மக்பெத் (ஷேக்ஸ்பியரின் நாடக கதை)

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 16,802 
 
Story of Shakespeare’s Drama Macbeth
ஸ்காட்ட்லண்டின் அரண்மனை. அரசர் டன்கின் க்கு எதிரில், உடல் எங்கும் காயங்களுடன் வீரன் ஒருவன் நின்றிந்தான். அவன் முகத்தில் அளவு கடந்த பெருமிதம் தெரிந்தது. அவன், எல்லையில் நார்வே நாட்டுடன் நடந்த போரில் தாங்கள் வெற்றி பெற்றதையும், அதில் வீரமாகவும், மிக உக்கிரமாகவும் போர் புரிந்த தளபதிகள் மக்பெத் மற்றும் பாங்கோவை பற்றியும்  சொல்லிக்கொண்டு இருந்தான். குறிப்பாக தளபதி மக்பெதின் வீர விளையாட்டையும் அவர் வாள் வீச்சில் எதிரிகள் தலை உருண்டு ஓடியதையும் விவரிக்க, அரசரின் முகத்தில் எல்லையில்லாத பெருமிதம்.  இதை மேலும் மூன்று ஜோடி கண்கள் ஒரு வித குருரத்துடன்  பார்த்து கொண்டிருந்ததை அங்கிருப்பவர்கள்  யாரும் அறியவில்லை. அவை எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க வல்ல சூனியக்காரிகளின் கண்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ விவாதித்துவிட்டு, “நாம் தளபதி மக்பெதை அடுத்து சந்திப்போம்” என அங்கிருந்து அகன்றனர். அந்த நேரத்தில் அவர்கள் கண்களில் இருந்த குருரம் ஏதோ தீயது நடக்க போகிறது என்பதை உணர்த்தியது.
மக்பெத்தும்  பாங்கோவும் தங்கள் வெற்றிப் படைகளை பின்னே வர செய்துவிட்டு, இரு குதிரைகளில் மிக விரைவாக தலைநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். வழியில் அடர்ந்த காடு. அதை கடந்து கொண்டிருந்தபோது தூரத்தே இருந்த குடிசையில் இருந்து கீச்சு குரலில் பேச்சு குரல் கேட்டது. அடர்ந்த கட்டில் தனியே இருந்த குடிசை எழுப்பிய ஆச்சர்யத்தை புறந்தள்ளிவிட்டு இருவரும் அதை நோக்கி தங்கள் குதிரையை விரட்டினர். உள்ளே மூன்று சூனியக்காரி கிழவிகள் தங்களுக்குள் ஏதோ சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“ஏய் கிழவிகளே… யார் நீங்கள்? இங்கு என்ன செய்து கொண்டிருகிறிர்கள்?”

“வீரர்களே… நாங்கள் நாளை நடப்பதை இன்றே சொல்லும் திறன் படைத்தவர்கள். இதோ இங்கே நிற்கும் மக்பெதின் எதிர் காலம் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம் ” என்றாள் ஒரு சூனியக்காரி.

