அந்த இரயில் வண்டி மைசூரிலிருந்து ஹூப்ளி சென்றுகொண்டிருந்தது.
முன்னிரவில் புறப்பட்ட வண்டி அடுத்த நாள் காலைதான் செல்லுமிடம் சேரும். நானும் எனது மனைவியும் ஒரு அலுவலக நண்பரின் திருமணத்திற்குச் சிர்சி (Sirsi) சென்றுகொண்டிருந்தோம்… அலுவலக நண்பர்களின் திருமணங்களுக்குச் செல்வது என்பது ஒரு கடமையாகவே கொண்டிருந்த காலம்.. அந்தப் பழக்கதினால்தானோ என்னவோ இன்றும் வேலை ஓய்வு பெற்று பலவருடங்கள் பின்னும், என்னைவிட மிக வயது குறைந்தவர்கள் நண்பர்களாகத் தொடர்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக மைசூரிலும் ஒரு முன்னாள் அலுவலக நண்பரின் திருமணம்.. இரண்டையும் இணைத்து கிளம்பியாகிவிட்டது….. மனைவியுடன்… முதல் கட்ட மைசூர் திருமணம் முடித்து சிர்சியில் நடக்கும் அடுத்த திருமணத்திற்கு இரயில் பயணம் (இரண்டையும் இணைத்ததால் ஒரு நாள் முன்னதாக ) மைசூரிலிருந்து ஹூப்ளி இரயிலில் சென்று அங்கிருந்து சிர்சிக்கு பேருந்துப் பயணம் ஒரு மூன்று மணி நேரம் மலைப் பாதைகளினூடே இருக்கும்….
டூ டயர் வண்டியில் இரவு உணவு அருந்தி எதிரே இருப்பவர்களுடன் நட்பாகி நாம் சிர்சி செல்லும் விஷயமும், காரணமும் பரிமாற அருகில் அமர்ந்து இருந்தவர் மிகவும் நட்பானார்… அந்த இளைஞர் தன்னை ஒரு குழந்தை நல மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டார்… தமிழ் நாட்டிலிருந்து வருகிறீர்களே ‘ஹம்பி பார்த்ததுண்டா’ என அவர் வினவ, ‘இல்லை’ என்றேன். அப்போழுது மணி சுமார் இரவு ஒன்பது இருக்கும்…
‘ஹம்பி பார்க்காமல் போகக் கூடாது..’ என்று அவர் பிடித்த பிடிவாதம் நான் ‘சரி’ என்று சொல்லும்வரை தொடர்ந்தது.. திருமணத்திற்கு கூடுதல் ஒரு நாள் இருந்தது அவருக்குச் சாதகமாக இருந்தது… ‘எதற்கும் கவலைப் படாதீர்கள், நான் எல்லா ஏற்பாடுகளும் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் மறுபடி நீங்கள் எப்பொழுது இந்தப் பக்கம் வருவீர்கள்….
அவர் வாதத்தில் நியாயம் இருந்தது.. ஒத்துக் கொண்டேன். அதிகாலை நான்கு மணிக்கு ஹரிஹரில் இறங்க வேண்டும் என்றார்…
அதிகாலை நான்கு மணிக்கு இறங்க, கூட அவரும் இறங்கினார்… இரயில் நிலைய வாசலிலேயே ஹோஸ்பெட் செல்லும் பேருந்தில் அவருடன் ஏற ஹோஸ்பெட்டில் தங்க வேண்டிய நல்ல ஹோட்டலின் முகவரி கூறி பேருந்து நிலையத்திலிருந்து எப்படிச் செல்லவேண்டும் எனும் விவரம் கூறினார்… ஒரு தொலைபேசி எண் கொடுத்து, அதைத் தொடர்பு கொண்டால் ஹம்பி சுற்றிக் காட்ட வண்டி அனுப்புவார்கள் என்று சொன்னார்…. செல்லும் வழியில் சூரியன் உதிக்கும் நேரத்தில் அவர் ஊர் வர, எங்கள் பயனம் இனிதாய் தொடர வாழ்த்தியபின்….. இறங்கிக் கொண்டார்.. அவரை அழைத்துச் செல்ல ஒரு கார் காத்திருந்தது…
ஹோஸ்பெட்டில் இறங்கி அவர் கூறிய ஹோட்டலுக்குச் சென்றோம்…. மிகவும் வசதியாக இருந்தது…. குளித்து டிபன் சாப்பிட்டு அவர் கொடுத்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, எங்களைச் சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு மதிய உணவு முடித்துக் காத்திருக்கச் சொன்னார்கள்… பகல் ஒரு மணிக்கு வண்டி வரும் என்றார்கள்…
ஒரு மணிக்கு ஒருவர் வந்து எங்களை அழைத்தார்… ஒரு காரில் ஓட்டுனருடன், கூட வந்தவர், வழி காட்டி…. ஹம்பி முழுவதும் சுற்றிக் காட்டியவர் ஒவ்வொரு இடத்தையும் விளக்கினார்… எங்கள் இருவரையும் ஒரு V.I.P. போல் நடத்தினார்… ஒரு இடம் விடாமல் காண்பித்தார்…. அந்த வாகனத்தை அனுப்பியவர் ஒரு பிரபல இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் என அறிந்தேன்… சுற்றிப் பார்த்தபின் அவரிடம் அழைத்துவரச் சொன்னதாகவும் கூறினார் வழிகாட்டி….
சுமார் மாலை ஏழு மணிக்கு அவர் அலுவலகத்தின் முன் காரில் காத்திருக்க, அலுவல் காரணமாக பார்க்க முடியவில்லை என்றும், எங்களை ஹோட்டலில் விட்டு விடும்படி கூறிவிட்டார்…. வழிகாட்டியிடம் நான் கொடுக்க வேண்டிய தொகை பற்றி வினவ ‘எந்தக் காசும் வாங்கக் கூடாது, என உத்தரவு’ என்றார்.. எவ்வளவு முறை முயன்றும் அவர்களை அதற்குப் பின் தொடர்பு கொள்ள முடியவில்லை..
அந்தக் குழந்தை மருத்துவரும் எந்த தொடர்புத் தகவல்களும் விட்டுச் செல்லவில்லை….
‘ஹம்பி’ என்ற ஒரு சொல் எனக்கு ஹோயசால மன்னர்களின் இடிபாடான ‘ஹம்பியை’ மட்டும் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை…!
அந்த நல்ல உள்ளங்களையும்தான்…