பிராந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 7,985 
 
 

ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்கு சீலம். வேலை நடக்கும்போது வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும் துவர்த்து பிற சமயங்களில் தோள்மீது கிடக்கும் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கங்களிலும் கண்டமாலை போலவோ. கல்யாணம், சடங்கு, பால்காய்ச்சு, சீமந்தம் எnanji4 ன்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் வெளுத்து மடித்ததாக இருக்குமே தவிர வேறு விசேடமான ஆடை அணிகலன்கள் கிடையாது. கேடயம் போன்ற மோதிரங்கள், தவில் வித்வான் அணிவது போன்ற நீண்ட சங்கலிகள், கடயங்கள், காப்புகள், ஆனைமுடி வளையல்கள் எதுவும் புகுந்திருக்கவில்லை. புகுந்திருந்தாலும் கூட சம்சாரி அதெற்கெல்லாம் எங்கே போவான்? காதில் சிவப்புக்கல் அல்லது வெள்ளைக்கல் கடுக்கன்களை முதியோர் அணிந்திருந்தனர். பேனாக்கத்தி, வெற்றிலை பாக்குமடக்கு, பொடித்தடை என்று அவரவர் உபயோகம் கருதியவை வேட்டியில் முந்தியில் இருந்தன. அவை அந்தப் பிரதேசத்தின் ஆடவர் அணிகலங்கள் என்று சொல்லலாம். தொள தொளத்த சட்டைகளை ஒரு சிலர் மட்டுமே தயங்கித் தயங்கி அணிந்தனர். உத்தியோகம் பார்ப்பவர்க்கு வேறு வழியில்லை.

ஆனால் எந்தக் கூட்டத்திலும் தனியனாய்த் தென்படுவார் மந்திரமூர்த்தி. ஒரு குஜராத்தி பனியா போல உடையலங்காரம். அரையில் பஞ்சகச்சம் வைத்து உடுத்த பத்து முழ வேட்டி. முழுக்கைச் சட்டை. கழுத்தில் மணிக்கட்டில் பளபளத்த பொத்தான்கள். அதன்மேல் மூடிய கழுத்துக் கறுப்புக் கோட்டு. தலையில் முன்ஷி தொப்பி. கோட்டுப் பாக்கெட்டில் செருகிய நீல, சிவப்பு நிற ஊற்றுப் பேனாக்கள். பார்வத்தியக்காரருக்கோ, தகசீல்தாருக்கோ, ஜில்லா கலக்டருக்கோ சமர்ப்பித்த மனுக்களின் நகல்கள். எப்போதும் மகஜர் எழுதத் தேவையான வெள்ளைக் காகிதம், கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப், மூக்குக் கண்ணாடி…

இதனாலெல்லாம் ஒரு மனிதரைப் பிராந்து என்று அழைத்து விட முடியுமா? அது ‘அம்மணங்குண்டு ராச்சியத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது போலல்லவா? உள்ளூர்க்காரன் மட்டுமல்லாமல் அந்தப் பக்கமுள்ள பிடாகையில் அவரைப் பிராந்து எனப் பெயர் சூட்டி வழங்கியதற்கு வேறு காரணங்களும் உண்டு.

மந்திரமூர்த்தி 1930-ம் ஆண்டில் திருவிதாங்கூர் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.(ஆனர்ஸ்) கணிதம். அப்பாவுக்கு ஒரே பிள்ளை. ஐந்தாறு ஏக்கர் நெல்வயலும் குடியிருக்க தட்டட்டி போட்ட வீடும் சுகுகாட்டுப் பக்கம் தென்னந்தோப்பும் செண்பகராமன் புதூரில் கடலை விளையும். சொந்தப் பயிர்தான் என்றாலும் வயலில் இறங்கி உழும் நிர்ப்பந்தம் கிடையாது. வரப்பில் குடையைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அப்போதும் உடையலங்காரத்தில் மாறுதல் கிடையாது.

சமஸ்தானத்தில் பொறுப்பில் இருந்த சுதீந்திரம் தாணுமாலைய சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீகாரியம் வேலை கிடைத்தது. பிறகு தெரிசனங் கோப்பு மங்களா வீட்டில் கல்யாணமும் ஆயிற்று. வில்வண்டு கட்டிக்கொண்டு அவர் வேலைக்குப் போகும் கம்பீரம் காளைகளின் கழுத்துமணியில் தெரியும்.

மார்கழி மாதம் தாணுமலையன் சாமி தேரில் காங்கிரஸ் கொடி கட்ட வேண்டும் என்று எழுந்த போராட்டம் வசக்கேடாகத் திரும்பி, தேர்நிலைக்கு நின்றபின் கேட்கும் கம்பக்கட்டு ஓசைபோல, துப்பாக்கிகள் சரமாரியாகச் சுட்டன. அவிழ்ந்த புன்னைக்காய் மூட்டையாய்ச் சிதறிய சனம். மிரண்டு ஓடிய வண்டிக்காளைகள். மிதிபட்டுச் செத்தவர். திகைத்து அலைந்த சிறுவர். தோளுயரக் கட்டை மண்ணை நிசாரமாகத் தாண்டிய கிழடு கட்டைகள். கலிங்கப் போர்க்களம் போல் எங்கும் அவலம் நிறைந்த காற்று.

அன்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தவர்தான் மந்திரமூர்த்தி. பிறகு அந்த கோயிலினுள் அவர் நுழைந்ததே இல்லை. வேலையைத் துறந்தாரே தவிர வேலைக்குப் போகும்போது அணிந்த உடையைத் துறந்தாரில்லை.

அப்பாவிடம் யார் யாரோ கேட்டார்கள் –

“மந்திரம் ஏன் வேலையை விட்டுட்டான்?”

அவர் சொன்ன ஒரே பதில் –

“அவனுக்கு பிராந்து புடிச்சிற்று”

மந்திரமூர்த்தியின் நடவடிக்கைகளும் அதற்குத் தகுந்தாற் போலத்தான் இருந்தன.

ஊரில் காசிலிங்கனுக்குக் கோயில் ஒன்று உண்டு. சுற்றுப்பிரகாரமும் கோபுரமும் விமானமும் கொடிமரமும் தெப்பக்குளமும் தேரும் வாகனங்களும் கொண்ட கோயில். பிரகாரமெங்கும் பூச்சிமுள்ளும் மஞ்சணத்திப் புதர்களும் பேய்த்துளசியுமாகக் காடடைந்து கிடந்தது. திருவிழாவுக்கு கொடி ஏறுவதற்கு முன்னால் நான்கு ஆட்களை சொந்தக்காசில் சம்பளத்துக்கு விட்டு புதர்களை வெட்டி மாற்றித் துப்புரவு செய்தது பிராந்து.

திருக்கல்யாணத்துக்கு கம்பராமாயணம் வாசிக்க வந்த கள்ளியங்காட்டுக்காரருக்கு கம்பளி சால்வை வாங்கிப் போர்த்தினார்.

காசிலிங்கன் சன்னிதித் தெருவில், தெரு வடக்கே திரும்ப யோசிக்கும் இடத்தில், தெருவின் மண் மட்டத்துக்கு மேலே, பெரிய பிரம்புத் தட்டுக் கூடையைக் கவிழ்த்தாற் போல, ஒரு பாறை. நீண்ட காலமாகத் கிடந்தது. ஒருவேளை காசிலிங்கனுக்கும் மூத்ததாக இருக்கலாம். பூமியினுள் புதைந்து போயிருந்த பெரும்பாறையின் முகடாக இருக்கலாம்.

வெயிலுக்கும் மழைக்கும் காற்றுக்கும் அலைக்கழிந்து, செம்பழுப்பு நிறத்தில், யாருக்கும் தொல்லை தராத துருத்தலாக. மக்களுக்குப் பழகிப் போயிருந்தது அதன் கிடப்பு. வண்டிகள், சைக்கிள்கள், கால்நடைகள் எல்லாம் ஒதுங்கிப் போயின. வாகனம் சுமப்பவருக்கும் பாடை சுமப்பவருக்கும் கூட கால்களில் அதன் இருப்பு பதிவாகி இருந்தது.

ஒருநாள் காலையில் கோயிலுக்குப் போய்விட்டு பிராந்து திரும்பிக் கொண்டிருக்கையில், மேய்ந்துவிட்டுத் திரும்பிய எருமைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியபோது, பாறை அவர் காலில் தட்டியது. அவர் மீது அதற்கு ஒரு பகையும் இல்லை. பிராந்து சற்று நேரம் நின்று பாறையை ஒரு விமர்சனக் கூர்மையுடன் அவதானித்தது. இப்படி எத்தனை பேர் கால்களில் அது தட்டியிருக்கும் என்று தோன்றியது போலும், அரைமணிக்கூறில் திரும்பிய அவர் பின்னால் தோளில் கூடம் சுமந்து கல்லாசாரி ஒருத்தர் வந்தார்.

உச்சிக்காலம் கழிந்து சாத்திய கோயில் கதவு சாயரட்சைக்குத் திறந்தபோது, காசிலிங்கனுக்குப் பாறையைக் காணாமல் திகைப்பார் இருந்தது.

ஊர்ப் பொதுக் காரியங்களுக்கு பெரிய குடவண்டிக்கார மூத்தபிள்ளைகள் ஐந்தும் பத்தும் எழுதும் போது நன்கொடை என்று நூற்றியோரு ரூபாய் எழுதும் பிராந்து.

அவர் கடைத்தெருவில் நடந்து போகும்போது எவனும் பசி என்று சொல்ல எதிரே வந்தால் ராமையாபிள்ளை காப்பிக்கடையில் தன் பெயரைச் சொல்லி சாப்பிடச் சொல்லிவிட்டுச் போயிற்று.

எப்போதும் ஒரு சிரித்த முகம். யாரிடமும் சினந்து பேசியது இல்லை. நெற்றியில் சந்தன வரையும் குங்குமப்பொட்டும் பொங்கும் சிரித்த பல்வரிசையும். பேச்சில் முரண்கள் குளறுபடிகள் கிடையாது.

ஒரு திருப்பு டவுன் பஸ் ஊருக்குள் வராவிட்டால் அதற்கு ஒரு மகஜர். புறம்போக்கு மரத்தை எவனும் வெட்டினால் அதற்கு ஒன்று. தெப்பக்குளத்தில் மீன் பிடித்தால் ஒன்று. உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் வாத்தியார் வட்டிக்கு கடன் கொடுத்தால் ஒன்று என. எந்த மகஜரும் அவர் கையொப்பமும் விலாசமும் கொண்டுதான் போகும். மொட்டைப் பெட்டிஷன் ஆசாமி அல்ல அவர். ஆனால் நேற்றுப் பிறந்து, சரியாக கையில் பிடித்த மோளத் தெரியாத பயல்கள் கூட அவரைப் பிராந்து என்றுதான் அழைத்தனர்.

அப்போது நாடெங்கும், தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் தாசர்கள் திருவிழாக்களில் இசைத்தட்டு நடனம் அறிமுகம் செய்தனர். ஓரியன்டல் டான்ஸ் என்ற பெயரில். முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

பிராந்து தற்செயலாகத்தான் அந்தப் பக்கம் வந்தது. சற்று நேரம் நின்று நிதானித்துப் பார்த்தது. கிழட்டுக் கண்களில் கோபம் புகை பறக்க வெறித்துப் பார்த்தது. ஆண்கள் வரிசையும் பெண்கள் வரிசையும் பிரியும் நடைபாதையோரம் அவர் மனைவி பக்கத்து வீட்டுக்காரியுடன் உட்கார்ந்து ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெடுவெடென நடந்து போனது பிராந்து. பெண்டாட்டியின் தோளைத் தட்டியது. கோபம் குரலில் தெறித்தது.

“எந்திரிச்சு வாட்டி… வெக்கங்கெட்டுப் போயி பாத்துக்கிட்டு இருக்கா… மானங்கெட்டதுகோ ஆடுக ஆட்டத்தை… எந்திரிச்சு வா…”

பிராந்துக்கு நல்ல வெண்கல மணியின் நாதமுள்ள குரல். கூட்டம் சற்று சலசலத்துத் திரும்பியது. கர்ஜித்துக் கொண்டே பெண்டாட்டியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தது.

“நல்ல மானமுள்ள சம்சாரிகளாடா நீங்க? ஆட்டம் நடத்துகான் ஆட்டம்”

கூட்டம் லேசாகக் கலைந்த்து. நிறையப் பெண்டுகள் எழுந்து வீட்டுக்கு நடந்தனர். இனிமேல் நின்றால் குறைச்சல் என்று கொஞ்சும் ஆண்பிள்ளைகளும் தொடர்ந்தனர். பின்வரிசையில் இருந்து விசில்களும் தொடர்ந்து ஊளைகளும். கூட்டத்தில் பாம்பு நுழைந்தது போல் ஆயிற்று, பின்பு அன்று இசைத்தட்டு நடனம் நின்று போயிற்று.

என்றாலும் மந்திரமூர்த்தியின் பெயர் ‘பிராந்து’ என்பதில் இருந்தது மாறியதாகத் தெரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *