கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 5,206 
 
 

மணிப்பர்ஸ் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தகம் ஜாக்ரதை என்று கேள்விப்பட்டதில்லை. இப்படிக் கேள்விப்படாதவ ரெல்லாம் திருமான் வேங்கடத்தைச் சந்தித்ததில்லை என்று சொல்லிவிடலாம்.

புத்தகங்களை ‘அசத்துவதில் அவர் சமர்த்தர்; மாநிபுணர். இந்த விஷயத்துக்கென்று ஒரு நோபல் பரிசு ஏற்பட்டிருந்தால் வருடா வருடம் அது வேங்கடத்துக்குத்தான். பரிசுக் கமிட்டியார் டாலராகக் கொடுப்பதைவிட அதே தொகைக்குப் புத்தகங்களாகவே கொடுப்ப தென்றால் ரெட்டிப்புச் சந்தோஷம்.

நாங்கள் அந்த மகானுபாவனை முதலில் சந்தித்தது ஒரு நூலக ஆண்டுவிழாவில், நூலகம் அந்த ஆண்டுவிழாவில், ஒரு பெரிய புத்த கக்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் நானும் எனது இலக்கிய நண்பர்களும், மேலும் பல தனியாளர்களும் விரும்பிப் பங்கெடுத்துக் கொண்டோம்.

அந்தக் காட்சிச்சாலைக்குள் நாங்கள் நுழைந்தபோது ஒருவர் புடவைக் கடையைப் பெண் முறைத்துப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பார்வை எங்களுக்கொன்றும் அபூர்வமில்லை. நாங்களே புத்தகக் கடைக்குள் நுழையும்போது எங்களுக்கும் ஏற்படுகிற அனுபவம்தான். ஆனாலும் இவ்வளவு தேட்டத்துடன்கூடிய ஒரு மதனப் பார்வையைக் கண்டதில்லை நாங்கள்.

தலையில் பொட்டல் விழுந்த, மூக்குக்கண்ணாடி அணிந்த, நடுத்தர வயதைத் தாண்டிய அந்த மனிதரை நூலகர் ராமாநுஜம் வந்து எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்றைய விழாவில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற இருந்த திருமான் வேங்கடம் இவர்தான் என்பதை அறிந்தோம்.

அவரைப்பற்றி அவரிடமே நாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவலின்படி, அவர் ஒரு வசதியுள்ள ஒரு விவசாயி என்றும், அவருடைய ஆத்மார்த்திகப் பொழுதுபோக்கு புத்தகம் படித்தல் ஒன்றே என்பதும் தெரியவந்தது.

அவரோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தாலே, தலைய ணைக்குப் பதிலாக புத்தகங்களைத்தான் வைத்துக்கொண்டு தூங்கு வாரோ என்று நினைக்கத் தோன்றும். அதன்பிறகு நாங்கள் அவரைப் பார்க்கும்போதெல்லாம் வெறுங்கையோடு பார்த்ததே இல்லை. ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டோ அல்லது கக்கத்தில் இடுக்கிக்கொண்டோதான் காட்சி தருவார்.

அன்றைய சொற்பொழிவில் எங்களை அப்படியே அவர் சொக்கும் படிச் செய்துவிட்டார். எங்களுக்கெல்லாம் புத்தகங்களைப் படிக்கத் தான் தெரியும்; புத்தகங்களைப்பற்றிப் பேசத் தெரியாது.

அவருடைய அன்றைய சொற்பொழிவின் தலைப்பு ‘உயிருள்ள புத்தகங்கள்’ என்பது. சொற்பொழிவின் துவக்கமே இப்படி அமைந்தது.

“புத்தக அன்பர்களே,

ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகத்துக்குச் சமமானவன் என்பதைப் போலவே ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்குச் சமமானது.

ஒரு உறவினன் உங்களுக்குச் சிறப்பானவன்; அதிலும் ஒரு புத்தகம் உள்ள உறவினனோ மிகவும் சிறப்பானவன். கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதைப் போலவே வாசக சாலையில்லா ஊரில் வசிக்கவேண்டாம் என்பது மெய்மொழி.

பூஜை அறை இல்லா இல்லம், புத்தக அறை இல்லா வீடு இவை யனைத்தும் பாழ்..”

இப்படியாக அவர் சோடாக்கூடக் குடிக்காமல் அமளப் பொரி பொரிந்தார். அப்பளக் கூடைகள் நொறுங்கியமாதிரி ஒரே அப்ளாஸ்.

மேடையில்தான் வேங்கடம் இப்படிப் பேசுவார் என்று நினைக்க வேண்டாம். நேரில் நம்மோடு பேசினாலும் அப்படித்தான். மேடையில் ஏட்டு நடை; நேரில் பேச்சு நடை, வித்தியாசம் அவ்வளவுதான்.

***

அடுத்த வாரம் நான் அவரை பஜாரில் வைத்துப் பார்த்தபோது ஒரு தடித்த பெரிய பைண்ட் செய்த ஒன்றை கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். ‘ஏது, மனுஷன் பவானி ஜமுக்காள ஏஜண்ட் ஆகி விட்டாரா!’ என்று நினைத்து, “என்னது ஐயா அது?” என்று கேட்டேன். ரொம்பப் பெருமிதத்தோடு நீட்டினார் அதை, ஒருகையால் நீட்டி வாங்கிக்கொள்ள முடியாதாகையால் இரண்டு கைகளாலும் வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். எனக்குப் புத்தி இல்லாததால் அதை, ஜமுக்காள பைண்டிங் என்று நினைத்திருந்தேன்.

அது, தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் எழுதி வெளியிட்ட ‘கர்ணாம்ருத சாகரம்’ என்கிற இசை சம்பந்தமான நூல், இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன்; பார்த்ததில்லை.

நான் சங்கீதத்தில் ஒரு சரியான கிறுக்கு என்பது வேங்கடத்துக்குத் தெரியக் காரணமில்லை. நான் பாடி அவர் கேட்டிருந்தால் ஒரு வேளை எங்கள் பழக்கமே முறிந்து போயிருக்கலாம். அதற்கெல்லாம் அவர் நேரம் வைக்கவில்லை .

அந்தப் புத்தகத்தின் மகாத்மியத்தை அவருக்கே உரித்தான கவர்ச்சி கரமான சொற்களால் வர்ணிக்க ஆரம்பித்தார். எனக்கு அதிலெல்லாம் மனசு செல்லவில்லை. இந்தப் புத்தகத்தை இவரிடமிருந்து எப்படி வாங்கிக்கொண்டு போய்ப் படிப்பது என்பதிலேயே கவனம் கொண்டு அவர் சொல்வதையெல்லாம் பலமாக ஆதரிப்பது போல் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன். அவர் மூச்சு வாங்கும் நேரம் பார்த்து, “என்னிட்டேயும் கொஞ்சம் சங்கீத சம்பந்தமான புத்தகங்கள் இருக்கு” என்று மெதுவாக ஆரம்பித்தேன்.

“புத்தகங்களா!, என்னெல்லாம் புத்தகங்கள்?” என்று கேட்டார்.

எனக்கு நம்பிக்கை பிறந்தது; நம்மிடமுள்ள சில புத்தகங்களைக் கொடுத்தால் ஒருவேளை இவர் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தருவார் என்று என்னுடைய வீட்டுக்கு அவரைக் கூட்டிக் கொண்டு போனேன். என்னிடமுள்ள அத்தனை சங்கீத சம்பந்தமான புத்தகங்களையும் எடுத்து அவர்முன் படைத்தேன். ‘சங்கீத ரத்னாஹரம்’, “தியாகராஜ ஹிருதயம்’, ‘மும்மூர்த்திகள் சரிதம்’, ‘ராக அகராதி’, இவைகளை மட்டும் எடுத்துக்கொண்டார்.

அவர் வைத்துக்கொண்டிருந்த ‘கர்ணாமிர்தசாகரத்தில் இன்னும் சில பக்கங்களே பாக்கி இருப்பதாகவும், படித்து முடித்தவுடன் தருவ

தாகவும் சொல்லிவிட்டுப் போனார். அவருடைய முகவிலாசத்தை நினைக்கும்போது அப்போது தப்பிதமாக நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் அவர் கடைசிவரைக்கும் எனக்கு ஆப்ரகாம் பண்டிதரைக் கண்ணிலே காட்டவே இல்லை!

கொஞ்சநாள் கழித்து எனது இலக்கிய நண்பர்களையெல்லாம் நூலகத்தில் வைத்துச் சேர்ந்தாற்போல் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப பலப்பல புத்தகங்களை ஒரு சேர திருமான் வேங்கடத்திடம் பறிகொடுத்திருந்த உண்மை வெளியாயிற்று.

இந்த மோசடியை எதோடு ஒப்பிட்டுச் சொல்ல என்று விளங்காமல் திகைத்தோம். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஆயுதம். வழிப்பறிக்காரனுக்கு கத்தியும் ஐந்து விரல்களும், பிக்பாக்கெட்காரனுக்கு இரண்டு விரல் மட்டும். வேங்கடத்துக்கோ ஒரு நாக்கு மட்டுமே!

கதிர்வேல் செட்டியாரை நாங்கள் ‘ஒன் வே’ என்று எங்களுக்குள் கேலியாகச் சொல்லி சத்தமில்லாமல் சிரித்துக்கொள்வோம். அவரிடம் புத்தகங்கள் போகும்! வராது! இப்பேர்ப்பட்டவரிடமே வந்து வேங்கடம் புத்தகங்களை லாத்திக்கொண்டு போயிருக்கிறார் என்றால் எதைப்பற்றி என்ன சொல்ல இருக்கிறது.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நவயுக புத்தகாலயத்தார் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள்’ அருமையான கட்டமைந்த புத்தகம். இப்போது அப்படிப் புத்தகத்தைக் கண்ணிலேயே காண முடியாது. கதிர்வேல் செட்டியாரிடமிருந்து அதை ஆத்திக்கொண்டு போயாச்சு, ‘ரஸ மட்டம்’ என்ற புனைப்பெயரில் புதுமைப்பித்தன் எழுதிய பத்திரிகை வெட்டுகள் தன்னிடம் இருப்பதாக வேங்கடம் சொல்லவே, அது கிடைக்குமே என்ற சபலத்தில் மனுஷன் இதை இழந்துவிட்டார். இப்படியாக

‘அக்கரைச் சீமையில்’ கிடைக்கும் ஆசைப்பட்டு ‘பல்லக்குத் தூக்கிகளை’ இழந்த பரமசிவம்.

‘அபேதவாதம்’ கிடைக்கும் என நம்பி ‘சக்ரவர்த்தித் திருமகனை’ இழந்த சடகோபன்.

‘மெயின் காம்ஃப் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஃபாஸிஸ்ட் ஜடாமுனி’யைப் பறிகொடுத்த பிரசன்னவதனன்,

‘மணிக்கொடி’ வால்யூம் கிடைக்கும் என்று எழுத்து’ வால்யூமை இழந்த இஸ்மத்பாக்ஷா.

ஒன்றையுமே எதிர்பார்க்காமல் வேங்கடத்தின் வெறும் வாய்ச் சாலகத்திலேயே மயங்கி புத்தகங்களை அள்ளிக் கொடுத்துவிட்டு இப்போது மனம் புழுங்கும் மகுடபதி, காசிராமன், லோகசிகாமணி இத்யாதி நண்பர்களெல்லாம் கூடி, இனி நாம் செய்யவேண்டியது என்ன என்பதுபற்றி விசாரித்து ஒரு முடிவு எடுத்தார்கள்.

அதன்படி, நூலகர் ராமாநுஜத்திடம் மேற்படி வேங்கடத்தின் இருப்பிடத்தை விசாரித்து நேராக அவருடைய வீட்டுக்கே அனைவரும் போய், புத்தகங்கள் திரும்பக் கிடைக்கும்வரை அங்கிருந்து நகருவது இல்லை என்று தீர்மானித்தார்கள்.

நூலகரிடம் விசாரித்ததில், வேங்கடத்தின் சொந்த ஊர் சுண்டூர் என்றும் அது குருமலைக்குப் பக்கத்தில் இருக்கிறது என்றும் சொன்னார். பொன்னையா பிள்ளைக்கும் கருமலைக்கும் பக்கத் திலுள்ள ஒரு கிராமம்தான். அவர் சொன்னார், “என்னது சுண்டூரா!, அந்தப் பக்கத்திலேயே அப்படி ஒரு ஊர் கிடையாதே!”

அந்தப் பக்கத்திலிருந்து வந்த ஒரு பருத்தி வியாபாரியைச் சந்தித்து விசாரித்தோம். “சுண்டூர்ன்னு கிடையாது. செண்டூர்ன்னு ஒண்ணு ரொம்பத்தூரத்தில் இருக்கு. அந்த ஊருக்கு உங்களாலே நடந்தும் போகமுடியாது; வண்டியும் போகாது” என்றார்.

“பாத்தீளா இந்த வேங்கடத்தை! கதையிலே வர்றமாதிரி நாக லோகத்திலே, ஏழு சத்தா சமுத்திரத்துக்கு அங்கிட்டு போயில்ல இருக்காம்போலிருக்கு மனுஷன்” என்று சொல்லி கதிர்வேல் செட்டியார் வக்ரமாகச் சிரித்தார்.

நாங்கள் இப்படித் திகைத்துநின்ற வேளையில் எங்களுக்குக் கை கொடுக்க பொன்னையா பிள்ளை முன்வந்தார்.

பொன்னையா பிள்ளை ஆரம்பப் பாடசாலையில் ஒரு வாத்தியார். நூலகத்துக்கு அவர் வருவது எங்கள் மாதிரி புத்தகங்கள் படிக்க இல்லை . பத்திரிகைகள் படிக்கமட்டும் தான், அதிலும் வாராந்திரிகை. மாசிகைகளைத் தொடவே மாட்டார். தினசரிப் பத்திரிகைகளை ஒரு பார்வை பார்ப்பார். பிறகு நாங்கள் இருக்கும் புத்தகப் பிரிவுக்கு வந்து எங்களோடு ஊர் உலக விஷயங்களைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். எங்களை ‘புலவர்கள்’ என்கிற கேலி வார்த்தையால் தாக்குவார். கதை கற்பனை என்று அல்லாடுகிற நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாதவர்கள், சுலபமாக ஏமாந்துவிடும் ஆட்கள் என்று வார்த்தையாடுவார்.

பொன்னையா பிள்ளை சொன்னது நூற்றுக்கு நூறு இப்போது பலித்துவிட்டது. அன்று எங்களைப் பார்த்ததுமே பளிச்சென்று கேட்டு விட்டார், “என்ன எல்லா மூஞ்சிகளும் மூணாம் பேஸ்த்து வச்சமாதிரி இருக்கு!” என்று!

விஷயத்தை அவரிடம் சொன்னோம்! “அப்படியா, இருக்கட்டும்” என்று சொல்லி மூக்குநுனியில் பாம்பு விரலால் மேலும் கீழுமாக அழுத்தி இரண்டு தேய்ப்புகள் தேய்த்துக்கொண்டார். பிறகு, “வார நாயித்துக் கிழமை நா அந்தப்பக்கம் போகவேண்டிய திருக்கு. போயிட்டு வந்து பேசிக்கிடுவோம்” என்று சொல்லிவிட்டு ‘பள்ளிக் கூடத்துக்கு நேரமாயிரிச்சு’ என்று போய்விட்டார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை நூலகத்துக்கு விடுமுறை; அதோடு நூலக வாசகர் சங்கத்தின் கூட்டம் நடைபெறவேண்டிய நாள்.

கூட்டம் ஆரம்பித்த உடனேயே அந்த அதிர்ச்சிதரும் செய்தி வந்தது. வேங்கடம் இறந்துபோய்விட்டாராம். மாடியிலிருந்து தவறி விழுந்து மண்டையில் பலமாக அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாம்.

செய்தி கேட்டதுதான்; எங்களுக்குக் கையும் ஓடலை; காலும் ஓடலை. நூலகர் ராமாநுஜம்தான் கூட்டத்தில் எழுந்திருந்து வருத்தத் தோடு பேசினார்;

“இந்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என்று மனசு ஏங்கு கிறது. இந்த நூலகம் ஒரு சிறந்த மேன்மை பொருந்திய வாசகனை, அற்புதமான ஒரு பேச்சாளனை, உயர்ந்த ஒரு கனவானை இழந்து விட்டது. அன்னாரைப் பிரிந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எம் நூலக சார்பாகவும் நூலக வாசகர் பேரவையின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

கூட்டத்தில் வேறு பலரும் வேங்கடத்தின் குணங்களைப் புகழ்ந்து பேசினார்கள். அனைவரும் எழுந்து ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டுக் கலைந்தோம்.

அன்று மாலைநேரத்தை நாங்கள் புத்தகங்களோடு கழிக்க விரும்ப வில்லை. முனிசிபல் பார்க்கைப் பார்த்து மெதுவாக நடைபோட்டோம். இப்பொழுது எங்களுக்கு வேங்கடத்தின்பேரில் கோபமோ கடுப்போ இல்லை.

“இந்தப் புத்தகங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போக எப்படி அவருக்கு மனசு வந்தது?” என்று தன்னையே கேட்டுக் கொள்வது போல் கேட்டு எங்களைப் பார்த்தார் கதிர்வேல் செட்டியார்.

புல்தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார்: “வேங்கடத்துக்குப்பிறகு அவர் சேகரித்துவைத்த புத்தகங் களெல்லாம் அந்தக் குக்கிராமத்தில் யாருக்குப் பயன்படப் போகிறது. அவரின் நினைவாக இங்கே அதைக் கொண்டுவந்து நினைவாலயம் அமைத்து, எப்பவும் அவர் பெயர் சொல்லும்படிச் செய்யலாமே?”

எங்களுக்கும் இந்த யோசனை அருமையாகப்பட்டது. அவர் தன்னிடம் ஒரு புத்தகசாலையே இருப்பதாக ஒரு சமயம் சொல்லியிருக்கிறார்.

சனிக்கிழமை மாலை அலுவலகம் முடிந்தவுடன் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வேங்கடத்தின் ஊருக்குப்போய் துக்கம் விசாரித்துவிட்டு அவரது குடும்பத்தாரிடம் இந்த யோசனையையும் சொல்வது என்று தீர்மானித்தோம்.

“இந்தப் பொன்னையா பிள்ளையைக் காணோமே. அவர் இருந்தாலல்லவா இப்படிக் காரியங்களுக்குப் பேசக்கொள்ள வசதியான் பேரும் எங்கே கிளம்புங்க. வேளையின் இருக்கும். நமக்கு முதலில் போனவுடன் துக்கவீட்டில் துக்கம் விசாரிக்கக்கூட வாய்வராது” என்றார் சிகாமணி.

சனிக்கிழமை மாலை நாங்கள் பொன்னையாபிள்ளையைத் தேடு தேடு என்று எல்லா இடங்களிலும் தேடினோம். மனுசனைக் கண்ணி லேயே காணலை. அவர் சாப்பிடுகிற ஹோட்டல்காரரிடம் விசாரித்ததில், அவர் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஒரு பீரியட் இருக்கும்போதே பர்மிஷன் கேட்டுக்கொண்டு ஊருக்கு ‘ஓடி’ விடுவார் என்றும், இனி திங்கள்கிழமை காலை ரயிலில் வந்துதான் இறங்குவார் என்றும் சொன்னார்.

இந்த சமயத்தில் காபி சாப்பிட தற்செயலாக வந்த அந்தப் பருத்தி வியாபாரியிடம் எங்கள் பிரயாணம்பற்றிச் சொன்னோம். விஷயங் களையெல்லாம் கேட்டுவிட்டு அவர் சொன்னார். “அர்த்த ராத்திரி யிலே போயி நீங்க இத்தனை பேரும் எங்கே அங்கே கிராமத்திலே தங்குவீங்க. பேசாம நாளைக்குக் காலையிலே கிளம்புங்க. வேங்கடத் தின் ஊருக்குப்போற பாதையிலேதான் பொன்னையா பிள்ளையின் ஊரும். போகுறப்போ அவரையும் கூடக் கூட்டிக்கிட்டுப் போங்க” என்றார்.

ஞாயிறு காலையில் நாங்கள் ரயில் ஏறும்போது பலத்த மழை வரும் போல் இருந்தது. கடம்பூர் ஸ்டேஷனில் நாங்கள் இறங்குவதற்கும் மழை இறங்குவதற்கும் சரியாய் இருந்தது. கோடை மழையாதலால் காற்றும் இடி மின்னலும் பயங்கரமாய் இருந்தது. மரங்களின் சிண்டைப் பிடித்து காற்று உலுக்கி எடுத்தது. சில மரங்கள் தரை தொட்டு வணங்கி, விட்டுவிடும்படி காற்றை மன்றாடியது. காற்றின் கோபம் அடங்கியதும் ஹோ என்ற பெருத்த இரைச்சலுடன் கொட்டியது மழை. மலையின் உதவி இல்லாமலேயே அருவி நேராய் மேகத்திலிருந்தே பூமியில் இறங்கியதுபோலிருந்தது.

சும்மாவே இந்தக் காட்டுவழி நடந்து போறது கஷ்டம்; இப்போது இந்த மண் ஈரத்தில் எப்படிப் போகிறது என்று திகைத்துக்கொண்டி ருந்தபோது, எதிர்பாராமல் அங்கே பொன்னையாபிள்ளை வந்து சேர்ந்தார். தெப்பமாக நனைந்திருந்ததோடு உடம்பெல்லாம் ஒரே சகதி.

“ஜின்னிங் ஃபாக்டரியிலிருந்து அந்தப் பருத்தி வியாபாரி அதிகாலையில் ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பியிருந்தார், நீங்கள்ளாம் வரப்போறதாய். ஓடிவந்தேன் என்று சொல்லிக்கொண்டே உடைகளைப் பிழிந்தார்.

“வேங்கடத்தின் ஊருக்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் முடிஞ்சிட்டது” என்று அவருக்கே உரிய கெத்தான குரலில் சொன்னார் பொன்னையாபிள்ளை. “வாங்க; முதல்லே ஒரு காபி சாப்பிடுவோம். பிறகு வெவரமெல்லாஞ் சொல்லுறேன்” என்று கூட்டிக்கொண்டு போனார்.

விவரங்களை அவர் சொல்லச்சொல்ல ஆவலும் திகிலும் கூடிக்கொண்டே போயிற்று எங்களுக்கு.

“வேங்கடத்தோடு சேத்து அவரு சேகரிச்சு வச்சிருந்த புத்தகங் கள் எல்லாத்தையும் கூடவே போட்டுக் கொளுத்திவிட்டாங்க” என்று சொல்லி நிறுத்தினார் அவர்.

“என்னது; என்னது இன்னொருதரம் சொல்லும்” என்று பதறினார் கதிர்வேல் செட்டியார். டிக்டேஷன் போடுகிறமாதிரி நிறுத்தி அதையே திரும்பச் சொன்னார் பொன்னையாப்பிள்ளை.

கதைகள் எழுதும் சிகாமணி, “என்னய்யா; ஒரு சிறுகதையின் ஆரம்பம் மாதிரியில்லே தொடங்குறீங்க!” என்றார்.

“வேங்கடத்துக்கு ஏற்பட்டது தன் சாவு இல்லை” – இது பிள்ளைவாள் சொன்ன இரண்டாவது வாக்கியம்.

யாரும் நாங்கள் குறுக்கே பேசவில்லை; பேசத் தைரியம் இல்லை. தொடர்ந்து பிள்ளைவாள் சொல்லிக்கொண்டு போனார்.

“நேத்து செண்டூருக்குப் போயிருந்தேன். வேங்கடத்தோட வீட்டுக்குப்போயி துக்கம் விசாரிச்சேன். பக்கத்து வீடுகள்ளே உள்ள எங்க தூரத்து உறவுக்காரங்க வீடுகளுக்கும் போனேன். எல்லாத்தையும் எல்லார்ட்டேயும் தீர விசாரிச்சேன். பிறகுதான் தெரிஞ்சது. விஷயம் நடந்து முடிஞ்சதெல்லாம்”.

வேங்கடம் ஒரு சுமாரான விவசாயி. விவசாயத்தைக் கவனிக்காமல் புத்தகம் புத்தகம் என்று கிறுக்குப்பிடித்து அலைவாராம். இது அவருடைய பெண்டாட்டிக்கும் மகனுக்கும் வள்ளிசாகப் பிடிக்கா தாம். சின்னப்பையனாக இருக்கும்போதே வேங்கடத்தோட அப்பா அடிக்கடி சொல்லுவாராம் – ‘ஏலே, ஒன்னையும் இந்தப் பொஸ்தங் களையும்கூடப் போட்டு கொளுத்துற அன்னைக்குத்தான் எம் மனசு ஆறும்’ என்று. ஒரு வேலையையும் செய்யாமல் இப்படி ராவா பகலா ஊர்வழியே புத்தகத்தைக் ‘கட்டிக்கிட்டு அழுதா’ எந்த சம்சாரிக்குத் தான் பிடிக்கும்?

இதனாலேயே இவருடைய பெண்டாட்டிக்கும் இவருக்கும், மகனுக்கும் இவருக்கும், சதா அடிதடி சண்டையெல்லாம் நடக்குமாம்.

சம்பவம் நடந்த அன்றைக்கு பம்ப்செட் ரூம் சாவியைத் தேடுனாங் களாம். அப்போ இவர் நிம்மதியா உட்கார்ந்து படிச்சிட்டிருந்தாராம். நேரமாயிட்டா கரண்ட்டு நின்று போயிரும். நேரங்காலத்தோட பயிருக் குத் தண்ணீர் பாய்ச்சியாகணும். அம்மாவும் மகனும் என்னத்தைத் தேடுறாங்க என்று பக்கத்தைத் திருப்புகிறபோது கவனிச்சிருக்கார். அப்பவாவது சொல்லித் தொலைச்சிருக்கலாம் திரும்பவும் பக்கங் களுக்குள்ளே மூழ்கிட்டார். மகன்தான் எரிச்சலோட வந்து சத்தம் போட்டுக் கேட்டான். “யப்பா சாவியப் பாத்தீங்களா?”

சாவியா, இந்த பாதகங்கள் இருக்கிறதல்ல பாரு மனைவி சொன்னாள் – “அதைக் கொஞ்சம் பாத்து எடுத்துத் தந்துறக்கூடாதா; பரீட்சைக்குப் படிச்சாகுது!”

இந்த சமயம் மகன் ஷெஃல்பிலிருந்து புத்தகங்களை இழுத்துத் தள்ளினான். தன்னை மனைவி பரீட்சைக்குப் படிக்கிறதாகச் சொன்னதும், சாவி தேடுகிற சாக்கில் மகன் புத்தகங்களை இழுத்துக் கீழே தள்ளியதும் சேர்ந்து அவருக்கு ஆவேசத்தை மூட்டிவிட்டது. எது செய்தாலும் கோபம் வராது; புத்தகத்தைத் தொட்டால்’ அவரால் தாங்கவே முடியாது. வேகமாக எழுந்துவந்து மகனைக் காலால் ஒரு எத்து எத்தினார். அவன் இவருக்கு இளைச்சவனா. திருப்பி இவருக்கு ஒண்ணு கொடுத்தான். ஆங்காரம் தாங்கமுடியலை இவருக்கு. மூலையில் சாத்தியிருந்த உலக்கையை எடுத்தார். ஓங்கிய வீச்சுக்கு விலகிக்கொண்டு பாய்ந்து உலக்கையைப் பிடுங்கி இவருடைய தலையில் ஒரே போடு; அம்மா ஓடிவந்து மகனைப் பிடிக்கிறதுக்குள் இவரோட கதை முடிஞ்சது.

என்ன செய்யமுடியும் பிறகு. ஓன்னு அழுதாங்களாம். பக்கத்து வீட்டுக்காரங்க ஓடி வந்திருக்காங்க. மாடியிலிருந்து தவறி விழுந்துட் டாரேன்னு சொன்னாளாம். பெத்த மகனைக் காட்டிக் கொடுப்பாளா என்ன இருந்தாலும். ஆனாலும் சில பேருக்குச் சந்தேகம். பிறகு மகனே சொல்லி அழுதானாம்- “அய்யோ! தா பெத்த தகப்பனையே கொன்னுட்டேனே, பாவி…”

அகஸ்துமாத்தாக இப்படி மரணங்கள் நேர்ந்துவிடும்போது கிராமமும் சொந்தக்காரர்களும் வேகமாய் இயங்கி ஒத்துழைப்பார்கள்.

இறந்துபோன மனுஷனுக்கு எந்தப் பொருள் மீது ரொம்பப் பிரீதியோ அதையும் கூடவைத்துத் தகனம் செய்வார்கள். அவசரமாய் சுடுகாட்டுக்குப் புறப்பட்ட காடி வண்டியில் தேய்ந்துபோன கலப்பைக் குத்திகள் பருத்திமார்க்கட்டுகளோடு, வேங்கடம் வாழ்நாளெல்லாம் சம்பாதித்த புத்தகங்களும் போனது. அங்கே கொண்டுபோய் இவை களையெல்லாம் ஒழுங்காக நல்லமுறையில் அடுக்கி அதற்குமேல் அவருடைய உடம்பை வைத்து எரிமூட்டினார்கள்.

நான் அவர் வீட்டினுள்ளே போய்ப் பார்த்தபோது அவர் மனைவி யும் மகனும் ஷெல்ப் இருந்த பக்கம் கையைக்காட்டி “புத்தகம்ன்னா போதும் அவருக்கு; சாப்பாடு தண்ணி தூக்கம் ஒண்ணுமே வேண்டாம். அப்படி ஒரு பிரியம் அவருக்கு” என்று சொல்லி கண்ணீர்விட்டார்கள். மூலையில் கீழே ஏதோ ஒரு புத்தகத்தின் கிழிந்துபோன ரேப்பர் கிடந்தது” என்று சொல்லி ஈரத்தால் நைந்து கசங்கிப்போன அதை பொன்னையா பிள்ளை மடியிலிருந்து எடுத்து எங்கள் முன் வைத்தார். கிழிசலையெல்லாம் சரிசெய்து நேராக்கி எழுத்துக்கூட்டிப் படித்தோம் “இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்.!

நாங்கள் புறப்படவேண்டிய ரயில் வருவதற்கான மணி அந்த சமயத்தில் ஒலித்தது.

– குங்குமம் 20 ஜனவரி 1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *