மச்சு வீட்டு சொந்தங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 7,457 
 

கண்விழித்த சூர்யா , மச்சிலிருந்து நூலேணியை இறக்கிவிட்டு அதன் வழியே மெதுவாகக் கீழே இறங்கினான். இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். இரவு வெகு நேரம் ஆகிவிட்டிருக்குமோ. அடுக்களைக்குள் நுழைந்து அங்கிருந்த பிரிட்ஜிலிருந்து கொஞ்சம் ப்ரெஷ் ஜூஸ் எடுத்துக்குடித்தான்.

அந்த கிராமத்திற்கு அவன் தன் பாட்டியைத் தேடி வந்தான். அவனுடைய அம்மா சாகும் தருவாயில் அவனுக்கு பாட்டி ஒருத்தி இந்த ஊரில் இருப்பதாகவும் ,மேலும் ,தாய் மாமாவினுடைய பெயர் எல்லாம் சொன்னவள், மேற்கொண்டு பேசமுடியாமல் இறந்துபோனாள் .அம்மாவின் திருமணத்தின் போது அப்பாவுக்கு மாமியார் வீட்டில் உரிய மரியாதையை தரவில்லை என அப்பா தவறாக புரிந்துகொண்டு அந்த கோபத்தால் அம்மாவின் பிறந்த வீட்டினரை அண்டவிடாமல் செய்துவிட்டார், அம்மாவும் அவர் நோக்கத்திற்கு இருந்துவிட்டாள் .அப்பாவுக்கும் குறிப்பிட்டு சொல்லும்படி சொந்தங்கள் ஏதும் இல்லை.அப்பா இறந்து சிலநாட்களிலேயே அம்மாவும் நோய்வாய்ப் பட்டு போய்சேர்ந்துவிட்டாள்.தனிமையின் கொடூரம் அவனை வாட்டியது. அவன் பக்கத்துவீட்டார்கள் அவனைத் தேற்றி இந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்கள்.

அவன் அந்த ஊரை அடைந்த போது ,அம்மா சொன்ன அடையாளம் எல்லாமே முழுதுமாக மாறிவிட்டிருந்தது.அரசமரத்தடி பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து கொண்டு அங்கு அகப்பட்டவர்களிடமெல்லாம் மாமா பெயரைச் சொல்லி விசாரித்தான். “சுப்பிரமணி என்ற பெயரில் நாலைந்து நபர்கள் இருக்கிறார்கள். அதோ தெரிகிறதே அந்த வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்தான் கோயில் கும்பாபிஷேகம் முடித்தார்கள்.அவர்களே கட்டிய கோயில் என்பதால் கூட்டம் கூட்டி இன்று விருந்து செய்து முடித்தார்கள் . போய்ப்பார்.” என்று சொன்னார்கள்.

அந்தவீட்டை அடைந்த போது வாசலில் கிழவிகள் பட்டாளம் கூடி நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தது. கூடவே ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தான். சூர்யாவைப் பார்த்த ஒரு பாட்டி, “இதோ வருகிறான் பார் ஒரு ஆள்.!அவனை மச்சின் மேல் ஏத்திவிட்டு, நீ சாமான்களை எடுத்துக்கொடு “என்று அந்த பையனிடம் சொல்ல சூர்யா திகைத்தான். ஏதோ சொல்ல முற்பட்ட சூர்யாவை உதாசீனப்படுத்திவிட்டு ஒன்றும் கண்டுகொள்ளாமல் அவர்கள் எல்லோரும் கோயில் சாயரட்ஷைக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

சின்னபையன் வழி காட்ட சூர்யா, மச்சின் மேல் ஏறிக்கொண்டான். கீழே ரெடியாக இருந்த பெரிய ஜமுக்காளம் , சமையல் பாத்திரங்கள் ,தலையணைகள் எல்லாவற்றையும் பையன் ஏற்றிவிட சூர்யா வாங்கி வாங்கி மச்சில் அடுக்கி வைத்தான்.இன்னும் கொஞ்சம் சாமான்கள் இருக்கு. நீ அங்கேயே இரு எடுத்து வரேன் என்றவன் போயே போய் விட்டான். சரி வரட்டும் என நினைத்தவன், அசதியில் அங்கிருந்த தலையணை மேல் தலை வைத்து காத்திருந்த பொழுதில் தூங்கிவிட்டான்.விழித்தபோது இரவு வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது. பசி வயிற்றை கிள்ளவே இப்போ கீழே இறங்கிவந்து ஜூஸ் குடித்தான், சரி வீட்டில் ஒருவரையுமே காணோமே என நினைத்தான். அறை ஒன்றிலிருந்து பேச்சுக்குரல் கேட்கவே ,அங்கிருந்து போய்விட எண்ணி தெருவாசலைத் மெள்ள திறந்து எட்டிப்பார்த்தான். அங்கு வெளியில் வாசலில் கட்டிவைக்கப்பட்டிருந்த நாய் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, கடிக்க ஓடிவரவே கதவைத்தாளிட்டு விட்டுதிரும்ப உள்ளேயே வந்து செய்வது அறியாமல் ஓடிப்போய் நூலேணியில் ஏறி மச்சுக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.

மாடியிலிருந்து இறங்கிவந்த சுப்பிரமணி, நாயை அதட்டிவிட்டு திரும்ப மாடிக்குப் போய்விட்டார். சூர்யாவுக்கு மச்சே வீடாகிவிட்டது. நேரம் பார்த்து இறங்கிவந்து , தனது வேலைகளை முடித்துக்கொள்வான். மூன்று வேளைக்கும் சேர்த்து தட்டுப்பாடில்லாமல் இரவிலேயே சாப்பாடு எடுத்துப்போய் மச்சில் வைத்துக்கொள்வான்.நேரம் பார்த்து வெளியில் சென்றுவிட அவன் முயற்சித்த பொழுதில் எல்லாம் தோல்வியே ஏற்பட்டது.அங்கிருந்து கிளம்பிவிட சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

நாட்கள் நகர்ந்தன.மாமி ஒருநாள் புலம்ப ஆரம்பித்துவிட்டாள் “சாப்பாடு பழங்கள் எல்லாம் வைத்தது வைத்த அளவில் இல்லாமல் எப்படி குறைந்து போகிறது ?” “உனக்கு மறதி ஜாஸ்தி போய் வேலையைப் பார்” என பாட்டி பதிலுக்கு சொல்வதைக் கேட்டு சூர்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ஒருநாளிரவு கிழே இறங்கி வந்த போது அங்கிருந்த ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்கு வந்தான். மறு நாள் மாமாவின் பையன் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டான். “என் நோட்டைக்காணோம்” என உரக்க அழுவதைக்கேட்ட சூர்யா,”பேசாமல் இதைக் கொண்டுபோய் கொடுத்து அவன் அழுகையை நிறுத்திவிடலாமா?”. அவன் நினைத்தாலும், கூடவே பயமும் வந்தது. இப்போ ஒன்றும் செய்யமுடியாது.கிட்டத்தட்ட ஒரு வாரமாக மச்சிலேயே வாசம்.

அவனது கூச்ச சுபாவம் இப்படி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. தைரியமாக இருக்கவேண்டும் என்று அம்மாவின் உபதேசம் நினைவுக்கு வந்தாலும்,கிராமத்து ஆட்கள் முரடர்கள் என்ற அவனது சொந்த அபிப்ராயம் மனதில் தோன்றி அவனை கோழையாக்கிக்கொண்டிருந்தது இவன் கதையை யாரும் நம்பப்போவதில்லை. நையப்புடைத்து அனுப்புவார்கள். இப்படி சாப்பாடு, பொருள்கள் எல்லாம் மாயமாய் காணாமல் போவதனால் ஒரு நாள் மந்திரவாதி ஒருவர் வரவழைக்கப்பட்டார்.பூஜைகள் போடப்பட்டு சாம்பிராணி வீடு முழுதும் காண்பிக்கப்பட்டது.

இரவில் யாரோ நடமாடுகிறார்கள். மீத சாப்பாடு கூட குறைந்து போகிறது. என அவரிடம் மாமா சொல்வதைக்கேட்ட சூர்யா இறங்கிப்போய் நடந்ததைச் சொல்லிவிடலாமா?என நினைத்தான். இதை முன்பே செய்திருக்கவேண்டும். தூங்கிவிட்டதை எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள் என நினைத்ததால் வந்த வினை. அடுத்த நாள் ” உன் பெண் மாலதி இன்று வருவதாக போன் செய்திருந்தாள். இன்னும் காணோமே?பாட்டி புலம்பிக்கொண்டிருந்தாள்.” கோயில் திருவிழாவுக்கு மல்லிகாவையும் கூப்பிட்டிருக்கலாமோ? ”

“ஆமாம் அம்மா நானும் அதையேதான் நினைத்துக்கொடிருந்தேன். ஊரையெல்லாம் கூட்டினோம். வீட்டில் பிறந்த பெண்ணை உதாசீனப்படுதிவிடோமே”. மாமாவும் பாட்டியும் கண்களைத் துடைத்துக்கொண்டார்கள்.இவர்கள் நான் தேடிவந்த என் சொந்தங்களா !அவனுள் மகிழ்ச்சி கரைபுரள மெதுவாக நூலேணியிலிருந்து இறங்கி வர ஆரம்பித்தான். அனைவரும் சூர்யவைச் சூழ்ந்துகொண்டனர். சூர்யா விவரமாக தன் மச்சு பிரவேசம் பற்றி சொல்லத்துவங்கினான்.”போதுமடா ராஜா. உன்னைப்பார்த்த நிமிடத்திலிருந்து மல்லிகாவின் நினைவு திரும்பத்திரும்ப வந்ததன் காரணம் புரிகிறது கண்ணா “பாட்டி கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். சூர்யாவின் அம்மாவினுடைய இறப்பு பற்றிய செய்தி அனைவருக்கும் வருத்தத்தைக் கொடுத்தது. சொந்தங்களின் அரவணைப்பில் சூர்யா நிம்மதி அடைந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *