நடுக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 8,652 
 

வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது.

சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக் குத்திட்டு அமர்ந்தபடி பின் சக்கரத்தை கவனித்தான்.

டயரில் காற்று குறைந்திருக்குமோ என்பதுதான் அவனுடைய முதல் சந்தேகம். ஆனால், அப்படியின்றி, போதுமான அளவு காற்று இருப்பதாகத் தெரிந்தது. கையால் அழுத்திப் பார்த்தபோது கட்டைவிரல் லேசாக வலித்தது.

எரிச்சலுடன் கைகளை உதறிக்கொண்டபடி சக்கரத்தின் மற்ற பகுதிகளைச் சோதித்தான் அவன். தூசும் சேறும் படிந்த எல்லா நட், போல்ட்களும் சரியாக முடுக்கப்பட்டிருப்பதுபோல்தான் தெரிந்தது. என்றாலும், வண்டி ஜன்னி வந்தாற்போல் அபத்திரமாக உதறுகிறது. ஏன்?

பெரிதாக இரண்டு தும்மல்களைப் போட்டபடி பைக்கின்மீது லேசாகச் சாய்ந்து நின்றுகொண்டான் சிவராமன். கடைசியாக வண்டியை சர்வீஸ் விட்டது எப்போது என்று யோசித்துப்பார்த்தான். ஞாபகமில்லை.

பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டான். நாளை காலை மறக்காமல் வண்டியை சர்வீஸுக்கு அனுப்பிவிடவேண்டும்.

மணி ஐந்தாகப்போகிறது. என்றாலும், உச்சி வெய்யில்போல் தகித்துக்கொண்டிருந்தது. சோதனைபோல் இந்த வண்டியும் கிளம்ப மறுத்தது. சிவராமன் தன் கோபத்தையெல்லாம் கூட்டி உதைத்தும்கூட எஞ்சினில் எந்தச் சலனமும் இல்லை. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டுச் சாலையோரச் சாக்கடையில் குதித்து மூழ்கிப்போய்விடலாமா என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

இன்று காலையிலிருந்தே எதுவும் சரியில்லை. அலுவலகம் சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் அந்த வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்துவிட்டது.

எரிச்சல் கலந்த பணிவோடு அவன் சொன்னதெல்லாம் இன்னும் சிவராமன் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது, ‘எப்போ கேட்டாலும் பணம் இல்லைன்னுதான் சொல்றீங்க ஸார். ஒண்ணு, உங்க பேங்கில பேசி எங்களுக்குப் பேமென்ட் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, நீங்களாவது கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. ரெண்டும் இல்லாம நாங்க எப்படி ஸார் வீடு கட்டறது?’

அவன் சொல்வதெல்லாம் வாஸ்தவம்தான். என்றாலும், அவன் பேசுகிற தொனியில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டுவிடலாமா என்றிருந்தது சிவராமனுக்கு. சட்டென்று குரல் தணித்து யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘கொஞ்சம் பொறுத்துக்கங்க வெங்கடேஷ், இன்னும் ஒரு வாரத்தில செக் வந்துடும்ன்னு சொல்றாங்க’ என்றான்.

‘ஆறு மாசமா அவங்க இதேதான் சொல்றாங்க’ என்றான் வெங்கடேஷ், ‘அதெல்லாம் நம்பறதுக்கு இல்லை ஸார், எங்களுக்கு இப்போ உடனடியா பணம் தேவைப்படுது.’

‘எவ்ளோ?’ கேட்கும்போதே சிவராமன் குரலில் லேசான நடுக்கம்.

‘அட்லீஸ்ட் ரெண்டு லட்சமாவது வேணும் ஸார். கம்பி வாங்கணும்’, என்றான் வெங்கடேஷ், ‘நாளைக்குள்ள நீங்க பணம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா சவுகர்யமா இருக்கும்’ என்று பொறுமையாகச் சொன்னவன், சட்டென்று மிரட்டல் தொனிக்குத் தாவி ‘இல்லைன்னா உங்க வீட்டு வேலைதான் தடைபடும்’ என்றான்.

‘நான் பார்க்கறேன் வெங்கடேஷ்’ என்றான் சிவராமன், ‘ஒரு லட்சமாவது ட்ரை பண்றேன்.’

‘ஒரு லட்சமெல்லாம் போதாது ஸார்’ என்றான் வெங்கடேஷ், ‘ஒன்னரையாவது தேவைப்படும் ஸார், இரும்புக் கம்பியெல்லாம் விலை ஏறிப்போச்சு.’

உடனடியாக நாலு இரும்புக் கம்பிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அந்த வெங்கடேஷின் கழுத்தில் இட்டு முறுக்கினால் என்ன என்று தோன்றியது சிவராமனுக்கு. அந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு ‘முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறேன்’ என்றான்.

‘அப்போ நான் நாளைக்குக் காலையில ஃபோன் செய்யட்டுமா ஸார்?’

அவனுக்கு சரியாக பதில் சொல்லாமலே சட்டென்று ஃபோனை வைத்துவிட்டான் சிவராமன். காலை நேர வேலையின் உற்சாகமெல்லாம் மொத்தமாக வடிந்துவிட்டாற்போலிருந்தது. திடீரென்று ஒன்றரை லட்சத்துக்கு எங்கே போவேன் நான்?

எல்லாம் அவனுடைய முட்டாள்தனத்தால் வந்த வினைதான். யாரோ சொன்னார்கள் என்று ஒன்றரையணா வங்கியொன்றில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்ய, அவர்கள் தேவையான நேரத்தில் பணம் தராமல் பாடாகப் படுத்துகிறார்கள்.

ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் நடந்தது. மூன்றரை பக்க விண்ணப்பத்தை நிரப்பித் தந்ததும் வங்கியிலிருந்து நான்கைந்து பேர் வீடு கட்டுமிடத்துக்கே வந்து விசாரித்துப்போனார்கள், வீட்டிற்கு இத்தனை லட்சம் மதிப்பு, அதில் எண்பத்தைந்து சதவிகிதம் கடனாகத் தரமுடியும் என்றெல்லாம் கூரியரில் லெட்டர் அனுப்பினார்கள்.

ஆனால், அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டபிறகுதான் பிரச்சனையே தொடங்கியது. ஆரம்பத்தில் கடன் தருவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் பக்கம் பக்கமாகக் காகிதங்களைக் கொண்டுவந்து கொட்டி, சிவராமனிடம் கிட்டத்தட்ட நாற்பது கையெழுத்துகள் வாங்கிக்கொண்டபின், காசு தரமுடியாது என்று தலைகீழாக நின்றார்கள்.

அதாவது, அரைகுறை வீட்டிற்கெல்லாம் கடன் தரமாட்டார்களாம். வீட்டில் பாதியாவது கட்டிமுடித்தபிறகுதான் காசு தரமுடியும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்.

இந்த திடீர் திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சிவராமன் நிலைகுலைந்துபோய்விட்டான். அதேநேரத்தில், அவனுக்கான வீடு அமைந்திருந்த அடுக்ககத்தைக் கட்டிக்கொண்டிருந்த கம்பெனி, இந்த க்ஷணத்தில் காசு வந்தால்தான் ஆச்சு என்று தொல்லை தரலானது.

சுருக்கமாகச் சொல்வதானால், ‘இன்னும் கட்டிமுடிக்காத வீட்டுக்கு எதை நம்பிக் காசு தருவேன்?’ என்று முறைக்கிறான் வங்கிக்காரன். ‘காசு கொடுத்தால்தானே என்னால் கட்டிமுடிக்கமுடியும்?’ என்கிறான் வீட்டுக்காரன்.

இவன் சொல்வதும் நியாயம்தான். அவன் சொல்வதும் நியாயம்தான். இந்த இரண்டு நியாயங்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அநியாயமாக சிவராமன் தலை உருள்கிறது.

அப்போதிலிருந்து, ஒவ்வொரு மாதமும் அந்த வெங்கடேஷிடமிருந்து ‘எப்படியாவது ஒரு லட்சம் ஏற்பாடு செய்யுங்க சார்’ என்று ஃபோன் வருவது வழக்கமாகிவிட்டது. தளம் போடவேண்டும், அல்லது செங்கல் சூளைக்குப் பணம் தரவேண்டும், அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டவேண்டும். இப்படி அவனுக்கென்று ஏதாவது ஒரு செலவு வந்துவிடுகிறது. உடனடியாக, ஒரு லட்சம், அல்லது ஒன்றரை லட்சம் வேண்டுமே வேண்டும், நீயாகக் கொடுத்தாலும் சரி, உன்னுடைய வங்கியிலிருந்து கடன் வாங்கிக் கொடுத்தாலும் சரி, எனக்குப் பணம் வேண்டும். அவ்வளவுதான்.

ஒவ்வொருமுறையும், ‘அதெல்லாம் தரமுடியாது. என்ன பண்ணுவியோ, பண்ணிக்கோ’ என்று கத்தவேண்டும்போல்தான் இருக்கிறது சிவராமனுக்கு. ஆனால், முத்திரைத் தாளில், பன்னிரண்டு பக்க ஒப்பந்தத்தில் நீளமாக இட்ட கையெழுத்துகள் அனைத்தும் சங்கிலிகளாகக் கோத்துக்கொண்டு அவனைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி பணம் தராவிட்டால் போலீஸோ, கோர்ட்டோ, ஜெயிலோ, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, எப்படியாவது அக்கம்பக்கத்தில் விசாரித்து, தெரிந்தவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஐம்பதாயிரமோ, எழுபதாயிரமோ ஏற்பாடு செய்துதொலைக்கவேண்டியிருக்கிறது.

இதனால், ஊரில் பாதிப் பேரிடம் ஏற்கெனவே கடன் வாங்கியாகிவிட்டது. சனியன் பிடித்த இந்த பேங்க் லோன் வருவதற்குள் மிச்சமிருக்கிற எல்லாரிடமும் கையேந்தவேண்டியிருப்பது நிச்சயம்.

இப்போது, இரும்புக் கம்பிகளைச் சாக்கிட்டு மேலும் ஒன்றரை லட்சம் கேட்கிறான். அதுவும், நாளைக்கே.

அத்தனை பெரிய தொகை, யாரால் ஏற்பாடு செய்யமுடியும் என்று காலையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான் சிவராமன். சாப்பாட்டு நேரத்தில் வெங்காய உப்புமா உள்ளே இறங்க மறுத்தது. இனிமேல் யாரைக் கேட்கமுடியும்? எங்காவது போய்க் கொள்ளையடித்தால்தான் உண்டு.

சாலையோரமாக நிமிர்ந்து நின்றிருந்த அந்த விளம்பரப் பலகை சிவராமனின் கண்ணில் பட்டது. அழகான ஒரு கடற்கரையில், இளவயது அம்மா, அப்பா, இரண்டு அல்லது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, மூவருமாக ஈர மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மூவரின் முகத்திலும் அளவற்றுப் பொங்கும் உற்சாகச் சிரிப்பு, அதனூடே, ‘நிஜ வீடு கட்டுவதும் இத்தனை சுலபம்தான்’ என்னும் விளம்பர வரிகள்.

அதென்னவோ, விளம்பரங்களின் உலகத்தில்மட்டும் எல்லாரும் திருப்திகரமாகவே இருக்கிறார்கள். கவலைகளற்ற, அபரிமிதமான சிரிப்பும் நிம்மதியுணர்வும் நிறைந்து வழிகிற அந்த உலகினுள் தாவிக் குதித்துவிடமுடியுமா என்று ஏக்கமாயிருந்தது சிவராமனுக்கு.

இந்த எண்ணத்துடன் இன்னொருமுறை வண்டியை அழுத்தி உதைத்தான் சிவராமன். லேசாகச் சிணுங்கிவிட்டுக் கிளம்பிவிட்டது. மெல்லமாக உறுமியபடி சாலையில் கலந்தான்.

வழக்கமாக, வண்டி ஓட்டுகிறபோது சிவராமனுக்கு மெலிதாகப் பாடத் தோன்றும், அடுத்தவருக்குக் கேட்டுவிடாதபடி சின்னக் குரலில் தனக்குள்ளே பாடிக்கொள்வதுதான். என்றாலும், அப்படிப்பட்ட தருணங்களில், சினிமாவில் பாட்டுப் பாடிக்கொண்டே குதிரையில் போகிற ராஜகுமாரனைப்போல் தன்னை உணர்வான் அவன்.

ஆனால் இப்போது, ஏமாற்றத்தின் கசப்பும் சலிப்பும்தான் அவனுக்குள் நிரம்பியிருந்தது. இன்று மதியம்முழுக்க ஏழெட்டுப் பேருக்கு ஃபோன் செய்தாகிவிட்டது. சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் ‘அவ்ளோ பணமா?’, என்று வாயைப் பிளந்தார்கள்.

கடைசியில், ஒரே ஒரு சிநேகிதன்மட்டும் பத்தாயிரம் ரூபாய் தரமுடியும் என்று ஒப்புக்கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் கைவிரித்துவிட்டார்கள்.

ஒன்றரை லட்சம் கேட்கிறவனிடம் வெறும் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தால் அந்த வெங்கடேஷ் தன்னை எப்படிக் கேவலமாகப் பார்ப்பான் என்று சிவராமனால் இப்போதே ஊகிக்கமுடிந்தது. மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து என்ன புண்ணியம்? வீடு கட்டுகிறேன் என்று தொடங்கி இப்படிக் கண்டவனிடம் அவமானப்படவேண்டியிருக்கிறது.

வண்டி மீண்டும் லேசாக நடுங்கியது. சிவராமன் பைக்கை நிறுத்தாமல் வேகம் குறைத்து அப்படியே திரும்பிப் பார்த்தான். பின் சக்கரம் ஒழுங்காகச் சுற்றுவதுபோல்தான் தெரிந்தது. ஆனாலும், வண்டி நிலையற்றுத் தடுமாறுவதை அவனால் நன்றாக உணரமுடிந்தது. ஆகவே, வண்டியை விரைவாக விரட்டமுடியவில்லை. சக்கரம் பிடுங்கிக்கொண்டு பறந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.

உடனடியாக இதைச் சோதித்துச் சரி செய்தாகவேண்டும் என்றுதான் விரும்பினான் சிவராமன். ஆனால், அன்றைய தினத்தின் களைப்பும் அசதியும் அவனை ரொம்பவும் தளர்வாக்கியிருந்தது. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் வீட்டுக்குச் சென்று அகால நேரத்தில் அடித்துப்போட்டாற்போல் உறங்கிப்போனான்.

***

அதிகாலை நாலரை மணிக்கு, ஏதோ கெட்ட கனாக்கண்டு விழித்துக்கொண்டான் சிவராமன்.

இன்னும் ஊர் எழுந்திருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே இருள் விலகாத வானத்தை வெறித்தபடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். பிறகு, மெல்லமாகத் தலையை உலுக்கிக்கொண்டு பல் துலக்கச் சென்றான்.

அப்போதுதான், திடீரென்று எங்கோ மின்னலடித்தாற்போல் ஸ்ரீனிவாசனின் நினைப்பு வந்தது.

ஸ்ரீனிவாசன், அவனுடைய முந்தைய கம்பெனியில் மேனேஜராக இருந்தவர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் சிவராமனிடம் தனி பிரியம் உண்டு. அவன் பிரம்மச்சாரியாக இருந்த சமயங்களில், வாரம் ஒருமுறையாவது அவனைத் தங்களின் வீட்டுக்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுவார்கள்.

அவரை நினைக்கையில் சிவராமனுக்குப் புது நம்பிக்கை பொங்கினாற்போலிருந்தது. ஸ்ரீனிவாசன் ஓரளவு வசதியானவர்தான், அவரால் நிச்சயமாக இந்த ஒன்றரை லட்சத்தைப் புரட்டமுடியும்.

ஆனால், கடைசியாக அவரிடம் பேசிப் பல மாதங்களாகிறது. அல்லது, சில வருடங்களே ஆகிவிட்டதோ என்னவோ.

சிவராமனுக்குத் திருமணமானபின், ஒரே ஒருமுறை மனைவியுடன் அவர் வீட்டுக்குச் சென்றுவந்தான். அதன்பிறகு, இன்றுவரை தொலைபேசித் தொடர்புகூட இல்லை. இப்போது, காசு விஷயத்துக்காக அவரிடம் சென்று நிற்கத் தயக்கமாக இருந்தது அவனுக்கு.

ஆனால், இப்போது அதெல்லாம் பார்த்தால் முடியுமா? மறுபடி அந்த வெங்கடேஷ் ஃபோன் செய்து ‘இன்னும் காசு ஏற்பாடு செய்யலையா? நீயெல்லாம் ஏன்யா உயிரோட இருக்கே?’ என்று கேவலமாகப் பேசுமுன் அவன் கேட்ட தொகையில் பாதியாவது தேற்றியாகவேண்டுமே.

சீக்கிரமே குளித்துவிட்டுக் கிளம்பினான் சிவராமன். நேற்றின் மிச்சம்போல் வண்டி ஏகத்துக்கு நடுங்கிப் பதறியது. என்றாலும், முடிந்தவரை வேகம் பிடித்து ஓட்டினான். எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகக் காரில் ஏறிவிடுகிற ஸ்ரீனிவாசனை அதற்குமுன்பே பிடித்தால்தான் உண்டு.

***

‘ஒரு லட்சம்தானா?’ ஏமாற்றமாக உதட்டைப் பிதுக்கினான் வெங்கடேஷ்.

‘இப்போதைக்கு இவ்ளோதான் முடியும்’, கண்டிப்பான குரலில் சொன்னான் சிவராமன், ‘இவ்ளோதான் முடிஞ்சது’ என்று தன் இயலாமையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந்தது அவனுக்கு. ஆகவே, சற்றே அதட்டலான தொனிக்குத் தாவிக்கொண்டு, ‘ஏற்கெனவே மூணு லட்சம்வரைக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கேன், எல்லாக் காசையும் நானே புரட்டிட்டா அப்புறம் பேங்க் எதுக்கு? லோன் எதுக்கு?’, என்றான்.

‘கோவிச்சுக்காதீங்க சார்’, சிவராமன் தந்த காசோலையைச் சட்டைப் பையில் செருகிக்கொண்டு குப்பையாகக் குவிந்திருந்த மேஜையில் ரசீதுப் புத்தகத்தைத் தேடியபடி சொன்னான் வெங்கடேஷ், ‘உங்க பேங்க்லதான் காசே தரமாட்டேங்கறாங்க’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது வெங்கடேஷ்’, குரலை உயர்த்திச் சொன்னான் சிவராமன், ‘இனிமே நீங்க என்கிட்டே இப்படி அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செஞ்சா என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்புறம் இந்த வீடே வேண்டாம்ன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.’

அவனுடைய வெற்று மிரட்டலுக்கு மெல்லச் சிரித்தபடி பால் பாயின்ட் பேனாவால் உள்ளங்கையில் கிறுக்கிப்பார்த்தான் வெங்கடேஷ். அந்தக் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் மெலிதான இரும்புக் கம்பிகள்போல் சிவராமனுக்குத் தோன்றின.

***

ஆஃபீசுக்குத் திரும்பும் வழியெல்லாம் வெங்கடேஷின் அந்தச் சிரிப்புதான் சிவராமனை உலுக்கிக்கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிக்கிவிட்ட தனது இரையைப் பார்த்து ஒரு சிங்கமோ, சிறுத்தையோ சிரிப்பதைப்போல் ஓர் அலட்சியமான, ‘உன்னால் வேறெதுவும் செய்துவிடமுடியாது’ என்பதைப்போன்ற ஆணவமான அந்தச் சிரிப்புக்காகவே அந்த வெங்கடேஷை வெறுத்தான் சிவராமன்.

ஆனால், வெறுப்பதைத்தவிர அவனால் வேறெதுவும் செய்துவிடமுடியாது. பன்னிரண்டு பக்க ஒப்பந்தம், பன்னிரண்டு கையெழுத்துகள், தப்பமுடியாதபடி மாட்டிக்கொண்டாகிவிட்டது.

இத்தனைக்கும் நடுவே, சிவராமனுக்கு ஒரே ஒரு தாற்காலிக நிம்மதி, எப்படியோ, ஸ்ரீனிவாசன் புண்ணியத்தில் ஒரு லட்சத்திற்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது, இனிமேல் ஒன்றிரண்டு வாரங்களுக்காவது அந்தக் கடன்கார வெங்கடேஷிடமிருந்து ஃபோன் எதுவும் வராது.

***

அன்று மாலை, சிவராமனும் அவன் மனைவியும் ஒரு கண்காட்சிக்குச் சென்றார்கள். புறநகர் பகுதியில் ஒரு பரந்த மைதானத்தில் பந்தல் போட்டு நடந்துகொண்டிருந்த அந்தக் கண்காட்சியில், எதை எடுத்தாலும் அநியாய விலை. வண்டியை நிறுத்துவதற்கான பார்க்கிங் சீட்டுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கொண்டார்கள் என்றால் மற்றதைச் சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம்.

அந்தக் கண்காட்சியையும், அதை ஏற்பாடு செய்தவர்களையும், அவர்களுடைய வண்ண விளம்பரங்களில் மயங்கிய தங்களின் மடத்தனத்தையும் நொந்துகொண்டபடி சிவராமனும் ஆர்த்தியும் வீடு திரும்பினார்கள்.

வீட்டின்முன்னே வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போதுதான் சிவராமன் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தான். நேற்று அப்படி அபாயகரமாக நடுங்கிக்கொண்டிருந்த வண்டி, இப்போது எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்களுக்குப் பரம சாதுவாக ஒத்துழைத்திருக்கிறது. சொல்லப்போனால், வண்டியில் அப்படியொரு கோளாறு இருந்ததையே அவன் சுத்தமாக மறந்துவிட்டிருந்தான்.

அப்படியானால், இப்போது வண்டியை சர்வீஸுக்கு விடவேண்டுமா, தேவையில்லையா என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைந்தான் சிவராமன்.

***

அடுத்த சில நாள்களுக்கு, சிவராமனின் வண்டியில் எந்தக் கோளாறும் தென்படவில்லை. ‘நானா? நடுங்கினேனா? இல்லையே!’, என்பதுபோல் பழைய பிரச்சனையின் சிறு சுவடும் தென்படாமல் சீராக இயங்கிக்கொண்டிருந்தது வண்டி.

இப்போது வண்டியின் பின் சக்கரத்தில் எந்த நடுக்கமும் இல்லை. வேகமாகப் போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று சக்கரம் பிடுங்கிக்கொண்டு, சாலை மத்தியில் தூக்கி எறியப்பட்டுப் பல் உடையுமோ என்கிற அபத்திர உணர்வு கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய, பிறகு இந்த விஷயமே மொத்தமாக அவன் நினைவிலிருந்து நழுவிப்போனது.

***

அந்த மாதக் கடைசியில் மீண்டும் வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்தது. ‘குட்மார்னிங்’ சொன்ன மறுகணம், ‘உங்க பேங்க்ல என்னாச்சு ஸார்?’ என்றான்.

‘தெரியலை வெங்கடேஷ்’, சிவராமனின் குரல் லேசாகத் தடுமாறியது, ‘போன வாரம்கூட பேசிப்பார்த்தேன். மறுபடி நம்ம அபார்ட்மென்ட் கட்டிடத்தை நேர்ல வந்து பார்த்து, அம்பது பர்ஸன்ட் முடிஞ்சிருந்தா உடனே பணம் தந்துடுவாங்களாம்.’

‘அவங்க எப்போ வருவாங்க ஸார்?’ என்றான் வெங்கடேஷ்.

அதற்கான பதில் சிவராமனுக்கும் தெரியவில்லை. என்றாலும், ‘இந்த வாரத்துக்குள்ள வருவாங்கன்னு நினைக்கறேன்’ என்று சொல்லிவைத்தான்.

அவன் சொன்னதை வெங்கடேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை, ‘இருக்கட்டும் ஸார்’ என்று பொதுவாகச் சொன்னவன் சற்றே குரலை உயர்த்தி, ‘அடுத்த வாரம் நம்ம பில்டிங்ல மூணாவது ஃப்ளோர் போடறதா இருக்கோம்’ என்றான்.

அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று சிவராமனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதைக் கேட்க விரும்பாதவனாகக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

***

அன்றைய பொழுது, தனக்கு லட்சக்கணக்கில் கடன் தரக்கூடிய சிநேகிதர்கள் யாரும் மிச்சமிருக்கிறார்களா என்று யோசிப்பதிலேயே கழிந்தது. எப்படி அந்த வெங்கடேஷுக்குப் பணம் ஏற்பாடு செய்வது?

மாலை மயங்கியபின், தளர்ந்த நடையோடு படிகளில் இறங்கிவந்தான் சிவராமன். அலுவலகக் கட்டிடத்துக்கு வெளியே கனமான இருள்.

கவலையும் சிந்தனையுமாக பைக்கைக் கிளப்பி மெல்லமாக ஓட்டலானான் சிவராமன். லேசான குளிரும், பனி படர்ந்த காற்றும் உறுத்தியது. வண்டியை எங்கே செலுத்துகிறோம் என்கிற கவனமற்றவன்போல் ஏதோ ஒரு திசையில் விரட்டிக்கொண்டிருந்தான் அவன்.

இப்போது, அவனுடைய வண்டியின் பின் சக்கரம் மீண்டும் பெரிதாக நடுங்கத்தொடங்கியிருந்தது.

– 07 11 2004

(”வடக்குவாசல்” இதழில் பிரசுரமான சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *