(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எழிலார்ந்த கலா மண்டபம்.
உலகக் கட்டிடக் கலைஞர்களின் கனவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம் உழைப்பின் உயிரோவியம்.
சிற்பிகளின் உளிகள் தூண்களை கலையாக்கியிருந்தன.
ஓவியங்களின் தூரிகைகள் சுவர்களை இயற்கையால் திரையிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.
சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பார்வையிட்டவாறு சென்று கொண்டிருந்தார். அவர் அழகு மகள்- சின்னஞ் சிறுமியும் துள்ளிக் குதித்தவாறு அவருடன் வந்துகொண்டிருந்தான்.
திடீரென அவள் வேகம் தடைப்பட்டது.
“அப்பா…. அப்பா….. அந்தச் சித்திரங்கள்தான் எல்லாவற்றையும் விட நன்றாக இருக்கின்றன இல்லையாப்பா…!” என்றாள்.
பூர்த்தி செய்யப்படாத பகுதியில் நடந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.
அங்கே-
கட்டிடத் தொழிலாளர்கள் ஓய்வு வேளையில் சுவரில் சாய்ந்து சாய்ந்து… வியர்வைக் கறை ஏறி…ஏறி….. படர்ந்து விரிந்து…..
இன்னதென்று விளக்க முடியாத ஓவியம் போல் மின்னியது.
– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.