விசவித்துக்கள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 8,511 
 
 

கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறேன். போனால் போய்க்கொண்டே இருக்கலாம். எதுவுமே தென்படாத நிலையில் அர்த்தமற்று அலைவதில் என்ன பயன்?! நின்று நிதானித்து என்னைச் சுற்றி வரிக்க முற்படும் அந்தச் சூன்யத்தை அவதானிக்கலாமா என்று எண்ணுகையில்…. வெகு தொலைவில் ஒரு சின்னஞ்சிறிய மின்மினிப்பூச்சியின் ஒளிவட்டம்போல் தோன்றிய வெளிச்சம் என்னை நோக்கி நகர்ந்து, பெரிதாக விரிந்துகொண்டே நெருங்கி வர ஆரம்பித்தது.

நான் எங்கே நிற்கிறேன். புரியாத பிரமை ஆட்கொண்டது. நெஞ்சில் சிறு நடுக்கம் அரும்பியது. கால்கள் பின்னோக்கி நகர விழைந்தன. முடியவில்லை. உடல் அசைய மறுத்தது. ஏதோ ஒன்று என்னை அசையவிடாமல் அமுக்கி வைத்திருந்தது. அமுக்கம் அகலும்வரை… அது புழுக்கமாக இருந்தாலும் நான் இங்கே நின்றுதான் ஆகவேண்டும்.

அந்த ஒளிவட்டம் நெருங்கி வரவரப் பெரிதாகி, பிரகாசம் கூடிக் கண்களைக் கூசச்செய்து, கண்கள் குருடாகப் போகின்றனவோ என்றான கணப்பொழுதில், அந்த ஒளி வட்டம் தோற்றமாகி அழகிய தமிழ் பெண்ணாக என்முன்னால் உருமாறி உதித்தது.

தோள்வரை ஒழுங்காக வெட்டப்பட்ட கூந்தல் கலைந்திருந்தது. ஐரோப்பாத் தமிழிச்சியல்லவா? கலைதல், கலைத்தல் எல்லாம் அலங்காரத்துக்காகவும் இருக்கலாம். கண்களில் சிறிது கலக்கம். எனினும் அதை வலிந்து மறைக்க முற்பட்டுத் தன்னை உறுதியுள்ளவளாய் காட்டுவதற்கான முற்படுதலையும் புரிந்துகொள்ள முடிந்தது.

வயது பதினாறு இருக்குமா?! பதினெட்டாகக்கூட இருக்கலாம். அப்படியான பருவ வயதின் இளமை கொழித்துக் கொலுவிருந்து, பசுமைகளைப் பாதகமில்லாமல் பரவவிட்டிருந்த உருவம்.

“என்னைத் தெரியுதா?”

தெரியும்… கடை வீதிகளில், வஸ் பிரயாணங்களில் தற்செயலாகச் சந்தித்திருக்கிறேன்.

சித்திரவேலற்ரை மகள்!

சித்திரவேல் பெரும்பாலான ஈழத் தமிழர்களைப்போல் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர். அப்பொழுது அகதித் தமிழர்களுடன் ஒரு தமிழராகத்தான் முகாம் ஒன்றில் வசித்தார்.

வருடங்கள் சில சென்றன. தாயகத்திலிருந்து ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளைகளுடன் மனைவியையும் ஜேர்மனிக்குக் கூப்பிட்டார். முகாம் வாழ்வு வாடகை வீட்டுக்குத் தாவியது. அதேவேளை அவரது குணமும் தமிழினத்தைவிட்டு ஜேர்மன் மக்களின்பால் தாவ ஆரம்பித்தது.

தமிழர்களுடன் பழகுவதைக் குறைத்துக்கொண்டார். தற்செயலாக எந்தத் தமிழரையாவது சந்திக்க நேர்ந்தாலும், சிறு தலையசைப்புடன் விலகிக்கொள்வார்.

பிள்ளைகளோ தமிழ்ச் சனங்களைக் கண்டால் ஆவலுடன் நோக்கும். அவ்வளவுதான். கதைக்கமாட்டார்கள். கட்டுப்பாடு காரணமாக இருக்கலாம்.

“தமிழர்களுக்குப் பழக்க வழக்கம் தெரியாது… கதைக்கப் பேசத் தெரியாது… தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் என்பது காட்டுமிராண்டித்தனமானவை அல்லது நாகரீகம் அறியாத பத்தாம் பசலித்தனமானவை” என்று தங்களது அறிவுக்கேற்றவாறு தீர்மானித்து, பிறந்து வளர்ந்து வந்த திசையை மேனாட்டு மோகத்துக்குள் அமுக்க முயன்று, எதிலுமே பூரணத்துவம் பெற முடியாதவர்களாய் வாழ்பவர்கள் புலம்பெயர் அகதித் தமிழருள் பலர். இந்தப் பலருள் ஒரு குடும்பமாக சித்திரவேலின் குடும்பத்தைக் குறிப்பிடலாம்.

வீட்டில் என்ன மொழியில் உரையாடுகிறார்களோ தெரியாது. ஆனால் வீதியில்… அதுவும் தமிழர்கள் எதிர்ப்படும் வேளைகளில் அவர்கள் “டொச்”சில் உரையாடுவதை அவதானித்திருக்கிறேன்.

அது அவர்களின் நோக்கு. அதில் ஒரு அற்ப சந்தோசம் உள்ளதென்றால்…. அது எதுவரை என்பதையும் அவர்களுக்குக் காலம் உணர்த்தாமலா இருக்கப்போகிறது?!

“என்னைத் தெரியுதா?” என்ற அவளின் கேள்விக்கு என்ன சொல்லலாம்?!

“தெரியும்” என்று கூறவா? அல்லது “எல்லாமே தெரியும்” என்று கூறவா?! பாவம் இவள்… பெற்றோர்கள் விடும் தவறுகளுக்குப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்?!

“ம்…. நீ சித்திரவேலற்ரை மகள் மேனகா…”

“ஓம்…. மேனகாதான்… உங்களோடை கனக்கக் கதைக்கவேணும்….”

“என்ன ஒருநாளுமில்லாத புதினமாய்… தமிழனோடை கதைக்க வந்திருக்கிறீர்….”

“விளங்குது…. உங்கடை நக்கல் விளங்குது…. ஆனா நீங்களே உங்களைத் தமிழன் எண்டு எப்பிடிச் சொல்லுறீங்கள்…. அதை மற்றவை சொல்லவேணும்…”

“பிள்ளை… இப்ப நாங்கள் வாழுற மண் அன்னிய மண்…. அதாலை முற்றுமுழுதாய் எங்கடை பண்பாடுகளையோ கலாச்சாரங்களையோ வெளிக்காட்ட முடியாதுதான்… எண்டாலும் தமிழன் எண்ட அடையாளத்தோடை வாழ முயற்சிக்கிறன்… தமிழை, தமிழினத்தை மிகமிக அதிகமாகவே விரும்புறன்… ஏன்…. பேசப் பறைய ஏலாத ஒரு ஊமைகூட மற்ற மொழியளைவிட தமிழை….. தமிழினத்தை நேசித்தால்… அதாவது ஒரு பிள்ளை எல்லோரையும்விட தனது தாயை நேசிப்பதுமாதிரி…. அவனும் தமிழன்தான்… ஆனா என்னதான் தமிழ் நல்லாய்த் தெரிந்தாலும், தமிழ் பேசுறதை வெறுத்து… தமிழரோடை பழகுறதை விலத்துறவர்களை என்னாலை தமிழரெண்டு சொல்லேலாது… அவையள் எதுக்குள்ளும் சேராத அரைகுறையள்…- தமிழினத்திலை பிறந்து தமிழினத்தோடை பின்னிப்பிணைந்து வாழுற ஊமையைப்போலை… எனக்கு தமிழைப்பற்றி முழுசாய் தெரியாட்டாலும்… நான் தமிழோடை வாழவிரும்புறன்… அதாலை நான் ஒரு தமிழன் எண்டு சொல்லுறதிலை என்ன பிழை இருக்கு….?!”

“சரி ஐயா… நான் இப்ப உங்களோடை விதண்டாவாதம் பண்ண வரேலை…. உங்களிட்டை என்ரை பிரச்சினைக்கு ஒரு முடிவு கேக்க வந்திருக்கிறன்…”

“பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுற தகுதி எனக்கிருக்கா….?!”

வியப்புடன் கேட்டேன்.

“நீங்கள் தமிழன் எண்டுறீங்கள்… என்ரை தாய் தேப்பன் தமிழராய் இந்த நாட்டுக்கு வந்த பிறகு, தமிழராய் வாழ வெக்கப்பட்டினம்… இந்த நாட்டாக்களோடை பழகுறதை… அவைமாதிரி சாப்பிடுறதை… உடுக்கிறதை… நடக்கிறதை எல்லாம் பெருமையாய் நினைச்சு, அவையளுக்குப் பின்னாலை அலைஞ்சினம்…. என்னையும் அலைய வைச்சினம்…. ஆனா இப்ப… அவையளே தமிழ்… பண்பாடு… கலாச்சாரம் எண்டு என்னென்னவோ சம்பந்தா சம்பந்தாமில்லாமை எனக்காகக் கதைக்க வெளிக்கிட்டிருக்கினம்…. ஏன் இப்பிடி…. எனக்கு விளங்கேலை….”

என்னால்கூட அவள் கூறுவதை நம்ப முடியவில்லை. மாற்றத்துக்கு என்ன காரணமாக இருக்கும்? அவள் மேலே பேசுவதைக் கேட்க ஆயத்தமானேன்.

மேனகா!

அப்பொழுது அவளுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். அவள் படிக்கும் ஜேர்மன் பாடசாலையில் புதிதாக ஒரு தமிழ்ச் சிறுமியின் வரவு. பெயர் சங்கவி.

பார்த்த மாத்திரத்திலேயே சங்கவியுடன் பழகவேண்டும் போலிருந்தது. ஜேர்மன், துருக்கி, போலந்து, ர்யா, ஆபிரிக்கா என்று பலநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களிடம் ஏற்படாத ஈர்ப்பு சங்கவியிடம் ஏற்பட்டது.

தனது இனத்தைச் சேர்ந்தவள் என்ற உள்ளுணர்வு காரணமாக இருக்கலாம். அல்லது “தமிழர்களுடன் பழகக் கூடாது” என்ற பெற்றோரின் கட்டுப்பாடு, அந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்கலாம்.

“எதைச் செய்யக் கூடாது…. எதைப் பார்க்கக் கூடாது…. எதைக் கேட்கக் கூடாது…” என்று பிள்ளைகளுக்கு வேலிபோட்டால், அதைப் பிய்த்து அதற்கப்பால் தேட முயலுவதுதான் சாதாரணமான பிள்ளைகளின் சுபாவம்.

சில நாட்களுக்குள் சங்கவியும் மேனகாவும் நெருங்கிய சிநேகிதிகளாகிவிட்டனர்.

“மேனகா… நீ ஏன் தமிழ் படிக்கேலை….”

“தமிழ் படிச்சால் டொச் படிக்கேலாதெண்டு அம்மா சொல்லுறா…. தமிழ் படிச்சு என்ன செய்ய முடியும்… நாலு காசு சம்பாதிக்க முடியாதெண்டு அப்பா சொல்லுறார்….”

அதைக் கேட்டுச் சிரித்தாள் சங்கவி.

“என்னைப் பார்… எனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும்…. டொச்சும் எழுதப் படிக்கத் தெரியுந்தானே….?! கோவிக்கமாட்டியெண்டால் ஒண்டு கேப்பன்…”

“ம்….”

“நீ என்ன சாதி…. ஜேர்மன் சாதியா…. தமிழ்ச் சாதியா…?!”

திடீரென்று வந்து விழுந்த கேள்விக்கு விடை தெரியாமல் விழித்தாள் மேனகா.

அதற்கு முன்னர் அப்படியானதொரு கேள்வியை அவள் சந்தித்ததில்லை.

யோசித்தாள்…!

“எனக்கு ஜேர்மன் பாஸ்போட்… சட்டப்படி நான் ஜேர்மன் சாதிதான்….”

“ஓ…. எப்பவெண்டாலும் ஒருநாளைக்கு இந்த நாட்டிலையும் இனத்துவேசம் பெரிசாய் வரும். அப்ப வெளிநாட்டாக்களை அடிச்சுத் துரத்துவினம். அந்த நேரத்திலை நீ பாஸ்போட்டைக் காட்டி, “நான் ஜேர்மன்காரி” எண்டு சொன்னாப்போலை விட்டுடுவாங்களே….” என்று கேட்டுவிட்டு மேனகாவை ஊடுறுத்துப் பார்த்தாள் சங்கவி.

“அப்பிடியெல்லாம் இஞ்சை நடக்குமோ…” என்று திகைப்புடன் கேட்டாள் மேனகா.

“ஏன் நடக்காது…. நாங்கள் இந்த நாட்டுக்கு என்னெண்டு வந்தனாங்கள்….”

மேனகா சிந்திக்க ஆரம்பித்தாள்!!

“இன்னொரு விசயம் மேனகா…”

“என்ன…” என்பதுபோலப் பார்த்தாள்.

“பாஸ்போட்டைப் பொறுத்தவரையிலை நீ ஜேர்மன்காரி…. பாசையைப் பேசுறதிலையும் நீ ஜேர்மன்காரியாய் இருக்கலாம்… ஆனா உன்ரை உடம்பு காட்டுற நிறம்…. இது ஆரிலை இருந்து வந்த நிறம்… இதை எப்பிடி ஜேர்மன்காரற்ரை நிறத்துக்கு மாத்துறது….?!”

சாதாரணமாகக் கேட்டாள் சங்கவி.

அசாதாரணமாகத் தென்பட்டது மேனகாவுக்கு.

அவர்கள் பழகப்பழக பலது பக்கமாக வந்து மேனகாவின் மனதைக் குடைந்தெடுத்தது.

அந்தக் குடைதல் ஆற்றாமையாக எழுந்து, இயலாமையாக மாறி, பெற்றோர் முன்னாலே குமுறலாக வெடித்துச் சிதறி வார்த்தைகளாகக் கொட்டியது.

“நான் தமிழ் படிக்கப் போறன்….”

சித்திரவேல் எதிர்பார்க்கவில்லை. அவரது மனைவி சியாமளாவுந்தான்….!

“என்ன நடந்தது இவளுக்கு?!”

“எந்தப் பக்கத்தைத் திருப்பிப் பார்க்கக் கூடாதென்று நினைத்தோமோ, அதைத்தான் புரட்டிப் பார்ப்பேன் என்று அடம்பிடிக்கிற அளவுக்கு அறிவு எங்கிருந்து வந்து இவளுக்குள் புகுந்தது?!”

எரிச்சல் கிளர்ந்தெழுந்தது.

“என்னடி சொல்லுறாய்…?”

சிடுசிடுத்தாள் சியாமளா.

“ஆர் உப்பிடிக் கேக்கச் சொல்லிக் குடுத்தது… உனக்கென்ன விசர்கிசர் பிடிச்சுப்போட்டுதே…. தமிழ் படிச்சு இந்த நாட்டிலை என்ன செய்யப்போறாய்…. வேணுமெண்டால் மேடையிலை “மைக்”குக்கு முன்னாலை நிண்டு பேசலாம்… அதுக்கும் போற வாற செலவு தருவாங்களோ தெரியாது… நீ சொல்லுற படிப்பு ஒண்டுக்கும் உதவாது…” என்று ஏளனமாகக் கூறினார் சித்திரவேல்.

“உங்களுக்குத் தெரிஞ்சது உவளவுதான்… நான் தமிழாள் எண்டு சொல்லுறதுக்கு தமிழ் படிக்கிறது முக்கியம்…”

“வாய் காட்டாதை… உன்னை ஆர் தமிழாளெண்டு சொல்லச் சொன்னது…. ஜேர்மன்காரி எண்டு சொல்லு…”

“பேந்தேன் வாய் காட்டாதை எண்டு சொல்லுறியள்… ஜேர்மன் பிள்ளையள் தாய் தேப்பனைப் பேர் சொல்லியும் கூப்பிடுவினம்…” என்று பொங்கிக் கக்கினாள் மேனகா.

“ஓ… உனக்குக் கனக்கத் தெரியுதாக்கும்…. ஆர் உதெல்லாம் சொல்லித் தந்தது… இது நீயாய்த் தமிழ் படிக்கவெண்டு கேக்கேலை…. ஆரோ சொல்லித் தந்திருக்கினம்…. ஆரெண்டு சொல்லு….” என்று கேள்விக் கணைகளால் அவளை அவர்கள் இருவரும் மாறிமாறித் துளைத்தெடுத்தபோது, “சங்கவியின் சகவாசம்” அங்கே தோற்றமாகியது.

“நினைச்சனான்… இவள் இப்பிடிக் கதைக்க வெளிக்கிடேக்கையே நினைச்சனான்…. ஆரோ எங்கடையள்தான் சும்மா கிடக்க முடியாமைக் குழப்பிவிட்டிருக்குதுகள் எண்டு அப்பவே நினைச்சனான்….” என்று பொரிந்து தள்ளினார் சித்திரவேல்.

“ஊரிலை வேலிப் பொட்டுக்கை தலையை வைச்சிருந்த புத்தி… இஞ்சை வந்த பேந்தும் மற்றவேன்ரேக்கை தலையோட்டச் சொல்லுது… எங்கடையள் எங்கை போனாலும் திருந்தாதுகள்…. மேனகா… உனக்கெத்தனை தரம் படிச்சுப் படிச்சுச் சொன்னனான்…. எங்கடையாக்களோடை சேராதை எண்டு….” எனப் பற்களை நெரும்பிச் சொற்களால் குதறினாள் சியாமளா.

அங்கே மேனகாவின் கோரிக்கை எடுபடவில்லை.

அதன் பின்பு அவளும் அதைப்பற்றி அக்கறைப்படவில்லை.

ஆனால் சகவாசம் தொடர்ந்தது.

அவள் பெருமூச்சுடன் தொடர்ந்தாள்.

“ஒருநாள் என்ரை அண்ணன் கோபி தன்ரை சிநேகிதியைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அவளின்ரை பேர் சில்வியா…. அடிக்கடி அவனோடை வாறவள்தான். அவனோடை தொழிற்சாலை ஒன்றிலை வேலை செய்யுறவள்… அவையின்ரை வருகையும் செய்கையளும் வித்தியாசமாயிருந்தது. ஒருத்தற்ரை கையை மற்றவர் இறுக்கிப் பிடிச்சிருந்திச்சினம்… ஒருநாளுமில்லாத புதினம்…! அம்மாகூடக் கொஞ்சநேரம் ஆச்சரியமாய் அவையைப் பாத்துப்போட்டு, பாத்தும் பாக்காததுமாதிரி “ரீவி”யைப் பாத்துக்கொண்டிருந்தாள்…. வழமையாய் அவளோ இல்லாட்டி வேறை ஆராலும் சிநேகிதப் பெட்டையளோ பொடியளோ வந்தால், தன்ரை அறையுக்கை கூட்டிக்கொண்டு போறவன், அண்டைக்கு சில்வியாவோடை வரவேற்பறையிலேயே நிண்டுகொண்டிருந்தான்… எனக்கு ஏதோ கொஞ்சம் விளங்கியது. என்னவோ முக்கிய அலுவலை அப்பா அம்மாட்டைச் சொல்லத்தான் அங்கை நிக்கிறான்… அப்பாவைக் கூப்பிட்டான். தானும் சில்வியாவும் திருமணம் செய்யப்போறதாய்ச் சொன்னான். பெரிய பிரளயமொண்டு நடக்கப் போகுதெண்ட பயத்தோடை அப்பாவைப் பாத்தன்… இதை முந்தியே எதிர்பார்த்தமாதிரி அவற்ரை முகத்திலை திடீரெண்டு பரவசம் தோன்றியது… மகிழ்ச்சியோடை அம்மாவைப் பார்த்தார்… சந்தோசமாய் அவையளை வாழ்த்தினார்… அம்மாவும் அப்பாவோடை சேர்ந்து வாயெல்லாம் முப்பத்திரண்டு பல்லுந் தெரிய வாழ்த்தினாள்… சில்வியாகூட இதை எதிர்பார்க்கேலைப்போலை…. “தமிழ் தாய் தகப்பன்மார் தங்களுடைய பிள்ளைகளுடைய காதலுக்கு சுலபமாகச் சம்மதிக்கார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் நான் வேறு இனத்தைச் சேர்ந்தவள்… இவ்வளவு விரைவில் நீங்கள் எங்களுடைய திருமணத்துக்குச் சம்மதிப்பீங்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று சொன்னாள் சில்வியா. “ஓம் சில்வியா… நீர் சொல்லுறது அவளவும் நிசம்… எங்கடையாக்கள் உப்பிடித்தான்… பத்தாம்பசலியள்… நல்லது கெட்டது தெரியாமை தாங்கள் பிடிச்ச முயலுக்கு மூண்டு காலெண்டு நிப்பினம்… இதாலைதான் நான் தமிழாக்களோடை அவளவு பழகுறேலை… ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கேற்ற வாழ்க்கையை தெரிவு செய்யுறதை ஆராலை தடுக்கேலும்…? இவையே வாழப்போகினம்… அவைதானே வாழப்போகினம்?! உலகத்திலை எல்லா மனுசரும் சதையாலையும் இரத்தத்தாலையும் ஆனவைதான்… எல்லாருக்கும் ஒரே சிவப்புநிற ரத்தம்தான்… அதைப்போலை உணர்ச்சியளும் ஒண்டுதான்… இதுக்குள்ளை இனம் மதம் மொழியெண்டு மனுசர் தங்களை ஏன் கூட்டங்கூட்டமாய் பிரிச்சுக் கொள்ளவேணும்?! என்னைப் பொறுத்தவரையிலை காதல் எண்ட உணர்ச்சி எல்லாருக்கும் பொதுவானது… அதுக்குள்ளை நாங்கள் ஏன் இனம் மொழி நிறம் எண்டு பாகுபாடு காட்டவேணும்?!” எண்டு வாயிலை வந்ததையெல்லாம் அரைகுறை “டொச்”சில் அள்ளிவிட்டார் அப்பா…

இனம் மொழி நிறம் ஒண்டும் பாக்கக்கூடாதாம்… ஆனால் தன்ரை இனமான தமிழரைப் பாத்தால் விலகிக்கொள்ள வேணுமாம்… நல்லவேடிக்கை… இந்த அப்பாவைப்போலை எத்தனையோ அப்பாக்கள் இருக்கினம்…

கோபி சில்வியாவைக் கூட்டிக்கொண்டு போனபேந்து, “சியா…. டொச்சுக்காரிக்கு மாமியாகப் போறாய்…” எண்டு அம்மாவைப் பாத்துக் கண்களைச் சிமிட்டி அப்பா சிரிக்க, அம்மாவுக்குப் பெருமை தாளவில்லை.

தமிழாக்களிலை எண்டால் மருமேள்மார் மாமா மாமியைக் கவனிப்பினம்… வீட்டு வேலையள் எல்லாத்தையும் தங்கடை தலையிலை போட்டுக்கொண்டு செய்வினம்… புருசன்மாற்ரை குடும்பத்துக்காக மாடுமாதிரி உழைப்பினம்…. புருசன்மாற்ரை சின்னச்சின்னத் தேவையளைக்கூட தங்கடை தேவையள்போலை நினைச்சு அக்கறையோடை நிறைவேற்றுவினம்… எண்டெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா சில்வியாட்டை இதைகளையெல்லாம் எதிபார்க்கேலாது… அவரவர் தங்கடை அலுவலைப் பாக்கவேணும் எண்ட போக்குடையவள்… ஒருத்தர் மற்றவற்ரை அலுவல்களிலை தலையிடக் கூடாதெண்ட மனப்பான்மை உடையவள்… நெருங்கின உறவினர் எண்டால்கூட நேரம் குறிச்சு, நேரம் தப்பாமைச் சந்திக்க வேண்டும் எண்ட ஒழுங்குமுறையிலை வளர்ந்தவள்…. ஆனா இதுகளை எல்லாம் யோசிச்சுப் பாக்கிற நிலையிலை அப்பா அம்மா இல்லை… கோபி திருமணத்துக்குப் பிறகு அப்பா அம்மாவைவிட்டு விலகிப் போகக்கூடிய வாய்ப்பே நிறைய உள்ளது… ஆனா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கோபி ஜேர்மன்காரியைக் கலியாணம்கட்டுறது பெரிய சந்தோசமான விசயமாக இருந்தது.

ஜேர்மன்காரி தங்கடை மருமேள்… கோபி தமிழாக்களுக்கைபோய் விழேலை எண்டதிலை அவையளுக்குப் பெரிய திருப்தி…

“எங்கடை ஆக்களோ…. சீதனம் குடுத்துக் கலியாணம் கட்டுவினம்… பேந்து தாய்தேப்பனுக்குக் காசனுப்பு… சகோதரங்களுக்குக் காசனுப்பு… அவையைக் கூப்பிடு… இவையைக் கூப்பிடெண்டு புருசன்காரனோடை காசு காசெண்டு கூப்பாடு போடுறதே தமிழ்ப் பொம்பிளையளின்ரை வாழ்க்கையாயிருக்கும்… அதுக்கும் பாக்க ஜேர்மன்காரியள் எவளவோ மேல்…” எண்டு ஆராலும் வலியவந்து வியளம் கேக்கிற தமிழாக்களிட்டை அப்பா சொல்லுறதைக் கேட்டிருக்கிறன்…”

ஏதோ பிரச்சினை எண்டவள் இதுகளை எல்லாம் ஏன் என்னட்டைச் சொல்லவேணும்? இதுக்கும் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?

குழப்பத்துடன் கேட்டேன்.

“இதுகளை எல்லாம் சொன்னால்தான் என்ரை பிரச்சினையை உங்களாலை சுலபமாய் விளங்கிக் கொள்ளேலும். நான் ஒருத்தனை விரும்புறன். அவனைத்தான் கலியாணம் கட்டப்போறன். அண்ணனைப்போலை நானும் அவனைக் கூட்டிக்கொண்டு அப்பா அம்மாவுக்கு முன்னாலை போய் நிண்டன். “காதல் எண்ட உணர்ச்சி எல்லா மனுச சாதிகளுக்கும் பொதுவானது… அதுக்குள்ளை ஏன் இனம் மொழி நிறம் எண்டு பாகுபாடு காட்டவேணும்?” எண்டு சில்வியாவுக்கு முன்னாலை தத்துவம் பேசின என்ரை அப்பா கோபத்தாலை முகமெல்லாம் சிவக்க… உடம்பெல்லாம் நடுங்க கத்தினார்… கெட்ட கெட்ட வார்த்தையளாலை திட்டினார்… அம்மாவும் அப்பாவுக்கு மேலாலை பச்சை பச்சையாய் அசிங்க அசிங்கமாய் ஏசினாள்… அவனுக்கு முன்னாலை அவையள் தங்கடை உண்மையான அலங்கோலங்களைக் கந்தல்கந்தலாய் வெளியாலை எடுத்துக் கொட்டிச்சினம்… நான் காதலிக்கிறது ஏதோ செய்யக்கூடாத குற்றமாம்… தமிழ்ப் பொம்பிளையளைப்போலை அடக்க ஒடுக்கமாக இருக்கவேணுமாம்… நான் நினைச்சபடி என்ரை வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடாதாம்… என்ரை வாழ்க்கைக்கு எது எப்பிடி நடக்க வேணுமெண்டது தங்களுக்குத் தெரியுமாம்… அதுதானாம் தமிழாக்களின்ரை கலாச்சாரமாம்… பண்பாடாம்… வழக்கமாம்…” என்று உணர்ச்சியுடன் ஆவேசமாகக் கூறினாள் மேனகா.

“கோபியின்ரை விருப்பத்தாலை பெருமைப்பட்டவை… உன்ரை விருப்பத்தாலை ஏன் ஆத்திரப்பட வேணும்…” எனப் புரியாமல் கேட்டேன்.

“கோபி காதலிச்சது ஜேர்மன்காரி… நான் விரும்பினது ஒரு ஆபிரிக்காக்காரனை…. கறுப்பனாம்… கெட்டவனாம்… அதாலை நான் தமிழ்ப் பெண்ணாய் திடீரெண்டு மாறி அவேன்ரை போக்குக்குப் போகவேணுமாம்… இது என்ன ஞாயம்… ஜேர்மன்காரனுக்கு முன்னாலை நாங்கள் கறுப்பர்… எங்களுக்கு ஆபிரிக்காக்காரன் கறுப்பு… நல்ல வேடிக்கை… ஆபிரிக்காக்காரன் எண்டால் கெட்டவனாம்… ஆனால் எங்களிலை…. வீடு பூந்து கொள்ளையடிக்கிறவை… கொலை செய்யிறவை… “ஏஜென்ஸி” எண்டு சொல்லி பொம்புளையளைக் கற்பழிக்கிறவை… கூட இருந்து குழிபறிக்கிறவை… இவையளெல்லாம் எங்கடை இனத்திலை இல்லையா… இல்லாட்டி மற்ற இனங்களிலைதான் இல்லையா..?!”

அவள் என்னைக் கேட்டாள். நியாயமானவைதான். மறுக்க முடியாதவை… எனினும் ஏதோ ஒன்று நெருடியது… என்னவோ பறிபோய்க்கொண்டிருக்கிற உணர்வு என்னைத் தாக்கியது.

இப்போது நன்றாகப் புரிந்தது. இவள் என்னிடம் கேட்கப்போகிற பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று நன்றாகப் புரிந்தது… தன் காதலுக்கான அங்கீகாரத்தை ஒரு தமிழனிடம் இருந்து எதிர்பார்த்து வந்திருக்கிறாள்… அந்தத் தமிழன் நான் என்றாகி, நான் தர்மசங்கடத்துக்குள்ளாகப் போகிறேன்.

நான் காதலுக்கு எதிரியில்லை… மனங்களில் ஊறி வியாபகமாகும் உண்மையான நல்ல உணர்வுகளுக்கு என்றுமே நான் எதிர்ப்பாளனாக முன்வர விரும்பியதில்லை.

ஆனால்….?!

இந்தக் காதல் கொண்டு வரப்போவது மேனகாவைப் பொறுத்தவரையில் நல்ல விளைவாக இருக்கலாம்… கோபியின் திருமணமும் அவர்களைப் பொறுத்தவரையில் சந்தோசமான சமாச்சாரமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவைகள் எனது இனத்தின் தனித் தன்மைகளைக் காயப்படுத்தும் குண்டூசிகள்… தழிழன் என்ற இனத்தைச் சீரழிக்க எழுகின்ற, எழப் போகின்ற நிகழ்வுகளுக்குப் பலம் சேர்க்கும் விசவித்துக்கள்…

இன்றைய நிலையில் தமிழரெல்லாம் தமிழனாக வாழவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து, தனக்கென உலகில் ஒரு சுதந்திர மண்ணுக்காகக் கந்தகப் புகையுடன் போராட்டத்துக்குள் தங்களை நுழைக்கும்போது… இப்படியான நிகழ்வுகளை எவ்வாறு என்னால் வரவேற்று அங்கீகரிக்க முடியும்?!

முடியாது…!

சீனி இனிப்புத்தான்… அதுக்காக பசியைத் தீர்க்கச் சீனியைச் சாப்பிட முடியுமா?

கறிக்கு உப்பு அவசியம்தான்… அதுக்காக உப்பே கறியாகிவிட முடியுமா?

முடியாது…!!

மேனகா என்னிடம் தன் பிரச்சினைக்குத் தீர்வுகேட்கப் போகிறாள். மறுப்புச் சொல்லி அவளுடைய மனதைப் புண்படுத்தாமல் அவளிடம் இருந்து நான் தப்பித்துக் கொள்ளவேண்டும்.

காதலித்தவளிடம் அவனை மற என்று எப்படிக் கூறமுடியும்? காதலிக்க ஆரம்பிக்காதவர்களிடம் வேண்டுமானால் காதலிக்கும்போது எமது இனத்தைக் கருத்தில் கொள்ளுங்கள் என்றாவது அறிவுரை கூறலாம்…

அதனால்தான்….

அவளிடம் இருந்து அப்பால் ஓட முயன்றேன்… என்னால் முடியவில்லை…. ஏதோ ஒன்று என்னை அசையவிடாமல் அமுக்கி வைத்திருந்தது…

அவளிடமிருந்து நான் விடுபட்டாக வேண்டும்…!

“ஆராலும் வந்து என்னைக் காப்பாத்துங்கள்… என்னைக் காப்பாத்துங்கள்…. காப்பாத்துங்கள்…!”

கத்த ஆரம்பித்தேன்.

அடிக்காத குறையாக உலுக்கி எழுப்பினாள் எனது மனைவி.

“என்னப்பா… கனவு கினவு கண்டனீங்களே….?”

அட…. கனவு…

“எண்டாலும் அந்த மேனகா…. அந்தச் சித்திரவேல் குடும்பம்…. எல்லாமே கனவா…?!”

கண்டதை என் மனைவியிடம் கூறினேன்.

“ஆராலும் தமிழ் பெட்டை பொடியளை வஸ்ஸிலை காரிலை போகேக்கை பாக்கவேண்டியது… பேந்து படுக்கையிலை இருந்து கனவுகண்டு கத்தி, என்ரை நித்திரையையும் குழப்புறது… இதுவே உங்கடை வாடிக்கையாய்ப்போச்சு…”

கனவுதான்… ஆனால் நனவுலகில் இப்படி எல்லாம் நடக்காமலா இருக்கிறது…?!

அவளிடமே கேட்டேன்… மேனகாவின் பிரச்சினைக்கு ஒரு முடிவு… ஒரு அபிப்பிராயம்…

“இண்டைக்கு தங்கடை உரிமைக்காகப் போராடுற இனமாகத் தமிழ் இனம் இருக்கெண்ட ரீதியிலை சொல்லுறன்… தமிழினத்தை அழிக்க முற்படுற எதுவும் அந்த இனத்துக்குச் செய்யுற துரோகத்தனம்தான்… அது இனக்கலப்பாய் இருந்தாலென்ன…. மதக் கலப்பாய் இருந்தாலென்ன…. மொழிக் கலப்பாய் இருந்தாலென்ன… எல்லாம் தமிழினத்தை அழிக்கக்கூடிய விசவித்துகள்தான்….”

அவள் உறுதியாகக் கூறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *