நாணமும் பெண்மையும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,968 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊருக்கு சற்று வெளியே பாலத்திற்கு அருகே பெண்வீட்டார் காத்திருந்தார்கள்.நள்ளிரவுநேரம்.பட்டுப்புடவைகளோடும், பகட்டும் நகைகளோடும், பல பெண்கள் ஆரத்தித் தட்டோடு அமர்க்களமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த கல்யாண வீட்டிற்குள் இருந்த ஒரு கிழவி, இன்னும் இழவு வரல. என்று சொன்னதும் ஒரு சில பெண்கள் அந்த அமங்கலியைத் திட்டுவதற்காக தத்தம் இடுப்புக்களில் கைகளை வைத்தபோது, கிழவியின் பேத்தி ‘ஒனக்கு அறிவிருக்கா பாட்டி?. எந்தச் சமயத்துல எந்த வார்த்த பேசணுமுன்னு தெரியவி யே… வயக மட்டும் ஏறிக்கிட்டு போவுது. இதனாலதான் நாயிகிட்டயும் பேயிகிட்டயும், எச்சிக்கலகிட்டயும் இரப்பாளி கிட்டயும் பேச்சு வாங்குற’ என்றாள்.

திட்டுவதற்கு முன்னாலேயே பேத்திக்காரி இப்படித் திட்டுகிறாள் என்றால், திட்டிவிட்டால் என்ன பேச்சு பேசுவாளோ என்று பயந்தவர்கள்போல், பெண்கள் பேசாமல் இருந்தார்கள். ஒரே ஒரு எமகண்ட – ராகுகால பதினெட்டு வயதுப் பஞ்சாங்கப் பெண் மட்டும், கிழவியின் அமங்கல வார்த்தையை அகற்ற நினைந்தவளாய் இன்னுமா மாப்பிள்ள வரல?. என்றாள். உடனே ஆண்கள் கோஷ்டியில் இருந்த அவள் அத்தை மகன் ‘இன்னா… இருக்கனே. கண்ணு தெரியலியா’… என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.

மாப்பிள்ளையின் ஊர், அய்ம்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்தது. அங்கிருந்து மாப்பிள்ளை கோஷ்டி, தென்காசியில் இறங்கி, ஒரு காரை எடுத்துக் கொண்டு வரவேண்டும். ஏற்கனவே அவர்கள் அமர்த்தியிருந்த மேளக்காரர்கள் பஸ்வில் கோணச்சத்திரத்திற்கு வந்து விட்டார்களாம். மாப்பிள்ளை காளில் வந்ததும்,காருக்குமுன்னால்மேளத்தை அடித்துக்கொண்டு அவர்கள் வர வேண்டியதுதான் பாக்கி.

கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கும். பெண்வீட்டு தவில்காரர்கள் மேளக் கம்புகளைத் துாக்கிவைத்துக் கொண்டு தயாராக இருந்தார்கள். சிங்கி அடிக்கிற பயல் கொட்டாவி விட்டுக்கொண்டே, முதுகில் கடித்த கொசுவை, சிங்கியால் அடித்தான். ஊமைக் குழல் வாசிப்பவர் கன்னத்தை உப்பிக் கொண்டிருந்தார்.

திடீரென்று, கிழவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். வாலிபர்கள் ஓடினார்கள். பெண்கள் குலவையிடுவதற்காக, நாக்குகளை உள்ளே வளத்து, இதனால் மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோஷ்டிவந்துகொண்டிருந்ததே காரணம். எரியாத மின்சார விளக்குகளை, கியாஸ் விளக்குகள் ஈடுகட்டின. மாப்பிள்ளை வீட்டு நாதஸ்வரக்காரர்கள் ஓரம்போ பாடலை வாசித்தார்கள். உடனே பெண்வீட்டு நாதஸ்வரக்காரர்கள் ‘மாப்பிள்ளை வாரார் மாட்டு வண்டியில’ என்ற பாடலை நொறுக்கித் தள்ளினார்கள்.

இரண்டு மேள கோஷ்டிகளும் சங்கமமாக, பெண் வீட்டாரின் பெரிய மனிதரான ஒரு சின்னக் கிழவர், மாப்பிள்கைக்கு மாலையிட்டு, சந்தனம் பூசினார். உடனே மாப்பிள்ளை வீட்டுமேளம், ‘மாமியார்தனமாகவும், பெண் வீட்டு மேளம், ‘அடங்காப்பிடாரி மருமகள் மாதிரியும் போட்டி போட்டுக்கொண்டு வாசித்தன. பெண்களின் குலவை, மேளச் சத்தத்தில் கேட்கவில்லை. மாப்பிள்ளை மேளம் மச்சானப் பாத்திங்களா”வை அடித்தபோது, பெண்வீட்டு கோஷ்டி மலை வாழத் தோப்புக்குள்ளே என்று வாசிக்காமல், ‘கட்டழகப் பாருங்கடி. காலைப்பிடிச்சுவாருங்கடி என்ற பாட்டை வாசித்தது.

‘மாப்பிளை முடுக்கு’ மேளக் கோஷ்டியும், பெண்க்கார மேளச் செட்டும், தவில்களை அடிப்பதற்குப் பதிலாக, ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்களோ என்று சொல்லும் அளவிற்கு மேளக் கம்பை அடிப்பதுபோல் ஓங்கி, மேளங்களை அடித்ததும், நாதஸ்வரக்காரர்கள், கழுத்தை துாக்கி, வயிறுகளை எக்கி, எதிர்த்தரப்புக் கோஷ்டியை இடிப்பது போல் வாசித்ததும், கல்யாண தரப்புகளுக்குத் தெரியவில்லை. அங்கே உள்ள அத்தனைபேரும் மாப்பிள்ளைக்கு அடுத்தபடியாக, கூட்டம் தன்னை மட்டுமே கவனிப்பதாக, ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி முக்கியத்துவமாக நினைத்ததே காரணம்.

‘அரங்கு’ வீட்டில் மேளச்சத்தத்தைக் கேட்டவுடனே, நாணத்துடன் தலை கவிழ்ந்து கொண்டிருந்த மல்லிகாவை, இதர வயதுப் பெண்கள், செல்லமாகத் துாக்கி நிறுத்தி, ஜன்னலுக்கருகே மெதுவாக தள்ளிக்கொண்டுபோய், அதன் கம்பிகளில் அவள் முகத்தை அழுத்தி, “ஒன் ஆச மச்சான நல்லாபாரு… பார்த்தத எங்கிட்டயும் சொல்லு. என்றாள் ஒருத்தி. ‘ஏய் மாப்பிள்ளை எப்படி இருக்கார்னு எவளாவது போயி பாத்துட்டு வாங்கடி. என்றாள் இன்னொருத்தி.

‘எப்படி இருந்தா என்ன.. இனும சட்டியா பானையா மாத்தறதுக்கு? என்றாள் மற்றொருத்தி.

‘இப்படித்தான் நாம ராசாத்திக்கு ஒரக்கண்ணு புருஷன் கெடச்சான். மாப்பிள்ளையை நல்லா பாக்காம அவனோட சொத்து-பத்த பாத்ததால வந்த கோளாறு’ என்று கோளாறு பிடித்த ஒருத்தி தன் அபிலாஷையை செய்தி மாதிரி சொன்னாள்.

மல்லிகா, பயந்துவிட்டாள். அவள் அண்ணிக்காரி, மாப்பிள்ளையை முன்பே பார்த்துவிட்டு, மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை. அவன்தான் மாப்பிள்ளை. ரத்தச் சிவப்பு. கருட்டத் தல…ஏறு நெத்தி. யார்க்கிட்டயும் சிரிச்சுப் பேசுறான். குனிஞ்சதல நிமிறாத பையன்’ என்று சொன்னதால், தனக்குள்ளேயே பூரித்துக் கொண்டவள்தான் இந்த மல்லிகா. இருந்தாலும் ஒரக்கண்ணு மாப்பிள்ள’ என்றதும், மல்லிகாவுக்கு அண்ணி கடைசியாகச் சொன்ன, ‘குனிஞ்ச தல நிமிறாத பையன்’ என்று அப்போது உடலுள்ளே பரிபூரண இன்பத்தை ஏற்படுத்திய வார்த்தை, இப்போது பயமுறுத்தியது. ஒரக்கண்ணா இருந்ததாலதான் குனிஞ்ச தல நிமிறாம இருந்திருப்பானோ. சீ. இருந்திருப்பாரோ.

தோழமைப் பெண்களின் சிரிப்பொலி, இடியொலிபோல் கேட்க, மல்லிகா, பயந்தவளாய், ஜன்னல் கம்பிகளை பாதுகாப்பைத் தேடுவதுபோல் பிடித்தபோது, ஒரு பத்து வயது சிறுமி அங்கு வந்து மூச்சிரைக்கநின்றாள்.மல்லிகாவின் பெரியப்பாபேத்தி.மூச்சுவிட்டுக் கொண்டே பேச்சையும் விட்டாள்.

‘மாப்பிள்ளய பாத்துட்டேன். பாத்துட்டேன்னே..’

‘எப்படி இருக்காரு பிள்ள? அப்படி கேளாதடி. ஒவ்வொண்ணா கேளு’.

‘நீ மெத்தப் படிச்சவ, நீயே கேளு. கேக்கதாண்டி போறேன். ஏய். கனகு, மாப்பிள்ளை நிறம் எப்படி?’

‘சிவப்பு’

‘மொகம்’

‘உருண்ட’

‘பல்லு’

‘வரிச’

‘தடியா. ஒல்லியா…’

‘என்னைவிட தடி. ஒன்னவிட ஒல்லி’

‘இவளமாதிரி தடியா இருந்தால்… அவ்வளவுதான்… வாசலுக்குள்ள நுழைய முடியாது’

‘மொத்தத்துல மாப்பிள்ளை எப்படி?’

சிறுமி விழித்தாள். இன்னொருத்தி கேட்டாள்.

‘அழகா இருக்காரா, அசிங்கமா இருக்காரா’

‘அப்படிக் கேளாதடி. நான் கேக்கேன் பாரு. ஏய், கனகு! மாப்பிள்ளை நம் ஊர்ல யாரு மாதிரி இருக்காருடி.’

‘யாரு மாதிரியும் இல்ல’.

‘அப்படின்னா..?’

‘அழகா இருக்கார்’

மல்லிகா தவியாய் தவித்தாள். ஒருத்திகடட, கண்ணைப் பற்றி கேக்க மாட்டாளோ?. கண் ஒரக் கண்ணாய் இருந்தால், எல்லா அழகும் அசிங்கமாத் தெரியுமே.

மல்லிகா, சிறுமியைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு, அவள் காதருகே வாயை வைத்துக்கொண்டு ‘அவரு கண்ணு எப்படி இருக்கு?’ என்றாள். சிறுமி சத்தம்போட்டே கத்தினாள்.

‘உருண்டையா. வெட்டு வெட்டுன்னு இருக்கு.’

‘நீ என்னடி கேட்ட?. அவள் என்னடி சொன்னாள்?’

‘கனகு. சொல்லாத டி. ஒனக்கு மிட்டாய் தருவேன்.’

‘நீ மிட்டாய் குடுக்காண்டாம். சீக்கிரமா அவளுக்கு ஒரு புருஷன பெத்துக் குடு’

‘பயித்தியம். இசகு பிசகா பேசாம பேச்சே வராது’

‘ஏமுழா சிரிக்கிய… ஒரு காலத்துல, ஒண்னுக்குள்ள ஒண்ணு, கண்ணுக்குள்ள கண்ணா. சொத்து பிரியாம இருக்கணுமுன்னு. பத்து வயகப் பையனுக்கு இருபது வயகப் பெண்ண கொடுத்திருக்காவ… தெரியுமா?’

‘அது ஒங்க வம்முசம்.’

‘எங்க வம்முசத்த என்னத்தழா கண்டுட்ட’

பேசிக் கொண்டிருந்த பெண்கள், வாய்களை ஒடுக்கிக் கொண்டு, கண்களை அகல விரித்தார்கள். மாப்பிள்ளை காரில் கனகம்பீரமாக வந்து கொண்டிருந்தான். கைவிரல்களில் மோதிரங்கள். விரல்களின் குவியலில் ஒரு செண்டுப்பூ. சபாரி பேண்ட்… கோட்… மேளதாளத்துடன் கல்யாண கோஷ்டி வாசல்முன் வந்து நின்றது.

மல்லிகா, பூரித்துப் போனாள். அவள் மனத்தில் நிழலாடிய ஒரு கற்பனை உருவம்போலவே, அவளுக்கு அவன் தோன்றினான். பி.ஏ. படித்தவன். சென்னையில் வேலையாம்.

மாப்பிள்ளை, வலது காலை வீட்டுக்குள் வைத்தபோது, உச்சஸ்தாயியில் ஒலிக்க வேண்டிய நாதஸ்வரங்கள், சாதாரண மாகவே ஒலித்தன. ஏற்கனவே போட்டி போட்டு, ஊதிக் களைத்த நாதஸ்வரக்காரர்கள், இப்போது ஒருவருக்கொருவர்உரையாடுவதில் கவனமாக இருந்தார்களே தவிர, ஊதுவதில் அல்ல.

‘மாப்பிள்ளய கூட்டிக்கிட்டு வாங்கய்யா’ என்றார் நாவிதர்.

மாப்பிள்ளை, மணவறைத் தட்டில் போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றை நிரப்பினான்.

‘சொக்கார-மாரு அலந்தரம் பண்ணுங்கய்யா என்றார் நாவிதர்.

உடனே மாப்பிள்ளை வீட்டுப் பங்காளிகள் ஒரு தட்டில் இருந்த ஆல இலையைக் கிழித்து, இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு, மாப்பிள்ளையின் தலையைச் சுற்றி மூன்று தடவை கொண்டுபோய், பிறகு இன்னொரு பாத்திரத்தில் போட்டார்கள்.

‘பொண்ண கூட்டிக்கிட்டு வாங்கய்யா’ என்றார் நாவிதர்.

மல்லிகா, தலைப்பூவின் பாரம் தாங்காதவள்போல், தலை கவிழ, கண்கள் லேசாகமூடியிருக்க, நான்கைந்துபெண்கள் அவளைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து மணவறையில் மாப்பிள்ளையருகே உட்கார வைத்தார்கள். ஒருவர் உடம்பு, ஒருவர் உடம்புடன் பட்டபோது, இருவருமே பிரக்ஞை அற்றவர்கள் போல், அந்த உணர்வையே ஒரு பிரக்ஞையாக எடுத்துக் கொண்டவர்கள்போல், கண்களைச் சிமிட்டி,லேசாய்நெளிந்தார்கள்.

ஆமணக்குச் செடிபோன்ற பொன் நிறமும், அதற்கேற்ற உடல்வாகும் கொண்ட மல்லிகாவைப் பார்த்து, மாப்பிள்ளை வீட்டு கோஷ்டியின் இளைய தலைமுறை மகிழ்ச்சி அடைந்ததுபோல் ஒருவரை ஒருவர்பார்த்து கண் சிமிட்டியபோது, முதிய தலைமுறை, அவள் போட்டிருக்கும் கால் கிலோ தங்க நகைகளைப் பார்த்து திருப்திபட்டவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து தலையை ஆட்டிக் கொண்டார்கள்.

‘எங்க மல்லிகா. ஒங்க பையனை விட உசத்திதான்’ என்றான் ஒரு பெண்வீட்டு வம்பன்.

‘எங்க பையன் பி.ஏ., ஒங்க பொண்ணு எஸ்.எஸ்.எல்.சி.’ என்றாள் ஒரு பிள்ளை வீட்டு வம்பி.

‘மல்லிகாவோட எஸ்.எஸ்.எல்.சி.யும். ஒங்க பையனோட பி.ஏ.வும் ஒன்றுதான்’ என்றான் இன்னொரு குறும்பன்.

‘அப்படின்னா ஒங்க பொண்ணு அந்தக் காலத்துப் படிப்பா. அவ்வளவு வயசா?’ என்றான் மாப்பிள்ளை வீட்டு மைனர் ஒருவன்.

‘என்னடா செத்த பேச்சு பேகறிய. அர்த்தநாரீஸ்வரர் மாதிரி அவங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான்” என்று அர்த்தத்துடன் பேசினார் ஒரு கிழவர்.

‘ஏய். பொண்ண. ஆற அமர பாக்கலாண்டா. இப்போ, கையில் இருக்கும் தேங்காய, தவறவிட்டுடாதடா…’ என்று மாப்பிள்ளைக்கு தேங்காய் பிரக்ஞையை ஏற்படுத்தினான் ஒருவன்.

மணமகள் மல்லிகா நாண, மாப்பிள்ளை கோண, கல்யாணக் கூட்டம், திடீரென்று சிரித்தது. ஒருவர், மங்கல நாண் இருந்த தாம்பாளத் தட்டத்தை கூட்டத்திற்கிடையே கொண்டுபோக, சபையோர், தாலியைத் தொட்டுக் கும்பிட்டார்கள்.

‘கெட்டி மேளம். கெட்டி மேளம். மாப்பிள்ள தாலி கட்டப் போறாரு’ என்றார் நாவிதர்.

‘கெட்டி மேளம் அடிக்கவில்லை… மேளக்காரர்கள் வாசலுக்கருகே, அடிக்காத குறையாக பேசிக் கொண்டிருந்தவர் களையே பார்த்தார்கள். கூட்டத்தில் ஒரு பகுதி எழுந்து அங்கே குழுமியது.

பெண்ணின் ஊரைச்சேர்ந்த ஒரு வயோதிகர், வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தபோது, அவருக்கருகே இருந்த ஒரு மீசைக்காரர் படபடப்பாகப் பேசினார்.

‘இவரு இந்த ஊரு நாட்டாம. நீங்க இப்படிப்பேசப்படாது’

மாப்பிள்ளை கோஷ்டியின் ஒரு மானஸ்தர், கம்பீரமாகப் பதிலளித்தார்.

‘நாட்டாமையாவது. காட்டாமையாவது… எங்களுக்கு எடுத்தும் பழக்கமில்லை. கொடுத்தும் பழக்கமில்லை.’

‘அது ஒங்க ஊர்ல. ஆனால் எங்க ஊர்ல பொண்ணு எடுக்கவங்களுஞ் சரி. கொடுக்கவங்களுஞ் சரி. நாட்டாமைக்கு. ரெண்டே முக்கால் ரூவா. அதுதான் ரெண்டு ரூபாய் எழுபத்தஞ்சு பைசாவும். மூணு தேங்காயும் ஒரு எலுமிச்சம் பழமும், வெத்தில பாக்கோட கப்பமா கட்டணும்’

‘முடியாத காரியம்’

‘தப்பா நினைக்கப்படாது. ஒங்ககிட்ட மட்டும் இல்ல. எல்லார்கிட்டயும் இப்படி கப்பம் வாங்குறோம்.’

‘கப்பமுன்னு சொல்லாம பிச்சன்னு கேளுங்க. தாறோம்.’

‘வார்த்தய அனாவசியமாவிடாதிய-அப்புறம்வருத்தப்படுவிய’

‘அதத்தான் நானும் சொல்லுறேன்… எங்களுக்கு பிச்ச போட்டுத்தான் வழக்கம். கப்பம் கட்டி பழக்கமில்ல’

‘வார்த்த தடிக்குது. நல்லா இல்ல.’

‘பின்ன என்னய்யா… நாடு சுதந்திரமடஞ்க முப்பது வருஷமாவுது. இன்னும். கப்பம் கப்பமுன்னு பேசுனா என்னய்யா அர்த்தம்?’

‘நீங்க கப்பம் கட்டாம’.

‘சும்மா சொல்லும். கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லப்போறிரு. அவ்வளவுதானே? ஏய். சங்கர். எழுந்திருடா. நாம கப்பங் கட்டி கல்யாணம் பண்ணுற அளவுக்கு மானங் கெட்டவங்க இல்ல’

‘ஒம்ம பையன் போயிட்டா ஒண்ணும் கெட்டுப் போயிடாது. ஆயிரம்பையங்க இருக்காங்க..’

‘ஆயிரம்பையங்க என்ன, அய்யாயிரம்பையங்களுக்கு ஒரே சமயத்துல வேணுமுன்னாலும் மவராசனா பொண்ண கட்டி வையுங்க. ஏய் சங்கர். இன்னுமாடா. பொண்ண இடிச்சிக்கிட்டு இருக்க? கீழ இறங்குல’ மாப்பிள்ளை, கப்பிரமணி உடம்பை நெளித்தான். பெண்ணைப் பெற்றவர், கைகளை நெறித்தார். ஊரைப் பகைக்க முடியாது. கல்யாணக் கூட்டத்தில் ஒருபகுதியினர், கப்பம் கட்டியே தீர வேண்டும் என்பதுபோல் ‘எங்க ஊர்ல வாரவங்க. கப்பம் கட்டித்தான் ஆகணும். கட்டித்தான் ஆகணும்…’ என்றார்கள். என்ன செய்யலாம். எப்படி சமாளிக்கலாம்… பெண்ணின் அம்மா கிட்டத்தட்ட அழுதுவிட்டாள். கப்பம் கட்டுங்கள் என்று மிஞ்சவும் முடியாது, கப்பம் வாங்காதீர்கள் என்று கெஞ்சவும் முடியாது.

‘ஏய் கப்பிரமணி. இதுக்கு முன்னால நீ பொண்ண பார்த்தது இல்லியா? நம்மள அடிம மாதுரி கப்பம் கட்டச் சொல்ற ஊர்ல நமக்கென்னடா வேல.? சீ. கீழ இறங்கு’

மாப்பிள்ளைக்கு, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மல்லிகாவைப் பார்த்துவிட்டு, தயங்கி எழுந்தான். மல்லிகா ‘என்னை விட்டு விட்டுப் போகாதீர்கள்’ என்பது மாதிரி அவனை பரிதாபமாகப் பார்த்தாள். அதற்குள், அவளின் கன்னப் பள்ளத்தாக்கில் அருவி நீர் பாய்ந்தது.

மாப்பிள்ளை தயங்கித் தயங்கி, மயங்கிமயங்கி மணவறையை விட்டு நகரப் போனான்.

மல்லிகா, கூட்டத்தைப் பார்த்தாள். நாட்டாமைக்கு கப்பம்கட்டவேண்டும் என்று வாதாடும் அந்த மீசைக்காரன், இதே இந்த மாப்பிள்ளை, தன் அண்ணன் மகளுக்குக் கிடைப்பதற்காக நடையாய் நடந்தவன். தனக்கு வந்த ஒரு சில வரன்களைக்கூட கலைத்து விட்டவன். இப்போது சாமார்த்தியமாக வம்பை வளர்த்து, ஊராரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, தன் வாழ்வையே குலைக்கப் பார்க்கிறான்.

அவன் குலைக்கிறானோ, இல்லையோ, இப்போது ஊர்மானத்தில் தங்கள் மானத்தை ஐக்கியப் படுத்தியது போல், இங்கே நிற்கும் இதே இந்த மனிதர்கள், நாளைக்கு, இந்த நிகழ்ச்சியையே மறந்துவிடுவார்கள். அவள்தான், காலமெல்லாம் இதைக் கலக்கத்தோடு நினைக்க வேண்டியது வரும். அதோடு ‘ராசியில்லாதவள். பாதி கல்யாணம் முடிஞ்சு. மீதிக் கல்யாணம் முடியாமப் போனவள்’ என்று இதே இந்த வாய்கள் பேகம். இதே பந்தலில் இன்னொரு திடீர் மாப்பிள்ளையை, தன்னருகே நினைத்துப் பார்க்கவே கூச்சமாக இருக்கு. அந்த திடீர் மாப்பிள்ளையே… நாளைக்கு, தன்னை ரட்சித்தவன்போல் அலட்டிக் கொள்ளலாம். இழவுக்கு வரும் கூட்டம், என்றும் தாலி அறுப்பதில்லை. பிணத்தைத் துாக்கிப்போகிறவர்கள் பிணத்தோடு எரிவதில்லை.

ஒரு பெண்ணுக்கு, தன் எதிர்காலத்தைத் தானே நிச்சயிக்கும் தகுதியும், தைரியமும் இருக்க வேண்டும். ஒரு நாளைய ஆரவாரத்திற்காக, ஒரு பெண் தன் வாழ்க்கையை, சம்பந்தப்படாத பிறர் தீர்மானிக்க அனுமதிக்கலாகாது. ஊர்மானத்திற்காக ஒரு பெண்ணின் மானம் பிரச்னையாகக் கூடாது. அதோடு இந்தக் காலத்தில் கப்பம் என்பது ஆணவமான பேச்சு அதற்கு இசையாத அந்த ஊர்க்காரர்களின் நடத்தை நியாயமே. அதோட ஒரு தடவை. மனதில் கணவனாய் நிச்சயிக்கப்பட்டவனை. பிரிவதென்பது.

இதற்குள், மாப்பிள்ளை மணமேடையில் இருந்து குதித்து, மெள்ள மெள்ளவும், பின்னர் வேக வேகமாகவும் நடந்து தனது கூட்டத்தில் சேர்ந்து கொள்ள, அந்த கூட்டமும், வீட்டைவிட்டு நகர்ந்த போது.

மல்லிகா, தான் என்ன செய்கிறோம் என்று புரியாமல், மாப்பிள்ளை மாதிரியே மணமேடையில் இருந்து குதித்து, அவனை போலவே நடந்து அந்த கூட்டத்தில் ஒருத்தியாய் சேர்ந்தாள். ஆபத்து காலத்தில் வெட்கம் ஆபத்தானது என்பதை ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்றி அவள் வாய் பூட்டை உடைக்கவில்லை என்றாலும், கால் சங்கிலியை கத்திரித்து இருக்க வேண்டும்.

எல்லோரும் பிரமித்தார்கள். கூட்டம் இரண்டு பட்டது மாப்பிள்ளை கூட்டம். பெண் கூட்டம் என்றில்லாமல், நாட்டாமை கூட்டம், நாட்டாமை எதிர்ப்புக் கூட்டம் என்று பிரிவுபட்டது. பெண் வீட்டு பங்காளிகள் இப்போது உரத்து கூரலிட்டார்கள்.

‘நாட்டுக்கு சுதந்திரம் வந்தாச்சு… நாங்களும் ஒட்டு போட்டாச்சு. அப்பேர்ப்பட்ட சமிந்தாரே எங்க காதுல விழத குறையா ஒட்டு கேட்டாச்சி. இருக்கிற சொத்த வித்து வித்து திங்கிறதும் தெத்தி பிழைக்குதுமா இருக்கிற இவரு நாட்டாமை இல்ல. ஆம போற வீடு மாதிரி. மாப்பிள்ளை! மேடையில ஏறும்’.

மாப்பிள்ளை வேகமாக ஒடிப்போய் மணமேடையில், ஒட்டிக் கொண்டான். அந்த மேடை நோக்கி ஒடப் போன மல்லிகாவை, அச்சம், மடம், நாணம் போன்ற இத்தியாதிகளை கருதியோ என்னம்மோ, சில பெண்கள் அவளை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு மேடையில் ஏற்றினார்கள்.

நாவிதரின் ஆணைப்படி, மாப்பிள்ளை தாம்பாளத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை மல்லிகாவின் கழுத்தில் கட்டியபோது, மேளக்காரர்கள் யாரும் சொல்லாமலே வாசித்தார்கள்.நாதஸ்வரங்கள் கம்பீரமாக ஒலித்தன. கூட்டத்தில் பெரும்பான்மையினர், கையிலி ருந்த பிடியரிசியை எடுத்து ஆனந்தமாக வீசினார்கள். கூட்டத்தில் ஒரு பகுதி-ஒரே ஒரு சின்னஞ்சிறு பகுதிதான் கோபமாக வெளியேறியது.

– அண்ணா பொங்கல் மலர்-1980 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *