ராங் நம்பர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 1,757 
 
 

அப்போது எஸ்டிடீ வந்து விட்டிருந்தது. ஆனால், தபால் அலுவலகம், மற்றும் குறைந்த சில எஸ்டிடீ பூத்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. எங்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அது அத்தியாவசியத் தேவை என்பதால் வாங்கி வைத்திருந்தோம். அந்த இராட்சதக் கருப்பு போனில்தான் அன்றையக் காலை வேளையில் நீண்ட மணி அடித்தது. அப்படியென்றால் அது எஸ்டிடீ கால்!

எடுத்துக் கேட்டால், லேசாக நடுங்கும் குரலுடன் ஒரு வயது முதிர்ந்தப் பெண்ணின் குரல்! பக்கத்தில் கொஞ்சம் ஜெயபாலைக் கூப்பிடுறீங்களா? எனக் கேட்டது. ராங் நம்பர் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் எஸ்டிடீ! மீண்டும் அதே குரல்! மறுபடியும் ராங் நம்பர் என்றேன்!

மறுபடியும் போன்! லேசான எரிச்சலுடன் போனை எடுத்தால், நீங்க யார் பேசுறது? ஜெயபாலை உங்களுக்குத் தெரியாதா? என்று வினவியது. இங்க அப்படி யாரும் இல்லையம்மா எனச் சொல்லி போனை வைத்தேன்.

சற்று நேரத்தில் மறுபடியும் போன்! இந்த முறை என்னை பேசவே விடவில்லை! யப்பா! நீ யாராயிருந்தாலும் உனக்கு புண்ணியமாப் போகும்! காலையில் இருந்து, நான் இங்க பஜார்ல போன் கடைக்கு வெளியிலேயே உட்கார்ந்து கிட்டு இருக்கேன். ஜெயபால் வந்து என்னை மெட்ராஸ் பெரியாஸ்பத்திரிக்கு எம் மவளைப் பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்துச்சு! கொஞ்சம் அவருகிட்ட சொல்லி ஞாபகப் படுத்துப்பா! எனக்கும் ரொம்ப நேரம் வெயிலில் நின்னுகிட்டே இருக்கிறதுல மயக்கமா இருக்கு! என்றார்கள். எனக்கு நிலைமை புரிந்து விட்டது.

அம்மா! நீங்க எந்த ஊருக்கு போன் பேசணும் என்று கேட்டேன்! எந்த ஊர் என்றெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா! இந்த சீட்டைக் கொடுத்து இதிலிருக்கும் நம்பரைக் கூப்பிட சொன்னாப்ல! அதான் கூப்பிட்டேன்! மத்த விவரமெல்லாம் எனக்குத் தெரியாதே? ஆமாம்! நீங்க வெளியூரில இருந்தா பேசுறீங்க? எனக் கேட்டார்.எனக்கு ரொம்பப் பாவமாகி விட்டது!

ஆமாம்மா! இது திருவண்ணாமலை நம்பர்! நீங்க எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்? (அப்போ காலர் ஐடி எல்லாம் இல்லை!) என்றுக் கேட்டேன்! நான் திண்டிவனத்தில் இருந்து பேசுறேம்பா! என்றார் பாவமாக! வேறெதுவும் சொல்லத் தெரியாமல், எதற்கும் கையில் இருக்கும் சீட்டை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்து சரியான நம்பருக்குப் போட்டுப் பாருங்க! என்று சொல்லி வைத்தேன்.

இத்தனை முறை அவர் என்னை அழைத்ததற்கே, எப்படியும் நூறு ரூபாய்க்கும் மேலாகியிருக்கும்! அப்போது எஸ்டிடீ பேசும் காசில், பேருந்தில் டிக்கட் எடுத்து விடலாம்! அத்தனை செலவு பிடிக்கும்! அடுத்த சில மணி நேரத்தில் நான் சென்னைக்குப் போக நேரிட்டது! என்னுடைய கார்களிலேயே, இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த டாடா சியாராவைத்தான் அப்போது வைத்திருந்தேன். மேலும் அப்போதெல்லாம் எங்கு சென்றாலும் செல்ஃப் டிரைவிங்தான்! என்னுடன் எப்போதும் உடன் வரும் எனது நண்பன் வேலுவுடன் காரில் கிளம்பினேன்.

கரெக்ட்! நீங்கள் யூகிப்பது போலத்தான், நானும் செய்தேன்! திண்டிவனம் வரும் போது அந்த வயது முதிர்ந்தக் குரல் நினைவுக்கு வந்தது. காரை ஊருக்குள் திருப்பினேன். அப்போது திண்டிவனம் என்பது நீண்ட பஜார் தெருவை ஒட்டிய சிறு நகரம்! அவ்வளவே! மிகச் சுலபத்தில் பஜாரில் இருந்த ஒரே எஸ்டிடீ பூத்தைக் கண்டு பிடித்தோம். உரிமையாளரிடம் விசாரித்ததில், அருகில் இருக்கும் ஒரு புளி மண்டியில் அந்தப் பாட்டி படுத்திருப்பதாக சொன்னார். மேலும், நீங்கதானா அந்த ஜெயபால் என்று கோபமாக ஒரு கேள்வி வேறு!

வேலு இறங்கிச் சென்று மண்டியிலிருந்தப் பாட்டியை எழுப்பி அழைத்து வந்தான். பாட்டி என்னைப் பார்த்தவுடன் நீங்க யாருப்பா? ஜெயபால் எங்கே? என்றார். ஜெயபாலுக்கு ஏதோ முக்கியமாக வேலையா கவர்னரைப் பார்க்க போயிருக்காரம்! அதனால திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் எங்களை அனுப்பியுள்ளார். ஏசி காரில் மெட்ராஸுக்குக் கூட்டிச் சென்று விட்டு வரச் சொல்லியிருக்கார் என்றான் வேலு. அந்தப் பாட்டி அப்படியே அதை நம்பிச் சிரித்தார்.

அவரைக் காரில் உட்கார வைத்து, பின் அவரிடம் கேட்டேன்! இங்க உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நாங்கதான் உங்களை கூட்டிச் செல்கிறோம் என்று சொல்லி விட்டாவது போகலாம் என்றேன். இங்க எனக்குத் தெரிந்தவங்க நீங்க மட்டும்தான்யா! என்று மீண்டும் அந்தச் சிரிப்பு! எஸ்டிடீ பூத் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டுக் கிளம்பினோம். மனிதர் நடப்பதைப் பார்த்து சற்று ஆடித்தான் போய்விட்டார்.

வழியில் அச்சரப்பாக்கத்தில், அவருக்கு மதிய சாப்பாடு. வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தார். திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் அவருடைய கிராமம். மகள் உடல் நிலை சரியில்லாமல் சென்னை பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருந்தார். மாப்பிள்ளை ஜெயபால், ஊர் பஞ்சாயத்தார் வலியுறுத்திச் சொன்னப் பிறகு, வேண்டா வெறுப்பாக, இவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டிருக்கிறார். திண்டிவனத்திற்கு வந்து, இந்த நம்பருக்குக் கூப்பிடு! வந்து கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, ஆள் எஸ்கேப்!

அந்த சீட்டை வாங்கிப் பார்த்தோம்! அது 04173 என்று துவங்கியது! அதாவது அது ஆரணி என்ற ஊரின் கோட் நம்பர். 3 என்பது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ 5 எனத் தோற்றமளித்தது. எனவேதான் இந்தக் குழப்பம். கையில் இருந்த கொஞ்சம் பணத்தையும் மாப்பிள்ளையை தேடி அழைக்க போனுக்காக செலவு செய்து விட்டு, பட்டினியாக வெயிலில் படுத்து இருந்திருக்கிறார்.

மாலை ஜிஎச்க்கு சென்றடைந்தோம். அங்கே கேண்டீன் வைத்திருந்த எங்கள் நண்பன், உள்ளே சென்று இவரது மகள் இருக்குமிடத்தைக் கண்டறிந்து வந்தார். காரில் இருந்து, அவரை மெல்ல கீழிறக்கினோம். அவரது உடல் நடுங்கியதைப் பார்க்க ரொம்ப பரிதாபமாக இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக குளிரூட்டப் பட்ட இடத்தில் அமர்ந்து வந்திருக்கிறார்.

அவருக்கு செலவுக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கொடுத்தனுப்ப வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். கிராமத்துப் பெண்மணி! ஏதேனும் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம். மதிய சாப்பாட்டை சாப்பிட வைக்கவே பெரும் பாடு பட்டிருந்தோம். கையில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டேன்.

கீழே இறங்கி அவரது கையைப் பிடித்து, போயிட்டு வாருங்கள் பாட்டி! உடம்பு பத்திரம் என்று சொல்லி அவரிடம் அந்தப் பணத்தை கொடுக்க முயன்றேன். அதற்குள் அவரே, நான் போயிட்டு வரேம்பா! நீங்க பத்திரமா பார்த்து போங்க! என்றுச் சொல்லி எனது கையில் வியர்வை நனைந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றினை வைத்துச் சென்றார்.

குறிப்பு: பழைய நினைவுகளை மீட்டெடுப்பது ரொம்ப சுலபம்! ஏதேனும் ஒரு நினைவு, நம்மை ஒருக் கணமேனும், அசைத்துப் பார்த்த நினைவாக இருந்தால், ஒரு சின்ன சலனத்திலேயே கூட, மனதின் ஆழத்திலிருந்து வெளியில் வந்து விடுகிறது.

இன்று காலை, டிவிட்டரில் எனது நண்பர் @amas32 (Sushima Shekar) இப்படி ஒரு ஸ்டேடஸ் பதிவிட்டிருந்தார்.

“ஒரு மிஸ்ட் காலைப் பார்த்து போன் பண்ணினேன். எடுத்தவர் நான் சீனியர் சிடிசன் தவறுதலாக உங்க நம்பர் போட்டுவிட்டேன் போல என்றார். பாவமாக இருந்தது.”

உடன் எனக்குப் பழைய நினைவு ஒன்று மேலெழுந்து வந்தது. அப்படியே எழுதி விட்டேன்.

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *