புலவர் இட்ட சாபம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 6,875 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

கதிரவன் இன்னும் வானத்தில் எழவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவன் தன் செங்கதிர்களைப் பரப்பி உலகத்தில் பவனி வரப் புறப்பட்டுவிடுவான். உலகம் விழித்துக்கொண்டது. இயற்கைத் தேவி மலராலும் புள்ளினங்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் கதிரவனை வரவேற்க ஆயத்தமாக இருக்கிறாள். புல்லுக்கும் பூவுக்கும், மரத்துக்கும், மண்ணுக்கும், புனலுக்கும் புள்ளினத்துக்கும் பொலிவு தரும் நாயகன் அல்லவா அவன்? மக்கள் அனைவரும் துயில் நீங்கி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க முனையப் போகின்றனர். ஆடவரும் மகளிரும் நீராடி இறைவனை வழிப்பட்டு இல்லற ஒழுக்கங்களில் ஈடுபடப் போகின்றனர்.

அந்த மடமங்கையும் என்றும்போல அன்றும் எழுந்தாள். ஆற்றுக்கு நீராடச் சென்றாள். குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மென்கொடி அலசி நடப்பதுபோல நடையிட்டுச் சென்றாள். அவளுடைய நடையில் அன்று ஏதோ ஒன்று இருந்து தடை செய்தது, அவளுக்கே தெரியவில்லை. உலகம் அன்று அவள் கண்முன் களிக்கூத்தாடுவதாகவே தோன்றவில்லை. எங்கும் ஒரே மோன மூட்டம். துயரத்தின் வீக்கம்போல அவளுக்கு ஓர் உணர்ச்சி இருந்தது. ஏன் இப்படிக் குழம்புகிறது உள்ளம்? கண்ணில் படும் காட்சியிலே ஜீவனையே காணேமே!’ என்று அவளும் சிந்தித்தாள்.

அவள் குழப்பத்துக்குத் துணை செய்வதுபோல அவள் தாய் அழைக்கும் குரல் அவள் காதில் விழுந்தது. ஏன் அம்மா இன்று இவ்வளவு அவசரம்? ஆற்றுக்கு வழக்கம் போலப் போகாமல் முன்பே எழுந்து புறப்பட்டுவிட்டாயே?’ என்று தாய் கேட்டாள். அப்போதுதான் அவளுக்குத் தான் புறப்பட்ட நேரம் வழக்கத்துக்கு முந்தியதென்று தெரியவந்தது. அவள் முந்தி எழுந்ததற்கு என்ன காரணம்? குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றும் இல்லை. ஆனாலும் அவளுக்கு விரைவிலே விழிப்பு ஏற்பட்டு விட்டது. ஆற்றிலிருந்து யாராவது வா, வா என்று அழைத்தால் போக வேண்டுமென்று ஒரு வேகம் உண்டாகும். அவளுக்கு அப்படித்தான் இருந்தது. ஆனால், ஆற்றிலிருந்து அழைக்க யார் இருக்கிறார்கள்? அவளுக்குத் தெரிந்த ஒருவரும் இல்லை. அவளுக்குப் பழக்கம் இல்லாத ஒன்று அவளைக் கைகாட்டி, வா, வா என்றுதான் அழைத்திருக்கவேண்டும். அது உவகையோடு வந்த அழைப்பு அன்று. ஏனெனில், அவள் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டவளைப்போலத்தான் வேகமாகப் புறப்பட்டாள்; ஆனால் அந்த வேகத்தில் கிளர்ச்சி இல்லை மலர்ச்சி இல்லை. யாரோ பிடித்து உந்த அதை மீற முடியாமல் செல்பவளைப் போலவே அவள் நடந்தாள். தாய்சொல்வது காதில் விழுந்தும் விடை சொல்லாமலே போனாள், .

ஆற்றங்கரையை வந்து அடைந்தாள். ஆறு அவளிடம் பேச முடிந்திருந்தால், “திரும்பிப் போ” என்று சொல்லியிருக்கும். நாள்தோறும் வந்து தன்னோடு கலந்து பழகும் அந்த மங்கையிடம் ஆற்றுக்கு அன்பு இருப்பது இயற்கை. ஆற்றிலே இறங்கிவிட்டால் மற்றவர்களைப் போலவா அவள் குளிப்பாள்? நீரரமங்கையைப் போலக் குதித்து நீந்திக் களித்து விளையாடுவாள். அவளுடைய விளையாட்டுக்கு இடமாகவும் துணையாகவும் இருக்கும் ஆற்றுக்கு அவள் அழகும் பெருமையும் நன்றாகத் தெரியும்.

இன்று ஆறு களிக்கவில்லை. அவள் மெல்லத் துறையினுள் இறங்கினாள். நீரில் காலை வைத்தவுடன் திடுக்கிட்டு வைத்த காலை எடுத்தாள்; ஒன்றும் இல்லை; ஏதோ ஒரு சிறு குச்சி அங்கே ஒதுங்கியிருந்தது. ஏதோ நினைப்பாக இறங்கினவள் அது காலில் பட்டவுடன் திடுக்கிட்டுப்போனாள். ஒருகால் ஆறுதான் வேறு வழி இல்லாமல் இப்படி எச்சரிக்கை செய்ததோ என்னவோ! தன்னை அச்சுறுத்தியது ஒரு சிறு குச்சி என்பதை அவள் அறிந்தவுடன் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அதை எடுத்து வீசி எறிந்தாள்.

நீராடப் புகுந்தாள். ஆடையைக் கசக்கி உடம்பைத் தேய்த்து நீராடினாள். நீருள் அமிழ்ந்தும் தாவியும் குதித்தும் விளையாடினாள் சிறிது ஆற்றின் வேகத்திலே மிதந்துபோய் எழுந்தாள்.

இப்படி நீராடிக்கொண்டிருக்கையில் எதிரே ஆற்று நீரில் ஒரு மாவிலைக் கொத்து மிதந்து வந்தது. இலைகள் சில மேலே மிதந்தன; சில நீருள் மறைந்திருந்தன. அருகில் வர வர அது வெறும் இலைக் கொத்தாகத் தோன்றவில்லை. ஆம், அந்தக் கொத்தில் ஒரு மாங்காயும் இருந்தது. அது கண்ணிலே பட்டவுடன் நீராடும் மட மகளின் நாவில் நீர் சுரந்தது. மெல்ல அதன் அருகே சென்று சட்டென்று எடுத்தாள். இலைகள் அகலமாகத் தளதளவென்று இருந்தன. அந்தக் காயோ தனியாக ஒரு மணம் வீசியது. “நாம் இவ்வளவு முன்னேரத்தில் ஆற்றுக்கு வந்த பயனை இதோ கண்டுவிட்டோமே!” என்று அவள் எண்ணினாள். கையில் எடுத்த மாங்கொத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். பார்ப்பதற்கே அழகாக இருந்தது மாவிலைக் கொத்து.

மாங்காயைத் தனியே பறித்து இலைக்கொத்தைக் கரையின்மேல் வீசி எறிந்தாள். அதற்குள் அவளுக்குச் சிறிய குழந்தையைப்போல ஆவல் தோன்றியது; மாங்காயைச் சுவைத்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல்தான். காலை நேரத்தில் தன்னையே தேடிவந்தது போல் வந்து கைப்பட்ட அதைத் தின்பதில் என்ன தவறு? அதைக் கடித்தாள். அதன் நறுமணம் நன்றாகத் தெரிந்தது. தே மாங்காய்; அதாவது இனிப்பான இனத்தைச் சேர்ந்தது அது; காயாகத் தின்றாலே நன்றாக இருப்பது. கடித்துச் சுவைத்துச் சுவைத்துத் தின்று கொண்டிருந்தாள்.

ஏதோ ஆளரவம் கேட்டது. மாங்காய்ச் சுவையில் உலகையே மறந்து நின்ற பெண் நிமிர்ந்து நோக்கினாள். ஆற்றங்கரையில் யாரோ சிலர் வந்துகொண்டிருந்தனர். அவர்களுடைய பேச்சில் சினம் ஒலித்தது. “யார் அங்கே?” என்று அதட்டும் குரல் கேட்டது. அவர்கள் நீராடும் துறையை அணுகிக்கொண்டிருந்தனர்; அருகிலே வந்துவிட்டார்கள்.

“யார் நீ?”

”ஏன்?” என்று கேட்டாள் அவள்.

“அது என்ன?” என்று அவர்கள் வினவினார்கள்.

“தெரியவில்லையா? மாங்காய்தான்.”

“ஏது?”

“கிடைத்தது.”

“எங்கே?”

“இங்கேதான்.”

வந்தவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கரை மேலே கிடந்த மாவிலைக் கொத்து அவர்கள் கண்ணில் பட்டது. அதை ஒருவன் எடுத்தான்.

“இது இங்கே எப்படி வந்தது?” என்று கேட்டான் அவன்.

“மாங்காய் வந்ததுபோல அதுவும் வந்தது” என்றாள் அவள்.

“மாங்காயாவது, வரவாவது ! இது அரண்மனைத் தோட்டத்து மாங்காய், அதுவும் காவல் மரத்துக் காய். இதை நீ தொட்டதே தவறு ; அதோடு துணிச்சலாகத் தின்கிறாய். வா, அரசனிடம். நீ திருடி வந்திருக்கலாம்; அல்லது உன் காதலன் திருடிக்கொண்டு வந்து தந்திருக்கலாம்.”

“என்ன, வாய்க்கு வந்ததைப் பேசுகிறீர்கள்?” என்று சீறிய பெண் புலிபோல அவள் கேட்டாள்.

“அந்தக் கோபமெல்லாம் உன்னிடம் இருக்கட்டும். வா, அம்மா வா. அரசனிடம் வந்து உன் நாடகத்தை நடத்து” என்று சொல்லி அந்த முரடர்கள் அவளை அழைத்துப் போனர்கள்.


2

சேரநாட்டுப் பகுதியை ஆண்ட சிற்றரசன் நன்னன். மற்ற அரசர்களுக்கும் அவனுக்கும் பலவகையில் வேறுபாடு உண்டு. தமிழின்பத்தை நுகர, அவனுக்கு உள்ளம் இல்லை; புலவர் பாடும் புகழைக் கேட்க அவனுக்குக் காதில்லை. பகைவர் மகளிர் அழுகையைக் கேட்டு மகிழும் கல் நெஞ்சுடையவன். அந்த மகளிருடைய கூந்தலை மழித்து அதைக் கயிறாகத் திரிக்கச் செய்து அதை வண்டி மாட்டுக்கு முக்கணங் கயிறாகப் பயன்படுத்தும் கொடியவன்.” .

பழங்காலத்துத் தமிழ் மன்னர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களில் காவல் மரம் என்பதும் ஒன்று. ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு காவல் மரம் உண்டு. ஆலயங்களில் தல விருட்சத்தைப் பாதுகாத்து வழிபடுவதுபோல அந்த மரத்தைப் போற்றி வளர்த்து வழிபடுவது மன்னர் வழக்கம். பகைவரோடு போர் செய்து வெற்றி கண்டால் பகைவருடைய முரசை எடுத்துக் கொள்வதும் காவல் மரத்தை அழிப்பதும் பழைய காலத்து மரபு.

நன்னனுக்குக் காவல் மரமாக இருந்தது மா. அவனுடைய தோட்டத்தில் அது இருந்தது. யாரும் அதனை அணுக இயலாது. ஆண்டுதோறும் அதில் கனியும் முதல் கனியை நன்னன் தன் குலதெய்வத்துக்கு நிவேதித்து உண்பான். ஆற்றங்கரையிலே இருந்தது காவல் தோட்டம்.

அந்த ஆண்டு, மரம் நன்றாகப் பூத்திருந்தது. ஆற்றோரமாக இருந்த கிளையில் ஒரு பெரிய காய், காய்த்திருந்தது. கடவுட் பூசைக்கு உரியது அந்தக் காய் என்று குறித்து வைத்திருந்தனர் காவலாளர். அன்று காலையில் வந்து பார்க்கையில் காயைக் காணவில்லை. அவர்கள் குழம்பினர்கள். தங்கள் காவல். வீணயிற்றென்று மறுகினார்கள். அரசனுக்கு என்ன விடை சொல்வதென்று அஞ்சினார்கள். எங்கே போயிருக்கும் என்று ஆராயப் புறப்பட்டார்கள். அவர்கள் ஆராய்ச்சியில் அகப்பட்டாள் முன்சொன்ன மங்கை, நல்லாள்.

”உள்ளதைச் சொல்லிவிடு” என்று அவளிடம் காவலாளர் கூறினர்.

”ஆற்றோடு வந்தது; எடுத்துத் தின்றேன்” என்றாள் அவள்.

”இல்லை, இல்லை. யாரோ இதைத் திருட்டுத் தனமாகப் பறித்துக் கொண்டுவந்து உனக்குக் கொடுத்திருக்கிறார்கள். கள்வன் இன்னனொன்று சொல். உன்னை விட்டு விடுகிருேம்.”

”அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”

“அப்படியானல் நீதான் கள்வியா?”

“கள்வியா! ஆற்றிலே வந்த காயை எடுப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா? கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டச் செய்வது தவறா?”

”கைக்கு எட்டினதெல்லாம் வாய்க்கு எட்டுவதில்லை என்பது உனக்குத் தெரியாது போலும்!” என்று ஒருவன் ஏளனமாகப் பேசினான்.

அவள் மேலே பேசவில்லை. அன்று காலையில் ஆற்றுக்குப் புறப்படும்போது தாய் அழைத்ததும், ஆற்றில் ஒரு கோல் தடுத்ததும் அவள் நினைவுக்கு வந்தன. அவளுடன் இளமை தொடங்கிப் பழகின ஆறு இந்தப் பழியைச் சுமத்தவா அவளை அழைத்தது? அதற்குத் தான் அவ்வளவு விரைவாய் ஆற்றுக்கு வந்தாளா ? காவல் மரத்தின் பெருமையும் அருமையும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் செய்தது குற்றமானால் அறிந்து செய்ததல்லவே! மாங்காய் இன்ன மரத்தைச் சார்ந்ததென்று தெரிந்துகொள்ள அடையாளம் ஒன்றும் இல்லையே! அப்படி இருக்க அதை எடுத்ததிலும் தின்றதிலும் என்ன பிழை இருக்கிறது? அவள் இப்படி என்ன என்னவோ சிந்தனையுள் ஆழ்ந்தாள். அவள் முகம் வாடியது. காவலரைப் பின்தொடர்ந்து நடந்தாள்.


3

நன்னன் காதில் செய்தி விழுந்தது. உள்ளது உள்ளபடியே விழவில்லை. ’காவல் மாமரத்துக் காயை ஒரு பெண் பறித்துத் தின்றாள்’ என்ற அளவிலே அவன் கேட்டான். ”பெண்ணா அத்தகைய அரக்கியும் இந்த நாட்டில் இருக்கிறாளா? பகைவர் அணுகுவதற்கு அரிய அந்த மரத்திலிருந்தா அவள் காயைப் பறித்தாள்? காவலர் என்ன செய்தனர்? தூங்கினர்களா?’ என்று படபடத்துக் கேள்விமேல் கேள்வியை விசினன். “இதோ அவளை அழைத்துக் கொண்டு காவலாளரே வந்துவிட்டார்கள்’ என்ற பதில்தான் கிடைத்தது. –

ஈர ஆடையுடன் வந்தாள் அவள். நெஞ்சில் ஈர மில்லாத காவலரைத் தொடர்ந்து வந்து நின்ருள். “இவளா காவல்மரத்தின் பெருமையைக் குலைத்தவள்?” என்று கண் சிவக்க, மீசை துடிக்க, உறுமினன் அரசன்.

“ஆம். இவள்தான் அந்தக் காயைத் தின்ருள்.” “தின்ருளா? நஞ்சைத் தின்பதும் அதைத் தின் பதும் ஒன்று என்பதை இந்தப் பேதை அறியவில் லையோ? இவள் எப்படி அதைப் பறித்தாள்?’

யாரோ ஒருவன் அதைக் களவு செய்துகொண்டு வந்து கொடுத்திருக்கிருன். அதைப் பெற்று ஆற்றங் கரையிலே தின்றுகொண்டிருந்தாள்.’

“அப்படித்தான?” என்று நன்னன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

அவள் உடம்பில் ஒரு நடுக்கம் உண்டாயிற்று. ஈர ஆடையை நெடு நேரமாக உடுத்தியிருந்ததால் அல்ல; கேட்ட வார்த்தைகளை அப்படியே நம்பும் அந்தக் கொடிய அரசனது கேள்வி அவளை உலுக்கியது.

“அரசே ஆற்றில் நீராடினேன்; மிதந்து வந்த காயை எடுத்துத் தின்றேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்’ என்று மெல்லிய குரலில் அவள் மொழிந் தாள். – – r

அது எப்படி மிதந்து வரும்? காற்ரு அடித்தது ? குரங்கு பறித்துப் போட்டதா? மரத்தில் நேற்றுவரையில் இருந்த காய் இன்று உனக்காக ஆற்றில் தானே விழுந்து உன் கையில் ஏறியதோ ? உன்மேல். அதற்கு அத்தனை காதலோ?”

காவலர் சத்தம் போடாமல் உள்ளே கிளுகிளுத்னர்.

‘அரசே, நான் நீராடிக்கொண்டிருந்தேன் என் பதை என் ஆடையே உணர்த்தும். மாங்காய்க்காக மானத்தைப் பறி கொடுக்கும் இயல்பு என்னிடம் இல்லை. உண்மையைக் கூறிவிட்டேன். அறத்திற்கும் உண்மைக்கும் இடம் இருந்தால் என்மேல் சுமந்த பழி நீங்கட்டும்’ என்று சிறிது தைரியம் பெற்றுக் கூறினாள் அவள்.

அரசன் சில அமைச்சர்களை அழைத்துவரச் செய்தான். வேறு சில முதியவர்களையும் அழைத்தான். புலவர் சிலர் வந்தனர்.

ஊர் முழுவதும் இந்தச் செய்தி பரவியது. அரண் மனை வாயிலில் பெருங் கூட்டம் கூடியது. – அரசன் அமைச்சர்களிடமும் பிறரிடமும் செய்தி யைச் சொன்னன். “காவல் மரத்துக்கு இழுக்கு உண் டாக்குவதும் கடவுள் உருவத்தைச் சிதைப்பதும் கொடிய குற்றங்கள். பகைவர்கள் இம்மரத்தை அணு கலாம் என்று நினைப்பதற்கே அஞ்சுவார்கள். அதன் காயை இந்தப் பேதை மகள் பறித்து உண்டாள். இந்தக் குற்றம் மிகப் பெரிது. இன்று இதைக் கவனிக் காமல் விட்டால் காவல்மரத்தின் மதிப்பே போய்விடும். நம் குடியில் வழிவழி வந்த மன்னர் காவல் மரத்தைக் கண்ணில் மணிபோல, உடம்பில் உயிர்போலப் பாதுகாத்து வந்தனர். அவர்களை அடியொற்றி அரசு செலுத்தும் நாம் அந்த மரபைக் காப்பாற்றவேண்டும்.”

அமைச்சர்களிற் பலர் அரசன் போன போக்கே செல்லுகிறவர்கள். மலையின்மேல் கடல் ஏறுமா?” என்றால், “அரசர் ஆணை இருந்தால் ஏறும்” என்று சொல்லித் தாளம் போடுபவர்கள். அவர்கள், “மன்னர் பிரான் திருவுள்ளத்தில் நினைப்பது சரிதான்” என்றார்கள்.

ஆனால் முதியவராக இருந்த அவைக்களப் புலவர், “அரசே, நான் சொல்லுவதற்குச் சற்றுச் செவி சாய்க்க வேண்டும்” என்றார்.

“என்ன?” என்று மிடுக்காக அவரைப் பார்த்தான் நன்னன்.

“இந்தப் பெண்ணைப் பார்த்தால் குற்றம் செய்பவ ளாகத் தோன்றவில்லை. இவள் சொல்வது உண்மை. யாகத்தான் இருக்க வேண்டும். கட்டுக் காவலுக்குள் இருக்கும் மரத்தை அணுகிக் காயைப் பறிப்பதற்கு, மிகுதியான சாமர்த்தியம் வேண்டும். பகைவர்ே. அணுகுவது அரிது என்று அரசர்பிரான் சொல்லும் போது, இந்த மெல்லியல் எப்படி அணுக முடியும்? ஒரு சிறு மாங்காய்க்காக அரச தண்டனையை ஏற்றுக் கொள்ள யாரேனும் முன் வருவார்களா ? இவற்றை. யெல்லாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.”

புலவர் கூறியதை நன்னன் அலட்சியமாகவே கேட்டான். அப்படியானல் இவள் பறிக்கவில்லை; இவளோடு சேர்ந்த கள்வன் ஒருவனும் உண்டு என்று சொல்லுகிறீர்களா?’ என்று விவிைன்ை. –

“இல்லை, இல்லை; இவள் குற்றம் செய்தவள். அல்லள் என்று சொல்லுகிறேன்.”

“அது எப்படிச் சொல்லலாம்? இவள் அழகிய பெண்ணுக இருக்கிரு ளென்பதற்காகக் குற்றத்தை மறந்துவிடலாமா? இவள் செய்த குற்றத்துக்கு முன் இவள் அழகும் இளமையும் நில்லா. இவள் துணி வைத்தான் நாம் நினைக்கவேண்டும்.”

அரசே, மற்றவர்கள் குற்றம் செய்ததாகத் தெரிந்தாலே பன்முறை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இளம்பிள்ளைகளும் மங்கையரும் முதியவரும் குற்றம் செய்ததாக விரைவிலே முடிவு கட்டக்கூடாது. ‘ குற்றம் செய்தவள் இவள்தான் என்பதில் ஐயமே இல்லை. அதைப்பற்றிய விவாதத்துக்கும் இடம் இல்லை. இவளுக்குரிய தண்டனையைத்தான் நாம் நிச்சயிக்க வேண்டும் ‘ என்று அரசன் கூறிய போது அங்கு இருந்த முதியோர் அஞ்சிப் பெருமூச்சு.

‘தண்டனையைப் பற்றிக்கூட ஐயம் இல்லை. அரச குலத்தின் உயிராகிய காவல் மரத்தை வெட்டிய தற்குச் சமானமான குற்றம் இது. இதற்குரிய தண்டனை சாதாரணமாக இருக்க முடியாது. எது கடுமையான தண்டனையோ அதைத்தான் இதற்கு விதிக்க வேண்டும். ஆம், கொலைத் தண்டனைதான் இதற்கு ஏற்றது’ என்று அரசன் தீர்ப்பு அளித்தான். முதியவர்கள் கண்களை மூடிக்கொண்டார்கள். பழி சுமத்தப்பட்ட பெண் ஆ! என்று அரற்றிக் கீழே விழுந்தாள். அரசன் எழுந்து சென்றுவிட்டான்.


4

கொலைத் தண்டனையை இன்னும் நிறைவேற்றவில்லை. அதற்குள் அரசனுடைய கோபத்தைத் தணித்து அத் தண்டனையை மாற்றப் பலர் முயன்றார்கள். மக்கள் யாவரும் ஒரு முகமாக அரசன் செய்கையை வெறுத்தனர். ‘பெண் என்ருல் பேயும் இரங்குமே! இந்த அரசன் பேயினும் கொடியவனாக இருக்கிறானே!’ என்று அழுங்கினர். அறங்கூற வையத்துப் பெரியோர் அரசனிடம் சென்று பேசினர். அவன் இம்மியும் இரங்கவில்லை. தண்டனையை நீக்க முடியாதென்பதை உணர்ந்த அவர்கள் கொலைத் தண்டனைக்கு மாற்றாக ஏதாவது செய்து பார்க்கலாமென்று ஆராய்ந்தார்கள்.

கொலைத் தண்டனை பெற்றவர்களை மீட்கவேண்டுமானால், குற்றவாளிகளின் நிறைக்கு ஏற்ற பொன் தண்டமாக இறுத்தால் மீட்சி கிடைக்கும். பெரியோர்கள் அந்தப் பெண்ணின் தந்தை, சுற்றத்தார். ஆகியவர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவே, அவர்கள் பொன்னைத் தொகுத்தனர். அந்தப் பெண்ணின் நிறையைத் தெரிந்து அதற்கு ஏற்ற பொன்னைக் கொண்டு அவளைப்போல ஒரு பாவை செய்வித்தார்கள். அதைக் கொண்டு அரசன் முன் வைத்தார்கள் பெரியோர், “அரசே, கொலைத் தண்டனை பெற்றவருடைய நிறைக்குத் தக்க பொன்கொண்டு அந்தத் தண்டனையை மாற்றுதல் வழி வழி வந்த வழக்கம். பெண்ணின் குற்றம் அவள் அறிந்து செய்ததன்று. ஆகவே, இந்தப் பாவையை ஏற்றுக்கொண்டு அவளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க வேண்டும்” என்று எடுத்துச் சொன்னர்கள்.

“இந்தப் பொன்பாவை அவள் தின்ற மாங்காயை மீட்டும் உமிழுமா?” என்று இழிவு தொனிக்கக் கேட்டான் அரசன்.

“அந்தப் பெண்ணின் உயிர்கூட அந்தக் காயைத் தர முடியாதே!” என்றார் அவையத்தார்.

அந்த உயிரை வாங்கினால் இனி இத்தகைய குற்றம் நடவாது!” என்று கோபத்தோடு பேசினன் நன்னன்.

“இந்தப் பாவையை ஏற்றுத் தண்டனையை மாற்றினால் நாடு அரசர்பிரானைப் போற்றும். மன்னர் பிரானுடைய கருணையின் உயர்வை அறிந்து குடிமக்கள் வாழ்த்துவார்கள்”.

“இல்லாவிட்டால்?”

“அதை நாங்கள் சொல்வானேன்? புலவர்களைப் பாதுகாக்கும் பெருங்குடியில் வந்த பெண் அவள்”.

“புலவர்கள் இச்சகம் பேச, மகிழ்ந்த குடி போலும்”.

“அரசே, புலவர்களை இழித்துப் பேசுவது தமிழ் மகனுக்கு அழகன்று”.

“குற்றம் செய்த குடிக்கு வேண்டியவர்களென்று நீங்கள் சொன்னிர்களே!”.

“அது அல்ல, நாங்கள் சொன்னது; புலவர்கள் இந்த நாட்டுக்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல. அவர்களுக்கு யாதும் ஊர்; யாவரும் கேளிர். அவர்கள் உள்ளம் புண்படும் செயல் இது. இதன் விளைவு அரசர் பிரானது புகழுக்கு மாசாக முடியும்.”

அதற்குள் இன்னும் சிலர் அங்கே வந்தார்கள். பொற் பாவையைத் தண்டமாக இறுப்பதோடு யானைகளையும் கொடுப்பதாக அவர்கள் சொன்னர்கள்; புலவர்களும் சான்ருேர்களும் சேர்ந்து இதை ஏற்பாடு செய்தார்கள். நன்னன் கொடியவனென்பதை அறிந்தவர்களாகையால், வழக்கம்போலப் பொற்பாவை கொடுப்பதோடு, மேலும் அபராதம் செலுத்த முன் வந்தார்கள். புலவர் பெற்ற யானைகளைத் தொகுத்தார்கள். புதிய பரிசிலும் பெற்றுக் கொணர்ந்தார்கள். எண்பத்தொரு யானைகள் சேர்ந்தன.

பெண் கொலைக்கு உலகமே அஞ்சியது. புலவர் உலகம் மிக அஞ்சியது. எப்படியாவது அதை மாற்ற வேண்டுமென்று நல்லிசைச் சான்ருேர் முனைந்து நின்றனர்.

நன்னனை அணுகினர் புலவர் சிலர். “அரசே, பொற்பாவை அவள் குற்றத்துக்கு ஈடு: எண்பத் தொரு யானைகள் மன்னர் பிரானது கருணைக்குக் காணிக்கை” என்று சொன்னர்கள்.

“இதென்ன விளையாட்டு? குற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசன் கடமை. குற்றவாளியின் சார் பில் நிற்பவர்கள் குற்றத்திற்குத் துணை செய்பவர் களாவார்கள். புலவர்களானாலும் சரி, அவையத்தா ரானலும் சரி. அவர்கள் தங்கள் பெருமைக்கு இழுக் கைத் தேடிக்கொள்கிருர்கள். உலகமே எதிர்த்து நின்ருலும் இந்தத் தண்டனையை மாற்ற மாட்டேன். பொன்னைக் கண்டும் யான்ையைக் கண்டும் மயங்கிவிட நான் என்ன சிறு பிள்ளையா?” -அரசன் எழுந்து போய்விட்டான்.

“அட படுபாவி!” என்றே ஒவ்வொருவர் வாயும் முணுமுணுத்தது.

புலவர் உள்ளம் மறுக, சான்ருேர் முகம் வாட, குடிமக்கள் புலம்ப, நன்னன் பெண் கொலை செய்து விட்டான்; தண்டனையை நிறைவேற்றினன். அன்று முதல் அவனைப் பழி சூழ்ந்தது.

பெண்ணுககுப் பரிந்து எழுந்த புலவர் உலகம் அதற்குப் பழி வாங்க நினைந்தது. “இனி இவன் முகத்தையும் பாரோம். இவனைப் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டோம். அப்படி இவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமானல் கடுஞ் சொல்லால் இவன் பழியைப் பாடுவோம். இவன் மரபிலே பிறந்தவர்களையும் எமக் குப் பின்வரும் புலவர் பாடா தொழிக! பெண் கொலை புரிந்த நன்னனுக்கு இனி உய்வில்லை. உலகில் பழி சேரும்; மறுமையில் நரகந்தான் கிடைக்கும்” என்று கூடிப் பேசினர்; “நம்முடைய செந்நாவை நன்னனைப் பாடி மாசுபடுத்த மாட்டோம்” என்று விரதம் பூண்டனர்.


5

இரக்கம் இன்றிப் பெண் கொலை செய்த கொடியவன், போலி நீதி பேசிய புல்லன், புலவர் சாபத்துக் குட்பட்ட பாவி என்று உலகம் நன்னனைக் கூறத் தொடங்கியது. அவன் அதிகக் காலம் வாழவில்லை. சில ஆண்டுகளுக்குள் கோசர் என்ற வீரர் அந்நாட்டின்மேல் படையெடுத்து நன்னனைக் கொன்று, அவன் மாமரத்தையும் வெட்டினர். அவன் உலகி லிருந்து போனாலும் அவன் பழி போகவில்லை. யாரையாவது வைவதாக இருந்தால், “நன்னனுக்குக் கிடைத்த நரகம் உனக்குக் கிடைக்கட்டும்” என்று வைதனர் தமிழ் மக்கள்.

நன்னன் செய்த கொலைப்பாவம் அவனுக்கு நரகமும் பழியும் வாங்கித் தந்தது. பெரிதல்ல; அவன் பரம்பரையிலே பிறந்தவர்களையும் அது தாக்கியது.

இளவிச்சிக்கோ என்பவன் நன்னன் வழி வந்த வன். அவனும் இளங்கண்டீரக்கோ என்பவனும் ஓர் இடத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருந்தலைச் சாத்தனர் என்ற புலவர் அங்கே சென்ருர். சென்று, இளங்கண்டீரக்கோவை மாத்திரம் தழுவி ஆசி கூறி அமர்ந்தார். இளவிச்சிக்கோ, தன்னை அவர் தழுவாததற்குக் காரணம் தெரியாமல் விழித் தான். “நான் என்ன குறை உடையேன்?’ என்று அவன் புலவரைக் கேட்டான்.

“இவன் பரம்பரையாகப் புலவரைப் பாதுகாப்பவன். வீட்டிலே ஆடவர் இல்லாமற் போனலும், மகளிர் வந்தவரை உபசரித்துப் பரிசில் தந்து புகழ் பெறுவது இவன் குலம். அதனால் இவனைத் தழுவினேன். உன் குலத்தைப் பற்றி நான் என்ன சொல்வது? பெண் கொலை புரிந்த நன்னனின் வழி வந்தவன் நீ. புலவரை அவமதிப்பதில் சிறந்த குடியிலே பிறந்தவன். புலவர்கள் புகாத வீடு உங்கள் வீடு. அதனால் உங்களை எங்கள் கூட்டத்தார் பாடுவதை விட்டுவிட்டார்கள்” என்று அவர் சொல்வதைக் கேட்டு இடிவிழுந்து போனன் இளவரசன்.

நன்னன் பூண்ட பழியும் புலவர் இட்ட சாபமும் நன்னனோடு நில்லாமல் அவன் பரம்பரையையும் சுட்டன.

இலக்கிய ஆதாரங்கள்

இந்தக் கதைக்கு மூலமானது, குறுந்தொகை 292-ஆம் பாட்டு.

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற் ருென்பது களிற்ருெ டவள்நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீ இயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரிற் றுஞ்சலோ இலளே.

நன்னனுடைய காவல் மரமாகிய மாவைக் கோசர் வெட்டினர் என்பது குறுந்தொகை 73-ஆம் பாடலால் தெளிவாகும்.

மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ;
அழியல் வாழி தோழி, நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

இந்த இரண்டு பாடல்களும் பரணர் பாடியவை.

பெருந்தலைச் சாத்தனுர் பாடியது, புறநானுற்றில் 151-ஆம் பாடலாக உள்ளது.

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
புன்றலை மடப்பிடி பரிசி லாகப்
பெண்டிருந் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டி ரக்கோன் ஆகலின் நன்றும்
முயங்க லான்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.

இதன் உரையில், ‘நன்னன் மருகனன்றியும் என்றதற்கு, பெண் கொலே புரிந்த நன்னன்போல, வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை என்ற மையின் அதுவும் வரைவதற்கு ஒரு காரணமாக உரைப்பாரும் உளர்’ என்று உரையாசிரியர் எழுதியுள்ளார்

– எல்லாம் தமிழ், எட்டாம் பதிப்பு: ஜூன் 1959, அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “புலவர் இட்ட சாபம்

  1. தங்கள் வலைத்தளம் சிறப்பாக இருக்கிறது. காலம் கடந்த கதைகளையும் வழங்கும் தங்கள் பணி பாராட்டுக்குரியது.

    1. உங்களுடைய ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *