“மன்னித்துக்கொள்ளுங்கள்” அல்லது “ஸாரி” என்ற ஒரு வார்த்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 6,283 
 
 

ரவி பேருந்தின் படியில் காலை வைத்து தொங்கியவாறு தலையை கோதிக்கொண்டிருந்தான், அவன் வயதையொத்த மாணவர்கள் அவனுடனே தொங்கிக்கொண்டு வந்தனர். பேருந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. நடத்துனர் “பசங்களா” ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா எல்லாரும் பரலோகம்தான், சொன்னா கேளுங்க எல்லாரும் உள்ளே வாங்க ! இது தினமும் இவர்களுடன் பாடும் பாட்டு தான், இந்த பேருந்தில் தினமும் இவர்கள் வருவதால் நடத்துனரும் இவர்களை அதிகமாக விரட்டுவதில்லை.

ரவி ” மச்சான் ஒரு கவிதை சொல்றேன் கேளேன் என்றவன்

படிக்கட்டில் தொங்குவதால் பாவையரும்
பார்த்து மகிழ்வரே ! எங்களை கண் நோக்கி
பார்ப்பதனால் காதல் தானாக தோன்றிடுமே !

எப்படி என் கவிதை ரவி பெருமையுடன் நண்பர்களை பார்க்க, உள்ளிருந்த ஒருவன் மாப்பிள்ளை நான் ஒரு கவிதை சொல்றேன் கேளு

படிக்கட்டில் தொங்குவதால் பரமசிவனின்
எமன் உன்னை காதல் கொண்டு பார்ப்பரே
காதல் கொண்டு பார்ப்பதினால் பரலோகம்
கூட்டிப்போவாரே! நடுத்தெருவில் நாயாய்
அடிபட்டு, பரலோகம் போவதற்கு உனக்கென்ன
ஆசையடா ! சத்தமில்லாமல் மேலேறி சாந்தமாய்
உட்கார்ந்தால் பூப்போல இறங்கிடலாம் நம்
கல்லூரிக்கு!.

இப்பொழுது உள்ளிருந்த மாணவர்கள் “ஓஹோ” என கைதட்டி ஆரவாரித்தனர்.

இப்படி கலகலப்புடன் வந்து இறங்கினர் ரவியும் அவனது நண்பர்களும், ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருப்பதால் ஒரு ‘டீ’ போடலாம் ரவியும், அவன் நண்பர்களும் அரை பர்லாங்க் தள்ளி உள்ள பேக்கரிக்கு பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.

பேக்கரி வாசலில் நின்று கொண்டு மூணு டீ “ஆறா” போட்டு கொடுங்க, வெளியிலிருந்து ஆர்டர் செய்தவன் வாங்கடா உட்காரலாம் என்று வெளியில் போட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்துகொண்டனர்.

டீ ரெடி உள்ளிருந்து மாஸ்டர் சத்தமிட மச்சி நீங்க உட்காருங்க, நான் வாங்கிட்டு வந்து தர்றேன் என்றவன் உள்ளே சென்று முதலில் மூன்று டம்ளர் எடுத்து வந்து வெளியில் உள்ளவர்களிடம் கொடுத்தான். அடுத்த மூன்று டம்ளர்களுடன் வரும்பொழுது கல்லாவில் பணம் கொடுத்த திரும்பியவன் ஒருவன் “கை” கொண்டு வந்த டம்ளரில் பட அதனால் டீ தெறித்தது, கைபட்டவன் மேலும், ரவியின் மேலும் சட்டையில் டீ சிந்தியது, ரவி தன் சட்டை மேல் பட்ட டீயை அவசரமாக துடைக்க டம்ளரை வேகமாக வெளியே கொண்டு வந்து கொடுத்துவிட்டு உள்ளே வர அதுவரை கைபட்டவன் இவனையே முறைத்தவாறு பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இவன் அருகில் வந்தவுடன் ஏண்டா அறிவு கெட்டவனே, உன் கண்ணு என்ன பொட்டைகண்ணாடா? டீ மேல பட்டது கூட தெரியாம எருமையாட்டம் போறீயே என்றான், ரவி உடனே சூடாகிவிட்டான் ஏண்டா நீ தாண்டா வந்து முட்டுன! பார்ரா என் சட்டையில சிந்தியிருக்கறத, உனக்கு கண் முன்னாடியிருந்திருந்தா இந்த மாதிரி எருமையாட்ட மோதியிருப்பியா?

இருவருக்கும் வார்த்தை தடிக்க ஆரம்பிக்க வெளியே இவனுக்காக காத்திருந்த இவன் நண்பர்கள் சத்தம் கேட்டு உள்ளே வந்து அவன் சட்டையை பிடித்து தர தரவென இழுத்து வெளியே விட்டு போடா என்று தள்ளினர்.

ரவி வேண்டாம், வேண்டாம் என்று தடுப்பதற்குள் இந்த சம்பவம் நடந்துவிட்டது. வெளியே வந்து விழுந்தவன் சட்டென எழுந்து உங்களை கவனிச்சுக்கறேன் என்று,ஓடஆரம்பித்தான்.

ரவி பரபரப்புடன் டேய் சீக்கிரம் டீ யை குடிச்சு முடிங்க அவன் ஒடிப்போய் ஆளுங்களை கூட்டி வருவான்னு நினைக்கிறேன், பிரச்னை வர்றதுக்குள்ள காலேஜ் போயிடுவோம்.. அவசர அவசரமாக் டீயை குடித்து காசையும் கொடுத்துவிட்டு, வருவதற்குள் வண்டிகள் வந்து நிற்க அதிலிருந்து நான்கைந்து பேர் இறங்கி அவர்களை சுற்றி வளைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.இதற்குள் இவர்கள் காலேஜ் மாணவர்களை யாரோ அடிக்கிறார்கள் என கேள்விப்பட்டு இங்கிருந்து பத்திருபது பேர் வர அதேபோல் அங்கிருந்தும் ஆட்கள் வர ஒரே கலவரமாகிவிட்டது, போலீஸ் வந்து லத்தி சார்ஜ் செய்து மாணவர்களை விரட்டிவிட்டு, அடிபட்டு விழுந்த மாணவர்களை ஆம்புலன்சில் அள்ளி எடுத்துச்சென்றனர்.

அடுத்து வந்த இரு நாட்கள் இரு கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகள் இவைகள் அந்த இடத்தை ஒரு பீதிக்குள்ளாக்கியிருந்தன.

கை, கால் கட்டுடன் ரவியும் அவன் நண்பர்களும் காலேஜ் பிரின்ஸ்பால் முன்னால் நின்று கொண்டிருந்தனர். கல்லூரி நிர்வாகம்,மற்றும் பிரின்ஸ்பால் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்துவிட்டு இறுதியாக பிரின்ஸ்பால் அவர்களை பார்த்து “உங்களால்தான் இவ்வளவு பிரச்னைகளும், உங்கள் அனைவரையும் பதினைந்து நாள் சஸ்பெண்ட் பண்றேன், நீங்கள் போகலாம், முகத்தை திருப்பிக்கொண்டார். சார்…சார்… ரவியும் அவன் நண்பர்களும் கெஞ்சினர், இனிமேல் இதுமாதிரி தவறு செய்யமாட்டோம், இதை கடைசி தடவையா நினைச்சு மன்னிச்சுங்குங்க சார்… அழுதுகொண்டே நின்றனர்.

பிரின்ஸ்பால் அவர்களை உற்றுப்பார்த்தார்…இப்பொழுது என்ன சொன்னீர்கள்? மறுபடி சொல்லுங்கள்? இதை கடைசிதடவையா நினைச்சு மன்னிச்சுங்குங்க..சார்..

இந்த வார்த்தைய அன்னைக்கு ஏண்டா அந்தப்பையன் மேல “டீ” சிந்தினவுடனே சொல்லல்ல, சொல்லியிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்குமாடா? உங்களாலதான் இரண்டு காலேஜ் பசங்களுக்கும் பிரச்னை வந்தது அதை நீங்களேதான் சரி பண்ணனும் நீங்க சண்டை போட்ட பசங்களே உங்களை சேர்க்கறதுக்கு சிபாரிசு பண்ணனும் இதுதான் உங்களுக்கு நான் இப்ப கொடுக்கற தண்டனை.போங்க இங்கிருந்து !.

பிரின்ஸ்பாலை உட்கார்ந்திருந்தவர்கள் பார்க்க கவலைப்படாதீங்க எப்ப மன்னிப்பு அப்படிங்கறத கேட்க ஆரம்பிச்சுட்டாங்களோ கண்டிப்பா இந்த பசங்க வெளிய போய் சமாதானமாயிடுவாங்க!

அவர் நினைத்தது சரியாகத்தான் இருந்தது, சண்டையிட்டவனிடம் இவர்கள் சென்று மன்னிப்பு கேட்க அவனோ “நான்தான் பாஸ் மன்னிப்பு கேட்கணும்’ என் கை பட்டதனாலதான் ‘டீ’ சிந்திச்சு, முதல்ல என்னை மன்னிச்சுங்குங்க

ஆம் “மன்னிப்பு” அல்லது “ஸாரி” என்பது பெரிய வார்த்தை, எப்பேர்பட்ட பிரச்னைகளையும் முடித்துவைக்கும்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *