கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 21, 2014
பார்வையிட்டோர்: 14,258 
 
 

சார், சார், முறுக்கு எடுத்துகோங்கோ, இப்போவெல்லாம் எங்கே இப்படி கெடைக்கறது, நல்ல கை முறுக்கு, ஹி ஹி ஹி, இந்த மாத மீட்டிங்கிற்கு இவா தான் ஸ்பொன்சர்.

இவர் செக்ரெடரி ஆனதுலேருந்து இப்படிதான் , ஒரு மீட்டிங் கூட காசு செலவழித்து போட மாட்டார். நாங்க நூறு பிளாட் இருக்கோம், மத்த நாளுல மார்க்கெட்டிங் பண்ண அலோவ் பண்ணறது இல்லே, ரெசிடென்ட்ஸ்க்கு ப்ரைவசி போயிடும் இல்லையா. ஸோ மீட்டிங்ல நீங்க எல்லாரையும் மீட் பண்ணலாம் , உங்க பிராடக்ட்ஸ் எல்லாம் டிஸ்ப்ளே பண்ணலாம், உங்களுக்கும் பிசினஸ் இம்ப்ருவ் ஆகும், என்று பேசி பேசியே மாதா மாதம் ஒரு ஸ்பொன்சர் பிடிச்சுடுவார், ஸ்வீட் காரம் காபி எல்லாம் அவங்க செலவு தான்.

மீடிங்கிற்கு வராதவங்களுக்கு அடுத்த நாள், ஒரு ஒன் ஹவர், மீடிங்கிற்கு வாங்கோ சார், இப்படி வராம இருந்தா எப்படி, ஒரு யூனிட்டி வேணும் சார், எவ்வளோ இஷ்யுஸ் இருக்கு தெரியுமா?, இப்படி நீங்க எல்லாம் விட்டேத்தியா இருந்தா எப்படி சார் அசோசியேசன் ரன் ஆகும், என்று அவரோட அட்வைஸ் கேக்கறதுக்கு பதிலா ரெண்டு நிமிஷம் போயி உட்ட்கர்ந்துட்டு , இவரை போல ஒரு நல்ல செகரட்ரி கிடைக்க இந்த அசொசியேசன் குடுத்து வெச்சிருக்கணும்னு நாலு வார்த்தை சொல்லிட்டு, குடுத்ததை சாபிட்டுட்டு வந்துட்டால் தப்பிச்சுக்கலாம்.

பாதி பேர் இப்படி தான் மீடிங் அட்டென்ட் பண்ண வருவா, என்ன ஸ்பொன்சர்ஷிப் வந்தாலும் மாதா மாதம் மெயின்டனன்ஸ் மட்டும் குறையவில்லை, சட்டென்று திரும்ப நினைவு வந்தது.

என்ன சார் வாயில போட்டவுடனே கரையறதா ஹா ஹா ஹா , அது தான் சார் மாமி’ஸ் ஸ்மார்ட் கிச்சன், பேரு தான் முறுக்கே தவிர வாயில போட்ட உடனே முருக்கிகாம அப்படியே கர கரன்னு கரைஞ்சு போறது பாருங்கோ என்றவருக்கு, முகம் எல்லாம் ஒரே பெருமிதம்.

ஆமாம் அவர் சொல்வது உண்மை தான், முறுக்கு நன்றாக தான் இருந்தது. மனசுல ஏனோ ஒரு சின்ன சுழற்சி. காலத்தை ஒரு நாற்பத்தி ஐந்து வருடத்திற்கு முன் சுழற்றியது ( கதைல தான் இவ்வளோ கரெக்டா அந்த தேதிக்கு போக முடியும் ).

இன்னும் அந்த நாள் எனக்குள் நன்றாக ஞாபகம் இருக்கிறது, காலை ஒரு ஏழு மணி இருக்கும் ஆத்து வாசலில் ஒரு மெலிந்த உருவம். இடுப்பில் ஒரு குழந்தை. அழுக்கேறிய பாவாடை சட்டையுடன். அந்த மாமிக்கு என்ன வயது இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் வயது எனக்கில்லை, குழந்தைக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம் , அந்த வயதுக்கு ஏற்றார்போல வளர்த்தி இல்லை, ரொம்ப புஷ்டியாக இல்லை, ஆனால் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது, கூடவே சோகமும். எனக்கு அப்போது ஒரு பதினோரு வயது இருக்கும்.

நான் ஆறாவது படித்து கொண்டிருந்தேன் என்று ஞாபகம், என் கையில் இருக்கும் பிஸ்கட்டை அந்த குழந்தை ஆசையாக பார்த்தது, வந்திருந்த மாமியோ ஆத்துல அம்மா அப்பா கிட்டே, கோவிந்தபுரம் ஆக்ரஹாத்ல் இருந்து கோமதின்னு வந்திருக்கேன்னு சொல்லறியா கொழந்தே, என்று என்னை கேட்டு கொண்டிருக்கும் போதே அப்பா வெளியில் வந்துவிட்டார்.

வாம்மா நீ தான் கோமதியா?, நாலு நாள் முன்னாடி இங்கே வந்தபோது வெங்கட்ரமணி எல்லாம் சொன்னான். கவலையே படாதே, இனி நாங்க இருக்கோம் என்றார் அப்பா.

அம்மாவும் வாசலுக்கு வர, வந்தவாளை இப்படியேவா வாசல்ல நிக்க வெச்சு பேசுவா, நீ உள்ளே வாம்மா, என்று வாய் மணக்க வரவேற்றாள் அம்மா.

கோவிந்தபுரம் அக்ரஹாரம் ஒன்றும் புதிய ஊர் இல்லை. எல்லாம் என் அம்மாவின் பிறந்த ஊர் தான். வெங்கட்ரமணி என் சொந்த மாமா தான், அங்கே உள்ள நிலம் நீச்சு எல்லாம் அவர் தான் பார்துகறார். இன்னும் கல்யாணம் ஆகலை. இந்த மாமியை அவர் தான் அனுப்பி இருக்கார். அதனால் தான் அம்மாவிடம் இருந்து இந்த வரவேற்பு.

கொழந்தைக்கு ஆகாரம் ஏதாவது கொடுத்தியா இல்லையா? இரு பால் எடுத்துண்டு வரேன். கொழந்தை பால்குப்பா இல்லையா? என்று கேட்டுகொண்டே அம்மா அடுக்களைக்கு போக, அந்த மாமி தயக்கத்துடன் உள்ளே வந்தாள்.

நான் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டே அடுக்களைக்கு போய் யாரும்மா அது என்று கேட்க, உனக்கு சொன்னாலும் புரியாதுடா என்றாள், அந்த மாமி எனக்கு என்னா வேணும் என்றதற்கு, அத்தைன்னு கூப்பிடு. ( அன்றைலிருந்து எனக்கு இன்னொரு அத்தை கிடைத்தாள் ) போயி இந்த பாலை குடுத்துட்டு கொழந்தைக்கு குடுக்க சொல்லு, அப்படியே அவளை ஸ்நானம் பண்ணிட்டு சமையல் கட்டுக்கு வர சொல்லு என்றாள்.

அம்மா கொஞ்சம் மடி ஆசாரம், அவ்வபோது அம்மாவை விழுப்பு பண்ணுவது நான் மட்டுமே, நான் ஒரே பையன், அம்மாவிற்கு செல்லம் என்பதால் எனக்கு மட்டும் விதிவிலக்கு.

அத்தை, இந்தாங்கோ பால், கொழந்தைக்கு குடுத்துட்டு அம்மா உங்களை ஸ்நானம் முடிசிண்டு அடுக்களைக்கு வர சொல்ரா.

இவ பேரு என்ன? , அப்பாவும் இதையே கேட்க, சுநேத்ரான்னு பேரு வெச்சிருக்கேன், நேத்ரான்னு கூப்பிடறோம் அண்ணா, என்றார் என் அப்பாவிடம்.

அப்பாவோ. டேய் காலம் கார்த்தாலே, என்ன வாயை பார்த்துண்டு உட்ட்கார்ந்திருக்கே, பள்ளிகூடத்திற்கு நேரம் ஆச்சு இங்கே என்ன அரட்டை, போயி புஸ்தகம் எல்லாம் எடுத்து வெச்சுண்டு, கிளம்பற வழிய பாரு என்றார் அப்பா.

பத்து மணிக்கு தானேப்பா பள்ளிக்கூடம். அதற்குள் நாலு வாட்டி போயிட்டு வந்துடுவேன் என்றபடியே என் புஸ்தகத்தை தேடினேன். அது சுநேத்ராவின் கையில் இருந்தது.

அவளுக்கு அந்த பெயர் மிகவும் பொருத்தம் தான், அவள் கண்கள் அகலமாக அழகாய்தான் இருந்தது. (அகலமாக அழகாக – இது பின்னாளில் நான் ஒரு வயதிற்கு வந்த பின் வந்த நினைப்பு. இது முதல் நாளில் இருநதே வந்த ஈர்போ என்னவோ ). கேட்டவுடனே புஸ்தகத்தை குடுத்து விட்டாள் நேத்ரா. இதுவே என் அத்தை பெண்ணாக இருந்தால் , அது தான் பாரு (பார்வதி) அத்தையின் பெண் ஐஷு ( ஐஸ்வர்யா ). அவளாக இருந்தால் வீடே ரணகளம் ஆகி இருக்கும், புஸ்தகமும் கிழிஞ்சு போயிருக்கும். அவ்வளோ அடம், அப்படியே அவள் கிழிச்சாலும், அப்பாவும் அம்மாவும் அவளை ஒன்றும் சொன்னதில்லை, இதற்கு மட்டும் அம்மா அவள் பக்கம், அப்பா எதாவது சொன்னா கூட, என் மாட்டுபொண்ணை ஏன் குறை சொல்லரேள். இவன் புஸ்தகத்தை, அவன் அலமாரில வெச்சிருந்தா, இவ கைக்கு எட்டி இருக்குமா, என்று பரிஞ்சிண்டு வருவாள்.

இப்படி அம்மா பேசும்போது மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவே பிடிக்காது. அதற்கு அப்பா, இருடி இரு, இவளே மாட்டுபொண்ணா வந்ததுக்கு அப்புறம் நீங்க போடுற குடுமிபுடி சண்டைய பார்கத்தானே போறேன், ஹா ஹா ஹா, என்று சிறித்து கொண்டே போவார்.

அதற்குள் அத்தையும் பரிந்து கொண்டு வர, வீடே ரெண்டு பட்டு நிக்கும் கடைசீயில் கிழிஞ்ச புஸ்தகத்தை ஒட்டு போட்டு வருஷம் முழுக்க வெச்சுக்க வேண்டியது தான் என் நிலைமை. கேட்டவுடன் சிரிச்சுண்டே சுனேத்ரா புஸ்தகத்தை என் கைல குடுத்தது ஏதோ அவளோட புஸ்தகத்தை எனக்கே குடுத்தது போல இருந்தது.

அம்மாவுக்கு ஐஷு தான் மட்டுபெண்ணாய் வரணும்னு ஆசை எல்லாம் இல்லை, ( இதுவும் ஒரு காலத்திற்கு பின்னே எனக்கு தெரிந்தது தான் ) பாரு அத்தைக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது, வெங்கட்ரமணி மாமாவைதான் முதல்ல பார்த்தாளாம், ஜாதகம் சரி இல்லையென்று நின்னு போச்சாம், அதுல ரெண்டாதுக்கும் கொஞ்சம் பேச்சுவார்த்தை இல்லாம நின்னு போச்சாம். அப்புறம் அத்தைக்கு உள்ளுர்லேயே வேறு இடத்துல கல்யாணம் ஆகி, நான் பொறந்தவுடனே என் புண்ணியாஜனத்தின் போது, அத்தை வந்து என் அம்மாவிடம், தனக்கு பெண் பொறந்தா என் அண்ணா பையனுக்கு தான் என்று அம்மாவிம் சொல்ல, அம்மாவும் உறவு எல்லாம் சேர்ந்தா சரி என்று தலை ஆட்டினாளாம்.

புதிய அத்தை என் அப்பாவிடம், அண்ணா நான் நன்னா சமைப்பேன் எனக்கு ஏதாவது சமையல் உத்தியோகம் வாங்கி குடுத்தா கூட நாங்க ரெண்டு பேரும் பொழைசுப்போம்னு சொல்ல, கோமதி, நீ ரெண்டு நாள் இங்கேயே இரு. ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் என்றாள் அம்மா.

கோமு அத்தை ( அது தான் கோமதி அத்தை, பாரு அத்தையும் கதைக்குள் வந்து விட்டதால் இனி புதிய அத்தையை கோமு அத்தை என்றே கூப்பிடுவோம் ) சமையல் நாக்கிற்கு புது ருசி குடுத்தது. இரண்டு நாள் போயிருக்கும் ஊருக்கு போயிருந்த பாரு அத்தை, திரும்பி வந்தாள், வந்தவுடன் அம்மாவை பார்க்க வந்தாள், வந்த இடத்தில கோமு அத்தையை பார்க்க, மன்னி எனக்குந்தான் மேலுக்கு முடியல, நான் வேணும்னா இவளை ஆத்துல கூட்டிண்டு போயி வெச்சுக்கறேன், வேளைக்கு சாப்பாடு , வருஷத்துக்கு துணிமணி அவ்வளோ தானே என்றாள், அதற்கு கமுத்தையோ, மன்னி ( என் அம்மாவை தான் ) எனக்கு ஒரு சின்ன ஆசை , நான் தான் படிக்காத தற்குறியா போயிட்டேன், வாச்ச ஆம்பிடையானும் போன இடம் தெரியல்லே, ( ஒ அத்திம்பேர் இல்லையா இந்த அத்தைக்கு ) , இருக்கறது ஒரு குழந்தே, அவளையாவது கொஞ்சம் படிக்க வெக்கணும்ன்னு ஆசை. பேராசை தான் இருந்தாலும் குழந்தை படிப்புக்கு ஏதேனும் ஏற்பாடு……. என்று இழுக்க, இதென்ன பிரமாதம் ஐஷுவோட சேர்த்து இவளையும் பள்ளிகூடத்திற்கு அனுப்பினா போச்சு என்றாள் அம்மா.

இதற்கு பாரு அத்தை , மன்னி நீ வேற. இதெல்லாம் ஏன் இழுத்து விடறே, ஏதோ சாதம் போட்டமாம் , கட்டிக்க துணி எடுத்து கொடுதமாம்னு இல்லாம இதுவேறயா என்றாள் கிசுகிசுத்த குரலில் ), பாரூ… நீ கவலை படாதே, நானே அவளுக்கு படிப்பு செலவு பார்த்துக்கறேன், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ( தங்கமலை ரகசியம் நேத்து தான் நானும் அம்மாவும் டெண்டு கொட்டாய்’ல பார்த்தோம் ) , ஒரு குழநதைகு படிப்பு சொல்லி குடுத்தா ரொம்ப புண்ணியம், ( வெங்கட்ரமணி மாமா அனுப்பினவளுக்கு இதுகூட அம்மா செய்யலேன்னா எப்படி? )

பாரு அத்தை முகத்தில் ஒரு பிரகாசம் வந்தது, அம்மாவிற்கும், ஒரு நிம்மதி பெருமூச்சு ( பாரூ அத்தை படுதுண்டா, இனிமேல் ரெண்டு ஆத்துக்கும் சேர்த்து அம்மா வேலை பார்க்க வேண்டாம் இல்லையோ ).

சரி அப்புறம் என்னதான் ஆச்சு , மேலே நடந்ததை பாப்போம்.

கோமு அத்தை , பாரு அத்தை ஆத்துக்கு இடம் பெயர்ந்தாள். நேத்ராவையும் பள்ளிகூடத்துல சேர்த்தாச்சு, ஐஷுவையும் நேத்ராவையும் பள்ளிகூடத்துக்கு பத்திரமா கூட்டிண்டு போய் கூட்டிண்டு வரும் பெரிய பொறுப்பு என்னிடம். ரொம்ப பெருமை அப்போவெல்லாம் எனக்கு, நேத்ரா என்ன சொன்னாலும் சமத்தா கேட்டுப்பா, அடம் பிடிக்கறது எல்லாம் இந்த ஐஷூ தான். அதனாலேயே எனக்கு நேத்ராவை ரொம்ப பிடிச்சிருந்தது. என் பேச்சையும் மதிக்கும் ஒரு ஜீவன் ஆயிற்றே. இப்படியே ரெண்டு மாசம் போயிருக்கும், திடீர்ன்னு ஒரு நாள் கார்த்தால மன்னின்னு அழுதுண்டே ஓடி வந்தா கோமு அத்தை. விட்டுட்டு போன நேத்ராவோட அப்பா திடீர்ன்னு தேடிண்டு வந்துட்டாராம், இந்த ஷணம் வா, ஊருக்கு போலாம்ன்னு ஒரே ரகளையாம், அண்ணாவை வந்து என்னன்னு கேக்க சொல்லுங்கோ மன்னி, என்று கேட்க, அப்பா போகலைன்னா அங்கே பாரு அத்தைக்கு இல்லே ஒரு கை குறையும், அப்பாவும் போய் பஞ்சாயத்து பண்ணி எங்காத்துக்கு எதிர்தாத்துல குடி வெச்சார், ஆச்சு நேத்ரா எங்காத்துக்கு எதிர்லே வந்தாச்சு, படிக்கும் நேரம் போக, பாதி நேரம் நான் அங்கேயும் , மீதி நேரம் அவள் இங்கேயும் தான், வளர வளர ஐஷுவின் அடமும் கூடவே வளர்ந்தது, கோமு அத்தை போலவே நேத்ராவும் சாந்த ஸ்வரூபிணியாய் வளர்ந்தாள். இதற்கு நடுவில் நேத்ரவோட அப்பாவால, வேளைக்கு ஒரு பஞ்சாயத்து தான் , போக வர ஏதாவது பண்ணி வெப்பார், பக்கத்துக்கு தெரு தான் போஸ்டாபீஸ், அங்கே போய் உட்கார்ந்துண்டு போற வர கடுதாசியெல்லாம் படிப்பார், ஒரு முறை சச்சு பாட்டிக்கு வந்த எம்.ஓ பணத்தை எடுத்துண்டு, சீடாடத்துல தோத்துட்டார், திருட்டை கண்டு பிடிக்க கிராமத்துக்கு முதல் முறையா போலீஸ் எல்லாம் வந்துது. சேஷு மாமாவுக்கு ( போஸ்ட் மாஸ்டர் ) வேல போயிடும்ன்னு அப்பா தான் அந்த பணத்தை கட்டி சேஷு மாமாவையும் நேத்ரவோட அப்பாவைம காப்பாத்தினார். நேத்ராவோட அப்பா பேரு இன்னும் சொல்லவேல்ல போலிருக்கே, அவர் பேரு அனந்தராமன், அனந்துன்னு அப்பா கூபிடுவா, ஆனமுட்டும் அப்பா எவ்வளவோ நல்லது சொல்லி பார்த்தார் அதையும் மீறி ஒரு நாள் பாரு அத்தையின் கம்மல் காணாமல் போகவே, அப்பவே சொல்லி போலீஸ் ல பிடிச்சி கொடுத்துட்டா. அன்னைக்கு கூட கோமு அத்தை கண்ணுல ஒரு சொட்டு ஜாலம் வரலே. மனுஷன் ஒரு வாட்டி போயிட்டு வந்தாவது திருந்துராரான்னு பாப்போம் அண்ணான்னு, என்று அப்பாவுக்கு தான் சப்போர்ட்டா நின்னா. நேத்ராவின் கண்களில் மட்டும் ஒரு மிரட்சி தெரிஞ்சது. இது போக ஆனந்து அத்திம்பேர் ஏற்படுத்தி வெச்ச கடன் வேற.
ஆனந்து அத்திம்பேர் ஏற்படுத்தி வெச்ச கடனையெல்லாம் அடைக்க கோமு அத்தை ராப்பகலாய் உழைத்தாள். வெய்யில் காலத்துல வடாம் வத்தலோடு காய்ந்தாள், வீடு வீடாய் போய் உழைப்பா, மழை காலத்துல , ஆத்துலேயே கரகரன்னு முறுக்கும் கார சீடையும், முள்ளு முறுக்கும் தட்டையு செஞ்சு டப்பால போட்டு கொண்டு போய் வீடு வீடாய் கொடுத்துட்டு கூலி மட்டும் வாங்கிண்டு வருவா. அதுவும் பாதி தான் கிடைக்கும், மிச்சம் கடன் அடையன்னு சொல்லி எல்லா ஆத்துலேயும் காசு பிடிச்சிப்பா. கோமு அத்தையும் எதையும் கேக்காம வருஷ கணக்காய் இப்படியே ஓட்டினா. ஊருல யார் ஆத்துல கொழந்தை பொறந்தாலும் கோமு அத்தை தான், பிரசவம் பார்ப்பதில் இருந்து, குழந்தையை குளுப்பாட்டி விடறது. இப்பவோ அப்பவோன்னு இழுத்துண்டு இருக்கற கெழவிக்கு பொடவை மாத்தி விடறது வரை.

சரி எங்கள் கதைக்கு வருவோம், இங்கே நான், நேத்ரா அப்புறம் ஐஷூ, என்னைவிட ஆறு வயது சிறியவர்கள் இருவரும், நேத்ரவுக்கு இருக்கும் நேர்த்தி ஐஷுவுக்கு வரவே இல்லை, வளர வளர ஐஷுவின் அடமும் வளர்ந்ததுன்னு சொல்லி இருந்தேனே அது திடீர்ன்னு ஒரு நாள் அடங்கியது, ஒரு வாரமாய் அவ ஆத்துக்கே வரலை, எனக்கு மட்டும் இங்கே சாதம் வரும், அம்மாவும் அப்பாவும் பாரு அத்தையாத்துக்கு போயிடுவா, அப்போ தான் நான் பி.யு.சி,ன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு பத்தொன்பது வயசு இருக்கும், அவளுக்கு பதிமூணு இருக்கலாம். என்ன நடக்கறதுன்னு அரசால் புரசலா தான் தெரிஞ்சது, பத்து நாள் போயிருக்கும், கோமு அத்தை விசும்பிண்டே ஆத்துக்கு வந்தா, நைசாக அம்மாவிடம் போய், மன்னி இவ பெரியவ ஆகலேன்னு இப்போ யாரு அழுதா, இன்னும் கொஞ்ச நாள் போனாதான் என்ன , எனக்கிருக்கும் நிலைமைக்கு எப்படி நான் இவளை கரையேத்துவேன்னு ஒரே பொலமபல், அம்மா தான் சீ சீ , கொழந்தையை ஏண்டி இப்படி சொல்றே, அவளுக்கு என்ன தெரியும் பாவம், நீ கவலை படாதே நாங்க இருக்கோம்ன்னு தைரியம் சொன்னா, பக்கத்துல இருந்த என்னை, டேய் இனிமே பழைய மாதிரி எதுதாத்துக்கு போறேன்னு அப்போ அப்போ அங்கே போயி நிக்கபடாது, தெரிஞ்சுதான்னு எனக்கு கண்டிப்பு குரலில் ஆர்டர் வேற, ஐஷுவும் வருவதில்லை, நேத்ராவையும் பார்க்க முடியவில்லை, கொஞ்சம் கஷ்டமாய் தான் இருந்தது. பக்கத்து கிராமத்துல இருக்கற பெரிய கடை வீதிக்கு போய் அப்பாவும் அம்மாவும் புது பாவாடை மேலாக்கு சட்டை எல்லாம் ரெண்டு செட் வாங்கிண்டு வந்து எதுத்தாதுக்கு போய் குடுத்துட்டு வந்தா, எனக்கு மட்டும் போக தடை, அப்போ அப்போ அம்மாவின் கண்காணிப்பு வேற, இருந்தாலும், எதுத்தாதுல அந்த திண்ணையின் மேல் இருந்த ஜன்னல் வழியாக ஒரு சிநேக பார்வை தெரிந்தது. அதே கண்கள், இப்பொழுது கண்களில் மிரட்சியுடன் ஒருட்கமும் தெரிந்தது. ஒரு மாதம் போயிற்று, இப்பொழுதெல்லாம் நேத்ரா வருவாள், நேராக அம்மாவிடம் போய் ஒத்தாசை செய்வாள், பின் சந்தடி தெரியாமல் அவாத்துக்கு போய்விடுவாள், எதிரே நான் தென்பட்டால் மட்டும் ஒரு ஓர பார்வை பார்ப்பாள்.

ஐஷுவும் வருவாள், வரும்போதே லங்கிணி லங்கிணி என்று வருவாள், தரை அதிரும், அம்மா ஆத்துல இல்லன்னா கூட நேரா அடுக்களைக்கு போய் அவளுக்கு வேண்டியதை எடுத்து திம்பாள், எல்லாம் முந்திரி பருப்பும் திராட்சையும் தான், போகும்போது முதுகில் என்னை ரெண்டு தட்டு வேற தட்டிட்டு போவாள், ஒரு முறை திரும்ப நான் அடிக்க போக, அம்மா அங்கே வர ஒரே ரகளை, இப்படியா பெரியவளான பொண்ணை கை நீட்டுவேன்னு எனக்கு ஒரே வசவு அடி. அதில் இருந்து அவள் வந்தாலே நான் என் ரூமுக்குள் போய் முடங்கி கொள்வேன். வம்பு எதற்கு, இவள் செய்யும் அழும்புக்கு நான் அடி வேறு வாங்க வேண்டுமா என்ன ???

இப்படியே இருக்க சேஷு மாமாவோட ( அது தான் போஸ்ட் மாஸ்டர் மாமா ) பையன் ரெங்குடு ஒரு நாள் ஆத்துக்கு வந்தான், அவன் படிப்புல கொஞ்சம் வீக்கு, என்னை விட இரண்டு வயசு மூத்தவன், ரெண்டு வருஷமாய் பி யு எழுதறான் இன்னும் பாஸான பாடில்லை, என்னுடன் சேர்ந்து படித்தாலாவது பாஸ் ஆக மாட்டானா என்று சேஷு மாமா இங்கே அனுப்பி வைத்தார், வருஷம் மட்டுமே பாஸ் ஆனது, இங்கே வந்தவன் படிக்காமல், நேத்ரவை பற்றியே பேசுவான், அப்பொழுதெல்லாம் கோவம் கோவமாக வரும். அவனுக்கு சகவாசம் அப்படி, அப்பொழுதே சிகரெட் எல்லாம் பிடிப்பான், அவன் ஒரு நாள், என் அப்பா அம்மா இல்லாதபோது, எங்காதுல பிடிச்ச சிகரெட் வாசனைக்கு ( நாதத்துக்கு ) எனக்கு தர்ம அடி விழுந்தது அப்பாவிடமும் அம்மாவிடமும்.

அப்பொழுது, நேத்ரா தான் உண்மையை சொல்லி மேலும் அடி விழாமல் காப்பாற்றினாள்.

நான் பி யு முடித்து பக்கத்தில் உள்ள பெரிய காலேஜில் பி காம் சேர்ந்தேன், அந்த காலத்தில் அக்கவுண்டன்ட் என்றல் அத்தனை மரியாதை. பி காம் சீட்டிற்கு அத்தனை போட்டி. அப்பாவுக்கு தெரிந்தவர் தான் காலேஜ் பிரின்சிபால். அதனால் எனக்கு சுலபமாக சீட் கிடைத்தது. நேத்ராவும் படிப்பில் கெட்டி தான் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி அவள் படிப்பு பள்ளி அளவிலேயே நின்றது. ஐஷுவும் படிப்பாள் தான், ஆனால் நேத்ரா அளவுக்கு கிடையாது. பத்தாவதில் ஒரு முறை நின்று படித்தாள். அத்துடன் பொண்ணுக்கு படிப்பு எதற்கு என்று பாரு அத்தையும் ஐஷுவின் படிப்பை நிறுத்தி விட்டார்.

ஒரு நாள் எங்காத்துக்கு வரும் ரெங்குடு எதுத்தாதுக்கு போய் அங்கே நேத்ராவிடம் பேச முயற்சி பண்ண, அவள் அழுதுண்டே இங்கே ஓடி வந்தாள். அவனை விட்டேன் நாலு அறை, எனக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. இனிமே இந்த பக்கம் வந்தேன்னு சத்தம் போட்டேன், அவன், இருடா உன் கண் முன்னாலேயே அவளை கல்யாணம் பண்ணி காட்றேன் பாருன்னு சொல்லிட்டு போனான். அப்பொழுது தான் என் மனதில் ஒருவித பயம் சூழ்ந்தது. சரி ஒரு வேகத்தில் சொல்லிட்டு போறான்னு நானும் விட்டுட்டேன். ரெண்டு நாளுலேயே நான் ஹாஸ்டலில் தங்கி படிக்க காலேஜுக்கு போனேன். நான் ஊருக்கு கிளம்பும் போது எதிர் ஜன்னலருகில் நின்று என்னையே பார்த்த அந்த பார்வை எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. ஒரு மாதம் போயிருக்கும். அன்று ஞாயிற்றுகிழமை. நான் ஊரில் இருந்து வந்திருந்தேன். சேஷு மாமாவும் மாமியும் ஒரு தட்டை தூக்கிண்டு எங்காததுக்கு வந்தா, அப்பாவையும் அம்மாவையும் அழைச்சுண்டு போய் நேத்ராவை பொண்ணு கேட்கவாம். அதற்கு அப்பா, ஒய் கேள்வி கேக்க நாதி இல்லேன்னா இப்படியா ஒய் பண்ணுவீர், எதை வச்சிண்டு காணும் உம்புள்ளைக்கு அங்கே பொண்ணு கேட்குரீர், உன் புள்ளைக்கு படிப்பில்லே, வேலை வெட்டி இல்லே, அதற்குள்ளே கல்யாணமான்னு கேட்க, இருக்கும் சொத்தெல்லாம் அந்த ஒரு புள்ளைக்கு தானே, என்ன வேலையை வேணும்னாலும் விட்டுட்டு அந்த இடத்தில என் புள்ளைக்கு வேலை வாங்கி வைக்கிறேன் என்று சொல்ல, நாதி அற்றவருக்கு ஏது வழி என்று அப்பாவும் பேச்சு வார்த்தை நடத்தி அன்றே நேத்ராவின் கல்யாணம் முடிவானது.

பேச்சு வார்த்தை முடித்து வந்த அம்மாவிடம் நான், அம்மா நீ ஏன் நம்பாதுக்கு நேத்ரவை கூட்டிண்டு வரகூடாதுன்னு கேக்க போய், அப்பா ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார். தொரைக்கு படிக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் கேக்கறதோ ???

முதல்ல ஒழுங்கா போய் படி, உனக்காகவே ஒருத்தி வளர்ந்துண்டு இருக்கா, அதை முதல்ல நியாபகம் வெச்சுக்கோ, என்று முறைக்க, அம்மாவும் என் பக்கம் இல்லாமல் அப்பாவின் பக்கம் இருக்க, அன்றைக்கிருந்த சூழ்நிலையில் வாய் மூடியை மட்டுமே என்னால் நிற்க முடிந்தது.

இதை கேள்வி பட்ட பாரு அத்தையோ, என் அப்பாவிடம் , அண்ணா இந்தஷணம் ரெண்டு பேருக்கும் ( எனக்கும் ஐஷுவுக்கும் ) நிச்சயதார்த்தம் நடத்தினாதான் ஆச்சுன்னு ஒரே ரகளை. எனக்கு சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கேள், மன்னி காப்பாத்துவான்னு நம்பிக்கை இருக்குன்னு, கூடுதல் வசனம் வேற. அப்பாவும், இவன் ( என் ) படிப்பு முடியட்டும்ன்னு எவ்வளவோ சொல்லி பார்த்தார், அதற்கெல்லாம் பாரு அத்தை மசியரா மாதிரி இல்லை, நிச்சயம் பண்ணத்தான் ஆச்சுன்னு ஒத்தை கால்ல நின்னு, நிச்சயம் இப்போ, கல்யாணம் நான் படிச்சு வேலைக்கு போனப்புறம்ன்னு முடிவா சொல்லிட்டா.

அத்தை என்னைக்கு தோத்து போயிருக்கா, ஒண்ணு மெரட்டி காரியம் சாதிப்பா, இல்லே அழுது காரியம் சாதிப்பா, இப்போ ரெண்டும் கலந்து சாதிச்சா.
எனக்கு படிப்பு முடிந்து பின் தான் கல்யாணம் என்று முடிவானதால், முதலில் நேத்ரவிர்க்கு கல்யாணம் என்று வீட்டிலேயே வைத்து சாஸ்திரம் தவறாமல் ஊரை அழைத்து, தாலி கட்டும் பொழுது ஒரு அலட்சிய பார்வை என்னை பார்த்துக்கொண்டே கட்டினான் ரெங்குடு. தாரை வார்த்து கொடுக்க ஆனந்து அத்திம்பேர் இல்லாததால், பாரு அத்தையும் அத்திம்பெரும் தான் தாரை வார்த்து கொடுத்தார்கள். நேத்ராவின் கல்யாணம் முடியும் வரை என்னை கிட்டே நெருங்க விடாமல் பார்த்து கொண்டாள் பாரு அத்தை, அவளுக்கு அவளின் பயம். ஆயிற்று , ஒரே ஊரானாலும் நேத்ரா புக்காத்திற்க்கு போகும் போது ரெங்குடுவிடம் பர்மிஷன் வாங்கி கொண்டு என்னிடம் வந்தாள். கண்களில் ஒரு துளி தளும்பி நின்றது.

என்னையே நெனச்சிண்டு இருக்காம, நல்லபடியா ஐஷுவோட குடும்பம் பண்ணுவேள்ன்னு எனக்கு சத்தியம் செஞ்சு குடுங்கோ. வெகு நாட்களுக்கு பிறகு என்னிடம் அவள் பேசிய வார்த்தை. அப்பொழுது தான் எனக்கே தெரிந்து, நான் அவளை எந்த அளவு நேசித்து இருக்கிறேன் என்று, அந்த நேசம் அவளுக்கும் தெரிந்திருக்கிறது என்று. இனி ஒன்றும் சொல்லி பயன் இல்லை. ஒற்றை வார்த்தையில் சரி என்றேன். ஐஷுவும் என்னுடனான நிச்சயத்திற்கு பிறகு மாறித்தான் போயிருந்தாள். என் அம்மாவிடம் தான் அவள் சமையல் பழகுவது எல்லாம். நானும் சிறிது சிறிதாக அந்த இழப்பை பின் தள்ளி படிப்பில் கவனம் செலுத்தினேன், எப்பொழுதாவது அவளை எதிரில் பார்த்தால், உதட்டோரம் ஒரு புன்னகை மட்டும் இருக்கும், அவ்வப்போது அவளை பற்றி செய்தி மட்டும் வந்து கொண்டிருக்கும், ரெங்குடுவுக்கு போஸ்ட் மாஸ்டர் வை கிடைத்தது, அவனுக்கு பெண் குழந்தை பிறந்தது, ஆனந்து அத்திம்பேர் திரும்ப வந்தது, மாமனாரும் மாப்ளையும் சேர்ந்து ஆத்து திண்ணைலேயே சீட்டு கச்சேரி நடத்தியது, இப்படி சகலமும், பாவம் கோமு அத்தியின் வாழ்க்கை தன அப்படி ஆனது என்றால் , நேத்ராவின் வாழ்கையும் அதே பாதையில் போனது வருத்தமாய் தான் இருந்தது.
இங்கே எனக்கும் ஐஷுவுக்கும் கல்யாணம், உத்தியோகம் நிமித்தமாய் நான் சென்னை வாசம், கோயில் உற்சவத்திற்கு மட்டும் ஊருக்கு போதல் என்று வாழ்க்கை சுழன்று கொண்டே இருந்தது, மருமகளே மாட்டு பொண்ணா வந்தாலும் எந்த மாமியாருக்கும் மாட்டுபெண்ணுக்கும் ஒத்து போயிருக்கு. ( மாற்று பெண் – ஒரு பொண்ணுக்கு ஈடா ஆத்துக்கு வரும் பொண் அப்படின்னு சொல்லுவா, நடை முறைல பொண்ணு பொண்ணு தான் மாற்று பொண் மாட்டு பொண் தான் ) அம்மாவும் அப்பாவும் கிராமத்துலேயே இருந்துட்டா. இப்பவும் கோமு அத்தை தான் அம்மாவுக்கு அனுசரணையா இருந்தா. திடீர்ன்னு ஒரு நாள் போலீஸ் வர, போஸ்ட் ஆபீஸ் பணம் எல்லாம் சீட்டு ல தொத்த கதை தெரிய வந்தது, இந்த முறை பெரிய பணம், அதனால் யாராலும் காப்பாத்த முடியல, மாப்ளையும் மாமனாரும் ஒரே வண்டில போலீஸ் புடிஞ்சிண்டு போனதா ஊர் முழுக்க பேச்சு. மறுபடியும் கடனெல்லாம் அடைக்க, கோமு அத்தையும் நேத்ராவும் மொத்த சொத்தையும் விற்க வேண்டியதை ஆயிற்று. இருக்க இடமும் இல்லை படுக்க பாயும் இல்லை என்ற நிலை. சரி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒத்தாசையாய் அங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவெடுக்கும் சமயம், திடீர் என்று அம்மாவும் பொண்ணும் பேத்தியும் ஒரு சேர காணாமல் போனார்கள். இது எல்லாம் முடிந்து இருபது வருடங்கள் இருக்கும். நடுவில் முதலில் அப்பா கிளம்ப அம்மா இங்கே வந்து என்னுடன் இருந்து பின் அம்மாவும் கிளம்ப, நானும் ஐஷுவும் கார்த்திக்கும் ( என் மகன், ஒரே மகன் இன்னும் அறிமுக படுதவேல்லியோ ) ஒரு முழு சென்னை குடும்பம் ஆனோம். கடைசி காலத்தில் அம்மாவை நல்லபடியாய் கரை சேர்த்தாள் ஐஷு. மாமியார் என்பதை விட மாமி என்ற உறவு மேலோங்கி நின்றதோ என்னவோ. அந்த பகவானுக்கு தான் நன்றி சொல்லணும், அப்பாவை கூட கடைசி காலத்துல பார்த்துக்கலாம், ஒரு பையனாய் அம்மாவை எப்படி பார்த்துக்கறது. ஐஷுவால அந்த குறை இல்லாமல் போனது. இப்படி ஐஷுவும் கார்த்திக்கும் உத்தியோகமும் சேர்ந்து கோமு அத்தையை மறக்க செய்தது. காலம் மனதில் ஏற்படும் காயங்களை எவ்வளவு அழகாய் ஆற்றுகிறது. ஒரு சமயம் அவள் இல்லாமல் வாழ முடியுமா என்று நினைத்த அதே மனது, பின் மறந்தும் போகிறது.

மனம் பிளாட்டிர்க்கு திரும்பியது.

அங்கிள், அங்கிள்ள்ள்ள் – என்னை இவ்வுலகத்திற்கு அழைத்து வந்தது.
அங்கிள் இது ஏன் விசிடிங் கார்டு, அதில் ஸ்ரீவித்யா எம் பி எ (மார்க்கெட்டிங்) , மாமி’ஸ் ஸ்மார்ட் கிட்சன், அவுட் டோர் கேட்டரிங் அண்டர்டேகன் என்று ஆங்கிலத்தில் இருந்தது.

அங்கிள், எல்லா விதமான ஆர்டரும் எடுத்துக்குறோம், சின்னதோ பெருசோ நன்னா செஞ்சு தருவோம், அம்மாவும் பாட்டியும் தான் இதுல எக்ஸ்பெர்ட், நான் வெறும் மார்கெடிங் பார்த்துக்கறேன், ஒரு ஆர்டர் குடுத்து பாருங்கோ, பிடிச்சுதுன்னா மத்தவாளுக்கும் சொல்லுங்கோ, என்று பட படவென பேசிக்கொண்டே போனாள்.

உங்க பாட்டி பேரு என்னமா? அம்மா பெயரை தான் கேட்க மனது ஆசை பட்டது, இருந்தாலும் வாய் பாட்டி பெயரை தான் கேட்டது. ஏன் அங்கிள், வெகுளியாய் கேட்டாள் – வித்யா, இல்லேம்மா தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன், என்றேன் நான், மங்களம் என்றாள் அவள். எங்க பாட்டிக்கு முறுக்கு மாமின்னு இன்னொரு பேரும் உண்டு அங்கிள், என்றாள்.

கோமதி ( கோமு அத்தை ) என்று கேட்க மாட்டோமா என்று ஆசைப்பட்ட காதிற்கு இது சற்று ஏமாற்றமாய் தான் இருந்தது. தாத்தாவும் அப்பாவும் சரி இல்லே அங்கிள், பாட்டியும் அம்மாவுமாய் தான் என்னை இவ்வளவு தூரம் வளர்த்தா, நானும் வெளில வேலைக்கு போய் சம்பாதிக்கறதை விட இதையே மாடர்னா மாத்தலாம்னு இறங்கிட்டேன் அங்கிள், என்று பேசிக்கொண்டே போனாள். சிறிய வயதனாலும் அதில் நேர்த்தி தெரிந்தது.

ஆமாம் நான் எதற்கு கோமு அத்தையை தேடுகிறேன், நேத்ராவை பார்கவோ ????

போன வருடம் அந்த தள்ளாத வயதிலும், வெங்கட்ரமணி மாமா வந்து சொல்லிவிட்டு போனது மனதில் நிழலாடியது. வந்துவிட்டு போன அதே மாதத்தில் அவர் மறைந்தே போனார். ஆனால் சொல்லிவிட்டு போன விஷயம் மனதில் பிசைந்து கொண்டே இருந்தது.

அவர் கொடுத்து விட்டு போன அந்த மஞ்சபை தான் காரணம், டேய் சீராமா , இந்த மஞ்ச பைய வெச்சுக்கோ, இதுல கொஞ்சம் பணம் இருக்கு, என் காலத்துக்குள்ள அவளுக்கு ஏதாவது செய்யணும் என்றார்.

யாருக்கு மாமா??? என்ன செய்யணும்??? என்று கேட்டேன் . அதுதாண்டா அந்த கோமதி இருந்தாளே, நம்பாதுல, அவளுக்கு நான் செய்ய வேண்டிய கடமை டா. அந்த காலத்துல, எங்கம்மா கேட்ட வரதட்சணையை பணம் மூவாயிரம் கொடுக்க முடியாததுனால, அவ வாழ்க்கை மாறிப்போய் என்னுடைய வாழ்கையிலும் ஒண்ணுமே நடக்காம போச்சு. எனக்கும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க புடிக்கல. அப்படியே இருந்துட்டேன். ( மாமாவிற்கு அன்றைக்கு கல்யாணம் ஆகி இருந்தால் நேத்ரா என் மாமா பெண் ஆகி இருப்பாளோ??? ) மிகுந்த வருத்ததோடு சொல்லிவிட்டு கையில் இருந்த அந்த மஞ்ச பையை திணித்துவிட்டு போனார். போனவர் போயும் சேர்ந்தார். அன்றில் இருந்து தீவிரமாய் கோமு அத்தையை பற்றி விசாரிக்க, தேட ஆரம்பித்தேன். ஒரு சிறிய பணம் , அதுவும் நாமாக கண்டுபிடித்த ஒரு காகிதம், அதற்கு இருக்கும் மதிப்பு ஒரு மனிதனுக்கு இல்லை. அது இல்லாமல் போனதால், மூன்று தலைமுறைன் வாழ்கையை அது எப்படியெல்லாம் மாற்றி விட்டது. இன்று கண்டுபிடித்து விட்டோம், என்று நான் சந்தோஷப்பட்ட போது தான், இந்த பெண், அவள் பாட்டியின் பெயர் மங்களம் என்றாள். இன்னும் எவ்வளவு நாள் தேட வேண்டுமோ???

ஆண்டவனே, என்று எண்ணும்போது, ஸ்ரீவித்யா , அங்கிள் எனக்கு கொஞ்சம் பிசினஸ் இம்ப்ரூவ் பண்ண ஒரு பிசினஸ் லோன் தேவை படறது, உங்க பேங்க் ல சொல்லி ஏற்பாடு பண்ணா, நான் ஈ எம் ஐ கரெக்டா கட்டிடறேன், மூணு வருஷம் ஐ டி ரிடர்ன், அப்புறம் பாலன்ஸ் ஷீட் எல்லாம் இந்த பைல் ல இருக்கு. செகரட்ரி அங்கிள் தான் உங்க கிட்டே கேட்க சொன்னார், நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு சொன்னார்.

இப்போ தான் புரிந்தது, இந்த செகரட்டரி எதற்கு ரெண்டு நாளாய், நடையாய் நடந்து, மீடிங்கிற்கு வெற்றிலை பாக்கு வைக்காத குறையாய் அழைத்தார் என்று. ஆனால், இன்று ஏனோ அவர் மேல் கோபம் வரவில்லை, மாறாய் நன்றி சொல்ல தோன்றியது. கண்ணில் இருந்து மறைந்து போன கோமதி அத்தையை தேடி கண்டுபிடித்து கொடுக்கப்படும் வரை இந்த மஞ்சப்பை எதற்கு பீரோவுக்கு பாரமாய் இருக்க வேண்டும். ஐஷுவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, இவளுக்கே கொடுத்து உதவினால் என்ன???, சரி ஒரு முறை வந்து உங்க பிசினசை பார்த்து விட்டு சொல்றேன்மா என்றேன். என்றோ நடந்த ஒரு தப்பிற்கு, இவர்கள் மூலம் பிரகாரம் தேடலாம் என்று மனது சொல்லிற்று.

நீங்களும் எங்காவது நல்ல முறுக்கு சாபிட்டால் தயவு செய்து எனக்கு சொல்லி விடுங்கோ. என் தேடல் இன்னும் தொடர்கிறது. இப்போவெல்லாம் கிருஷ்ணனுக்கு, கடைல வாங்கின பட்சணம் தான். ஆத்துல பண்ணலேன்னா என்ன, கொழந்த கிருஷ்ணன் எல்லாத்தையும் ஏத்துப்பான். இதே சாக்குல நிறைய பேரை கோமு அத்தையை தேடும், தேடுதல் வேட்டையில் சேர்த்திருக்கிறேன். சீக்கிரமே கண்டுபிடிப்போம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *