நகரத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த “அழகியபுரம்’ கிராமம். பெயருக்கேற்றபடி மிகவும் அழகு வாய்ந்தது அந்தக் கிராமம். எங்கு பார்த்தாலும் “பச்சைப் பசேல்’ என்றுதான் காட்சியளிக்கும். வளமான நீர் நிலைகள் கண்களுக்குக் குளுமை சேர்க்கும். ஓங்கி வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பன்னீர் பூக்கள் பார்ப்பதற்கு பூமழை பொழிவது போல் தோற்றமளிக்கும். அளவான வீடுகளுடன், அமைதியான சூழலில் இருந்தது அந்தக் கிராமம். பட்டணத்திலிருந்து அந்த ஊரில் வசிக்கும் பண்ணையார் வீட்டிற்கு அவரது மகளும், பேரனும் வந்திருந்தனர். பேரனுக்கு கிராமம் என்றாலே இளக்காரம்.
“மம்மி… உங்க ஊரு சரியான நாட்டுப்புறம். அந்த வயல் வரப்புகள்ல நடப்பது அய்யோ அம்மா… என் கால் எல்லாம் டர்டி ஆயிடும். படிக்காத உங்க சொந்தக்காரங்க… “தம்பி… புள்ள எப்படா வந்த…’ என ராகம் போட்டு கூப்பிடுவது எல்லாம் எனக்கு பிடிக்காது…’ மம்மி’ என்பான்.
அதைக் கேட்டு மந்தகாசமாக சிரிப்பார் கணவர். சந்திராவுக்கு அழுகையா வரும். என்ன செய்வது அப்படியே தாங்கிக் கொள்வாள்.
மாலை நேரத்தில் தகப்பனாருடன் மாடியில் நின்று கிராமத்தை பார்த்தான் சந்தோஷ். அப்போது நகரத்தின் சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்பட்ட கிராமத்தின் எழில், அதன் அமைதியான சூழ்நிலை அவன் மனதை கொள்ளைக் கொண்டது. அதிகாலையிலேயே எழுந்து கையில் பேஸ்ட், பிரஷ்ஷுடன் வெளியே வந்த சந்தோஷை கணக்குப் பிள்ளை அன்போடு அழைத்தார்.
“”தம்பி எங்க ஊரு எப்படி இருக்கு?” என்றபடியே கையில் ஒரு குச்சி, அதை தன் வாயில் வைத்து தேய்த்துக் கொண்டே பேசினார்.
“”என்ன தாத்தா இந்த குச்சி வைத்து என்ன பண்ணுறீங்க… பேஸ்ட், பிரஷ் எதுவுமே இல்லாம இப்படி குச்சி வைத்து கண்டபடி இழுக்குறீங்களே! உங்க வாய் தான் புண்ணாயிடாதா?” என்றான்.
இதைக் கேட்ட முதியவர், “”தம்பி! நீங்க பட்டணத்து தம்பி… இங்கிலீஸ் படிப்பெல்லாம் படிக்கிறீங்க. பட்டணத்துலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போன உங்களுக்கு இந்தக் கிராமத்து சூழல் பற்றியும், இங்கு இருக்கிறவர்கள் பற்றியும் தெரிஞ்சிருக்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
“”நான் விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து இந்தக் கு ச்சியாலதான் பல் தேய்ச்சிட்டு வர்றேன். அப்படி ஒண்ணும் என் வாய் புண்ணாகிடல. மாறாக என்னோட ஒரு பல் கூட இதுவரைக்கும் விழுந்ததில்லை, ஒரு சொத்தைப் பல் கூட இன்னும் எனக்குக் கிடையாது. காரணம், இது வெறும் குச்சி இல்ல; ஆலங்குச்சி. அதோ அந்த ஆலமரத்திலிருந்துதான் தினமும் ஒரு சிறுகுச்சியை ஒடித்து பல் தேய்ப்பேன்.
“”உங்க பேஸ்ட், பிரஷ்ல இல்லாத மருத்துவ குணமெல்லாம் இயற்கையான இந்த ஆலங்குச்சியில் இருக்கு. “ஆலும், வேலும் பல்லுக்குறுதி.’
“”இதுமட்டுமில்லாம காலையில் எங்க ஊர் குளத்தில் குளிச்சிட்டுப் போய் பாருங்க! உங்களுக்குக் கிடைக்கிற புத்துணர்ச்சியே தனிதான். அதுதான் சொல்லியிருக்காங்க. குளிர்ந்த நீரில் குளிச்சா உடம்பு சுத்தமாகிறது மட்டுமல்லாமல் நம்ம மனசும் குளுமையா இருக்கும். இன்னும் எவ்வளவோ இருக்கு தம்பி. இதெல்லாம், நீங்க அடிக்கடி வரும்போது தெரிஞ்சிக்குவீங்க… டிபன் சாப்பிட்டு விட்டு ரெடியா இருங்க. நான் வந்து கிராமத்தை சுத்திப் பார்க்க கூட்டிகிட்டு போறேன்,” என்றார்.
முதல் முறையாக சந்தோஷின் மனதில் கிராமத்தை பற்றிய எண்ணம் மாறியது. காரணம், 15 வயதிலேயே சொத்தைப் பல்… அடிக்கடி பல் கூசும். பல்லில் ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தோஷ்க்கு. முதல் முறையாக கணக்குப்பிள்ளை சொன்ன ஆரோக்கியமான பற்கள் மற்றும் பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சி பற்றி அவர் சொன்னது அவன் மனதை தொட்டது. அம்மா சொல்லும் போது, புத்தகத்தில் படிக்கும் போதெல்லாம் ஏற்படாத ஒரு நம்பிக்கை அவன் மனதில் முதன் முதலாக உண்டாகியது.
அத்துடன் அம்மாவின் ஆசைப்படி பத்து நாட்கள் தாத்தா வீட்டில் இருந்து கிராமத்து மண்ணின் மான்புகளை தெரிந்துக் கொள்ளலாம் என நினைத்தான்.