் வருகிறீர்? உம் தலைவர், நான் எவ்வளவு பணிந்தால் நிறைவடைவார் ? அவருக்கு இந்த ஒரு மணி முடி போதுமா? இந்த ஓர் அரசிருக்கையும் இந்த ஓர் அரண்மனையும் அல் லது இந்த ஒரு நாடும் உலகமுந்தான் போதுமா? இவ்வளவும் போதாமல் இருந்தால் இந்த ரிச்சர்டின் உயிரே வேண்டுமானாலுந் தருகிறேன். அதுமட்டுமன்று: என் அரசுரிமையோடு கூட என் தன்மதிப் புங்கூட வேண்டுமா? என்று கேட்டு வருவீர். நான் அரசனாக வாழாமல் தனி மனிதனென்ற முறையி லாவது வாழலாமா? இந்த இங்கிலாந்தில் என் மனைவியும் நான் மிதிக்கும் நிலமுமாவது எனக் குரியவை என்று நான் சொல்லிக் கொள்ளலாமா? இவை யனைத்தையும் நீர் அறிந்து வந்து சொல்லும்!” என்றிவ்வாறு தன் மனக்கொதிப்பைக் கேள்விகளாக வார்த்துக் கொட்டினான்.

நார்தம்பர்லந்து “அரசே! தற்போது தாம் தருவ தாகக் கூறுவதன் ஒரு பகுதி போதும். நான் எம் தலைவரைக் கலந்துகொண்டு வருகிறேன்” என்று கூறி அகன்றான்.

இங்ஙனம் அகன்ற நார்தம்பர்லந்து விரைந்து பாலிங் புரோக்கினிடம் சென்று நடந்த விவரங்களைக் கூறினான். ரிச்சர்டினிடம் படைவன் மை இல்லையென் றும், தன் வலிமை யின்மையைத் தானே உணர்ந்து அவன் கோபமும் தாபமும் அடைகிறான் என்றும் கேட்டதே, பாலிங் புரோக்குக்குத் தன் எதிரியின் வன்மையிற் பாதி அப்போதே தன் பக்கம் வந்து விட்டதாகத் தோற்றியது. அப்பெருமையை அவன் அடக்க ஆற்றாது உடன் தானே நார் தம்பாலந்தை நோக்கி, “ரிச்சர்டிடம் பின்னும் ஒரு முறை செல்க; சென்று, முற்றத்தில் நான் நிற்பதாகவும் இறங்கி வந்து பார்க்கத் திருவுளம் செய்யவேண்டுமென்றும் கூறுக” என்றான்.

நார்தம்பர்லந்து மூலம் இம்மொழிகள் ரிச்சர்டின் செவிகளில் புகவும், அவன், எண்சாண் உடலும் ஒரு சாணாகக் குன்றினான். கடலைக் குடித்த குறுமுனி போல இச்சண்டாளனையும், இவனைத் தாங்கி நின்ற இவ்வியனுலகையுமே விழுங்கிவிடுவோமா என்ற பெருஞ்சினம் எழுந்து அவனைச் சிலநேரம் ஆட்படுத் திற்று. சினம் தீர்ந்தபின் துயர் அவனுள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன் நிலைமையைக் கண்டு அவன் அலறினான்; அழுதான்; மனம் புழுங்கிப் புழுங்கி விம்மினான். பின் நண்பரும் பணியாளரும் தேற்ற ஒருவாறு தேறினான். இறுதியிற் கார்லைல் தலைமகனை நோக்கி, “அந்தணாள, மன்னிக்கவும்; மாந் தரை வீழ்த்தும் துயர் மன்னனையும் ஆழ்த்துவது தகாதது தான். வாழ்வில் ஆட்சி செலுத்திய இக்கண்கள் மாள்விலும் ஆட்சி செலுத்தும் எனக் காட்டுவேன்” என்று எழுந்தான்.

பின் அவன் நார்தம்பர்லந்தை ஏறெடுத்து நோக்கி ஏளன நகைப்புடன், “பெருந்தகையோய், நின் பெருந்தகைத் தலைவனிடமிருந்து நீ கொணர்ந்த மாற்றமும் பெருந்தகைமை உடையதே. அரசர் முன் குடிகள் வருவதன்றிக் குடிகள் முன் அரசர் வருவதில்லையே! ஆயினும் இஃது உங்கள் காலம். நான் வருகிறேன்; இறங்கி வருகிறேன்; கீழ் முற்றத்திற்கே கீழ் நோக்கி இறங்கி வருகிறேன்; செல்க” என்றான்.

ரிச்சர்டினிடம் அரைகுறை அன்புடையோர் அனை வரும் ‘அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித்தீர்ந்’ தேகினர். ஒரு சிலர் மட்டும் உண்மை நட்புக்கிலக்காய்க் ‘கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல ஒட்டி’ நின்றனர். இடுக்கண் என்பது, நண் பருள் நல்லவர் தீயவர் உண்மையுடையவர் போலி யானவர் இவர்களைப் பிரித்து வேறுபடுத்தும் அரிப் பன்றோ ?

ரிச்சர்டின் வீழ்ச்சி உறுதிப்பட்டு விட்டது! வீழ்வது இன்றோ நாளையோ என்பது மட்டுந்தான் கேள்வி என்ற நிலையிலும், விடாது நின்ற அன்புரி மையாளர் சிலர் இருந்தனர். அவர்கள் “அரசே! பெருந்தன்மையற்ற இந்த ஹென்ரி பாலிங் புரோக்கி னிடம் ஆத்திரப்பட்டுத் தம் மனத்திலுள்ள தனைத் துங் கூறிவிட வேண்டாம். அவன் ஆள் வலியை வைத்துக்கொண்டு வெளி மிரட்டுக்கு ஒரு சாக்குத் தேடுகிறான். முன்கூட்டி அவன் முடிவை எடுத்துக் காட்டி, அவனுக்கு அவன் தேடும் சாக்கிற்கு இடங் கொடுத்துவிடாதீர்கள்” என்றனர்.

ஆனால் ரிச்சர்டின் மனம் வேறு வழியிற் சென் றது. முன்னோ பின்னோ தன் முடிவு உறுதி என்று அவனுக்கு ஐயமற விளங்கிற்று. தான் உரலுக்குள் அகப்பட்டவனே என்று தெரிந்தது. கொஞ்சங் கொஞ்சமாய் நொறுங்குவதைவிட ஒரே இடியாய் இடிபட்டுத் தகர்ந்து பொடியாவது நல்லதல்லவா? பூனையின் கையில் அகப்பட்ட எலி, அப்பூனை தன்னைச் சற்றே விட்டுவிட்டு விளையாட்டுக் காட்டி வதைக் கையில், அதற்கிடங்கொடுக்கும் வகையில் தப்பி ஓடப் பார்க்காமல் அப்பூனையால் உடன் கடித்துக் கொல்லப்படுவதற்குத் தானே வழி பார்ப்பது நல்ல தல்லவா” இவ்வெண்ணத்துடன் ரிச்சர்டு ஒருபுறம் பாலிங் புரோக்கின் மறைந்த வஞ்ச எண்ணங்களை வெளிப்படக் கூறிக் கோபமூட்டினான். இன்னொரு புறம் அவன் கூறத் தயங்கிய மொழிகளைத் தானே கூறி, அவன் வேலையை எளிதாக்கினான்.

5.முயலெய்த அம்பும் யானை பிழைத்த வேலும்

ரிச்சர்டைக் கண்டதும் பாலிங் புரோக் படம் எடுக்கப் புகும் பாம்பு பணிந்து வளைவது போல் முழங்காலிட்டு வணங்கி நின்றான். ரிச்சர்டு அவனைத் தூக்கி நிறுத்தி, “உள்ளத்தில் இல்லாத பணிவு உடலில் ஏனோ?” என்றான்.

பாலிங் புரோக் தீண்டப்பெற்ற அரவமெனச் சீறி, “ஐயனே, உள்ளத்திற் பணிவு இல்லையெனக் கூறுவது யார்? தன் உரிமைக்குத் தான் போராட வருவதுதான் பணிவின்மையோ? இதுவும் தம் அர சாட்சியின் வண்மைபோலும்!” என்றான்.

இது கேட்டு ரிச்சர்டு முகம் சிவந்தது. கண்கள் கன்றிப் பனித்தன. உதடுகள் படபடத்தன. அவன் பாலிங் புரோக்கை நோக்கி, “இறைவனால் அமர்த் தப்பட்ட முடியரசு ஆட்சியைப் பழிக்கும் துணிவுடைய மேலோய்! என் ஆட்சியை நீக்கி நும் ஆட்சியை நிறுவுவதாயின் நிறுவுக!” என்றான்.

Shakespear28பாலிங் புரோக்கின் முகம் ஒளி வீசிற்று. குரலில் ஒரு பெருமிதம் எழுந்தது. ஆனால் மாறுதலில்லாத வெற்று மொழிகளில் அவன், “எனக்கு உரியதை மட்டுமே யான் தம்மிடம் கோரினேன்” என்று பசப்பினான்.

ரிச்சர்டின் சினம் தலைகால் தெரியாமல் துள்ளிக் குதித்தது. அவன் தீவினை அவன் நாவில் மீண்டும் வந்து நின்றது. நிற்கவே அவன், “அன்பரீர், உமக் குரியதும் உமக்குத் தந்தேன். எனக்குரியதும் உமக் குத் தந்தேன். நானும் இனி உம் உடைமை. இன்னும் என்ன வேண்டும் உமக்கு? நான் உம்முடன் வர வேண்டுமா? எங்கு வரவேண்டும்? லண்டனுக்கா வரவேண்டும்?” எனப் பல நாள் கணக்கில் பாலிங் புரோக் படிப்படியாகக் கேட்க இருந்த அத்தனை செய்திகளையும் முன் கூட்டி ஒரே மூச்சில் அவன் முன் அள்ளி வீசினான்.

பிறர் மெய்ப்புக்காக வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு கொடுத்ததையெல்லாம் வாங்கி வாங்கித் தின்னும் அலகைகள் போலப் பாலிங் புரோக், “அவ்வளவு நான் எண்ணவில்லை! தாங்கள் அவ்வளவும் ஒருப்படுவதால் அங்ஙனமே ஆகுக. லண்டனுக்கே புறப்படலாம்” என்று கூறி விட்டுப் பக்கத்தில் நின்றோரிடம் ‘ரிச்சர்டையும் உடன் கொண்டு லண்டன் நோக்கிப் பயணமாகுக” என்றான்.

ஒருவரும் கவனிக்காமலே ரிச்சர்டு அரசன், ரிச்சர்டு ஆய்விட்டான்.

பாலிங் புரோக், அரசனைச் சிறையாளிபோல் முன்னே எளிய உடையில் எளிய ஊர்தியில் விட்டுத் தான் நாற்படைசூழ அரச உடையுடன் ரிச்சர்டின் குதிரையிலேறி அணி மணிகளுடன் ஊர்வலம் செல்லும் அரசன்போற் செல்வானாயினான்.

பெருமக்கள் ஆங்காங்கு நின்று. “ரிச்சர்டு வீழ்க, பாலிங்புரோக் ஓங்குக” எனக் கத்தினர்.

பொது மக்கள், பலரும், கொடி பிடித்தவனுக் குக் கோவிந்தாப் போடுமுறையில் கூடி நின்று பாலிங் புரோக் வாழ்க, ஹென்றி வாழ்க” என்று தொண்டை கிழியக் கத்தி ஆரவாரித்தனர்.

மாநிலமாளும் மன்னவனுக் கிந்நிலை வந்துற்றதே எனப் பரிவு கொண்டவர் மிகச் சிலரே.

ரிச்சர்டின் போக்கு இங்ஙனமிருப்பக் கற்பணி கலமும் பிரான்சின் உதிர்ந்த மென் மலருமாகிய அவ னரசி அவன் அரிய வரவுக்காகக் காத்திருந்து கண் பஞ்சடைந்து ஊணும் உறக்கமும் துறந்து பேய் போலத் தன்னிலை மறந்து நாற்புறமும் ஓடிக் கணவ னைத் தேடுவாளாயினள். அவள் நிலை கண்டிரங்கிய சிலர் ரிச்சர்டுக்கு நேர்ந்த பழியையும் லண்டனுக்கு அவன் எடுத்துச் செல்லப்படும் அலங்கோலக் காட்சி யையுங் குறித்துக் கூறினர். கணவனிடமே உயிர் வைத்து நடைப் பிணமெனச் சின்னாளாய் வீட்டில் தங்கியும் உலவியும் வந்த அம் மங்கை நல்லாள், உயிரை அணைய விரையும் உடலே போல், லண்டன் நோக்கிச் செல்லும் வழியிற் செல்லலானாள்.

ரிச்சர்டை உடன் கொண்டு லண்டன் சென்ற பெருமக்கள் ஊர்வலம், அரசியற் பெருமன்றங் கூடு மிடமாகிய வெஸ்ட் மினிஸ்டர் (West minister) சென்று சேர்ந்தது. ஆண்டுநின்றும் ‘ஹென்ரி வாழ்க, பாலிங் புரோக் வாழ்க’ என்ற கூக்குரல் வானைப் பிளந்தது. ரிச்சர்டின் பெயரைத்தானுங் கூறுவாரைக் காணோம். குடிகள் அன்பின்மை என்ற நச்சரவங் கண்ட ரிச்சர்டு, அரசியல் வாழ்வில் முற்றிலும் வெறுப்புற்று இம்மக்களையோ- இவ்ஹென்ரியையோ இனிக் கண்ணிற் காணாதிருக்கும் வரம் தருவாய் என இறைவனை வழுத்தலானான்.

பின் மண்ணுலக வாழ்வை வெறுத்த அம் மன்னன் யாரும் எதிர்பாரா வகையில் நார்தம்பர் லந்தை அழைத்துப், “பெரியீர், வளைந்து வளைந்து செல்வானேன்? நேர் வழியை நான் இணக்கத் துடன் காட்டுகின்றேன். இம் மணிமுடி எனக்கு வேண்டா. நும் தலைவர் அதனை ஏற்கத் திருவுளங் கொள்ளின் ஏற்றருளுமாறு நான் இறைஞ்சுவதாகக் கூறுவீர்” என்றான்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வரப் பெற் றதுபோல் மகிழ்வெய்திப் பாலிங் புரோக் , ரிச்சர்டைத் தானே வந்து அரசியல் மன்றில் அதனை விட்டுக் கொடுக்கும்படி வேண்டினான்.

இறப்பினும் மானம் துறவா ஆங்கில அரசர் வழியில் வந்த ரிச்சர்டு, “யான் தற்போது அரசு துறந்து அரசுரிமைச் சாம்பலென நிற்பினும், யான் குடிகள் முன் சென்று குடிமக்கள் நிலையில் பேச ஒருப்படேன்” என்று மறுத்தான். ஹென்ரியும்’ மாளும் அரியேற்றினிடம் மாளுமுன் எதிர்ப்பது தவறெனக் கொண்டு, தனது வேண்டுகோளை வற்புறுத்தாமல் சற்றுப் பின் வாங்கினான்.

ரிச்சர்டு அதன் பின், அரசிருக்கையும், முடியும் தான் ஹென்ரியினிடம் ஒப்பிவிப்பதாகவும், தான் பிரான் சிக்குச் செல்ல விரும்புவதாகவும் சொல்லியனுப்பினான்.

கொடுப்போர் குலப்பெருமை அறியாத வாங்கு வோர் குலத் தோன்றலாகிய ஹென்ரி, ரிச்சர்டின் கோரிக்கைகளுள் முன்னதை மட்டும் வெட்ட வெளிச்சமாக மன்றத்தார் முன் வாசித்துக் காட்டிப் பின்னதை அடக்கிக் கொண்டான்.

ஹென்ரி பாலிங் புரோக், பெருமக்கள் தலைவனாக யார்க் கோமகன் துணை செல்லக், கான்ரிபெர்த் தலை மகன் வழி காட்ட, அரசிருக்கையேறி, மேளதாளங் களுக்கிடையே மணிமுடி அணிவிக்கப் பெற்றான்.

தலைமக்கள் (Clergy), பெருமக்கள் (Lords) பொது மக்கள் (Commons) ஆகிய மும்மண்ட லத்தவரும் (Cham bers) போற்ற நானிலமெங்கும் புகழலை வீச, “பாலிங் புரோக் வாழ்க, நான்காம் ஹென்ரி வாழ்க” என்ற ஆரவாரங்களுக்கிடையே அன்று ஹென்ரி முடி சூட்டப் பெற்றான்.

ரிச்சர்டு என்னும் ஞாயிறு அரசியல் வானில் மேல்பால் கண் கவர் சிறப்புடனும் நல்லோர் மனத் துயராகிய நிழற்படலங்களுடனும் மறையவும், ஆங்கு வளர்பிறையின் முதற் கலைபோலும் பெருமிதத்துடன் ஹென்ரி என்னும் மதிக் கொழுந்து மேலெழுந்தது.

6.தோல்வியில் வெற்றி

புதிய முடி சூட்டு விழாவில் கறை ஒன்றே ஒன்று தான். “புலனழுக்கற்ற அந்தணாள’ னாகிய கார்லைல் தலைமகன் அரசியல் மன்றில் முடிசூட்டுமுன் எழுந்து, “அரசர் என முடிசூட்டப்பெறப்போகும் பாலிங் புரோக் பெருமகனாரே! அரசர் அரசிருக்கை ஏறுவதும் துறப்பதும் மக்கள் விருப்பு வெறுப்பாலன்று; இறைவன் திருவுளப்போக்கு ஒன்றினால் மட்டுமே ஆகக்கூடியது என்று அறிவீர். ரிச்சர்டுக்குரிய இவ் வரசுரிமையை அவனிடமிருந்து பறிக்கவோ, மேற்கொள்ளவோ உமக்கு என்ன தகுதி உண்டு? இறை வன் முன்னிலையில் ரிச்சர்டே அரசர்; அதுவே என் கொள்கை: பிற அறிவுடையோர் கொள்கையும் அதுவேயாம். உமக்கஞ்சி உம்மை ஏற்கும் கோழை களுக்குப் புறம்பான மக்களும் உளர். அவரே மக்கள். பிறர் மாக்களே என்பதை நீர் உணர்க” என்றான்.

பாலிங் புரோக் பொறுமை யிழந்து, முடிசூட்டு விழாநாள் என்று கூட எண்ணாது, “உடன் தானே இப் பார்ப்பான் தலையைத் துணிக்க” என்று பணித்தான். முடி சூட்டின் முதற் பலி நிறைவேறிற்று.

இனி ரிச்சர்டின் கொலை ஒன்றுதான் குறை.

ரிச்சர்டின் துணைவி லண்டனுக்கு வந்து, அவன் மணிக்கூண்டுச் சிறைக்குக் கொண்டுபோகப் (Tower of London) படுவதாகக் கேட்டு, அவ்விடத்துக்குச் செல் லும் வழியில் ஓரிடத்தில் தன் உயிர்த் தோழியர் சில ருடன் காத்திருந்தாள்.

அவன் சிறையாளி போல் கொண்டு வரப்படும் அப்போதும், புகழிற்கு மாறாக அவன் இகழ்மாலை சூட்டப்பெற்று வரும் அந்த நேரத்திலுங்கூட, அவள் கண்ணுக்கு அவன் அடி முதல் முடி வரை ஒவ்வோர் அங்குலமும் நிறையரசாகவே காணப்பட்டான்.

அவன் துயரால் அவன் வனப்பும் கவர்ச்சியும் அவள் கண்களுக்குப் பன்மடங்கு மிகுந்து தோன் றின. அவள் தன் தோழியர் தோளிற் சாய்ந்து அவனைக் குறித்த நோக்குடன், “ஆ, மன்னர் என்ற சொல்லுக்கோர் மகுடம் போல் விளங்கும் என் இறைவனை நோக்குவீர்! துயரால் கறை பட்ட அம் மகுடத்தை யான் என் காதற் கண்ணீரால் கழுவி இன்னும் புத்துயிர் பெறும்படி புதுப்பிப்பேன் என்று புலம்பினாள்.

அவள் துயர் கண்டு தன் உள்ளுயிர் பொசுங்கி னும் அவளையும் அவள் துயரையும் கண்டும் காணாத வன்போன்ற தோற்றத்துடன் ரிச்சர்டு அவளைத் தோழியருடன் சேர நோக்கி, “யான் உங்களைக் கவனிக்கும் காலம் அன்று இது. இங்கிலாந்தின் புயற்காற்றும் என் முடிவும் உங்களுக்குகந்தவை யல்ல. இந்நாட்டின் சூறாவளியின் சுழற்சியுட்படாமல் அமைதியுடன் பிரான்சு நாடு சென்று கன்னியர் மடத்துட் சென்று ஒதுங்கி உறையுங்கள்” என்றான்.

“என் தலைவர் தாங்கரும் துயரினும் என்னை இங்ஙனம் மறத்தல் தகுமோ? நான் தம் உடலினும் உயிரினும் ஓர் பகுதி என்ற முறையில் தம் துயரையும் பகிர்ந்து துய்க்கும் உரிமையுடையவளன்றோ?” என்றாள் அப்பெண்மை அரசி.

ரிச்சர்டு மின்னியிடித்தார்த்து மழை பொழிந்து. வெறித்தாலன்ன முகத்துடன் அவள் பக்கம் திரும்பி நோக்கி, “என் உயிரே / நீ என் பகுதி மட்டிலும் அல்லை; என் உள்ளுயிர் நீ; உயிர் நிலை நீ; உன்னைத் தாக்காத எத் துயருக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் அஞ்சேன். ஆனால், உன்னைத் தாக்கும் துயர் என்னைக் கோழையாக்கி விடும். நீ என் துயரைப் பகிர்வதற்கு மாறாக, அதனைப் பன் மடங்கு மிகைப் படுத்தமட்டுமே செய்யக்கூடும். ஆதலின், இவ்வுடல் எந்நிலை யெய்தினும் அதனால் தாக்குறாமல் அதன் உயிராக விலகி நின்று மறுபிறப்பில் என்னுடன் வந்து சேர்வாய்” என்றான்.

அரசி அச்சொற் கேட்டுப் பின்னும் உருகினாள். பின் அவன் பக்கம் பாராது நார் தம்பாலந்து பக்கம் நோக்கி, “என்னையும் சிறையாளியாக உடன் கொண் டேக வேண்டுகிறேன்” என்றாள்.

நார்தநபர்லந்து கடுகடுத்த முகத்துடன் “அம்மணி, தம் கணவர் இப்போது சிறையாளியும் அரசியல் பகைவரும் ஆவர். அவருடன் செல்வது முடியாத காரியம். அது மட்டுமன்று. அவர் இப்போது நாட்டுப் பகைவரானபடியால் அவருடன் பேசுவதும் பரிவு கொள்வதும் கூட, அரசியற் பகைமையாகக் கருதப்பட இடமுண்டு” என்றான்.

நாக்கில் நரம்பற்றுப் பேசப்பட்ட இம்மொழி கள் கேட்டுப் பொங்கிய சினத்தை உள்ளடக்கிக் கொண்டு அரசி பின்னும் “மன்னரை ஆக்கவும் அழிக்கவும் வல்ல மன்னர் மன்னரே! நான் அவ ருடன் காட்டும் பரிவு அரசியல் முறைப்படி மன்னன் என்ற வகையில் அல்லவே, பெண் என்ற முறைப் படி கணவன் என்ற வகையில் தானே / தமது புது மன்னனிடம் தம் செல்வாக்கைப் பயன் படுத்தி, என் கணவனுக்கு இத்துயர்ப்பொழுதில் துணையாய்ச் சில நாட்களேனும் உதவ இணக்கம் அளிக்கலாகாதா?” என்று மன்றாடினாள்.

நார்தம்பர்லந்து இரக்கமின்றி, “இதற்கு மன்னனிடம் செல்ல வேண்டுவதில்லை. முடியாதென்று நான் கூறிவிட்டேன்” என்று தன்னாண்மையுடன் கூறினான்.

Shakespear29தனது புதிய வலிமையின் வெறியால் ரிச்சர்டு அவளுக்குத் தன் இறுதி முத்தமளித்து விடை கொள்வதைக்கூட அவன் தடுத்தான். அப்போது அரசியின் முகம் சரேலென்று சிவந்து கறுத்தது. உயிரினும் இனிய தன் துணைவிக்கு நேர்ந்த அவமதிப்புக் கண்டு ரிச்சர்டு சீறினான்.

சீற்றத்தால் ஒரு வாழ்நாளின் அரசுரிமை வீறு முற்றும் ஒரு நொடிக்குள் அவன் முகத்திலும் நிலை யினும் வந்தேற, அவர் நார் தம்பாலந்தை அழலெழ நோக்கிக் கேட்போர் அஞ்சும் வஞ்சின மொழிகள் பகரலானான்.

“கொண்ட முடிமன்னனுக்கு வஞ்சகம் செய்த நீ, கொண்ட கணவனிடமிருந்து மனைவியைப் பிரிக்க எண்ணுதல் இயல்புடையதே!”

“முடிமன்னனுக்கு வஞ்சமிழைத்த நீ, அவ்வஞ் சத்தின் பயனாக உயர்த்திய நின் கைப்பிடி மன்னனுக்கு வஞ்சமிழைப்பாய்!”

“மணிமுடியார்வத்தால் தீங்கிழைத்த நின் தலைவற்கு, அம்முடி முள்முடியாகி அவனுக்குத் துன் பத்தையும் வெறுப்பையுந் தருவதாக!”

“முடிமன்னர் குடிக்கெதிராக மேலோங்கிய நின் புன் கை நின் குடியையுங் கெடுக்க” என்றான்.

இப் பழிமொழிகளைப் பொருட்படுத்தாது நார் தம்பர்லந்து சிரிக்க முயன்றான். ஆனால், அது பேய்ச் சிரிப்பையொத்து நகையிழந்திருந்தது. மன்னனுடன் உள்ளூரப் பரிவு கொண்டவர்கள் உள்ளங்களையும் இம் மொழிகள் ஈர்த்தன.

அனைவரும் பேச்சு மூச்சின்றி நிற்ப, ரிச்சர்டும் அரசியும் வாயற்ற நெடும் பார்வையுடனும் நெடு மூச்சுடனும் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். இது முதல் ரிச்சர்டின் வாழ்வு, குறுகிய மணிக்கூண்டுச் சிறையினும்; அரசியின் வாழ்வு, அகன்ற பசையற்ற மடத்து வாழ்விலும் கழியலாயின.

அரிசி, தன் வாழ்நாளை நெடுநாள் தாங்க இயலாது உடல் வாடி வதங்கி உலகை நீத்தாள். அவள் உயிர் தன் தலைவனை எதிர்கொள்ள முன்கூட்டி விண்ணுல கெய்திற்று.

ரிச்சர்டின் ஆட்சி முடிவு கேட்டுப் பொது மக்களிற் பலர் வியப்புற்றனர். அவன் ஆட்சியின் குறை பாடுகளை நன்கு உணர்ந்தவர்கள் கூட, அவன் ஆட்சி முடிவு ஏற்புடையதன்றெனக் கொண்டனர். ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்றபடி பெரு மக்களும், இன்ப வாழ்வும் தற்பெருமையுமுடைய ரிச்சர்டின் குற்றங்கள், தன்னலமே நோக்கமாகக் கொண்ட ஹென்ரி ஆட்சியின் குற்றங்களைப் பார்க்கினும் எவ்வளவோ மேல் என்று எண்ணினர்.

ரிச்சர்டுக்கு உட்பகையாய் நின்ற யார்க் கோமகன் மகன் ஆமெர்ல் பெருமகன் தலைமையில் பல பெருமக்களும் பொதுமக்களும் சேர்ந்து, திரும்ப ரிச்சர்டை அரசனாக்கும் எண்ணத்துடன் சூழ்ச்சி செய்தனர். ரிச்சர்டுக்கு வஞ்சமிழைத்த யார்க், மைந்தனையும் மனைவியையும் கூடக் காட்டிக் கொடுத்து நல்ல பெயரெடுக்க முயன்றான்.

ஹென்ரியின் சமய சஞ்சீவிகளில் ஒரு மூவர் யார்க்கைவிட ஒருபடி முன் சென்று சிறையிலிருந்த ரிச்சர்டை வலியச் சண்டைக்கிழுத்துப் படுகொலை செய்தனர்.

தன்னலத்திற்காக ரிச்சர்டிற்கு எதிராக அனைவரையும் தூண்டிய ஹென்ரி, ரிச்சர்டின் பெருந்தன்மையினையும், அவனுக் கெதிராகத் தன் தூண்டுதலுக்கிணங்கிய வஞ்சகர்களின் சிறுமையையும் உள்ளபடி உணர்ந்து ரிச்சர்டை மனமாரப் புகழ்ந்து, அவன் கொலைஞர்களைத் தூக்கிலிட்டான். ஹென்ரியின் குற்றங்களை இச்செயல் ஒருவாறு பொது மக்கள் முன்னிலையில் கழுவிற்று என்னலாம்.

இதே காரணத்தால் அவன் யார்க் கோமகன் சொற்கேளாது அவன் மனைவி மக்களை மன்னித்து விட்டான். யார்க்கின் கோழைத்தனமான நட்பை விட, அவர்களது வீரஞ்செறிந்த பகைமை நல்ல தெனக் கொண்டான். அதற்கேற்ப, அவர்களும் ரிச்சர்டினிடம் காட்டிய உண்மையினை அவனிடமுங் காட்டினர்.

ஹென்ரி இங்ஙனம் ரிச்சர்டுக்குத் தன்னலத்தால் தான் இழைத்த தீங்கைச் சரிசெய்ய எண்ணியும், ரிச்சர்டின் புகழும் வஞ்சினமும் அவன் வாழ்க்கையை வாள் போல் ஈர்த்தன.

ரிச்சர்டுக்கு வாழ்வில்லாத வெற்றி, மாண்ட பின் கிட்டியதென்னலாம். அவன் முடியரசை வென்ற வனையும் அவன் வழியினரையும் ரிச்சர்டின் பெயர் நின்று நெடுநாள் வருத்திப் பலிகொண்டு பின் தணிந்து, இங்கிலாந்துக்கு மாறாப் புகழாக மாறிற்று.

ஆங்கில மக்கள் அவன் அரசியல் குறைகளை மறந்து, அவனது குண நிறைவையும் துயரிடையே அவன் காட்டிய பொறையையும் பெருந்தன்மையினையும் நெடுநாள் புகழ்ந்து பாராட்டினர்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (ஆறாம் புத்தகம்), முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *