கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,862 
 

“”ஆசையாயிருக்குடா, போகலாமா?”

அம்மா கேட்டாள். அப்போது அம்மாவின் முகம், பலூன் கேட்கும் சிறுமியின் முகம்போல இருந்தது. கண்களில் பதினைந்து வருட ஏக்கம் தெரிந்தது.

வாயைத் திறந்து அம்மா அதிகம் பேசுவதேயில்லை.

பூரணத்துவம்அம்மாவின் அந்தத் தோற்றம், நான் ஏதோ அவளின் அப்பா போலவும் அவள் என் மகள் போலவும் ஓர் உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.

அந்தப் புதிய உணர்வின் ருசியை அனுபவித்தபடி தலையசைத்தேன்.

மறந்து போன அம்மாவின் சிரிப்பை, நீண்ட நாள் கழித்து அவள் முகத்தில் கண்டேன்.

கண்கள் விரிய, முகம் பூரிக்க, சிறிதாக விரிந்த அந்தச் சிரிப்பு அத்தனை இலக்கண சுத்தத்துடன் இருந்தது.

தபாலில் கல்யாணப் பத்திரிகை வந்திருந்தது. அம்மாவின் அண்ணனுடைய பேத்திக்குத் திருமணம். அதுவும் அம்மாவின் சொந்த ஊரில்.

கண்டனூர்!

அம்மாவின் ஊரைப் பற்றி நினைத்ததுமே எனக்குள் ஜிலு, ஜிலுவென காற்றடித்தது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு போவோம். நாவல் பழ மரங்களும் கொய்யாப்பழ மரங்களும் வைகைக் கரையும் செல்லாயி அம்மன் கோவிலும் என் மனதில் படமாக விரிந்தன.

இவை அனைத்தையும் மறைத்து, எனக்குள் சுந்தரியின் உருவம் விஸ்வரூபமெடுத்தது.

படபடக்கும் கண்களும், வடுமாங்காய் கடி பேச்சும், பெயருக்கேற்ற வனப்பும் அந்தக் கால சரோஜா தேவி போல இருப்பாள்.

கல்லூரி முடிந்து, வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்.

செல்லாயி அம்மன் திருவிழாவுக்காக நானும் அம்மாவும் கண்டனூர் சென்றிருந்தோம்.

தாத்தா வீட்டுக்குப் புது வரவு சுந்தரி. அவளைப் பார்த்ததுமே எனக்குள் ஏதோ சவ்வூடுபரவல் நடந்துவிட்டது.

தாத்தாவின் தம்பியின் பேத்தியாம் அவள்.

அந்த வருடத் திருவிழாவே எங்களுக்கே என ஏற்பட்டது போல ஆகிவிட்டது.

அவள் சென்ற இடமெல்லாம் என் கண்கள் தொடர்ந்தன.

கொல்லைப்புறம் போனபோது, பின்னலை முன்னேவிட்டு சுழற்றியபடி வந்தாள். பின்னலின் நுனி எதிர்பாராதவிதமாய் என் கண்ணில் பட்டுவிட்டது.

“”ஏய், என்ன இது?” என்றேன், கண்ணைத் தேய்த்தபடி.

“”நல்லா வேணும்” என்றாள்.

“”ஏன்?”

“”திருட்டு முழியோட ஒரு பார்வை என்னைத் தொடருதே எப்பவும். நல்லா வேணும்” என்றாள்.

அவள் முகத்தில் தெறித்த வெட்கத்தை ரசித்தபடி கேட்டேன்.

“”திருட்டு முழி தொடருட்டுமா உன் வாழ்க்கை முழுதும்”

சடாரென இரண்டு அடி குதித்து ஓடினாள்.

சட்டென நின்று “”அப்பாவிடம் பேசச் சொல்லுங்க, உங்க அம்மாவைவிட்டு” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

என் காதல் உணர்வின் பூரணத்துவம் அந்த நொடி நடந்தேறிவிட்டது. என் மனதும் உடலும் பறந்து கொண்டேயிருந்தது.

என் விருப்பம் அறிந்து அம்மா, சுந்தரியின் அப்பாவிடம் பேசினாள்.

“”முதல்ல வேலை கிடைக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டார், ஒரு தகப்பனின் பொறுப்போடு.

எனக்கு வேலை கிடைப்பதற்குள் சுந்தரிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. கொஞ்சநாள் தாடியோடு அலைந்தேன். அப்புறம் வங்கி வேலை கிடைத்தது. என் மனநிலையை மாற்ற அம்மா அழுது, புரண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தாள்.

பெண்ணைப் பார்க்காமலேயே “சரி’ என்றேன். திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு அந்தப் பெண் தொலைபேசியில் அழைத்தாள்.

“”தான் ஒருவனைக் காதலிப்பதாகவும் வீட்டைவிட்டு ஓடிப்போகப் போவதாகவும் தன் செயலுக்கு என்னிடம் மன்னிப்பு கேட்பதே முறை என்பதால் போன் செய்ததாகவும் சொன்னாள்.”

“”வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தினேன்.

அம்மாதான் உடைந்து போய்விட்டாள். அதேசமயம் எனக்குப் பதவி உயர்வுடன் குஜராத் மாநிலத்துக்கு மாற்றல் வர அம்மாவும் நானும் தமிழ் மண்ணை உதறிவிட்டுக் கிளம்பினோம்.

பதினைந்து வருடமாய் வைராக்கியமாய், தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கவில்லை. எனக்கு நான் உனக்கு நீ என்று அம்மாவும் பிள்ளையும் வாழ்க்கையை ஓட்டினோம், நாங்கள்.

இதோ கண்டனூர் வந்துவிட்டது!

காலைக் கருக்கலில் ஊர்வந்து சேர்ந்தோம். இரண்டு நாள் இரயில் பயணம் இரண்டு யுகமாய் எங்களுக்குள் படிந்தது.

சொந்தங்களை நீண்டநாள் கழித்துக் காணப் போகும் பரபரப்பு அம்மாவுக்கு.

எனக்குள் சின்ன சலசலப்பு. சுந்தரியும் இந்த விசேஷத்துக்கு வருவாளா? சேச்சே… அவள் அடுத்தவன் மனைவி!

சொந்தங்கள் எங்களை ஆரவாரத்துடன் வரவேற்றன.

“”என்னப்பா உடல் நிறமும் உடுப்பும் தோற்றமும் வடநாட்டுக்காரனாகவே மாறிட்டே” என்று மாமா வரவேற்றார்.

அம்மாவுக்குப் பத்துவயது குறைந்துவிட்டது. எனக்குத்தான் எதிலும் ஒட்டவில்லை. குளித்து முடித்ததும் காலார நடந்தேன்.

கிராமத்தின் கலாசாரம் நிறையவே மாறிவிட்டதை உணர்ந்தேன்.

முன்பெல்லாம் விடிவதற்குள் ஊர் விழித்துக் கொண்டுவிடும். வாசல் தெளிப்பதும் கோலம் போடுவதுமாய் பெண்கள் வீட்டு வாசலில் தெரிவார்கள். ஆடு, மாடு குரல்களும் சேவலின் கொக்கரிப்பும் பறவைகளின் பூபாளக் கூவலும் கேட்கும்.

இப்போது, காலை ஆறரை மணிக்கு மேல்தான் வீட்டின் கதவுகள் திறக்க ஆரம்பிப்பதைக் கண்டேன். இன்னமும் தூக்கம் மிச்சமிருக்கும் முகங்களுடன் பெண்களும், ஆண்களும் தெரிந்தார்கள். எல்லாம் தொலைக்காட்சியின் எதிர்மறை விளைவுகள்.

நல்லவேளை, காலை நேரக் குளிர்ச்சி மட்டும் அப்படியே இருந்தது. மாசுபடாத கிராமத்து இயற்கை இன்னமும் இருக்கிறது.

செல்லாயி அம்மன் கோவில் பக்கம் நடந்தேன். சிவன் கோவிலும் அம்மன் கோவிலும் கூப்பிடு தூரத்தில்தான் இருந்தன. சிவன் கோயில் எதிரே பெரிய குளக்கரை. அதன் நிறைந்த நீரில் சிறு சிறு அலைகள் மனித மனம் போலவே.

“”தள்ளுங்க, தள்ளுங்க” என்ற குரல் கேட்டு நான் திரும்புவதற்குள், என் மேல் சைக்கிள் வந்து மோதிவிட்டது.

என் வலப்பக்கம் சைக்கிளும் இடப்பக்கம் ஒரு சிறுமியும் விழுந்து கிடந்தார்கள்.

முழங்கை சிராய்ப்பை வாயால் ஊதியபடி சிறுமி எழ முயல, நான் உதவி செய்தேன்.

“”சாரி அங்கிள்”

அந்தச் சிறுமியின் முகம் எனக்கு மிகப் பரிச்சயமாய்த் தெரிந்தது.

சைக்கிளை எடுத்துக் கொடுத்தேன்.

“”பார்த்து ஓட்டும்மா” என்றேன்.

“”சைக்கிளால் உங்களை இடிச்சப்புறமும் என்னைத் திட்டாத முதல் ஆள் நீங்கதான். நன்றி அங்கிள்” என்றாள், “பளிச்’ சிரிப்புடன்.

அந்தச் சிரிப்பு என் மூளைக்குள் எங்கோபோய், நினைவு நாடாக்களைச் சுழல வைத்தது.

“”உன் பெயர் என்ன?”

“”பூரணி” என்றபடி சைக்கிளை மிதித்தபடி போய்விட்டாள்.

மதிய சாப்பாடு முடிந்து, நான் கொல்லையில் சீத்தாப் பழ மரத்தடியில் சேர் போட்டு அமர்ந்திருந்தேன்.

கையில் சாணிச் சுருணையுடன் அம்மா வந்தாள்.

“”என்னம்மா, சின்னப் பெண்போல துள்ளி குதிச்சுண்டு வர?” என்றேன் கிண்டலாய்.

“”நீதாண்டா, கிழவன் வேஷம் போட்டுக் கிட்டு தனியே தவம் பண்றே.. எல்லோரும் என்னைத்தான் குற்றம் சொல்றாங்க, உன் நிலையைப் பார்த்து” என்றாள்.

நான் சிரித்தேன்.

“”தெரியுமா உனக்கு? அந்த சுந்தரியும் அவ புருஷனும் இறந்துட்டாங்களாம்”

அதிர்ந்துபோய் சேரில் இருந்து எழுந்துவிட்டேன்.

“”அவ புருஷன் பெரிய குடிகாரனாம். கல்யாணம் ஆனதிலேயிருந்து சண்டை, சச்சரவுதானாம். சுந்தரி பாதிநாள் பிறந்த வீட்டிலேயேதான் இருப்பாளாம். ஏழெட்டு வருஷம் முன்னே அவ புருஷன் வியாதியிலே படுத்து இறந்துவிட்டானாம். அப்ப அந்த சுந்தரி முழுகாம இருந்தாளாம். பிரசவத்திலே பொம்பளைப் பிள்ளையை பெத்துப் போட்டுட்டு மகராசி வாழாமலேயே போயிட்டா. அநாதையாய் அந்தச் சின்னப் பொண்ணு இங்குதான் தாத்தா வீட்டுலே வளருதாம். அவ தாத்தா காலத்துக்குப்புறம் அந்தப் பொண்ணு கதி என்னவோ பாவம்”

அதற்குள் அம்மாவை யாரோ அழைக்க உள்ளே போய்விட்டாள்.

அடுத்தநாள் கல்யாண அமர்க்களம்.

மண்டபம் முழுக்க சொந்தபந்தங்கள். பரபரப்பிலிருந்து ஒதுங்கி, தனியே அமர்ந்திருந்தேன்.

“”அங்கிள்” என்று ஓடி வந்தாள் பூரணி.

அழகாய் தலையைப்பின்னி பட்டுப் பாவாடைச் சட்டையில் குட்டி தேவதையாய் இருந்தாள்.

“”உங்க மடியிலே உட்கார்ந்துக்கலாமா?” என்று கேட்டபடி உரிமையுடன் அமர்ந்தாள்.

“”ஏன் உம்முனு எங்க தாத்தா மாதிரியே இருக்கீங்க. தலைவலி, உடம்பு வலி ஏதுமிருக்கா?” என்றாள்.

தளிர் விரலால் என் வயிற்றில் தடவிவிட்டாள். எனக்குள் சிலிர்த்தது.

தூரத்திலிருந்து எங்களைக் கவனித்துவிட்ட அம்மா அருகில் வந்தாள்.

“”இவதான் சுந்தரியோட பொண்ணு. அவளை மாதிரியே வெடுக், வெடுக்குனு பேச்சு, எல்லோரிடமும் பிரியம். சமர்த்து” என்றாள்.

அடுத்த இரண்டு நாட்கள் பூரணியும் நானும் பிரியவேயில்லை. கண்ணுக்குத் தெரியாத கயிறு எங்களைக் கட்டிப் போட்டுவிட்டது.

ஊருக்குக் கிளம்புவதற்கு முதல்நாள் அம்மாவிடம் கேட்டேன்.

“”ஏம்மா, பூரணியை உனக்குப் பிடிச்சிருக்கா?”

புரியாமல் பார்த்தாள்.

“”பூரணி, என்னையும் இந்தப் பாட்டியையும் பிடிச்சிருக்கா?” என்று என் அருகே அமர்ந்திருந்தவளிடம் கேட்டேன்.

“”ஓ.. உங்களோடவே எப்பவும் இருக்கணும் போல இருக்கு” என்றாள்.

“”இதுதாம்மா என் விருப்பமும்” என்றேன் அம்மாவிடமும்.

சற்றுநேரம் திகைத்துப் போய் யோசனையுடன் இருந்த அம்மா, மெல்லிய புன்னகை முகத்தில் விரிய தலையசைத்தாள்.

– ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *