மனிதர்கள் பலவிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 6,872 
 

‘கிளி ஆன்ட்டீ வீடு’ எங்கள் தெருவில் பிரசித்தம். தெருக் குழந்தைகள் எல்லாம் மாலையில் பள்ளி விட்டு வந்து ஆன்ட்டீ வீட்டில் இருக்கும் பேசும் கிளிகள், மைனாக்கள், வகை வகையான வண்ணப்பறவைகளைப் போலக் குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

ஆன்ட்டீ பறவைகளை மிக அன்பாகப் பராமரிப்பார்கள். ஏதோ மனிதர்களிடம் பேசுவதைப் போல பறவைகளுக்கெதிரே நின்று பேசி தீனி போடுவார்கள். கிளி கூண்டுக்கெதிரே ஒலிப்பெருக்கி வைத்து வீட்டுக்குள்ளேயிருந்து ரேடியோ, டேப்ரெகார்டரில் பாட்டுப் போட்டு விடுவார்கள். தானும் ‘கொஞ்சும் மைனாக்களே!’, ‘பறவைகள் பலவிதம்’ என்று பறவைகள் சம்பந்தப்பட்டப் பாடல்களை அவைகளிடம் உல்லாசமாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். பறவைகள் நாள் முழுவதும் தங்களோடு யாரோ பேசிக்கொண்டிருப்பதைப் போலத் தாங்களும் எப்போதும் சளசளத்துக் கொண்டேயிருக்கும்.

நானும் அவ்வப்போது என்னுடைய எல்.கே.ஜீ படிக்கும் பையனை அங்கே கூட்டிக் கொண்டு போய் அங்கேயுள்ள பலவித பறவைகளை ஒவ்வொன்றாக இனம் காட்டிப் பெயர் சொல்ல, அவனும் கூடவே சொல்லிப் பார்த்துக் கொள்வான்.

ஒரு நாள், கிளிக் கூண்டின் மேலே ஒரு ‘செத்த காக்கா’ தலை கீழாகத் தொங்க விடப்பட்டிருப்பதைப் பார்த்துப் பதறிப் போன நான் ஆன்ட்டீயை விசாரித்தேன்.

“இந்த காக்காயிங்க கூண்டுக் கிட்டே வந்து பறவைகளுக்கு தொல்லை குடுக்குதுன்னு நாந்தாம்மா குருவிக்காரனைக் கூப்பிட்டு ஒரு காக்காயை அடிச்சுக் கொணாந்து மாட்டச் சொன்னேன்!” என்று ஆன்ட்டீ பெருமையாக விவரிக்க, நான் விக்கித்துப் போனேன்.

“காக்காவும் ‘பேர்ட்’ தானேம்மா? அதை ஏன் அங்கே தொங்க விட்டுருக்காங்க?” என்று என் பையன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நான் இப்போது கிளி ஆன்ட்டீ வீட்டுக்குப் போவதையே நிறுத்தி விட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *