மட்டுறுத்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,050 
 
 

“ஹெலோ வா.. வா.” டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார்.

வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல எவனுக்குமே ப்ரொபசர்னு சொல்லத் தெரியல. எடுத்துச் சொன்னா “அவரு பாடந்தானே எடுக்காரு?”ண்ணு சண்டைக்கு வருவாங்க. ‘விரிவுரையாளர்’ பரவலாக இன்னும் பல காலம் ஆகும். ஆகாமலே போலாம்.

“கதை கொண்டு வந்தியா.” கறுப்பு பட்டை ஃப்ரேம் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டார்.

கையில் நோட்டு ஒன்றை கொடுத்தேன்.

“நான் ஒரே ஒரு கதைதானே கேட்டிருந்தேன்.”

ஏழாம் வகுப்பில் திருக்குறள்களை புதுக் கவிதையாக எழுதியது முதல் இவர் கல்லூரி இலக்கிய இதழுக்காக எழுதிய கதைகள் வரை நோட்டில் இருந்தன.

“இந்த நோட்டிலேயே எழுதி பழகிடுச்சு.”

எனக்கு நாற்காலி ஒன்றை இழுத்து போட்டுவிட்டு நோட்டை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.

முன்பெல்லாம் என் எழுத்தை அடுத்தவர் படிக்கும்போது அவர்கள் முன் ஆடைகளின்றி நிற்பதைப் போல ஒரு கூச்ச உணர்வு பரவும். இப்ப அதெல்லாம் இல்ல. கொஞ்சம் தைரியம் வந்திருக்குது.

பக்கங்கள் புரண்டுகொண்டிருந்தன.

இப்ப “என்ன விலை அழகே” கவிதைக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன். விலை மாதர்களை முன் வைத்த கவிதை.

‘…முகங்களுக்கு விலை பேசி
முலைகளை நுகர்ந்தவர்கள்..’

திடீரென நோட்டை மூடினார்.

“அப்புறமா முழுதும் படிக்கிறேன். எனக்காக எழுதிய கதை என்னது?”

“‘சத்தம் போடு!’ கடைசில எழுதுனது.”

நோட்டை புரட்ட நினைத்தவர் என்னை பார்த்தார்.

“தலைப்புகள் எல்லாத்துலேயும் சினிமா தாக்கம் இருக்குது.”

“கவிதைன்னாலே முகம் சுளிக்கிறவங்களுக்காக…”

“சொல்லு.”

“ம்?”

“கதைய சொல்லு.”

“படிக்க மாட்டீங்களா.” சிரித்தேன்.

“அப்புறமா படிக்கிறேன்.”

“ஒரு பொண்ண மூணுபேர் வன்புணர முயல்றாங்க..”, வாத்தியார் முகதில் வெறுப்பு தெரிந்தது, “ஆக்சுவலி அவ ஒரு பையன் வீட்டு வேலக் காரி. அப்ப அவ போடுற சத்தத்தை மையமா வச்சி கதை.”

மௌனம்.

“ஏன் வேலக்காரி.” கேட்டார்.

“வேலைக்காரி ஜோக்ஸ் படிச்சிருக்கீங்களா?”

“அப்படி தனியா ஒரு வகை இருக்கா என்ன?”

“எல்லா தமிழ் பத்திரிகையிலேயும் வரும்.. பையன் வந்து அம்மாகிட்ட சொல்வான் ‘அம்மா நேத்து அப்பா வேலைக்காரி கன்னத்த கிள்ளிட்டாரு. அம்மா கேப்பா ‘என்னங்க இது?’ இவரு சொல்வார் ‘ஹி ஹி ரெண்டும் ரெண்டும் அஞ்சுண்ணு தப்பா கணக்கு சொன்னா அதான்’. இப்படி எத்தனையோ ஜோக்குகள்.”

“அதனாலென்ன. தே ஆர் ஜோக்ஸ்.”

“இல்ல. தே ஆர் நாட் ஜஸ்ட் ஜோக்ஸ். வேலைக்காரிகளை முதலாளிகள் தவறாக பயன்படுத்தலாம் என்கிற கேவலமான எண்ணத்துல வர்றது.”

“நான்சென்ஸ். எல்லா வேலைக் காரிக்கும் இது நடந்திருக்கணுமே.”

“இருக்கலாம்.”

“நோ வே.”

“பாலியல் பலாத்காரம் செய்ய பார்வையே போதும் சார்.”

“யார் சொன்னது?”

“ஜீசஸ் க்ரைஸ்ட்..”

“என்னது?” சிரித்தார்.

“சீரியசா. அவர் சொல்லியிருக்காரு.”

“லாயர் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்சுன்னெல்லாம் இருக்குதே அப்ப அவங்க மீதான மதிப்பு குறைஞ்சிடுதா என்ன?”

“வக்கீல்களுக்கு இது நடக்குது. அவங்க தொழில் குறித்து சரியான நோக்கம் இல்ல. டாக்டர் தொழில் இன்றியமையாததாகிடுச்சு. நம்ம இயலாமையின் உச்சத்திலதான் டாக்டரப் பார்க்கப் போறோம்.”

பக்கத்தை புரட்டி படித்தார்.

“ஏன் இப்படி வார்த்தைகள பயன்படுத்துற?”

“என்னது?”

“உன்னுடைய கவிதை கதை எல்லாமே முழுவதும் கெட்ட வார்த்தை. நம்ம ஊர்பக்கம் யாரும் இப்படி பேசுறதில்லியே. ‘சத்தம் போடு!’ கதை முழுதும் கெட்ட வார்த்தை.”

“அவள பலாத்காரம் செய்யப் போறாங்க. அவ இப்படித்தான் பேச முடியும். வன்புணர்வு என்பது சாதாரண விஷயமில்ல. இந்த வார்த்த அந்த நிகழ்வ மென்மையா சொல்லுதுண்ணு நினைக்கிறேன். கொடும்புணர்வுதான் சரியான வார்த்தையா இருக்கும்”

“எப்படி சொல்ற?”

“வன்மை என்கிற வார்த்தைய நாம சாதாரணமா பயன்படுத்தல. அது ஏதோ பழந்தமிழ் சொல் மாதிரி இருக்குது. யதார்த்தத்த தள்ளி நிக்குது.”

“கதையின் முடிவுல அவ அருவாமணையால அந்தப் பையனோட … சாரி இந்தக் கதைய இலக்கிய மலர்ல யூஸ் பண்ண முடியாது. நீ ஏதோ எழுதிட்டிருக்கேண்ணு உங்கம்மா சொன்னா அதான் ட்ரை பண்ணலாம்னு நினைச்சேன். உன்னுடைய மொழி..”

“…நிதர்சனம். இலக்கியம் எல்லாத்தையும் பூசி மெழுகுது. கொடூர நிஜங்களை அதால சொல்ல முடியல. சொல்ல முடியலைங்கிறத விட சொல்ல விடல. இலக்கியம் சமூகத்தால புறக்கணிக்கப்படும் பலரையும் புறக்கணிக்குது. இலக்கியமில்ல… இலக்கியவாதிகள். இதையெல்லாம் யாரு படிப்பா? குப்பை, கெட்ட வார்த்தை. புல் ஷிட். அப்படி இப்படீன்னு. சாமான்யனின் வாழ்வை பதிய விரும்புறீங்கண்ணா அவனோட மொழியையும் பதிக்கணுமே?

என் மொழி நான் பார்க்கும் மக்களிடமிருந்துதான் வருது. நான் கேட்டது. பார்த்தது உணர்ந்தது.”

எழுந்து கையை நீட்டினேன். நோட்டை கையில் வைத்தார். வெளியே வரும்போது வாத்தியார் மனைவி யாரையோ திட்டிக் கொண்டே வந்துகொண்டிருந்தார்.

“பாஸ்டர்ட்ஸ். இவனுக சாமானையெல்லாம் அருவாமணையால அறுக்கணும். ”

என்னை பார்த்தார்.

“வாம்மா சித்ரா. கிளம்பிட்டியா? பஸ்ல பசங்க தொல்ல தாங்கல. தொட்டாலே நீட்டிக்கும்போல இவனுகளுக்கு…”

வாத்தியாரை திரும்பி பார்த்தேன். என்னை பார்க்காததுபோல திரும்பிக்கொண்டார்.

– பிப்ரவரி 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *