தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,410 
 

அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம்.

பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள்.

அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்–தான் ஆச்சு! ‘இங்கேதானே வழக்கமாக வைப்பீங்க..?’ என்று அனுதாபத்தோடு, நமது தேடும் முயற்சிக்கு உதவுவார்கள். அல்லது, உதவுவது போல நடிக்கவாவது செய்வார்கள்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில், முக்கியமாக பெண்கள் டி.வி. சீரியலில் மூழ்கியிருக்கும்போது தேடும் படலத்துக்கு உதவுவது அபூர்வம். மூக்குக் கண்ணாடியோடு சேர்ந்து கணவனே காணாமல் போயிருந்தாலும் கவலைப்படாத நேரம் அது.

விஷயம் தெரியாத சில கணவன்மார்கள், மனைவி-யா-கப்பட்டவள் கணவனின் அழைப்பு கேட்டதுமே, வாசுகி அம்மை கிணற்றில் குடத்தோடு கயிற்றை அந்தரத்தில் அப்படியே விட்டுவிட்டு விரைந்து வந்தது போல் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ரொம்பத் தப்பு.

நீங்கள் அசிரத்தையாக ஒரு பொருளைத் தொலைத்து-விட்டு, அதை மனைவியைத் தேடச் சொல்லிக் கோபிப்பது ஆணாதிக்க ரகத்தில் சேர்ந்தது. தொலைய வீட்டில் ஆயிரம் இடம் இருக்க, சோபாவில் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கீழேதான் தன் கண்ணாடி சிக்கிக்கொண்டு இருக்கும் என்பது போலச் சில கணவன்மார்களுக்குத் தீராச் சந்தேகம் வந்து, ‘‘கொஞ்சம் எழுந்துக்கிறியா?’’ என்று தொந்தரவு செய்வார்கள். ‘‘சீ! உருப்படியா ஒண்ணு பார்க்கவிடறது இல்லே’’ என்று வெறுப்புடன் எழுந்து, விருட்டென்று தரையில் உட்கார்ந்துகொள்வாள் மனைவி.

இந்தச் சின்ன விஷயமே, 18 நாள் நடந்த பாரதப் போராகவும் மாறச் சாத்தியக் கூறுகள் உண்டு.

‘‘உங்க கண்ணடி மேலேதான் நான் தினமும் உட்காரு-வேனாக்கும்? எனக்கு அவ்வளவெல்லாம் மூளை கெட்டுப் போயிடலே!’’

‘‘எழுந்திருன்னா எழுந்திரேன். டி.வி&யிலே அவங்-கெல்லாம் எங்கேயும் ஓடிப் போயிடமாட்டாங்க. ஹ¨ம்… உடம்பை அசைக்கிறதுக்கு அவ்வளவு சோம்பேறித்தனம்!’’

‘‘சே! நல்ல ஸீன் போயிண்டிருக்கு. அதுக்குள்ளே ஆயிரம் பிடுங்கல்! இம்சை பண்ணாம கொஞ்சம் இருங்க. இது முடிஞ்சதும் வந்து தேடித் தர்றேன்!’’

‘‘நான் செத்தாக்கூட நீ டி.வி. சீரியலை முடிச்சுட்டுத்-தானே அழவே வருவே! அப்படி என்ன டி.வி. மோகமோ! இப்பவே அதை ஒடைச்சு நொறுக்கிடறேன் பார்!’’

‘‘தாராளமா நொறுக்குங்களேன். எனக்கென்ன வந்தது? உங்க பணத்துக்குதான் கேடு! நான் எதிர் வீட்டிலே போய்ப் பார்த்துக்கிறேன்.’’

‘‘போவடீ போவே, நான் இளிச்சவாயனா இருந்தா!’’

‘‘இதப் பாருங்க, கன்னாபின்னான்னு பேசினீங்கன்னா, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.’’

‘‘இப்ப மட்டும் அப்படி இருக்கிறதா மனசுக்குள்ளே நினைப்பா? எழுந்திருடீன்னா… வார்த்தைக்கு வார்த்தை எதிராடிண்டு..!’’

அவள் வாய்மூடிய மௌனம், கணவனின் முறைப்பில் சூடு ஏற்றுகிறது. எட்டி ஒரு உதை & டீபாயை! அதன் மேலிருந்த பூ ஜாடி… அது இது எல்லாம் கீழே விழுந்து சிதறல். அப்போதும் மனைவியின் அசையாத நிலை.

கணவன் சட்டென்று போய், பட்டென்று டி.வி&யை அணைக்கிறான்.

அவள் விருட்டென்று எழுந்து, ‘‘சீ! மனுஷங்க இருக்கிற குடும்பமா இது..!’’ என்று விக்கலும் விசும்பலுமாகப் படுக்கை அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டு படுத்து-விடுகிறாள்.

கணவனின் கண்ணாடி தேடும் விடா-முயற்சி தொடர்கிறது… தொடர்-கிறது… தொடர்ந்து கொண்டேஏஏஏ இருக்-கிறது.

தேடுவது என்பது உயிரினங்கள் அனைத்துக்குமே இயற்கையாக உள்ள இயல்பு. மாடுகள்கூட நடந்து-கொண்டே இரை தேடும். பின்னால் பால்காரன் சாவகாசமாகக் குவளையும் கையுமாக வருவான். அவனது மாடு அவனை வழிநடத்திச் சென்றவாறு, சாலையின் பிளாட்பாரத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடியவாறு போகும். செயின் போட்டுப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தால், சகல ஜாதி நாய்களும் குப்பைத் தொட்டியில் எதையாவது தேடாமல் கடக்காது.

கிரெடிட் கார்டு தொலைந்தால் சங்கடம். கிரெடிட் கார்டைப் பத்திரமாகப் பர்ஸில் வைத்துக்கொள்வது வழக்கம். அந்தப் பர்ஸே காணாமல் போனால்? ‘தெய்வமே கலங்கி நின்னா…’ கேஸ்தான்!

வீட்டுச் சாவி தொலைந்தாலும் தேடித்தான் ஆக வேண்டும். பெண்ணுக்கு வரன் தேடுவதும் சிரமமானதே! இன்றைக்கு நெட்டில் பார்த்துப் பையனையோ, பெண்ணையோ தேடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த சௌகரியம் இது. ஆனால், நெட்டில் வீட்டுச் சாவியைத் தேட முடியாது.

யு.எஸ்ஸிலுள்ள பையனின் நடவடிக்கைகளை உள்ளங்கை நெல்லிக்கனி செல்போனில் பார்க்க-லாம். அவன் சுய சென்சார்வைத்துக்-கொண்டு நாகரிகமாகவே செல் போட்டோவுக்குப் போஸ் தருவான்… சாமி கும்பிடுவது போல, படிப்பது போல..! பின்னே, பாட்டில் அடிப்-பதை-யெல்லாமா காட்டு-வான்?

‘தேடாமலிருக்கச் சில யோசனை-கள்’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்-தேன். அல்லது, மொத்தப் புத்தகமுமே அந்த சப்ஜெக்டைப் பற்றித்தானோ? சரி, இப்போது அந்தப் புத்தகத்தை எங்கே போய்த் தேடுவது?

தேடுவது என்பது மனிதனின் ஆரோக்கியத்-துக்கு மிக அவசியம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்-கள். தேடுவது இதயத்தின் சோம்ப-லைத் தவிர்க்கிறதாம்.

‘மிஸ்ஸிங் பீட்’ என்று சொல்லக்கூடிய துடிப்புக் குறைவான இதயத்துடன் ஒருத்தர் டாக்டரிடம் சென்றார். லப்டப் என்று அடித்துக்கொண்டு இருக்கும் இதயம், நடுநடுவே ஒரு விநாடி நேரம் மௌனமாகிவிடும். சோம்பேறி வேலைக்காரன் நடுநடுவே ஓய்வெடுத்துக்கொள்வது போல, அந்த இதயம் அவ்வப்போது சற்றே கண் அசந்துவிடுமாம். உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அத்தகைய இதயக்காரர்கள் டாக்டரிடம் போகவே செய்வார்கள்.

அவர்களுக்கு எங்கள் குடும்ப டாக்டர் சொன்ன ஒரு அபாரமான யோசனை… ‘‘உங்கள் மூக்குக் கண்ணாடியையோ டைரியையோ தொலைத்துவிட்டுத் தேடுங்கள். இதயம் சரியாகிவிடும்!’’

ஒரு பொருள் தொலைந்துபோனது தெரிந்தால், ‘ஐயோ… அதைக் காணோமே!’ என்றும், அதைத் தேடும்-போது, ‘ஐயோ… அது கிடைக்கணுமே!’ என்றும் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற்படுவது உண்டல்லவா? அந்தப் படபடப்பு, தூங்குகிற இதயத்தைத் தட்டி எழுப்பி, சுறுசுறுப்பாக இயங்கச் செய்யுமாம்.

ஆகவே, பூரண இதய ஆரோக்கியம் பெறவேண்டுமென்றால், அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, வீட்டுச் சாவி, பால் கூப்பன், மூக்குக் கண்ணாடி இவை போன்ற தினப் படிக்கு முக்கியமான பொருள்-களை அடிக்கடி தொலைத்துவிட வேண்டும். அப்புறம், பதற்றத்துடன் தேட வேண்டும். யோகா, ஆழ்நிலைத் தியானம், உடற்பயிற்சி எதிலும் கிடைக்காத உடல் ஆரோக்கியம் இத்தகைய தேடலில் கிடைக்கும்.

‘‘எங்கேடா போய்த் தொலைஞ்சே மொட்டைக் கடன்காரா?’’ என்று கல்யாண வீட்டில், தங்கள் வால்பையனைத் தேடுகிற தாய்மார்களின் இதயம் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதாம் – மொட்டைக் கடன்காரனைத் தொலைக்காதவர்-களைவிட!

வெளியான தேதி: 16 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *