வெந்து தணிந்த மழலைகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 19,371 
 
 

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் மேசை மேல் இருந்த அனைத்துத் தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவருடைய நேரடி தொலைபேசியும் அந்தரங்க காரியதரிசி மூலம் வரும் தொலைபேசிகளும் ஒலித்தன. இது காணாது என்று சக்திவேலின் கைப்பேசிகள் வேறு அலறின. கடந்த பதி னைந்து நிமிடங்கள் வரை மிக மிக அமைதியாக இருந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் தீடிரென்று ஒரு பெரிய நிகழ்வு நடக்கும் இடமாக மாறிவிட்டது. அதுவும் இப்போது எண்ணிக்கையில் அடங்காத செய்தி தொலைக்காட்சிகள் வந்து விட்டதால் உலகின் எந்த மூலையில் என்ன நிகழ்வு நடந்தாலும் அடுத்த சில வினாடிகளில் அந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சியிலும் பிரேக்கிங் நியூஸாக வந்துவிடுகிறது. சில நேரங்களில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் மந்திரிகளுக்குமே அவர்கள் இலாகா தொடர்பான விஷயம் அவர்களுக்கு தெரிவதற்கு முன்பே தொலைக் காட்சியில் ஸ்கரோல் போய் கொண்டிருக்கும். அதைப் பார்த்த பிறகே அந்த செய்தியோடு தொடர்புடைய அதிகாரிகளும் மந்திரிகளும் துள்ளிக் குதிப்பது இப்போது சகஜமாகிவிட்டது ஆட்சியாளர் சக்திவேலுக்கு தெரியும். இப்போது சக்திவேலுக்கு அவனுடைய வாழ்க்கையில் முதன் முறையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர் நகரிலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு ஆங்கில பள்ளிக் கூடம் எரிந்து கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியாளருக்கு விஷயம் வந்து சேரும் முன்பே தொலைக்காட்சியில் பள்ளி எரிந்து கொண்டிருப்பது கீழே செய்தியாக ஓட சென்னையிலிருந்தும் தில்லியிலிருந்தும் ஆட்சியாளர் சக்திவேலுக்கு விடாது தொலைபேசி வந்து கொண்டிருந்தது. அதற்குள் இவனுடைய அலுவலகம் வாசலில் அனைத்து பத்திரிகையாளர்களும் தங்கள் காமிராவுடனும் ஒபி வேனுடன் தொலைக்காட்சி நிருபர்களும் சூழ்ந்து கொண்டு விட்டனர். இந்த வினாடி செய்தியில் முக்கியமாக இருப்பது தஞ்சாவூர் பள்ளியும் அதைப் பற்றி இந்த மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் கருத்துகளும்தான்.

அலறிக் கொண்டிருந்த தொலைபேசியில் ஒன்றை எடுத்தான். அந்தப்புறம் சென்னையிலிருந்து சீஃப் செக்ரட்டரி பேசினார். என்ன மிஸ்டர் சக்திவேல். தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொண்டேன். முதல்வர் பதற்றமாக இருக்கிறார். அதுவும் இன்னும் மூன்று மாதங்களில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் வரும் நேரத்தில் இந்த சம்பவம் அவரை ஆட்டம் காண வைத்துவிட்டது. எப்படி அந்தச் சம்பவம் நடந்தது? எத்தனை குழந்தைகள் இறந்துவிட்டனர்? எத்தனை குழந்தைகள் பிழைக்கும் நிலையில் இருக்கின்றனர்? எல்லா விபரங்களும் இன்னும் அரை மணி நேரத்தில் எங்களுக்கு வேண்டும். அங்கு இருக்கும் சூழ்நிலையை படமெடுத்து மற்ற விஷயங்களையும் சேகரித்து எனக்கு ஃபேக்ஸ் அனுப்புங்கள். அதற்குள் இங்கு பத்திரிகையாளர்கள் கூடி விட்டனர். ஒரு விஷயமும் தெரியாமல் எங்களால் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அடுத்த அரை மணி நேரத்தில் முதல்வரே நேரிடையாக உங்களிடம் பேசுவார். நல்ல சான்ஸ்யா உனக்கு. நேரிடையாக முதல்வரிடம் பேசலாம். இந்த சந்தர்பத்தை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்- சிறப்பாகப் பணியாற்றி முதல்வருக்கு திருப்தி தரும் வகையில் பிரச்சனையை சமாளித்தால் முதல்வரின் தனி கவனத்தில் வருவாய். கேரி ஆன் மை பாய்..என்று கூறி தொலைபேசியை வைத்தார்.

ரீசிவரை கீழே வைத்த அதே வினாடி மறுபடியும் அலறியது. இந்த முறை சென்னையிலிருந்து ஹோம் செக்ரட்டரி பேசினார். என்ன மிஸ்டர் சக்திவேல்.. விஷயம் விபரீதமாக ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைவில் இருக்கட்டும். இது தேர்தல் நேரம். நீங்கள் பிரச்சினையைக் கையாளும் விதத்தில்தான் ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றியே இருக்கிறது. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது? குறிப்பாக சட்டம் ஒழுங்கு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களால் ஏதாவது பிரச்சினை வருவது போலிருந்தால் மிகவும் சாமர்த்தியமாக விஷயத்தைக் கையாளுங்கள். யாரிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நேரமில்லை இது. விஷயம் ரொம்ப சென்சிடிவ்வானது. தொலைக்காட்சியில் முந்நூறு குழந்தைகள் தீயில் கருகி மரணம் என்று போடுகிறார்கள். அதைத் தவிர ஐம்பது குழந்தைகள் மற்றும் பத்து ஆயாக்கள் உயிருக்கு போராடுவதாகவும் அதே நேரம் ஒரு டீச்சர் கூட விபத்தில் சிக்கவில்லை என்று போடுகிறார்களே. அது உண்மையா?

கேள்விகளை ஹோம் செக்ரட்டரி அடுக்கிக் கொண்டே போக கலெக்டர் சக்திவேல் சார்.. நான் இன்னும் என் சீட்டை விட்டே நகரவில்லை சார்… விஷயம் என் காதுக்கு எட்டிய அதே வினாடி முதல்வரிடம் இருந்து தொலைபேசியைத் தொடர்ந்து உங்களுடைய ஃபோன். இப்போது அங்குதான் சார் போகிறேன். நான் அங்கு போய் நிலைமையைப் பார்த்து உங்களுக்கு சொல்கிறேன் சார். அனைத்து விஷயங்களையும் ஒரு தாளில் போட்டு உங்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பிவிடுகிறேன் சார் என்று கூறினான்.

சக்திவேல் அங்கிருந்து நகருவதற்குள் அடுத்த ஃபோன். அதை எடுப்பதா அல்லது விபத்து நடந்த இடத்திற்கு விரைவதா என்று யோசித்து காலர் ஐடியைப் பார்க்க அது தில்லியிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு என்று தெரிந்தது. நல்ல வேளை இந்தத் தொலைபேசியை ஒதுக்காமல் சமயோசிதமாக காலர் ஜடியைப் பார்த்தோம் என்று நினைத்துக் கொண்டு தொலைபேசியை எடுத்தான். கேபினட் செக்ரடரியின் அந்தரங்க காரியதரிசி சென்னை அதிகாரிகள் கேட்ட அனைத்துக் கேள்விகளையும் கேட்டார். அவரும் இது தேர்தல் நேரம் என்பதை நாசூக்காக நினைவு படுத்தினார். கூடவே அனைத்து விஷயங்களையும் சேகரித்து தங்களுக்கு ஃபேக்ஸ் செய்ய சொன்னதோடு இந்த அரசின் திரை மறைவு அரசியல்வாதியும் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆவலாக இருப்பதாகச் சொன்னார். அந்த ஃபோனை தொடர்ந்து தில்லியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவரின் அரசியல் காரியதரிசியும் தொடர்பு கொண்டார். எல்லோரும் ஒரே விஷயத்தை சொன்னதோடு இன்னும் அரை மணி நேரத்தில் சம்மந்தப்பட்டநபரே பேசுவார் என்று சொல்ல சக்திவேலுக்கு பதற்றமாக இருந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைய தன் அறையில் வெளியே வர அவனுடைய அந்தரங்க காரியதரிசி அவனிடம் சார் இப்ப நீங்க வெளியே போனால் பத்திரிகையாளர்கள் உங்களை மொய்த்து விடுவார்கள். தொலைக் காட்சி முழுக்க உங்கள் செய்திதான். அதற்கு சக்திவேல் வேறு வழியில்லை நான் அவர்களை சந்தித்துதான் ஆக வேண்டும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிக் கொண்டே வெளியே வந்த போது அவனுக்கே தூக்கிவாரிப்போட்டது.

அந்த வாயில் முழுவதும் எள்ளுப் போட இடமில்லாமல் ஆண்களும் பெண்களுமாக ஒரே பத்திரிகையாளர் கூட்டம். எல்லோரும் ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்டும் அணிந்து கொண்டு தலைமுடியையும் ஒரே மாதிரி வெட்டியிருந்ததால் குரலை வைத்துதான் பெண் நிருபர் யார் ஆண் நிருபர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. அனைத்து தமிழ் சேனல்களிலும் இருந்து நிருபர்கள் வந்து குவிந்து விட்டனர். அதோடு ஆங்கில செய்தி தொலைக்காட்சி மற்றும் சில முக்கியமான சர்வ தேச தொலக்காட்சிகளிலிருந்து நிருபர்கள் குவிந்துவிட்டனர். சக்திவேலின் முன்னால் மைக்கை நீட்டி ‘சார் தீப்படித்து அரை மணி நேரம் ஆகிவிட்டது. நீங்கள் இன்னும் அங்கு போகவில்லையா… ஏன் இந்த தாமதம். சம்மந்தப்பட்ட பள்ளி ஏழைக் குழந்தைகள் பள்ளி என்பதால் இந்த மெத்தனப் போக்ககா?

‘யார் அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியது. அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?‘

‘நடவடிக்கை எடுத்தாலும் அது எந்த மாதிரி நடவடிக்யைõக இருக்கும்‘ என்று சக்திவேலுக்கு கோபம் வர வேண்டும் என்பதற்காகவே கேள்விகளை தேர்ந்தெடுத்து கேட்டனர். சக்தி வேலும் நிதானத்தை இழக்காமல் மிகவும் பொறுமையாக எனக்கு இப்போதுதான் செய்தி வந்தது…. செய்திகள் மிக வேகமாக பரவும் இந்தக் காலத்தில் மாவட்ட ஆட்சியாளருக்கு இவ்வளவு முக்கியமான செய்தி இவ்வளவு தாமதமாக வந்ததா. அதற்குள் அங்கு எத்தனை குழந்தைகளின் உயிர் போயிருக்கும் தெரியுமா சார்.. என்றவுடன் சக்திவேல்…பளீஸ் என்னைப் புரிந்து கொள்ளுங்கள் நான் கிளம்புவதற்குள் சென்னையிலிருந்து முதல்வரும் தில்லியிலிருந்து பிரதமரின் அந்தரங்க காரியதரிசியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதனால்தான் என்னால் நகர முடியவில்லை. அங்குள்ள நிலவரம் பற்றி நான் தொலை பேசியில் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது அங்குதான் போகிறேன். பிறகு பேசுகிறேன் என்று ஒரு வழியாக தப்பித்து தன் காரை நோக்கி நகர்ந்தான்.

சக்திவேல் பற்றி எரியும் அந்தப் பள்ளிக் கூடத்தை சரியாக அரை மணியில் சென்று அடைந்தான். அந்தப் பள்ளிக்கூடம் ஒரு முட்டு சந்தினுள் இருந்தது. அதனுள் சக்திவேலின் காராலேயே நுழைய முடியவில்லை. தெரு முனையில் இறங்கி நடந்து சென்ற போது அந்தப் பள்ளியின் மேல் கூரை எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து சக்திவேலுக்கு தூக்கிவாரிப்போட்டது. அதன் உள்ளிருக்கும் ஒரு ஆள் கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற பயம் அவனை வாட்டியது. இருநூற்றைம்பது குழந்தைகள் கருகி விட்டனர் என்ற கடைசி தொலைபேசி செய்தி அவனுள் புளியைக் கரைத்தது. பள்ளியின் வாயிலில் கூடியிருந்த பெற்றோர்கள் கதறி அழுது கொண்டிருந்த காட்சியை தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும் பத்திரிகை புகைப்படக்காரர்களும் படம் எடுத்தித் தள்ளிக் கொண்டிருந்தனர். வந்திருப்பவர்தான் மாவட்ட ஆட்சியாளர் என்று தெரிந்ததும் பெற்றோர்கள் இவன் பக்கம் திரும்பி கூவ ஆரிம்பித்தனர். அவர்களை மீறி அங்கிருந்த தீயணைப்பு அதிகாரியை அணுகி ஏன் தீயணைப்பில் இவ்வளவு தாமதம் என்றான். அவர் சார்.. இந்த முடுக்குக்குள் தீயணைப்பு லாரியால் நுழையவே முடியலை சார். பாருங்க லாரியை அங்கு நிறுத்தி அங்கிருந்து தண்ணியை பீச்சி அடிக்கிறோம். அதோடு நம்ம பசங்க பக்கத்து வீட்டு மாடியிலிருந்தெல்லாம் தண்ணீரை பீச்சி அடிக்கிறார்கள். எப்படி சார் இந்த மூடுக்கில் மூன்று மாடி கட்டிடம் கட்ட அனுமதித்தார்கள். அதோடு மேலே கூரை வேறு. யாரோ பக்கத்து வீட்டிலிருந்து சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் அப்படியே போட்டிருப்பார் போலிருக்கிறது. குப்புன்னு தீ பிடிச்சிக்கிச்சு. மாடிப்படி வேறு மகா குறுகல். அதில் முதலில் டீச்சருங்களெல்லாம் ஓடி வந்துட்டாங்க. பிள்ளைங்களைத் தூக்கிட்டு வேகமா இறங்க முடியலை. பப்ளிக் கொஞ்சம் உதவினதாலே கிட்டத்தட்ட ஐம்பது குழந்தைகளைத் தேத்தினோம். ஆனால் அந்தக் குழந்தைங்க கூட பிழைக்குமா என்பது சந்தகம்தான். நீங்க எப்படி மேலிடத்துக்கு சமாதானம் சொல்லப் போறீங்க சார்‘ என்று தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டான்.

அதற்குள் உயர் காவல் துறை அதிகாரி அங்கு வந்து சக்திவேலுக்கு சல்யூட் அடித்துவிட்டு, சார் நீங்க கையெழுத்திட்டவுடன் இந்தப் பள்ளியின் தாளாளரையும் முதன்மை ஆசிரியரையும் கைதி பண்ணிடலாம் சார். இவுங்க இங்க ஒரு சாதாரண பள்ளிக்கூடம் கூட கட்ட முடியாது. அப்படியிருக்க இங்கே ஒரு நான்கு மாடிக் கட்டிடம் எழுப்பியதிலிருந்து எந்தவிதமான முன் ஜாக்கிரதை நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதோடு ஆறு வயதுக்குட்பட்டக் குழந்தைகளை நாலாவது மாடியில் கூரையில் வகுப்பு வைத்தது குற்றம். இவர்களுக்கு எப்படி அரசாங்க உத்தரவு கிடைத்தது, உத்தரவு படி வத்தில் கையெழுத்திட்ட அதிகாரி யார் என்று பார்க்க வேண்டும் சார் என்று சொல்ல சரி இப்போதைக்கு தாளாளரையும் முதன்மை ஆசிரியரையும் கைது செய்து விடுங்கள். நாம் பத்திரிகையாளர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்றான் சக்திவேல்.

அதற்குள் சக்திவேலின் மொபைல் அலறியது. நெம்பர் புதிதாக இருந்தது. எடுத்தால் அந்தப் புறம் பதற்றமான குரல். சார் நான் பள்ளித் துறை இயக்குனர் பேசுகிறேன். எத்தனை குழந்தைகள் சார் இறந்து போய்விட்டன என்று கேட்ட தோரணையிலேயே இந்தப் பள்ளிக்கு எல்லா சட்ட திட்டங்களையும் மீறி அங்கீகாரம் கொடுத்த அதிகாரி இவர்தான் என்பது புரிய சக்திவேல் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. சார் நான்தான் கதிரேசன். பள்ளிக் கல்வி இயக்குனர். அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்தது எப்படி என்று எனக்கு புரியவேயில்லை. சார்.. ரிப்போர்ட் கொஞ்சம் பார்த்துக் கொடுங்கள் சார்…நாம் எல்லோரும் ஒரே வர்க்கம் அதிகாரி வர்க்கம்… நாளைக்கு உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் அப்போது யாருடைய உதவியாவது உங்களுக்குத் தேவைப்படும் என்று சொல்ல சக்திவேல் நீங்கள் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்களா அல்லது மிரட்டுகிறீர்களா என்றவன் தொடர்ந்து ரிப்போர்டே தேவையில்லை. ஒரு விதி கூட பின்பற்றப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது உங்களை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறி தொலைபேசியைத் துண்டித்துவிட்டான்.

சக்திவேல் அரசு மருத்துவ மனைக்கு விரைந்து டீனை நேரில் சந்தித்தான். சார்.. ரொம்ப பரிதாபமாக இருக்கு சார். எப்படி இவ்வளவு கேர்லஸ்ஸா இருந்தார்கள். அதைவிட இந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைத்தது எப்படி? இருநூற்றைம்பது குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக செத்திருக்கிறார்கள். மீதம் இருக்கும் இருபத்தைந்து குழந்தைகளும் ஃபோர்த் டிகிரி பர்ன்ஸூடன் இருக்கிறார்கள். பிழைப்பது கடினம்.

தில்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் தஞ்சாவூர் வந்தனர். ஹெலிபாடில் அவர்களை வரவேற்றதிலிருந்து பள்ளியைச் சுற்றிக் காட்டி விபத்து நேர்ந்ததன் காரணத்தையும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் போன அந்தப் பள்ளியின் கட்டிட நிலையை விளக்கியதோடு தலைவர்கள் விரும்பும் வண்ணம் அவர்கள் சொல்லும் அனைத்து நிவாரண பணிகளையும் செய்தான் சக்திவேல். குழந்தைகளை இழந்த தாய்மார்களுக்கு மனோதத்துவ ரீதியான ஆலோசனைகள், ஆளுங்கட்சி எதிர்கட்சி இருவரும் கொடுத்த பண உதவி நடுவில் இருப்பவரிடம் போகாமல் சம்மந்தப்பட்ட பெற்றோருக்கு அரசு நிறுவனத்தில் வைப்பு நிதியாகப் போட்டுக் கொடுப்பது என்று பெற்றோர்கள் அதிகம் அலையவிடாமல் அனைத்தையும் செய்து முடித்தான்.

ஒரு வாரம் ஆனபின் அந்த வார பத்திரிகைகள் அனைத்தும் விபத்து நடந்தது துர்பாக்கியம் என்றாலும் அந்த நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் சக்திவேலை பலரும் பாராட்டியிருந்தனர். சக்திவேலின் மனைவி மாலதி ஏங்க அந்த இரண்டு நாட்களும் இந்தியாவின் அனைத்து சேனல்களிலும் உங்கள் பெயர்தான் சொல்லிக் கொண்டிருந்தன. அவ்வப்போது நீங்கள் வந்து நிவாரண பணிகளைப் பற்றி சொன்னதை வேறு ஒளிபரப்பினார்களா என் தோழிகளெல்லாம் இந்த இரண்டு நாட்களும் உன் ஹஸ்பெண்ட்தான் ஹீரோ என்று சொன்னபோது எனக்கு எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா. அதோடு என் தோழிகள் இன்னொரு விஷயமும் சொன்னார்கள். இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களும் உன்கணவர் இருக்கும் இடம் தேடி வந்துள்ளார்களே இது பெருமைதானே என்றனர். இந்த மாதிரி சந்தர்பம் எப்போதோ ஒரு முறைதான் கிடைக்கும் இல்லை என்று சொல்ல..சக்தி வேல் பதில் ஏதும் சொல்லாமல் அந்தப் பள்ளி இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு இருந்த கருகிய குழந்தைகளின் புகைப்படங்களைத் தன் கையினால் வாஞ்சையுடன் தடவினான். பல தலைவர்கள் நன்மதிப்பில் தான் ஏறிவிட்டது சக்திவேல் அறிந்த ஒன்றுதான். முதல்வரே நேரிடையாக பாராட்டி இனிமேல் ஏதாவது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இடத்திற்கு சக்தி வேலை மாற்றலாம் என்று வெளிப்படையாக சொன்னார். ஆனால் அந்த பாராட்டுதல்களை பெற எத்தனை மொட்டுகள் துடித்து தவித்து கதறி கருகாகியுள்ளன என்ற எண்ணம் தோன்ற சக்திவேலின் கண்களிலிருந்து கண்ணீர் அவனையும் அறியாமல் வந்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “வெந்து தணிந்த மழலைகள்

  1. இது சிறுகதையா இல்லை கட்டுரையா? கும்பகோணத்தில் உண்மையில் நடந்த கோர தீ விபத்தினை விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இந்த விமர்சனம் இத்தளத்தில் பதிவிட்டிருக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *