அழகுக்காக…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 2,655 
 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில மாதங்களாகக் தன் கணவனிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களை ருக்மிணி கவனித்து வந்தாள். வாசனைத் தைலம். பவுடர், ஸ்னுே என்று எதிலும் பிடித்தமில்லாதிருந்த சங்கர் அடிக்கடி அவைகளை வாங்கி வருவதும், நிலைக் கண்ணாடி முன்பு உட்கார்ந்து தன்னச் சிங்காரித்துக் கொள்வதுமாக இருந்தான். அந்த அலங்காரம் அவனுக்கு மிகப் பொருத்தாக இருந்த போதிலும் ருக்மிணிக்கு அது பிடிக்கவில்லை. அவளும் இளமையானவள்தான். முப்பத்தைந்து வயது என்ன அப்படி ஒரு வயசா? அவளிடம் அதிகமான அழகில்லாவிட்டாலும் பழைய பாணியில் உடையயணிந்து பதவிசாக இருந்தாள்.

சற்றுக் குட்டையாக, தடித்த உடம்பு, கறுப்புதான். கோயில் தூண்களில் சில சமயம் குள்ளமான பெண் உருவங்களைப் பார்க்க நேரிட்டால் சட்டென்று ருக்குவின் நினைவு வரும்:

இதற்கு நேர்மான தோற்றம் உடையவன் சங்கர். நல்ல உயரம், சுருள் கிராப்பு. கூரிய நாசி. தீர்க்கமான கண்கள். இந்த அழகன் ருக்குவைப் பார்த்துப் பிடித்துத்தான் திருமணம் செய்துகொண்டான்.

ஐந்து குழந்தைகளுக்கு அன்னையாகிவிட்ட அவளிட்ம் இப்போதே அழகு கூடியிருந்தது. பெண் பார்த்து விட்டு வந்த அன்று அம்மாவும், அப்பாவும் அவனிடம் ஒரே குரலில், “ஏண்டா! உனக்குப் பெண் பிடிச்சிருக்கா? அவர்கள் கேட்டால் என்ன சொல்றது?:” என்று கேட்டார்கள்.

“பிடித்திருக்கு, பண்ணிக்கிறேன்.”

“ஏதோ என்னைப் பார்த்துச் சொல்” என்று அம்மா அவன் முகத்துக்கு எதிரே நின்றபடி கேட்டாள்,

அவன் தன் முத்துப் பற்கள் தெரியும்படி நகைத்தான். இம்மாதிரி விரிப்பு அந்தத் தாயின் மனத்தைக் கொள்ளை கொண்டு விடும். நல்ல அழகான பிள்ளைக்கு இப்படி ஒரு பெண்ணைத் தேர்த்தெடுத்ததைப் பற்றி அம்மா மனம் குமைந்தாள்.

“அண்ணுவுக்ககுப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டுக் கொண்டே அபீதா, அவனுடைய தங்கை, உள்ளே யிருந்து வந்தாள். வந்தவள், ‘ஹி… ஹி..’ என்று சிரித்தப்படி “அப்போ நேக்கும் ஆம்படையான் வந்துடுவான்” என்று ஆர்ப்பரித்தாள். தாயும், மகனும் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தார்கள்.

உருவத்தில் ஒர் அசடைப் பெற்றுவிட்டு அதற்கு மனம் சய்யும் வயதும் வந்து விட்டால் பெற்றவர்களின் மனத்தில் அதை விடச் சுமை வேறு என்ன இருக்க முடியும்? இந்த அபீதா என்கிற அசட்டின் கழுத்தில் மூன்று முடிச்சுக்கள் போடப் போகிறவன் தான் சங்கரின் வரப் போகிற மனைவியின் தமையன். அவன் அசடு அல்ல. கால்களை இழந்தவன். இதிலே ஒரு பேரம் நடந்திருந்தது. அபீதாவை அவன் மணந்து கொண்டால், சங்கர் அவன் தங்கை ருக்குவை மணந்து கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டியிருந்தது.

“ச்சீ… உள்ளே போடி, வாயை மூடிண்டு… கர்மம்… கர்மம்…” என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டார் பெண்ணேப் பெற்றவர்.

“எனக்கு ஆம்படையான் வர்றது பிடிக்கல்லே அப்பாவுக்கு” என்று அழ ஆரம்பித்தாள் அபீதா, அழுகை யென்றால் சாதாரணமான அழுகையா என்ன? மணிக்கனக்கில் தொடர்ந்து நாட்கணக்கில் நீண்டுகொண்டே போகும் அழுகை.

எங்கே அந்த அழுகையைத் தொடர்ந்து விடுவாளோ என்று பயந்து சங்கர் அவளைச் செல்லமாக, ”அபீ ! இங்கே வாம்மா!” என்று அழைத்தான். அவள் அருகில் வந்து நின்றதும் அவள் தலையை ஆதரவாக வருடிக் கொண்டே, “எனக்கு அவா பொண்ணைப் பிடிச்சிருக்கு. உனக்கு அவா பிள்ளையைப் பிடிச்சிருக்கோ?” என்று கேட்டான். 

”ஓ! பிடிச்சிருக்கே அண்ணா! அவருக்குக் கால் இல்லைன்னா என்ன? எனக்கும்தான் சமர்த்து இல்லே – அப்போ இரண்டுக்கும் சரியாய்ப் போச்சு இல்லே?” என்றவாறு அவள் நாணிக் கொண்டே உள்ளே வேகமாக ஓடி விட்டாள்.

அசடோ எதுவோ ? அவள் அவன் உடன் பிறப்பு. அவள் முகத்தில் மலர்ச்சியைக் கண்டதும் அவன் உள்ளம் ருக்குவை அழகியாகவே ஏற்றுக் கொண்டது. 

உற்றாரும், உறவினரும் சங்கரை ஒரு தியாகியாகவே மதித்தனர். ‘தங்கைக்காக இந்தக் காலத்தில் – இந்தச் சினிமா யுகத்தில் – எவன் இப்படித் தியாகம் புரிவான்’ என்றெல்லாம் பேசினர். 

பன்னிரண்டு வருஷங்களுக்கப்புறம், அவனுடைய மூத்த மகள் பாவாடை கட்டிக் கொண்டிருந்தவள் தாவணி அணிய ஆரம்பித்த பிறகு சங்கரிடம் இலேசாகச் சில மாறுதல்கள் தோன்றியவுடன் ருக்குவை அவை வியப்பில் ஆழ்த்தின. 

ஒரு நாள் அவன் அலுவலகத்திலிருந்து வரும் போது பை நிறைய அழகுச் சாதனங்களை வாங்கி வந்தான். கஸ்தூரி மஞ்சளும், பயற்றம் மாவும் பூசிக் கொண்டு ஆரோக்கியமாகத் திகழ்ந்து வந்த குடும்பத்தில் இப்படி நோட்டு நோட்டாகப் பவுடர் ஸ்னோவுக்குப் பணம் போகிறதென்றால் ருக்குவால் பேசாமல் இருக்க முடியவில்லை. 

மறு நாள் காலையில் அவன் படுக்கையில் படுத்தபடியே காப்பிக்காகக் காத்திருந்தான். நக்கென்று ஆவி மணக்கும் காப்பியைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்து விட்டு நகர்ந்து நின்றாள் ருக்மிணி. காப்பி முன்னைப்போல் பொன்நிறத்தில் நுரை ததும்ப இல்லை.கொஞ்சம் தண்ணிக் காப்பிதான். 

“என்ன இது? காப்பியா?”

“ஆமாம்….இப்படிச் செலவு பண்ணினால் தண்டத்துக்கு. வயிற்றுப்பாட்டைக் குறைச்சுத்தான் ஆகணும்”. 

“என்ன ஆமாம்? டம்ளரிலிருந்து வாய்க்கு இறங்காது முன்னேயெல்லாம். திக்காக. நாக்கை ஒரு சுழற்று சுழற்றும். நம் வீட்டுக் காப்பி ஸ்பெஷல்னு என் சிநேகிதாள்ளாம் சொல்லுவா.” 

”சொல்லுவா… சொல்லுவா…இப்போ ஒண்ணாந்தரக் காப்பிக் கொட்டை வெளிநாட்டுக்குப் போறது. ஒண்ணாந்தர டீயும் அங்கே தான் போறது. அப்புறமா ஒண்ணாந்தர மிளகு, ஏலம், முந்திரி எல்லாமே டாலர் சம்பாதிக்க வெளிநாட்டுக்கு ஓடறதுகள். நமக்கு எல்லாமே இரண்டாந்தரம்தான்-” 

சங்கர் அவளை சுவாரசியமாகத் திரும்பிப் பார்த்தான். மூத்த மகள் தம்பூரில் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தாள். மற்றதுகள் படித்துக் கொண்டிருந்தன. பூஜையறையிலிருந்து ஊதுவத்தி மணத்தது. பிச்சிப் பூச்சரம் ராமபிரானின் படத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு கிள்ளு எடுத்துக் கோடரி முடிச்சின் கீழ் ருக்கு மடித்து வைத்திருந்தாள். சங்கர் சிரித்தபடி மனைவியைப் பார்த்து, “இங்கே வாயேன் சொல்கிறேன். இப்படி முடிச்சு போட்டுக்காமல் உயரத் தூக்கிக் கொண்டை போட்டுக்கணும். மல்லிகைச் சரத்தை ஒரு சுற்று வளைத்துச் சுத்திக்கணும். கொஞ்சம் லேசா “லாக்டோ காலமின்’ பூசிண்டு, பவுடர் போட்டு, மை தீட்டி, பொட்டும் இட்டுண்டா இன்னும் எப்படி அழகா இருப்பே தெரியுமா?” 

அவள் விக்கித்து நின்றாள். ஒரு தாம்பத்திய வாழ்க்கையில் பன்னிரண்டு வருஷங்கள் ஒரு மகாமகக் காலம் – குறைந்ததல்ல. மகப்பேறு, பற்றாக் குறை, களிப்பு என்று எத்தனையோ தினசரித் தொல்லைகளைச் சமாளித்து எதிர்த்து வாழ்ந்துவிட்ட இறந்த காலம் அந்தப் பன்னிரண்டு வருஷங்கள். இத்தனை நாட்களாக ருக்குவை அவன், ‘நீ இப்படி அழகு பண்ணிக்கோ – இப்படி சிரி, எனக்குப் பிடிச்ச மாதிரி புடவை வாங்கிக்கோ’ என்று சொன்னதில்லை. ஏன்? இருவரும் அதிகமாகப் புற அழகைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. 

“என்ன பேசமாட்டேன்கிறே?”

“அப்போ நான் அழகாயில்லையா?” என்று கேட்ட ருக்கு சட்டென்று உள்ளே தம்பூர்ச் சுருதியுடன் பாடும் தங்கள் மகள் எங்கே கவனித்துவிடப் போகிறாளோ என்று பயந்தாள். அந்தக் காலத்துப் பன்னிரண்டு வயசுப் பெண்ணின் மனத்துக்கும் இந்தக் காலத்துப் பன்னிரண்டு வயசுக்கும் ரொம்ப வித்தியாசமுண்டே ! பிஞ்சு காயாகாமல் வெம்பிப் பழுத்துவிடும் மனோ நிலைதானே இந்தக் காலம்? 

“யார் அப்படிச் சொன்னது ? இன்னும் அழகா இருப்பேன்னேன் – ” ருக்குவுக்கு மேலும் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமில்லை. பிறகு அவள் கணவனை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்: மணிக்கணக்கில் கண்ணாடி முன்பு நின்று தலையை இழைய இழைய வாருவது. பவுடர் வாசனைத் தைலத்தை அள்ளிப் பூசிக் கொள்வது – இதெல்லாம் அவளுக்கு வியப்பாகவும். விந்தையாகவும் இருந்தன. 

சில நாட்களுக்குப் பிறகு மகள் அவளிடம் ஒரு புதுக் செய்தியைக் கூறினாள். ‘அப்பா ஸ்கூட்டரின் பின்னாடி ஒரு மாமியோடு பீச்சுப் பக்கம் போயிண்டிருந்தார். நாங்க இன்னிக்கு உல்லாசப் பிரயாணம் போயிட்டு அந்தப் பக்கமாகத்தான் திரும்பி வந்தோம்-‘ 

ருக்குவுக்கு மார்பை அடைப்பது போல் இருந்தது. “இன்னும் அழகா இருப்பே-” 

அப்படியென்றால் அவள் அழகாக இல்லை.

“ஏம்மா ! பேசமாட்டேங்கிறே?” என்று மகள் உசுப்பியதும், “ஒண்ணுமில்லேடி. பாட்டு வாத்தியார் வந்துடுவார். நீ போய் டிபன் காப்பி, சாப்பிடு போ” என்று ஒரு வாறு சமாளித்து அவளை அனுப்பிவிட்டு நிலைக் கண்ணாடியின் முன்பு போய் நின்று பார்க்க ஆரம்பித்தாள். 

மிகவும் சாதாரணமான தோற்றம். நெற்றியெங்கும் தவழும் சுருள் கற்றைகளோ, விற்களைப் போல் வளைந்த புருவங்களோ, பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் ஏதுமின்றி அடக்கமாசு, அலையெறியாத் தடாகம் போல், பகட்டில்லா நிலவொளி போல் தன்னுள்ளேதான் லயித்தன்மை அவளிடம் காணப்படுவதை அவளால் உணர முடிந்தது. 

ஒரு குடும்பப் பெண்ணுக்கு, ஏன் ஒரு கடமை தவறாத மனைவிக்கு, கருத்துள்ள தாய்க்கு இதைவிட அழகு எதற்கு என்று ஒரு கேள்வியைத் தன்னை நோக்கியே வீசிக் கொண்டாள் அவள். 

உள்ளேயிருந்து டிபனை முடித்துக் கொண்டு வந்த மகள், “அம்மா ! அந்த மாமி ரொம்ப அழகா இருந்தா அம்மா. நம்ப… நம்ப ஜெயலலிதா மாதிரி மழு மழுன்னு மூஞ்சி… பளபளன்னு மின்னித்து. ரொம்பச் சின்ன மாமிதான். நீதான் நைலான் கட்டிக்கிறதேயில்லை. அவள் கட்டிண்டிருந்தாள். ரொம்ப நன்னாயிருந்தது” என்று வர்ணிக்கவும். “சரி, போடி! ஊர்க் கதை யெல்லாம் பேசிண்டு. எத்தனை நாளா ‘வாதாபி கணபதி’ சொல்லிப்பே. போய்ச் சாதகம் பண்ணு போ” என்று எரிந்து விழுந்தபடி யோசனையில் ஆழ்ந்தாள் அவள். 

தான் அழகாக இருக்க வேண்டும் என்று அவள் ஆசைப்படவில்லை. அவன் ஆசைப்படுகிறான். அவனுக்காக அவள் மாறவேண்டும். சட்டென்று அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, உள்ளே திரும்பி மகளிடம், “நான் கடைத் தெருவுக்குப் போயிட்டு வரேன். அப்பா வந்தால் டிபன் காப்பி கொடு….” என்று கூறிப் பையில் நோட்டுக் கற்றையைத் திணித்தபடி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். 

அன்றுதான் அவள் கடைகளை மிகக் கவனமாக ஆராய்ந்தாள். பெண்களிடம் இயற்கையாகவே இருக்கும் அழகை மேலும் கவர்ச்சியுடன் எடுத்துக் காட்ட, இல்லாததை இருக்கும்படி. செய்ய, பிறரைச் சுண்டி இழுக்க, திரும்பிப் பார்த்துச் சிரிக்க: ரசிக்க எல்லாவற்றுக்கும் அழகு ஒரு கடை சரக்காக மலிந்து விட்டதை உணர்ந்தாள். 

அவள் நுழைந்த கடை வாசலில் வைக்கப்பட்டிருந்த பெண்களும் பொம்மைகள்தாம்! ஓர் ஆண் பொம்மையை நிறுத்திச் சூட்டும், கோட்டும்  போட்டு வைத்தால் என்ன? ஆண்களிடம் அழகு இல்லையா? கவர்ச்சி இல்லையா? சில விநாடிகள் சங்கரின் உருவம் அவள் மனக்கண் முன்பு தோன்றியது. எப்படிப்பட்ட அழகன் அவன்? சின்னப் பெண் ஒருத்தியை மயக்கித் தன் பின்னால் ஸ்கூட்டர் சவாரி செய்ய வைத்திருக்கும் அழகனாயிற்றே ! 

அழகுச் சாதனங்களிலிருந்து அயல்நாட்டு நைலக்ஸ் வரை வாங்கிப் பையில் நிரப்பிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள் அவள். சங்கர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. சிறிய குழந்தைகள் உணவருந்தித் தூங்கிவிட்டார்கள். மகளும் படுத்து விட்டாள். ருக்கு நிதானமாகத் தலை சீவிக் கொண்டை போட்டு. மல்லிகைச் சரத்தைச் சுற்றி பவுடர் பூசி, செஞ்சாந்துத் திலகமிட்டு நெற்றியில் இரண்டொரு குழலைச் சுருட்டி வைத்து, நைலக்ஸ் புடவை கட்டி முடிக்கவும் வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது. 

அவன் வாசல் கதவைத் திறந்த மனைவியை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அடிபட்டுத் தப்பியோடிய புலியின் சீற்றம் அவன் பெருமூச்சில் தெரிந்தது. 

ருக்குவும் அவன் எதிரில் அதிகம் நடமாடாமல் சாப்பிடும் தட்டில் உணவு வகை களைப் போட்டு எடுத்து வந்து படுக்கையறை மேஜையின் மீது வைத்தாள். அந்த வீட்டில் அவன் நேரம் கழித்து வரும் இரவுகளில் அப்படியொரு வழக்கம் உண்டு. அவனுக்கு நல்ல பசி. தலை நிமிராமல், பேசாமல் சாப்பிட்டான். பரிமாறும் வளைக்கரத்தில் தவழும் புதிய போலிக் கங்கணத்தைக்கூட அவன் கவனிக்கவில்லை. அதிலிருந்து பலவகை நிறம் கொண்ட கற்கள் இலேசான நீல நிற வெளிச்சத்தில் பளிச்சிட்டன. 

சாப்பிட்டு முடித்தவுடன் பீடா உருவத்தில் வெற்றிலைச் சுருளை அவனிடம் தந்தாள் மனைவி. அந்த வீட்டில் அப்படியொரு பழக்கம் கிடையாது. பாக்கு, வெற்றிலை. சுண்ணாம்பு வெவ்வேறாக வைக்கப்பட்டிருக்கும். சில சமயம் ருக்கு மடித்துத் தருவாள்? அதது அவளுடைய வேலை காலத்தைப் பொறுத்தது. அவன் நிமிர்ந்து பார்த்தான். ருக்குவும் பார்த்தாள். முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. 

“ருக்கு! என்ன இதெல்லாம்?” என்றபடி அவன் அவளைச் சீற்றத்துடன் பார்த்தான்; 

“எதெல்லாம்?”

“இந்தக் கண்றாவி யெல்லாம் –”

“எந்தக் கண்றாவி?” 

“ஏய் ! என்னடி விளையாட்டு? என்னமோ வேஷம் போட்டுண்டு…. சகிக்கலை. தூ…” 

“என்ன தூ?” என்று அவள் நிதானமாக அவனைப் போலவே பேசினாள். 

“நீயும் உன் மூஞ்சியும்!”

“இப்படி இருந்தாத்தானே உங்களுக்குப் பிடிக்கும்? இந்தக் கண்றாவியிலேதானே அழகு ஒளிஞ்சிண்டு இருக்கு? உதட்டுச் சாயத்துக் குள்ளேயிருந்து சிரிச்சால்தானே சிரிப்பு? மை தீட்டிய (அப்பிய?) கண்ணாலே பார்த்தாத்தானே உங்க மனசுக்குப் பிடிக்கும்?”

“ஏய்! ஏய்! நிறுத்தடி? நான் அவள் பின்னாலே சுத்தினது தப்புத்தாண்டி…”

“எவள் பின்னாலே?” என்று அதிசயப் படுபவள் போலக் கேட்டாள் ருக்கு. 

“அது எவளோ ஒண்ணு. அவளுக்கும் என்னைக் கெடுக்கணும்னு எண்ணமில்லே. எனக்கும் கெட்ட வழியிலே போகணும்னு ஆசையில்லே. ஏதோ மன விகாரம்…” 

ருக்கு பலபல வென்று கண்ணீர் உருத்தாள்.

“அழறாயா என்ன? போடி, பைத்தியம்! ஒரு நிமிஷத்திலே என்னை மாத்திட்டே. அந்தப் பொண்ணும் அப்படிக் கெட்டவள் இல்லே, ‘என்ன சார்! உங்களை என் அண்ணா மாதிரி மனசுலே நெனைச்சுண்டுன்னா பழகினேன்’னாள். அண்ணாமாதிரி மனசுலே நினைச்சு வெளியிலே சகஜமாப் பழகினா நாலு பேர் நாலு விதமாப் பேசமாட்டாளா.? ஆரம்பிச்சுட்டாளேன்னேன், ‘வாட்! ஸில்லி! இந்த நாட்டிலே ஓர் ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது. பார்த்தீங்களா? அதுக்கு இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகள் போகணும். பை தி பை. என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு சொல்லிட்டுப் போய் விட்டாள். அதுக்குள்ளே உனக்கு யார் அதை வத்தி வைச்சுட்டா?” என்று மனைவியை நெருங்கிக் கேட்டான் சங்கர். 

“உங்க பெண்தான்!” என்று ருக்கு கூறியவுடன் சங்கர் ஹாவில் படுத்துறங்கும் தன்னுடைய அழகிய குடும்பத்தை ஒரு பார்வை பார்த்தான்.

– 1940

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *