அது மிகப் பெரிய காடு. நித்தம் மழை பெய்வதனால் மிகவும் செழிப்பாக இருந்த்தது. மரங்கள் யாவும் வானளாவி வளர்ந்திருந்தன. அக்காட்டில் வாழும் உயிர்களுக்கு உணவுக்கும் தண்ணீருக்கும் குறைவே இருக்கவில்லை.
அக்காட்டில் கருங் குரங்குகள் கூட்டமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தன.வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த குரங்கு அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்திவந்தது. தமது உடல் உள வலிமையினால் தம்மை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொண்டன.
போதிய உணவு பாதுகாப்பு என்பன இருந்தமையால் ஆட்டமும் பாட்டமுமாக மிக மகிழ்ச்சியாக அக்குரங்குகள் இருந்து வந்ந்தன.
ஒரு நாள் வழி தவறி வெள்ளைக் குரங்கு ஒன்று அக்காட்டுக்கு வந்தது. அக்குரங்கு பலநாள் உணவு உட்கொள்ளாததால் மிகவும் மெலிந்து பலவீனமாகக் காணப்பட்டது.
இக்காட்டைப் பார்த்ததும் அதற்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அக் குரங்கு இது வரை காலமும் வாழ்ந்த காடு மிகவும் காய்ந்து வறண்டு காணப்பட்டது.தண்ணீருக்காக் பல காத தூரம் கடந்து செல்லவேண்டியிருந்தது. தண்ணீர் எடுக்கும் இடத்திலும் முதலை முதலியவற்றால் பல ஆபத்துக்கள் காத்திருந்தன.
வெள்ளைக் குரங்கு ஒரு முடிவுக்கு வந்தது. இந்தக் காட்டில் வாழும் கருங்குரங்குகளை இவ்விடத்தில் இருந்து எவ்வாறாயினும் துரத்துவது. அல்லது அவற்றை தனது அடிமையாக்கிக் கொண்டு தானே இக்காட்டின் இராசா ஆகுவது .தனது வெண்குரங்குக் கூட்டத்தை இக்காட்டில் குடியேற்றுவது எனத்தீர்மானித்துக் கொண்டது.
கருங்குரங்குகள் ஒற்றுமையாகவும் வலிமையுடையனவாகவும் இருப்பதனால் நேரடியாக அவற்றுடன் மோதுவது பயனற்றது என்பதுடன் தனக்கும் தன் கூட்டத்துக்கும் மிகவும் ஆபத்தானது என்றும் கணித்துக் கொண்டு மிகவும் தந்திரமாகச் செயற்படத்தொடங்கியது.
முதலில் கருங்குரங்குகளுடன் நட்பாக உறவாட முடிவு செய்தது. அந்த வெண்குரங்கினைக் கண்ட போது கருங் குரங்குகளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவை வெண்குரங்கினை தமது காட்டிலிருந்து விரட்டிவிட வேண்டும் என எண்ணின. ஆனாலும் தமது தலைவனின் அனுமதி இல்லாது அவ்வாறு செய்ய அவை விரும்பவில்லை. தலைவனிடம் அந்த வெண்குரங்கினை பிடித்துச் சென்றன.
தலைமைக் குரங்கிடம் பிடித்துச் செல்லப்பட்ட வெண்குரங்கு இது தான் சமையம் என தனது தந்திரத்தை காட்டத் தொடங்கியது.
அது தலைவனைப் பார்த்து மகனே நலமாக இருக்கிறாயா என்று வினாவியது.
கருங்குரங்கின் தலைவனுக்கு இது மிகவும் ஆச்சரியமான சொல்லாடலாக இருந்தது.
வெண்குரங்கு மேலும் தொடர்ந்தது.
தான் கருங்குரங்கின் மூதாதையர் என்றும் கருங்குரங்கின் தலைவன் நன்றாக இராச்சியத்தை நடத்துவதனால்தான் இந்தக் காடு இவ்வளவு வளத்துடன் இருப்பதாகவும் கருங்குரங்குக் கூட்டம் எதிரிகளின்றி மிகவும் சந்தோசமாக வாழ்வதாகவும் கூறியது.கடவுள் கருங்குரங்கின் தலைவனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவே தன்னை அனுப்பியதாகவும் தான் இனி கருங்குரங்கின் மந்திரியாக இருந்து அதனை மேலும் சிறந்த வகையில் வழிநடத்த வேண்டும் என்று தனக்கு இறைவன் கட்டளையிட்டுள்ளதாகவும் கூறியது . மேலும் தனது வாக்குவன்மையால் கருங்குரங்கின் புகழை இனிமையாகப் பாடி தலைவனை புகழினால் கிறங்க வைத்தது.
புகழ் மயக்கத்தில் திளைத்த குரங்குத் தலைவன் இனி தான் தனது மூதாதையரான வெண்குரங்கை மதித்து வணங்குவது போல எல்லாக் குரங்குகளும் வணங்கவேண்டும் என்றும் அதன் கட்டளைக்கு பணிந்து நடக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டது.
தலைமைக் குரங்கு, இதுவரை குரங்குகளின் பிரதிநிதிகளிடம் ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுப்பது வழக்க மாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் வெண்குரங்கின் புகழ்ச்சியில் மயங்கி தானே இத்தகைய முடிவினைக் கூறியது குரங்குகள் பலவற்றுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஆனாலும் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக் மௌனமாக இருந்தன.
இதனையே தொடக்கமாகக் கொண்டு மெல்ல மெல்ல குரங்குகளிடையே பிரிவினையை உருவாக்கியது வெண்குரங்கு. தனது உறவினர்கள்பலரையும் இந்தக் காட்டுக்கு அழைத்து வந்தது. வெண்மை உயர்ந்த நிறம் என்றும் வெண்மையே அழகானது என்றும் பிதற்றி அதனை பல கருங்குரங்குகள் நம்பும் படியும் செய்தது, கல்வி அறிவில் தாமே சிறந்தவர் என்றும் தமது வழிகாட்டலிலேயே இறைவனை வழிபடலாம் என்றும் தாமே எழுதிய தெய்வப்பாடல்களைக் கொண்டு நிறுவியது.
வெண்குரங்குகளின் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டு தம் ஒற்றறுமையையும் உயர்வையும் இழந்தன கருங்குரங்குகள். கருங்குரங்குகளில் மிகவும் புத்திசாலித்தனமும் பகுத்தறிவும் கொண்ட குரங்குகள் உண்மையை எடுத்துரைத்தபோதும் பிரிவினைத் தளைகளில் இருந்து கருங்குரங்குகளினால் மீளவே முடியவில்லை