தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 6,627 
 

நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி விட்டது. பிள்ளைகள் இரண்டும் அயர்ந்து தூங்கி விட்டார்கள். அமுதா அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“”என்னங்க ஒத்திகை பாத்து முடிச்சாச்சா? நாளைக்கென்ன பிரைவேட் கம்பெனியிலயா பேசக் கூப்பிட்டிருக்காங்க?”

“”ஆமாம் சிப்காட் ஏரியாவுல இருக்கிற நல்ல கம்பெனி.. அவுங்க ரெக்ரேசன் கிளப்பல பேசக் கூப்பிட்டிருக்காங்க”

ச(த)ன்மானம்

“”அப்ப சன்மானக் கவர் கனமா இருக்கும்னு சொல்லுங்க..”

“”என்ன அதிகபட்சம் போன ரெண்டாயிரம் ரூபா கொடுப்பாங்க… அதுக்கு மேல எங்க தரப் போறாங்க?”

“”இந்த ரூபாய்ல எனக்குப் பொடவ எடுத்துத் தருவிங்களா?..”

“”நிச்சயமா எடுத்துத் தர்றேன்.. என்ன திடீர்னு ஆச?”

“”எம்புருசன் பேசிச் சம்பாரிச்ச பணத்தில வாங்கின புடவைன்னு எங்க ஆபீஸ் தோழிகள்ட்ட பெருமையா சொல்லிக்கிட வேண்டாமா..”

“”சொல்லலாமே…. அது சரி அமுதா நாவொன்னு கேட்ட தப்பா நெனைக்க மாட்டியே?”

“”என்ன புதிர் போடுறீங்க. சும்மா கேளுங்க”

“”இல்ல என்னைக்காவது இந்த மனுசன் எதாவது நல்ல வேலைக்குப் போய் மாதச் சம்பளம் வாங்காம இப்படி ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் படாதபாடு படுறாரேன்னு கவலைப்பட்டிருக்கியா?”

“”ச்சே… அப்படியெல்லாம் இல்லிங்க இதெல்லாம் நான் விரும்பி ஏத்துக்கிட்டதுதான… இப்ப நமக்கு அப்படி என்ன கஷ்டம்.. கைநிறைய நான் சம்பாதிக்கிறேன் அப்புறம் என்ன? நீங்களும் என்னை மாதிரி மாதச்சம்பளம் வாங்கிட்டு வந்தா என்ன பெரிய மாற்றம் நடந்திருக்கும்? கண்ட கண்ட சாமான்கள் வாங்கி வீடு நிறைய அடுக்கி வச்சிருப்போம். அதனால என்ன பிரயோசனம்? ஒங்களுக்கு இப்ப இருக்கிற மனத்திருப்தி.. உற்சாகம் இருந்திருக்குமா. இருந்திருக்காது. நெலமைகள் இப்படியே போயிடாதுங்க. என்னோட ஒரு மாதச் சம்பளத்த ஒரு வாரத்தில சம்பாதிக்கிற நெலம நிச்சயம் வரும்.. பேரும் புகழோட கொடிகட்டிப் பறப்பீங்க… பாருங்க”

“”ஒன்னோட வாக்குப் பலிக்கட்டும் நியாயமான ஆசை நிறைவேறட்டும்.. குட் நைட்..”

அன்று அந்த தனியார் நிறுவன மனமகிழ் மன்றத்தின் ஆண்டுவிழா. ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவை வெகு விமரிசையாக நடத்துவார்கள். மெல்லிசை, நாட்டியம், சொற்பொழிவு என்று அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.

இந்த ஆண்டு நகைச்சுவைப் பேச்சாளர் நன்மாறனை பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள். இந்த நன்மாறன் சமீப காலமாக பிரபலமாகி வருகிற நகைச்சுவை சொற்பொழிவாளன். நான்கைந்து தடவை தனியார் தொலைக்காட்சிகளில் தலைகாட்டிய பிறகு இவனுக்கு பேசுவதற்கு வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கல்லூரி விழா, இலக்கிய மன்ற விழா, லயன்ஸ் கிளப் இத்தியாதிகளில் பேசிப் பிரபல பேச்சாளர் வரிசையில் ஒருவனாக உயர்ந்து வருகிறான் நன்மாறன்.

ஒரு மணி நேர நன்மாறனின் உரையினை கேட்பவர்கள், தம் கவலைகள் மறந்து வாய்விட்டுச் சிரிப்பார்கள். அரைத்த மாவையே அரைத்து அதாவது ஏற்கெனவே பேசிய விசயங்களைப் பேசுகிற பழக்கம் நன்மாறனுக்குக் கிடையாது. புதுப் புதுச் சங்கதிகளை உள் வாங்கி நகைச்சுவை கலந்து.. சூழ்நிலைக்குத் தகுந்தபடி பேசி கைதட்டுப் பெறுவான். போதிய தயாரிப்பு இல்லாமல் நிகழ்ச்சிகளுக்குப் போக மாட்டான். ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவனது தயாரிப்புகள் வேறு வேறு விதமாக வெளிப்படும். பேசியதைப் பேசுதலைப் பின்பற்றாத அவனது பேசும் பாணி பார்வையாளர்களின் மனதைப் பரவசப்படுத்தும்.

ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிவிடும் என்று தெரியப்படுத்தி இருந்தனர். மணி இப்போது ஐந்தைக் கடந்து ஐந்து நிமிடங்கள் ஆகி இருந்தன. அந்த நிறுவனம் அவனது வீட்டில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இப்போது புறப்பட்டால் சரியாக இருக்கும். அதனால் தன்னை எளிமையாய் அலங்காரப்படுத்திக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்திற்கு உயிர் கொடுத்தான் நன்மாறன். ஐந்து முப்பதுக்கு அவனது வாகனம் கம்பெனி வாயிலில் வந்து நின்றது.

கம்பெனி பி.ஆர்.ஓ. கைகுலுக்கி வரவேற்று அரங்கிற்குள் அழைத்துப் போனார். நாதஸ்வர இசை ஒலி பெருக்கி மூலம் செவிகளுக்கு விருந்தளித்தன. அலுவலர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் போன்று சீருடையில் ஜொலித்தார்கள். ஒவ்வோர் அலுவலர் வகிக்கும் பதவியைச் சொல்லி பி.ஆர் ஓ. அறிமுகப் படுத்தி வைத்தார். எல்லோரும் நன்மாறனுக்கு கஞ்சத்தனம் காட்டாது கை கொடுத்து புன்னகை பூத்தார்கள்.

இந்த நிறுவனத்தில் பேண்ட், லெதர் பேக், மணி பர்சு முதலியனவற்றிற்குப் பயன்படுத்துகின்ற ஜிப் தயாரிக்கிறார்கள். இங்கு முன்னூறுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள் என்று நன்மாறன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் தொழிலாளர்கள் ஒருவர் கூட விழா அரங்கில் காணோம். ஏன் என்கிற கேள்வி மனதைத் துளைக்க கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்த அலுவலரிடமே இது குறித்துக் கேட்டுவிட்டான்.

“”இந்த ரெக்ரேசன் கிளப் ஆபீஸ்ல ஒர்க் பண்ணுறவுங்களுக்கு மட்டுந்தான். ஃபேக்ட்ரில ஒர்க் பண்ணுற லேபர்களுக்குக் கெடையாது..” என்றார். லேபர்களுக்கு மனமகிழ்ச்சி தேவையில்லையா.. நன்மாறனின் மனது கேட்க “”அப்படியா..” என்று மட்டும் உதடு ஓர் வார்த்தையை மட்டும் உதிர்த்தது.

சரியாக ஆறு மணிக்கு நீராரும் கடல் உடுத்த தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வரவேற்புரை, தலைமையுரை, ஆண்டறிக்கை வாசித்தல், வரவு செலவு அறிக்கை படித்தல் என்று வழக்கமான சடங்குகள் நிறைவேறின. அநேகமாக அடுத்து நாமதான் மைக்கைப் பிடிக்க வேண்டும் போல நன்மாறன் நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது பி.ஆர். ஓ. அவனிடம் கவரைக் கொடுத்தார். ஆவல் மிகுதியால் இலேசாக கவரை விலக்கிப் பார்த்து ஆனந்த அதிர்ச்சிஅடைந்தான். இதுவரைக்கும் இவ்வளவு பெரிய தொகை அவன் பெற்றதில்லை. ஆம். ஐயாயிரம் ரூபாய்க்கான காசோலை கவருக்குள் இருந்து கண் சிமிட்டியது.

அரங்கில் அநேகமாக ஒரு நூற்றைம்பது பேர்கள் நிறைந்திருந்தார்கள். திடீரென ஒருவர் அரங்கிற்குள் நுழைந்து ஒவ்வொருவரின் காதுகளில் ஏதோ சொல்ல குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒவ்வொருவராக எழுந்து எதிரில் இருந்த அறை நோக்கிப் போனார்கள். பத்து நிமிட கால அவகாசத்தில் அரங்கில் காலிச் சேர்களே கண்ணில்பட்டன. ஆறேழு பேர்கள் மட்டும் அரங்கில் இருந்தார்கள். அங்கு தண்ணி பார்ட்டி நடக்கிறது. இங்கு எஞ்சியவர்கள், தண்ணிப் பழக்கம் இல்லாதவர்கள் என்கிற விசயம் நன்மாறனுக்கு விளங்கிட வெகு நேரம் ஆகவில்லை. காற்றுப் போன பலூன் மாதிரி ஆனான் நன்மாறன்.

மேடை நோக்கி வந்த பி. ஆர்.ஓ. “”சார் பேசுங்க” என்றார்.

“”என்ன சார் இது அநியாயமா இருக்கு? ஏழு பேருக்குப் போய் எப்படி சார் பேசுறது?”

“”என்ன சார் பண்றது? திடீர்னு ஜி.எம். அந்தப் பார்ட்டிக்கு அரேஞ்சு பண்ணச் சொல்லிட்டாரு. ஒங்களுக்கு என்ன சார்? ஏழு பேர் இருந்தா என்ன? எம்பது பேரு இருந்தா என்ன..?”

“”இல்ல சார்… என்னால முடியாது”

“”என்ன சார் ஏழு பேர்தான் இருக்காங்கன்னு ஒங்க சன்மானத்தைக் கொறைக்கலையே?சரியான சன்மானம் கொடுத்திட்டோமில்ல..?”

“”சன்மானம் முக்கியமில்ல சார். ஆடியன்ஸ் அரங்கு நிறைஞ்சு இருந்து என்னோட பேச்ச ரசிச்சு அதுக்கு கிடைக்கிற கைதட்டல்கள் இருக்கே அந்த சந்தோசத்த எவ்வளவு சன்மானம் கொடுத்தாலும் ஈடு கட்ட முடியாதுங்க”

“”இப்ப என்னதான் சொல்ல வர்றிங்க?”

“”இந்தாங்க ஒங்க சன்மானம். நான் கெளம்புறேன்”

காசோலைக் கவரை பி.ஆர்.ஓ. விடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியேறினான் நன்மாறன். அவனின் வேக நடையில் அவனின் தன்மானம் பளிச்சிட்டது..

– செல்வகதிரவன் (ஆகஸ்ட் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *