புத்தகங்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 7,945 
 
 

சிறிய வயதிலிருந்தே எனக்குத் தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் உண்டானது.

அதற்கு முழு முதற் காரணம், என் வீட்டில் அப்பா அப்போது வாங்கிப்போட்ட ஜனரஞ்சகப் பத்திரிகைகள்தான். அதுதான் எனக்குத் தொடக்கம். அந்தக் காலத்தில் ஆனந்த விகடன்; குமுதம்; கல்கி; கலைமகள் போன்றவைகள் மிகவும் தரத்துடன் விளங்கின.

ஜெயகாந்தன், சாண்டில்யன்; நா.பார்த்தசாரதி; லக்ஷ்மி; ஜாவர் சீதாராமன்; ர.சு நல்லபெருமாள்; மேலாண்மை பொன்னுச்சாமி; சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் நிறைய எழுதிய காலம் அது. தற்போது அவர்கள் அனைவரும் மரித்துப் போயினர்.

இப்போது எல்லா தமிழ்ப் பத்திரிக்கைகளும் மிகவும் தரமிழந்து சோகத்துடன் சினிமா செய்திகளையும், விளம்பரங்களையும் மட்டுமே நம்பி வாழ்கின்றன. நல்ல சிறுகதைகளும், தொடர்கதைகளும் அவற்றில் காணப்படுவதில்லை. அந்தப் பத்திரிகைகள் விற்பனையாவதுமில்லை.

என்னுடைய சிறிய வயதில் எங்கள் தெரிவில் ஆவுடையப்பன் சார் என்று ஒருத்தர் இருந்தார். அவர் எப்போதும் புன்னகையுடன் இருப்பார். கணீரென்று தெளிவுடன் பேசுவார். நிறைய வாசிப்பார். வாசித்தல் மிக நல்ல பழக்கம்; இறக்கும்வரை அதை எல்லோரும் தொடரவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.

அவர் தன் வீட்டில் ஏழு அடி உயரம்; ஆறு அடி அகலத்தில் ஒரு பெரிய தேக்குமர பீரோவிலான லைப்ரரி வைத்திருந்தார். முதன் முதலில் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவர் அழகாகப் பராமரித்து வந்த லைப்ரரியைப் பார்த்து நான் சொக்கிப்போனேன். வீட்டிற்குள்ளேயே ஒரு லைப்ரரி என்பது பற்றி அந்தச் சிறிய வயதில் நான் கற்பனைகூட செய்து பார்த்தது கிடையாது.

பள பளப்பான கண்ணாடி முகப்புடன் அந்த லைப்ரரி கம்பீரமாகக் காட்சி தரும். அதில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். சிறுகதைகள்; நாவல்கள்; கவிதைகள் தவிர மருத்துவம்; ஆன்மிகம்; உலக அரசியல் என்று வித விதமான புத்தகங்கள் அதில் இருக்கும். அதிகம் படித்து நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் ஆவுடையப்பன் சாருக்கு அதிகம்.

எல்லாப் புத்தகங்களையும் அவர் விலை கொடுத்துதான் வாங்குவார். செலவைப்பற்றி யோசிக்கவே மாட்டார். நல்ல புத்தகங்களை தேடித் தேடி வாங்கிச் சேகரிப்பார். புதிதாக ஒரு புத்தகம் வாங்கியதும், அதன் பக்கங்களை தன் வலது கட்டை விரலால் வேகமாகப் புரட்டி, தன் மூக்கை அதன் அருகில் எடுத்துச்சென்று வாசனை பிடிப்பார். புதுப் புத்தகங்களின் வாசனை ரம்மியமானது என்பார். அட்டைக்கு அடுத்த பக்கத்தில் தன் பெயரை எழுதி, புத்தகம் வாங்கிய தேதியையும் பெயருக்கு கீழே குறித்து வைப்பார். அவைகளை உடனே படித்தும் முடித்து விடுவார். பிறகு அவைகளை அழகாக அடுக்கிவைத்து ஆர்வத்துடன் பராமரிப்பார்.

சேகுவாரா, பெடல் காஸ்ட்ரோ போன்றவர்களைப் பற்றி நான் நிறைய தெரிந்துகொண்டது ஆவுடையப்பன் சார் வீட்டு லைப்ரரி மூலமாகத்தான். நான் ஆர்வத்துடன் அவருடைய லைப்ரரியிலிருந்து நிறையப் புத்தகங்களை என் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க ஆரம்பித்தேன்.

அவர் வைத்திருந்த சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்; தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள்; சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை; நா.பாவின் குறிஞ்சி மலர்; ரா.சு நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரம், காலச் சக்கரம்; கி.ஜ.ராவின் கோபல்லபுரத்து மக்கள்; லக்ஷ்மியின் படகு வீடு; சுஜாதாவின் நைலான் கயிறு; கல்கியின் பிரபல நாவல்கள்; சாண்டில்யனின் கடல் புறா, யவன ராணி; ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்; ஜாவர் சீதாராமனின் உடல், பொருள், ஆனந்தி; பணம், பெண், பாசம் மற்றும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லாபுரூஸ் நாவல்கள் அனைத்தையும் படித்துவிட்டு திருப்பித் தருவதாக அவரிடமிருந்து எடுத்துச் சென்றேன்.

ஆவுடையப்பன் சாரின் உதவியால் நிறையப் படித்தேன்.

தற்போது பெரும்பான்மையான வாசகர்கள் கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று எல்லாவற்றையும் செலவில்லாமல் இன்டர்நெட்டில் தேடித்தேடி படித்து விடுகிறார்கள். இந்தக் கால கட்டத்தில், எனக்குத் தெரிந்து சுமார் முப்பது இன்டர்நெட் பத்தரிகைகள் இருக்கின்றன. அவற்றில் சிறுகதைகள்.காம், பதாகை.காம் போன்றவைகள் சிறுகதைகளுக்காக மட்டுமே இயங்குகின்றன.

அமெரிக்காவின் நியூஜெர்ஸியிலிருந்து சிறுகதைகளுக்காக மட்டுமே இயங்கும் நம் சிறுகதைகள்.காம் தரமான சிறுகதைகளைத் தாங்கி வருகிறது. டிசம்பர் 2011 முதல் செயல்பட்டு வருகிறது. 8500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இதில் படிக்கலாம். சிறுகதைகள்.காமில் உலகத் தமிழ் படைப்பாளிகள் பலர் எழுதுகின்றனர். உலகத் தமிழர்கள் ஏராளமானோர் அதைப் படிப்பது தனிச்சிறப்பு. குடும்பம், காதல், அமானுஷம், அறிவியல், ஆன்மிகம், கிரைம், சரித்திரம், த்ரில்லர், சமூகநீதி, நகைச்சுவை என பத்து வகையாக கதைகளைப் பிரித்து மேய்கிறார்கள். அதன் ஆசிரியர் குழுமம் சிறப்பாகச் செயல் படுகிறது. தமிழகத்தின் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தமிழ் சிலபஸில் சிறுகதைகள்.காமை ஒரு இலக்கியப் பாடமாக அங்கீகரித்துள்ளனர்.

நிறைகள் நிறைய இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சென்ற மாதத்தின் டாப் 10 என்று போட்டிருப்பார்கள். ஆனால் அதில் 2012 ம் ஆண்டு May 9th அன்று இணைய தளத்தில் ஏற்றப்பட்ட கதை இன்றும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சரியான காமெடி. சுறுசுறுப்பாக கதைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். திடீரென அதை வெகுவாக குறைத்து விடுவார்கள். அது ஏன் என்பது மிகப்பெரிய புரியாத புதிர். கதைகளை ஏற்றுவதில் ஒரு சரியான டைம் ரிதம் இருந்தால் உசிதம். இம்மாதிரி சொதப்பல்களை மட்டும் தவிர்த்தல் நலம்.

நிறையப் படித்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நீண்டநாள் அவா. அதனால் மிகச் சமீபத்தில் வீட்டிலேயே புதிதாக ஒரு லைப்ரரி ஆரம்பித்துள்ளேன். அதில் வித விதமான புத்தகங்களை நிறைய சேகரித்து வைத்துள்ளேன்.

அவற்றில் எந்தப் புத்தகத்தையும் நான் எவருக்கும் படிக்கக் கொடுக்க மாட்டேன். ஏனெனில் அவைகள் கண்டிப்பாக திரும்பி வராது என்பது எனக்குத் தெரியும். ஒரு புத்தகத்தை வாங்கினால் அதைப் படித்துவிட்டு திருப்பித் தராத அநாகரீகம் நம்மிடையே அதிகம்.

பாம்பின் கால் பாம்பறியும்.

இதுவரை நான் சேர்த்து வைத்துள்ள அனைத்துப் புத்தகங்களும் ‘படித்துவிட்டு திருப்பித் தருவதாகச் சொல்லி’ வாங்கிக்கொண்டு, அவைகளில் ஒன்றுகூட திருப்பித் தராமல் சேர்த்து வைத்து ஆரம்பித்த புதிய லைப்ரரி அல்லவா என்னுடையது?

அவற்றில் மிகப் பெரும்பாலான புத்தகங்கள் மறைந்த ஆவுடையப்பன் சாரின் உபயம். சொர்க்கத்திலிருந்து அவர் என்னை இரட்சிப்பாராக…

Print Friendly, PDF & Email

1 thought on “புத்தகங்கள்

  1. நீங்கள் சொல்வது சரிதான். சில நேரங்களில் பிரசுரித்த கதைகளை திரும்ப புதிதுபோல் போடுவார்கள்.

    சிறுகதைகள்.காம் உண்மையில் சிறந்த ஒரு இணையதளம்.

    இதில் நான் கடந்த 4 வருடங்களுக்கு மேல் கதைகளை வாசித்து வருகிறேன் . உங்களுடைய கதைகள் நன்ற இருக்கும்.

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *