விதி கொடுக்கும் வேலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 1,698 
 

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், ஆசிரியர் பாராட்டியும், உடன் படிப்போர் பொறாமைப்பட்டும் தன்னால் பெருமைப்பட்டு மகிழ்ச்சியடைய முடியவில்லையே எனும் ஏக்கத்தில் தூக்கத்திலும் கண்விழித்து கவலை கொண்டான் ஏழாம் வகுப்பை எட்டிப்பார்த்திருந்த விவசாயி மகனான சிறுவன் சாந்தன்.

“நீ ஒன்னி மேலு பள்ளிக்கொடம் போக வேண்டா. ஒழவோட்டறதுக்கும், வண்டி ஓட்டறதுக்கும் ஆள் போடற அளவுக்கு வசதீமில்ல. உங்கொய்யனுக்கு காலு முறிஞ்சு சிங்கிரிபளத்துல கட்டுப்போட்டுட்டு வந்து படுத்திட்டுக்கெடக்கறாரு. ஒரு தடவ கட்டுப்போடறதுக்கு ஒரு ஆட்ட விக்கோணும் போலக்குது. பத்துக்கட்டுப் போடோனுமாமா. பத்து மயிலு தூரம் வண்டிய பூட்டி நீதா உக்கார வெக்சுக்கூட்டிப்போகோணும். அந்த மயிலக்கால உன்ற குட்டத்தா வசியமாகுது. ஆரு புடிச்சாலும் கொம்ப நீட்டீட்டு குத்தறதுக்கு வருது…” என தாய் கோமதி கூறிய போது கண்ணீர் வந்தாலும் சொல்பேச்சை மறுக்க முடியாமல், வண்டி ஓட்டப்போவதை நினைத்துப்பார்த்த போது உற்சாகம் மனதில் ஊற்றெடுக்க, பலமாக தலையாட்டியபடி தனக்கு மிகவும் பிடித்த மயிலக்காளைக்கு வைக்கப்புல் எடுத்து காடியில் போட்டான். அதை பக்கத்தில் கட்டியிருந்த செவலைக்காளை பாதியை பிடுங்கித்தின்றது கண்டு ஆச்சர்யம் கொண்டான். பள்ளியில் தன்னிடமிருந்த கம்பரக்கட்டு மிட்டாயை உடன் படித்த வீரன் தட்டிப்பறித்து ஓடிச்சென்று தின்றதை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டான்.

“சோறுண்டாப்போது உசுரு ஒடம்புலிருந்து எங்கீம்போகாது. நாங்கெல்லா பள்ளிக்கொடம் போகாம பொளைக்காமையா போயிட்டோம். உசுரு மட்டும் ஒடம்புல இருந்துச்சுன்னா வாழ்ந்து போடுலாம். ஆட்ட மேச்சு, மாட்ட மேச்சு படிக்காட்டீமு அந்தக்காலத்துல பத்துப்புள்ள பெத்து வளக்காமையா போயிட்டோம்” என தான் வாழும் நிலையே, வாழ்ந்த நிலையே சரியென அப்பத்தா பேசியது பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லாமல் கேட்டான்.

“வருசம் பத்து மூட்ட ராயி வெளஞ்சா போதும். கீரையப்பொறிச்சுக்கெடைஞ்சு, ராய நெறிச்சு களியக்கிண்டி ரெண்டு உரண்ட களிய நானே உண்டு போடுவேன். மண்ணுச்சட்டில கவிட்டிய வெச்சு மொழங்கால்ல அமுத்திப்புடிச்சுட்டு, களிக்கவைய எடுத்துக்கிண்டுனா ஒடம்பெல்லாமே வேத்து கட்டியிருக்கற சேலையே நனைஞ்சு போகும்னு வெச்சுக்கவே. மீதமாகற களிய தண்ணி ஊத்தி வெச்சுட்டன்னா காத்தாலைக்கு மோரச்சிலுப்பி ஊறிப்போன களிய எடுத்து புழுதண்ணியோட மோர ஊத்தி வெங்காயங்கடிச்சுக்குடிச்சுப்போட்டு, காட்டுக்குள்ள மம்முட்டிய எடுத்துட்டு போனா ஆம்பள கணக்கா ஒரு அனப்ப நிக்காம பாறக்கோதிப்போடுவேன். பாத்திய புடிச்சுப்போடுவேன். பத்து வண்டி சாணக்குப்பைய எறச்சுப்போடுவேன். இல்லீன்னா ஒரு வயில சேத்த முதிச்சு வரப்பு வெச்சு நெல்லு நாத்தப்புடுங்கி நெட்டுப்போட்டு வந்திருவேன்.

அப்பறம் மத்தியானத்துக்கும் களியக்கிண்டி நல்லா வெடக்கோழியாப்புடிச்சு பொசுக்கி வெட்டிப்போட்டு கொழம்பு வெச்சுப்போடுவேன். கோழிச்சாறு காச்சற நாளுல ரெண்டு உருண்ட களிய வகுறு எச்சா இழுக்கும்னு வெச்சுக்கவே” என தந்தையைப்பெற்ற அப்பத்தா பாட்டி சொல்லச்சொல்ல நாக்கில் எச்சில் ஊறி இப்போதே களி உண்ண வேண்டும் போலிருந்தது சாந்தனுக்கு.

அப்பத்தா மற்ற பெண்களைப்போலில்லாமல் மிகவும் தைரியசாலி. வீட்டுப்பக்கம் வரும் பாம்புகளை குத்தீட்டியால் குத்தி வீசி விடுவாள். குட்டிப்பாம்புகளை செறுப்பில் மித்துக்கொன்று விடுவாள். அப்பத்தா கருப்பாயின் கணவன் அப்பாரு கருப்பணன் இறந்த பின்பு குடும்பத்தலைவனைப்போலவே குழந்தைகளை வளர்த்து, திருமணம் செய்து சீர் வரிசையை சிறப்பாக செய்தவள், ஒரே மகனான தன் தந்தை செல்லப்பனுக்கு சொத்துக்களைக்கொடுத்ததோடு தன்னால் முடியும் வரை உழைத்துக்கொடுத்துள்ளாள். ஆண்களுக்கு போல மீசை கூட லேசாக முளைத்திருக்கும். தலையில் துண்டை எடுத்துக்கட்டிக்கொள்வாள். வண்டி ஓட்டுவது, ஏர் ஓட்டுவது எல்லாம் அத்துப்படி. கருப்பாயி என்று சொன்னாலே சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வயதானதால் வேலை எதுவும் செய்ய முடியாவிட்டாலும் வாசலில் கயிற்றுக்கட்டிலைப்போட்டு அமர்ந்து கொண்டு அதட்டிப்பேசியே அனைவரிடமும் வேலை வாங்கி விடுவாள். குழந்தைகள் கல்வி கற்க பாடப்புத்தகம் எடுத்துப்போவதை விட, காட்டிற்குள் பாடுபடப்போவதையே விரும்புவாள் கல்வியின் உயர்ந்த பலன்களை அறிந்திராத கிணற்றுத்தவளையான கருப்பாயி.

“உங்கொப்பாராட்டா ஆடு மாட்ட அனுசரணையா நீயும் பாத்துக்கறே. அதுதான் முட்டற மாடும் உனக்கு மடங்குது. நாளைக்கு உங்கொய்யனுக்கு கட்டுப்போட சிங்கிரிபாளையம் போற போது அடிச்சு ஓட்டாம சுண்டி ஓட்டீட்டு போயிட்டு வா. சக்கரத்த குழி, மேடு பாத்து ஓட்டடோணும். விசுக்கு, விசுக்குன்னு குழில எறக்குனீன்னா ஆரக்காலு சீக்கிரம் போயிருச்சுன்னா ஆசாரிக்கு குடுக்கறதுக்கே வெளையற வெள்ளாமக்காசு செரியாப்போயிரும். எளங்கன்னு பயமறியாதுங்கற மாதர காளைகள சாட்டவார்ல அடிச்சு ஓட்டிப்போடாத கண்ணு” என அப்பத்தா கூறியது சரியெனப்பட்டது.

முதன் முதலாக மாட்டு வண்டி ஓட்டப்போவதை நினைத்து தூக்கம் வராமல் ஓலைச்சாளை வீட்டிற்குள் கிடந்த அழுக்கடைந்த பாயில் புரண்டு, புரண்டு படுத்தான் சாந்தன். 

காலையில் கிணற்றுத்தொட்டியிலிருந்து ஈய பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து வண்டியை சுத்தமாகக்கழுவினான். சோளத்தட்டு இரண்டு கத்தைகளை கறுக்கு அறிவாளால் நறுக்கி எடுத்து வண்டியில் வைத்துக்கொண்டான். காளைகளின் மேல் இருந்த அழுக்கினை தேங்காய் கதம்பையில் தேய்து விட்டு தண்ணீரால் கழுவி விட்டான்.

‘கொம்புகளுக்கு நடுவுல கைய வெச்சுத்தடவுனா மாடுக மசக்கையாயி மனுசனுக்கு கட்டுப்படும்’ என தந்தை ஒரு முறை சொல்லக்கேட்டதால் அதே போல் நீவி விட்டான். கன்னிக்கயிறுகளை அவிழ்த்து தினமும் வண்டி ஓட்டுபவன் போல லாவகமாக காளைகளைப்பிடித்து வண்டியில் பூட்டியதைக்கண்ட தாய் கோமதி ‘ஒன்னி அவங்கையனோட வேலைய பையம் பண்ணீருவான்’ என சிறிது சுயநலத்துடன் மகிழ்ச்சியடைந்தாள். 

தாயோடு தானும் ஆளுக்கொரு பக்கமாக தந்தையின் தோள்களைத்தாங்கி வண்டியில் பின் பக்கம் ஏறச்செய்தபோது காளைகளுக்கு கழுத்து இறுகியது கண்டு ஓடி முன்னே வந்து நுகத்தைப்பிடித்து அழுத்தி தந்தை பின்னால் ஏறும் பாரத்தை சரிசெய்தான். பின் நுகத்தின் கீழே இருந்த வண்டிக்கால் மீது காலைத்தூக்கி வைத்து தாவி ஏறி வண்டியில் முன்பக்கம் உட்கார்ந்து சாட்டையைத்தூக்கிப்பிடித்து ‘ஹை’ என்றதும் காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கின. 

தோட்டத்து வீட்டிலிருந்து பாதையில் இறங்கும் போது இறக்கமாக இருந்ததால் வண்டி வேகமெடுத்த போது காளைகளின் கயிறுகளை இறுகப்பற்றி இழுத்தபடி ‘ஹோ, ஹோ’ என சொல்லி வேகத்தைக்கட்டுப்படுத்தியது கண்டு தந்தையே ஆச்சர்யப்பட்டுப்பெருமைப்பட்டார். தன்னால் முடியாததை தன் மகன் செய்து குடும்பத்தைக்காப்பாற்றி விடுவான் என நம்பிக்கை கொண்டார். ஊருக்குள் போகும் போது, தான் வண்டி ஓட்டுவதை பலரும் பார்த்ததால் எதையோ சாதித்தது போல் கர்வம் கொண்டான் சாந்தன்.

“என்ன செல்லப்பா…. பையன இப்பவே வண்டி ஓட்டிக்க பழக்கிப்போட்ட….?”

“நானெங்க பழக்குனேன்…. அவனே நானோட்டறதப்பாத்து பழகிப்போட்டாம் போலிருக்குது. எனக்கே இன்னைக்குத்தாந்தெரியும், இவனிப்பிடி ஓட்டுவான்னு….”‌ 

தந்தையின் பதிலால் உற்சாகமடைந்தான். இவ்வாறு ஊரைக்கடப்பதற்குள் பல பேர் ஆச்சர்யப்பட்டு தந்தையிடம் பேச்சுக்கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது சாந்தனுக்கு.

கோபி அருகே உள்ள சிங்கிரி பாளையம் போனவுடன் வைத்தியர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் காளைகளை வண்டியிலிருந்து விடுவித்து, அருகில் உள்ள மரங்களில் கயிறால் கட்டி தட்டுத்தீவனத்தைப்போட்டான். தந்தையை வண்டியில் உட்கார வைத்தே வைத்தியர் கால் கட்டை மாற்றிக்கட்டி, பச்சை நிறத்தில் இருந்த எண்ணையை கட்டின் மீது ஊற்றி விட்டார். ஒரு புட்டியில் வீட்டிலேயே தினமும் போட்டுக்கொள்ள எண்ணை ஊற்றிக்கொடுத்தார். வைத்தியரின் வேலை முடிந்ததும் அவருக்கான பணத்தை தனது சட்டையின் உள் பாக்கெட்டிலிருந்து பெரிய மனிதரைப்போல் எடுத்துக்கொடுத்தவன், மீண்டும் காளைகளைப்பிடித்து வண்டியில் பூட்டி வந்த வழியில் பயணமானான்.

தற்போதெல்லாம் அடிக்கடி வண்டியில் ஊருக்குள் சென்று வரும் சாந்தனைப்பார்க்கும் சம வயதுள்ளவர்கள் ‘டேய் வண்டிக்காரன் வந்துட்டான்’ என்பதையும், மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது ‘வண்டிக்கார சாந்தன்’ என பிறர் தன்னைச்சொல்வதையும் அவனால் தடுக்கமுடியாத போது அதையே மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்பழகிக்கொண்டான்.

‘நாமொன்னு நெனைச்சா அது வேறொன்னு நடக்குது. ஊட்ல இருக்கறவங்களும் அவங்க வேலதான் முக்யம்னு கொழந்தைகளை அவங்களுக்கு ஏத்தாப்ல மாத்தப்பாக்கறாங்க. அய்யனிருக்கற நெலமைல படிக்கப்போனா குடும்பமே முழுக்க சோறுங்க முடியாது. நெனைச்சது நடக்கறத விட நடக்கறத ஏத்துக்கத்தா வேணும் பொலிருக்குது’ என பனிரெண்டு வயது சிறுவனான சாந்தன் குடும்பபாரத்தை எதிர்ப்பின்றி சுமக்க, இஷ்டப்பட்டுக்கஷ்டப்படத்தயாரானான்.

தற்போதெல்லாம் மாட்டு வண்டி ஓட்டுவது பழகிப்போனதால் கல்வி கற்பதை விட்டு மனம் விலகிப்போவதை வண்டி ஓட்டும் போது தனது உள்ளம் பூரிப்பதை வைத்துப்புரிந்து கொண்டான். 

எதுவுமே பழகப்பழக பிடித்துப்போய் விடுவதையும், அதை எளிதாக மனம் ஏற்றுக்கொள்வதையும் புரிந்த போது ஆச்சர்யப்பட்டான். பள்ளியில் சேர்ந்த போது ‘கலெக்டராவேன்’ என சொன்னவன், தற்போது வண்டிக்காரனாகிவிட்டதை ‘இது தான் விதியின் விளையாட்டு, விதி கொடுக்கும் வேலை, ஏட்டில் உள்ளது வேறு, வீட்டில் வாழ்வது வேறு ‘ எனும் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டான். 

‘அல்லாருமே கலெக்டராயிட்டா சேத்துல வயிலுக்கட்டி ஆரு சோத்துக்கு அரிசி வெளையவெச்சுக்கொடுப்பாங்க…? ஆளுக்கொரு வேலையச்செய்யச்சொல்லி ஒலகத்த படைச்ச கடவுளு சொல்லற போது, அதக்கேட்காம, நாம நம்முளுக்கு புடிக்குதுன்னு அல்லாரும் ஒரே வேலயச்செய்யப்போனா நம்ம வேலைய ஆரு செய்வாங்க…? எல்லா வேலையுமே ஒழுங்கா நடக்காமப்போனா ஒலகத்துல ஆரும் நிம்மதியா, சந்தோசமா வாழ முடியாமப்போயிருமே…? சாக்கடை எடுக்கறது கேவலமுன்னு அல்லாரும் பூக்கடை வெச்சு உக்காந்தா ஊரே நாறிப்போயிருமே…?’ என தத்துவார்த்தமாக தனது நிலையை நியாயப்படுத்த நினைத்துக்கொண்டு, தற்போதைய சூழ்நிலையை ஏற்கும் மனநிலையை அனுபவ அறிவால் வளர்த்தவனாய் வீட்டில், காட்டில் தன் முன் இருக்கும் வேலைகளை வெயில், மழை என பாராமல், மேடு, பள்ளம், சேறு, சகதி எனத்தயங்காமல், தாமதிக்காமல் செய்து வாழப்பழகிக்கொண்டான் சாந்தன்.

கதையாசிரியர்:

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *