கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2022
பார்வையிட்டோர்: 2,287 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆப்பிரிக்கப் பாதை கண்டுபிடித்த சில மாதங்களில் இது நடந்தது. இந்த இருண்ட கண்டத்தில் என்னவும் நடக்கலாம் என்று என்னை மிகவும் தயாரித்திருந்தார்கள். எப்படிப்பட்ட தயாரிப்புகளும் சில வேளைகளில் பற்றாமல் போய்விடும். ஆனாலும் நான் போதிய தைரியம் இருப்பது போலக் காட்டுவது என்ற தீர்மானத்தில் இருந்தேன்.

நாலுநாள் வயது கொண்ட பாம்புக் குட்டிகள் போல அவள் தன்னுடைய கேசத்தைத் தனித்தனியாக சுருட்டியும், பின்னியும் விட்டிருந்தாள். அவள் சாயும் போது அவையும் சாய்ந்தன; நிமிரும்போது அவையும் நிமிர்ந்தன. பாம்புக் குட்டிப் பின்னல்கள் அவள் தோளைத் தொடப் பயந்தது போல ஒரு மரியாதையான தூரத்தில் நின்றன. நீளமான கறுப்பு உதடுகளை மெல்லத் திறந்து வணக்கம்’ என்று சுத்தத் தமிழில் உச்சரித்து எனக்குத் திகைப்பூட்டி னாள். என் இரண்டு கன்னங்களிலும் பறவை தொட்டது போல சின்னச் சின்ன முத்தம் சரிசமமாக வைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். இது எல்லாம் என் நண்பனுடைய சதி என்பதை நான் பின்னால் தெரிந்து கொண்டேன்.

என் முழங்கால்கள் ஆடுவதை மறைப்பதற்கு என் தயாரிப்புகள் உதவவில்லை. அதிகமான துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். என்னுடைய வயதுதான் அவளுக்கு இருக்கும். அவள் பேச்சு சுபாவமாகவும் சிநேகமாகவும் இருந்தது.

‘பாம்புக்குட்டி கேசப் பெண்ணழகியே, குடிப்பதற்கு ஏதாவது பானம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘என்னிடம் பல பானங்கள் உண்டு. எது வேண்டும்?’ என்றாள். ஆனால் அவள் பானம் எதுவும் தயாரிக்கும் அறிகுறிகள் தென்படவில்லை . ஆயிரம் வருடங்கள் என்னுடன் பழகியவள் போல சர்வ சாதாரணமாக என் முன்னே மண்டியிட்டு பின் கால்களை மடித்து உட்கார்ந்தாள். என்னை உற்றுப்பார்த்துக்கொண்டே தலையைப் பின்னால் எறிந்தாள். அவள் கண்களின் ஆழம் என்னைத் திக்குமுக்காட வைத்தது.

‘வசதியின்மைக்குப் பழக்கப்பட்டவள் நான்’ என்றாள் திடீரென்று. ஒவ்வொரு நிமிடத்தையும் நிறைத்து இவள் ஏதாவது செய்தபடியே இருந்தாள். இப்பொழுது இவள் தன் உடம்பை மூன்றாக மடித்து விட்டாள். என் முழங்கால்களை மிருதுவாகத் தொட்டாள்; அப்படியும் நடுக்கம் தணியாமல் இன்னும் அதிகமாகியது.

பஞ்சி முறித்தபடி எழும்பி நின்றாள். ஒரு வீச்சில் சுழன்று திரும்பியபோது அவளுடைய மேலங்கி கழன்றுவிட்டது. முகத்தில் அடித்தது அந்த வயிறுதான்; சுண்டிவிட்டது போல இருந்தது. இதில் எறும்பு ஊர்ந்தால் ஊதலாம்; கிள்ளிப் பிடிக்க முடியாது. அப்படி இறுக்கமாக இருந்தது.

தொலைபேசிகள் தூங்குவதில்லை. ஆப்பிரிக்காவின் அகாஸியா மரங்களால் மறைக்கப்பட்ட அந்த விடுதியில் ஒரு தொலைபேசி இருந்தது. அதனுடைய ஒலி ஏணி 1-10 என்று இருக்கும். இந்த டெலிபோன் ஒலியை நாலில் பொருத்தியிருந்தார்கள். காதுக்கு இனிமையான ஒலி தருவதற்கு இது பழக்கப்பட்டிருந்தது. பனிக்குளிர் அடிக்கும் காலத்தில் கணப்பை மூட்டிவிட்டு பத்து அடி தூரத்தில் போர்வையால் மூடிக்கொண்டு இருக்கும் போது கிடைக்கும் சுகம் போல இந்த டெலிபோன் அடிப்பது காதுக்கு இதமாக இருக்கும்.

இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என்று டெலிபோன்கள் இரவு நேரங்களில் நலமானதும், துக்கமானதுமான செய்திகளைச் சுமந்தபடியே வரும். எங்கள் எதிர் காலங்களை நிர்ணயிக்கும் இந்தக் கருவியைச் சுற்றி இருந்து நானும், விடுதி நண்பர்களும் மணிக்கணக்காக சம்பாஷிப்போம்.

ஒரு நாள் நடு நிசி என்னைத் தேடி ஒரு செய்தி வந்தது. எனக்கு ஒரு தேசம் கிடைத்துவிட்டது. ஜேர்மனி என்று சொன்னார்கள். அன்று முழுக்க நான் தூங்கவில்லை. சந்திர மண்டலத்தின் இருண்ட பகுதியில் இருந்து பேசுவதுபோல அப்பாவின் குரல் அடைத்துப் போய் ஒலித்தது. அம்மா வளையல் இல்லாத கைகளைத் தூக்கி ஆட்டி விடை கொடுத்தாள். பின்னாத நீண்ட கூந்தலுடன் மகேஸ்வரி தோன்றினாள். தன் கைக்குட்டை எங்கே என்று விசாரித்தாள். என் நினைவுகள் முன்னும் பின்னும் சுழன்றன. அவற்றிலே கணிசமான பகுதியைப் பாம்பு கேசப் பெண் பறித்துக்கொண்டாள்.

அன்று இருள் ஒருவிதமான சுவாலை வீசிக்கொண்டு பிரிந்தது. ஆகாயத்தில் இருந்து கஞ்சத்தனமாக மழை நீர் விழுந்து கொண்டிருந்தது. சில விழுமுன் ஆவியாகித் திரும்பவும் பிறந்த வீட்டுக்குப் போயின.

விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொன்னார்கள். இளம் பெண் ஒருத்தி திடீரென்று திரும்பினாள். பாம்பு கேசக்காரி போல உயரமாக இருந்தாலும் முகம் வேறாகத் தெரிந்தது. ஒரு மந்திரவித்தை போல அந்தப் பெண் திடீரென்று தோன்றலாம் என்று மனது அங்கலாய்த்தது. இந்த ஆசை வந்த பிறகு இருக்கைகளில் அமர்ந்தவர்களையும், தடுப்புக்கு அப்பாலிருந்து வரும் பயணி களையும் பார்க்கக் கூடுமான வசதியான ஓர் இருக்கைக்கு மாறினேன்.

வெள்ளைச் சீருடை அணிந்த இருவர் தடுப்பைக் கடந்து வந்தார்கள். தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே பயணிகளை உற்றுப் பார்க்கும் வேலையைச் செய்தார்கள். என்னிடம் ஞானக்கண் இருந்தது; ஞானப் பல் இருந்தது; ஆனால் ஞானக் காது மாத்திரம் இல்லை. அவர்கள் ரகஸ்யக் குரலில் பேசியது எனக்குக் கேட்காமல் போய்விட்டது. நான் அவசரமாகக் கண்களைத் தாழ்த்திப் பயண அட்டையை சரிபார்த்தேன். சிறிது நேரம் கடத்திவிட்டு மறுபடியும் திரும்பிச் சென்றார்கள்.

கறுப்பும், சிவப்பும், மஞ்சளுமான ஜேர்மன் கொடி வர்ணத்தைத் தன் உடம்பிலே பூசிக்கொண்ட லுவ்தான்ஸா விமானம் தரையைத் தொட்டது. ஐயாயிரம் மைல் தூரம் பறந்து வந்த களைப்பு அதற்கு ஓர் ஐயாயிரம் மூச்சை அடக்கிவைத்து ஒரேயடியாக வெளியே விட்டு நிதானமாக ஊர்ந்து வந்து நின்றது. மூடிய நடைபாதை வண்டி நகர்ந்துபோய் விமானத்தின் கதவுடன் தொட்டு வழி செய்தது. ஓடுதரை விளக்குகள் மறுபடியும் அணைந்தன.

எங்களிடம் இருந்த அரிக்கன் விளக்கை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அப்பாதான் கொளுத்துவார். பின்னேரங்களில் மைமலாகுமுன் அதைக் கிலுக்கிப் பார்ப்பார். அது கொடுக்கும் சத்தத்தில் இருந்து எவ்வளவு எண்ணெய் உள்ளே இருக்கிறது என்று ஊகித்துவிடலாம். அந்த லாம்பின் சிமிலியைப் பத்து நிமிட காலம் பழந்துணியினால் துடைப்பார். அளவாக மண்ணெண்ணெய் ஊற்றி, திரியைத் தூண்டி, கத்தரிக்கோலால் சமன் செய்து வெட்டி விடுவார். இந்தச் சிறந்த வேலை வேறு ஒருவருக்கும் பங்கு போட்டுக் கொடுக்கமுடியாதது.

என் அப்பாவுக்கு இரவில் நீண்ட கனவுகள் வரும். நித்திரை முடிந்து அவர் எழும்பிய பிறகும் அவை தொடரும். என்னை வெளிநாட்டுக்கு அனுப்பும் கனவும் இப்படித்தான் பல நாட்கள் வளர்ந்தது. விரோதித்தனம் காட்டாமல் சாதுவாகப் பறந்த விமானத் திலிருந்து குண்டுகள் விழத்தொடங்கின. எங்களைச் சுற்றி சாவுகள் நிறைந்தன. நான் பிரியும் காலம் வந்துவிட்டது. அன்று அப்பாவின் நேரடியான கண்காணிப்பில் சிமிலி துடைக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

நான் பயணப்படுவதற்கான நாள் நெருங்கிய போது அப்பாவின் வாஞ்சை அதிகமாகியது. அதை எப்படியும் காட்டி விட வேண்டு மென்று துடித்தார். ‘தம்பி’ என்று அழைப்பார், பிறகு நாக்கு மந்தமாகி பேசமாட்டார். ஏதாவது சொல்ல வருவார், பிறகு சொல்லாமல் விட்டுவிடுவார். அலிஸின் அதிசய உலகத்தில் வரும் மூஞ் சூறு போல அப்பா முடிக்காமல் விட்ட கதைகளும், வசனங் களும் பலவாக இருந்தன. அவை எல்லாம் அவர் படுக்கும் மரக்கட்டிலுக்கும் கூரைக்கும் இடையில் இன்றுவரை அந்தரத்தில் சுற்றிக்கொண்டே இருப்பது போல எனக்கு அடிக்கடித் தோன்றும்.

எங்கள் குடும்பத்து வேலைகள் சரி சமமாகப் பங்குபோட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும். அம்மா தோசை பிரட்டுவாள்; அக்கா தலைக்கு சீயக்காய் பிரட்டுவாள்; அப்பா காசு பிரட்டுவார். அப்படித்தான் அப்பா பயண முகவருக்குக் காசு கட்டி என்னை அனுப்பிவைத்தார்.

இந்தப் பயண முகவரை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறது. மிகவும் ஒடுங்கிய வாசல்களுக்குள் போகப் படைக்கப்பட்டவர்போல ஒடுங்கிய உடம்போடு இருந்தார். பொய் இயற்கையாக வந்தபடியால் தொழிலை விருத்தி செய்வது இவருக்குச் சுலபமாக இருந்தது. எங்கள் சீனியர் குலசிங்கம் பதினொரு மாதங்களாக இந்த இருண்ட விடுதியில் தங்கியிருக்கிறான். என்னைக் கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தான். தனக்கு ஒரு நாடு படைக்கப்பட்டுவிட்டது; ஆனால் அதனுடைய பெயர்தான் இன்னும் தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான்.

மகேஸ்வரி எந்த இடத்துக்கு வந்தாலும் அங்கே அவளுடைய வனப்பு தொற்று வியாதி போல பரவிவிடும். இருப்பதற்கு முன் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு நீண்ட தலை முடியை இழுத்து இழுத்து பிருட்டத்தின் கீழ் வைத்து மெத்தையாக மடித்து அதற்கு மேல் தான் இருப்பாள். மலர்வதற்கு இன்னும் இரண்டு நாள் அவகாசம் உடைய மல்லிகை மொட்டுகளைத்தான் அவள் கோத்து கூந்தலில் அணிந்திருப்பாள். அந்த மல்லிகை விரிந்து நான் பார்த்த தில்லை. விரிய முதல் வரும் ஓர் இளைய மணம்தான் அவள் கூந்தலிலிருந்து வரும்.

ஒட்டகத்தின் கண் இமைகள் அடர்த்தியாக இருப்பது பாலை வனத்து மணல் வீச்சைத் தடுப்பதற்காக என்று கேள்விப்பட்டிருக் கிறேன். இந்தப் பெண்ணின் இமைகளும் அப்படித்தான் அடர்ந்து, கறுத்துப் படபடவென்று அடித்தன. வேண்டாத ஆடவர்களின் பார்வையை அவள் அப்படித்தான் துரத்தினாள் போலும்.

நான் பயணம் புறப்படும் போது அந்தக் கண்களால் சாடை செய்தாள். ஒருவரும் அறியாமல் வந்து ஒரு கடிதம் கொடுத்து அதை பிளேன் புறப்பட்ட பிறகு படிக்கச்சொல்லி என்னிடம் உத்திரவாதம் பெற்றுக்கொண்டாள்.

அந்தக் கடிதம் ஓர் உறையில் கூடப் போட்டு சிறப்பு செய்யப்பட வில்லை. அப்பியாசக் கொப்பியின் கடைசி ஒற்றையை அவசரமாகக் கிழித்து அதில் எழுதியிருந்தாள். நாலாக மடித்து மிகவும் பாதுகாக்கப் பட்டு, அவளுடைய கை வியர்வையில் நனைந்து, பல எதிர்பார்ப்பு களை எனக்குள் ஏற்படுத்தி என் சட்டைப்பையில் கிடந்தது.

டெஸ்டிமோனாவின் கைக்குட்டை களவு போனது போல இவளு டையதும் களவுபோயிருந்தது. எடுத்தது நான்தான். பயணம் புறப்படும் வரை அவள் அது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நான் பிரிந்தபோது இதற்கு முன்பு உபயோகப்படுத்தாத ஒரு புன்னகையை வைத்திருந்து எனக்காக வீசினாள். உள்ளங்கையைக் கூட மறைக்க முடியாத சிறிய கைக்குட்டை அது; மூலையிலே சிவப்புப் பூ போட்டது. இருபது கைக்குட்டைகளா அவளிடம் இருக்கிறது? இருப்பது ஒன்றுதான். எப்படி தெரியாமல் போகும். அது பற்றி கடிதத்தில் நிச்சயம் எழுதியிருப்பாள் என்று எதிர்பார்த்தேன்.

அப்பாவின் கையெழுத்து தென்கொரிய தேசிய கீதம் போல வாசிப் புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அம்மாவினுடையது கால், கொம்பு , விசிறி, சுழி ஒன்றுக்கும் தரவேண்டிய மரியாதை தராமல் ஒரு கோபத்தோடு எழுதியமாதிரி நட்டுக்கொண்டு நிற்கும். என் னுடைய மகேஸ்வரியின் எழுத்து அப்படியல்ல. மலர் முகைபோல அவளுடைய அட்சரங்கள் தனித்தனியாகவும், குண்டு குண்டாகவும் இருக்கும்.

அந்தக் கடிதத்தைப் படிக்கும் போது என்னுடைய சொண்டைவிட கண் வேகமாகப் பறந்தது. எங்கே கடைசி வரியில் ‘அன்பான தங்கை’ என்று முடித்துவிடுவாளோ என்ற பயம் பிடித்து ஆட்டியது. ஒரு கிழவியின் கடிதத்திற்கான சகல தகுதிகளுடன், புத்திமதிகளால் மிகவும் கனத்துப்போய் அது காணப்பட்டது. நல்லாய் படிக்க வேண்டு மாம். விரைவில் உத்தியோகம் பார்க்க வேண்டுமாம். இவ்வளவு நம்பிக்கையோடு அனுப்பிவைக்கும் பெற்றோரை ஏமாற்றக்கூடாதாம். மேல் நாடுகளில் கெட்டுப்போவதற்குப் பல சந்தர்ப்பங்கள் உண்டாம். இந்த வகையாக கஸ்தூரிபாய் எழுதுவதுபோல எழுதியிருந்தாள்.

அந்த வரிகளையெல்லாம் துடைத்தும், துளைத்தும், முகர்ந்தும் பார்த்தேன். எங்கேயாவது காதல் ஒளிந்திருக்கிறதா என்ற ஆசையில். அப்பொழுதுதான் கடைசி வரியில் ஒரு கதவு திறந்தது. மத்தாப்பு வெடித்து விரிந்தது. போனால் போகிறது என்று முத்தங்கள் முன் னூறு’ என்று முடித்திருந்தாள். இவள் எப்படி முன்னூறு முத்தங்கள் என்று சொல்லலாம். ஒரு சின்னி விரலைக்கூட அவள் தொடுவதற்கு அனுமதித்ததில்லை. முன்னூறு முத்தங்களாம்! இதிலே என்ன கஞ்சத்தனம். உண்மையிலேயே சொண்டுகள் வற்றக் கொடுக்கப் போகிறாளா? ஓர் எழுத்துத்தானே. ஒரு மூவாயிரம், மூன்று லட்சம், மூன்று கோடி என்றால் என்ன குறைந்தா விடப்போகிறது? ஏதோ நான் கல்குலேட்டர் வைத்து எண்ணிப் பார்த்துவிடுவேன் என்று பயந்தது போல் முன்னூறு’ என்று எழுதி முடித்திருந்தாள்.

என் அம்மாவின் வாசனை மறந்துகொண்டு வந்தது. அதை ஞாபகத்தில் கொண்டுவருவதும் சிரமமாயிருந்தது. ஒருநாள் அரை யிருட்டில் ஒலிம்பிக் வட்டம் போல அவள் தன் தங்க வளையல்களை நிலத்தில் பரப்பிவிட்டு ஏதோ ஆலோசனையில் இருந்தாள். அந்த வளையல்கள் வெகு சீக்கிரத்தில் என்னுடைய பயணச்சீட்டுச் செலவுகளுக்கு மாற்றப்படும் என்பது எனக்குத் தெரியாது. வளையல்கள் இல்லாத கைகள் முற்றிலும் மாறி என் அம்மாவை அந்நியப்படுத்தின.

எனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது. பயண முகவர் தயாரித்த பாஸ்போட்டில் நடுங்கியபடி பிளேன் ஏறியதும், அப்பா முகத்தைத் துடைத்ததும், அம்மாவின் வளையல் இல்லாத கை அசைந்ததும், அக்காவின் அழுது வீங்கிய கண்கள் துடித்ததும் எவ்வளவு சீக்கிரத்தில் மறந்துபோனது.

என் சிந்தனை என்னை அறியாமல் சானல் மாறி ஆப்பிரிக்க பெண்ணின் வசம் வந்து நின்றது.

காய்ந்த சருகிலே நெருப்பு பற்றுவது போல சில பேரைக் கண்டதும் ஆயிரம் காலமாக அறிந்தது போல ஓர் உணர்வு வரும். இதற்கு தேசமோ, நிறமோ, மொழியோ தடையில்லை. அவளுடைய அனு போகம் என் பயத்தைத் துரத்தியது. உடல் கூச்சத்தைத் துறந்தது. இந்தக் கணத்துக்காகவே நான் படைக்கப்பட்டது போல உணர்ந்தேன். இதற்குச் சாட்சி அவளுடைய ஸ்பரிசத்துக்கு முன்போ, பின்போ எனக்கு ஒருவித குற்ற உணர்வும் தோன்றாததுதான்.

குலசிங்கத்தின் விசா இன்னும் தயாராகவில்லை. எனக்கும் அப்படியே என்று தினமும் செய்தி கொண்டுவந்தான். எனக்கு வயிறு கலங்கிக்கொண்டிருந்தது. இந்த நாட்டு சிறைச்சாலை பற்றி நான் மிகவும் தெரிந்து வைத்திருந்தேன். அங்கு போனவர்கள் மீள்வது அரிது. இதற்கு முன் வந்த குரூப்பில் ஒருவன் பிடிபட்டு இன்னும் அங்கேயே இருந்தான். அவன் ஒருவரையும் காட்டிக் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். ஆபத்தின் ஆழம் தெரிந் திருந்தது. ஆனாலும் ஒருநாள் தவறினால் இன்னொரு இரவு கிடைக்கக் கூடும் என்ற அற்ப ஆசையும் இருந்தது.

இந்த நேரத்தில் அந்தப் பெண் வேறொரு ஆடவனுடன் இருப் பாள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. என் வசம் இருந்த அந்த சொற்ப நிமிடங்களில் அவள் தன்னை ஒன்றும் மிச்சம் விடாமல் என்னிடம் ஒப்படைத்துவிட்டாள். அதில் ஒருவித சந்தேக மும் இல்லை. ஒரு வேளை அவள் வந்துவிடக்கூடுமோ என்று அடிக்கடி பார்த்தவாறே இருந்தேன்.

வேரோடு என்னை இழுத்து மாரோடு அணைத்து என் இனிப்புக் குவியலே’ என்று என்ன காரணத்தோடோ அழைத்தாள். ஒரு சொட்டும் மிச்சம்விடக்கூடாது என்பது போல என் வசம் இருந்த அத்தனை முத்தங்களையும் என்னைக் கேட்காமலே துடைத்து எடுத்துக்கொண்டாள். அவள் மிகச் சிறந்த நடிப்புக்காரியாக இருக்க வேண்டும்; அல்லது அவளுடைய பாலைவனத்து மனதில் ஈரளிப்பு எங்காவது ஒளிந்திருக்கவேண்டும்.

வீங்கியிருக்கும் மேலுதடை அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில் தனியாகக் கவ்வி நீண்ட நேரம் சுவைத்தேன். அவளை ஆச்சரியப் படுத்துவது கடினம். புறங்கையால் துடைத்தபடி அலட்சியத்தோடு திரும்பிச் சென்றாள்.

அந்த இதழ்களை நான் மற்றவர்களுக்காக விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

எங்கள் பயண முகவரின் கையாள் ஓர் இத்தாலியன். அவன் எங்களைக் கண்காணிக்க இரவு பத்து மணிக்குப் பிறகு, இரண்டு கதவு வைத்த காரில், ரகஸ்யமாக வருவான். தாட்சண்யம் இல்லாமல் எங்களிடம் கடுமையாக நடந்துகொள்வான். பேய்க்கு சாப்பாடு போடும் போது நீண்ட அகப்பை தேவை என்று சொல்வார்கள். அப்படியே இவன் வரும்போதும் நாங்கள் தூர அகன்றுவிடுவோம்.

இவனுடைய பெயர் அந்திரிய தாமனினி. அந்தப் பெயரிலே இரண்டு எழுத்துக்கள் மௌனமாக உட்கார்ந்திருந்தன. இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. தேசம் இல்லாமல், முகம் இழந்து திரியும் எங்களைப் போல அந்த இரண்டு அட்சரங்களும் ஒலியைக் கொடுக்கும் சக்தி பெறவில்லையென்றே நினைக்கிறேன்.

நாங்கள் பதினொரு பேர் விடுதியில் இருந்தோம். இதில் சோமா லியாப் பையன் ஒருவனும் அடக்கம். அவனுக்குப் பதினைந்து வயதிருக்கும். கோயில் சுவர் கலரில் கோடுகள் போட்ட நீளமான அங்கி ஒன்றை அணிந்திருப்பான். கர்வமானவன். ஐந்து நேர தொழுகையும் தவறாமல் செய்வான். பறவை இறைச்சி தொட மாட்டான்; அதைச் சாப்பிடும் எங்களை ஏளனமாகப் பார்ப்பான். இத்தாலியன் வரும் நாட்களில் மலர்ந்து போவான். இத்தாலிய பாஷை அவனுக்கு சரளமாக வரும். இவன் தயவினால் தான் நாங்கள் எப்போது பிளேன் வரும், எந்த நாட்டை எமக்கு தரப்போகி றார்கள் போன்ற மேலதிக விபரங்களை அறியக் காத்திருப்போம். ஆனால் அவனிடத்தில் விரும்பத் தகாத பழக்கம் ஒன்றிருந்தது. ‘கிட்டத்தட்ட’ என்ற வார்த்தையை அளவுக்கு அதிகமாக உபயோகித் தான். இன்று எத்தனை பேர் போவார்கள் என்று கேட்டால் ‘கிட்டத்தட்ட இரண்டு’ என்று பதில் கூறுவான்.

நெருப்புடன் எனக்கு நெருக்கமான சிநேகம் இருந்தது. கணப்பு கொழுந்து சுவாலைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கப் பிடிக்கும். கறுப்பும், நீலமும், மஞ்சளும், சிவப்பும் கலந்த இந்த தீ நொடிக்கொரு தடவை தன் உருவத்தை மாற்றிவிடும். காற்றுக்கும், சாம்பலுக்கும் இடையில் இருக்கும் ஒரு கணத்தில் வாழ்ந்து முடிந்துவிடுகிறது. என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்த நொடிப்பொழுதில் விமானப் பணிப்பெண் பயணிகளை அழைக்கும் வாசகத்துக்காகக் காத்திருந்தேன்.

அந்த வெள்ளை உடை அதிகாரிகள் மறுபடியும் என்னை நோக்கி வந்தது போலத் தோன்றியது. மிருகங்கள் சண்டைக்குத் தயாராகும் போது தலையை கீழே இறக்கி முன்னேறுவதுபோல இவர்களும் சிரசைக் கவிழ்த்து வந்தார்கள். என் இருதயம் விலா எலும்பைத் தொட்டுக்கொண்டு அடிக்கத் தொடங்கியது. கம்புயூட்டரில் undo விசையைத் தட்டுவதுபோல என் மனதும் விசைகளைத் தேடின. இரண்டு கமக்கட்டிலும் கட்டுக்கடங்காமல் வியர்வை பெருகி, நீலமும், வெள்ளையுமான நைல் நதிகள் ஓம்டுர் மானில் கூடுவது போல என் நாபிக்கமலத்தில் கலந்தன. நான் கண்களை கீழே இறக்கினேன். அப்படியும் நாலு கறுப்பு சப்பாத்துக்கள், லேஸ்கள் சரி அளவில் கட்டப்பட்டு, என்னைக் குறிவைத்து வருவது தெரிந்தது. வெளிக் காற்றை சுவாசிக்கும் அவகாசம் கிடைத்த அந்த கடைசி நிமிடத்தில் என் கண்முன்னே அப்பாவோ , அம்மாவோ, அக்காவோ காட்சியளிக்கவில்லை; மகேஸ்வரியும் தோன்றவில்லை. பாம்பு கேசப் பெண்தான் தோன்றினாள்.

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *