றிஸானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 8,806 
 

பூக்களால் ஒரு புகைப்படம். பளீர்னு மனசுக்குள் மின்னல் வாசனை ப்ளாஷ்; ஆகுகின்றது. ரொமான்ஸ் ஸ்பரிசித்த வார்த்தைகளில் காதலின் மோட்சம.; தபூ சங்கரின் தாக்கம் நிறையவே தெரிகின்றது. அவரது கொஞ்சல் வழிக்கல்வியிலிருந்து பூக்களால் ஒரு புகைப்படம் சற்று மாறுபட்டது. டீன் ஏஜ்காரர்கள் தீவிர ரசிகர்களாகியிருப்பார்கள். துண்டுக் கவிதைகளின் தொகுப்பாக சுவாசித்துக் கொண்டிருக்கும் பூக்களால் ஒரு புகைப்படம் தந்த முஜாரத் ஒரு முடிவோடுதானிருந்தான். கவிதை எழுதுபவர்களின் பெருங் கனவாக இருக்கின்ற தொகுதி போடல் எனும் வெளியில் மிதந்து கொண்டிருந்த முஜாரத் தான் எழுதியவற்றுள் ரசிக்கத் தக்கவையென ருசிக்கத் தக்கவையென தான் தீர்மானித்த சின்னச்சின்ன கவிதைகளை ஒன்றாக்கி பூக்களால் ஒரு புகைப்படம் என்ற கவிதைத் தொகுதியினைத் தந்து சுமார் ரெண்டு வருஷத்தின் பின்னே இரண்டாவதாக ஒரு தொகுதியினை கொண்டு வரத் தீர்மானித்தக் கொண்டான்.

அவனைத் தீர்மானிக்க வைத்தது

றிசானா

நம்ம மூதூர் றிசானா நாபீக்

கடந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்று ஜனவரி ஒன்பதாம் திகதி சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷரீஆவின் படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மௌத்தாகிப் போன றிசானாவின் மரணம் பிரபஞ்ச வெளிகளில் ஏற்படுத்திய அதிர்வும் சலனங்களும் மிக்க மகத்துவமானவை. ஒரு ரத்த சொந்தத்தினை, ஒரு மகளை, பேத்தியை, சகோதரியை இழந்த துக்கத்தில் முழு மனித சமூகமும் இழவு கொண்டாடிக் கொண்டிருந்தன அந்த கறுப்பு நிமிடங்களில்.

‘றிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சேதி வந்ததும் நாங்களெல்லாம் அப்படியே இடிஞ்சி போயிட்டோம். மூனு நாளா ஊட்டுல அடுப்பு எரியல….சாப்பிட முடியல்ல……தூங்க முடியல……அழுது தீத்துட்டோம். அல்லாஹ்தான் அந்தப் புள்ளக்கு சொர்க்கத்தக் கொடுக்கோனும் என உடைந்து போன குரலில் வார்த்தைகள் தடுமாற சொன்னது ஹொரவப்பத்தானயைச் சேர்ந்த பாருக் ஹாஜியார்.

இப்படி கோடிக்கணக்கான மக்களின் கண்ணீரையும், துயரங்களையும் பிரார்த்தனைகளையும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மீளவும் திரும்பி வராத எண்ணத்தோடு மண்ணறைக்கு யாத்திரை செய்த றிசானாவின் செந்நிற வீதியில் அப்படியே செய்வதறியாது கண்ணீரால் கோடுகள் வரைந்த முஜாரத்

ஒரு கவிஞன்

கலைஞர்களுக்கு இயல்பாகவே இருந்து கொண்டிருக்கின்ற முட்டைக் கோதிலான மனசுதான் இவனுக்கும். றிசானாவின் மரணம் ஏனோ அவனை இதயத்தின் அடித்தட்டு வரை இம்சை பண்ணியதில்…..

அந்த அகால மரணத்தின் நிமிடங்களும் றிசானாவும் அவளது அழுகைகளும் அவள் தண்டனைக்கு முன் யாருமே இல்லாத நிலையில் பார்த்துப் பார்த்து பேசிய தவாத்மி சுவர்களும் தனக்கு எப்படியாவது விடுதலை கிடைக்கும் என்ற நப்பாசையுடன் கதைத்து காலத்தின் முன் தோற்று மரணத்தினை அறுவடை செய்த கனங்களும், வெளிச்சத்துக்கு வராத அவளது பாலைவனக் கனவுகளும், இதோ உன் கழுத்து வெள்ளியிலே தக தகத்துக் கொண்டிருக்கும் பளிங்கு வாளினால் வெட்டப்படப் போகின்றது என மரண தண்டனை அறிவிக்கப்பட்ட பின் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி அச்சத்தால் துடித்தடங்கிப் போன இதய வியர்வைகளும் கழுத்தறுபட்டு உயிரடங்க முன் அந்தச் சிறுமியின் கண்களில் பிம்பங்களாய் வீழ்ந்த சொல்லாத கதைகளின் ஒளித் தொகுப்புகளும், மின்னாமலேயே கருகிப் போன அந்த ஒற்றை நட்சத்திரத்தின் இருள் படர்ந்த ஆகாயமும் பூக்காமலேயே குறைப் பிரசவமாகிப் போன ஒரு ரோஜாச் செடியின் விபத்தும்.

கவிதைகளினூடாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என முஜாரத் முடிவு செய்து கொண்டபோது….

இதெல்லாம் சரிப்பட்டு வருமா

இதுவும் பிந்திய இரவின் கனவுதான் மற்றும் தீக்குளிக்கும் ஆண் மரம் என ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுப்புகளை எண்ணற்ற சிக்கல்களுக்கு மத்தியில் கொண்டு வந்தும் இன்னும் நம்பிக்கையோடு பேனா என்கின்ற கவிதை இதழினை இரு மாதத்துக்கொரு முறை எங்களது கைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பெரோஸ்கான் அனுபவ ரீதியாகக் கேட்டான்.

‘ஏன் இந்தக் கேள்வி’

‘இல்ல முஜாரத் றிசானாவின் மரணம் சம்பந்தமான கவிதைகளை நீ மட்டும் எழுதுறதுன்னா பரவாயில்ல. ஒவ்வொரு கவிஞர்கிட்டயுமிருந்து ஒரு கவிதை எடுக்குறதாச் சொல்லுற. ரொம்ப ரொம்பக் கஷ்டம்….இதோ கவிதை தர்ரேம்பாங்க.. ஆனா இன்னிக்கு நாளைக்குன்னு இழு இழுன்னு இழுத்து சிலரு தருவாங்க….சிலர் தரவே மாட்டாங்க.’

‘சச்சச்சச்;;சே’

‘அப்புறம் முழுக்க முழுக்க ஒன்ட சொந்தக்காசப் போட்டு புத்தகத்த அடிக்கனும் அப்புறமா அதுக்கு விழா வைக்கனும். அதுக்கு வேறயா செலவு பண்ணனும். அழைப்பிதழ் கொடுக்கனும். அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட எல்லாரும் வருவாங்கன்னும் எதிர்பார்க்கவும் முடியாது. நம்ம ஊரத் தெரியுந்தானே. புத்தக வெளியீடுன்னா ஒரு பத்து இல்லாட்டா பதினஞ்சு பேர் வருவாங்க. எப்பவும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வர்ர அதே முகங்கள்தான்; இதுக்கும் வருவாங்க…புதுசா யாரும் வந்து கிழிக்கப் போறதுல்ல… எல்லாம் யோசிச்சு பார்த்திட்டு அப்புறமா புத்தகம் அடிக்கிறதா இல்லையான்னு முடிவெடு’.

ஏற்கெனவே ரெண்டு புத்தகம் போட்டு அனுபவப்பட்டவனாச்சே….

‘எனக்கும் எல்லாம் தெரியும் பெரோஸ். எனக்கு பூரண நம்பிக்கையிருக்கு. மத்தவங்க சப்போர்ட் பண்ணுவாங்களா இல்லையான்னு சந்தேகம்தான். ஆனா கவிஞர்கள்….அப்புறம் எழுதுறவங்க எல்லோரும் இதுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நம்புறன். ஏன்னா இது என்ட சொந்தப் புத்தகமில்ல. பொதுவான புத்தகம். அதுவும் நம்ம றிசானா சம்பந்தமா வாறதால அனைவரும் கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவாங்க’.

‘அதெல்லாம் விடு. பொருளாதாரம் ஒரு புறமிருக்க நீ நெனக்குற மாதிரி எல்லாக் கவிஞர்களும் கவித தருவாங்களா. கிண்ணியா அமீரலி, ஏ.எம்.எம்.அலி, நஸ்புல்லா, ஹஸன்ஜீ, கிண்ணியா சபருள்ளா, கஹ்ஹார், வீ.எம்.அன்ஸார், ஜெனீரா, தௌபீக், பாயிஸா அலி, கோர்ட் நியாஸ், றிஸ்வான், மூதூர் முகைதீன், கலைமேகம் இப்ராகீம், நாஸிக் மஜீத், இஹ்றாஸ் நஸார், நம்ம மண்ணைச் சேர்ந்த கவிஞர்களிட்டயிருந்து கவிதைகள் எடுப்பம். அது போல வெளி நபர்களுக்கும் கவிதைகள் எடுத்தம்னா புத்தகத்த பூரணப்படுத்திரலாம்’.

‘புத்தகம் போடுறதுன்னு முடிவெடுத்திட்ட அப்புறம் செலவெல்லாம் எப்படி’

‘வேற தேவைக்காக ஒரு நாப்பதாயிரம் காசு சேத்து வச்சிருக்கேன். அத எடுத்து புத்தகத்த அடிப்போம். றிசானாட மரணம் கட்டாயம் இலக்கிய ரீதியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதுதான் என்ட நோக்கம். நிச்சயம் நம்ம இலக்கியவாதிகள் பெரிய்ய்ய்ய சப்போர்ட் இதுக்குத் தருவாங்கன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு’.

‘ஓக்கே முஜாரத் இது ரொம்பப் பெரிய பணி அதிலும் குறிப்பா நம்ம இலக்கியவாதிங்க மேல எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்ல. ஏன்னா கடந்த காலங்கல்ல ஏராளமான அனுபவங்கள் எனக்கிருக்கு. சும்மா பேருக்கு அப்படி இப்படின்னு பீத்துவாங்க. கடைசில என்னடான்னா எல்லாத்தையும் சைபரால நம்ம ஆட்கள் பெருக்கிடுவாங்க’.

‘எல்லாத்தையும் பொஸிட்டிவா பார்ப்பம் பெரோஸ். எவ்வளவு குயிக்கா இந்தத் தொகுதிய கொண்டு வர முடியுமோ அந்தளவு குயிக்கா கொண்டு வரனும். இல்லன்னா றிசானாட மரணம் தொடர்பான இந்த கவிதத் தொகுதிய வெளியிடுறதுல எந்த அர்த்தமும் இல்லாமல் போயிடும்’.

‘அப்ப கவிதத் தொகுதிய கொண்டு வாரதுன்னு நூறு வீதம் தீர்மானிச்சுட்ட அப்படித்தானே’

‘ஆமா பெரோஸ் முடிவே பண்ணிட்டேன். அதுல எந்த மாற்றமும் கெடயாது’.

‘தீர்மானிச்சுட்ட……அப்புறம் ஒன் இஷ்டம்;……அது சரி தெனமும் வேலைக்கும் போகனும் எப்படி நாள் ஒதுக்கி கவிதைகளை சேகரிக்கப் போற’

‘செய்ய வழியில்ல. லீவு போடத்தான் வேனும். வேறு என்ன செய்ய’

என்ன நடந்தாலும் தொழிலுக்கு லீவே போடாத விடாக்கண்டனாச்சே இவன். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலைக்குப் போவானே. கேட்டால் ஞாயிற்றுக் கிழமைகளில் டபுள் சம்பளம் என்பான். இப்ப என்னடான்னா இந்தக் கவிதைத் தொகுதிக்காக லீவு போடப் போறேன்கிறான்.

அதுசரி கவிதை என்பது அனைத்து விடயங்களையும் விட அவனுக்கு சீரியஸானதாகவோ அல்லது முதலிடத்திலோ இருக்கலாம் தம் பெண்டாட்டிகளைவிட சிலருக்கு இலக்கியம் பெரிசாகிவிடுது போல.

‘ஒங்கட தொகுதிழக்கு என்ன பெயர் வக்கறதா உத்தேசம’;.

‘றிசானாவும் எதுவும் பேசாத தவாத்மி சுவர்களும்’

‘நல்லாயிருக்கு’

‘மனசுக்கு ஒடனே பட்டது. அதான் அதையே வச்சுட்டன்’.

‘என்னால் முடிஞ்ச ஒதவிய நான் பண்றேன’;.

‘தேங்ஸ்’.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக்கின் நினைவாக கவிதை தொகுதியொன்று வெளிவரவிருக்கின்றது. அதற்காக கவிஞர்களிடமிருந்து தரமான கவிதைகள் கோரப்படுகின்றன. எதிர்வரும்……………..திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள் என டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டொட் கிண்ணியா டொட் நெட் வலைத்தளத்திலும் பத்திரிகைகளிலும் துண்டுச் செய்திகள் கவிதைகள் கோர

வெளியிடங்களிலிருந்து நிறைய கவிதைகள் தபாலிலும் ஈமெய்லிலும் வந்து குவிந்திருந்தன.

‘நம்ம மண் சார்ந்த கவிஞர்கள் கவிதைகள் கூடுதலா வந்தா நல்லாயிருக்கும்னு நெனக்கிறேன்’.

‘நம்ம கவிஞர்களுக்கு அறிவிச்சி ரெண்டு கெழமயாயிட்டு. இன்னும் ஒருத்தர் கூட கவிதை தரயில்ல. அதான் ஆரம்பத்திலேயே ஒங்கிட்ட நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன்’.

‘கிட்டத்தட்ட நம்ம ஊர்ல இருக்கிற எல்லாக் கவிஞர்களின்ட வீட்டுக்கும் நேராப் போய் சொல்லிட்டு வந்திருக்கேன். இந்தா இன்னிக்கு தாறேன் நாளைக்குத் தாரேன்னு இன்னி வரைக்கும் சொல்லிட்டே இருக்காங்க. ஆனா கவிதைங்கள தார மாதிரியே இல்ல’. முஜாரத்தின் குரலில் வேதனை அப்பட்டமாகப் படர்த்திருந்தது.

‘பரவாயில்ல……..புத்தகம் வெளியிடுறதா முடிவெடுத்திட்டோம். எக்காரணம் கொண்டும் இதிலேர்ந்து பின் வாங்குறதா இல்ல நிச்சயம் இன்ஷா அல்லாஹ் இந்தப் புத்தகம் வெளி வரும்’. உறுதி தொனித்தது முஜாரத்தின் குரலில்.

பின் வந்த நாட்களில் ஊரில் உள்ள எல்லாக் கவிஞர்களின் வீடுகளுக்கும் துவிச்சக்கரவண்டியில் பாதம் வலிக்க பெடல் மிதித்து கவிதைகள் கோரி பல விசிட்டுகளை அடித்துக் கொண்டிருந்த அதே வேளை அடிக்கடி தனது டயலொக் செல்லினை ப்ரீபெய்ட் செய்து அம்பதுகளையும் நூறுகளையும் அழித்துக் கொண்டிருந்தான் அவன்.

அலுத்துவிட்டது முஜாரத்துக்கு.

கவிஞர்கள் என தமை பறை சாற்றிக் கொண்டிருந்த பல வார்த்தைத் தகர்ப்பாளர்களுக்கு அல்லது சொற்கள் சேகரிப்பாளர்களுக்கு அடிக்கடி அலைபேசியில் கவிதை தாருங்கள் எனக் கேட்கும் நேரங்களில்.

‘எப்படியும் இன்னிக்குத் தந்துர்ரன்’.

‘அரைவாசி எழுதிட்டன் இன்னும் கொஞ்சம்தான் இருக்கு இந்தா முடிஞ்சிரும்’.

‘சரியான வேலைப்பளு எப்படியும் இன்னிக்கு எழுதிடுவேன்னு நம்புறன்’.

‘இனி நீங்க வீட்டுக்கு வரத் தேவையில்ல கொம்;பியூட்டர் டைப் பண்ணி ஈமெயில்ல இன்னிக்கு இரவு அனுப்பி வச்சிர்ரன்’.

இப்படி பலரின் பந்தாக்களுக்கு மத்தியில் இறுதியாக எப்படியோ முஜாரத்தின் முழு முயற்சியில் பெரும்பாலும் கவிதைகளில் கைசேர்ந்தும் அவன் மண் சார்ந்த பெண் கவிதாயினிகள் கடைசிவரை கவிதை தராமல் அவனை ரொம்பவும் ஏமாற்றிவிட்டார்கள்.

‘ஆனாலும் இது உங்க பங்ஷனில்ல…..இது எங்க பங்ஷன் றிசானா நம்ம சகோதரி. அந்த சகோதரியின் மரணத்தை ஆவணப்படுத்த நீங்க எடுத்த இந்த முயற்சி கட்டாயம் மெச்சப்படனும். இந்த புத்தக வெளியீட்டுக்கு நாங்கல்லாம் முழு ஆதரவு தருவோம’;.

இது பல ஊர்க்கவிஞர்களும் ஊரிலே தம்மைத் தாமே புத்திஜீவிகள் என அடையாளப் படுத்திக் கொண்டவர்களும் முஜாரத்திடம் சொன்னபோது ரொம்பவும் சந்தோஷப்பட்டான் அவன்.

மொத்தமாக முப்பத்தியிரண்டு கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய றிசானாவும் எதுவும் போசாத தவாத்மி சுவர்களும் எனும் கவிதைத் தொகுதியில் ஒரு ஏழு அல்லது எட்டுக்கவிதைகள் தவிர மீதி அனைத்துக் கவிதைகளும் உளள10ர்க் கவிஞர்களால் எழுதப்பட்டவை.

உள்ள10ர்க்கவிஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதில் முஜாரத் உறுதியாகவிருந்ததன் விளைவு இது. புத்தகம் அச்சடிக்கப்பட்டு வரும் வரை முஜாரத் அதுபற்றி தனது தர்ம பத்தினிக்கு தெரியப்படுத்தியிருக்கவில்லை;. அப்படி தெரியப்படுத்திவிருந்தால்

‘சும்மா ஏன் காசக் கரியாக்கப் போறீங்க. புத்தகமும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம்’ என வழமையாக பெரும்பாலான இலக்கியவாதிகளின் மனைவிமார்கள் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஆக்ரோஷமாக செய்யும் எதிர்ப்பார்ப்பாட்டத்தில் இறங்கி முஜாரத்தினை வெற்றி கொண்டு

அப்புறம்……

றிசானாவும் எதுவும் பேசாத தவாத்மி சுவர்களும் அன்றாடக் கனவுகளின் பட்டியலில் ஒன்றாக சேர்ந்து எதுவும் பேசாமலே போயிருக்கும்.

புத்தகம் வந்த பின்னர்தான் முஜாரத்தின் மனைவிக்கு ஏதோ ஓர் தேவைக்காக வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த அருமந்த பணத்தினை எடுத்து இப்படி ஓர் கவிதைத் தொகுதியை தனது வீட்டுத் தலைவன் வெளிக் கொணர்ந்திருக்கிறார் என்ற விடயம் தெரிய வந்தபோது அவள் எதுவித எதிர்வினைகளையும் தோற்றுவிக்கவில்லை.

இனி எதிர்த்துதான் என் செய்ய என எண்ணி மனசுக்குள் அடங்கிக் கொண்டு மௌனமாயிருந்திருப்பாளோ….?

இப்படி ஏகப்பட்ட கஷ்;டங்களுக்கும் பணப் பிரச்சினைகளுக்கும் மத்தியில் கொழும்பு கோட்டையிலிருந்து சீனக்குடா புகையிரத நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட முன்னூறு புத்தகங்களடங்கிய பார்சலை நல்ல நேரம் உதவிக்குன்னு ஒருவர் இருந்தானே. பெரோஷ்;கான் முஜாரத் வீட்டுக்கு கெண்டு வந்து சேர்ந்திருந்தான்.

சராசரியாக முன்னூறு அளவிலான அழைப்பிதழ்களை அடித்து கோவித்துக்கொள்வார்களே என்ற பயத்தில் அனைத்து அழைப்பிதழ்களையும் வீடு வீடாகக் கொண்டு முஜாரத் பெரோஷோடு சேர்ந்து விழாவுக்கு வரும்படி சொல்லி விநியோகம் செய்திருந்தான்.

மூதூர் திருகோணமலை போன்ற இடங்களுக்கு நண்பன் சஜாதீன் மோட்டார் சைக்கிளில் அவனோடு சேர்ந்து கொண்டு ராப்பகலாக அழைப்பிதழ்களை கொடுத்திருந்தான்.

றிசானா நபீக்கின் மரணச் சேதி கேட்டு மாரிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கத்தியவர்கள் ஆகக்குறைந்தது கவிஞர்கள், இலக்கியவாதிகள் என நம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் இந்தப் புத்தக விழாவினை மெய்ப்பிப்பார்கள் என்ற நம்பிக்கையில்…..

நம்பிக்கைதானே வாழ்க்கை

‘ஆனால் அதிகம் வைத்துவிடாதே பின்னர் அதுவே ஏமாற்றங்களைத் தந்து மன உளைச்சலுக்கு வழிகோவிவிடும’;.

‘அப்படியொன்றும் ஆகாது’.

‘இதுவும் நம்பிக்கையின் உச்சக்கட்டம’.

‘என் நம்பிக்கை வீண் போகாது’.

‘ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழியுண்டு. என்னன்னு சொல்லட்டுமா’

‘சொல்லு’.

‘நேரம் வரும்போது சொல்லுறன’;.

‘அப்பாடா வியர்த்து வழியுது’.

‘இல்லாம வீடு வீடா வோட்டு கேக்குற அரசியல்வாதி மாதிரி அழைப்பிதழ் கொடுக்க ஏறி எறங்குனா வேர்க்காம குளிருமா என்ன’.

‘இன்னிக்கு மட்டும்தானே நாளைக்கு புத்தக வெளியீட்டு விழா. அப்புறம் எல்லாமே ஓஞ்சி போயிடும்’.

நாளை கிண்ணியா பொது நூலகத்தில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்காக கிண்ணியா நகரசபையிடம் மண்டப அனுமதி எடுத்து அப்புறம் அம்ப்ளிபயர் பூஃபர் என்று எடுக்கப் போனால் சனிக்கிழமையாதலால் நகரசபை மூடியிருந்தது. அம்ப்ளிபயர் இத்யாதிகளை எடுக்க அதற்குப் பொறுப்பாகவிருந்தவனைப் போய்ப் பார்த்தால் அவனும் அந்தா இந்தா என்று இழு இழுவென இழுத்து தேவைப்பட்ட அம்ப்ளிபயர் பொக்ஸ் எல்லாம் எடுத்தால்.

கேபிள் மிஸ்ஸிங்.

என்னதான் நகர சபையோ…..பொறுப்பில்லாதவர்கள். நாளைய வெளியீட்டு விழாவுக்காக ஒற்றையாளாக நின்று கஷ்;டப்பட்டுக் கொண்டிருந்த முஜாரத்தின் மனசுக்குள் முட்களின் கீறல்.

எப்படியோ எங்கேயோ தேடி கேபிள் எடுத்தாகிவிட்டது. மண்டபத்தில் பேசுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஸ்டான்ட்… அட அதுவுமில்லையா.. தொலைஞ்சது போ அந்தா அது மகளிர் கல்லூரியில் இருக்குதாம்.

கேள்விப்பட்டதும் அன்றிரவு மகளிர் கல்லூரி அதிபரின் அனுமதியுடன் ஸ்கூலுக்குப் போய் முதிரை மரத்தில் செய்யப்பட்ட அந்த ஸ்டான்டை சத்தியமாகத் தூக்க முடியாது.

‘சேர் ஒரு கை பிடிங்க’.

தன்னோடு கூட வந்திருந்த அந்த சேரிடம் சொல்ல இருவருமாகச் சேர்ந்து அந்த ஸ்டான்டினை அலேக்காக்கத் தூக்கி நாபியினுடைய த்ரீவீலில் ஏற்றி அதனை பொது நூலக மண்டபத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்து முஜாரத் வீடு திரும்ப மணி இரவு பத்தாகிவிட்டது.

பெரோஸ் தவிர கூட மாட உதவி செய்ய எவருமிருக்கவில்லை முஜாரத்துக்கு. ரொம்ப ரொம்பக் கவலையில் ரம்பத்தால் அறுபட்ட முஜாரத் நாளைய நிகழ்வு நன்றாக நிகழ வேண்டுமே என ஆயிரத்தோராவது தடவை அல்லாஹ்வினை பிரார்த்தித்துக் கொண்டான்.

இன்று றிசானாவும் எதுவும் போசா தவாத்மி சுவர்களும் எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கிராஅத்தினை தொடர்ந்து தலைமை உரை இடம்பெறவிருக்கின்றது. தலைமை உரை ஆற்றுவதற்காக தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய பீட விரிவுரையாளர் ஹபீபுல்லா மௌலவியை அழைக்கின்றோம் என நீட்டு ஜிப்பா அணிந்து தனது கலைஞத்தனத்தினை எப்படியாவது வெளிக்காட்ட வேண்டும் என்ற வேட்கையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இளங்கவி நஸ்புல்லா அழைத்தபோது மணி சரியாக பத்து பதினைந்து.

அந்த மண்டபத்தில் இருண்டு போன முகத்தோடு சூழ்நிலைக்குள் இறுக்கமாகிக் கிடந்த நூலின் தொகுப்பாளர் முஜாரத் மற்றும் மொத்தமாக ஒரு இருபது பேர்தான் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

காலை ஒன்பது மணிக்கே ஆரம்பமாகவிருந்த விழா அழைக்கப்பட்டவர்களில் நான்கைந்து பேரே வந்திருந்ததன் காரணமாக நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு இப்போதுதான் சோகையாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

சராசரியாக முன்னூறு பேர் வரைல அழைக்கப்பட்டிருந்தும் வெறுமனே இருபதே இருபது பேர்தான் மண்டபத்தின் ஆரம்ப இரு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தர்கள். வேறு ஆட்கள் விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்ல. இலக்கயவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் எழுத்தாக்குபவர்கள் முறையாக அழைக்கப்பட்டும் வந்திருக்கவில்லை.

அதைவிட மகா கொடுமை புத்தகத்தில் கவிதை எழுதியிருக்கும் பெரும்பாலான உள்ளுர்;க் கவிஞர்கள் கூட வந்திருக்கவில்லை.

றிசானாவுக்காக புத்தகத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்த ஒரு கவிஞர் காலையில் ‘டவுனில் முக்கியமா ஒரு கூட்டம் இருக்கு என்னால இந்த பங்ஷனுக்கு வர முடியாது என செல்லில் ரொம்பச் சாதாரணமாக சொல்லியிருந்தார்.

இன்னுமோர் கவிஞர்

‘வெரி சொரி நான் இன்னிக்கு கொழும்பு போறேன்’.

இதுவாவது பரவாயில்லை…..பலர் எதுவும் சொல்லாமலேயே விழாவுக்கு வராமல் தொலைந்து போயிருந்தனர்.

எங்கயாவது போங்க.

மனசுக்குள் சிதைந்து போன முஜாரத் மரத்துப் போனான் ஆனால் இன்றைய மன மரத்தலினை, ஏமாற்றத்தினை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து போகமாட்டான்.

மறக்கத்தான் முடியுமா என்ன

அவனவன் வலி அவனுக்கு

சிலருக்கு சாதாரணமான அதே விடயங்கள் பலருக்கு சீரியஸ்

எவ்வளவு தூரம் எதிர்பார்த்து பத்தும் இருபதும் என கொஞ்சம் கொஞ்சமாய் குருவி மாதிரி சேர்த்த காசை அப்படியே புத்தகத்துக்காக செலவழித்து கடந்த நான்கைந்து நாட்களாக தர்மபத்தினியின் முறைக்கும் கண்ணகளினைப் பார்க்க முடியாமல் தவியோ தவி எனத் தவித்து, வீடு வீடாய்ச் சென்று கவிதைகள் பெற்றுக்கொண்டு மூன்று நாட்களாய் ஒழுகியடிக்கும் வியர்வையில் முங்;கி முழித்தவாறு அழைப்பிதழ்கள் கொடுத்து பாதங்கள் வலித்து இந்தா இறுதியில் மனசு வலிக்கின்றது.

ச்சே..

ஆகக் குறைந்தது இதில் எழுதியிருக்கின்றவர்களாவது வந்திருக்கலாம்

ஏன் வரவில்லை.

காசு கொடுத்து புத்தகம் வாங்க வேண்டுமென்ற பயமா இல்ல பொறாமையா இல்ல காழ்ப்புணர்ச்சியா இல்லன்னா இவன்ட பங்ஷனுக்கெல்லாம் நாம போறதா என்கிற ஹெஜமனியா அதுவும் இல்லன்னா வேறென்னவாக இருக்க முடியும்.

றிசானா நபீக்கின் மரண தண்டனைச் சேதி கேட்டு அழுது வெடித்ததாக, தூக்கமில்லாமல் துடித்ததாக அப்புறம் தொண்டைக்குள்ள சோறு தண்ணி இறங்கவில்லை என்பதாக என்னன்னமெல்லாமோ சொன்னாங்களே அதெல்லாம் சும்மா புளுகா…? காசு கொடுத்து புத்தகம் வாங்க வேண்டாம் சும்மா விழாவுக்கு வந்து அந்த சகோதரியின் மரணத்தை ஆவணமாக்கும் முயற்சியில் ஒரு பார்வையாளராகவாவது மாறியிருக்கலாம்.

பிந்திய செய்தியாக முஜாரத்தின் காதில் விழுந்தது. சில கவிஞர்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு சமூகமளிக்காததன் காரணம் விழாவில் அவர்களுக்கு ஆய்வுரையோ, வாழ்த்துரையோ இல்லன்னா சிறப்புரையோ எதுவும் கொடுக்காததனாலாகும்.

அவனவன் தன்னை ஹீரோவாகக் காட்டிக் கொள்வதில்தான் எவ்வளவு சிறு பிள்ளைத் தனமாக நடந்துகொள்கிறார்கள். பெரியவர்களாகின்றோம் என்று நினைத்துக் கொண்டு எநதளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு சிறு பிள்ளைகளாக தங்கள் நடத்தைகளை தர்க்க ரீதிகளுக்கப்பால் நின்று தர்க்கம் செய்துகொள்ளுகிறார்கள்.

விழாவுக்கு வரும் அனைவருக்கும் நிகழ்ச்சிகள் என்றால் விடிந்து போய்விடும் விழா முடிய.

கவிதைகளின் உலகம் ஒன்று என்றாலும் கவிஞர்களின் உலகம் வௌ;வேறானதாகவும், இலக்கியவாதிகள் ஒன்றானாலும் அவர்களது இலக்கிய உலகம் வௌ;வேறானதாகவுமே இற்றைவரைக்கும் இருந்து வருகின்றது. அனுபவங்கள் கற்றுத் தருகின்ற பாடங்களின் கனதி அளவீடு செய்ய முடியாது. அவைகளின் தேறிய பெறுமானம் மிக்க மகத்தானது.

தலைக்குள் பாரமாக உணர்ந்தான் முஜாரத். ஏற்கனவே வந்திருந்த ஒரு இருபது பேரோடு இப்போது சின்ன வயதுப் பையன்கள் இருவர் புதிதாகச் சேர்ந்தபோது பிரதம அதிதியின் முழு நீள விரிவுரையில் ஒரு நாற்பது நிமிடங்கள் கொலை செய்யப்பட்டு…….அந்த பிரதம அதிதி பார்வையாளர்களை தனது மாணவர்களாய் நினைத்துக் கொண்டு கவிதைகள் என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற சிலபசினை விரிவுரையாற்றிய கொடுமை அது இந்தக் கணக்கில் வராததால் அது பற்றி இங்கு நீட்டி முழக்குவதற்கான தேவை யோசிக்க முஜாரத்துக்கு இல்லை. அதிதிகள் என்று சொல்லப்படுவோர் அல்லது பட்டங்கள் பார்த்து பதவிகள் பார்த்து காசு பார்த்து அதிதிகளாக விழாக்களுக்கு அழைக்கப்படுவோர் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது தொடர்பில் லே. தமிழ்வாணன் சுகி சிவம் உதய மூர்த்தி அல்லது சாலமன் பாப்பையா ஏதாவது புத்தகம் எழுதியிருந்தால் அவற்றினை அவர்களுக்கு சிபாரிசு பண்ணலாமே…..?

அதிலும் அந்தப் பிரம அதிதி பேச்சு வாக்கில் ‘இந்த கிண்ணியா மண்ணில் அண்ணல் சாலிஹூக்குப் பின் சொல்லும் படியாக கவிஞர்கள் யாரும் உருவாகவில்லை என்றும் கவிதை மற்றும் சிறு கதைத் தொகுதிகள் இது வரை வெளி வரவில்லை’ என்றும் தகவலேதும் தெரியாமல் வாங்கு வாங்கு என மேடையில் முழங்கிக் கொண்டிருந்ததினைப் பார்த்து முஜாரத்துள் உருவான எரிச்சல் அது வேறு ரகம்.

‘இனி நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக றிசானாவும் எதுவும் பேசாத தவாத்மி சுவர்களும் எனும் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாளர் முஜாரத் அவர்களை அழைக்கின்றோம:; என்கின்ற நஸ்புல்லாஹ்வின் அழைப்பில் துயரத்தோடு குந்திக் கொண்டிருந்த முஜாரத் சோகையாக உரையாற்றி அங்கிருந்த அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டிய கட்டாயமும் கடப்பாடும் அந்த நேரத்தில் அவனுக்கிருந்த காரணம் தனித்தனியாக சொல்லாவிட்டால் பின்னர் நான் என்ன அவ்வளவு கேவலமாகிவிட்டேனா என பின்னர் முகத்துக்கு முன்னாலேயே சீறிவிடுவார்கள். இதெல்லாம் கடந்தகால அனுபவங்கள்.

அன்றிரவு பெரோஸ்கான் செல்லிடபேசியில் ‘எப்படி முஜாரத் ஒரு இருபத்தஞ்சு புத்தகம் மட்டுல மேடைல குடுத்தோமே எப்படி ஏதச்சும் ஆச்சா.’

………..

‘ஏன் மச்சான் பேசாம இருக்க’

‘அதெல்லாம் ஒன்னுமில்ல பெரோஸ் கைக்குக் கெடச்ச கவர்கள்ல நூறு ரூபாதான் அதிகம் இருந்திச்சி. அதவிடக்கொடும என்னன்னா வெறும் கவரும் அஞ்சாறு அதுக்குள்ள இருந்திச்சி. முடிவே எடுத்திட்டேன் பெரோஸ்’.

‘என்னன்னு’

‘இனி இந்தக் கவிதையும் வேணாம். கவிதைத் தொகுதியும் வேண்டாம்…இதுவே கடைசித் தொகுதியாயிருக்கட்டும்’;.

பெரோஸ் ஆங்கிலத்தில் உள்ள அந்தப் பழமொழியை கடைசி வரை முஜாரத்துக்குச் சொல்லவேயில்லை.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *