பாண் மீது பூசிச் சாப்பிடுகின்ற பட்டரைப் பொருளாக வைத்துக் கதை சொல்ல வேண்டிய தார்மீகக் கடமையின் பொருட்டே நான் உங்களுக்காக எழுத்தில் வடித்திருக்கின்ற இந்தக் கதையும் அறிவுக் கண் திறந்து உங்கள் பார்வைக்கு வருகின்றது
பத்மாவுக்குக் கல்யாணக் கனவுகள் பரவசமூட்டும் இன்ப நினைவலைகளாய் அவள் மனமெங்கும் வியாபித்துப் பொங்கிச் சரிகின்ற நேரம் அவளுக்குக் கல்யாண எழுத்து நடந்து முடிந்த பிற்பாடே இந்தக் கனவு மயக்கம் இப்படிக் கனவுகள் வருவதற்குக் காரண புருஷனாய் வந்து வாய்த்த முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆணை நம்பித் தான் அவளுடைய இந்தக் கனவு நதி உயிரலைகள்
இது அப்படியொன்றும் அவள் நம்பிக் கனவு காண்பது போல் உணர்வு பூர்வமான உயிர்ப் பிரக்ஞையின் ஆதார சங்கதிகளுக்கான திறவு கோலல்ல முழுவதும் அவளை இரை விழுங்கவென்றே இந்தக் கல்யாண விதி எழுதிய பாவக் கணக்கு என்பதையே அறியாத நிலையில் தான் அவள் மனதில் ஓடும் அளப்பரிய இந்தக் கனவு நதி. அவளின் இக் கனவு நாயகனை மையப்படுத்தி அரங்கேறிய கல்யாண எழுத்து விழா அவர்கள் வீட்டில் வெகு அமர்க்களமாக நடந்து முடிந்த பின் சாஸ்திரரீதியாக அவர்களை இணைக்கும் தாலி சூடும் சடங்கு நிறைவேற ஒரு யுகம் பிடித்தது மானுடப் பார்வைக்கு அது வருடம் ஒன்றாகக் கழிந்தாலும் அசுர கதியில் செல்ல மறுக்கிற அவள் கணிப்பின்படி அது யுகமாகவே கழிந்து வருவதாக அவள் உணர்ச்சி நிலை கொள்வாள்
அவள் இருப்பதோ அவன் இருப்புக்கு எட்டாத வெகு தொலைவில் அவன் பார்வையளவில் மட்டுமல்ல மனதாலும் புரிந்து கொள்ள முடியாமல் போன உயிர் சங்கதிகளின் ஒப்பற்ற தரிசன வெளிச்சமாக அவளுடைய அந்தச் சின்னஞ்சிறு கிராமம் மட்டுமல்ல அவள் கூட அப்படித் தான் அவனோ நகரத்துக் களை கொண்ட வாலிப மிடுக்கொடு இருந்தாலும் அவனின் பூர்வீகம் தீவுப் பகுதிதானென்று வீட்டிலே பேச்சு அடிபட்டதை அவளும் கேட்டதாக ஒரு ஞாபகச் சுழல் இந்தச் சுழல்களின் களிப்பேறிய கனவு நதிக்குள் அவள் முழுவதுமாகத் தன் வசமிழந்து மூழ்கி நின்ற நேரத்திலே தான் அந்தக் கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது இது ஒன்றல்ல அவன் கொழும்பில் வேலை பார்த்தபோதே இதற்கு முதற் புள்ளி இட்டுத் தொடங்கிய கை வண்ணம் அவனுடையது தான். உணர்ச்சி பொங்க ஆசை ஆசையாக எத்தனை கடிதங்களை அவன் அனுப்பியிருப்பான் அந்த நாட்களில்.
எல்லாம் வெளிவேஷம். காம வெறியில் மூண்ட ஆசை மயக்கத்தில் அவன் வாய் குழறிப் பிதற்றுவதெல்லாம் வேதம் என்று நம்பி ஏமாந்து போனாளே அந்தப் பேதை. அதற்கு விலையாக அவள் ஒரு காலத்தில் தன்னையே முழுவதுமாக உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணித்து அந்தக் கானலில் எரிந்து சாம்பலாகிப் போன வெறும் நிழலாகத் தான் நிற்கப் போகிறேன் என்பது கூட அறியாதவளாய், அன்பு பெருக்கெடுத்து அவனுக்கு அப்போதைய நிலையில் அவள் எழுதிய உயிர் வார்ப்பான கடிதங்களே ஒரு காவியமாகக் களை கட்டி நிற்கும்.
அந்த நாட்களிலே அவர்கள் வீடே ஒரு கோவில் மாதிரி. அப்பாவோ தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஓர் ஆசிரிய திலகம். உலக அனுபவங்களில் புடம் போடப்பட்டுக் கரை கண்ட மகாமேதை போல ஒளிர்பவர். இந்த ஒளிர்வின் உயிர் பிரதிபலிப்பாய் அவளிலும் மகோன்னதமான பல அக விழிப்புகள். அன்பு நதி வற்றாத புனிதமான கங்கையின் ஓர் ஒளித் தேவதை மாதிரி அவள். அவளின் அம்மாவும் அவள் போல் வெள்ளை உள்ளம் கொண்ட ஓர் அப்பாவிதான். பசியோடு வீட்டிற்கு எவர் வந்தாலும், அன்னமிட்டு உபசரிக்க அவள் தவறுவதில்லை. கோவில் வழிபாடு பூசை புனஸ்காரமென்று தெய்வீகக் களையோடு கூடிய தரிசன ஒளிபட்டு அவர்கள் வீடு சாந்தி நிறைந்த ஒரு கோவிலாகக் களை கட்டி நிற்கும்.
பத்மா சிறுமியாக இருந்த போது அடிக்கடி அவர்கள் வீட்டிற்குக் காவி உடை தரித்த சாமியார்கள் வந்து பசியாறிவிட்டுப் போவார்கள். அவர்கள் நெற்றியில் திருநீறும் கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தரித்து வருவதால் அவர்களைச் சிவனாகவே பாவனை செய்து அம்மா அவர்களுக்குப் பயபக்தியோடு உணவு பரிமாறுவாள். ஒவ்வொரு சமயமும் அவர்கள் வரும் போது வீட்டிலுள்ள அனைவருக்கும் விபூதி வழங்கி ஆசீர்வதிக்கத் தவறுவதில்லை. இப்படித்தான் ஒரு சமயம் ஒரு சாமியார் வீட்டிற்கு வந்த போது அவர்களுக்காகக் கொடுப்பதற்காகத் மந்தரித்த தகடுகள் சிலவற்றை கையோடு எடுத்து வந்திருந்தார். செப்பிலாலான அத் தகட்டில் பஞ்சாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. அதை அணிந்தால் தோஷம் நீங்குவதோடு பல நன்மைகள் விளையும் என்று அவர் கூறியதைக் கேட்டு பத்மாவின் மனதில் ஒரு யோசனையோடு ஓடியது. அவளுக்குக் கணவனாக நிச்சயிக்கப்பட்ட நந்தன் தற்போது மிகவும் கஷ்ட நிலையில் இருக்கின்றான். மிகவும் வறுமைப்பட்ட பின் தங்கிய குடும்ப சூழல் அவனுடையது. பிஸ்கால் ஆபீஸில் மாற்றம் எடுத்து அவன் யாழ்ப்பாணத்துக்குத் தாய் வீட்டோடு வந்து சேர்ந்த நேரம்.
வண்ணார்பண்ணையில் கே கே எஸ் வீதிக்குச் சமீப,மாகப் புறாக் கூடு மாதிரி மிகவும் சிறயதொரு வீட்டில் தான் அவர்கள் குடியிருந்தார்கள். நந்தனின் தகப்பன் நல்லதம்பி பஞ்சமாபாதகங்களுக்கு அஞ்சாத சரியான கிரிமினல் பேர்வழி.. வீட்டிலே ஆட்களை வைத்துச் சுருட்டுத் தொழில் செய்து வந்தாலும் வருமானம் பத்தாத சீரழிஞ்ச குடும்பம். ஒழுங்காக அத் தொழிலை நடத்தாததால் நந்தனின் சொற்ப வருமானத்தை நம்பியே அவர்களின் குடும்பம் உயிர் வாழ்கிறது
பெயருக்குத் தான் அவன் ஒரு அரசாங்க ஊழியன். சம்பளம் என்னவோ அவன் ஒருவனுக்கே வயிறு கழுவப் போதாது. அதுவும் அவனை நம்பிப் பெற்றோருடன் பத்து உயிர்கள் இதற்கே கழுவாய் சுமந்து சாகிற நிலையில் வரும் சீதனப் பணத்தை நம்பி, பத்மாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்தக் கல்யாணக் காட்சி நாடகம் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் அரங்கேற இருந்தது எல்லாம் பாழாய்ப் போன ஒரு விதியின் சாபமாய் அவள் தலையிலேயே வந்து விடிந்தது
இதனாலே நந்தனைப் பொறுத்தவரை உடல் தீண்டிச் சுகம் பெற மட்டும் தான் மனைவி என்ற நினைப்பு ஒன்றைத் தவிர வேறு எதற்காகவும் அவள் இல்லையென்பதே அவனின் வக்கிர மனதிற்கு எட்டிய கொடூர கணிப்பாக இருந்தது. ஆகவே அவனின் அன்பென்பது பத்மாவைப் பொறுத்தவரை நிறைவேற முடியாமல் போன வெறும் கானல் சங்கதியாகவே அவளைத் தோலுரித்துச் சிலுவை சுமக்க வைத்திருக்கிறது
அப்படியொரு நிலையில் அவனால் அவள் பட்ட முதற் காயம். வீட்டிற்கு விருந்தாளியாக வந்த சாமியார் கொடுத்து அருள் வாக்குக் கூறிய அந்தத் தெய்வீகத் தகடு மூலமே அவளை வந்து கருவறுத்து விட்டுப் போனது. . அவன் மனக் கவலையெல்லாம் ஒழிந்து சந்தோஷம் பெற வேண்டுமென்பதற்காக மனதில் களங்கமில்லாமல் தான் ,அதை அவனுக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்தாள்
ஆனால் அதைத் தவறான கண்ணோட்டத்தில் அவன் புரிந்து கொண்டீருப்பது திருமணமான பிற்பாடே அவளுக்குத் தெரிய வந்தது. நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு அவனைக் கரம் பிடித்து அவள் புகுந்த வீட்டிற்கு வரும்போது அவளுக்கான வரவேற்பு வேறு விதமாக இருந்தது. அவளின் அன்பு நிறைவான பண்பு நிலைக்கு ஒத்து வர மறுக்கிற துருவப் போக்கில் அவன் மட்டுமல்ல, அவன் சார்ந்த அந்த வீடே அவளுக்கு எதிராகச் சதி செய்யக் காத்துக் கொண்டிருப்பதாய், அவளுக்கு உறைத்தது..
அதிலும் மனநலம் பாதிக்கப்பட்ட அவனின் தங்கை காரணமாகவே நீண்ட காலமாய் இழுபறியில் கிடந்த அவர்கள் திருமணம் மட்டுமல்ல அது நிகழ்வதற்கான குற்றவாளியாய் அவளை அவன் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கிற மாதிரித் திசை திரும்பிய வாழ்க்கையின் போக்கில் அவள் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த நேரம்.
ஒரு சமயம் அவள் நிம்மதியாகத் தூங்க முடியாமல் போன அந்தக் கரி நாள்.. அவளுக்கு மட்டுமல்ல. நந்தனின் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கு அவளைக் குணமடையச் , ஆயுர்வேத சிகிச்சையின் ஓர் அங்கமாக அன்று இரவு ஏதோ மருந்து கொடுப்பதற்காக வீட்டிலே எல்லோருமே விழித்திருக்க நேர்ந்தது. முக்கியமாக நந்தனின் அம்மாதான் கடும் சிரமத்திற்கு மத்தியில் விழித்திருந்து நந்தனின் தங்கைக்கு மருந்து கொடுத்ததை பத்மா தனக்கே இயல்பான அன்பு பெருக்கெடுத்து ஓடும் கருணை மனதுடன் கவனித்ததை யாரும் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை.
அவள் என்ன செய்தாலும் எவ்வளவுதான் அன்பு மேலோங்கி நற்காரியங்களைச் செய்ய முடிந்தாலும், அவர்களைப் பொறுத்தவரை அது எடுபடுவதில்லை. அவளை குற்றவாளியாக்கிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதொன்றே அவர்களின் நெறி பிறழ்ந்த நடத்தைக் கோளாறாக இருந்தது. நந்தன் பரந்த அன்பு மனம் கொண்ட ஓரு முழு மனிதனாக இருந்திருந்தால் அவளுடைய மாசற்ற பெண்ணியல் சார்பான உன்னத பெருமைகளைக் கட்டிக் காப்பதில் அவனே முதல் ஆளாய் முன்னின்று உழைத்திருப்பான். அவனுக்கு அப்போதைய மனோ நிலையில் தேவைப்பட்டது அவளுடைய வெறும் போக்கான உடல் மட்டும் தான். அவனின் காம வெறியில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் மட்டுமே அவள் என்ற நினைப்பில் அவன் இருக்கும் போது மற்றவர்களை பற்றிக் கேட்கவா வேண்டும்.
மறு நாள் அதிகாலையே பத்மாவுக்கு விழிப்புத் தட்டிற்று. அவள் தூங்கினால் தானே . ஊன வாழ்க்கையின் மாய சங்கதிகளைப் பொறுத்த வரை தூங்கியறியாத, விழிப்பு நிலைத் தவத்தில் அவள் ஒரு தபஸ்வினி மாதிரி அவளைப் போய்…………………………….சீ சொல்லவே மனம் கூசுகிறது இருளின் திரை விலகி அறையை விட்டு அவள் வெளிப்பட்டு வரும் போது மாமியின் முகத்திலேயே விழிக்க நேர்ந்தது. மாமியென்று அவளுக்குத் தான் பெருந்தன்மையான உறவு நினைப்பு. இந்த நினைப்பு அவர்களுக்கு வரவில்லையே. நந்தனிடமே அது எடுபடாமல் அவள் தோற்று நிற்கும் போது அவர்களுக்கு அவள் இன்னும் வேண்டாத விருந்தாளி தானே
மாமியைப் பார்க்க அவளுக்கு மனம் வலித்தது. முழு வறுமை நிலையின் உருக்குலைந்து சிதைந்து போன வெறும் நிழற் கோலம் தான் அவளென்றாலும் பத்மா அவளை மனித ஸ்தானத்திலேயே பார்க்கும் பெருங்குணம் கொண்டிருப்பதால், மனதில் ஈரம் வழியக் கருணை மேலோங்கிய பார்வையை நெகிழ்த்தி அன்பு நதி பெருக்கெடுத்து ஓட அவள் கேட்டாள்
“மாமி! ராத்திரிச் சரியாய் கஷ்டப்பட்டிட்டியள் தானே. நானும் தூங்கேலை”
“போதும் நடிக்காதை உந்த பட்டர் கதையை இஞ்சை சொல்லாதை “
அதென்ன பட்டர் கதை? அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? நான் கூடாதவள் செய்வினை சூனியம் செய்து கேடு விளைவிக்கிறவள் என்று பொருள்படத்தான் மாமியின் இந்த பட்டர் கதை நான் என்றுமே வற்றாத சத்தியமொன்றையே உயிர் வேதமென நம்புகின்ற கங்கை தான் என்பதை அறியாமல் போன மூடர்களுக்கு நான் என் சத்திய இருப்பு நிலை குறித்துப் பேசி விளக்க என்ன இருக்கு பட்டரும் ஜாமும் பாணில் பூசிச் சாப்பிட மட்டுமே என்று நினைத்திருந்தவளுக்கு இதென்ன புது வேதம்? அப்படியென்றால் அவள் எதைச்சொல்ல வருகின்றாள்? உயிர் வேதத்திற்குப் பதிலாகச் சாத்தானே வாய் திறந்த மாதிரி இப்ப இதைக் கேட்டு என் உயிரையல்ல அதனோடு பிறந்த சத்தியத்தையையே வேர் பிடுங்கிக் கழற்றிப் போடுகிற மாதிரி என்னவொரு கொடுமையான வக்கிர நினைப்பு இவர்களுக்கு. நான் அப்படிப்பட்டவளா? சொல்லுங்கோ? ஆரைக் கேட்டு இதை நான் தெளிய வைப்பது? இவர்களை இப்படி அறிவில்லாமல் மனம் போன போக்கில் சிந்திக்க வைத்தது ஆர்? வேறு ஆர்? எல்லாம் அறிவு குழம்பிய நாஅந்தனின் வேலை தான் அவனுக்கே என் மீது ஜென்மப் பகை நான் அவனுக்கு மறு துருவம் மாதிரி அப்பாவின் கிரிமினல் புத்தி தானே அவனுக்கும் வரும் இப்ப அவன் எங்கே?அதோ அறைக்குள் மூடிப் போர்த்துக் கொண்டு என்னவொரு மாயத் தூக்கம் அவனுக்கு
அறை வாசலைக் கடந்து அவள் உள்ளே வந்தவள் அவனையே கூர்ந்து பார்த்தவாறு சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாது வாயடைத்துப் போய் மெளனமாக நின்றிருந்தாள். கட்டிலை நிறைத்துக் கொண்டு ஆஜானுபாகுவானாய் மட்டுமல்ல ஆண்மைக் களை கொண்ட ஒரு கம்பீர புருஷனாகவும் இருக்கிற அவனுள் என்னை உள்ளபடி இனம் கண்டு புரிஞ்சு கொள்ள முடியாமல் போகிற அளவுக்கு மந்தமாகிப் போய்த் துருப்பிடித்த அவன் மனதை எண்ணி இப்போது முதன் முறையாக அவள் பெரும் அழுகையுடன் தலையில் அடித்துத் தன்னையே நொந்து கொள்கிற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து அவன் பார்த்த போது அழுகை நதி குளித்து அவள் நிற்பது ஓர் அவலக் காட்சி போல் , அவன் கண்களில் வெறித்தது
“என்ன காலங்காத்தாலை ஒப்பாரி வைக்கிறாய்?”
“ நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரிப் பொய்யாய் அழேலை “
“அப்ப எதுக்கு அழுறாய்? சொல்லு”
“எல்லாத்தயும் நினைச்சுத்தான் இப்ப வெட்கத்தை விட்டு அழுறன். நீங்கள் என்னை நம்பேலைத் தானே”
“நான் உன்னை எப்படி நம்புறது?தாம்பத்ய உறவுக்கே நீ லாயக்கில்லை உன்னட்டை நிறையக் குறைபாடுகள் இருக்கு என்ரை தங்கைச்சி இப்படியானதே உன்னாலை தானே “
“ எதை வைச்சு இப்படி ஓரு பழி என் மீது?”
“என்ன கதை விடுறாய்? அப்ப எதுக்காம் அந்த அட்சரக் கூடு? சாமியாரிட்டை ஒரு தகடு வாங்கி அனுப்பினியே இதெல்லாம் உன்ரை குறையை மறைக்கத் தானே நீ ஆடிய நாடகம் “
நான் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி அன்பு வற்றிப் போன சாக்கடையிலை பிறந்து வளர்ந்தவளல்ல. பட்டர் பூசி மறைக்கிறதுக்கு நான் அப்ப்டியொன்றும் பொய்யானவளோ தரம் கெட்டவளோ இல்லை. நான் பிறருக்கு எள்ளளவும் மனதால் கூடத் தீங்கு நினைக்காத அதி உத்தமி என்பதை அறிய முடியாமல் போனதாலேயே நீங்கள் மட்டுமல்ல மொத்த வீடுமே என் மீது சேறு வாரிக் கொட்டுது. உங்கடைஅம்மா சொன்னதை நினைச்சால் அப்படியே தீக்குளிச்சுச் சாக வேணும் போலை நான் கிடந்து தவிக்கிறன். உங்கடை தங்கைச்சி இப்படியானதற்குக் காரணம் நானல்ல உங்டை அப்பா தான். அவர் எல்லோரையும் வருத்திச் சேர்த்து வைச்சிருக்கிற மலையளவு பாவ மூட்டைகள் தான் காரணம் என்று உங்கடை அம்மாவிடம் வாய் திறந்து சொல்ல முடியாமல் நான் ஊமையாகிப் போனதற்குக் காரணம் நான் யாருக்கும் தீங்கு நினைக்காத, எல்லோரையும் பேதமின்றி நேசிக்கத் தெரிந்த இப்ப எனக்குள் வற்றாத கங்கை நதியாக ஓடிக் கொண்டிருக்கே அந்தப் பரிசுத்தமான அன்பு வெள்ளம் தான் காரணம். இதை நீங்கள் சரியான கண்ணோட்டதில் புரிஞ்சு கொண்டிருந்தால் செய்வினை செய்கிற சூனியக் காரியாய் என்னை நினைத்து உங்கடை அம்மாவிட்டை இருந்து இந்த பட்டர் கதையே வந்திராதல்லவா? என்ன சொல்லுறியள்?”’
தனது ஒளிவு மறைவற்ற ஆன்மீக சத்தியம் ஒன்றிலேயே புடம் போடப்பட்டு மிளிர்ந்து ஒளி வீசும் உண்மை நிலை குறித்துத் தர்க்கரீதியாகப் பிரகடனப்படுத்தி உணர்ச்சி பொங்க அவள் பேசியதைச் சிரத்தையின்றிக் கேட்டவாறே, தூக்கம் கலையாத குழம்பி வெறித்த முகத்துடன், அவளைப் புரிந்து மறுக்கிற வரட்டுப் பிடிவாதத்தோடு அவனுள் கனத்த அந்த மெளனம் அவன் திருந்த மாட்டான் என்பதையே சாட்சி கொண்டு அவளுக்கு விளக்குவது போல் அது பிடிபட்ட ஏமாற்றத்தினால் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவள் இதற்காக அவனைத் தடி கொண்டு தண்டிக்க நான் யார் என்ற கேள்வியுடன் தன்னைச் சுதாரித்துக் கொண்டவளாய் அறையை விட்டு வெளியே போனாள்.