இங்கே நிறுத்தக்கூடாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 268 
 
 

ஒரு நாள் எப்படி தொடங்கி எப்படி முடியவேண்டும் என்பதை தீர்மானிப்பது அவன் மனைவிதான். 1983ல் கனடா வந்தபோதும் அவர் மனைவிதான் முடிவுகளை எடுத்தார். இப்போது 2010 லும் அவர்தான் எடுப்பார். அன்றைய நாளை நினைத்தபோது கொஞ்சம் நடுக்கம் எடுத்தது. அவருடைய பெயர் பரமேஸ்வரன். அதைச் சுருக்கி பரமேஸ் என்றார் இப்பொழுது பரம் எனத் தன்னை அழைக்கிறார். மனைவி இன்னும் சுருக்கி அது ’பர்’ என ஆகிவிட்டது. அதிகாலையிலேயே பர் என அழைத்தபோது அன்றைய நாள் சரியாகப் போகாது என்று பட்டது.

தயங்கியபடியே சொன்னார். என்னுடைய கார் பட்டரி போய்விட்டது. கார் திருத்துபவர் புது பாட்டரியோடு வந்து சில நிமிடங்களில் மாற்றிவிடுவார். இன்று மட்டும் உம்முடைய காரை எடுக்கிறேன். அவசர வேலை என்று நீர்தான் சொன்னீரே.’ ‘அய்யோ என்னுடைய காரா? அது புக்துக்கார் அல்லவா? கவனமாக ஓட்டுங்கோ’ என்று சொன்னபபடி கார் சாவியை ஒரு பொன் திறப்பை தருவதுபோல தந்தார். ’நான் சொன்ன கலர் ஞாபகம் இருக்கிறதுதானே. நல்ல திறம் பெயிண்டரை பிடித்து அடியுங்கோ. புதுக்கடை மக்களை கவர்ந்து இழுக்கவேண்டும்.’

பழைய மருந்துக் கடையை மூடிவிட்டு புது மருந்துக்கடையை தயார் பண்ண வேண்டும். என்ன என்ன செய்யவேண்டும் என மனைவி ஒரு நோட்டுப் புத்தகத்தில் நேற்றே எழுதி வைத்திருந்தார். ஆக எளிமையான வேலைகள் அவருக்கு தரப்பட்டிருந்தன. பழைய மருந்துக்கடையில் உட்காரவே இடமில்லை. பலவிதமான பல அளவு பெட்டிகளில் சாமான்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. நாளைக்கு அவை பெரிய கனரக வண்டிகளில் புதுக் கடைக்கு மாற்றப்படும். வர்ணம் பூசுபவனை ஒன்பது மணிக்கு பரமேஸ்வரன் வரச்சொல்லி யிருந்தார். அவன் வருவதற்கு பத்து நிமிடம் இருந்தது. ஒரு பெட்டியில் உடகார்ந்துகொண்டு காலை உனவு பக்கட்டைதிறந்த சமயம் ’ஐயா என்று குரல் கேட்டது. புதுப் பெயிண்டர் ஆக இருக்கும். எட்டிப் பார்த்தவர் திகைத்துப் போனார். அவருடைய நண்பர் நடத்தும் பராமரிப்பு கம்பனியில்தான் சொல்லியிருந்தார். வழக்கமான பெயிண்டர் இல்லை. இவன் ஒரே எலும்பாக இருந்தான். இவனை புதிய கடைக்கு அழைத்துப்போய் வேலைய ஆரம்பிக்கவேண்டும். அவரிலும் பார்க்க ஓர் அடி கூடிய உயரமானதினாலே வாசல்படியை வளைந்து கடந்தான். முக்கோணங்களினால் ஆன உடம்பு. முதல் பார்வையிலேயே அவனை அவருக்கு பிடிக்கவில்லை. அவருடைய மனைவி என்றால் அவனை உடனேயே திருப்பி அனுப்பியிருப்பார். ரோட்டிலே படுத்து தூங்கி எழுந்து வந்தவன்போல காணப்பட்டான். கரிய நிறம். புழுதிபடிந்த சுருண்ட தலைமுடி. இனியில்லை என்ற அழுக்கு உடை. அவன் கிட்ட வரும்போது அவனுடன் சேர்ந்து ஒரு நாற்றமும் வந்தது. பிரச்சினைகளை உண்டாக்கத்தான் அவருக்கு தெரியும்; தீர்க்கத் தெரியாது. மனைவியிடம் ஆலோசனை கேட்கலாம் என நினைத்தார். ஆனால் அவன் வெகு சமீபமாக வந்துவிட்டான். பெட்டியில் உட்கார்ந்தபடி காலை உணவுப் பார்சலை திறந்துவிட்டார். ஏதாவது பேசவேண்டுமே என்று ஒரு பேச்சுக்கு ’சாப்பிடுவாயா?’ என்றார். அவன் சரி என்று தயங்காமல் சொன்னதுமே ஒரு பேப்பரிலே ஒரு ரொட்டியை வைத்துக் கொடுத்தார்.

அவர் பெட்டிமேல் உட்கார்ந்தபடியே சாப்பிட, அவன் நின்றபடியே சாப்பிட்டான். இது என்ன ரொட்டி ஐயா புதிதாக இருக்கிறதே. அவர் சொன்னார் ’எல்லா ரொட்டியும் வட்டமாக இருக்கும். இது சதுர ரொட்டி, எங்கள் நாட்டு ரொட்டி.’ அவன் ரொட்டியை இழுத்து இழுத்து பிய்த்து ரசித்து சாப்பிட்டு, கையை தன் உடுப்பிலேயே துடைத்துக் கொண்டான். இத்தனை வேகமாக ஒருவர் ரொட்டி சாப்பிட்டதை அப்போதுதான் பரமேஸ்வரன் பார்த்தார். அவன் இரண்டு நாட்களாக சாப்பிடாதது அவருக்கு தெரியாது.

பெயர் என்ன என்று கேட்டார். மூசா என்றான். பூச்சு வேலை செய்திருக்கிறாயா? நல்லாய்ச் செய்வேன், ஐயா. பல வருங்களாக வேலை செய்கிறேன். பெரிய பெரிய கட்டிடங்களில் எல்லாம் சாரம் வைத்து ஏறி நின்று பெயிண்ட் வேலை பார்த்திருக்கிறேன். பரமேஸ்வரனின் மூளையில் இன்னொரு பிரச்சினை ஓடியது. இவனை எப்படி மனைவியின் காரில் அழைத்துச் செல்வது. மனைவி பலநாள் திட்டமிட்டு அவருடைய சிறுவயது லட்சியத்தை நிறைவேற்ற 250,000 டொலர் காசு கொடுத்து வாங்கிய புது பெண்ட்லி கார். மனைவி அவரிடம் சாவியை கொடுக்கும்போதே உயிரை கொடுக்கக் கேட்டதுபோல தயங்கினார்.

என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே எழுந்தார். மருந்துகள் சுற்றி வந்த பிளாஸ்டிக் விரிப்புகளை காரின் பின்சீட்டில் விரித்தார். சரி புறப்படலாம் என்றார். அவனுடைய நீண்டமுகத்தில் வாய் திறந்து பற்கள் வெள்ளையாக பளிச்சிட்டன. எலும்புகள் சத்தமிட அவன் மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடி வந்தான். ‘மூட்டையில் என்ன?’ ‘பூச்சுவேலை செய்யும்போது அணியும் ஊத்தை உடுப்பு. அல்லாவிட்டால் நல்ல உடுப்பு கெட்டுப்போய்விடும்.’ பரமேஸ்வரனுக்கு அதிர்ச்சியில் வார்த்தை எழவில்லை. அவன் ஏற்கனவே அணிந்திருக்கும் உடையிலும் பார்க்க மோசமான உடுப்பு இருக்கிறதா? அந்த உடுப்பை பார்க்கவாவது அவனை கூட்டிப் போகவேண்டும். ’என் மனைவியின் புதுக்கார்’ என்று சொல்லி கதவை திறந்து பிடித்தார். அவன் காருக்குள் ஏறி அமர்ந்து பக்கவாட்டிலோ பின்சீட்டிலோ உடம்பு படாமல் ஒடுங்கி உட்கார்ந்து கொண்டு தன் மூட்டையை பக்குவமாக மடியில் வைத்தான். அவரே கதவை சாத்திவிட்டு காரை எடுத்தார்.

அவர் மனைவி வாங்கிய புது மருந்துக்கடை 40 மைல் தூரத்தில் இருந்தது. பழைய மருந்துக்கடையிலும் பார்க்க நாலு மடங்கு பெரிதானது. 24 மணிநேரமும் திறந்திருக்கும். பல வேலைக்காரர்களையும், உதவியாளர்களையும் தேர்வு செய்தாகிவிட்டது. சமான்களை புதிய கடைக்கு மாற்றுவதும், பூச்சு வேலையை மேற்பார்வை செய்வதும்தான் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை. மீதி எல்லாவற்றையும் அவருடைய மனைவியே பார்த்துக்கொள்வார்.

கண்ணாடி வழியாக பின்னால் பார்த்தார். இரண்டு பக்கமும் வேகமாக ஒடும் கார்களை மாறி மாறி கழுத்தை திருப்பி திருப்பி மூசா பார்த்துக்கொண்டே இருந்தான். பரமேஸ்வரனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. புதுக் கார் ரோட்டிலே ஓடுவது போலவே இல்லை. ரோட்டில் இருந்து ஓர் இஞ்சி மிதப்பது போல அத்தனை சுகமாக இருந்தது. மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ’இந்தக் காரை ஒருமுறை ஓட்டினால் அதற்கு பிறகு வேறு ஒரு கார் ஓட்டவே முடியாது.’ ’மூசா, உனக்கு எந்த நாடு?’ ’ருவாண்டா.’ ’எப்பொழுது கனடாவுக்கு வந்தாய்?’ ’1997.’ ’ஓ, நீ குடிபெயர்ந்து 13 வருடங்கள் ஆகிவிட்டனவா? நேற்று கனடாவின் கவர்னர் ஜெனரல் மிசேல் ஜீன் மன்னிப்பு கேட்டாரே! செய்தி பார்த்தாயா?’ ’ருவாண்டாவில் கொடிய இன ஒழிப்பு நடந்தபோது கனடா ஒன்றுமே செய்யவில்லை. அதற்காக கவர்னர் ஜெனரல் இப்பொழுது மன்னிப்பு கேட்டார். என்ன பிரயோசனம்? கனடா மட்டுமல்ல, ஒருநாடும் கவனிக்கவில்லை. 100 நாட்களில் 8 லட்சம் டுட்சிகள் கொல்லப்பட்டனர். 11 லட்சமாக இருந்த டுட்சிகளின் எண்ணிக்கைது, 3 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இத்தனை வேகமாக உலகத்தில் ஓர் இனம் அழிக்கப்படவே இல்லை என்று சொல்கிறார்கள்.’

’உன்னுடைய குடும்பம் எங்கே?’ ’என்னுடைய மூன்று அண்ணன்மார்களும் கொல்லப்பட்டார்கள். அம்மாவும் தங்கையும் என்ன ஆனார்களோ தெரியாது. பல மாதங்களாகத் தேடினேன். இரவில்தான் தேடுவேன். பகலில் காட்டுக்குள் ஒழிந்திருந்தேன். எனக்கு 19 வயது. நாலு இளைஞர்கள் கிவூ வாவியை நீந்திக் கடப்பதென்று முடிவு செய்தார்கள். நானும் புறப்பட்டேன். 12 மணிநேரம் நீந்தினேன். என்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவராக சோர்ந்துபோய் என் கண்முன்னால் இறந்துபோனார்கள். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நல்லவேளையாக மீன்பிடி படகு ஒன்று என்னைக் காப்பாற்றி கொங்கோ நாட்டைச் சேர்ந்தேன். அங்கேயிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தேன்.’ ‘அங்கிருந்து எப்பொழுது குடிபெயர்ந்தாய்?’ ’நான் கொங்கோவுக்கு போனது 1995ல். அங்கேயிருந்து 1997ல் புறப்பட்டு அதே வருடம் கனடாவுக்கு வந்து சேர்ந்தேன். நான் அங்கே போனபோது கொங்கோவின் பெயர் சயீர். நான் புறப்பட்டபோது கொங்கோ என மாறிவிட்டது. அடுத்த கேள்வியாக எப்படி வந்தாய் என்று அவர் கேட்கவில்லை. அதற்கு பதில் தெரிந்ததுதான். கள்ள பாஸ்போர்ட்டில் வந்திருப்பான். கப்பலில் வந்திருப்பான். கனரக வண்டிகளில் ஒளித்து பயணித்திருப்பான். ’உன் அப்பாவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.’ ’அவர் விவசாயி, ஆனால் வீட்டுக்கு ஒன்றுமே கொண்டுவரவில்லை. சூதாடி தொலைத்துவிடுவார். எத்தனையோ பேர் அறிவுரை சொன்னார்கள். அவர் சொல்வார், ‘சூதாட்டத்தில் ஒருவித கேடும் இல்லை, அதுவும் விவசாயமும் ஒன்று என விவாதிப்பார். விவசாயத்தில் விளைவதை சிலவேளை மழை அழித்துவிடும். சில வேளை வெய்யில் அழித்துவிடும். அதுவும் ஒருவித சூதாட்டம்தானே’ என்பார்.

’ஹுட்டுக்கள் டுட்சிகளைக் கொன்றார்கள் அல்லவா? இரண்டும் வெவ்வேறு மதமா?’ ’இல்லையே, ஒரே மதம்தான்.’

’வெவ்வேறு மொழியா?’ ’இல்லை ஒரே மொழிதான்.’ ’அப்ப என்ன பிரச்சினை?’

’வேறு ஒன்றும் இல்லை. ஹூட்டுக்களுக்கு டுட்சிகளைப் பிடிக்காது. ஒரு காலத்தில் சில டுட்சிகள் தங்கள் அடையாள அட்டையில் ஹுட்டு என்று பதிந்தார்கள். சில ஹுட்டுகள் அடையாள அட்டையில் டுட்சி எனப் பதிந்தார்கள். அப்படி ஒற்றுமையா இருந்த இனம்தான்.’

சிறிது நேரம் பேச்சு ஒன்றுமில்லை. பழைய நினைவுகள் அவனை அலைக்கழித்துவிட்டன எனப் பட்டது. நெடுநேரம் ஆழ்ந்து யோசித்தான். ‘ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். நான் பராமரிப்பு கம்பனியை சேர்ந்தவன் அல்ல. ஒரு நண்பன் சொல்லி இந்த வேலைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. மேன்முறையீடும் தோல்வி. என்னை நாடு கடத்த போலீஸ் தேடுகிறது. என் பசியை போக்க இந்த வேலை தேவை. மன்னித்து விடுங்கள்.’

பரமேஸ்வரனுக்கு திடுக்கென்றது. ஆழ்ந்து யோசித்தார். போலிசாரால் தேடப்படும் ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவரும் மாட்டிவிடுவார். மனைவிக்கு சொன்னால் இன்னும் பெரிய பிரச்சினையாகிவிடும். சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் காரை ஒட்டினார். அவர் ஒன்றுமே செய்யவில்லை. கார் தானாகவே வழுக்கிக்கொண்டு ஓடியது. திடீரென்று அவர் மூளை பிரகாசித்தது. அவருக்கே ஆச்சரியம். ‘நீதான் டுட்சியாச்சே. உனக்கு என்ன பிரச்சினை? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாவியை நீந்திக் கடந்தவன் அல்லவா? உன் மேன்முறையீட்டை எப்படி நிராகரித்தார்கள்?’ ‘பெரிய தவறு நடந்துவிட்டது ஐயா. என்னுடைய அடையாள அட்டையில் ஹூட்டு எனப் பதிந்திந்திருந்ததை அகதி நீதிபதி கண்டுபிடித்துவிட்டார்.’

மனைவியிடம் சொன்னால் பிரச்சினை இன்னும் பெரிசாகிவிடும். அவரே முடிவு எடுப்பதென்று தீர்மானித்தார். மூளையிலே யோசனை தோன்றியது. அவருக்கு பெரும் திருப்தி அளித்த யோசனை. தன்னால் இப்படி யோசிக்க முடிந்ததையிட்டு அவருக்கே பெருமையாக இருந்தது. இப்படிச் சொல்லலாம் என நினைத்தார். ’என் மனைவியுடன் ஆலோசித்திவிட்டு உன்னை மறுபடியும் அழைக்கிறேன். இதோ இரண்டு நாளுக்கான முழுச் சம்பளம்.’ ஒரு முறை வாய்க்குள் அந்த வசன அமைப்பை சொல்லிப் பார்த்தார். அதுதான் சரியென்று தோன்றியது.

திடீரென்று பின் சீட்டிலிருந்து கர்முர் என்ற சத்தம் எழுந்தது. அவரால் மூசாவினுடைய முகத்தை பார்க்க முடியவில்லை. அது சரிந்து சீட்டின் பின்னால் மறைந்து கிடந்தது. ’என்ன, என்ன? மூசா என்ன?’ பதில் இல்லை. விலங்கின் உறுமல் சத்தம் பின்னால் எழுந்தது. கடமுடா என்று பற்கள் கடிபடும் சத்தம். மூசா கதவை உதைத்தான். பின்னர் வளைந்து காலால் கூரையில் ஓர் உதை விட்டான். உடல் முறுகி எழுவதும் விழுவதுமாக இருந்தது. கால்கள் தொடர்ந்து உதைத்தாலும் நெடுஞ்சாலையில் கார் வேகம் குறையாமல் ஓடியது. அவருக்கு ஓரளவு விளங்கியது. மூசாவுக்கு வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கிறான். நாக்கு தொண்டையில் உள்ளே போனால் இறந்துவிடுவான். அவருக்கு நடுக்கம் பிடித்தது. ஆம்புலன்ஸை அழைக்க முடிவு செய்தார். நெடுங்சாலையில் ஓடியபடியே அழைப்பதால் என்ன பிரயோசனம். முதலில் நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி காரை நிறுத்துவோம் என நினைத்தார். கைகள் நடுங்கத் தொடங்கின. வெளியேறும் வீதி வர இரண்டு நிமிடம் ஆனது. நெடுஞ்சாலையை விட்டு வெளியே காரை வேகமாக எடுத்து நிறுத்திவிட்டு காரிலே உள்ள டெலிபோனில் அவசர உதவியை அழைக்க தொடங்கியபோது பின்னாலிருந்து ஐயா என்ற குரல் கேட்டது. ’ஐயா, இது ஒன்றும் பயப்படும்படியான விசயமல்ல. சாதாரண வலிப்புதான். சிலவேளைகளில் வரும். வந்தது போலவே போய்விடும்.’ ஆம்புலன்ஸ் வேண்டாம் என்றால் சரி. ஆஸ்பத்திரிக்கு போவோம்.’ ஐயா எனக்கு இது அடிக்கடி வருவதுதான். ஆஸ்பத்திரிக்கு போனால் என்னை நேரே விமானத்தில் ஏற்றி நாடுகடத்தி விடுவார்கள்.’

அது உண்மைதான். பரமேஸ்வரனுக்கு பயம் பிடித்தது. கதவை திறந்து பின்சீட்டைப் பார்த்தார். அவனுடையை வாந்திக்கு மேல் அவன் உட்கார்ந்திருந்தான். மணம் குமட்டிக்கொண்டு வந்தது. அவன் அணிந்திருந்த உடுப்பிலும் வாந்தி சிந்தியிருந்தது. இடது பக்க கதவு நெளிந்துபோய் விட்டது. கார் கூரையில் மூசாவின் வலது கால் அடையாளம் கறுப்பாக ஆழமாகப் பதிந்துபோய் கிடந்தது. பரமேஸ்வரனுக்கு வேகமாகச் சிந்தித்து பழக்கமில்லை.

மனைவியை அழைப்போமா என்று மறுபடியும் யோசித்தபடியே ஒரு கோப்பிக் கடையை தேடினார். மனைவி சொன்னது ஞாபகம் வந்து அவருக்கு சிரிப்பை வரவழைத்தது. ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. பனிக்காலத்தில் அடைந்து கிடந்த புறாக்கூட்டம் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக தின்றுவிட்டு எச்சமிடும். காரை நிறுத்தும்போது பார்த்து நிறுத்துங்கள். மின்விளக்கு கம்பத்திற்கு கீழே நிறுத்த வேண்டாம். மேலே பார்த்தார். விளக்கு கம்பம் இல்லை. புறாக்கூட்டமும் தென்படவில்லை. காரை அவசரமாக நிறுத்திவிட்டு கோப்பி கடைக்குள் நுழைந்தார். யோசிக்க ஓர் இடமும், கொஞ்ச நேரமும் அவசர தேவையாக இருந்தது. ’மூசா, நீ கழிவறைக்கு சென்று முகத்தை கழுவி உடையை சுத்தம் செய்துவிட்டு வா. நான் இரண்டு கோப்பிக்கு ஆணை கொடுக்கிறேன்.’ பரமேஸ்வரனால் முடிவுக்கு வர முடியவில்லை. ’ஐயா, ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். என்னால் ஒரு பிரச்சினையும் வராது. பூச்சு வேலைக்கு ஐந்து நாள் எடுக்கும். நான் ஒருநாள் வேலைக்கு கூலி வாங்கமாட்டேன்’ என பெருந்தன்மையாகச் சொன்னான். சரி மனைவியிடம் சொல்லிவிடவேண்டும் என தீர்மானித்தார். இப்படியான பெரிய பிரச்சினைகளை அவருடைய மனைவிக்குத்தான் தீர்த்து பழக்கம். சட்டவிரோதமாக தங்கி இருப்பவனுடன் தொடர்பு வைத்தால் போலிஸ் அவர்களயும் சந்தேகப்படும். விசாரனைக்கு அலைய நேரிடும். புது மருந்துக் கடையை திறக்கமுடியாமல் போய்விடும்.

இருவரும் கடுதாசிக் குவளையில் கோப்பியை காவிக்கொண்டு வெளியே வந்தார்கள். காரைக் காணவில்லை. கார் நிறுத்திய வெறும் சதுரம்தான் இருந்தது. ’இங்கே நிறுத்தக்கூடாது’ என்று ஓர் அறிவிப்பு பலகை மாத்திரம் காணப்பட்டது. மேலே பார்த்தாரே ஒழிய பலகையை பார்க்கவில்லை. சிகரெட்டை பல்லினால் கடித்தபடி நின்ற ஒருவன் ’நகரசபை ஆட்கள் இப்பதான் காரை இழுத்துப் போனார்கள்’ என்றான். செல்போனில் நகராட்சி அலுவலரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவருடன் பேசினார். பேசியவர் குரல் குதூகலமாக இருந்தது. ஒருவருடைய அழிவில் இன்னொருவருக்கு எத்தனை மகிழ்ச்சி. அவர் சொன்ன இடத்துக்கு வாடகைக் காரில் புறப்பட்டார்கள். அபகரித்த கார்களை நிறுத்தியிருந்த இடத்தில் ஏறக்குறைய இருபது கார்கள் தங்கள் தங்கள் உடமையாளர்களுக்கு காத்துக்கொண்டிருந்தன. ஒரு பெண் கூண்டுக்குள்ளே தொலைபேசி முன்னால் உட்கார்ந்திருந்தாள். அழகு முடிந்துபோன பெண். இவர்கள் ஒன்றுமே கேட்கவில்லை. அவளாகவே கையினால் ஒருவரை காட்டினாள். பரமேஸ்வரனுடைய மனைவியின் breeze blue கார் அத்தனை கார்களிலும் பளபளத்துக் கொண்டு நின்றது தெரிந்தது. அவரிடம் கார் நம்பரைச் சொல்லி தண்டப் பணம் எத்தனை என்றார். கம்புயூட்டரில் விவரங்களை அடித்துவிட்டு அந்த அலுவலர் நிமிர்ந்து பார்த்து வாய் கூசாமல் 320 டொலர் என்று இளித்துக்கொண்டே கூறினார். பரமேஸ்வரனிடமிருந்து தோல்விச் சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது. பற்றுச்சீட்டை தரும்போது ’நாங்கள் தூக்கி வந்த முதல் பெண்ட்லி கார்’ என்றார் எதையோ சாதித்தது போல.

கார் நெடுஞ்சாலையில் ஏறியதும் மூசாவிடம் பேச்சுக் கொடுத்தார். ’உனக்கு ஒரே நாளில் இரண்டுதரம் வலிப்பு வருமா? ’வராது ஐயா.’ ’வலிப்பு வரமுன்னர் ஏதாவது அறிகுறி தெரியுமா?’ ’அப்படி இல்லை, ஐயா. என்னுடைய அம்மா சொல்லுவார் எந்த ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகிறதோ அந்த மாதத்தில் எனக்கு வலிப்பு வரும் என்று. மார்ச் மாதம் இரண்டு பௌர்ணமி வந்தது. வலிப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. கொஞ்சம் தள்ளி இப்ப ஏப்ரலில் வந்திருக்கிறது. உங்களுக்கு பயமாயிருக்கிறதா?’ ’இல்லை, அப்படி ஒன்றுமில்லை’ என்றார் பரமேஸ்வரன்.

இனிமேல் போய் வர்ணம் வாங்கவேண்டும். மனைவி ஒலிவ் பச்சை என்று வர்ணித்தார். அது என்ன ஒலிவ் பச்சை? சரியான வர்ணத்தை வாங்காவிட்டால் அது வேறு பெரும் பிரச்சினை ஆகிவிடும். ஐயா என்ற சத்தம் பின்னாலிருந்து எழுந்தது. ’ஐயா, காரை ஒரு பெட்ரோல் ஸ்டேசனில் நிறுத்துங்கள். அங்கே கார் கழுவும் மெசின் காரின் வெளிப்புறத்தை கழுவட்டும். நான் காரின் உள்பகுதியை சுத்தமாகக் கழுவிவிடுவேன். புதுக்கார் போலவே இருக்கும். ஒருவரும் கண்டு பிடிக்க முடியாது. உங்கள் மனைவி காரில் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.’ ’நன்றி, உனக்கு பசிக்கிறதா?’ ’இது என்ன கேள்வி ஐயா? பசிதான் என் இயற்கை நிலை.’ ’என்ன சாப்பிட விருப்பம்?’ ’சதுர ரொட்டி கிடைத்தால் நல்லாயிருக்கும்.’ ’சதுர ரொட்டியா?’ ’ஆமாம் ஐயா. ஒரு ரொட்டியை இழுத்து இழுத்து இரண்டு ரொட்டி சைசாக மாற்றிவிடலாம்.’ அவருக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது.

முதலில் காரைக் கழுவி, பின்னர் நாலு ரொட்டியை வாங்கிக் கொடுத்து, இரண்டு நாள் சம்பளப் பணத்தையும் தந்து ஆளை அனுப்பிவிடலாம். மனைவிக்கு எதை சொல்வது, எதை மறைப்பது என்பதை அவர் பின்னர் முடிவு செய்யலாம். அவருடைய மூளையின் எல்லை வரை யோசித்துவிட்டார். ரோட்டிலே கார்கள் குவிந்துவிட்டன. மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. முதலில் வந்த பெட்ரோல் தரிப்பிடத்துக்குள் காரை திருப்பினார். கண்ணாடியில் பின்னால் பார்த்தால் ஆளைக் காணவில்லை நெஞ்சம் பதைபதைத்தது. கார் எஞ்சின் ஓடிக்கொண்டிருக்க, அவசரமாக இறங்கி பின் கதவை திறந்து பார்த்தார். மூசாவின் வாய் சற்று திறந்திருந்தது. வாயிலிருந்து நூல்போல நீர் இறங்கி தொடையை தொட்டுக்கொண்டு நின்றது. ஒருவிதமான சத்தத்துடன் மூச்சு ஏறி இறங்கியது.

காரைக் கழுவி புதிது போல ஆக்கித் தருவதாக உறுதி அளித்தவன், ஒரு ரொட்டியை இழுத்து இழுத்து இரண்டு மடங்காகச் செய்யப்போவதாகச் சொன்னவன், பன்னிரெண்டு மணிநேரம் கிவு வாவியை நீந்திக் கடந்தவன், ஏறக்குறைய 5000 டொலர் கார் சேதத்தை ஈடுசெய்ய ஒருநாள் சம்பளத்தை இலவசமாகத் தருவதாக வாக்குக் கொடுத்தவன், எப்பொழுது போலீஸ் பிடித்தாலும் நாடு கடத்தப்படக் கூடியவன் தன்னை மறந்து ஒரு குழந்தைபோல உறங்கிக்கொண்டிருந்தான்.

– December 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *