கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,653 
 
 

சிறுத்தை போன்று சிக்‍கென்று இருந்த அந்த கணேஷ் இன்று பெருத்து கருத்த குட்டியாக மாறியிருக்‍கிறான் என்றால் அதற்குக்‍ காரணம் திருமணம் தான். அது ஏன் திருமணம் ஆனவுடன் சாப்பிடுவது தான் தங்களது பிரதான பணி என்பது போலவும், அலுவலகம் செல்வது, 8 மணி நேரம் வேலை செய்வது, குளிப்பது, பல்துலக்‍குவது மற்றும் இதர வேலைகள் அனைத்தும் துணை வேலைகள் என்பது போலவும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் என்று புரியவில்லை. அன்று ஆரம்பித்து, “உங்களுக்‍கு சுகர், பி.பி. உள்ளிட்ட வியாதிகள் வந்து விட்டன உணவை குறைத்துக்‍ கொள்ளுங்கள்” என மருத்துவர் கூறும் வரை அவர்கள் உணவுக்‍ கட்டுப்பாடு குறித்து நினைத்துப் பார்ப்பதே இல்லை.

அவன் திருமணத்திற்கு முன் தினசரி காலையில், எழுந்து ஜாக்‍கிங் செல்வது வழக்‍கம். அப்பொழுதெல்லாம் அவன் உசைன்போல்ட்டைப் போல் வருவான் என்று நினைத்தேன். ஆனால் இன்று உசிலை மணி போல் காட்சியளிக்‍கும் கணேஷைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நிற்கின்ற பேருந்தில் ஏறுவதை அவமானமாக கருதிய கணேஷ் இன்று பேருந்தில் ஏறுவதற்கு ஆர்க்‍கிமிடிஷ் தியரியைக்‍ கடைபிடிக்‍கும் அளவுக்‍கு போய்விட்டது.

ஆர்க்‍கிமிடிஸ் தியரிபடி, “முழுவதுமாக நிரம்பிய நீர்த்தொட்டியில் ஒரு பொருளை போட்டால். அந்த பொருளின் நிறையின் அளவுக்‍கு நீர் வெளியேற்றப்படும்” என்பதாகும். அதன்படி, கணேஷ் பேருந்துக்‍குள் ஏறும் பொழுது சுமாராக 4 பேர் பிதுக்‍கி வெளியேற்றப்படுகிறார்கள். நான் 4 பேருக்‍கு சமம் என இளம் வயதில் நம்பிக்‍கை தெறிக்‍க கணேஷ் கூறியதன் அர்த்தம் அன்று தான் விளங்கியது. ஒவ்வொரு மாநகராட்சிப் பேருந்தும் இவ்வாறு சிதைபட்டு கொண்டிருப்பதை அரசாங்கம் இன்னமும் உணராமலேயே இருக்‍கிறது.

திருமணத்தன்று கணேஷின் முகத்தில் பூரிப்பை பார்க்‍க நேர்ந்தது. பார்ப்பதற்கு பிராட்பிட்டையும்-ஏஞ்சலினா ஜோலியையும் பார்ப்பது போலவே இருந்தது. கணேஷ் தனது இரு கைகளையும் பேண்ட் பாக்‍கெட்டுக்‍குள் விட்டுக்‍கொண்டு ஸ்டைலாக நின்றான். அவன் திருமண விழாவுக்‍கு வந்திருந்த பெண்கள், இளம் வயது அஜீத்தைப் பார்ப்பது போல் வெறித்துபார்த்து ஏக்‍கப் பெருமூச்சு விட்டார்கள். வழக்‍கமாக ஒவ்வொரு இளைஞனும் நினைப்பதுபோல் தான் கொடுத்து வைத்தவன் என மனதிற்குள்ளாக நினைத்து நினைத்து பெருமிதம் கொண்டான் கணேஷ்.

ஆனால் அவன் நினைத்து நினைத்து பெருமிதம் கொண்டதை நிச்சயமாக நினைத்து பார்த்து இன்று ஆச்சரியப்பட்டிருப்பான் என்றே தோன்றுகிறது. அவன் மனசாட்சி உள்ளவன் என்பது எனக்‍குத் தெரியும்.

அவனது இருசக்‍கர வாகனத்தில் ஒருநாள் வெடிவிபத்து ஏற்பட்டதாகக்‍ கூறினான். கணவன் மனைவி இருவரும் அந்த இருசக்‍கர வாகனத்தில் ஒரே நேரத்தில் பயணத்திருக்‍கிறார்கள் என்பதை அப்பொழுதே நான் புரிந்து கொண்டேன். அதை நினைத்துப் பார்க்‍கவே முடியவில்லை. அந்த படுபயங்கர செயல் அந்த பரிதாப வாகனத்தில் பரிசோதிக்‍கப்பட்டிருக்‍கிறது என்று நினைத்துப் பார்க்‍கையில் நெஞ்சு பதறியது.

அந்த சப்தம் 5 கிலோ மீட்டருக்‍கு அப்பால் சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்‍களுக்‍கு கேட்டதாக கேள்விப்பட்டேன். அந்த சத்தத்தால் பலவித வதந்திகள் ஊருக்‍குள் பரவியிருந்ததை காற்றுவாக்‍கில் நான் கேள்விப்பட்டேன். சிலர் கூறினார்கள்.

“கூடங்குளம் அணுமின்நிலையம் வெடித்து விட்டது” என்று.

“நான் அப்பொழுதே கூறினேன், யாராவதுகேட்டீர்களா” என்று அங்கலாய்த்துக்‍ கொண்டார்கள்.

சிலர் கூறினார்கள். ” அந்த வெடிவிபத்து செர்னோஃபிள் வெடிவிபத்தை போல் பயங்கரமாக இருந்தது” என்று

“ஏது ஜப்பானில் ஏற்பட்டதே அந்த விபத்து மாதிரியா”

“அது இல்லைப்பா, இது ரஷ்யா பக்‍கத்துல நைஜீரியாவுல நடந்ததுப்பா” என்று ஆளாளுக்‍குடெவலப் செய்தனர்.

இந்தியாவில் டெவலப்பர்கள் உள்ளனர் என்பதை மைக்‍ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மட்டுமே துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்.

சிலர் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினார்கள்.

“வான்வெளியில் பலகோடி ஒளியாண்டுகளுக்‍கு அப்பால் இரண்டு விண்மீண்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சப்தம் இது என்று நாசா செய்திவெளியிட்டுள்ளதாக” செய்தி பரப்பினார்கள்.

உசிலம்பட்டியில் ஊறுகாய் கெட்டுப்போனால் கூட அதற்கான காரணத்தை நாசாவால் கூறிவிட முடியும் என்பது அவர்களது அசைக்‍க முடியாத எண்ணம்.

“கடந்த ஆண்டு வத்தல குண்டுவில் ஏற்பட்ட வறட்சிக்‍கு காரணம், பசிபிக்‍கடலில் ஏற்பட்ட வெப்பநிலை உயர்வே என யார் தெரிவித்தது, நம்ம நாசாதான்” என பொடி கடை வைத்திருக்‍கும் முனுசாமி தினத்தந்தியில் படித்து விட்டு, அரிசி கடை வைத்திருக்‍கும் ராமசாமிக்‍கு எடுத்துக்‍கூறி ‘எல்நினோ ‘ பற்றி விலாவாரியாக லெக்‍சர் கொடுத்தார்.

மேலும் அவர் வானிலை அறிவிப்பாளர் ரமணனை கண்ணா பிண்ணாவென திட்டித் தீர்த்தார்.

“வானத்தில் 2 நட்சத்திரங்கள் மோதிக்‍கிச்சாம், அதை இந்த ரமணனால் கண்டுபிடிக்‍க முடிஞ்சதா….முடியாது…. இதெல்லாம் அமெரிக்‍கா காரணனுக்‍கு அத்துப்படி, நாசா பயலுகளுக்‍குத்தான் இந்தவிஷயமெல்லாம் துல்லியமா தெரியும். ரமணன் வேஸ்ட், மழை பெஞ்சதுக்‍கு அப்புறம், மழைபெய்யும்னு சொலறதே அவர் வேலையாப்போச்சு, சல்லி பைசாவுக்‍கு பிரயோஜனம் இல்லாத ஆளு”

என கேவலம் கேவலமாக திட்டினார்கள்.

“மெட்ராசுல ஏரி உடைஞ்சத கூட நாசாதான் மொதல்ல சொன்னான். ஆனா கேக்‍கலையே இந்த பயலுக. எங்க அடுத்தவன் கண்டுபுடிச்சத சொன்னா நம்ம கெளரவம் கெட்டுப் போயிடுமோனனு பயந்துதான் சொல்லாமலே விட்டானுக. இப்போ என்னாச்சு மெட்ராசுல மறுபடியும் சுனாமி வந்துடுச்சு. கவுரவம் பாக்‍காம நாசாகாரன் சொன்னதை ஜனங்கள்ட்ட சொல்லியிருந்தா இத்தனை பேர் செத்துருப்பாங்களா இன்னக்‍கி” என மானம் போகும்படி ரமணனைத் திட்டினார்கள்.

“ஒரே ஒரு எஸ்.டி.டி ஃபோன் நாசாவுக்‍கு போட்டா அவன் தெளிவா சொல்லிட்டுப்போறான்.இதுக்‍குப் போய் ரொம்ப அலட்டிக்‍கிறாரு இந்த ரமணருருரு…” என வண்டை வண்டையாகத் திட்டினார்கள்.

“கடைசியில மெட்ராஸ்ல தண்ணீஅடிச்சுக்‍கிட்டு போனப்ப கூட நாசாக்‍காரன் தான் மீட்புக்‍குழுவ அனுப்பி வச்சு நம்ம சனங்கள எல்லாம் காப்பாத்துனான்”

“அப்போ அடுத்த தடவை ஓட்டை அவனுக்‍கே குத்திடலாம்னு சொல்ற அப்படித்தானே”

இப்படி விழுந்த ஒரு 145 ஓட்டுக்‍கள்தான் நாசாவுக்‍கு பதிலாக நோட்டாவில் விழுந்தது.

நாசாவைப் பற்றிய இவ்வளவு துல்லியமான விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பதற்கு முக்‍கிய காரணம் நாசாவுக்‍குள் கேண்டின் லீசுக்‍கு எடுத்திருக்‍கும் தனது பெரியப்பா பையனே என பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறார் அரிசிகடை ராமசாமி.

சென்றவாரம் கூட தற்போதைய ஆளும் கட்சி நாசாவிலிருந்து தினசரி 50 கோடி ரூபாய் கொடுத்து மின்சாரத்தை விலைக்‍கு வாங்கித்தான் தமிழ்நாட்டு மக்‍களுக்‍கு எல்லாம் விநியோகிக்‍கிறார்கள் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர்கள், தினசரி மக்‍கள் பணம் 50 கொடி ரூபாயை வீணடிக்‍கும் இந்த அரசாங்கத்துக்‍கு பாடம் புகட்டும் வகையில் இன்று முதல் யாரும் மின்சாரக்‍ கட்டணம் செலுத்தப் போவதில்லை எனக்‍ கூட்டாக முடிவெடுத்துக்‍ கொண்டனர்.

சிலர் “பூமியின் வடதுருவத்தில் 2 பனிப்பாறைகள் மோதிக்‍கொண்டதால் ஏற்பட்ட சப்தம்” என்று சத்தியம்செய்து கூறினார்கள். புவிவெப்பமயமாதல் குறித்து யார் கவலைப்படுகிறார்கள் என அங்கலாய்த்துக்‍கொண்டார்கள்.

“வடதுருவத்தில் பனிப்பாறைகள் உடைவது இது முதல் முறை அல்ல. வெகு காலமாகவே நடந்து கொண்டுதான் இருக்‍கிறது. இதுக்‍கெல்லாம் காரணம் பெட்ரோல் புகைதான். ஏ.சி. போடாதிங்கன்னா எவன் கேட்கிறான்.” என வெகுண்டெழுந்தார் ஒருவர்.

சென்ற வாரம் எதிர் வீட்டுக்‍காரனிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினார்.

“டேய் நான் ஏன் ஏ.சி. வாங்கல தெரியுமா”

“தெரியாது”

“உலகம் சூடாயிட்டு இருக்‍கு. எல்லாரும் ஏ.சி. போட்டா எப்படி பூமி தாங்கும். கொஞ்சமாவது பொறுப்பு இருக்‍கா”

“நீ பெரிய பொறுப்புவெள்கெண்ணெய், நீ போன மாசம் தான ஃப்ரிட்ஜ் வாங்கி வச்ச, எங்கிட்ட கருத்து கேட்டா போய் வாங்கின”

“டேய் ஃபிரிட்ஜ் வீட்டுக்‍குள்ள இருக்‍கு. அது என்னோட முடிஞ்சிடும், நீ ஏ.சி-யை வீட்டுக்‍கு வெளிய தான மாட்டி வச்சிருக்‍க, அதனால தான்டா வடக்‍க பனிப்பாறை ஒடையுது… ஓசோன் படலம் டர்ர்ர்ர்ர்ர்ருருருன்னு கிழிஞ்சு தொங்குது”

“ஓட்டை விழுந்தா நீ போய் பஞ்சர் ஒட்டு. எங்கிட்ட ஏன் வந்து சொல்ற”

அடுத்த நாள் காலை நாளிதழில், ……. கட்சிக்‍காரருக்‍கு கத்திக் குத்து, முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் ……. கட்சிக்‍காரருக்‍கு கத்திக்‍குத்து என செய்தி வெளியானது.

ஃபிரான்ஸ், அமெரிக்‍கா, பிரிட்டன், போன்ற நாடுகள் நினைத்துக் கொண்டிருக்‍கின்றன, என்னவோ தாங்கள்தான் உலக வெப்பமயமாதல் குறித்து வெகுவாக கவலைப்பட்டுக் கொண்டிருக்‍கிறோம் என்று. ஆனால் இந்தியாவில் கத்திக்‍குத்து நடைபெறும் அளவுக்‍கு பொதுமக்‍கள் உலக வெப்பமயமாதல் குறித்து கவலைப்படுகிறார்கள் என்பது அவர்களுக்‍கு எங்கே புரிகிறது. இந்திய மக்‍கள் பொறுப்புடன்தான் நடந்து கொள்கிறார்கள். உலக நாடுகளுக்‍குத்தான் அந்த பொறுப்புணர்வு குறித்த செய்தி சென்று சேருவதில்லை. இங்கே என்ன சண்டை நடைபெற்றாலும் அது கட்சி சண்டை என்றே செய்தி வெளியிடப்படுகிறது. ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்‍கப்பட்டால் கூட ‘அழகி பிணம்’ என்றே செய்தி போடுகிறார்கள். நம்மூர் செய்தியாளர்களை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்றே புரியவில்லை.

வேறு சிலர், இது நிலநடுக்‍கத்திற்கான அறிகுறி எனத் துண்டை கீழே போட்டு தாண்டி சத்தியம் செய்தார்கள். இந்த கருத்தையும் நாசா தான் சற்று முன்னர் வெளியிட்டதாக குறிப்பிட்டார்கள். “வேண்டுமென்றால் பாருங்கள், விலங்குகள் எல்லாம் பயந்து ஓடும் ” என்று சும்மா படுத்துக் கொண்டிருந்த நாயை வெகு நேரமாக வெறிக்‍க வெறிக்‍க பார்த்துக்‍ கொண்டிருந்தார்கள். ஒரு கல்லை எடுத்துக்‍ கூட அதன் மீது போட்டுப் பார்த்தார்கள். என்ன நினைத்ததோ தெரிய வில்லை அந்த நாய் நிமிர்ந்து கூட பார்க்‍க வில்லை. மரியாதை தெரியாத நாய் அந்த நாய்….

“அய்யனாருக்‍கு நேற்றுதான் படையல் போட்டேன் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை” என செங்கிப்பட்டி வீராச்சாமி ஊர் மக்‍கள் அனைவரையும் சமாதானப்படுத்தினார். என்னதான் ஊர் மக்‍களுக்‍கு அய்யனார் மீது அசைக்க முடியாத நம்பிக்‍கை இருந்தாலும், ஊர் மக்‍கள் அனைவரும் தங்கள் மனைவி ​மக்‍களை வீட்டுக்‍குள் பூட்டிக்‍கொண்டு ஜாக்‍கிரதையாக இருக்‍கும்படி எச்சரித்து விட்டுதான் வேலைக்‍குச் ​சென்றார்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டில் படித்து பட்டம் பெற்ற அவ்வூரின் முதல் இளைஞர் “நிலநடுக்‍கம் வந்தால் வீட்டிற்குள் இருக்‍கக் கூடாது. வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என வெறி கொண்டு பிரச்சாரம் செய்தபின், அவ்வூர் மக்‍கள் அனைவரும் தங்கள் குடிசை வீடுகளை விட்டுவெளியேறி அருகில் உள்ள வனப்பகுதிக்‍குச் சென்று விட்டனர்.

உலகிலேயே பூகம்பத்தில் உயிரிழப்பு ஏற்படாத ஒரே கட்டுமானம் குடிசை வீடுதான் என்பதை இனி அமெரிக்‍க விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துக் கூறினால் மட்டுமே அவ்வூர் மக்‍கள் நம்பி ஊருக்‍குள் செல்வார்கள். அதுவரை அவர்கள் காட்டுக்‍குள் திறந்த வெளியில் வாழ்க்‍கை நடத்தவே விரும்புவார்கள்.

இந்த நிலநடுக்‍கம் இதோடு நின்றுவிடப்போவதில்லை. இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்‍கும். சமீபத்தில் நேபாளத்தில் கூட இப்படித்தான் ஒரு 300 தடவை நிலநடுக்‍கம் வந்தது என அந்த இளைஞர் தொடர்ந்து எச்சரித்து வந்ததால் அவ்வூர் மக்‍கள் மிகவும் பயந்தனர். இனிமேலும் இந்த நாக்‍கை வைத்துக்‍ கொண்டு சும்மா இருக்‍க முடியாது என நினைத்த உள்ளூர் ஞானிகள் சிலர், வரப்போகும் நிலநடுக்‍கம் ரிக்‍டர் அளவு கோளில் 9.5 ஆக இருக்‍கும் என பஞ்சாங்கத்தில் கூட குறிப்பிடப்பட்டுள்ளதாக எச்சரித்தனர். இப்பொழுது வந்த நிலநடுக்‍கம் 8.5 என சரியாக ஏற்கெனவே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், உதாரணம் காட்டினர்.

“இருக்‍கும் இருக்‍கும், அவ்வளவுபெரிய சப்தத்தை என் வாழ்நாளில் நான் கேட்டதில்லை” என பெரியவர் ஒருவர் திகிலடைந்த கண்களுடன் குறிப்பிட்டார். இனி வரப்போகும் நிலநடுக்‍கத்தைத் தடுக்‍க ஏதேனும் பரிகாரம் உண்டா என அய்யனாரிடம் குறி கேட்டனர். சோழி போட்டு பார்த்ததில் அய்யனாருக்‍கு செலுத்த வேண்டிய பாக்‍கி பரிகாரங்களை பைசல் செய்யும் படி குறிகூறப்பட்டது.

சிலர் தாங்கள் வளர்த்த ஆடு, கோழி என அனைத்தையும் அடித்து குருமா வைத்து குடும்பத்துடுன் சாப்பிட்டு விட்டனர். 9.5 ரிக்‍டர் அளவுகோளில் பூகம்பம் வரப்போகிறது என பஞ்சாங்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்‍கிறது. எப்படியும் காடு, நஞ்சை, புஞ்சை என அத்தனையும் பூமிக்‍குள் போகப் போகிறது. சாவதற்குள் எல்லோரும் கறிசோறு சாப்பிட்டு சந்தோஷமாக இருப்போமே என கோழி, ஆடுகளிடம் ஹிட்லரைப் போல் நடந்து கொண்டனர்.

“எனக்‍குத் தெரியும்டா, இயற்கை உரம் போடாம இங்கிலீசு உரத்தை போட்டப்பவே எனக்‍கு தெரியும்டா, பூமா தேவி கோவிச்சுக்‍குவான்னு.”

“கலப்பைல உழுங்கடான்னா, டிராக்‍டர் வச்சு உழுதிங்கள்ள இப்ப அனுபவிங்கடா” என பனாமா சுருட்டை இழுத்தபடி சபித்துக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.

அன்றே நாஸ்ட்ரடேமஸ் கூறினார். 2015ல் உலகம் அழிந்து விடும் என்று” என சிலர் கூறினார்கள். அப்படி என்ன கூறினார் என்று கேட்டதற்கு அது இத்தாலி மொழியில் இருப்பதால் தனக்‍கு புரியவில்லை என்று குறிப்பிட்டார்கள். சில படித்த இளைஞர்கள் இத்தாலியைச் சேர்ந்த நாஸ்ட்ரடேமசைப் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். 2015ஆம் ஆண்டு உலகம் அழியும் என அவர் ஏற்கெனவே எழுதி வைத்துள்ளார் என அவர்கள் பரப்புரை செய்தனர்.

“போன வருடமும், அதற்கு போன வருடமும், மட்டுமில்லாமல் கடந்த 2,000-ஆம் ஆண்டு முதல் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்‍கிறீர்கள்” என சிலர் கலாய்த்தனர்.

“உங்களுக்‍கெல்லாம், நாஸ்ட்ரடேமஸைப் பற்றி என்ன தெரியும் அறிவிலிகளா?” என அவர்கள் கூற,

“நம்ம நாடி ஜோசியத்தில் சொல்லாததையா அவர் சொல்லிட்டாரு” என கேட்ட கும்பகோணத்து மாமாவை கொலை செய்து விடுவது போல பார்த்த அந்த இளைஞர்கள்,

“நாஸ்ட்ரடேமசுக்‍கும், நாடி ஜோசியத்துக்‍கும் ஏணி வச்சாலும் எட்டாது” என தீர்ப்பளித்துவிட்டுச் சென்றனர்.

“இனி அடுத்த வருடம் மழைபெய்யும் போது இதையே வந்து சொல்வீங்க இல்ல பாஸ்” என மறுபடி கலாய்த்து அனுப்பினர் ஊர் மக்‍கள்.

ஆன்மீகத்தில் நம்பிக்‍கை கொண்ட சிலர் “இல்லை…இல்லை…இது கலியுகத்தில் கல்கி பகவான் அவதாரம் எடுத்ததற்கான அறிகுறி” என்றார்கள். இனிமேல் உலகம் அழிவை நோக்‍கித்தான் செல்லும் என்றும் கணித்தார்கள். அதுவும் கல்கி பகவான் அவதாரம் குறித்த நம்பிக்‍கைகொண்ட மற்றொருவரிடமே சத்தமில்லாமல், மெதுவாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த தி.க. கட்சிக்‍காரர்களோ, பெரியாரிசம் பேசுபவர்களோ, நாத்திகர்களோ, இதைக் கேட்க ​நேர்ந்தால் அழுகை வரும் அளவுக்‍கு கிண்டலாக பதிலடி கொடுப்பார்கள் என்பதால் மறந்தும் அவர்கள் காதுகளில் விழுந்து விடாத அளவுக்‍கு மெதுவாக பேசிக்கொண்டனர்.

நமது ஊரில் கல்கி பகவான் அவதாரம் எடுத்தது, நமக்‍கெல்லாம்பெருமை அளிக்‍கக் கூடிய விஷயம் என மகிழ்ச்சியுடன் பெருமிதம் கொண்டனர். அவருக்‍கு நாமெல்லாம் வலது கையாக இருப்போம் என சீரியஸாக சிரிக்‍காமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இனிமேல் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சியெல்லாம் கிடையாது. கல்கி பகவானின் ஆட்சிதான் நடைபெறும் என அதீத நம்பிக்‍கையுடன் ஒரு அமைச்சரைப் போல் குதூகலமாக அவர்கள் கூறிக் கொண்டதை நல்லவேலையாக யாரும் கேட்கவில்லை.

சிலர் அறிவியல் பூர்வமாக சிந்தித்தார்கள். “வதந்திகளை நம்பாதீர்கள் மக்‍களே, நாசா, வடதுருவம்,அணுஉலை, பூகம்பம் அனைத்தும் பொய், ஏமாற்று வேலை, வந்தி பரப்பும் ஆர்வம். இதுபோன்ற சமயங்களில் வதந்திகளை பரப்பி மக்‍களை பயமுறுத்தக் கூடாது என பொறுப்புடன் கூறினார்கள்.

அந்த சப்தத்திற்கு உண்மையான காரணம் என்ன என்று தெளிவுபட அறிவியல் பூர்வமாக எடுத்துக்‍ கூறினார்கள்.

“இந்திய விமானப் படைக்‍குச் சொந்தமான சுகோய் விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட சப்தம் இது” என்றும் இவ்வாறு வெடித்துச் சிதறும் 3 வது விமானம் இது என்றும் அவர்கள் விளக்‍கமாக எடுத்துரைத்தார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பிவிட்டார் என்று மக்‍களை சமாதானப்படுத்தினார்கள். உடைந்த விமானத்தின் பாகங்கள் பற்றிய கேள்வி வந்த போது, அது, மக்‍களோ, மீனவர்களோ, கப்பல்படையோ சென்று பார்க்‍க முடியாத தூரத்தில் வங்கக்‍கடலில் விழுந்து கிடப்பதாகக்‍ கூறினார்கள்.

இதை அரசாங்க வேலை பார்க்‍கக்‍கூடிய பெருவாரியான மக்‍கள் நம்பினார்கள். அவர்களுக்‍குத் தான் அறிவியல் பூர்வமான விஷயங்களில் அவ்வளவு நம்பிக்‍கை உண்டு. அன்றைய மாலை நாளிதழில் கூட விமானம் உடைந்து விழுந்த செய்தி வெளியானது. “ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் சுகோய் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது” என கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருந்தனர். கடைசி வரியில் ” இந்த தகவலை மத்திய விமானப் போக்‍குவரத்து அமைச்சகம் உறுதி செய்யவில்லை” என சிறிய எழுத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

சிலர் இது இந்திய விமானப்படைக்‍குசொந்தமான விமானம் இல்லை என்றும், அது யு.எஃப.ஓ. என்றுஅழைக்‍கக் கூடிய வான்வெளியில் ஏலியன்கள் ஓட்டி வந்த பறக்‍கும் தட்டு என சத்தியம் செய்து கூறினர். அந்த பறக்‍கும் தட்டை தனது இரண்டு கண்களாலும் பார்த்ததாக பெரியவர் ஒருவர் வியப்புடன் கூறினார். ஒருபடி மேலே போய் தனது உறவினர் ஒருவரை அந்த பறக்‍கும் தட்டில் வந்த குள்ள மனிதர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக மற்றொருவர் கூறினார். இதைப்பொறுத்துக்‍கொள்ள முடியாத மேலும் ஒருவர் தன்னை நேற்று கடத்திச் சென்ற அந்த பச்சை நிறக் கண்களுடைய குள்ள மனிதர்கள் இன்று அதிகாலை 3:30 மணிக்‍குதான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து இறக்‍கிவிட்டதாகக் கூறினார். இனதால் வெறுப்படைந்த கோயம்பேடு பகுதிவாசி ஒருவர் அவர்கள் வந்தது அதிகாலை 3:30க்‍கு அல்ல என்றும் 3:45 என்று திருத்தினார். மேலும், ஒன் பாத்ரூம் போவதற்காக வெளியே வந்த தன்னை அந்த குள்ள மனிதர்களில் ஒருவன் அடித்து கீழே வீழ்த்தி தன்மேல் அமர்ந்ததாகவும், தன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து இழுத்து கண்ணுக்கு கண் நேராக முறைத்து பார்த்ததாகவும், அப்பொழுது அந்த கண் நீல நிறத்தில் தான் காணப்பட்டதாகவும், பச்சை நிறத்தில் இல்லை என்றும் விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் அரை மயக்‍கத்தில் இருந்ததால் தனக்‍கு அந்த கண்கள் பச்சை நிறமாக தோற்றமளித்தது என முதலாமவர் தனது வாக்‍குமூலத்தை சிறிது திருத்திக் கொண்டு நல்ல பெயர் எடுத்துக்‍ கொண்டார்.

அவர்கள் புகழ் அமெரிக்‍காவரை சென்று விட்டது. அவர்கள் அடையாளம் சொன்னதை (கற்பனையாக) வைத்து ஹாலிவுட் மேக்‍கப் காலைஞர்கள் புதிய வடிவ ஏலியன்களை வடிவமைத்தனர்.அடுத்த ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், ரிட்லிஸ்காட், ரோமண்ட் எல்ரிச் போன்ற பிரம்மாண்ட இயக்‍குனர்களின் படங்களில் அந்த புதிதாக வடிவமைக்‍கப்பட்ட ஏலியன்களே பயன்படுத்தப்பட்டன. படத்தின் டைட்டில் கார்டுகளில் கூட அவர்களின் பெயர் வெளியிடப்பட்டது. மேலும் அவர்கள் கூற்றுப்படி 21 நபர்கள் தமிழகம் எங்கும் கடத்திச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதில் அழகான, பெண்களும் அடங்குவர். ஒரு அழகான பெண்ணை கற்பழிக்‍க முயன்ற ஏலியனிடமிருந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதாக ஒருவர் பெருமையுடன் குறிப்பிட்டார். அப்போது ஏற்பட்ட காயம்தான் இது என தனது சட்டையைக் கழற்றி முதுகை காண்பித்தார் அவர். அதனால் கோபமடைந்த அந்த ஏலியன் தன்னை கொல்ல நேரம் பார்த்துக்‍கொண்டிருந்ததாகவும், அங்கிருந்த ஒரு நல்ல பெண்ஏலியன் தன் கைக்‍கட்டுகளை அவிழ்த்து விட்டு தன்னை கோயம்பேட்டில் யாருக்‍கும் தெரியாமல் தள்ளிவிட்டதாகவும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ரோஜா படத்தின் கதை போன்று இருந்தாலும் அவர் என்னவோ அரவிந்தசாமிக்‍கு டி.பி. வந்தது போல் தான் காட்சியளித்தார். இந்த கதையை எல்லாம் கேட்டு ரோஜா படத்தையே மீண்டும் எடுத்து வைத்த ஸ்பீல்பெர்க்‍கிற்கு எதிராக மணிரத்தினம் வழக்‍கு தொடர, “இல்லவே இல்லை. அது தன்னுடைய கதை என்று ஒற்றைக்‍காலில் நின்ற சாதித்தார் ஸ்பீல்பெர்க்”

இப்படித்தான் ஈ.டி. படத்தின் கதை தன்னுடையது என ஒரு காலத்தில் வழக்‍கு தொடர்ந்த சத்திய ஜித்ரேயையும் ஸ்பீல்பெர்க் ஏமாற்றினார்.

சிலர் மெட்ரோ ரயில் கீழே விழுந்து விட்டதாகவும், அதில் ஏராளமானோர் உயிரிழந்து விட்டதாகவும் பரப்புரை செய்தனர். ரயில் கீழே விழுந்ததை தனது இரு கைகளாலும் நடித்துக்‍ காண்பித்து தங்கள் கண்ணெதிரிலேயே அந்த சம்பவம் நடைபெற்று விட்டதாகவும் விம்மி விம்மி அழுதார்கள். மேலும் காயமடைந்தவர்களுக்‍கு சரியாக சிகிச்சை அளிக்‍கப்படவில்லை என்றும் மருத்துவர்களை கரித்துக்‍கொட்டினார்கள். மேலும் ஆளும் கட்சியின் செயலற்ற நிலையைப் பற்றியும் கடுமையாக விமர்சித்தனர். ஆளும் கட்சி இந்த விபத்தை மூடி மறைக்‍கப் பார்ப்பதாகவும் கொந்தளித்தனர். எதிர்கட்சியினர் சிலர் இதற்காக கண்டனக்‍ கூட்டம் நடத்தவும் முடிவு செய்துகொண்டனர்.

இந்த இடைவெளியில், தனது உறவினர் ஒருவர், மெட்ரோ ரயில் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், அதற்காக மாநில அரசு 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசு 10 லட்சம் ரூபாயும் என 15 லட்சம் ரூபாய் தனக்‍கு வழங்க வேண்டும் என தனியார் தொலைக்‍காட்சிக்‍கு ஒருவர் பேட்டியளித்தார். அந்த விபத்தில் தனது உறவினர் ஒருவர் காணாமல் போய்விட்டதாகவம், கண்டு பிடித்துத்தருமாறும் உருக்‍கமாக மற்றொருவர் ​பேட்டியளித்தார்.

எங்கள் கட்சியை ஆட்சிக்‍கட்டிலில் அமர வைத்திருந்தால் இதுபோன்ற விபத்தை நிகழவிட்டிருப்போமா? என எதிர்கட்சி தலைவரின் ‘மகர்’ ஒருவர் சவால் விடுத்தார். ஆளும் கட்சியின் ஆஜாக்ரதைக்‍கு இது ஒன்றே மிகப்பெரிய சான்றாகும் என விமர்சித்தார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், இந்த மெட்ரோ ரயில்திட்டமே உங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது போடப்பட்ட திட்டம்தானே என கோபாவேசத்துடன் அறிக்‍கை வெளியிட்டிருந்தார். தீய சக்‍திகளின் போலி பிரச்சாரத்தை மக்‍கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை என உறுதிபட அறிக்‍கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அப்படி எந்த ஒரு விபத்தும் நடைபெறவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது பெரிதாக யாரும் அலட்டிக்‍ கொள்ளவில்லை. ஐயோ முட்டாள் தனமான கருத்துக்‍களையும், அறிக்‍கைகளையும், வதந்திகளையும் பரப்பினோமே என்று சிறிதும் வெட்கப்படவில்லை. அவரவர், அன்றாட வேலையை பார்த்துக்‍ கொண்டு சென்றனர்.

ஆனால்ஒ ரு சில எதிர்க்‍கட்சியினர் மட்டும் ஏதோ சதி நடந்திருப்பதாக சந்தேகப்பட்டனர். மெட்ரோ ரயிலுக்‍குள் ஏதோ வெடி விபத்து நடந்ததாகவும், அதை ஆளும் கட்சிக்‍கு ஜால்ரா அடிக்‍கும் அரசாங்க ஊழியர்கள் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள் என்றும் தங்களுக்‍கு பேசிக்‍கொண்டார்கள்.

இதுகுறித்து தனியார் தொலைக்‍காட்சி ஒன்றில் விவாதம் ஒன்றும் நடத்தப்பட்டது. அப்படிப்பட்ட விபத்து எதுவும் நடைபெறவில்லை என 10க்‍கும் மேற்பட்ட முறை பதிவு செய்தாலும், அதை மறுக்‍காமல் விவாதத்தை எடுத்துச் சென்ற அந்த பயங்கர மனிதரான நிஜம் நிரஞ்சன், கடைசியில் விபத்து நடைபெற்றது போன்றதொரு தோற்றத்தையே ஏற்படுத்தி விட்டார். கடைசியில் நகர மக்‍களும் விபத்து நடைபெற்றதாகவே நம்பத் தொடங்கி விட்டனர்.

கடைசியில் சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்படாத விபத்து சுபாஸ் சந்திரபோஸின் விமான விபத்தைப் போல சர்ச்சைக்‍குரிய விஷயமாக மாறிப்போனது.

இன்னொரு குறிப்பிட்ட கட்சியினர் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு வைக்‍கப்பட்டதாகவே பரப்புரை செய்தனர். அந்த வெடிகுண்டை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சில தீவிரவாதிகளே வெடிக்‍கச் செய்தார்கள் என தாங்களாகவே நம்பத் தொடங்கி விட்டார்கள் மக்‍கள். இதனால் குறிப்பிட்ட அம்மதத்தினர் தங்கள் இருப்பிடங்களை காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்‍கு செல்லத் தொடங்கினர். இதனால் பெரும் கலவரம் ஏற்படும் கடுமையான சூழ்நிலை நிலவியது.

அப்படி எவ்வித குண்டுவெடிப்பும் நிகழவில்லை என்ற உண்மை கடலில் கலந்த தேன் துளியென கரைந்து காணாமல் போனது.

ஆகவே நண்பா கணேஷ், நமது நாட்டை, அதிலும் நமது மாநிலத்தை, மிகச்சாதாரணமாக எடை போட்டு விட்டாய் நீ. இது சாதா நாடு கிடையாது, தமிழ்நாடு. கருத்து சுதந்திரம் கொடுத்தவனை ஏன் அவ்வாறுசெய்தோம் என வேதனைப்பட வைத்தவர்கள். ஃபேஸ்புக்‍கை அடையாறாகவும், வாட்ஸ் அப்பை கூவமாகவும் மாற்றி விட்டவர்கள். எனவே உனது இருசக்‍கர வாகனத்தை உன் ஒருவனுக்‍கு மட்டும் பயன்படுத்து. அல்லது 350 சி.சி. ராயல் என்பீல்ட் புல்லட் ஒன்றை வாங்கிக்‍ கொள்…இன்னொரு டயர் வெடிப்பை இந்த ஊர் தாங்காது நண்பா….மேலும் உனது உடல் எடையை குறைக்‍க வேண்டியதன் அவசியத்தை நீ புரிந்து கொண்டிருப்பாய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *