(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலையில் அது நினைவில்லை. சட்டை வேஷ்டி ரொம்ப அழுக்காகி விட்டது. ஆபீஸ் புறப்படு முன் பெட்டியைத் திறந்த போதுதான் சட்டையோ, வேஷ்டியோ, சலவை செய்தது எதுவும் மீதம் இல்லை என்று தெரிந்தது. லாண்டரி தெருத் திருப்பத்தில்தான். ஒரே ஓட்டத்தில் போய் வாங்கி வந்து விடலாம். லாண்டரி பில் மூணு ரூபாய் எழுபது காசு. தேதியோ இருபத்தேழு. மணிபர்ஸில் பஸ் சார்ஜுக்கே சில்லறைகளைத் தேடும் வறட்சி. பக்கத்து வீட்டு நண்பரிடம் கடன் கேட்கலாம். பக்கத்து வீட்டு நண்பர் குருபாதம் ரிட்டயர்ட் மத்திய சர்க்கார் ஊழியர். பொழுது போக்கு – அரசாங்கத்தைக் கண்டித்து அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு ஆசிரியர் கடிதங்கள் எழுதுவது. எப்போது தேடிப் போனாலும் நிறையப் பேசுவார். பேச்சு ஆரம்பமாகும். முடிப்பது எப்படி, எப்போது என்று தெரியாது. எல்லா ரிட்டயர்ட் ஆபீஸர்களுக்கும் இருப்பது போல் நேரம் நிறைய உண்டு.
அவன் தயக்கத்தோடு பனியனை மாட்டிக் கொண்டு பக்கத்து வீட்டில் நுழைந்தான். குருபாதம் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். நுழைந்ததும் நுழையாததுமாக, “ரொம்ப அவசரம். ஒரு அஞ்சு ரூபா இருந்தாக் கொடுங்கோ! சம்பளம் வாங்கினதும், திருப்பித் தந்துடறேன்” என்று உடனே கேட்கத் தயங்கி,
“என்ன, பேப்பர் பார்த்து ஆகலையா இன்னும்” என்று ஆரம்பித்தான். அவர் உற்சாகமாக வரவேற்றார்.
“ஆமாமா! வாங்கோ.இப்ப நிக்ஸன் அந்த சீனாவை ஐநாவிலே விட்டுட்டான்னா செக்யூரிட்டி கவுன்ஸில்லே வீட்டோ பவர் தைவானுக் இல்லைன்னு ஆயிடாதோ? ஒரே சீனாவா மாசேதுங் சீனாவையே ஒப்புத்துக்கறான்னுதானே இதுக்கு அர்த்தம்? இல்லையா?”
“சந்தேகம் என்ன? நீங்கசொல்றதுதான் சரி.”
“அப்படின்னா பார்மோஸா, செவன்த் பிளிட் எல்லாம் என்ன ஆறது…?
“…”
“கீஸிங்கர் ஜேம்ஸ்பாண்ட் மாதிரின்னா சீனாவுக்குப் போயிட்டு வந்திருக்கான்.”
“சும்மாவா, பின்னே..?”
“சூடான்ல பாருங்களேன். என்னமோ நினைச்சோம். நூமேரி நான்தான்னு நிரூபிச்சுட்டானே ஐயா.”
“ஆமாமா நீங்க சொல்றதுதான் சரி…”
தலையை ஆட்டிவிட்டுக் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது இருபது. ஒன்பதரைக்குள்ளாவது லாண்டரியிலிருந்து திரும்பினால்தான் அவசர அவசரமாக ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு பஸ்ஸை ஒடிப் பிடித்துப் பத்தேகாலுக்கு ஆபீஸ் போகலாம். எனவே துணிந்து குறுக்கிட்டு,
“ரொம்ப அவசரம். வந்து. ஒரு சின்ன ஹெல்ப்”
“புரட்சியை என்னமா ஒடுக்கியிருக்கான் பாருமேன்.
“சும்மாவா பின்னே..?” – “நாளைக்கு இதைப் பத்தி ஒரு லெட்டர் அனுப்பலாம்னு இருக்கேன். நம்ம ஃபாரின் பாலிஸியை உடனே மாத்தியாகணும். சுத்த காயலான் கடை பாலிஸியாய்ப் போச்சு.”
“சந்தேகம் என்ன? நீங்க சொல்றது தான் சரி. இப்ப நான் வந்தது.”
“நீர் எப்ப வந்தாலும் கால்லே வெந்நீரைக் கொட்டிண்டேவர்ரீர்.என்ன அவசரம் இப்ப.”
“ஆபீஸ் போகனுமே. லேட்டாயிடுமே?”
“என்ன லேட்? பிரமாத லேட் உங்களை எவன் கேக்கறான் இப்பல்லாம். அந்த நாள்லே. பாருங்கோ. பிரிட்டீஷ்காரன்.”
“சும்மாவாபின்னே.”
“ரெண்டு கொரியாவும்கூட ஒண்ணாகணும்னு நினைக்கிறதாமே ஐயா?.”
மணி ஒன்பது நாற்பத்தைந்து. இன்னும் குருபாதம் செவி சாய்க்கவில்லை. ஐந்து ரூபாய் கைமாற்றுக்காகக் குருபாதம் இழுத்த இழுப்புக்கெல்லாம் கொரியாவோ, சூடானோ, தைவானோ, பீகிங்கோ அங்கெல்லாம் இழுபட்டான். அவரிடம் எப்போதும் அவன் சிக்குவதில்லை. ஜாக்கிரதையாக ஞாயிற்றுக்கிழமைதான் போவது வழக்கம். மற்ற நாட்களில் போனால் தப்ப முடியாது. இன்று அழுக்குத் துணியோடு ஆபீஸ் போக மனமில்லாததால் இப்படி வகையாக வந்து மாட்டிக் கொண்டான். “இன்னும் அதுக்கு நீங்க பதிலே சொல்லலியே. அதுதான் அந்த செக்யூரிட்டி கவுன்ஸில் விஷயம்.”
“எந்த ஸெக்யூரிடி கவுன்ஸில் விஷயம்…”
“ஐ.நா.ஸெக்யூரிடி கவுன்ஸில் விஷயம்…”
அவனுக்கு ஐ.நா. மேலும் அதன் உலகமகா சக்திவாய்ந்த ஸெக்யூரிட்டிகவுன்ஸில் மேலும் கோபம் கோபமாக வந்தது. மணி பத்து.இனிமேல் லாண்ட்ரி போய்த் திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு ஆபிஸ் போன மாதிரித்தான். “மாஸேதுங்கின் சீனாவை ஐநாவிலே சேர்த்துண்டு, இவனேசியாங்-கே ஷேக்கை மாட்டி வச்சுடப் போறான்.”
“ஆமாமா. நீங்க சொல்றபடிதான் நடக்கும்…”
“அதில்லே ஐயா! நான் சொல்றதிலே உள்ள தாத்பரியம் உமக்குப் புரியனும்! எப்படியும் அந்தச் சீனாவை ஐநாவிலே சேர்க்கறதுதான் உலகத்துக்கு நல்லது. என்ன சொல்றீர்…?”
“ஆமாமா. நீங்க சொல்றதுதான் சரி. இப்ப நான் வந்தது…”
“என்னய்யா இது? ஆடிக்கொருதரம், அமாவாசைக்கு ஒருதரம் வரீர். வந்தால் பறக்கிறீரே…”
“இல்லே சார் நான்… இப்ப வந்தது எதுக்குன்னா..?”
“எல்லாமே திடீர் திடீர்னு மாறிண்டிருக்கு. நிக்ஸன் அமெரிக்காவிலிருந்து சீனா போகப் போறான்.”
“சும்மாவா. பின்னே?”
“அதையடுத்து செஞ்சீனா ஐநாவிலே சேர வழி பிறக்கப் போறது…”
மணி பத்தே முக்கால். இனிமேல் ஆபீஸுக்கு லீவு போடுவதைத் தவிர வேறு வழியில்லை.
“அப்புறம் செக்யூரிட்டி கவுன்ஸிலே. வீட்டோ.”
ஐ.நா. மேலும், செக்யூரிட்டி கவுன்ஸில் மேலும், சீனா மேலும் நியூஸ் பேப்பர்கள் மேலும், ரிடயர்ட்ஆபீஸர்கள் மேலும் மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவனுக்கு.
– கணையாழி, ஆகஸ்டு, 1971.
– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.