கனவு கலைந்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 9,144 
 

காலை ஆறு மணி. அலாரம் அடித்தவுடன் அஜயின் தூக்கம் லேசாக கலைந்தது. வீட்டு கூடத்தில் அவன் அம்மாவும், அப்பாவும் எதோ பேசி கொண்டிருப்பது அவன் காதில் விழுந்தது.

“தஞ்சாவூரிலிருந்து வந்த ஜாதகம் நம்ம அஜய்க்கு பொருந்தியிருக்கு. பொண்ணு படிச்சிருக்கு, நல்ல வேலை. எங்க அண்ணனும் நேர்ல போய் பேசிட்டு வந்துட்டார். பொண்ணு வீட்ல சரின்னா அடுத்தடுத்த மாசத்திலேயே கல்யாணத்த வச்சிடலாம்.” – அவன் அப்பா.

“ஹ்ம்ம்… நல்ல படியா முடிஞ்சா சரிதான்.. “, அம்மா.

அரை தூக்கத்தில் இதை கேட்டதும், விருட்டென எழுந்து உட்கார்ந்தான். புன்முறுவலோடு தலைமுடியை கோதி, எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து சிரித்து கொண்டான். காலை வேளையில் இந்த மாதிரி ஒரு நல்ல சேதியை கேட்டால் யாராக இருந்தாலும் சந்தோஷம் பொங்கி வருவது இயல்புதானே!

ஏதும் கேட்காதவன் போல், அறையை விட்டு வெளியே வந்தான். அவனை பார்த்ததும் அம்மாவும், அப்பாவும் பேச்சை சட்டென நிறுத்திக்கொண்டனர்.

“ஹ்ம்ம்… பத்து வயசு, பதினஞ்சு வயசெல்லாம் காதல், கல்யாணத்தை பத்தி பேசுது….ஏழு கடா வயசு எனக்கு.. என் கல்யாணத்தை பத்தி, என் முன்னாடி பேச இவங்களுக்கு என்ன வெட்கமோ தெரியல…” என்று முனகியபடியே பல் துலக்கி விட்டு வெளியே வாக்கிங்க்கு போனான். வழக்கம் போல இல்லாமல், இன்று அதிகமான புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்ந்தான்.

அதே புத்துணர்ச்சியுடன் , காலை உணவிற்காக வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். “என்னம்மா.. இன்னைக்கும் இட்லியா???? ஒரு சப்பாத்தி , பூரி பண்ண கூடாதா?? ” என்று நொந்து கொண்டான். அம்மா ஏதும் பேசவில்லை. தினமும் இதே கேள்வியை இவன் கேட்பதால், அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

“அஜய் , அப்பா ஏதும் சொன்னாரா??? ”

“இல்லையே … என்ன???”, தெரிந்தும் தெரியாதது போல கேட்டான்.

அம்மா விஷயத்தை சொன்னாள்.

மனதிற்குள் மத்தாப்பூ பூத்தது போல இருந்தாலும் , முகத்தை சாதாரணமாகவே வைத்து கொண்டான்..

“இன்னைக்கு மதியத்துக்குள்ள பொண்ணு வீட்ல முடிவை சொல்லிடுவாங்க.. அப்புறம் கல்யாணந்தான்… ”

மீண்டும் உதட்டில் லேசான புன்னகையை மட்டும் பூத்தான்.

பிடிக்காவிட்டாலும் எட்டு , பத்து இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, அலுவலகத்துக்கு கிளம்பினான்.

வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த வண்டியை லேசாக துடைத்து விட்டு, இரு கண்ணாடிகளில் தலையை கோதிவிட்டு, தாடியை தடவி சரி செய்துவிட்டு கிளம்பினான். ஆளில்லா ஓ .எம்.ஆர் சாலையில், யமஹா R15-ஐ காற்றில் பறக்க விட்டான்.

அலுவலகத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் சரியாய் செய்து முடித்து மேலிடத்துக்கு அனுப்பி வைத்தான். என்றும் இல்லாத அதிசயமாய், பக்கத்து சீட்டில் உள்ள கேரள பேரழகி மோனா-வின் சிரிப்பும், பார்வையும் இன்று அவன் மேல் விழுந்தது. ஊரிலிருந்து வந்த தின்பண்டங்களை அவனுக்கு கொடுத்தாள். அஜயின் மனம் ஆனந்த பெருக்கில் ஊறி திளைத்தது.

அலுவலகத்தில் நெருங்கிய நண்பன் ஒருவனிடமும், பள்ளிக்கூட நண்பன் ஒருவனிடமும் மட்டும் போன் செய்து கல்யாண விஷயத்தை சொன்னான். தற்காலிக விடுப்பு, சலுகை விடுப்பு எத்தனை நாட்கள் இருக்கிறது என்று சரி பார்த்து கொண்டான். அலுவலகத்தில் அவன் உத்தியோக பதவிக்கு எவ்வளவு பணம் கடனாய் கிடைக்கும் என்று மனிதவள மேலாளரை கேட்டு தெரிந்து கொண்டான். தேனிலவு சுற்றுலா செல்ல, செலவு எவ்வளவு ஆகும் என்று வலைத் தளங்களில் தேடி பார்த்து கொண்டிருந்தான். மேலும் ‘மேனகா’-வில் சமீபத்திய மாதிரி அட்டைகளைகளையும் வலைத்தளத்தில் நோட்டம் விட்டு கொண்டிருந்தான். நேரம் இனிமையாய் கடந்தது.

மதியத்துக்கு மேலாகியும் வீ ட்டிலிருந்து செய்தி எதுவும் வராததால், பொறுமையிழந்து அவனே அம்மாவுக்கு போன் செய்தான்.

“ஹலோ அம்மா ! ”

“ஹலோ !! சொல்லு அஜய் …என்ன விஷயம் ? ”

“ஒண்ணுமில்லை.. எ…..னக்கு கூரியர் ஏதாவது வந்துச்சா..?? ”

“இல்லையே..”

“வரலையா???… ஹ்ம்ம்… அதான் கேட்டேன்…சரி… வைச்சுடுறேன்…”

“ஒரு நிமிஷம்ப்பா .. ”

“ம்ம்.. என்னம்மா…??” – நாற்காலியில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“அது… பொண்ணு வீட்ல ஜாதகம் சரியில்லை சொல்லி வேண்டாம்ன்னு சொல்லிடாங்கப்பா..”

அவன் ஆசையில் இடி விழுந்தது போல இருந்தது…

“………..”

“அஜய்… லைன்-ல இருக்கியா??? ”

“ம்… பரவாயில்லை…சரி விடும்மா…. அப்புறம் பேசுறேன்…”

அவன் கட்டிய மனக்கோட்டையேல்லாம் தூள்தூளாக உடைந்து போயிருந்தது. எரிச்சலும், சோகத்துடனும் இரவு ஒன்பது மணி வரை கடமைக்கு அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டான். வண்டியின் பின் டயர் பஞ்சர். வண்டியை அரை கி.மீ தள்ளி கொண்டு போய் பஞ்சர் போட்டுவிட்டு வீட்டுக்கு போனான். கடைசியாக வீடு வந்து சேரும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

“என்னப்பா, இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட்டு ?? ”

“கொஞ்சம் வேலை அதிகம்…”

“சரி.. கை கால் கழுவிட்டு வந்து சாப்பிடு ..”

“இல்ல.. வயிறு சரியில்ல….சாப்பாடு வேண்டாம்… ” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டான். வெளியில் பெற்றோர்கள் இருவரும் பேசுவது இவனுக்கு லேசாக கேட்டது.

” நமக்கு என்னங்க குறைச்சல்…? நம்ம என்ன நகை நட்டா கேட்டோம்?? சொந்த வீடிருக்கு… ஒரே பையன்….நல்லா படிச்சிருக்கான்… நல்ல வேலை… மாசம் இருபத்தஞ்சாயிரம் சம்பாதிக்கிறான்…கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்ல… இன்னும் என்ன வேண்டி கிடக்கு இவள்களுக்கு…. சம்பளம் பத்தல…..ஃபாரின் போகல…. கார் இல்ல….கலர் கம்மின்னு 1008 கண்டிஷன்… ஒருத்தி கூட இவனை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்க மாட்டேன்கிறா.. ஹ்ம்ம்… எம் புள்ளைய பாத்தா பாவமா இருக்கு…” என்றாள் அம்மா.

“…ம்ச்ச்… ஆறு வருஷமா பொண்ணு பாக்குறோம்… முப்பத்தி இரண்டு வயாசாகியும், நம்ம சாதி சனத்தில இவனுக்கு ஒரு பொண்ணு கூட அமையலையே….” என்றார் அப்பா வருத்ததுடன்.

இம்முறையும் தான் கண்ட கனவு கலைந்தது பற்றி எண்ணி கொண்டே துயில கண் மூடினான் அஜய்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *