பிறவா வரம் தாரும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 7,955 
 

கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த ஒரு கடமையும் பாக்கி இல்லை. சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ்ந்தாகிவிட்டது.

ஒன்றல்ல… இரண்டல்ல.. அறுபது ஆண்டுகள் தீர்க்க சுமங்கலியாய் வாழும் இந்த சந்தோஷ நொடிகள் அற்புதமானவை. இந்த ஆனந்தத்தை அனுபவித்தபடி இறுதி மூச்சை விட்டு விட வேண்டும்.

இவள் கடந்தவைகள் நாற்றம், அழுக்கு, துன்பம். ஆனால் இத்தனையைக் கடந்தும் இவள் இன்னமும் மணக்கிறாள் என்றால் இவளுக்குள் இருக்கும் ஆன்மிக ரசவாதம்தான் காரணம். சென்ட் பூச்சுப் போல, அத்தர் மணம் போல இவள் அந்தராத்மா மணத்தது இவளுக்கு மட்டும் தெரியும்.

ஒரே பையன்… சாப்ட்வேர் இன்ஜீனியர், சிஸ்டம் அனாலிஸ்ட்.. என்று தகுதியுடைய தம் பையன் ஆதித்யாவை காயத்ரியிடம் ஒப்படைத்தாள் கௌசல்யா.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. “அம்மா அம்மா” என்று காயத்ரி இவளை அழைத்ததும், கையில் காபி கொண்டு வந்து கொடுத்ததும், இவளை சமையல் அறையில் விடாமல் தானே எல்லாம் செய்ததும்…

கௌசல்யா மகிழ்ந்து போனாள்.

கணவர் ராமநாதனோ, “அவசரப்படாதே கௌசி. ஆரம்பம் நன்றாகத்தான் இருக்கும். போகப் போகத்தான் தெரியும்…” என்பார்.

அன்று…

மெல்ல இவளைத் தேடி இவள் அறைக்கு வந்தான் ஆதித்யா. ராமாயணத்தில் மந்திரையின் சூழ்ச்சிப் படலம் படித்துக் கொண்டிருந்தாள். காலை பூஜையின்போது பாராயணம் பண்ணுவாள். சில சமயம் முடியாத போது தன் அறையில் இருந்தபடியே படிப்பாள்.

மகனைக் கண்டதும் புத்தகத்தை மூடிவிட்டு, “என்ன ஆதித்யா? இன்னிக்கு சீக்கிரமே ஆபீஸிலே இருந்து வந்துவிட்டியா? டிபன் சாப்பிட்டாச்சா? காயத்ரி வந்தப்புறமா உன் தேவைகளைப் பத்தி நான் கவலைப்படறதே இல்லை.”

ஆதித்யா தலை குனிந்தபடி பேசினான். “அம்மா, காயத்ரியோட தங்கைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்காம். அவ அப்பாகிட்டே அதிகமா பணம் இல்லையாம். தவிர, சம்பந்திகள் வரதட்சிணை நிறைய எதிர்பார்ப்பார்கள் போல. அதனால காயத்ரி எங்கிட்ட அஞ்சு லக்ஷம் பணம் கேக்கறா…”

“உங்கிட்டே அத்தனை பணம் இருந்தா கொடேன்.”

“உனக்குத் தெரியாதாமா! என் சம்பளம் முழுக்க உன்கிட்டேதானே தரேன். நீயா மாசா மாசம் சில ஆயிரம் ரூபாயை ரெகரிங் டெபாசிட்டா என் பேர்லே கட்டறே… அதெல்லாம் சில ஆயிரங்கள்தான் தேறும். வந்து..”

“சொல்லுப்பா… என்ன வேணும் விவரமா சொல்லு..”

“அப்பாகிட்டே..”

“என்ன ஆதித்யா இது! அப்பா ரிடையர் ஆகி பென்ஷன் வாங்கறார். அப்பாகிட்டே ஏதுப்பா லக்ஷக்கணக்கா பணம்? ஏதோ கடனோ உடனோ வாங்காம நிம்மதியா சாப்பிடறோமே! அதுக்குச் சந்தோஷப்படணும்.’

“அதில்லைம்மா. இந்த வீடு… நம்ம பூர்வீக வீடு. ரொம்பப் பழசாயிட்டது.ரிப்பேர் பண்ணினாக்கூட நிறையச் செலவாகும். பேசாம இதை வித்துட்டு… அழகா ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிட்டு..”

கேட்டுக்கொண்டே வந்த ராமநாதன் ருத்ரமூர்த்தியானார்.

“யார் உபதேசம்டா இது? இந்த வீட்டிலேதான் அம்பது வருஷமா வாழறேன். இது எங்கப்பா எனக்கு வைச்ச சொத்து. என் காலத்துக்கப்புறமா இதை இடி, வித்துத் தின்னு. நான் உயிரோட இருக்கிறவரை இதை விக்க அனுமதிக்க மாட்டேன். மாடும், மனையும், பாலும் பவிஷுமா வாழ்ந்தவர்கள் நாம. நான் சாகற வரை இந்த வீட்டிலே தான் இருப்பேன். பெரிசா புத்தி சொல்ல வந்துட்டான் வீட்டை வித்துட்டு அபார்ட்மெண்டுக்குப் போகணுமாம்.”

கௌசல்யா கணவனை அடக்கினாள். “இருங்க… ஏன் பதட்டப்படறீங்க! இப்போ எல்லோரும்தான் அபார்ட்மெண்ட் கட்டறாங்க. ஆதித்யா சொல்றது தப்பில்லை. ஆனா..”

“மண்ணாங்கட்டி! அபார்ட்மெண்ட் கட்டி வாழ்ந்தவாளை எல்லாம் பார்த்துட்டேன். ப்ராடு பில்டர் கிட்டே மாட்டிண்டா இடத்துக்கு இடமும் நஷ்டம்; பணத்துக்குப் பணமும் போய் நடுவீதியில் தான் நிக்கணும்..” ராமநாதன் கர்ஜித்தார்.

ஆதித்யா குனிந்த தலையுடன் தன் அறைக்குள் போய் விட்டான். அதன் பின் வந்த சில நாட்கள் மௌனத்தில் கரைந்தன.

காயத்ரி, “அம்மா, அம்மா” என்று கூப்பிடுவது நின்று போயிற்று. காலையில் கையில் காப்பி கொண்டு வந்து கொடுத்த பழக்கம் நின்று போயிற்று.

“எனக்குத் தலைவலி.. உங்கம்மாவையே காபி போடச் சொல்லுங்கோ.”

“எனக்கு வயித்துவலி… எனக்கு சாப்பாடு வேண்டாம். உங்கம்மாவையே சமைச்சுக்கச் சொல்லுங்கோ.”

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம். கௌசல்யா பழையபடி சமையல் அறைக்குள் நுழைந்து தன் பணிகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

அன்று…

காய்ச்சல், டாக்டரிடம் போகிறோம் என்று சொல்லிவிட்டு ஆதித்யாவும், காயத்ரியும் வெளியே போனார்கள்.

சற்று நேரத்தில் வெளியே போயிருந்த ராமநாதன் திரும்பி வந்தார். பேசாமல் ஊஞ்சல் ஆடினார்.

ராமநாதனுக்குக் கோபம் வந்தால் ஊஞ்சல்தான்! வெளியே ஊஞ்சல் ஆட… உள்ளே மன ஊஞ்சலில் இப்படியும் அப்படியுமாய் .. ஆடுவார். ஊஞ்சலின் வேகத்திலிருந்தே ராமநாதன் கோபமாக இருக்கிறார் என்பதை யூகித்தாள் கௌசல்யா.

வாசலில்.. ஆட்டோ வந்து நிற்கும் சப்தம்.
காயத்ரியும், ஆதித்யாவும் உள்ளே நுழைந்தனர்.
கௌசல்யா அவசரமாக வந்தாள்.
“காயத்ரி .. உடம்புக்கு ஒண்ணுமில்லையே? டாக்டர் என்ன சொன்னார்?” கௌசல்யா கேட்டாள்.

ஆதித்யா பேச வாயெடுப்பதற்குள் ராமநாதன் கேட்டார்.
“டாக்டரா? எந்த டாக்டர்?”
ஆதித்யா திணறியபடி பேசினான். “நம்ம நம்ம ..ச்ரீ.. ச்ரீனிவாச ராவ் தான்”

“அவர் கிளினிக்கிலேதானே இருப்பார்? அவரை பைவ் ஸ்டார் ஹோட்டல்லயா பார்க்கப் போனே?

“அ… அப்பா..”
ஆதித்யா ஆடிப் போனான்.

“எப்படா இப்படிப் பொய் பேசக் கத்துண்டே? கல்யாணத்துக்கு முன்னால நல்ல பையனாத்தானே இருந்தே?”

ஆதித்யா பேசாமல் இருந்தான். உள்ளே நுழைந்து கொண்டிருந்த காயத்ரி திடீரென்று பத்ரகாளியாக மாறினாள்.

“ஆமாம். கல்யாணத்துக்கு முன்னால நல்ல பையன்தான். நான் வந்துதான் உங்க புள்ளையைக் கெடுத்துட்டேன். சாப்பிடாம நாக்கு செத்துப் போச்சுன்னு ஹோட்டல்லே போய் ‘சூப்’ சாப்பிட்டோம்.! இது ஒரு தப்பா? நீங்களும் அனுபவிக்க மாட்டீங்க. அடுத்தவங்களையும் அனுபவிக்கவிட மாட்டீங்க. என் தலையெழுத்து…”

கௌசல்யா ஆடிப் போய்விட்டாள். தன் கணவனை எதிர்த்து ஒரு நாள்கூட பேசியவள் இல்லை அவள். இந்தப் பெண், நேத்து திருமணமாகி புகுந்த வீடு வந்தவள், எத்தனை துச்சமாகப் பெரியவரை எதிர்த்துப் பேசிவிட்டாள்!

ராமநாதன் கோபமாக எழுந்து உள்ளே போய் விட்டார். ஊஞ்சல் தாறுமாறாக ஆடிக் கொண்டிருந்தது. அதில் அடிபட்டபடி கௌசல்யா, “ஆதித்யா… என்னடா இது!” என்று அதிர்ந்து போய்க் கேட்டாள்.

“என் தலை எழுத்து. எனக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைச்சீங்க?” என்று கேட்டபடி மனைவியின் பின்னே விரைந்து விட்டான்.

சற்று நேரத்தில் கையில் பாலுடன் இவள் தன் மகனின் அறையை நெருங்கிய போது…
காயத்ரி பேசியது கேட்டது.

“இதோ பாருங்க. ஒண்ணு இந்த வீட்டிலே அந்தக் கிழடுகள் இருக்கணும், இல்லே நாம இருக்கணும். டஞ்சன் மாதிரி பழைய வீடு. அழுக்கடைஞ்சு.. பொந்து பொந்தா ரூம். இதை இடிச்சு ப்ளாட் கட்டுங்கோ. இல்லை விக்க ஏற்பாடு பண்ணுங்கோ. அதுவரை நாம எங்கேயாவது தனிக்குடித்தனம் போய் இருக்கலாம். நாலு பேர் வந்தா சிரிச்சுப் பேச முடியல்லை. நம்ம இஷ்டத்துக்கு உபசரிக்க முடியல்லை. கிழவி கேக்கற ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கு. நல்லா தீர்மானம் பண்ணிக்கோங்க. உங்களுக்கு நான் வேணுமா? உங்கம்மா வேணுமா?”

ஆதித்யா என்ன பதில் சொல்கிறான் என்பதைக் கேட்கும் தைரியமில்லை கௌசல்யாவுக்கு. பேசாமல் தன் அறைக்குத் திரும்பி விட்டாள்.

மறு நாள் பிறந்த வீடு கிளம்பி விட்டாள் காயத்ரி. ஒரு மாதம் கழித்து அவள் தங்கை கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வந்தது.

ராமநாதன் தடுத்தும் கேட்காமல், “சம்பந்தி வீட்டுக் கல்யாணம். போகாம இருந்தா நல்லா இருக்காது” என்று இவள் மட்டும் கிளம்பிப் போனாள்.

கல்யாணம் முடிந்து தாம்பூலத்துடன் கிளம்புமுன் சம்பந்தியைப் பார்த்துச் சொல்லிக் கொண்டாள் கௌசல்யா.

“காயத்ரி பணம் கேட்டா. கொடுக்க முடியாமப் போச்சு…” என்று சொன்ன போது சம்பந்தி திகைத்தார்.

“என்ன சொல்றீங்க? நானா, பணம் கேட்டேனா? காயத்ரி சொன்னாளா? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே. இந்த சம்பந்திகளும் ரொம்ப நல்லவங்க. உங்களை மாதிரியே வரதக்ஷணை ஏதும் கேக்கலை!”

இவள் அதிர்ந்து போனாள். ஆதித்யா தலை குனிந்தபடி நின்றிருந்தான்!

எல்லாவற்றிற்கும் இவனும் கூட்டா? இதற்கா இவனை வளர்த்து ஆளாக்கினேன்? நான் ஊட்டிய அமுதும், சொன்ன கதைகளும் இவன் ரத்தத்தில் கலக்கவில்லையா? அல்லது நான் தந்த அமுது நஞ்சாகிப் போனதா?

தன்னைப் பெரும் பாக்கியசாலி என்று நினைத்து இவள் சந்தோஷப்பட்ட நாட்கள், ஆண்டுகள் எல்லாம் அந்த நொடியில் அமிலத்தில் கரைந்து போயின. “என் பையன்” என்று பாசம் உடைந்து சுக்கு நூறானது.

வீடு திரும்பினாள். எதையும் தன் கணவனிடம் கூறவில்லை.

“இதோ பார் கௌசி. அதிக பாசம் வைச்சாத்தான் அதிக ஏமாற்றம். வைக்கற பாசத்தை பக்தியாக்கி அந்த ஆண்டவன் மேலே வை. அவன் நம்மைக் கைவிடமாட்டான்!” – என்பார் அடிக்கடி! எத்தனை நிஜம்! அதன்பின் நிகழ்ச்சிகள் வேகமாக நடந்து முடிந்து விட்டன.

“இது என் வீடு” – “என் தந்தை வைத்த சொத்து” என்கிற பாசத்தை விடச் செய்தாள். தன் கணவரைச் சமாதானப்படுத்தினாள்.

வீட்டை விற்றார்கள். ஊருக்குத் தள்ளி ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் குறைந்த விலையில் சின்ன வீடு ஒன்றை வாங்கிக் கொண்டார்கள்.

வீடு விற்ற பணத்தில் தங்கள் கடைசி தேவைகளுக்கு என்று சில ரூபாய்கள் வைத்துக் கொண்டு பாக்கியை ஆதித்யாவிடம் தந்தார்கள்.

ஆதித்யா நல்ல சென்டரிலோர் அழகான அபார்ட்மெண்ட் வாங்கி விட்டான். த்ரீ பெட் ரூம். சகலவிதமான வசதிகள் கொண்ட இடம். அந்த ‘பில்டிங் வளாகத்தில்’ ஷாப்பிங் சென்டர் இருந்தது. சிறிய கோவில் ஒன்று இருந்தது. ‘கம்யூனிடி ஹால்’, கார் நிறுத்த இடம் என்று ஏக தடபுடல்.

கிரஹப்பிரவேசத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆதித்யா, புதிதாக வாங்கியிருந்த ‘எஸ்டீம் காரில்’ வந்து இவர்களை அழைத்தான்.

ராமநாதன் வர மறுத்து விட்டார். இவள்தான் பைத்தியக்காரி மாதிரி ஆட்டோ வைத்துக் கொண்டு போய் இறங்கினாள். பளபளப்பு உடையில் ஜிலுஜிலுவென்று தங்கச் சிலையாய் பவனி வந்து கொண்டிருந்தாள் காயத்ரி.

“புத்தம்புது வீடு .. காஸ்ட்லி பெயிண்டிங்.. எல்லாம் ஆயில் பெயிண்ட். அதனால் ஹோமம் வேண்டாம்னு சொல்லிவிட்டேன். சுவரெல்லாம் கரியாயிடும். வெறும் பார்ட்டி மட்டும் தான்” என்று தன் சினேகிதிகளிடம் பீற்றிக் கொண்டிருந்த காயத்ரி தன் மாமியாரைப் பார்த்ததும் முகம் மாறினாள்.

“வாங்கோ..” என்றவள், அங்கு பரிமாறிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல, “அந்த கிழவியை சீக்கிரம் சாப்பாடு போட்டு அனுப்புங்க. கர் நாடகம், பட்டிக்காடு, அழுக்குக் கையால சுவரெல்லாம் தொட்டு வைச்சு அசிங்கம் பண்ணிடப் போறது..” என்று கூறினாள்.

அந்தச் சமையல்காரர் ஒருகாலத்தில் கௌசல்யா – ராம நாதன் வீட்டிலே அவர்கள் ‘ஓஹோ’ என்று வாழ்ந்த காலத்தில் சமையல் வேலை பார்த்தவர்.

கௌசல்யாவைத் தனியாக அழைத்து பரிமாறினார். “இந்த மாதிரி வீட்டுக்கெல்லாம் ஏன் வர்றீங்க? உங்க அந்தஸ்து என்ன? பாரம்பரியம் என்ன? என்று நொந்து கொண்டவர், காயத்ரி சொன்னதைத் திருப்பிக் கூற கௌசல்யா அதிர்ந்து போனாள்!

அவருக்குத் தெரியாது காயத்ரி கௌசல்யாவின் மருமகள் என்பது! கல்யாண வேலைகளுக்காக இவர்கள் வீட்டு வேலையை விட்டு விட்டு ஊர் ஊராகப் போனவர் அவர்! இப்போது எதிர்பாராத சந்திப்பு!

கௌசல்யா சாப்பிடாமலே எழுந்து விட்டாள்.
இவள் கைபட்டால் அந்த வீடு அழுக்காகி விடுமா?
இவள் அழுக்குக் கையால் எண்ணிக் கொடுத்த ரூபாய் நோட்டுக்கள் மட்டும் சுத்தமானவையா?
இவள் கர்நாடகம், பட்டிக்காடுதான்!
அதனால்தான் இப்படி ஒரு பகட்டுக்காரியைத் தேடி தன் மருமகளாகத் தேர்ந்தெடுத்தாள்!

வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்தாள் கௌசல்யா…
“சாப்பாடு பிரமாதமோ?”
“ஆமாம். ரொம்ப ரொம்ப கிராண்டா இருந்தது.”
“என்ன மெனு?”
” நீங்களோ வரல்லை; அப்புறம் என்ன விசாரணை?”
“வீடு எப்படி?”
“பணத்தால் இழைச்சிருக்கா!”
“உம். நாம கொடுத்தது தானே?”
உம்.. நாம கொடுத்த பணம்தான் அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கு. ஆனா நாம கொடுத்த பாசமும், பண்பும் அவர்களைத் தொடவே இல்லை! என்று நினைத்துக் கொண்டதை கௌசல்யா வாய் திறந்து சொல்லவில்லை.

பெண் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு கையில் ஸ்வீட்டுடன் ஆதித்யா மட்டும் வந்தான்.

“உனக்குப் பேத்தி பிறந்திருக்காம்மா… ஒரு மாசம் ஆச்சு. சிசேரியன் கேஸா? ஆஸ்பத்திரிக்கும், வீட்டுக்குமா அலையவே சரியாப் போச்சு.”

ராமநாதன் கௌசல்யாவைப் பார்த்தார். தாத்தா, பாட்டி ஆன சந்தோஷங்கள் கூட இவர்களுக்குத் தாமதமாக அறிவிக்கப்பட்ட உண்மைகள்! உறவுகள் சௌகரியப்பட்ட போது வருவதாமே!

ஆதித்யா விடைபெற்று சென்றான். அன்று கௌசல்யா ரொம்ப அழுதாள். அதன் பின்…

கௌசி உடல் நலமில்லாமல் திடீரென்று வைரஸ் காய்ச்சல் வந்து படுத்து விட்டாள். அது ஏகப் பிரச்னையாகி, ப்ளட் பிரஷர் ஏகத்துக்கு அதிகரித்து, சர்க்கரை அளவு குறைந்து, கோமா நிலைக்குப் போய் அவசர சிகிச்சை பிரிவில் ‘அட்மிட்’ செய்யும்படி ஆகிவிட்டது! அப்போதும் கூட..

“ஆதித்யாவுக்குச் சொல்லி அனுப்பறீங்களா?” என்று ஆஸ்பத்திரியில் ஐ.சி.யூவில் படுத்தபடி இவள் கேட்டது ராம நாதனை என்னவோ செய்தது. பெற்ற வயிறு பற்றி எரிந்தால் பிள்ளை உருப்பட மாட்டான். ஆதித்யாவுக்கு இவரே ‘போன்’ செய்தார்.

“அப்பாவா? சௌக்யமா இருக்கீங்களா அப்பா? உங்க பேத்தி மதுமிதா இப்போ ‘பர்ஸ்ட்’ ஸ்டாண்டர்ட் வந்துட்டா. என்னமா இங்கிலீஷ் பேசறா தெரியுமா?”

அவன் பெருமைகள் ஓய்ந்த பிறகு இவர் மெல்லச் சொன்னார். “ரொம்ப சந்தோஷம். உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கு. நீ வந்து..”

“வயசானா ஏதாவது ப்ராப்ளம் வந்துண்டுதான் இருக்கும். எனக்கு ஆபீஸ் விஷயமா டெல்லி போகணும். போயிட்டு வந்து பார்க்கிறேன்.”

ராமநாதன் ரிசீவரை வைத்துவிட்டு வாய் பொத்தி அழுதார்! வந்து பாக்கறானாமே! இவன் வந்து பார்க்கும் போது கௌசி பார்க்க முடியாத ஊருக்குப் போயிட்டா என்ன பண்ணுவானோ? பைத்தியக்காரி கௌசி… இப்படிப் பட்ட பிள்ளையைப் பார்க்கவா ஆசைப்பட்டாள்?

வார்டுக்கு வந்து இவர் ஸ்பூனால் ஹார்லிக்ஸ் புகட்டியபோது, “ஆதித்யா என்னைப் பார்க்க வந்தானா?” என்றாள்.

ராமநாதன் முகம் திருப்பியபடி கண்ணீர்த் துளிகளை அடக்கியபடி பேசினார்.
“உம். வந்தான். நீ ஐ.சி.யூவிலே மயக்கமா இருந்தே. அவசரமா ஆபீஸ் விஷயமா டெல்லி போறானாம். வந்து உன்னைப் பார்க்கறதா சொன்னான். உன்னைப் பத்திரமா பார்த்துக்கச் சொன்னான்!”

கௌசல்யாவின் முகத்தில் பரவிய அந்த மகிழ்ச்சியின் ரேகைகளை இவர் அழிக்க விரும்பவில்லை. கௌசல்யா உடல் தேறி வீடு வந்தாள்.

ஆதித்யாவிற்கு டெல்லி மாற்றலாகிவிட , வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார்கள். ஏர்போர்ட்டுக்குப் போகும் வழியில் பெட்டி படுக்கைகளுடன் இவர்களைப் பார்க்க ஆதித்யா மட்டும் தன் பெண் மதுமிதாவை அழைத்து வந்திருந்தான்.

நிறைய சாமான்கள் இருந்ததால் காயத்ரி பின்னால் கால் டாக்ஸியில் வருகிறாளாம். மதுமிதாவை பார்த்தாள் கௌசி.

பத்து வயதுப் பெண். அப்படியே ஆதித்யாவை சின்ன வயதில் பார்த்தமாதிரி… போதும், இன்னமும், இவள் மனம் உறவுகளை எண்ணி ஏங்குகிறது!

“மது.. தாத்தா, பாட்டியை நமஸ்காரம் பண்ணும்மா…”
குழந்தை குழப்பத்துடன் நமஸ்கரித்தாள்.
ஜீன்ஸும், டீ ஷர்ட்டுமாய் குழந்தை நாகரீகத்தின் அடையாளமாய் இருந்தாள்.
முதன் முதலில் வீட்டிற்கு வந்திருப்பவர்களை எப்படி உபசரிப்பது என்பது தெரியாமல் திணறிப் போனாள் கௌசி.

டப்பாவைத் தேடி எடுத்து மிச்சமிருந்த ஓரிரு பிஸ்கட் துண்டுகளைத் தந்தாள். தான் உள்ளே பத்திரமாய் வைத்திருந்த அந்தத் தங்க டாலரை எடுத்து வந்தாள்.

ஏதாவது வீட்டு விசேஷத்திற்கு தங்களை அழைப்பார்கள். அப்போது தரலாம் என்று இவள் வாங்கி வைத்திருந்த விநாயகர் தங்க டாலர்.!

“இந்தாம்மா மது, இந்த டாலரைப் போட்டுக்கோ” மதுமிதா அதை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டாள். அப்போது ‘டாடா’ சொல்லிவிட்டுப் போனவர்கள்தான்.

டெல்லியில் பிரமாதமான வசதிகளுடன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ். வீடு முழுவதும் காயத்ரியின் பிறந்த வீட்டு உறவினர்கள் அம்மா, தங்கை, சித்தி, சித்தப்பா என்று திருவிழாக் கூட்டம். சமையலுக்கு ஆள், தோட்டக்காரன், அவர்களின் ராஜபோக வாழ்க்கை பற்றி கௌசல்யாவும், ராமநாதனும் கேள்விப்பட்டார்கள்.

இவர்களுக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான்.

“என்ன கௌசி.. என்ன யோசனை?” ராமநாதன் இவள் சிந்தனைகளைக் கலைத்தார்.

கடந்த கால நெடிய பயணத்திலிருந்து ‘சட்’டென்று மீள இவளுக்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

“இன்னிக்கு என்னால சமைக்கவே முடியல்லை. வெறும் சாதம் மட்டும்தான் வடிச்சிருக்கேன்.”

“பேஷாப் போச்சு. கெட்டித் தயிர் இருக்கு. வடுமாங்காய் இருக்கு. இதைவிட வேறு என்ன சாப்பாடு வேணும்?”

கௌசல்யாவிற்கு வேதனையாக இருந்தது. ராமநாதன் இப்போது எல்லாவற்றையும் ஏற்கப் பழகி விட்டார். ராமநாதன் மெல்லச் சொன்னார்.

“கௌசி.. மறுபிறவிங்கிறது நம்ம பாவ புண்ணியம் மட்டுமில்லை. நம்ம கர்மாக்களோட பாக்கியும் அடுத்த பிறவிக்கு ஒரு காரணம். அடுத்த பிறவியிலேயும் நீதான் எனக்கு மனைவியா வரணும்னு நான் வேண்டிண்டேன்னு வைச்சுக்கோ. உனக்கு மறுபிறவி நிச்சயம். அதனால தான் ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யர் கூடப் பாடினார்….

‘புல்லாய் பிறவி தர வேண்டும்’ அப்படீன்னார். மறுபிறவி வேண்டாம்னு சொல்லல்லை. பகவான் கால் படற இடமெல்லாம் நான் புல்லாய் பரந்து கிடக்கணும்னு சொன்னார். அது கர்மா! இந்தக் கர்மா பகவான் கிருஷ்ணனைக் கூட விடல்லை தெரியுமா? முற்பிறவியிலே ராமாவதாரத்திலே வாலியை மறைஞ்சு நின்று கொன்னதுக்காக கிருஷ்ணாவதாரத்திலே, கடைசி காலத்திலே ஒரு வேடனால் கொல்லப்பட்டார். அந்த வேடந்தான் வாலி! ராமரால் ஜீவன் முக்தி அடஞ்ச வாலிக்கு மோக்ஷம் கிடைக்காம எப்படி மறுபிறவி லபிக்கும்? வாலி மறுபிறவி எடுத்த காரணம், கிருஷ்ணனான முற்பிறப்பு ராமருக்குத் தண்டனை தர, இதுதான் ஆண்டவன் நீதி. தெய்வ சத்தியம்…”

ராமநாதன் பேசப்பேச வாசலில் ஒரு பெரிய கார் வந்து நின்றது.

அதிலிருந்து ஆதித்யா இறங்கினான். அவனுடன் மதுமிதா! மதுமிதா இப்போது இன்னும் சற்று பெரியவளாக வளர்ந்து… சுரிதார் போட்டபடி இருந்தாள். கழுத்தில் இவள் பரிசளித்த அந்த வினாயகர் டாலர் செயின்!

“வா.. வா.. ஆதித்யா” வாய் குளறியபடி கௌசல்யா அவர்களை வரவேற்றாள். குழந்தையின் கண்கள் கலங்கி இருந்தன.

“அம்மா, அப்பா நீங்க ரெண்டு பேரும் இப்பவே என்னோட ஆஸ்பத்திரிக்குக் கிளம்புங்க. காயத்ரியை ஆஸ்பத்திரியிலே ‘அட்மிட்’ பண்ணிட்டு நேரே இங்கே தான் வரேன்…”

கௌசல்யா திகைத்தாள். காயத்ரிக்கு என்ன? காரில் போகப் போக ஆதித்யா விவரித்துக் கொண்டே வந்தான்.

காயத்ரிக்கு குடல் புற்று நோய். கடந்த சில வருடங்களாக படுத்த படுக்கை; பணம் தண்ணீராய் செலவழித்தாகி விட்டது. ஒட்டிக் கொண்டு வந்த உறவெல்லாம் துன்பம் வந்தபோது எட்டிப் போய் விட்டன!

டெல்லியில் ட்ரீட்மெண்ட் போதாது என்று இங்கு கூட்டி வந்து விட்டானாம். குடல் புற்று நோய் பரவி தொண்டை வரை வந்து விட்டதாம்!

கௌசல்யா திகைத்துப் போனாள். மருத்துவமனை வளாகத்தில் இவள் மயங்கி விழாமல் நடந்ததே பெரிய விஷயம். அதே ஆஸ்பத்ரி இவள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது படுத்திருந்த அதே மருத்துவமனை… பிரிவுதான் வேறு!

கட்டிலில்… அதோ அதோ எலும்பும் தோலுமாக தலைமயிர் எல்லாம் கொட்டிய நிலையில் பிணம் போல் கிடப்பது காயத்ரியா? அவளழகும், சிரிப்பும், ஒய்யாரமும், உற்சாகமும் எங்கே போயின?

கௌசல்யா தொட்டால் புத்தம் புது வீட்டுச் சுவர் அசிங்கமாகி விடும் என்று சொன்ன அதே காயத்ரி இன்று அவலட்சணமாக…

மாமியாருக்கு சமைத்துப் போடமாட்டேன் என்று கூறிய காயத்ரி இன்று சாப்பிட முடியாமல் குடல் புண்ணோடு கிடக்கிறாள்!

கௌசி தன் மருமகளைத் தொட்டாள்!

பெரியவர்களைத் துச்சமாக மதித்துத் தூக்கி எறிந்து பேசிய காயத்ரியின் நாவு சுழல முடியாமல் திணறியது. வார்த்தைகள் இதயத்துள்ளேயே அடக்கமாகிப் போன நிலை.

தன் மகள் மதுமிதாவை கௌசல்யாவின் கரங்களில் ஒப்படைக்கிறாள். வார்த்தைகள் வெளிவர மறுத்து நின்று விட்டன. இது உறவுகளின் சங்கமம் அல்ல. உணர்வுகளின் சங்கமம்.

ஓடிக் கொண்டிருந்த மானிட்டரும் நின்று விட்டது!

‘பிறவா வரம் தாரும்’ என்று கௌசி வேண்டிக் கொன்டாள்.

இல்லை தப்பு. இப்போது புதிய பொறுப்பு! புதிய பதவி.. மனத்துள் வேண்டினாள்.

“கடவுளே.. இந்தக் குழந்தையை நல்ல முறையிலே நான் வளர்த்து ஆளாக்கிற வரை எனக்கு இறவா வரம் தாரும்.. கடவுளே..”

‘அம்மா’ என்று அழும் மதுமிதாவை அணைத்தபடி கௌசல்யா மெல்ல நடக்கிறாள்…

இவள் பயணம் இன்னும் முடியவில்லை!

Print Friendly, PDF & Email

1 thought on “பிறவா வரம் தாரும்

  1. மிக மிக அருமையான கதை… சரளமான நடை… பல்லாயிர கணக்கான கௌசல்யாக்கள் தினந்தோறும் அனுபவிப்பதை வார்த்தைகளில் வடித்து விட்டீர்கள் லக்ஷனா… (இதில் எதிர்மாறான கதைகளும் உண்டு…என்னுடையது போல…ஆனால் சொற்பம்தான் …)
    மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *