புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையில் வேலூரிலிருந்து சென்னைக்கு இரயில் ஏறுவது அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதால் வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாமல் என்னையும் இழுத்துக்கொண்டு போய் வருவார்கள். இரயில் பயணம் என்பதாலும் புதுத்துணி கிடைக்கிறதென்ற ஆசையினாலும் அவர்களால் இழுபட்டு சென்னைக்குச் சென்று வரவேண்டிய இம்சைக்கு உடன்பட்டு நானும் போய் வருவேன். முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி என்னுடைய அப்பா ஒவ்வோர் ஆண்டும் நண்பர்களைத் தேடிப்போய் தப்பித்துக் கொள்கிறார்.
ஒவ்வொருமுறை தீபாவளி வரும்பொழுதும் துணி வாங்கறேன் பேர்வழின்னு சென்னைக்குப் போய் அவதிப்படவே கூடாது என்றுதான் அவர்கள் மூவரும் தீர்மாணம் நிறைவேற்றுவார்கள். ஆனா பாருங்க, இந்த வருஷமும் ஞாயிறு காலையிலே புறப்பட்டுப் போய் இதோ திங்கள் காலையில இப்பதான் கோவை எக்ஸ்பிரஸ்ல வந்து இறங்குறோம். நாங்கள் வந்து இறங்கிய கோவை எக்ஸ்பிரஸ் அனகோண்டா பாம்பு போல நீண்டு கிடந்த தண்டவாளத்தில் ஊர்ந்து படிப்படியாக வேகமெடுத்து கண்களில் இருந்து மறைந்து கொண்டிருந்தது.
“அய்யய்யோ சுபா, என்னோட லெதர்ப்பைய்ய டிரெய்ன்ல இருந்து எடுக்கவே காணோமே, இப்ப என்ன செய்ய?” காட்பாடி இரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் சுதா ஆண்டியின் அலறல் நடைபாதை வியாபாரிகளின் இட்லி வடை குரலையும் தாண்டி உரத்தக்குரலில் ஒலித்தது.
புதுத்துணி பைகளை கைக்கு இரண்டிரண்டாகத் சுமந்தபடி முன்னே நடந்து கொண்டிருந்த சுபா ஆண்டியும் என்அம்மா மீனாவும் சட்டென நின்று குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்கள். நிலைமையைப் புரிந்து கொண்டு மனம் பரபரக்க திகைப்பாகவும் வியப்பாகவும் சுதாவை நோக்கி ஓடினார்கள்.
இவ்ளோ நேரம் நல்லாதான போய்கிட்டு இருந்தது? இது என்னடா ஒரு புதுப் பிரச்சினை என்ற யோசனையோடு ஓட்டமும் நடையுமாக நானும் சுதா ஆண்டியை நெருங்கினேன்.
ஒரு பையை கோட்டைவிட்ட சுதாஆண்டி மற்ற பைகளை கைகளில் ஏந்திக்கொண்டு இறங்கிய இடத்துலயே பேயறைந்ததுபோல நின்னுகிட்டிருந்தாங்க. அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன அவங்க முகத்தில் தீவிரக்கவலை வியர்வையாக பூத்திருந்தது.
சுதாஆண்டியின் அலறலை சிறிதும் பொருட்படுத்தாத பிளாட்பார கூட்டம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த்து. சிலர் ஆண்டியின் சப்தமான குரலைக் கேட்டு சம்பிரதாயமாக ஒரு பார்வையை வீசிவிட்டு கேள்வி தொக்கிய முகங்களோடு இன்னும் சற்று விரைவாக நடந்து போனார்கள்..
“என்ன சொல்றீங்க சுதா? நீங்களா விட்டுருவீங்க, நல்லா பாத்தீங்களா” என்று கேட்டு என்னுடைய அம்மா ஆண்டியின் கைகளை ஆறுதலுக்காகப் பிடித்துக் கொண்டார். .
“ஆமாங்க. சீக்கிரமா இறங்கனுமேன்ற பதட்டத்துல கவனிக்காம விட்டுட்டேன் போல. ச்சே…. எங்க சார் பிறந்த நாளுக்காக ஆசையா வாங்கித்தந்த பைங்க அது. சாக்குப் போக்கு சமாதானமெல்லாம் சொல்லி அவர்ட்ட எடுபடாதுங்க. வாய்க்கு வந்தபடி என்னைப் பேசப்போறார்.” என்று புலம்பியபடி மிச்சமிருந்த பைகளை தன் காலடியில் வைத்த ஆண்டி கைகளை பிசைய ஆரம்பிச்சாங்க. எப்பொழுது வேண்டுமானாலும் உதிர்ந்துவிடத் தயாராக கண்ணீர் திரண்டிருந்ததால் அவங்களால மேற்கொண்டு எதையும் பேசமுடியவில்லை.
“பணம் எதாவது வைச்சிருந்தீங்களா ?” சுபா ஆண்டியும் அவர்கள் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டு வைத்தார்கள்.
“ஆமாங்க, பையில பணம் கொஞ்சம் வச்சிருந்தேன். அதோட வீட்டுசாவி, பீரோசாவி எல்லாம் மாட்டிக்கிச்சு. வீட்டுக்குப் போய் என்ன செய்றதுனே புரியல” சுதா ஆண்டியின் குரல் கம்மியது.
பதறிப்போன என்னோட அம்மா, “இந்தமாதிரி மசமசன்னு எவ்ளோ நேரந்தான் நிக்கிறது? எதாவது செய்யமுடியுமானு ஸ்டேசன் மாஸ்டர் கிட்ட கேட்டுப்பார்க்கலாமா” என்று யோசனை கேட்டார். விரக்தியான பார்வையோடு சுபா ஆண்டியும் மறுப்பேதும் சொல்லாமல் சுதா ஆண்டியும் அம்மாவை ஆமோதித்தார்கள். மெல்ல நடந்து ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் பிரவேசித்த அவர்களைத் தொடர்ந்து நானும் சென்றேன்.
”எந்த கம்பார்ட்மெண்ட்ல வந்தீங்க? சீட் நம்பர் என்ன? டிடெய்ல்ஸ் சொல்லுங்க” என்று சரமாரியாக கேள்விகளை முன்வைத்த ஸ்டேசன் மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்குமேல் இருக்கும். மெல்லிய கண்ணாடிக்கு பின் பெரியபெரிய கண்கள். கூர்மையான மூக்கும் முன் வழுக்கையுமாக அவர் மிகவும் கண்டிப்பான என்னுடைய கணக்கு வாத்தியாரைப் போல இருந்தார்.
நாங்கள் நால்வரும் அமைதியாக நின்றோம். “அட… இப்படி நின்னா எப்படிம்மா? நீங்க பிரயாணம் செய்த பெட்டியைப்பத்தி, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர் பற்றி ஏதாவது ஒரு சின்ன அடையாளமாவது சொல்லுங்கம்மா ” என்று கையிலிருந்த பேனாவை மூடிவைத்து, மேசைமீது அதை டொக்.. டொக்னு தட்டியபடி அவர் எங்களை நிமிர்ந்து பார்த்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல், “அது வந்து சார்…. நீங்கள்தான் சார் எதாவது செய்யனும் ” என்று சுபிஆண்டி உளறிக்கொட்ட அம்மாவும் சுதா ஆண்டியும் திருதிருவென விழித்துக் கொண்டு நின்றார்கள்.
“சார் நாங்கள் சாதாரண பயணச்சீட்டு வாங்கிட்டு ரிசர்வேஷன் பெட்டியில பயணம் செய்தோம் சார்” சுதா ஆண்டி தயங்கி தயங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னாங்க.
“அதான் எந்தபெட்டியிலனு சொல்லுங்க?” என்றார் அவர் கொஞ்சம் அழுத்தமாக.
“சார், சென்னை செண்ட்ரல்ல நாங்க பின்னாடி இருந்த டி சிக்ஸ் பெட்டியில தான் ஏறி இடம் பிடிச்சி உட்கார்ந்தோம்னு நினைக்கிறேன். வண்டி புறப்படும்போது ரிசர்வ் பண்ணவங்க வந்துட்டதால எழுந்து முன்னால போகவேண்டியதா போச்சு.. எத்தனை பெட்டி நடந்தோம்னு சரியா கவனிக்கல. சீட் கிடைச்ச இடத்துல எல்லோரும் உட்கார்ந்துட்டோம். அதனால எந்த பெட்டினு சரியா சொல்ல முடியலைங்க சார் பேசிக்கிட்டே வந்ததுல காட்பாடி வந்துடுச்சி” என்று என்னுடைய அம்மாதான் சொன்னாங்க.
“சீட்ல ஒரு இடத்துல உட்காராம இங்கயும் அங்கயுமா அலைஞ்சுக்கிட்டே இருந்த இவங்க பையன் இறங்கப்போற நேரத்துல ஆளை காணலை சார். அந்தப் பதட்டத்துல அவசரமா இறங்கிட்டோம். அதான் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எங்களால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை.” என்று சுதாஆண்டி என்னை சுட்டிக்காட்டி அந்த ஆளுகிட்ட போட்டுக் கொடுத்தாங்க. .
பெரிய விழிகளால் அவர் எங்களைப் பார்த்த பார்வையில் ஏளனம், கேலி, கிண்டல் எல்லாம் இருந்தது. இப்படிக்கூடவா இருப்பாங்க? எனக்கு வேற வேலைங்க நிறைய்ய இருக்கிறது புறப்படுறீங்களா? என்றார். வெறித்தக் கண்களுடன் அறையை விட்டு வெளியே வந்த மூவர் கமிட்டியுடன் நானும் உதட்டைக் கடித்துக்கொண்டே வெளியேறினேன்.
”உங்கூட ஒரேத் தொல்லையாப் போச்சுடா, எல்லாம் உன்னால வந்ததுதான் ” என்று என்அம்மாவும் அடக்கிய ஆத்திரத்தோடு குரலை சற்று நீட்டி என் மீது குறைபட்டுக் கொண்டாள்.
“என்னம்மா இது” என்று தயக்கத்துடன் நான் அம்மாவின் முகம் நோக்கினேன்.
போதாக்குறைக்கு சுபா ஆண்டியும் “ஆமாம் மீனா, இவன் ஒழுங்கா சீட்ல உட்கார்ந்திருந்தா கடைசி நேரத்துல இப்படியொரு டென்ஷன் நமக்கு வந்திருக்காது. எல்லாம் எடுத்தாச்சானு நிதானமா செக் பண்ணிட்டு இறங்கியிருக்கலாம். பையும் போயிருக்காது, இந்த சங்கடமும் வந்திருக்காது. இந்நேரம் வீடு போய்ச் சேர்ந்திருக்கலாம்” என்று மேலும் என்னைப் போட்டுக் கொடுத்தார்கள்.
ஒருகணம் அதிர்ச்சியில் மூழ்கிய நான் “மன்னிக்கனும் ஆண்டி. ஒரு நிமிஷம் நில்லுங்க. இப்போ என்ன நடந்துச்சி? நானென்ன தப்பு பண்ணேன்? எதுக்கு என்னைய போட்டு இப்படி தாக்குறீங்க? அம்மா! நீங்களாவது சொல்லுங்கம்மா” என்று அம்மாவிடம் கெஞ்சி நின்றேன்.
அம்மா என்ன நினைச்சாங்களோ, “ஆமாம்டா செல்லம் நீதான் சமத்தா ஒரு இடத்துல உட்கார மாட்டேங்கறயே, அதான் இப்படியெல்லாம் நடக்குது. எனக்கும் அவங்க சொல்லுறது எல்லாம் சரின்னுதான் படுது. ஸ்டேஷன் வந்து இறங்குற நேரத்துல உன்னைக் காணாமல் நாங்க மூனுபேரும் எவ்ளோ பயந்தோம் தெரியுமா?” என்றார்கள்.
“நான் என்னம்மா செய்தேன்” எனக்கு ஆத்திரமாக வந்தது.
“நீ பாட்டுனு வேடிக்கை பார்த்துட்டே எங்கனா போய் உட்கார்ந்துட்டு இருந்தியானா என்னடா ஆவுறது? அப்புறம் உன்னை எங்கபோய்த் தேடுவோம்? உங்க அப்பாவுக்கு நாங்க என்ன பதில் சொல்லுவோம்? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா உன்னைத் தேடித் தேடியே அலுத்துட்டோம் தெரியுமா? இந்த களேபரத்துலதான் அவங்கப்பை பணம், காசு, சாவிகளோடு டிரைன்லயே போயிடுச்சி.”
“அட ஏம்மா..? ஏம்மா! இப்படியிருக்கீங்க? காட்பாடி ஸ்டேஷன் எனக்குத்தெரியாதா? நான் என்ன சின்ன குழந்தையா? உங்களூக்கு முன்னால நாந்தான கீழ இறங்கினேன்.” சற்று முன் சிரித்த முகத்தோடு வந்த என் விழிகள் கனத்தன..
“டேய் செல்லம் எப்பயாச்சும் நீ அஞ்சு நிமிஷம் ஒரு இடத்துல உட்காருகிறாயா யோசித்துப் பார். ஸ்கூல் மீட்டிங்ல கூட எல்லா ஆசிரியர்களும் உன் மேல அதே குற்றச்சாட்டுத்தான சொல்லுறாங்க! முதல்ல நீ ஒரு இடத்துல ஒரு மணி நேரமாவது உட்கார கத்துக்கோ. அதுவே நிறைய பிரச்சினைக்கு தீர்வா கூட இருக்கும்” என்று அறிவுரை சொல்லி முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டார்கள் என் அம்மா.
நான் மூவர் கமிட்டியை கோபத்துடன் உற்று நோக்கினான். “ரெண்டு நாளா புடவை புடவைனு மூனுபேரும் மொக்க போட்டா நான் எப்படிமா உங்ககூட அங்க உட்கார்ரது? புடவை, நகை, மாமியார் கதை இதைவிட்டா வேற டாப்பிக்கே நீங்க பேச மாட்டீங்களாம்மா? ட்ரெய்ன்ல இருந்து பையை எடுக்காம விட்டதுக்கு உங்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது, நான் மாட்டிக்கிட்டேன். அப்படித்தானமா? என்றேன். .
ஏதாவது பேசவேண்டுமே என்பதற்காக “கோச்சுக்காதடா செல்லம், போன பைக்கு வழி தெரியலய்யா? அதான், அப்படி பேசிட்டோம் ” என்றாள் அம்மா.
“சப்ப மேட்டர்மா அது”
“எதுடா சப்பமேட்டர் ? அந்த பையில பணம் இருக்குடா” என்றேன்.
“அதை பிடிக்கறத விட்டுட்டு அடுத்தவங்க மேல குறைசொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்க மொபைல கொஞசம் கொடுங்கம்மா நான் முயற்சி பண்ணி பாக்குறேன்” என்று அம்மாவின் மொபைலை வாங்கிக் கொண்டேன்.
மொபைல என் கையில கொடுத்துட்டு ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற நம்பிக்கையில் மூவர் கமிட்டி என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் மொபைல்ல என் அப்பாவை அழைத்தேன்.
“அல்லோ டாடி திருப்பத்தூர்ல வேல செய்யுற உங்க நண்பர், அதான் டாடி நம்ப பக்கத்து தெருவுல இருந்து தினமும் போய்வராரே நித்யாவோட அப்பா, அவரோட மொபைல் நம்பர் கொஞ்சம் சொல்றீங்களா? ” என்று கேட்டு நித்யாவோட அப்பாவின் மொபைல் நம்பரை வாங்கி எழுதிக்கொண்டேன்.
“ஹல்லோ அங்கிள்.. நான் கோபி சாரோட பையன் பேசுரேன்.” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, சுருக்கமாக சென்னைக்குப் போய் வந்த கதையைச் சொல்லி கோவை எக்ஸ்பிரஸ்ல ஒரு பையை எடுக்காமல் விட்ட கதைவரை சொல்லி முடித்தேன்.
‘அச்சச்சோ’ என்று வருத்தப்பட்ட அவர், என்னிடம் நான் என்ன செய்யனும் என்றார்.
“அங்கிள், நீங்க பிளாட்பார்ம்ல நடந்து போறத பார்த்தேன். கம்பார்ட்மெண்ட் நம்பரெல்லாம் தெரியல. ஆனால் நாங்க இருந்த பெட்டில இருந்து இன்ஞன் பக்கமா நடந்து போனா நான்கு பெட்டிக்கப்புறம் ஷட்டர் போட்டு மூடியிருந்துச்சி. அதுக்குமேல போகமுடியல. அங்கிள் கொஞ்சம் டிரை பண்ணி பாருங்களேன் ” என்றேன்.
“அதுக்கென்னப்பா பாத்துட்டா போச்சு! லைன்லயே இரு தம்பி “என்று உறுதியளித்த அவர் இரயிலுக்குள்ளேயே நடக்கத் தொடங்கிவிட்டார். நான் மூவர் கமிட்டியை ஏறெடுத்துப் பார்த்தேன். சுதா ஆண்டி, சுபா ஆண்டி, என்னுடைய அம்மா அடங்கிய மூவர் கமிட்டி அடுத்த தீபாவளிக்கு துணிவாங்க சென்னைக்கு செல்லக்கூடாது என்ற தீவிர முடிவோடு சாந்தமாக நின்று கொண்டிருந்தார்கள்.
“தோசை… மசால்தோசை..”. என்ற வியாபாரியின் குரலைத் தொடர்ந்து அங்கிள் நடந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.
“நீங்க டிராவல் பண்ணது அநேகமாக டி10 பெட்டியாக இருக்கலாம்னு நினைக்கிறேன் “என்றார் அங்கிள்.
“இருக்கலாம் அங்கிள் . அங்க ஆறாவது வரிசைனு நினைக்கிறேன், விண்டோ சீட் … ஒரு அண்ணா ஐ பாட்ல பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. இருக்காங்களா பாருங்க” என்றேன்.
“ஆமாம் தம்பி ஒரு பையன் பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கான்”
“எஸ் அங்கிள் , அந்த அண்ணாவுக்கு எதிர்லதான் அம்மா உட்கார்ந்துட்டு வந்தாங்க” என்றேன் மகிழ்ச்சியோடு.
“எதிர் சீட்ல ஒரு லேடீஸ் பேக் இருக்கு தம்பி “அவருடைய குரலிலும் சந்தோஷம் தெரிந்தது.
“என்ன கலர் பேக் “என்று நான் அம்மாவை நோக்கி வினவினேன்.
“பிரெளன் கலர் “என்ற பதில் ஒரே நேரத்தில் செல்போனிலும் சுதா ஆண்டியிடமிருந்தும் ஒலித்தது. நான் புன்னகையுடன் அம்மாவின் முகம் பார்த்தேன். கண்ணீர்த் துளியொன்று வியர்த்திருந்த அம்மாவின் கன்னத்தின் வழியாக இறங்கிக் கொண்டிருந்தது.
– நவம்பர் 2012