“என் எதிர்காலம்  பற்றி நீங்கள் ஏன் பேச வேண்டும்?” – மக்பெத்

“ஏன் என்றால்  உங்கள் எதிர்காலம், இந்நாட்டின் எதிர்காலம்” என்றாள் மற்றுமொரு சூனியக்காரி. குழப்பத்துடன் இரு தளபதிகளும் நோக்க… மக்பெதின் எதிகாலம் பற்றி உரைக்க தொடங்கினர்.
“மக்பெத், இன்னும் சிறிது நாளில் நீ கவ்டர் பகுதியின் அதிபர் ஆவாய். அதோடு இந்த ஸ்காட்ட்லண்டின் மன்னனாக கூடிய விரைவில் முடிசூடி கொள்ள போகிறாய். உனக்குப் பின் இதோ இந்த பாங்கோ வின் வழிகாட்டுதலின் பேரில் புதிய ஆட்சி தழைக்கும்”. என்று கூறி விடை பெற்று மறைந்தனர் கிழவிகள்.
பாங்கோ இந்த ஆருடத்தை நம்பவில்லை. ஆனால் இது, மக்பெதின் உள்ளத்தில் ஆசை தீயை மூட்டி விட்டது. எஞ்சிய பயணம் முழுவதும் அவன் முகத்தில் எதிரொலித்த பல்வேறு முக பாவங்கள், அவன் எண்ணங்கள் முழுவதும் இதை பற்றியே சுற்றி கொண்டு இருப்பதை காட்டி கொடுத்தன.
வெற்றித் தளபதிகள் இருவர்க்கும் ஆடம்பரமான வரவேற்ப்பை மக்களும் மன்னரும் அளித்தனர். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த அரசர், போரில் இறந்த காவ்டர் பகுதியின் அதிபதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கு அதிபதியாக இனிமேல் மக்பெத் இருப்பார் என்று அறிவித்தார்.
சூனியக்காரியின் ஆருடங்களில் ஒன்று இவள்ளவு சீக்கிரம் நிறைவேறும் என்பதை எதிர்பார்க்காத மக்பெத் உள்ளத்தில், அடுத்த அரசன் நான் தான் என்னும் சூறாவளி வீசத் தொடங்கியது.  கூடிய விரைவில் “நானே மன்னன்” என்ற எண்ணம் பலமாக இருந்தாலும் அரசர் தன்கினும் இளவரசர்கள் மால்கம் மற்றும் டொனல்பென் இருக்கும் பொழுது அது எங்கனம் சாத்தியமாகும் என்ற குழப்பத்துடன் வீடு சேர்ந்தான்.
அங்கு, லேடி மக்பெத், காவ்டர் பகுதியின் புதிய அதிபதியான தன் கணவரை வரவேற்க ஆடம்பரமான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தாள். விழாவில் கணவனின் முகத்தில் ஓடிய மெல்லிய குழப்ப ரேகையை கவனித்தவள் தனிமையில் அதை விசாரிக்க, நடந்த அனைத்தையும் விவரிக்கிறான் மக்பெத். மனதில் நினைத்ததை எப்பாடு பட்டாவது நிறைவேற்றிவிடும் திட மதி படைத்த லேடி மெக்பெத், தன் கணவன் இந்நாட்டின் அரசனாவது உறுதி என்பதை முழுவதும் நம்பியதோடு தன்னை அரசியாகவே கற்பனை செய்ய தொடங்கிவிட்டாள். அரிதினும் அரிதான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும் போது நாமும் அதனை அடைய, நம் சூழ்நிலைகளை சூழ்ச்சிகளின் மூலம் மாற்ற வேண்டும். எந்த ஒரு அரசியல் மாற்றமும் சூழ்ச்சியின்றி உருவாவதில்லை என பலவாறாக பேசி தன் கொடூர திட்டத்திற்கு கணவனை உடன்பட வைக்கிறாள். அரசனை கொன்று, மக்பெத் அரசனாகும் வழியை ஆலோசிக்க தொடங்குகிறாள். அதற்கு தோதனதொரு வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது.. காவ்டர் பகுதியின் அதிபராக மக்பெத் பதவி ஏற்கும் விழாவில், அரசரை விருந்துண்ண அழைக்க அரசரும் மக்பெதின் விடுதிக்கு வர ஒத்துக்கொள்கிறார்.
மிக ஆரவாரமாக அரசர் டான்கின்யையும், அவர்தம் மெய்காவலர்களையும் வரவேற்கும் மக்பெத் தம்பதியினர் அவர்கள் குடிக்கும் மதுவில் மயக்க மருந்து கலக்கி தூங்க செய்கின்றனர். மக்பெத் தூக்கத்திலேயே அரசனை வாளால் வெட்டி கொன்று விட, மயக்கம் களைந்து எழுந்த காவலாளிகளை, மன்னரை பாதுகாக்கத் தவறியவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்கள்  அனைவரையும் கொள்கிறான் மக்பெத். அரசர் டன்கின் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட இளவரசர்கள் மால்கம்,டோனால் இருவரும் தப்பி ஓடி இங்கிலாந்த் மற்றும் அயர்லாந்து-ல் தஞ்சம் அடைகின்றனர். எதிர்ப்பே  இல்லாத நிலையில் மக்பெத் ஸ்காட்லான்ட் நகரின் அரசனாக மூடி சூடிகொள்கிறான்.
ஸ்காட்லான்ட் மக்கள் தங்கள் புதிய அரசன் மக்பெதை வரவேற்க மிக பெரும் விழாவிற்கு தயாராகி கொண்டு இருந்தனர். அதை முன்னிட்டு நாட்டின் அனைத்து பிரபுக்கள் மற்றும் அரசவை உறுப்பினர் அனைவருக்கும் ஒரு சிறந்த விருந்தை அரசர் ஏற்பாடு செய்து இருந்தார். அனைவரும் இந்த கோலாகல நிகழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்க, இருவர் உள்ளம் மட்டும் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. ஒருவர் தளபதி பாங்கோ.அரசர் டன்கின் மக்பெதின் விடுதியில் வைத்து கொல்லப்பட்டத்திலும், அவசர அவசரமாக மக்பெத் முடிசூடி கொண்டதிலும் எதோ சதி இருப்பதாக யூகித்து அதை கண்டறிய முற்படுகிறான்.
இன்னும் ஒருவர் அரசி லேடி மக்பெத். அதற்கு காரணம் சூனியக்காரிகளின் மூன்றாவது ஆருடம். மக்பெதின் அரசுக்கு தளபதி பாங்கோ இடையுறாக இருப்பார் என்பதே அதன் உள்ளர்த்தம் என்பதையும், எப்போது வேண்டுமானாலும் பாங்கோ எதிரியாக மாறலாம் என்பதையும் புரிந்து கொண்ட அரசி மேற்கொண்டு செய்ய வேண்டியவைகளை யோசிக்க ஆரம்பித்தாள். இந்நிலையில் தளபதி பாங்கோ முன்னாள் அரசரின் சாவை பற்றி விசாரிப்பதை அறிந்து கொண்ட லேடி மக்பெத், அரசரின் துணையுடன் கூலி படையை அனுப்பி தளபதி பாங்கோவை குடும்பத்துடன் கொல்ல சொல்கிறாள். அவர்களும் பாங்கோவை கொன்று விட மகன் ப்ளான்ஸ் தப்பித்து விடுகிறான்.
விருந்து நாள். கூடி இருந்த பிரபுக்களில் பலர் வீரன் மக்பெத் அரசர் ஆனதை வரவேற்றாலும், அது நிறைவேறிய முறையை பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். தளபதி பாங்கோ மர்மமான முறையில் இறந்ததும் அங்கு மிக ரகசியமாக விவாதிக்க பட்டது. பொதுவாக எல்லோர் மனதிலும் அரசர் மக்பெதின் மீது பயம் கலந்த மரியாதையே இருந்தது. விருந்து நடந்த அரங்கிற்குள் அரசனும் அரசியும் ஆரவாரமாக நுழைந்தனர். மக்பெதின் முகத்தில் தீவிர சிந்தனை ரேகைகள். தளபதி பாங்கோவின் மரணத்தில் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் அவன் மனதை அரித்து கொண்டே இருந்தது. அது தந்த குற்ற உணர்ச்சியால் யாருடனும் அதிகம் பேசாமல் மது கோப்பையை காலி செய்ய தொடங்கி இருந்தான். விருந்து மேடையில் மக்பெதின் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்திரிந்த உருவம் மங்கலாக தெரிந்ததால் அடையாளம் தெரியவில்லை. கண்களை கசக்கி விட்டு உற்று நோக்க அது பாங்கோ. அவனின் மரணம் காலையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் நிச்சயம் அது அவன் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தான். மனம் மிகவும் கலக்கம் கொண்டிருந்தது. சமாதனப்படுத்தும் நோக்கில் ஆவியுடன் உரையாடத் தொடங்கினான். பாங்கோவின் ஆவி தன் பக்க நியாயங்களை கேள்வியாக கேட்க அதற்கு தன் உளறலான மொழியில் பதிலளிக்கத் தொடங்கினான். விருந்தில் பங்கு கொண்ட ராஜ குடும்பத்தினர்க்கும் பிரபுக்களுக்கும் இந்த நிகழ்வு, அரசன் பெரிய குடிகாரன் மற்றும் பைத்தியக்காரன் என்பதான ஒரு பிம்பத்தையே முன்னிறுத்தியது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தினால் தான் அரசர் இங்ஙனம் நடந்து கொள்கிறார் என அரசி சொன்ன சமதானத்தை அங்கு யாரும் நம்ப தயாராக இல்லை.
அந்த விருந்துக்கு பிறகான நாட்களில் மக்பெத் உண்மையிலேயே தூக்கத்தை தொலைத்தான். இரவில் பாங்கோவின் ஆவியுடன் தனிமையில் பேசுவது வாடிக்கையானது. முன்னாள் அரசர் டன்கின் தூக்கத்தில் கொல்லப்பட்டது முதல் மக்பெதின் தூக்கம் தொலைந்தது. ஸ்காட்லாந்தின் அரசர் மற்றும் மாபெரும் வீரனான மக்பெத், தன் மனசாட்சியுடன் நடத்தும் போரில் கிட்டத்தட்ட தோல்வியை தழுவி கொண்டிருந்தான். அவன் நிம்மதியாக தூங்கி நாட்கள் பலவாயின.
கணவனின் இந்த நிலைமைக்கும், பல அரசியல் கொலைகளுக்கும் காரணமான லேடி மக்பெத் தீவிரமான உள்ளுணர்வு நெருக்கடியால், தன் கைகளில் எப்போதும் இரத்த வாடை அடிப்பதாக புலம்பத் தொடங்கினாள். எத்தனை முறை சுத்தம் செய்தாலும் இரத்த வாடை போகவில்லை என அரற்றினாள். அதோடு தூக்கத்தில் நாடாகும் வியாதியும் சேர்ந்து கொள்ள அமைதியின்றி தவித்தாள். தினமும் தூக்கத்தில் நடந்து சென்று யாருக்கோ கடிதம் எழுதி அதை உறையிலிட்டு ஒட்டி தன் அலமாரியில் வைத்துவிடுவது வாடிக்கையானது.
நாட்டில் மக்பெதின் நடவடிக்கைகளை பிடிக்காத சில பிரபுக்கள் ஆங்காங்கே கலகம் செய்ய, வீட்டில் லேடி மக்பெதின் மனோ வியாதி தீர்க்க முடியாததாக இருக்க, பாங்கோவின் மகன் பெலீன்சே மறைந்த மன்னரின் மகன் மால்கமுடன் சேர்ந்து தனக்கு எதிராக படை திரட்டுகிறான் என்ற தகவலும் சேர்ந்து மக்பெதை நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்தன.
தன் மன அமைதியையும், தைரியத்தையும் முற்றிலும் இழந்த மக்பெத் மீண்டும் தன் எதிர்காலம் பற்றி அறிய அந்த சூனியகாரிகளை சந்திப்பது என முடிவெடுத்தான்.

ஸ்காட்ட்லண்டின் அரச பதவி எனும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தன்னை தேடி வந்த போதிலும்,   அதை அடைய தீய வழியை தேர்ந்தெடுத்த காரணத்தினால் அதை அனுபவிக்க முடியாத அவல நிலையில் இருந்தனர் அரசனும் அரசியும். இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டும், தன் எதிகாலத்தை அறிந்து அதன் மூலம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியும் அந்த சூனியக்காரிகளை மீண்டும் சந்தித்தான் மக்பெத். அரசனின் வேண்டுகோளுக் கிணங்க மற்றுமொரு மூன்று ஆரூடங்களை சொல்லினர்.

“அரசனே, இயற்கையாக பெண்ணின்  பிரசவத்தில் பிறந்த எவராலும் உனக்கு மரணம் ஏற்படாது”.
“மேலும் பிர்னாம் காடுகள் கூட்டமாக இடம் பெயர்ந்து வரும்போது உனக்கு மரணம் சம்பவிக்கும்”.
“அதற்கு காரணமாக மக்டுப் (Macduff ) என்பவன் இருப்பான்”.
 

இதை கேட்ட மக்பெத், காடுகள் நகர்ந்து வருவதும், பெண் மூலம் பிறக்கா ஒருவனும் நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்பதால் மகிழ்ச்சியோடு அரண்மனை  திரும்பினான். அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி  காத்திருந்தது. தன்  கைகளில் இருந்து வரும் இரத்த வாடையை சகிக்க முடியாமல் அரசி லேடி மக்பெத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி இடியை விட கோரமாக தாக்கியது.

இந்நிலையில் இங்கிலாந்தில், இளவரசர் மால்கம், தளபதி பாங்கோவின் மகன் ப்லீன்சே உடன் சேர்ந்து தனக்கு எதிராக படை திரட்டும் செய்தி வந்து சேர்கிறது. அதற்கு ஆதரவாக இங்கே பிரபு ஒருவர் அரசரின் எதிர்பாளர்களை ஒன்று திரட்டுகிறார் என கேள்விப்பட்டு மிகவும் ஆத்திரம் அடைகிறான் மக்பெத். ராஜதுரோகத்தில் ஈடுபட்ட அந்த பிரபுவை குடும்பத்துடன் கொன்று விடுமாறு ஆணை பிறப்பிக்கிறான். ஆணையை நிறைவேற்றிய வீரர்கள் மீண்டும் வந்து, “அரசே.. மக்டுப் பிரபு தப்பி விட்டார், அவரின்  குடும்பத்தினர் கொல்லபட்டனர் ” என்றனர். மக்டுப் என்ற பெயரை கேட்டவுடன் அரசரின் முகம் ஏன் அப்படி மாறியது என்று விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர் வீரர்கள். தப்பிச்சென்ற மக்டுப் பிரபு, நாட்டின் எல்லையில் படை திரட்டும் இளவரசர் மால்கமுடன் சேர்ந்து கொள்கிறான். தன்  குடும்பத்தை கொன்ற மக்பெதை தன் கைகளால் கொல்வேன்  என சூளுரைக்கிறான்.

இங்கிலாந்த் நாட்டு படைகள் இளவரசர் மால்கமின் ஆணைகிணங்க, தளபதிகள் மக்டுப் மற்றும் ப்லீன்சே தலைமையில் ஸ்காட்ட்லண்டை நோக்கி விரைந்தது. அதை கேள்விப்பட்ட மக்பெத் மாபெரும் படையுடன் அவர்களை  எல்லையில் எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டான். எல்லையில் இரு நாட்டு படைகளும் வீராவேசமாக மோதிக் கொண்டன. போரின் நிகழ்வுகளை தெரிவிக்க வந்த தூதன், அரசன் மக்பெதின் முன் மூச்சு வாங்க நின்றிந்தான். அவனை நோக்கி மன்னர்,

” தூதனே, ஏன்  உன் முகத்தில் இத்தனை பதற்றம்.”

” வீரத்தின் உறைவிடமான எங்கள் அரசனே, அளவில் பெரிய நம் படைகள் மிக சுலபமாக எதிரிகளின் படைகளை தடுத்து நிறுத்தின. ஆனால் !”

“என்ன ஆனால்?” என உறுமினான் மக்பெத்.

” அரசே! தெற்கு எல்லையில் இருந்து நம்முடன் போர் புரிய பிர்னாம் காடுகளே நகர்ந்து வருகின்றன.”

திடுக்கிட்டு திரும்பிய அரசன், வேக வேகமாக அரண்மனையின் உச்சிக்கு சென்று பிர்னாம் காடுகளை உற்று நோக்கினான். தூதன் சொன்னது போல், காடுகளின் மரங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.

மக்டுப்பின் தலைமையிலான ஒரு படை, பிர்னாம் காட்டு மரங்களின் பட்டைகளை பிளந்து முன்னும் பின்னும் கட்டிக்கொண்டு மரங்களோடு மரங்களாக நின்று இருந்தனர். மக்பெதின் படைகள் எல்லையை நோக்கி சென்ற பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கோட்டையை நெருங்கி விட்டனர் . அவர்களை எதிர்க்க கோட்டையில் சொற்ப எண்ணிகையில் தான் வீரர்கள் இருந்தனர். இந்த இக்கட்டை கண நேரத்தில் புரிந்து கொண்ட அரசர், இனி தானே தலைமை தாங்கி நம்மை நோக்கி வரும் மரங்களை மண்ணுக்கு இரையக்குவோம் என கர்ஜித்தான். இயற்கையாக பிறந்த எவன் ஒருவனாலும் தன்னை வெல்ல முடியாது என்பதால், தான் உயிரோடு உள்ள வரை எதிரிகளின் தந்திரங்கள் வெல்லாது என்று உறுதியாக நம்பினான். எண்ணற்ற போரில் தன் வீரத்தால் எதிரிகளை நிலை குலைய செய்த மாவீரன் மக்பெத், இன்று ஆருடத்தின் தயவால் தாம் வென்றுவிடுவோம் என்ற நிலையை கொண்டிருப்பது யாருடைய விதிபயனோ?

அரசரின் தலைமையில் கோட்டை காவல் படையும், மக்டுப்பின் தலைமையிலான படையும் மிக கடுமையாக மோதிகொண்டன. போர்க்களத்தில் அரசன் மக்பெத் மற்றும் மக்டுப் இருவரும் எதிரெதிரே சந்தித்து கொண்டனர். மக்பெதின் வீரத்திற்கு முன் மக்டுப்பின் வீரம் கொஞ்சம் குறைந்தே காணப்பட்டது. பழி வாங்கும் வெறி மட்டுமே பிரதானமாக இருந்தது.

அரசன் மக்டுப்பை பார்த்து, ” வீரனே… உனக்கு இறுதியாக எச்சரிக்கை செய்கிறேன். என் காலில் விழுந்து தோல்வியை ஒப்புக்கொண்டால் உனது உயிர் உனதாகும், இல்லையேல் அது எனதாகும்”.

மக்டுப் கண்களில் வெறி மின்ன, ” கேடு கேட்ட அரசனே, நான் பிறக்கும் போதே தாயின் கருப்பையை பிளந்து பிறந்தவனடா. மூர்க்கம் எனது குணம். உனது தலையை நான் பந்தாடப் போவது உறுதி ” என முழங்கினான்.

இயற்கையான முறையில் பிறவாமல் கருப்பையை அறுத்து ( சிசேரியன் ) எடுக்கப் பட்டவன் என்பதை கேட்டவுடன், மாபெரும் வீரனான மக்பெத்  கோழை ஆனான். கடவுள் தன்னை கொல்ல  அனுப்பிய தூதனிடம் போரிட துணிவில்லாமல் மக்டுப்பினால் கொல்லப்பட்டான் அரசன் மக்பெத். தீய வழியில் செயற்பட்டு எவ்வளவு பெரிய பதவியை நாம் அடைந்தாலும், நம்முள்ளே இருக்கும் மனம் நமக்குரிய தண்டனையை கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகிப்போனது மக்பெதின் வாழ்க்கை.

வெற்றி இளவரசனாக பவனி வந்த வருங்கால ஸ்காட்ட்லண்டின் அரசன் மால்கமுக்கு பரிசாக, மக்பெதின் வெட்டுப்பட்ட தலையை வழங்கினான் மக்டுப். அதற்கு பாராட்டாக தளபதி பதவி வழங்கப்பட்டது. மால்கமின் அரசாட்சி, தளபதிகள் மக்டுப் மற்றும் ப்லீன்சே தலைமையில் நெடுங்காலம் நடந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மக்பெத் (ஷேக்ஸ்பியரின் நாடக கதை)

  1. கதை சொல்லும் முறை அருமை. வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

    — அகிலன்

    1. அருமை Kingலியர் கதையை சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *