பதினெட்டாவது மாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 6,644 
 

என் பெயர் பாஸ்கரன்.

பெங்களூரில் ப்ரிகேட் டவர்ஸின் பதினெட்டாவது மாடி B 1808ல் மனைவி, மற்றும் ஒரேமகன் திலீப்புடன் குடியிருக்கிறேன். ஒரேமகள் மாலினி திருமணமாகி மல்லேஸ்வரத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறாள்.

திலீப் பெங்களூர் அமேசான் கம்பெனியில் பிஸினெஸ் டிவலப்மன்ட் மானேஜர். அமேசான் எங்கள் வீட்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் அடுத்த கட்டிடமான வோர்ல்ட் ட்ரேட் சென்டரில் இருக்கிறது. அவன் வேலை பார்ப்பது அதன் 24வது மாடியில்.

பல சமயங்களில் திலீப் வீட்டுக்கு வர தாமதமாகும்போது நானும் என் மனைவி வசுமதியும் இரவில் அவனுடன் அடிக்கடி டார்க்வியூ பைனாகுலரில் பார்த்து பேசிக்கொள்வோம். நேரில் பேசிக்கொள்வது போலிருக்கும். அது அவன் முதன் முதலாக அமேசான் தலைமையகமான சியாட்டில் போனபோது வாங்கி வந்தது. ரொம்பக் காஸ்ட்லி.

அவன் தற்போது மறுபடியும் பத்து நாட்கள் சியாட்டில் போயிருக்கிறான்.

நானும் வசுமதியும் மட்டும் பதினெட்டாவது மாடியில் தனியாக இருக்கிறோம். பெங்களூரில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது.
பால்கனியின் கண்ணாடி ஜன்னல்களை நன்றாகச் சாத்தி வைத்தாலும், வீரியமாக காற்று அடிக்கும்போது, காற்றின் வேகத்தில் எல்லா ஜன்னல்களும் “ஓய்ஷ் ஓய்ஷ்” என்று பெரிதாக சப்தம் எழுப்பும். அந்த சப்தம் அமானுஷ்யமாக இருக்கும். இது ஒன்றுதான் எனக்கு குறை.

மற்றபடி அபரிதமாக தண்ணீர், பார்க்கிங், செக்யூரிட்டி, க்ளப் ஹவுஸ், ஷாப்பிங் மால், ஸ்விம்மிங் பூல் என இங்கு நிறைய வசதிகள்.

நான் ஒருபெரிய நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்று தற்போது ரொம்ப ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தினமும் மாலையில் வெதுவெதுவென ஷவரில் குளித்துவிட்டு, குடிகூரா பவுடர் போட்டுக்கொண்டு வாசனையாக அமர்ந்துகொண்டு இரண்டு அல்லது மூன்று பெக் ஸ்காட்ச் விஸ்கி குடிப்பேன். சிகரெட் புகைப்பேன். ஊரில் இருந்தால் பல சமயங்களில் திலீப்பும் எனக்கு கம்பெனி குடுப்பான்.

சிகரெட்டில் மார்ல்பரோ லைட்ஸ் மட்டும்தான் புகைப்பேன். அதில்தான் லெஸ் டார் அண்ட் நிகோட்டின் என்று போட்டிருக்கும்.

முப்பது வருடங்களுக்கு முன் நான் வசுமதியை திருமணம் செய்து கொண்டபோது ரேஸ், ரம்மி, சிகரெட், விஸ்கி, நான்-வெஜ் என்று சகஜமாக நான் செய்யும் பழக்கங்களைப் பார்த்து பெரிதாக என்னிடம் சண்டை பிடிப்பாள். பல நாட்கள் என்னிடம் பேசாமலும் இருந்திருக்கிறாள். வசுமதியைப் பொறுத்தவரை இதெல்லாம் பெரிய கெட்ட பழக்கங்கள். ஆனால் நான் இன்றையதினம் வரை திருந்தவில்லை. திருந்துவதாக எண்ணமும் இல்லை.

இன்றைக்கும் அவளுக்கு அந்தக் கோபம் தணியவில்லை. என்மேல் விஸ்கி நாற்றம் அடிக்கிறது என்பதால், தினமும் எங்கள் பெட்ரூமில் என்னுடன் படுத்துக்கொள்ளாது, மாலினியின் ரூமில்தான் தனியாகத் தூங்குவாள்.

அடுத்தவர்களுக்கு தொந்திரவு இல்லாமல் என் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். இறப்பதற்குமுன் ரசனையுடன் நிறைய விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்பது என் கோட்பாடு.

வாழ்க்கையில் திருமணம் மூலமாக தான் ஏமாந்துவிட்டதாக அடிக்கடி வசுமதி புலம்புவாள். நான் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. புரிதலின்றி வாழ்ந்த வாழ்க்கையிலும் மாலினி, திலீப் என இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்து விட்டோம். திலீப்புக்குத்தான் தற்போது பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை நல்லவிதமாக படிக்கவைத்து இந்தக் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் வசுமதியின் பங்குதான் ஏராளம். நான் கை நிறைய சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்ததுடன் சரி. மிகுந்த பொறுப்புடன் நடந்து கொண்டு என் குடும்பத்தை முன்னேற்றியது வசுமதிதான். அவள் கெட்டிக்காரி.

அன்றும் மாலையில் ஷவரில் நிதானமாக குளித்துவிட்டு ரிலாக்ஸ்டாக என் நண்பன் வெஸ்ட் இண்டீஸ் போனபோது வாங்கிவந்த மாலிபூல் காரிபீன் ரம் பாட்டிலை முதன்முறையாகத் திறந்தேன். பாட்டில் வெள்ளை வெளேரென்று அழகாக மின்னியது. அதன்மேல் கோக்கனேட் ப்ளேவர் என்று போட்டிருந்தது.

நான் அதை செல்லமாகத் திறந்து வாசனை பிடித்தேன். ரம்மியமாக இருந்தது. பிறகு மெதுவாக பாட்டில் திரவத்தை க்ளாசில் சரித்து அதனுடன் அளவாக 7அப் சேர்த்து ஆர்வமுடன் உறிஞ்சினேன். சுகமாக இருந்தது.

முதல் இரண்டு பெக் உள்ளே போனதும் நன்றாக கிக் ஏறியது. பெரிய திரை டி.வியை ஆன் பண்ணி எம்டிவி பீட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஷாப்பிங் சென்றிருந்த வசுமதி திரும்பி வந்தாள். நான் குடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து என்னைக் கேவலமாக பார்த்தாள். எப்போதும்போல திட்ட ஆரம்பித்தாள்.

“இவ்வளவு வயசாகியும் உங்களுக்கு ஏன் அறிவில்லை. ஒருநாள் ஹார்ட் அட்டாக்காகி….”

“அப்படி செத்துப்போனா ஒழிஞ்சேன்னு விட்டுடு வசு…”

“ஒரே அட்டாக்கில் செத்துப்போனா பரவாயில்லையே, தலை முழுகிடுவேனே… ஆனா நீங்க ஹாஸ்பிடல், பைபாஸ் சர்ஜரி அது இதுன்னு இழுத்துண்டு கடந்தா, யாரால எடுத்துச் செய்ய முடியும்?”

“சர்தான் போடி உன் வேலைய பாத்துக்கிட்டு…இப்ப என்ன புதுசாவா பண்றேன்? முப்பது வருஷமா குடிக்கிறத நிறுத்தாம இப்ப நிறுத்திருவேனாக்கும்? வீட்டுக்குளேயே அளவா இரண்டு, மூன்று பெக் அடிச்சா ரொம்ப நல்லது.”

“அடச்சீ வெட்கமா இல்ல இப்படி பேசறதுக்கு? ஒரேயடியா நான் செத்துப் போயிடறேன்.. நீங்க நிம்மதியா தினமும் குடிங்கோ. ஒருநாள் திடீர்னு நம்மவீட்டு பால்கனி டோரைத் திறந்து வெளியே குதிச்சாத்தான் உங்களுக்கு என்னோட அருமை தெரியும்….ஒரே ஒரு செகண்ட் மனசை ஒருமுகப்படுத்தி குதிச்சுட்டா போறும். அடுத்த செகண்ட் நான் சிதறிடுவேன். எல்லாமே முடிஞ்சுடும்.”

திடீரென்று வேதனையுடன் அழுதாள்.

அவளுடன் ஆர்க்யூ பண்ண வேண்டாம் என்று நினைத்து எதுவும் பேசாது மூன்றாவது பெக்குக்கு சென்றேன். அதைத் தொடர்ந்து நான்காவதும் போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

புதிய சரக்கு என்பதால், சோபாவிலேயே மட்டையாகி விட்டேன்.

நான் திடீரென முழித்துப்பார்த்தால் மணி மூன்று முப்பது. டிவி ஓடிக் கொண்டிருந்தது. பால்கனி கண்ணாடி ஸ்லைடிங் டோர் அகலமாக திறந்திருந்தது. அதன் கீழே பாத்ரூம் நாற்காலி போட்டிருந்தது..

சட்டென எனக்குள் ஏதோ ஒன்று உரைத்தது… வசுமதி ஓ காட்!

பதட்டத்துடன் எழுந்து ஓடிப்போய் மாலினியின் பெட்ரூமைத் திறந்து பார்த்தேன். அங்கு என் வசு இல்லை.

எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. உடல் ஏராளமாக வியர்த்தது.

பயத்துடன் பால்கனி ஸ்லைடிங் டோர் வழியாக எட்டிப் பார்த்தேன். கீழே ஒரே இருட்டாக இருந்தது. மழை சில்லென தூறிக்கொண்டிருந்தது. ஊதக் காற்று முகத்தில் அடித்தது.

உடனே ஸ்லிப்பரை மாற்றிக்கொண்டு, வீட்டுக்கு வெளியே வந்து லிப்டில் ஏறி தரைத் தளத்திற்கு பதட்டத்துடன் விரைந்தேன்.

என் வீட்டின் பால்கனிக்கு நேராக கீழேசென்று தரையில் தேடினேன். ஒன்றும் இல்லை. மேலே நிமிர்ந்து பார்த்தபோது எட்டாவது மாடி வீட்டின் பால்கனியில் அடர்த்தியாக ஒரு தோட்டம் தெரிந்தது.

ஓ காட்….கண்டிப்பாக எட்டாவது மாடியில்தான் என் வசு விழுந்திருக்க வேண்டும். எனக்கு கால்கள் தளர்ந்தன….மயக்கம் வரும்போல் இருந்தது.

‘ச்சே எல்லாமே என்னுடைய இந்தக் கேவலமான குடிப் பழக்கத்தினால்தான். வசு ப்ளீஸ்மா என்ன மன்னிச்சிடு. நீ மட்டும் திரும்பி முழுசா வந்துடும்மா. சத்தியமா நான் இனிமே குடிக்கவே மாட்டேன்’.

அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

செக்யூரிட்டி ஓடிவந்து “க்யா ஹுவா பாஸ்கர் சாப்?” என்றான்.

ஈனமான குரலில் “குச் நஹி” என்றேன்.

மறுபடியும் லிப்டில் ஏறி என் வீட்டிற்கு திரும்புவதற்காக பதினெட்டாம் நம்பரை அழுத்தினேன்.

இது தற்கொலை கேஸ். பேப்பரில் செய்தி வரும். போலீஸுக்கு பதில் சொல்ல வேண்டும். ஜெயிலுக்குப் போக வேண்டும். ச்சே என் வாழ்க்கை இனி இருட்டாகி விடும். இதுவரை நான் போலீஸ், கோர்ட் என்று எதற்குமே போனதில்லை. .

லிப்டில் வரும்போது சட்டென எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. யெஸ்….திலீப் வாங்கிவந்த டார்க்வியூ பைனாகுலரால் எட்டாவது மாடியை போகஸ் பண்ணிப் பார்த்தால் கண்டிப்பாக வசு தென்படுவாள்.

பரபரவென என் பெட்ரூமைத் திறந்து லட்டைப் போட்டுக்கொண்டு அந்த பைனாகுலரைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஒருவேளை திலீப்பின் பெட்ரூமில் இருக்கும்.

வேகமாக அவன் பெட்ரூம் கதவைத்திறந்து லைட்டைப் போட்டேன்.

அங்கே என் வசுமதி பெட்டில் குப்புறப்படுத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

என் சந்தோஷத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெட்டில் பாய்ந்து விழுந்து “குட்டிம்மா” என்று கதறி அவளைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.

தூக்கத்திலிருந்து கலைந்து “என்ன குட்டிப்பா என்ன ஆச்சு? தூங்காம எதுக்கு இந்த திடீர்ப் பாசம்?” என்றாள்.

“நீ எப்படி திலீப் பெட்ரூமில்?”

“ஆமா மாலினி ரூமில் ஏஸி ஒர்க் பண்ணல….அதான் இங்க வந்து படுத்துண்டேன்.”

நடந்ததை நிதானமாக அவளிடம் விளக்கி, “ஆமா அதெப்படி பால்கனி கதவு அவ்வளவு அகலமாகத் திறந்திருந்தது? பாத்ரூம் நாற்காலி எப்படி அங்க வந்தது?” என்றேன்.

“நேத்து நீங்கதான சிகரெட் புகையை வெளியே விடறத்துக்காக என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே கதவை ஸ்லைட் பண்ணீங்க!…அந்த நாற்காலி ரெண்டு நாளா அங்கதான் கிடக்கு. வேலைக்காரி பால்கனில துணி உலர்த்த எடுத்துபோனாள். அதை திருப்பிவைக்க மறந்துட்டா. சாதரணமாகவே நீங்க அசடு. அதுவும் மப்புல இருந்தா ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியாது.”

மணி நான்கு.

பல்லைத் தேய்த்துவிட்டு அருமையான பில்டர் காபி போட்டுக் கொடுத்தாள். “காபி குடிச்சிட்டு ரெண்டுபேரும் ஒரு வாக் போயிட்டு வரலாமா?” என்றாள்.

“கண்டிப்பா வசு, நீ இனிமே எங்க கூப்பிட்டாலும் வரேன். நீ என்ன சொன்னாலும் கேட்டு நடக்கிறேன்.”

வாட்ரோபில் இருந்த அனைத்து சரக்கு பாட்டில்களையும் எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டு அவளுடன் வாக்கிங் கிளம்பினேன்.

போகும்போது அனைத்து பாட்டில்களையும் ஒரு குப்பைத்தொட்டியில் அடித்து மோதி நன்றாக உடைத்து, தூக்கி எறிந்தேன்.

பின் என் வசுமதியின் கைகளை வாஞ்சையுடன் இழுத்துக் கோர்த்து மெல்ல நடந்தேன்.

மனசு முழுக்க சந்தோஷம் கொப்புளித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *