புஷ்பப் பல்லக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 23,617 
 
 

புஷ்பப் பல்லக்கு வீராசாமி நாயுடு ஒரு பெரிய ஒப்பாரி வைத்தான். “காலங்கெட்டுப் போச்சுங்க. இந்தப் பாழும் மோட்டார் வண்டி வந்தாலும் வந்தது; எங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது” என்றான்.

சமீபத்தில் கிராமத்துக்குப் போயிருந்தேன். வாய்க்கால்களில் புதுஜலம் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தது. விதை தெளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கே பார்த்தாலும் பிரகிருதி தேவி நித்யோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் வாழ்க்கை மட்டும் ஒரே மயான காண்டமாயிருக்கிறது. “சோக ரஸத்தைத் தேடி இந்நாளில் நாடகங்களுக்குப் போவது எவ்வளவு அறிவீனம்; அசல் சரக்கு கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாய்க் கிடைக்கிறதே” என்று எண்ணினேன்.

அக்காலத்தில் – இருபது வருஷங்களுக்கு முன்னால் – வீராசாமி நாயுடு நல்ல நிலைமையில் இருந்தான். கோயில் திருவிழாக்களிலும், கல்யாண ஊர்வலங்களிலும், அப்போதெல்லாம் புஷ்பப் பல்லக்குக்கு அதிக கிராக்கியிருந்தது. தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய, சுமார் முப்பது ஊர்வலங்களுக்காவது புஷ்பப் பல்லக்குக் கட்டுவான். ரூபாய் முந்நூறுக்குக் குறையாமல் சம்பாதித்து விடுவான்.

அந்த நாள் போய் விட்டது. இப்போது இரண்டு வருஷமாக ஒரு கிராக்கி கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.

“போன வருஷத்தில் ஒரு கிராக்கி வந்தது. அச்சாரங்கூட வாங்கி விட்டேன். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டது” என்றான்.

“ஓகோ! அதென்ன விஷயம்?” என்று கேட்டேன்.

நாயுடு விவரமாகச் சொன்னான். அவன் சொன்னதிலிருந்தும் இன்னும் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதிலிருந்தும் வெளியான விவரங்களைக் கீழே தருகிறேன். அவ்விவரங்களில் சிலவற்றை நேயர்கள் அநுசிதம் என்று கருதக் கூடும். ஆகவே கொஞ்ச நேரத்துக்கு நேயர்கள் எல்லாரும் அன்னப் பக்ஷிகளாக மாறக் கடவீர்களாக. நீரையும் பாலையும் கலந்து வைத்தால் எப்படி அன்னப் பக்ஷியானது நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துமோ, அதுபோல நீங்களும் உசிதமான பகுதிகளை விட்டு விட்டு, அநுசித விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வீர்களாக.

கோவிந்தகுடி கிராமத்து ‘முஸாபரி’ பங்களா எழவுபட்ட பாடுபட்டது. கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும், வெட்டி தலையாரிகளும் தரையில் கால் பாவாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வாசலில் பந்தல் போட்டுத் தோரணங் கட்டிக் கொண்டிருந்தனர் சிலர். உள்ளே துடைப்பம் தேயும்படி தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர் சிலர். உக்கிராண அறையில் ஒருவர் கறிகாய், உப்பு, புளி சாமான்களையெல்லாம் எடுத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். அவர்தான் கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார். பால்ய வயது கறிகாய்களில் இருந்த ஒரு சின்ன முட்டைக்கோஸானது அவருடைய இருதயத்தைக் கொள்ளை கொண்டிருந்ததாகத் தெரிய வந்தது. அதை அவர் அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்தார். முகர்ந்து பார்த்தார். வாயைச் சப்புக் கொட்டினார். அப்புறம் பெருமூச்சு விட்டார்.

“இனியே தெமக்குன் அருள்வரு மோவெனக் கருதி ஏங்குதே நெஞ்சமையோ!”
என்று வாய்க்குள்ளே பாடத் தொடங்கினார். இதற்குள் கணக்கப்பிள்ளை காளமேக ராவ் கையில் செம்புடன் அங்கு வந்து சேர்ந்தார்.

“ஓ மணியக்காரரே! நானும் நீரும் இந்த உத்தியோகம் பார்க்கிறதை விட க்ஷவரம் பண்ணலாம்!” என்றார்.

“க்ஷவரம் பண்ணுகிறதென்றால் இலேசு என்று நினைக்கிறீர் போலிருக்கிறது. ராயரே! சென்னைப் பட்டணத்தில் ஒரு ஸலூன் இருக்கிறதாம். அதிலே ஒரு க்ஷவரத்துக்கு மூன்று ரூபாயாம்!” என்றார் முனிசீப். பிறகு, “சரிதான், போன காரியம் என்ன?” என்று கேட்டார். “ஊரெல்லாம் சுற்றி ஒன்றரைச் சேர் பால் தான் அகப்பட்டது?” என்றார் கர்ணம்.

இவ்வளவு தடபுடல்களுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், தாசில்தார் பிரம்மஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரி அன்று தமது தர்மபத்தினி சமேதராக அங்கு எழுந்தருள்வாரென்று செய்தி வந்திருந்ததுதான்.

வழக்கத்தைவிட அதிக ஜரூராக இந்தத் தடவை தாசில்தார் விஜயத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஏனென்றால், சென்ற வருஷத்து ஜமாபந்தியின் போது நேர்ந்த ஒரு முக்கிய சம்பவம் கிராம உத்தியோகஸ்தர்களின் மனத்தையெல்லாம் கலக்கியிருந்ததுதான். அப்போதிருந்த தாசில்தார் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளை என்பவர் தம் கையினால் சில்லறை வாங்குவதில்லையென்ற தீவிர விரதம் கொண்டவர். வாங்கினால் நோட்டுக்களாகத் தான் வாங்குவார். ஜமாபந்தியின் போது அவர் கிராம உத்தியோகஸ்தர்களைப் பட்ச பாதமில்லாமல் நடத்தினார். தலைக்குப் பத்து ரூபாய் தட்சிணை வைக்க வேண்டுமென்றார். ஒரு கணக்குப்பிள்ளைக்குப் போதாத காலம் இருந்தது. பத்திரிகைகள் படித்து வந்ததன் பலன் அது. தாசில்தாருடைய குணாதிசயங்களை ஓர் அழகான ஹாஸ்யக் கட்டுரை போல எழுதினார். இவ்வளவு ரசமான கட்டுரை எழுதி விட்டுத் தம்முடைய பெயரை மறைக்கவோ, புனை பெயர் வைத்துக் கொள்ளவோ அவருக்கு விருப்பமில்லை.

அந்த வருஷம் பெரிய கலெக்டர் ஜமாபந்தி. பெரிய கலெக்டர் பல்டன் துரை ‘நெறி தவறாத நேர்மையாளர்’ ‘இந்திய ஜனங்களிடம் மிக்க அபிமானமுள்ளவர்’ என்றெல்லாம் பெயர் பெற்றவர். இதை நம்பி மேற்படி கர்ணம் தாம் எழுதிய ஹாஸ்யக் கட்டுரையை ஜமாபந்தியின் போது கலெக்டர் முன்பு சமர்ப்பித்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாளைக்கு அந்தத் தாலுக்கா எமலோகம் படும்பாடு பட்டது. விசாரணையில் கணக்குப் பிள்ளையின் புகாரை ஆதரித்துச் சாட்சி சொல்ல ஒரு கிராம உத்தியோகஸ்தர் கூட முன் வரவில்லை. கர்ணத்திற்குக் கர்ணம் வேலை போயிற்று. ஸ்ரீமான் பெத்த பேராசைப் பிள்ளைக்கும் தாசில் உத்தியோகம் போயிற்று. (ஆனால் ‘ஆக்டிங் டிபுடி கலெக்டர்’ உத்தியோகம் கிடைத்தது.)

மேற்படி சம்பவம் சமீபத்திலேதான் நடந்திருந்ததாகையால் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளையின் ஸ்தானத்துக்கு இப்போது வந்திருந்த பிரம்ம ஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரியை வரவேற்பதில் கிராம உத்தியோகஸ்தர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் ரிவினியூ இன்ஸ்பெக்டர் தீராத்துயரமய்யங்காரும், தாசில்தாரின் காம்ப் கிளார்க் விகாரம் பிள்ளையும் வந்து சேர்ந்தனர். சுற்றுப் பக்கத்திலிருந்து எல்லாக் கர்ணம் கிராம முனிசீப்புகளும் வந்திருக்கிறார்களா என்று அவர்கள் சோதனை செய்தபின், உக்கிராண அறைக்குச் சென்று போஜன பதார்த்தங்களைப் பார்வையிட்டனர். ஒரு பெரிய செம்பின் அடிவாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பாலைக் கண்டதும் விகாரம் பிள்ளைக்குப் பெருங் கோபம் வந்தது. அவர் கிராம முனிசீப்பை ஓட விடவே, அவர் வெட்டி தலையாரிகளை ஓட விட்டார். விகாரம் பிள்ளை அப்பால் போனதும், ரிவினியூ இன்ஸ்பெக்டர் கிராம முனிசீப்பின் காதோடு, “ஓய்! சுத்த மோசமாயிருக்கிறீரே! பாலைத் தீர்த்தமாட்டி வைக்கிறதானேங்காணும்! வருகிறவர் சாஸ்திரிகளாச்சே!” என்றார்.

சுபதின, சுபயோக, சுப முகூர்த்தத்தில் தாசில்தார் லஞ்சநாத சாஸ்திரியும், அவருடைய தர்மபத்தினி ஸ்ரீமதி கற்பகாம்பாளம்மாளும், மைத்துனி சௌபாக்கியவதி செல்லக் கிளியும், குழந்தைகள் அரை டஜனும் மேற்கத்தி மாடு கட்டிய இரண்டு வில் வண்டிகளில் ஜாம் ஜாமென்று வந்து இறங்கினார்கள். வந்த களைப்பு நீங்கியதும், அம்மாள் உக்கிராண அறையைப் பார்வையிடச் சென்றாள். கணக்கப்பிள்ளை ராயர் பயபக்தியுடன் முன் வந்து “டிபன் என்ன போடச் சொல்கிறது?” என்று கேட்டார்.

“நீர் யார்?”

“நான் தான் உள்ளூர் கர்ணம்”

“பரிசாரகன் எங்கே?”

அம்மாளைக் கண்டதும் கதவிடுக்கில் ஒளிந்து கொண்ட பரிசாரக முத்துவையர் இப்போது வெளியே வந்தார்.

“இதோ இருக்கேன்” என்றார்.

“நீதானா? உன் துணியைப் பார்த்தாலே சாப்பாடு வேண்டியிராது போலிருக்கே! இருக்கட்டும், சேமியா கேஸரி போடத் தெரியுமா?”

“தெரியும்” என்றார் முத்துவையர். ஆனால் ராயருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால், சேகரித்திருந்த சாமான்களில் சேமியா இல்லை. ‘இந்த அம்மாள் வெகு கெட்டிக்காரி; எது இல்லையோ அதைப் பார்த்துக் கேட்கிறாள், பார்த்தாயா?’ என்று நினைத்துக் கொண்டு, “இதோ வாங்கி வரச் சொல்லுகிறேன்” என்றார்.

“ரொம்ப பேஷ்! சேமியா கூட வாங்கவில்லையா?” என்று அம்மாள் உதட்டை ஒரு மடிப்பு மடித்தாள். ராயர் “இதோ வந்து விட்டது” என்று ஓட்டம் பிடித்தார்.

“அய்யங்காரே! நம்மாத்திலே கல்யாணம் வந்திருக்கு” என்றாள் அம்மாள்.

இவர்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் “சந்தோஷம்” என்றார்கள்.

“ஆனால் கொஞ்சம் தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. இருந்தாலும் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்களே? பார்த்துக் கொள்கிறீர்கள்.”

“அதற்கென்ன சந்தேகம்? பேஷா பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள். எதைப் பார்த்துக் கொள்வது என்று மட்டும் அவர்களுக்கு விளங்கவில்லை.

“செல்லக்கிளியைப் பெரிய இடத்தில் கொடுத்திருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, சம்பந்தி சப்ஜட்ஜ். ஒருவேளை அவர்கள் வந்தாலும் வருவார்கள். கல்யாணம் ஜெரப்பா நடத்த வேண்டும்.”

இப்பொழுது கொஞ்ச விளங்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களுடைய ஆச்சரியமும் திகைப்பும் அதிகமாயின. இந்த ஸ்திரீயின் துணிச்சல்தான் என்ன? காம்ப்புக்கு வந்த இடத்தில் தங்கைக்கு ருது ஸ்நானக் கல்யாணம் நடத்த வேண்டுமென்று சொல்கிறாளே?

இந்தச் சமயத்தில் தாசில்தார் உள்ளே வந்தார். “என்ன, ஆர்.ஐ.! (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) சமாசாரம் கேட்டீர்களல்லவா? எக்கச்சக்கமாய் வந்து கல்யாணம் ஏற்பட்டிருக்கிறதே? இரண்டு வண்டி வைத்து இவர்களை ஊருக்கு அனுப்பி விடலாமென்று தோன்றுகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“அவர்கள் நினைக்கிறது என்ன? அதெல்லாம் பேஷாய் ‘நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி விட்டார்கள். இனி மேல் கிளம்பி ஊருக்குப் போய் எல்லா ஏற்பாடுகளும் பண்ணுகிறதென்றால் முடியுமோ? நீங்களும் காம்ப்பிலிருந்து வர முடியாது. நான் தனியாய் ஒண்டிக்காரி என்ன செய்வது? என்ன, விகாரம்பிள்ளை, என்ன சொல்கிறீர்கள்?”

“அம்மா சொல்கிறதும் வாஸ்தவந்தானே?” என்றார் விகாரம் பிள்ளை.

தாசில்தார், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்த்தார்.

“எல்லாம் இங்கேயே பேஷாய் நடத்தி விடலாம்னா!” என்றார் ஆர்.ஐ.அய்யங்கார்.

சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே கூடியிருந்த கிராம முனிசீப், கணக்கப்பிள்ளைகள் எல்லாரும் மேளக்காரன், பூக்காரன் முதலியவர்களைத் தேடிச் சென்றார்கள்.

அன்றிரவு கணக்கப் பிள்ளை ராயர் தமது மனைவியிடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்:- “நீங்களும் பதினெட்டு முழம் புடைவை கட்டிக் கொண்டு பொம்மனாட்டிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! தாசில்தார் சம்சாரம் வந்திருக்கிறாள். என்ன சாமார்த்தியம்! என்ன சாமர்த்தியம்! அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இன்றைக்குக் குஞ்சாலாடு பிடிப்பதற்கான சாமான் வேண்டியிருந்தது. பரிசாரகன் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஜாபிதா போட்டிருந்தான். ‘ஏண்டா, முந்நூறு குஞ்சாலாடுக்கு மூன்றே முக்கால் வீசை சர்க்கரைதானே திட்டம்? எப்படி நாலு வீசை போட்டிருக்கிறாய்?’ என்று தாசில்தார் சம்சாரம் கேட்டாள். பரிசாரகன் விழித்துப் போய் விட்டான். பொம்மனாட்டி என்றால் அப்படியல்லவா நாலும் தெரிந்திருக்க வேண்டும்?”

“இவ்வளவு தெரிந்தவன் என்கிறீர்களே! நம்பாத்திலும் இரண்டு குழந்தைகள் இருக்கே! ‘ராயரே, இந்தாரும் இரண்டு குஞ்சாலாடு. எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளிடம் கொடும்’ என்று சொல்லத் தெரிந்ததா? என்னமோ காணாதது கண்டது போல் ஆகாசத்தில் தூக்கி வைக்கிறீர்களே?” என்றாள் ராயர் மனைவி.

ராயருக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் தாசில்தார் மனைவி மேல் தாங்கல் இருந்தது. அந்த அம்மாள் அந்தண்டை, இந்தண்டை போனால் மெதுவாக ஒரு குஞ்சாலாடு சாப்பிட்டு விடலாமென்று அவர் சமையலறைப் பக்கம் அடிக்கடி போய்க் கொண்டிருந்தார். ஆனால், அது பலிக்கவில்லை. குஞ்சாலாடு பூராவும் பிடித்துக் கூடையில் அடுக்கிச் சாமான் அறையில் வைத்துப் பூட்டிய பிறகுதான் அம்மாள் நகர்ந்தாள்.

ஸ்நான தினத்தன்று ஊர்வலம் நடத்த வேண்டிய விஷயமாக யோசிப்பதற்கு ஓர் ஆலோசனை சபை கூடிற்று. மோட்டார் கிடைக்காது என்று தெரிந்த போது தாசில்தாரிணிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவில்லை. “இது தெரிந்திருந்தால் டவுனுக்கே போயிருக்கலாமே?” என்று கூடச் சொன்னாள். முயற்சியில் ஒன்றும் குறைவில்லை. சுற்றுப் பக்கம் பத்து மைல் தூரத்தில் உள்ள பெரிய மிராசுதார்களின் மோட்டார்களுக்கெல்லாம் ஆள் விடப்பட்டது. இவர்களெல்லாம், நெல் கலம் கால் ரூபாய் விற்றபோது மோட்டார் வாங்கினார்கள். இப்போது அவை கொட்டகைகளில் தூங்கின. ஒன்றுக்கு டயர் இல்லை. ஒன்றுக்கு கியர் இல்லை. மற்றொன்றின் எஞ்சின் பழுது. எல்லாம் சரியாயிருந்தாலும் டிரைவர் கிடையாது. இப்படியாக மோட்டார் இல்லையென்று தீர்ந்து போன பிறகு, ஒருவர் “பழைய நாளைப் போல் புஷ்பப் பல்லக்கு வைத்தால் என்ன?” என்று கேட்டார். “பேஷ்! சரியான யோசனை” என்றாள் அம்மாள். உடனே, வீராசாமி நாயுடுக்கு ஆள் விட்டார்கள். நாயுடு வந்து அச்சாரம் வாங்கிக் கொண்டு சென்றார்.

புதன்கிழமை ஸ்நானம், ஊர்வலம் எல்லாம் நடைபெற வேண்டும். கிராமவாசிகள் எல்லோரும் இந்த வைபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்குக் காட்சி அவர்கள் பார்த்து இன்றைக்குப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமி நாயுடுவின் உற்சாகத்தையோ சொல்ல வேண்டியதில்லை. புஷ்பத்துக்கு அவன் அச்சாரம் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டான். ஆகவே, செவ்வாய்க்கிழமை இரவு திண்ணையில் படுத்துக் கொண்டு அவன் மானஸீகமாய்ப் புஷ்பப் பல்லக்கு ஜோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார் வந்து, “ஓய், வீராசாமி நாயுடு! பல்லக்கும் வேண்டாம்; பாடையும் வேண்டாம்” என்று சொன்னதும், நாயுடுவுக்கு எவ்வளவு ஏமாற்றம் ஏற்பட்டிருக்குமென்று நீங்களே யோசியுங்கள்.

மறுநாள் அதிகாலையில் தாசில்தார் தமது பரிவார தேவதைகள் சமேதராய் வில் வண்டிகளில் பிரயாணமானார். ஊரார் எல்லோரும் வியப்பும் ஏமாற்றமும் அடைந்தார்கள். விசாரித்ததில் விஷயம் பின்வருமாறு என்று தெரிய வந்தது:-

ஜில்லா கலெக்டர் பல்டன் துரை அணைக்கட்டைப் பார்வையிடுவதற்காக வருவதாகவும், வழியில் கோவிந்தகுடி முஸாபரி பங்களாவில் புதன்கிழமை மத்தியானம் ஜாகை போடுவாரென்றும், முதல் நாள் சாயங்காலம் செய்தி வந்ததாம். ஆகவே, தாசில்தாரிணி தன்னுடைய உத்தேசத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. சௌபாக்கியவதி செல்லக்கிளியின் ஜாதகத்தில் புஷ்பப் பல்லக்கு ஊர்வலம் செல்லும் பாக்கியம் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
புதன்கிழமை அதிகாலையில் தாசில்தாரையும், அவருடைய பரிவாரங்களையும் மூட்டை கட்டி அனுப்பியதும், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஏதோ கணக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து ரூபாய் அணா பைசாக்களுடன் மல்லுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குக் காரணம், லஞ்ச நாத சாஸ்திரியார் தம்முடைய காம்ப்புக்காக மொத்தம் கிராமாதிகாரிகளிடமிருந்து வசூலான தொகை, செலவான தொகை இவைகளுக்குக் கணக்கும், பாக்கித் தொகையும் தம்மிடம் அடுத்த காம்ப்பில் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டுமென்று அவருக்குக் கட்டளையிட்டிருந்ததுதான். மிச்சப் பணத்திலிருந்து ஒரு நிலைக் கண்ணாடி, ஒரு ஷேவிங் செட், ஒரு செண்ட் பாட்டில், இரண்டு பவுண்ட் சாக்லேட், ஒரு செட் பிரெஞ்சுப் படுக்கையறைப் படங்கள் வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தாசில்தார் சொல்லியிருந்தார்.
உபயவே தீராத்துயரமய்யங்கார் இவ்வாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும் மூலைகொருவராய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தடவை அவர்கள் பெரிய கலெக்டர் பல்டன் துரையின் திருக்குஷ்டியை நிரப்புவதற்காகக் கோழி முட்டைகளையும், குள்ள வாத்துகளையும் தேடிச் சென்றார்கள். அவர்களுடைய அவசரத்தில், அன்னங்களைக் கூட வாத்துக்கள் என்று அவர்கள் நினைத்து விடக் கூடுமாதலால், நேயர்களே! சீக்கிரம் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்.

– 22.7.1934

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *