அரச பதவி வேண்டாம்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,824 
 

ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அரச சபையில் வானிலை ஆலோசகர் பதவி காலியாக இருந்தது. அதற்கு பலத்த போட்டி! ஏகப்பட்டவர்கள் அமைச்சர்களின் சிபாரிசுகளோடு வந்திருந்தார்கள். அவர்களில் அறிவாளி என்று எல்லா அமைச்சர்களாலும் சொல்லப்பட்ட ஒருவரின் திறமையைச் சோதிக்க நினைத்தார் அரசர்.

“”இன்று நான் வேட்டைக்குப் போக வேண்டும். மழை வருமா?” என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று அரசர் அவரிடம் கேட்டார்.

அரச பதவி வேண்டாம்அவரும் வானத்தையும் தனது கையிலிருந்த சில ஓலைச் சுவடிகளையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, “”இன்று கண்டிப்பாக மழை வராது. அரசர் வேட்டைக்குப் போகலாம்!” என்றார்.

அரசர் பரிவாங்களுடன் வேட்டைக்குக் கிளம்பி நாட்டின் எல்லையை அடைந்தபோது, ஒரு சலவைத் தொழிலாளி துணி மூட்டைகளைத் தனது கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு எதிரில் வந்தார்.

அரசரின் பரிவாரத்தைப் பார்த்த அவருக்கு அரசர் வேட்டைக்குச் செல்கிறார் என்பது புரிந்துவிட்டது.

உடனே தனது கழுதையைக் குறுக்கே நிறுத்திக் கொண்டு, “”அரசே, இன்றைக்கு பயங்கரமான மழை வரப் போகிறது. தயவு செய்து அரண்மனைக்குத் திரும்பி விடுங்கள்…” என்று கூறினார்.

அரசருக்கு ஒரே குழப்பம்! படித்த அறிஞர் ஒருவர் மழை வராது என்று சொன்ன பிறகு, இவர் என்ன இப்படிச் சொல்கிறார் என்று கோபப்பட்டார்.

ஆனாலும் அந்த சலவைத் தொழிலாளி வழி விடாமல் திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

அரை மனதோடு அரசர் அரண்மனைக்குத் திரும்பினார்.

திரும்பிய சில நிமிடங்களில் வானமே பொத்துக் கொண்ட மாதிரி அடைமழை பெய்தது!

மறுநாள் அந்த சலவைத் தொழிலாளியை அழைத்து வரச் செய்து அவரையே தனது வானிலை ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தார்.

அந்த சலவைத் தொழிலாளியோ அதை ஏற்க மறுத்தார்.

பலமுறை வற்புறுத்தியும் அவர் தயங்கவே, ”நீ இன்றே பதவி ஏற்காவிட்டால் சிறையில் அடைக்கப்படுவாய்!” என்று அரசர் உத்தரவிட்டார்.

கலங்கிப் போன சலவைத் தொழிலாளி, “”அரசே, என்னை மன்னிக்க வேண்டும். மழை வரும் என்று சொன்னதற்காக, நீங்கள் இந்தப் பதவியைத் தந்தால், அதை ஏற்கும் தகுதி எனக்கில்லை! என் கழுதைக்குத்தான் உண்டு!” என்றார்.

அரசர் குழப்பத்துடன் அவரைப் பார்க்க, அந்த மனிதரோ, “”மழை வருவதற்கான அறிகுறி இருந்தால் கழுதைகளின் காது நரம்புகள் புடைத்துக் காதுகள் விரைத்துக் கொள்ளும். கீழே தொங்காமல் நேராக மேல்நோக்கி தூக்கிக் கொள்ளும். நேற்று சாயந்திரத்திலிருந்து எனது எல்லாக் கழுதைகளின் காதுகளும் இப்படி விரைத்துக் காணப்பட்டன. அதனால்தான் துவைக்க வாங்கி வந்த துணிகளை ஆற்றுக்குத் துவைக்கக் கொண்டு செல்லாமல் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நீங்களும் வேட்டைக்காக வந்தீர்கள். இவ்வளவுதான் விஷயம்!” என்று கூறி முடித்தான்.

அரசருக்கு அந்த மனிதர் மேலிருந்த கோபம் போய், சிரிக்க ஆரம்பித்தார்.

– சொ.மு.முத்து (மே 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *