பழக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 6,984 
 

கிழக்கு கடற்கரை சாலை. நேரம் பகல் ஒரு மணி. சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த குமாரை வழிமறித்து நின்றது ஒரு கார். கார் ஒட்டுனரைப் பார்த்து அவனை திட்டுவதைப்போல் கையசைத்துவிட்டு தன் வழியில் சென்றான் குமார். சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே கார் குமாரை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கி, குமார் முன்னே வந்து நின்றான் ஒருவன்.

“எப்படி இருக்க குமார்? என்ன ஞாபகம் இருக்கா?” என்றான் அவன். “டேய், ரவிதான நீ? எப்படிடா இருக்க? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?” என்றான் குமார். அதற்கு ரவி, “ஆமாம்டா. நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? பரவாயில்லையே, இன்னும் என்னை ஞாபகம் வெச்சிருக்கியே? என்றான். “என்னடா இப்படி சொல்லிட்ட. நாம போலீஸ் டிரெய்னிங்ல எவ்ளோ கூத்து அடிச்சிருக்கோம். உன்னை மறக்கமுடியுமா?” என்றான் ரவி.

மூன்று வருடங்களுக்கு முன், போலீஸ் டிரெய்னிங்கில் ஒரே நேரத்தில் சேர்ந்தனர் குமாரும், ரவியும். குமார் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். குமாரின் தந்தை ஒரு ராணுவ வீர்ர். கார்கில் போரின் போது அவருக்கு காலில் பலத்த அடி பட்டு, அவரால் நடக்க முடியாமல் போனது. அதனால் அவர், ராணுவத்தில் இருந்து விலகி, வீட்டிலேயே இருக்கும்படி ஆனது. குமாரின் தாய் ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன் நடத்திக் கொண்டு வருகிறார். கடுமையாக உழைத்து தன்னை தயார்படுத்திக் கொண்டதால் குமாரால் போலீஸ் வேலையில் சேர முடிந்தது.

ரவி கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். ரவியின் தந்தை ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரவியின் தாய் ஒரு வார இதழில் இணை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரவியின் அண்ணன் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். சிறுவயது முதலே ரவிக்கு போலீஸாக வரவேண்டும் என்று ஆசை. அவனுடைய பெற்றோரும் அவனுடைய ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் அவனுக்கு போலீஸ் வேலை கிடைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தனர். ரவியும் நல்லபடியாக போலீஸ் வேலையில் சேர்ந்தான். போலீஸ் பயிற்சி காலத்தின் போதுதான் குமாரும் ரவியும் சந்தித்தனர். நாளடைவில் நல்ல நண்பர்களாகினர்.

“அப்பறம்டா, எப்படி இருக்க? இன்னும் ட்ராஃபிக் போலீஸாத்தான் இருக்கியா?”, என்று குமாரைப் பார்த்து கேட்டான் ரவி. “ஆமாம்டா, எனக்கு இது தான் பிடிச்சிருக்கு. தினமும் ஜனங்களோட ஒருத்தனா இருந்து வேலை செய்யறது ரொம்ப திருப்தியா இருக்கு. நீ சைதாப்பேட்டை ஸ்டேஷன்ல தான சப்-இன்ஸ்பெக்டரா இருக்க?” என்றான் குமார். அதற்கு ரவி, “ஆமாம்டா அங்கதான் இருக்கேன். உனக்கு கலெக்ஷன் எப்படி? நல்லா வருதா? தினம் நல்லா கிடைக்குமே?” என்றான். “நான் லஞ்சம் வாங்கமாட்டேன்டா. எனக்கு அது பிடிக்காது, ஒத்தும் வராது. அதப்பத்தி பேசாத எங்கிட்ட” என்றான் குமார்.

“என்னது? லஞ்சம் வாங்கமாட்டியா? என்னால நம்பமுடியலடா. சரி விடு, எங்க ஸ்டேஷன்ல நல்லா வசூல் வரும். அதுல வந்ததுதான் இந்த கார்” என்று பெருமிதமாகக் கூறினான் ரவி. அதற்கு குமார், “அப்படியா, உனக்கு இது தப்பா தெரியலன்னா யாரும் ஒன்னும் செய்யமுடியாது. உனக்கா புரிஞ்சாதான் உண்டு” என்றபடியே ஒரு தேனீர் கடைக்குள் நுழைந்தான் குமார்.

“ரெண்டு டீ போடுங்க” என்று கூறிவிட்டு, பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான் ரவி. “சிகரெட் பிடிக்கறியாடா?” என்றபடி இன்னொரு சிகரெட்டை குமாரிடம் நீட்டினான் ரவி. அதற்கு குமார், “இல்லடா. சிகரெட் பிடிக்கறதில்ல” என்றான். அதற்குள் தேனீரும் வந்தது. பழைய கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருவரும் தேனீர் அருந்தி முடித்தனர். “எவ்ளோ ஆச்சு?” என்று கடைக்காரரை குமார் கேட்க, “ஒன்னும் வேணாங்க, பரவாயில்ல” என்றார் கடைக்காரர். அதைக்கேட்டு சற்று கோபமடைந்த குமார், “ஏன் இப்படி செய்யறீங்க? உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால தான் சில நல்ல போலீஸ்காரங்ககூட கெட்டு போறாங்க. எவ்ளோ ஆச்சுன்னு சொல்லுங்க ஒழுங்கா” என்று குரலை உயர்த்தி பேசினான். இதை எதிர்பார்க்காத அந்த கடைக்காரர் விலையை சொல்ல, அதை அவரிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர் குமாரும், ரவியும்.

திரும்பி செல்லும் வழியில் குமாரைப் பார்த்து ரவி, “ஏன்டா, அவ்ளோ நல்லவனாடா நீ. அந்த டீக்கடைக்காரன் என்னடா தப்பு செஞ்சான்? எல்லாரும் செய்யறத தான அவனும் செஞ்சான். அவனப் போய் இப்படி மிரட்டற?” என்று சற்று கிண்டலாகக் கேட்டான். அதற்கு குமார், “எனக்கு இப்படியெல்லாம் செஞ்சா பிடிக்காதுடா. என் உத்தியோகத்தால யார்கிட்ட இருந்தும் எனக்கு இலவசமா எது வந்தாலும் எனக்கு பிடிக்காது. என்னால உன்ன மாதிரி எல்லாம் இருக்க முடியாது” என்றான் குமார். “சரி, இன்னும் எத்தன நாளுக்கு நீ இப்படி இருப்ப-னு பாப்போம். நான் கிளம்பறேன்டா. டைம் இருந்தா எனக்கு ஃபோன் பண்ணு” என்று கூறி விடைபெற்றான் ரவி.

குமார் அன்று வீட்டுக்கு செல்லும்போது இரவு எட்டு மணி. உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கினான். விடியற்காலை 4 மணி ஆனது. திடீரென யாரோ ஒருவர் வலி தாங்க முடியாமல் கத்துவது போல் ஒரு சத்தம் கேட்டது. எழுந்து போய் பார்த்தால் அவனது தந்தை, கால் வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டிருந்தார். “திடீர்னு கால் வலி தாங்க முடியல குமார். பயங்கரமா வலிக்குது” என்றார் குமாரின் தந்தை. அவரை தூக்கிக்கொண்டு அவசர அவசரமாக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றான்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, முழங்காலை முழுவதுமாக வெட்டி எடுத்து மரக்கால் வைத்தால் தான் வலி குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி செய்யவில்லை என்றால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என்றும், அதற்கு குறைந்தது ஐந்து லட்சம் ஆகும் என்றும் கூறினர். இதைக்கேட்டு திகைத்துப் போனான் குமார்.
என்ன செய்வதென்று புரியாமல் இருந்தபோது அவனுக்கு ரவி ஞாபகம் வந்தது. ரவியை தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினான் குமார். ரவி அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, மருத்துவர் அறைக்குள் நுழைந்து ஏதோ பேசிவிட்டு வந்தான். “ஒன்னும் பிரச்சனை இல்லடா. நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நாளைக்கே ஆபரேஷன் வெச்சுக்கலாம்னு சொல்லிட்டார். நான் பாத்துக்கறேன், நீ கவலப்படாத” என்றான் ரவி. தன் நண்பனுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் அவனை கட்டித் தழுவியபோது குமாரின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து, ரவியின் உதவியுடன் தன் தந்தையை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தான் குமார். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ரவி. அவனை வழியனுப்ப வாசலுக்கு வந்தான் குமார். “மறுபடியும் சொல்றேன், ரொம்ப நன்றிடா. நீ மட்டும் இல்லனா என்ன நடந்திருக்கும்னு நினைச்சு பாக்கவே முடியல. இன்ஷூரன்ஸ் காசு வந்தவுடனே உனக்கு நான் திருப்பிக் கொடுத்துடறேன். அது வரைக்கும் தயவுசெஞ்சு கொஞ்சம் பொறுத்துக்கோ”, என்றான் குமார். அதற்கு ரவி, “பரவாயில்லடா, அது வந்ததுக்கு அப்பறமே கொடு” என்றான். அவனுடைய காரில் ஏறி கிளம்புவதற்கு முன், “இதுக்குத்தான் நான் அன்னிக்கு உங்கிட்ட கலெக்ஷனப் பத்தி கேட்டேன். நீ மட்டும் கொஞ்சமாவது லஞ்சம் வாங்கியிருந்தேனா, பிரச்சனை வந்த அன்னிக்கு உனக்கு உதவியிருக்கும். என்னால அவ்ளோதான் சொல்ல முடியும், நீ பொறுமையா உக்காந்து யோசி. நான் வர்றேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான் ரவி. இதை சற்றும் எதிர்பாராத குமார், ரவி கூறியதைப்பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன.

சில நாட்களுக்குப் பிறகு, குமார் பணியில் இருக்கும்போது, சிகப்பு விளக்கு எரிவதை மதிக்காமல், சிக்னலைக் கடந்து சென்றது ஒரு கார். அதைப் பார்த்ததும், அவனுடைய பைக்கில் ஏறி அந்த காரை துரத்திப்பிடித்தான். அந்த கார் ஓட்டுனரை கோபமாக திட்டிவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு குமார் தன் கையில் எதையோ வாங்கிக்கொண்டு வருவதை அந்த வழியாக வந்த ரவி பார்த்தான். குமார் அவனுடைய பைக்கில் ஏறி கிளம்பும்போது அங்கு வந்தான் ரவி.

இருவரும் அருகில் இருந்த தேனீர் கடைக்குச் சென்றனர். அப்போது ரவி, “என்னடா, அந்த கார் டிரைவர் கிட்ட இருந்து என்னவோ வாங்கிட்டு வந்த நீ? வாங்க ஆரம்பிச்சுட்டியா நீயும்? அப்படி வா வழிக்கு” என்றான். அதைக்கேட்டு குமார், “இல்லடா. எங்கிட்ட எப்பவுமே, எந்த தப்புக்கு எவ்ளோ அபராதம்னு போட்டிருக்கற ஒரு சின்ன புத்தகம் இருக்கும். அந்த புத்தகத்த அந்த டிரைவர் கிட்ட காட்டி, சரியான அபராதத்தொகைய வாங்கிட்டு வந்தேன். இந்த காசு எனக்கு இல்ல. நம்ம ஸ்டேஷனுக்கு தான் போகும்” என்றான். “ஏன்டா இப்படி இருக்க நீ? எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தது உனக்கு? இன்னுமா இப்படி?” என்றான் ரவி. அதற்கு குமார், “நான் ஒழுங்கா இருந்ததாலதான் எனக்கு அந்த பிரச்சனை நல்லபடியா முடிஞ்சது. இல்லனா மத்தவங்களோட சாபத்தால இன்னும் மோசமாயிருக்கும். ஒரு தடவை லஞ்சம் வாங்க ஆரம்பிச்சா அப்புறம் அதுவே பழக்கமாகிடும். அது எனக்கு வேணாம்டா” என்று கூறினான். இதைக்கேட்டு திகைத்துப்போன ரவி, தன் நண்பனைப்பற்றி நினைத்து பெருமிதம் கொண்டு, “நீ போடா, நான் கடைக்காரர்கிட்ட நாம டீ குடிச்சதுக்கு காசு கொடுத்துட்டு வர்றேன்” என்ற சிரித்தபடியே கூறிவிட்டு தேனீருக்கான காசைக் கடைக்காரரிடம் கொடுத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *