லூனாவை எழுப்புவது

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 1,420 
 
 

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா, ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம் செலுத்தும் சுரங்கப் பாதைக்கு எதிரிலும், வீடு திருத்தவேலை சாமான்கள் விற்கும் ஹோம் டிப்போவுக்கு பக்கத்திலும் உள்ளது. இங்கே வசிப்பவர்கள் ஹோம் டிப்போவுக்குப் போய் அங்கே சுத்தியலும், சுவருக்குப் பூசும் வர்ணமும் வாங்கப்போவதில்லை என்பதை நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் துக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் அது அங்கே பிரம்மாண்டமாக காத்திருக்கிறது. நியூ யோர்க் நகரம் 8 டொலரும், 10 நிமிடமும் செலவாகும் தூரத்தில் இருக்கிறது.

லூனா என்னை அழைக்காத இரவுகளில் அவள் இப்படித்தான் இருப்பாளென நான் கற்பனை செய்கிறேன். ஒட்டிப்பிடிக்கும் கட்டில் விரிப்புகள் மேலே, சிராய்த்துத் தள்ளும் பொலியெஸ்டர் போர்வைகள் மூட, மூலைகள் மஞ்சளாகிப்போன தலையணைகள் மேல் படுத்துறங்குகிறாள். அவள் கட்டில்கள் ஆடி அசைந்து முனகி அவளைத் தாலாட்டும். மெத்தைகள் கன்னங்களை அழுத்தி கோணல் சிரிப்பு உண்டாக்கும். அவளுடைய மினுங்கும் உடலின் மேல் குளிர்காற்று வீசும் மெசின்கள் தூசிகளை சொரியும்.

நெருப்பில் வாட்டிய ஆட்டு இறைச்சி பல மைல்கள் தூரத்துக்கு மணக்கும் பேபிரிட்ஜ் நகரத்திலிருந்து அப்பாவுடைய பழைய காரை நான் இங்கே ஓட்டிவந்திருக்கிறேன். நான் திராட்சை இலைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் லூனா என்னை அழைக்கிறாள். ‘என்னை வந்து அழைத்துப் போ.’ அது ஆணை இல்லை. கெஞ்சல் இல்லை. சாதாரண ஒரு வாக்கியம்தான். வெள்ளிக்கிழமை பின்மதியம் என்பதால் எங்களுடைய இரண்டு அம்மாமாரும். தொழுகைக்கு போய்விட்டார்கள். என்னுடைய அப்பா தன் நண்பர்களுடன் வீதி மூலையில் உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டிருக்கிறார். நான் நூலகத்துக்கு போகவேண்டும் என்று சொன்னதும் கார் சாவியை எடுத்து நீட்டுகிறார்.

நான் பழைய டயர்கள் விற்கும் கடைக்கு பக்கத்திலும், ’ஜேர்சி நகரம் வரவேற்கிறது’ என்ற விளம்பரப் பலகைக்கு அருகேயும் காரை நிறுத்துகிறேன். விடுதி வரவேற்பறையில் இருந்து லூனாவை அழைக்கிறேன். பதில் இல்லை. நான் கண்ணாடி யன்னல் அழைப்பு மணியை அழுத்தினேன். சிறிது நேரம் கழித்து எனக்குப் பின்னால் ஒருவர் நிற்பதை உணரமுடிகிறது. வியர்வை வழியும், கட்டையான, வலது பக்கம் மட்டுமே மீசையுள்ள மனிதர். நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன், ‘உங்களுக்கு தெரியுமா, உங்கள் முகத்தில் அரை மீசைதான் உள்ளது.’ பெரிசாக மூச்சு விட்டுக்கொண்டு எனக்கு நெருக்கமாக நிற்கிறார். அவர் ஏதோ சொல்கிறார். அதன் பொருள், ’12 மணிக்கு அவள் விடுதி அறையிலிருந்து போயிருக்கவேண்டும். உடனே அவளை வெளியேற்று.’

எனக்குப் புரிந்துவிட்டது, லூனாவின் வசீகரத்துக்கு அகப்படாத மனிதர் இவர் என்று. அப்பா ஒருமுறை லூனாவை மீட்கப் போனபோது அவள் மேசைமேல் குந்தியிருந்து தொக்கையான ராணுவக்காரனுடன் பெருவிரல் சண்டையில் மும்முரமாக இருந்தாள். அதுபோல அல்ல இது. ஒருதடவை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது மாணவ மாணவிகள் வீதியை கடக்க உதவி செய்பவர் இவளிடம் ஒளித்தடியை கொடுத்திருக்கிறார். இவள் சூனியக்காரிபோல ஒளித்தடியை தாறுமாறாக வீசியடித்திருக்கிறாள். அது போலவும் அல்ல இது. எனக்கு உடனே நிலைமை புரிந்துவிட்டது. பாதிமீசை மனிதர் எங்கள் வேலையை சுலபமாக்கப் போவதில்லை. எப்படியும் கொஞ்ச நேரம் சம்பாதித்து லூனாவை அறையினுள் வைத்து அடைத்துவிட வேண்டும்.

எங்களுக்கு எட்டு வயதாயிருந்தபோது, எங்கள் தொழுகை முடியுமட்டும் உலகம் அப்படியே நிற்கும் என்றுதான் நினைத்திருந்தோம். வெள்ளை தொழுகைத் துணிகளால் தலையை மூடி, முழங்காலில் உட்கார்ந்து, வளைந்து பின் தலையை வலது பக்கமும் இடது பக்கமும் திருப்பி ’சமாதானம் உண்டாகட்டும்’ என வேண்டியபின் எழும்பி நின்று தலை துணிகளை கழற்றிவிட்டு பார்த்தால் Duck Tales டிவியில் ஓடி பத்து நிமிடம் முடிந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அரை மீசைக்காரர் என்னை மாடிப் படியேறி முதலில் வலது பக்கம் திரும்பி பின்னர் இடது பக்கம் போகச் சொல்கிறார். அவரும் என்னை விடாமல் பின்தொடருகிறார். 206ம் அறை வந்ததும் என்னை நிற்கச் சொல்லிவிட்டு. எனக்குப் பின்னால் நின்றபடி திறப்பை நீட்டி கதவுத் துவாரத்தில் நுழைக்கிறார். அவருடைய மூச்சு என் கழுத்துப் பகுதியில் படுகிறது. அவர் கண்கள் என் மார்பை பார்க்கின்றன. தொழுகை பிரார்த்தனையில் என்ன அன்று போதிப்பார்கள் என்று என் மனம் யோசிக்கிறது.

கதவு திறக்கிறது. இரண்டு பிரபல துப்பறியும் நிபுணர்கள் குற்றம் நடந்த இடத்தை சோதிக்க வந்ததுபோல நாங்கள் நிற்கிறோம். மீசைக்காரரைப் பார்த்து நன்றி என்று சொல்கிறேன். ‘அந்தப் பெண்ணை சுத்தம் செய்ய நான் உதவமுடியும்’ என்கிறார். நான் ’பரவாயில்லை’ என்றதும், ‘என்னுடைய விடுதியில் விலைமகள்கள் இல்லை. உனக்குத் தெரியும்தானே’ என்கிறார்.

‘அவள் விலைமகள் கிடையாது’ என்று சொல்ல ஆரம்பிக்கிறேன். அவருடைய கை மணிக்கட்டை விட்டு விலகியதுபோல என்னுடைய உடம்பில் ஊரத்தொடங்குகிறது. ‘நீ வனில்லாபோல மணம் வீசுகிறாய்’ என்கிறார். அவர் என்னைத் தொடரமுன் நான் அறைக்குள் நுழைந்து கதவை மூடி, சங்கிலியை மாட்டி, தாழ்ப்பாளை போட்டுவிடுகிறேன். அவர் மறுபக்கத்தில் நின்று ‘நான் ஒரு நிமிடத்தில் திரும்புவேன்’ என்கிறார்.

லூனா படுக்கையில் பதனம் செய்யப்பட்ட எகிப்திய பிணம்போல நேராக அசைவின்றிக் கிடக்கிறாள். நான் அவளுக்குப் பக்கத்தில் படுத்து அவள் வயிற்றிலே கைவைத்து அது மேலும் கீழும் அசைவதை உணர்கிறேன். ஒருகாலத்தில் அப்படிக் கைவைக்காமலே அவள் மூச்சு விடுகிறாள் என்பதை என்னால் சொல்லக்கூடியதாக இருந்திருக்கிறது. இப்பொழுது அளவுக்கதிகமான அவளுடைய மூச்சுக்காற்று என்னைச் சுத்தியிருக்க எனக்கு சிறிது மயக்க உணர்வு ஏற்படுகிறது. நான் கண்களை மூடிக்கொண்டு ஐந்து நட்சத்திர வால்டோர்ஃப் ஹொட்டலில் இருப்பதாகக் கற்பனையில் மூழ்கிறேன். லூனா, தான் எங்கே இருக்கிறாள் என்பது எனக்கு தெரியக்கூடாது என்று நினைக்கும்போது வால்டோர்ஃப் ஹொட்டலில் தங்கியிருப்பதாகத்தான் புளுகுவாள்.

போன வருடம் அவளுடைய பிறந்ததினம் அன்றுகூட மறைந்துபோனாள். அவளுடைய அம்மா, லூனாவுக்கு மிகவும் பிடித்தமான, பிஸ்தா போட்டுச் செய்த இனிப்புச் சாதத்தில் மெழுகுதிரியை குத்தப்போன சமயம் லூனா காணாமல் போய்விட்டாள். மூன்று மணிநேரம் கழித்து நான் அவளை பிளாட்புஷ் வீதியில் காலணிகள் இல்லாமல், மென்சிவப்பு குழல் உடுப்பில் கண்டுபிடித்தேன். அந்த உடையை அவளுடைய அம்மா கண்டிருந்தால் முழங்காலில் விழுந்து உடனேயே பாவமன்னிப்பு தொழுகையை ஆரம்பித்திருப்பார். ’அமீரா, நான் என்னுடைய காலணிகளை என்ன செய்தேன் தெரியுமா?’

‘நாசமாய் போனவளே, நீ எங்கே போனாய்?’

‘ஓ, வால்டோர்ஃப் ஹொட்டலுக்குத்தான்’ என்றபடி என் கால்களின்மேல் ஏறி நின்று என் தோள்மூட்டுக்குள் முகத்தை நுழைத்தாள். ‘நான் டேவ் சப்பலின் சகோதரனைச் சந்தித்தேன். அவன் மஞ்சள் நிறமூடி திறந்த காரை ஓட்டுகிறான். அவன்தான் என்னை வால்டோர்ஃப் ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றவன். பரிசாரகன் வந்து எனக்கு என்ன இரவு உணவு வேண்டும் என்று கேட்டபோது நான் ‘ஒரு பிளேட் நிறைய இனிப்பு வகைகள்’ என்று சொன்னேன். நான் அவனுடன் போயிருக்கத்தான் வேண்டும்.’

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா நிறைய போதைப்பொருளை மூக்கினால் உறிஞ்சுகிறாள். பகல் நேரத்தில் தாயாருடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துவிட்டு, இரவுகளில் பிக்கினி உடையில் மதுவிடுதிகளில் நடனமாடுகிறாள். இளைஞர்கள் வாய்களில் மதுவை ஊற்றிவிடுகிறாள். முதியவர்கள், இளம்பெண்களின் சுருண்டுபோன உடல்களை மடிகளில் சுமந்து, காதுகளில் அவர்களின் இனிய வார்த்தைகளை கேட்டு மகிழ்கிறார்கள். வழுக்கை விழாவிட்டால், இளம் விரல்கள் முடியை கோதிவிடுவதை விரும்புகிறார்கள்.

லூனாவின் அம்மா அவள் நாய் காப்பகம் ஒன்றில் இரவு வேலை செய்கிறாள் என்றே நினைக்கிறார். நாய்களுடன் அவள் இத்தனை நேரம் கழிப்பது அவருக்கு விருப்பமே இல்லை. ஆனால் அவள் வேலையிலிருந்து திரும்பும்போது அவள் உடம்பில் பெருகி ஒட்டியிருக்கும் வியர்வையும், கழுத்துக் கீறல்களும், உள்தொடையில் உள்ள கன்றிப்போன காயங்களும், மூக்குத் துவாரங்களில் தினமும் காணப்படும் இளஞ்சிவப்பு நிறமும் அவள் பொய்யை உண்மையாக்கப் பயன்படுகின்றன. உண்மை தெரிந்தால் அவளுடைய தாயார் ஒரு இஸ்ரேலியனுடன் லூனா ஓடிப்போய்விட்டாள் என்பதுபோல மனம் உடைந்துபோய்விடுவார். லூனாவுடைய தகப்பனை எகிப்துக்கு நாடு கடத்தியிராவிட்டால், அவர் அங்கே சிறையில் அடைத்து வைக்கப்பட்டிராவிட்டால், லூனாவை அவர் நிலவறையில் பூட்டி வைத்திருப்பார்.

லூனாவுக்கு பக்கத்தில் படுத்திருந்து அவள் மூச்சு விடுவதை பார்த்தபோது, நான் கண்களை மூடி எகிப்திய படுக்கை விரிப்பின் தன்மையை என்னால் உணரக்கூடும் என்பதுபோல நடிக்கிறேன். மேசையில் ஒரு சாம்பெய்ன் போத்தலும், இரண்டு கிளாஸ்களில் நுரைதள்ளும் பானமும் இருப்பதாக கற்பனை செய்கிறேன். எகிப்திய கோபுரவடிவில் ராஸ்பெர்ரி பழமும், சொக்கலேட்டும் அடைத்த இனிப்புவகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வெள்ளித்தட்டை ஏந்தியபடி, நீளமான கறுப்பு மேலங்கி பணியாளன் ஒருவன் கதவுக்கு வெளியே நிற்கிறான். எனக்கும் எனது ஒன்றுவிட்ட சகோதரி லூனாவுக்கும் வால்டோர்ஃப் ஹொட்டல் தாளில் எழுதப்பட்ட ஒரு கடிதம் அந்த வெள்ளித்தட்டில் காத்திருக்கிறது. ’ஓ, அந்தக் கடிதத்தை கதவின் கீழ் தயைசெய்து வைத்துவிடு’ என்று சொல்கிறேன். அது வேறு என்னவாக இருக்கும்? நகரபிதா மீண்டும் தேநீர் விருந்து அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோமா என அறிய விரும்புகிறார்.

நான் கண்களைத் திறந்தபோது யாரோ கதை இடிப்பது தெரிகிறது. நான் இங்கே அதிக நேரம் படுத்துக் கிடந்துவிட்டேன். நான் என்ன என்ன புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வருவேன் என அப்பா சிந்தித்தபடி இருப்பார். அம்மா தக்காளி வெட்டுவதற்கு என்னைத் தேடுவார். லூனாவின் அம்மா எகிப்து சிறையில் இருக்கும் கணவனுடன் ரகஸ்யமாக ஒழுங்கு செய்யப்பட்ட தொலைபேசியில் பேசுவதற்கு லூனாவின் வரவை பார்த்திருப்பார்.

‘கதவைத் திற,’ மீசைக்காரர் கத்துகிறார்.

‘ஒரு நிமிடத்தில் வெளியே வந்துவிடுகிறோம்.’

‘அறையில் ஏற்படுத்திய சேதங்களை கணக்கெடுக்கவேண்டும்.’

‘ஒரு சேதமும் இல்லை.’

‘நான் உனக்கு உதவ விரும்புகிறேன். நான் அவளை வெளியே தூக்கிச் செல்வேன். வரவேற்பறையில் மீதி தூக்கத்தை அவள் தூங்கி முடிக்கலாம். நீயும் நானும் பேசலாம். நீ விலைமகள் அல்லவென்று எனக்குத் தெரியும். விலைமகள் அப்படி மணம் வீசுவது கிடையாது. உனக்கு இலவசமாக ஓர் இரவு தங்க அறை வேண்டுமா? நான் கடிக்க மாட்டேன். தயவுசெய்து கதவைத் திற. சனியன் பிடித்த சங்கிலியை கழற்று. நான் உடைக்கப்போகிறேன். இது என்னுடைய ஹொட்டல். கதவைத் திற.’

நான் லூனாவை மெல்ல அசைக்கிறேன், அவளில் மாற்றமில்லை. எனக்கு முழுநாள் இருந்தால் நான் அவளை தூங்க அனுமதிப்பேன். கடைசியாக அவள் எழும்பியதும் வாந்தி எடுத்தாள். அவளுடைய தலைமயிரை நான் ஒழுங்காக்கி பின்னியபோது லூனாவின் கன்னம், குளிர்ந்த ஒரு துண்டு உடைந்துபோன கழிவறை இருக்கையின் மேல் கிடந்தது. ஓர் அழகு நிலையத்தில் நாங்கள் நிற்பதுபோல கற்பனை செய்துகொண்டு, முடி நிரம்பிய குளியல் தொட்டியை, புண்ணாகிப்போன லூனாவின் கால்விரல்களை நனைப்பதற்காக, இளஞ்சூட்டு நீரினால் நிரப்பினேன். நாங்கள் ரேடியோவை பாடல் நிலையத்துக்கு வைத்துவிட்டு குளிர் காற்று வீசும் மெசினுக்கு முன்னால் எங்கள் உடைகள் காற்றினால் ஊதிப்பெருக்க நடனம் ஆடுவோம். அவளுடைய உள்ளாடைகளை தரையிலிருந்து பொறுக்க உதவி செய்வேன். படுக்கைக்கு பின்னால் நின்று அவள் இருமி தன் குரலைச் சரியாக்கும் வரைக்கும் நான் பொறுமையாக காத்திருப்பேன்.

கதவை இடிப்பது நின்றுவிட்டது. கதவு நீக்கல் வழியாக பேர்கர்கிங் கைதுடைக்கும் பேப்பரில் ஏதோ எழுதி உள்ளே தள்ளுகிறான். ’நாயே, நான் போலீசைக் கூப்பிடுகிறேன்’ என எழுதியிருக்கிறது. நேற்று புதிதாக இருந்த வெள்ளைத் துணி ஒன்று குளியலறையில் கிடைக்கிறது. அதை சுடுநீரில் நனைத்து, படுக்கையில் படுத்து மூச்சுவிடும் லூனாவிடம் எடுத்துச் செல்கிறேன். ஊதா நிறத்தில் மாறியிருக்கும் அவள் கன்னக் காயத்தை மெதுவாக ஈரத்துணியினால் ஒற்றி எடுக்கிறேன். எலி ஒன்று மண்ணைத் துளைத்து முதன்முதல் வெளிச்சத்தை எட்டிப்பார்ப்பதுபோல அவள் கண்கள் கோடாக மெல்லத் திறக்கின்றன. நனைந்த துணியை பிடித்திருப்பது என்னுடைய கைதான் என்று லூனா உணர்ந்ததால் அவள் பயப்படவில்லை. ’ஹாய்’ என்றாள். அவள் கன்னத்தில் ஒட்டியிருந்த ரத்தத்தை ஈரத்துணி மூலையினால் துடைத்துவிடுகிறேன். நனையாத துணிப் பக்கத்தால் கழுத்துப் பட்டையையும், நெற்றியையும் மெதுவாக தட்டுகிறேன். ’ஹாய்’ என்கிறேன்.

மறுபடியும் துணியை தண்ணீரில் தோய்த்து, பாதி உபயோகித்த சோப்கட்டியை தேய்த்து துணியை முதலில் ஒரு காலில் சுற்றி பின்னர் மறுகாலில் சுற்றி மெல்ல அழுக்கை அகற்றுகிறேன். கொப்புளங்களை மெதுவாக தடவி விடுகிறேன். கால்விரல்களை லூனா என்னை நோக்கி நீட்டுகிறாள். ஏழு வயதாயிருந்தபோது நாங்கள் இருவரும் பூங்காவில், அம்மா எத்தனை சொல்லியும் கேட்காமல், காலணிகளை கழற்றியதை கற்பனை செய்கிறேன். அவள் காலுக்குள் ரெக்சஸ் மாநிலம் அளவு சிம்பு ஒன்று குத்தி நுழைந்திருக்கிறது. அவள் கெந்தியபடி முழுதூரமும் கடந்து வீட்டுக்குப் போனபோது அழவே இல்லை. அவளுடைய கால் விரல்களை கழிவறை காகிதச் சுருளால் ஒவ்வொன்றாகச் சுற்றுகிறேன். ஒரு முதல் உதவிப் பெட்டியும், கைத்துப்பாக்கியும் கொண்டு வந்திருக்கலாமே என்று படுகிறது.

நான் குளியலறைக்கும் படுக்கைக்குமாக மாறிமாறி நடப்பதை பார்த்தபடியே லூனா இருக்கிறாள். ’நான் வால்டோர்ஃப் ஹொட்டலுக்கு இதற்கு முன்னர் போனதே கிடையாது,’ என்று வேலை செய்தபடியே சொல்கிறேன். ’நீ படுத்திருந்தபோது நான் ஜக்கூசி குளியல் தொட்டியில் குளித்து பின்னர் சொகுசான வெள்ளை பருத்தி குளியல் மாற்றுடையால் என்னை மூடிக்கொண்டு, நீ எழும்பியவுடன் அருமையான இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்காக காத்திருக்கிறேன். உனக்குத் தெரியுமா இங்கே கேபிள் டிவி இருக்கிறது? மணமகள் உடை அலங்காரங்களை நீண்ட நேரம் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.’

நான் விடாமல் தொடர்ந்து பேசியபடி, லூனாவை நிமிர்த்தி, இருக்கும் நிலைக்கு கொண்டுவந்த பின்னர் அவளுடைய தலை வழியாக உடையை நீக்குகிறேன். உடையில் ரத்தக் கறைகள் அங்குமிங்கும் காணப்பட்டன. இந்த உடையை லூனா எங்கே வாங்கினாள் என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. அவள் ஒரு விசுவாசமிக்க வாடிக்கையாளர்.

நான் வரும்போது என்னுடன் தலையை மூடக்கூடிய, விளயாட்டுக்கு அணியும் மேல்சட்டையும் கால்சட்டையும் அத்துடன் செருப்புகளும் கொண்டுவந்திருக்கிறேன். ஏனென்றால் அவள் திருப்பி திருப்பி தொலைபேசியில் அதைத்தான் சொன்னாள். ‘என்னுடைய கால்கள் வலிக்கின்றன.’ அவள் என்மேல் சாய்கிறாள். அவளுடைய நிர்வாண மார்புகள் என் முன்கைகளின் மேல் தொங்க, அவள் கால்சட்டை அணிய நான் உதவுகிறேன். அவள் கால்களை நீட்டி படுக்கையில் உட்கார்ந்திருந்தபோது கழிவறை சுருள் பேப்பரில் சுற்றிய அவள் விரல்களை மெதுவாக செருப்பினுள் நுழைக்கிறேன். கடைசியாக, என் முழங்கால்களில் அவள் சாய்ந்திருக்க பின்பக்கமாக மேல்சட்டையை அவள் கழுத்துவழியாக, காயம்பட்ட கன்னத்தில் உராயாமல் இருப்பதற்காக ஒட்டையை பெரிதாக்கி, அணிவிக்கிறேன். ’எங்களுக்கு அருமையான காலை உணவு முன்கூடத்திலே காத்திருக்கிறது.’ நான் சொல்கிறேன் ’அவர்கள் எங்களுக்கு பிரெஞ்சு அப்ப வகையும், காவியாரும் வழங்குவதாகச் சொன்னார்கள். நான் கோபத்துடன் ’எங்களை என்னவென்று நினைத்தாய்? எங்களைப் பார்க்க பரதேசிகள் போலவா இருக்கிறது? எங்களுக்கு தேவை முட்டையும் வாஃவிளும். இரண்டு முறை என்னை சொல்லவைக்காதே. நல்ல வேலைக்காரர்கள் இந்த நாட்களில் கிடைப்பது கடினமாகிவிட்டது,’ என்கிறேன்.

நான் கொண்டுவந்த பிளாஸ்டிக் பையில் அவளுடைய உள்ளாடையையும், உடையையும் ஐந்து அங்குலம் உயரமான காலணிகளையும் திணித்துவிட்டு அறையை ஒருமுறை சுற்றிப் பார்க்கிறேன். ’நீ வேறு ஏதாவது கொண்டு வந்தாயா?’ நான் லூனாவிடம் கேட்கிறேன். அவள் தோளை அசைக்கிறாள். நான் அவளுடைய மெத்தைக்கு கீழும், தலையணை உறைக்குள்ளும் தேடிப் பார்க்கிறேன். படுக்கைக்கு கீழேயும், குளியலறையையும் ஒருமுறை சரிபார்க்கிறேன். குளிர்காற்று பரப்பும் மெசினுக்கு கீழே தரையில் Z எழுத்துப் பதித்த மோதிரம் ஒன்று கிடக்கிறது. ’உன்னுடைய நண்பனா?’ என்கிறேன். நான் அதைக் கழிவறைத் தொட்டியில் போட்டு தொலைத்திருக்கவேண்டும். எதற்காக அவளிடம் கேட்டேன் என்று தோன்றியது. ’நீ நினைப்பதுபோல அவன் கெட்டவன் இல்லை’ என்று சொல்ல ஆரம்பித்துவிடுவாள்.

அவள் மோதிரத்தில் பெருவிரலை அழுத்தியபடி சொல்கிறாள், ’சியாட் ’ என்று. அவளுக்கு என்ன நடந்ததென்று சொல்வதற்கு போதிய அடையாளங்கள் இல்லை. நான் அதை யன்னலுக்கு வெளியே எறியப்போவதுபோல நடித்தேன். லூனா சொல்கிறாள், ‘அவன் கழுத்தில் பல்லுக்கடி அடையாளம் இருந்தது. உனக்குத் தெரியும் எனக்கு பல்லுக்கடி விருப்பம் இல்லையென. அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.’ சியாட் என்றவனுக்கு வெறிபிடித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் இங்கே சுப்பர் 8 விடுதி அறையில் நிற்கிறேன். இன்னொரு அரை மீசை மனிதர் வெளியே நின்று போலீசை அழைக்கிறார். அவர் கத்துகிறார் ’என்னுடைய விடுதியில் இரண்டு வேசிகள் இருக்கிறார்கள். இரண்டு ஸ்பானிய வேசிகள்.’

எனக்கு நினைவிருக்கிறது எங்களுக்கு 16 வயதாயிருந்தபோது, லூனா யெமென் நாட்டு கால்பந்துக் குழு காப்டனிடம் தன் கன்னித்தன்மையை இழந்தாள். அடுத்த நாளே அவன் லூனா தூய்மையானவள் இல்லையென அவளைத் தள்ளி வைத்துவிட்டான். அவள் மது விடுதி ஒன்றில் வேலைக்கு சேர்ந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது. தன் தாயிடம் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கெஞ்சிக் கேட்டிருந்தாள். முதல் இரண்டு வாரங்கள் அவளுக்கு கிடைத்த அன்பளிப்பு காசை உண்டியலில் சேர்த்துவைத்தாள். சிறையில் இருக்கும் தன் தகப்பனின் வழக்கறிஞருக்கு கொடுப்பதற்காக. அதை உண்மையில் அவள் நம்பினாள்.

போன ரம்ழான் நோன்பு வந்தபோது அவள் விரதமிருந்தது நினைவுக்கு வருகிறது. தியாகம் என்றால் தியாகம்தான். அப்பொழுதே என்னிடமிருந்து அவள் ஒதுங்கத் தொடங்கிவிட்டாள். விரதத்தின்போது 15 மணி நேரம் விசுவாசமாக இருந்தாள். சூரியன் மறைந்தவுடன் இனிப்புவகையுடன் பிராந்தியும் கேக்கும் அருந்தினாள். ஒருவாரம் சென்று மேடையில் நடனம் ஆடும்போது அப்படியே சுருண்டு மயங்கி விழுந்தாள்.

நான் ஏமாற்றியது அவளுக்குத் தெரியாது. நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. கடந்த மூன்று வருடங்கள் ஒவ்வொரு ரம்ழானும் நான் ரகஸ்யமாக தண்ணீர் குடித்திருக்கிறேன். ஒருவரும் பார்க்காத நேரத்தில், மணிக்கூடு, சூரியனின் மறைவை நோக்கி நகர்ந்தபோது நான் லூனாவின் முகத்தைப் பார்த்தேன். தாகம் என்றால் என்னவென்று அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நாங்கள் பத்து வயதாயிருந்தது நினைவுக்கு வருகிறது. குர்ஆன் பள்ளியில் படிக்கும்போது லூனா கைகளைத் தூக்கி தான் மறுபிறவியில் ஆயிஷாவாக பிறக்கவேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தாள். ஏனென்றால் ஆயிஷாபோல ஒட்டகத்தில் ஏறி போருக்குச் செல்ல அவளுக்கு விருப்பம். அவளை ஆசிரியர் மூலையில் நிற்க வைத்தார். எங்கள் சமயத்தில் மறுபிறவி என்பது கிடையாது. அவள் அந்த மூலையில் நின்றவாறு இரண்டு திமில் ஒட்டகத்தின்மீது ஏறி போருக்குச் சென்றாள். அப்பொழுதிலிருந்து எங்கள் சுவாசம் தொடுக்கப்பட்டிருக்கிறது. அவள் உள்ளே மூச்சிழுத்தால் நான் வெளியே விடுவேன். அது எப்போது அறுபட்டதோ நினைவில் இல்லை.

லூனா சொன்னாள், ’நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அவன் அவ்வளவு மோசமில்லை.’ அவனுடைய பெயர் சியாட் அபாசி. மதுக்கடை உரிமையாளரின் 35 வயது மகன். ஒரு பக்கம் ஈரானிய மனைவியும் இரண்டு பிள்ளைகளும்; மறுபக்கம் போதைப்பொருள் வியாபாரம். அவனைப்பற்றி அவள் கூறியது என் நினைவில் வருகிறது. லூனாவுக்கு பல ஆண்களுடன் சுழல் தொடர்பு இருந்தது. அவர்கள் இரண்டு வகையாக இருந்தார்கள். நடனத்துக்குப் பின்னர் அவளுடைய தொலைபேசிக் கட்டணத்தை கட்டுபவர்கள். மாதக் கணக்காக அவளைப் பாராமல் உதாசீனம் செய்துவிட்டு திடீரென்று அவளைக் காப்பாறியவன் என்று காட்டுவதற்காக, ஒருமுழு இரவு நடனத்தையும் காசு கொடுத்து வாங்குபவர்கள். சியாட் இரண்டாவது ரகம்.

முதல் வந்த சில மாதங்கள் அவளை சியாட் திரும்பிப் பார்க்கவில்லை. அவள் சும்மா ஒரு சாதாரண நடனக்காரிதான். ஒருநாள் இரண்டு வாரம் சம்பளத்துடன் அவளுக்கு விடுமுறை கொடுத்தான். அத்துடன் இரண்டு டஜன் சிவப்பு ரோஜாக்களும் பரிசளித்தபோது அவள் பிரத்தியேகமானவள் ஆகிவிட்டாள். அவர்களுடைய முதல் காதல் சந்திப்பின்போது அவளை உல்லாச விருந்துக்காக லிபர்ட்டி பூங்காவுக்கு அழைத்துச் சென்று பழைய ரயில் ஸ்டேசன் விளக்கு வெளிச்சத்தின் கீழே மதுவகைகளை திறந்தான். சில வாரங்களுக்குப் பிறகு அவனுக்கு அலுப்பு வந்துவிட்டது.

’என்ன நடந்தது?’ எனக்கு அது தேவையில்லை என்று தெரிந்தும் நான் கேட்கிறேன். அவள் தோளை அசைக்கிறாள். ‘இன்னொரு பெண்ணுடன் அவன் படுக்கத் தொடங்கிவிட்டான்.’

எப்பொழுது அவன் லூனாவின் முகத்தில் குத்தினான் என யோசிக்கிறேன். உடலுறவு கொள்ள முன்பா, பின்னரா? லூனாவுக்கு மன்னிப்புத்தன்மை அதிகம். கார் சாவியை சுழற்றியபடி அவன் கார் தரிப்பிடம் நோக்கி போவதை என்னால் கற்பனைசெய்ய முடிகிறது. இனிமேல் வெள்ளைப் பெண்கள்தான் என முடிவெடுத்திருப்பான். இப்படிப் பழுதாகிப்போன பெண்களை கைகழுவி விடவேண்டும். அவள் எப்படி வீட்டுக்குப் போவாள்? காசு இல்லை. பல மைல்தூரத்தை எப்படிக் கடப்பாள்?

சியாட்டின் மோதிரத்தை அவள் உள்ளாடை இழுபெட்டியில் மறைத்துவைப்பதை என்னால் கற்பனை செய்யமுடிகிறது. அவளுடைய 7வது பிறந்த தினத்துக்கு எகிப்திலிருந்து எங்கள் பாட்டி கறுப்பு மரத்தில் முத்துக்கள் பதித்த அலங்காரப் பெட்டி ஒன்றை அனுப்பியிருந்தார். லூனாவும் நானும் பலநாட்கள் பூங்காவிலும், அம்மாவின் படுக்கை அறையிலும் பொக்கிஷம் தேடி அலைந்திருக்கிறோம். மணிகள், போலி வைரம், கனடிய ஒரு சதம். நாள் முடிவில் சேகரித்த பொக்கிஷங்களை ஆராய்ந்து எது எது பெறுமதி இல்லாதவை என தீர்மானிப்போம். நான் கண்டுபிடித்த குட்டி தேநீர் குவளையை அவள் நிராகரித்தாள். அவளுடைய குளவிக்கூட்டை நான் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் சம்மதிக்கவேண்டும். பல வருடங்களுக்குப் பின்னர்தான் எனக்கு தோன்றியது நான் எனக்கு மட்டும் சொந்தமான பொக்கிஷப் பெட்டியை ஏன் உருவாக்கவில்லை என. அவளுக்குச் சொந்தமானது எனக்கும் சொந்தமானதாகவே இருந்தது.

’தயாரா?’ நான் கேட்கிறேன்.

ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டு தலையை ஆட்டுகிறாள். அவள் சிரிக்கும்போது அவள் முகக்காயம் பாதி சந்திரனாக மாறுகிறது. பாதி லூனா.

’நாங்கள் ஓடவேண்டும்’ அவளிடம் சொல்கிறேன். இது வழக்கமானதுதான் என்பதுபோல அவள் தலையை ஆட்டுகிறாள். நாங்கள் கட்டடத்தை பாதி கடந்த பின் மீசைக்காரர் அலறுவது கேட்கிறது. ‘நான் பார்க்கிறேன். வேசிகளே நான் பார்க்கிறேன்.’

லூனா தலையை திருப்பி அவரைப் பார்க்கிறாள். ’அவன் ஒரு தீய எல்ஃப்போல இருக்கிறான்’ எனச் சொல்கிறாள். அவள் என் கையை பிடித்ததும் மேலும் வேகமாக ஓடுகிறோம். கார் கதவு பூட்டினுள் சாவி மாட்டுப்படுகிறது. என்னுடைய உடம்பை கதவினில் இடித்தபடி சாவியை குலுக்குகிறேன். லூனா வேட்டையாடப்படும் மானைப்போல சுற்றிலும் பார்க்கிறாள். காருக்குள் பாய்ந்து, கதவுகளைப் பூட்டி காரைக் கிளப்பியபோது, சூனியக்காரிகள்போல, வீதியில் எங்களைவிட்டு மற்றவர்களை அவசரமாக ஓடவைக்கும் பேய்ச் சிரிப்பை சிரிக்கிறோம்.

நாங்கள் நூலகத்துக்கு போய்விட்டுத்தான் வீடு திரும்பவேண்டும் என்பது என் நினைவுக்கு வருகிறது. லூனா தரையில் உட்கார்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு கதைகள் படிப்பது ஞாபகம் வருகிறது. அதே நேரம் நான் அப்பா அங்கீகரித்த, என்னை இடதுசாரியாக பின்னாளில் மாற்றப்போகும் புத்தகங்களை, தேர்வு செய்வேன். தாயாருடன் வரும் சிறுமிகள் சாம்பல் பச்சை கண்களுடன் காயப்பட்டு நிற்கும் லூனாவை வியப்புடன் நோக்குவதை கற்பனை செய்கிறேன். ஏனென்றால் இளமையான அப்பாவிப் பெண்களாகட்டும், அல்லது படித்த படாடோபமான பெண்கள் ஆகட்டும், அவர்கள் எல்லோருமே லூனாவைப் போன்ற அபூர்வமான அழகை வெறித்தனத்துடன் விரும்புவார்கள். அடுத்தமுறை லூனா அழைக்கும்போது நான் அவள் அழைப்பை ஏற்கக்கூடாது என நினைக்கிறேன். மதுக்கடை பலவான்கள் ’நீ இன்னும் அவள் பின்னால் ஓடுகிறாயா?’ என்று விசாரிக்கிறார்கள். கல்லூரி நண்பர்கள் ’அவள் பொறுப்பானவள் அல்ல. உன்னை ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்வாள்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். நான் பரீட்சைக்கு படிக்கக்கூடும். அல்லது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிடும்போது மௌனமாக்கி வைக்கப்பட்ட என்னுடைய தொலைபேசி விடாப்பிடியாகப் பிரகாசிக்கலாம். நான் அவளைப்பற்றி நினைக்கிறேன். அவள் அழைப்புக்கு நான் போகவிட்டால் நான் யார்? நான் ஒருவருமே இல்லை. ஒருகாலத்தில் என்னுடைய கன்னத்தை அவளுடைய குளிர்ந்த முதுகில் வைத்து சுருண்டுபோய் படுத்திருந்தவள்தான்.

லூனா இருக்கைப் பட்டியை சரிசெய்து ஏறக்குறைய சரிந்து நீளமாக ஷீபா அரசிபோல, கைகளால் சூரிய கிரணங்களை மறைத்தபடி, படுத்திருக்கிறாள். அவளைப் பார்த்தால் அடிவாங்கிய, உடை களையும் பெண்போலவே இல்லை. தரிப்பிடத்தைவிட்டு காரை வெளியே எடுத்து வெள்ளிக்கிழமை வாகன நெரிசலில் மாட்டுப்பட்டு அசையாமல் நிற்கிறோம். நியூ யோர்க் பெருநகரம் எட்டு டொலரும், 10 நிமிடமும் செலவாகும் தூரத்தில் இருக்கிறது. எனக்கு லூனாவைப் பற்றித் தெரியாது. ஆனால் நான் மூச்சைப் பிடிப்பேன். நியூ யோர்க் நகரம் தோன்றும் வரைக்கும், வீடு போய்ச் சேரும் வரைக்கும் மூச்சைப் பிடிப்பேன்.

(வரிக்கு வரி மொழிபெயர்க்கப்படவில்லை. சில இடங்களில் வாசகர்களுக்கு புரியவேண்டும் என்பதால் எளிமைப்படுத்தப்பட்டும், சுருக்கப்படுத்தப்பட்டும் இருக்கிறது.)

– காலம் 2017.01 (50)

– December 2019, ஆயிஷா காவாட், மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *