புரந்தரர் காலனியைப் பாம்பு வந்து சேர்வதற்குள் படிஞாயிறு மலைகளுக்குள் இராத்தங்கப் புகுந்துவிட்டது. நல்ல முனைப்பான வைகாசி வெயில். மழைகண்டு ஆயின மாதங்கள். பாவி அரசு செய்தால் பருவமழை பொழியாது, செல்லாது இயல்பாக இயற்கை, கசங்கிக் குலையும் கானுயிர் என்பது கார்க்கோடக புராணம். பசிய புல் எலாம் காய்ந்து சருகாகி, ஊர்வன, பறப்பன வருந்தி உயிர் தரித்துக் கிடந்தன. குடையுமில்லை வெயில் தாங்க, பெப்ஸியும் இல்லை தாகம் தீர்க்க.
புதர்கள் அடர்ந்து கிடக்க வேண்டிய செயற்கைப் பூங்காக்களில் காய்ந்த சுள்ளி, சருகு, பாலிதீன் உறை, நசுங்கிச் சிதைந்த தண்ணீர் போத்தல், தண்ணீர் வாராக் குழாய், கழுவப்படாத கழிப்பிடம். வரும் வழி எல்லாம் மிகுந்த துன்பத்தை உணர்ந்தது பாம்பு. அசைந்து அசைந்து, வழுக்கி ஊர்வதற்குச் சற்றும் தோதில்லாத தார்ச்சாலை. பகலெல்லாம் வாகன நெரிசல், புகை, டீசல் ஒழுக்கு, கட்செவியையும் சிரமப்படுத்தும் கனல் காற்று. எங்காவது பதுங்கிக்கிடந்து, நடமாட்டம் ஓய்ந்த பிறகு, பேய் உறங்கும் சாமத்தில் ஊர வேண்டியது. ஆழாக்கு அரிசி பொங்கி வச்சிருக்கேன் திண்ணுக்கிட்டுப் போடி மாரியம்மா என அதிகாலை அதட்டல்கள் வேறு, ஒலிபெருக்கிகளில்.
பாம்பின் முதுகுவலி முடுக்கமாக இருந்தது. இரவு உணவாகச் சுண்டெலி, இளைத்துக் களைத்த தேரை, பெயரறியாச் சிறுகுருவி முட்டை, பல்லி முட்டை… மழைக்காலமும் ஊர்ப்புறமுமாக இருந்தால் கொழுத்த மாக்கிறித் தவளை, நாமத் தவளை, பச்சைத்தவளை கிடைக் கும். தமிழ் நாட்டு நகர்ப்புறங்களில் கிணற்றுத் தவளை என்றொரு இனம் வாழ்ந்தாலும் பாம்பினத்துக்கு உணவன்று என விலக்கப்பட்டது என ஈசாந்தி மங்கலம் குளக்கரைகண்ட பொய்சொல்லா மெய்யன் பண்டாரத் தார் கல்வெட்டு அகம்.23, புறம்.44 கூறுகிறது.
ஊர்ப்புறங்களில் ஆரோக்கியமான எலி அல்லது பெருச்சாளி கிடைக்கும். ஊரும் தளர்வு போக்க நாட்டுக் கோழி, வெள்ளை லகான் கோழி முட்டை; மரமேறத் தெரிந்தால் கொக்கு, புறா, மைனா முட்டை கள். பால் கூட்டுறவு சங்கக் கறவைக்காரர் எழும்முன் ஊர்ந்து போனால் தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் நாட்டுப் பசுக்களும் காராம் பசுக்களும் ஜெர்ஸிப் பசுக்களும் சிந்திப் பசுக்களும், நாட்டு, டெல்லி முர்ரா எருமைகளும் காம்பு சுரந்து நிற்கும்.
பசு மடியில் பால் குடிக்க ஆதி முதற் பாம்பு எங்ஙனம் கற்றுக் கொண்டதெனத் தெரியவில்லை! முடிவுறாத பல்கலை ஆய்வு வெளி வந்தால் தெரியலாம். ‘பசும்பாலை மனிதன் குடிக்கலாமெனில் பாம்பு குடிக்க அனுமதி இல்லையா?’ பாம்பின முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்களிலும் அரவக் கலை இலக்கியப் பெருமன்ற வாதங்களிலும் கேட்கிறார்கள் உரத்து.
காமுற்ற மானுடப் பெண் முலைக்காம்பில் பாம்பு பாலருந்திய, மோகம் தீர்த்து உடலுறவு கொண்ட செய்திகள் தொன்மங்களிலும் இதிகாசங்களிலும் பின்நவீனத்துவக் கதையாடல்களிலும் காணக் கிடைக்கின்றன. தொல் சிற்பங்களில் யோனியாகத் தன்னைப் பாவித்தோ அல்லது நீள் தவளை இனம் என நினைத்தோ நாகங்கள் குறி கவ்வும் காட்சிகள் உண்டு,
முகவரி தேடிப்பிடிக்க மிகுந்த சிரமப்பட்டது. பாம்புகளின் காலக் கணக்கில் பல்லீராண்டுகளுக்கு முன்பு, மலையடிவாரத்து பங்களாவில் வாழ்ந்திருந்தார் பேராசிரியர் கலாநிதி பரமார்த்தலிங்க மாயக்கூத்தன். மாக்கிறித் தவளைக் கறியின் சுவை நாவில் நீர் சொட்ட, பிளவுபட்ட நாக்கைத் துழாவி நீட்டி, துரத்திக் கொண்டு ஊர்ந்ததில், மாயக்கூத்தனின் படிப்பறைக்குள் நுழையும்படி ஆயிற்று. ஓம் என்றுரைத்தன சங்கு, ஆம் ஆம் என்றுரைத்தன மகுடி.
மாக்கிறி தின்றால் சின்னாட்கள் இரை எடுக்க வேண்டாம். புற்றுக் குள் அறிதுயிலும் ஆழ்துயிலும் கொள்வதை விடவும் சுகமாக இருந்தது பாம்புக்கு பேராசிரியரின் புத்தக அடுக்குகள். சமீபத்திய சில பத்தாண்டுகளில் எந்த நவீன இலக்கியமும் பிரித்துப் பார்த்திருக்க மாட்டார் போலும். பின்னட்டைக் குறிப்புக்கள் கூடப் படித்திருக்க மாட்டார். மேலும் சமீபத்திய சில பத்தாண்டுகளில் எந்தப் புதிய புத்தக மும் வாங்கி இருக்கவும் மாட்டார். பல புத்தகங்களில் வேறுவேறு கல்லூரிகளின் முத்திரைகள் இருந்தன. அத்தனை கல்லூரிகளிலும் வேலை பார்த்தவரா அல்லது ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்போன போது நவட்டிக்கொண்டு வந்தவையாஎனத் தெரியவில்லை. விலைக்கு வாங்கி இருக்க நியாயமில்லை. ஏனெனில், பாடப் புத்தகங்களுக்கு வெளியே அந்த இனத்தவர் பலர் புத்தகங்கள் வாங்குவதில்லை. மொழி இயல், இலக்கியவியல், சமூகவியல், பெண்ணிய, தலித்திய, தமிழிய, பின்னவீனத்துவ புத்தகங்கள் நிறையக் கிடந்தன. எந்தக் காலத்திலும் படிக்கவே போகாத புத்தகத்தை இரவல் வாங்கினால் என்ன, நவட்டிக் கொண்டு வந்தால் என்ன? அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் வரலாறு இருந்தது, மெய்யியல் இருந்தது, அழகியல் இருந்தது. அவை கூட இல்லாவிட்டால் பிறகென்ன கலாநிதி?
குளிர்ச்சியும் திட்பமும் கொண்டவையாக இருந்தன எம்ஃபில், பி.எச்.டி. ஆய்வுத் தொகைகள். ‘நகிமோதாம்பாகாதா புனைவுத் தளமும் கிரேக்க பார்ஸித் தியேட்டர்களின் செல்வாக்கும்’ எனும் ஆய்வேட்டைப் பேராசிரியர்மாற்றுப் பல்கலைக் கழகத் தேர்வுக் குழுவினராக வாசித்துக் கொண்டிருந்த அடையாளங்கள் இருந்தன. பென்சில் கோடு, மடிந்த காகித மூலை, சிந்திய தேநீர்த் துளிகள் என. தேநீர்த் துளி என்பது உடன் போக்குப் பெண்பாலரை கிடத்திப் புணர்ந்த விந்துத்துளிகளாகவும் இருக் கலாம் என்மனார் புலவ.
சுருண்டு, படம் சுருக்கி, உறங்கிக் கிடந்த நேரம் போக, மீதி நேரங் களில் பாம்பு ஆய்வுத் தொகைகளை அலசிப் பார்த்தது. திறனாய்வாளர், கிணற்றுத் தவளை நாட்டுப் பேராசிரியர், கலாநிதி, குமரேச குத்தா லிங்கம் கோபக்குரலில் எழுப்பும் வினாகட்செவியில் உறைத்தது. உலகத் திலுள்ள பாம்புகள் அனைத்துக்கும் தமிழ் தெரியுமா, அதிலும் கள்ளியங் காட்டுத் தமிழ் தெரியுமா, ஆய்வுக் கட்டுரை எழுதப்படும் பல்கலைக் கழக மொழி தெரியுமா என.
பாம்பு சிரித்துக்கொண்டது. பாம்புகளின் சமூகத்தில் தான் பி.ஆர்க் பட்டம் பெற்ற பொறியாளர் என்றோ, வேற்றினக் குழுக்களின் புற்றுக் கட்டுமானங்களில் பி.எச்.டி. ஆய்வு மேற்கொண்டிருப்பதோ, விரிவான வாசிப்பும் புலமையும் பலகருத்தரங்குகளில் கட்டுரை வாசித்த அனுபவ மும் கொண்டவன் என்பதோ, திறனாய்வாளருக்கு தெரிந்திருக்க நியாய மில்லை .
பேராசிரியர், கலாநிதி, நாகவேலுக் கரையாள முத்துத் தாண்டவர் எழுதிய திராவிடப் பாம்புகளின் மொழி வரலாறு, பாகம் 43, பக்கம் 1856-ல் குறித்துள்ளபடி பாம்பு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் பொது வான ஒற்றுமைகள் இருப்பதும், உலகப் பாம்பு மொழிகள் 21, 497-லும் அநேகம் தமிழ்ச்சொற்கள் காணக்கிடைப்பதும், உலகப் பாம்புகள் அனைத்துமே தமக்குள் தமிழில் பேசினால் புரிந்து கொள்ளவும் பதில் பேசவுமான பயிற்சி கொண்டவை என்பதும் பாம்புகளின் தொல் குடி களில் ஒன்றான ஆதி சேடக்குடி மாத்திரம் சிறப்பான வடமொழிப் பயிற்சி கொண்டது என்பதும் சைவப் பாம்பினத்துக்கும் வைணவப் பாம்பினத்துக்கும் அன்று மூண்ட போர் இன்று வரை ஒயவில்லை என்பதும் இந்தியா-பாகிஸ்தானியப் பகையுணர்வுக்கு அது எவ்விதமும் இளைத்ததில்லை என்பதும் சமீபகாலமாய் சினப்பாம்பரசு ஒத்து தீர்ப்பு முயற்சியில் முனைப்பாக இருக்கிறது என்பதும் அறிந்திருக்க வேண்டிய சமகாலச் செய்திகள்.
மேலும் ஸ்ஸ், ஷ்ஷ், சுசு, ஹஹ, ஊய் ஊய் என ஒற்றைப் படையிலோ, இரட்டைக் கிளவியிலோஅமைந்த அத்தனை சொற்களும் அது எந்த மனித மொழியில் இருந்தாலும் பாம்பு மொழியிலிருந்து சென்ற திசைச் சொற்கள்தாம் என்பதும் ஐயம் திரிபற நிறுவப்பட்டுள்ள கருதுகோள். மேலும் பழந்தமிழ் இலக்கியங்களில் பாம்ப், பணம், நல்லது, அரவம், அரவு, நாகம், கட்செவி, சிவசங்காபரணம் என்றெல் லாம் புழங்கும். ஆயிரக்கணக்கான இடங்களை மேற்கோள் காட்ட இயலும். எகிப்து என இன்று வழங்கப் பெறும் தேசத்தில் நைல் நதிக்கரை யில் அமைந்துள்ள பாம்பினக் கூட்டுப் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று பாம்பு மொழிகளில் புழங்கும் தமிழ்ச் சொற்களை ஆய்வு செய்து அகராதி தொகுத்து வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாக்கிறித் தவளை செரித்த பிறகு பாம்புக்கு இளம்பசி எடுத்தது. இளம்பசிக்கு அருந்தவென நூடுல்ஸ், பிட்ஸா, பஜ்ஜி, போண்டா, ச்சீஸ் சாண்ட்விச், கட்லெட், சமோசா, கச்சோரி, கடலை, பயிறு சுண்டல், பழங்கள் என ஏதுமில்லை . பேராசிரியரோ அறுகம்புல் சாறு ஆசாமி. போன பிறவியில் புல்லாக நேரடியாகவே தின்றிருப்பார். எனவே வெயில் தாழ்ந்த பிறகு வெளியே புறப்படலாமா அல்லது மேலும் ஒன்றி ரண்டு நாட்கள் ஆய்வுகளை மேற்பார்வை இடலாமா என பாம்புக்கு மயக்கமாக இருந்தது. அன்று பாம்பு வாசித்துக்கொண்டிருந்த, “காந்தீயம், பெரியாரியம், அண்ணாயியம், பேரீயம், தோரீயம், வாரியம், காரீயம் – ஒரு கட்டுடைப்பு” எனும் ஆய்வு மிகுந்த ஈர்ப்பு கொண்டதாக இருந்தது.
எகிப்திய அரசகுமாரிகளின் மணிமுடிகளை அலங்கரித்த வம்சா வளியில் வந்த பாம்புக்கு தனது கல்விச் செருக்குக்கு சவால் விடுவதாக வும் இருந்தது ஆய்வு, அது இனமான கௌரவப் பிரச்னை. ஆய்வில் மேற்கோள் காட்டப்பட்ட பெயர்களில் பல – அவை பாம்பினக் குழுத் தலைவர்களா என்ற சந்தேகம் இருந்தது. ஐயத்துக்கு இடமான பகுதிகளை வாயில் பென்சில் கவ்வி கோடு போட ஆரம்பித்தபோது, பேராசிரியரின் ஆய்வு மாணவன்கையில் மதுக்குப்பிகளுடன் அறையினுள் நுழைந்தான். குருதட்சணையாக இருக்க வேண்டும் என நினைத்து, முக்கால் சுருளாக நின்று என்ன பிராண்ட் மது எனத் தெரிந்து கொண்டபின் பத்தியை விரிக் கலாமா அல்லது உருவினாற்போல புத்தக அடுக்குகளினுள் நுழைந்து விடலாமா என நிதானிப்பதற்குள், ஆய்வு மாணவன் பயத்தில் ‘ழாம்பு… மாம்பு…” என நாக் குழறினான். நல்ல வேளையாக மேசை மேல் நின்ற மதுக்குப்பிகள் உடையவில்லை.
பேராசிரியர் கொழும்புக்குடை கொண்டு தாக்குவார் என எதிர் பார்க்கவில்லை. சிறு மூளையில் அடிபட்டு, நினைவு பிசக, பாம்பு மயங்கித் துவண்டது. மூச்சிருக்கிறதா என்று கையால் உணர்ந்தறிய பேராசிரியருக்கு உரம் இல்லை . முறத்தால் அடி வாங்கிய புலியானால் கூட யோசிக்க வேண்டியது வராது. பாம்பென்றால் படை அஞ்சும்.
கொழும்புக் குடையடி கூட அனாவசியம். ‘விளிம்பு நிலைப்பாம்பு களும் சில வரலாற்றுத் தீர்வுகளும்’ என்று ஒரு கட்டுரை வாசித்திருந் தாலே போதுமானதாக இருந்திருக்கும். பேராசிரியரின் மனைவி சொன் னாள் – குழி தோண்டி பாம்பைப் புதைத்து பாலூற்ற வேண்டும் என்றும் காளஹஸ்தி சென்று ராகு – கேது ப்ரீதி செய்ய வேண்டும் என்றும் அவசர அடியாக சோமனூர் வாழைத் தோட்டத்து ஐயன் கோயில் போய் வர வேண்டும் என்றும். பேராசிரியருக்கு அதில் நம்பிக்கை இல்லை; மேலும் சமயச் சொற்பொழிவுகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர் கடவுள் மறுப்புக் கழக சார்பாளராக இருந்தவர்.
கோல்கொண்டு தூக்கி, சுற்றுச் சுவருக்கு வெளியே புதர்களில் வீசினார் பாம்பை. பார்த்தீனியமும் எருக்கலையும் ஊமத்தையும் சீமைக் கருவேலம் புதர்களும் காட்டாமணக்கும் குருக்கும் தொட்டாவாடியும் நொறிஞ்சானும் மஞ்சணத்தி மரங்களும் காட்டுத் துளசியும் அடர்ந்த புறம்போக்கு. காகங்களின் கண்ணில் படாமல், எறும்புப் படைகளின் நுகர்வில் பதியாமல் சில மணிக்கூர் கிடந்த பிறகு பாம்புக்கு நினைவு மீண்டது. என்றாலும் நகரவும் அசையவும் இயலவில்லை . தண்டுவடத் திலும் செம்மையான அடி. தொழிலாளர் காப்பீட்டு மருத்துவ வசதி இல்லை. மெடி-க்ளெய்ம் இல்லை. மேலும் ஜெஸ்லோக், பீச்கேன்டி, அப்போலோ, ஏஐஐஎம்எஸ் போன்ற புகழ் பெற்ற மருத்துவமனைகளில் பாம்புகளுக்கு நட்டெலும்பு அறுவை சிகிச்சை செய்வார்களா என்றும் தெரியவில்லை . ஆங்கே அமைச்சர்களுக்கும் இ.ஆ.ப.களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்குமே இடம் கிடைக்க சிரமம் உண்டு. முன்னாள் போலீஸ் மந்திரி கக்கனையே வராந்தாவில் கிடத்திப் போட்ட மருத்துவமனைகள் கொண்ட நாடு இது. சிங்கிரி பாளையம், தெலுங்குபாளையம், புத்தூர், காட்டுக்கடை என்ற எலும்பு முறிவு சிகிச்சை மையங்களோவெனில் வெகுதொலைவில் இருந்தன.
வலியில்லாத தலைப்பாகம் வால்பாகம் மட்டும் அசைத்து, உயிர் இருப்பதைக் காட்டிக்கொண்டு, பாச்சா பல்லிகளைத் தின்று சின்னாட் கள் உயிர்வாழ்ந்தது. சாதிக்கு அடுக்காத செயல்தான் என்றாலும் இருத்தல் அவசியமானது.
பக்கத்துப் புற்றிலிருந்து மலைச்சாதிப் பெண் பாம்பொன்று, அதன் துயர் தரிக்க இயலாமல் தனது புற்றுக்கு நகர்த்திச் சென்றது. தனக்குத் தெரிந்த பச்சிலைகளைக் கடித்து வந்து ஊட்டியது. பாதி விழுங்கிய தவளைகளைத் தின்னக் கொடுத்தது. புண்ணில் எறும்பு அரிக்காமல் இருக்க, பச்சிலை மென்று உமிழ்ந்தது. முதுகு வலி தொந்தரவு செய்யாத படி மலையாளக் கலவி செய்தது.
வைப்பாட்டிப் பாம்பு இரைதேடப் போயிருக்கையில் தனியாய் சுருண்டு கிடந்து யோசிக்கும் வேளையில் வஞ்சம் திரண்டு விஷமாய் ஊறியது, அடிபட்ட அரவத்துக்கு. காயம் ஆறி, முதுகில் ஊனத்துடன் பாம்பு, புற்றை விட்டு வெளிப்போந்தது. வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல, பாம்புக்கு அடைக்கலம் கரையான் புற்று. கலாநிதி பரமார்த்த மாயக்கூத்தன் தன்னைப்புடைத்து வீசியதற்கு வஞ்சம் தீர்த்து, போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்ற கறுவலுடன் பாம்பு, வீட்டின் வெளிச்சுவரைச் சுற்றிய புதர்களில் ஊர்ந்து திரிந்தது. காலம் எவருடைய சேவகன்?
பங்களாவில் வேற்று மனித வாடை. பேராசிரியர், நல்ல விலைக்கு வீட்டை விற்றுவிட்டு, பல்கலைக்கழகம் பக்கத்தில் இருந்த புரந்தரர் நகருக்குப் பெயர்ந்திருந்தார். தபால் நிலையத்தின் அருகில் வாழும் பாம்பிடம் விசாரித்து, பேராசிரியருக்கு வந்து ரீ-டைரக்ட் ஆகும், தமிழினத்தை முன்னேற்றப் பாடுபடும் வாரிகை, மாசிகைகளில் முகவரி படித்து, பாம்பு புரந்தரர் நகருக்கு ஊர்ந்தது.
பாம்புக்கு பாலும் கசந்தது. புற்றுப் படுக்கையும் நொந்தது. குடியி ருப்பை அடைந்தபோது, பேராசிரியர் வீட்டுத் தோட்டத்தில் குடியிருந்த பாம்பு சொன்னது – சோமாலியா நாட்டில் பூர்வகுடிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிற்றுவிக்க ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் போய்விட்டார் என. தன் வாழ்க்கையின் பண்பும் பயனுமே தமிழ்ச் சேவை செய்வது என்று முடிவு கட்டிய பாம்புக்கு எதிர்காலம் இருண்டு காட்சி தந்தது. காதருகில் ஷெனாய் வாத்தியத்தின் துக்கம் பொதிந்த ஊதல்.
பாம்பு மலைத்துப் போயிற்று. பாம்புகளுக்கு பாரத நாட்டில் பாஸ் போர்ட் தருவதில்லை, பாலைவன நாட்டுக்குப் போக கள்ளத் தோணியும் இல்லை. மும்பை, ஃப்ராங்ஃபர்ட், கோபன் ஹேகன், கெய்ரோ வழியாகச் செல்லும் விமானங்களில் நுழைவதற்கு கடுமையான பாது காப்புத்தடைகள் இருந்தன. மேலும் அந்தப் பாம்பு நினைத்தபடி பயணம் செய்ய மத்திய அமைச்சரோ, கிரிக்கெட் வீரரோ, டெரரிஸ்டோ , சினிமா நடிகரோ, தொழிலதிபரோ, கடத்தல்காரரோ, கலைத்தூதுவரோ இல்லை.
நாகராசனையும் நாகராணியையும் அவர்களின் வழித்தோன்றல் களையும் நினைத்துத் தொழுத வண்ணம் பாம்பு வஞ்சம் வளர்த்துக் கிடந்தது. சாப்பாட்டுக்குப் புத்திமுட்டு இல்லை. விமான நிலையத்தைச் சூழ்ந்திருந்த சதுப்புக்களில் நிறைய மூடத் தவளைகள் கிடைத்தன.
ஐந்தாண்டுகள் சென்று, தனது புதிய மூன்றாந் தாரம் சோமாலிய மனைவியுடனும் புல்கானின் அல்லது இந்தர் குமார் குஜ்ரால் தாடி யுடனும் பேராசிரியர் ஊருக்கு வந்த போது, தமிழறிஞர் போன்ற தோற்றம் இருந்தது. பாம்பு வயோதிகத்தில் இருந்தது. மூவ் போட் டாலும் முக்கூட்டுத் தைலம் தடவினாலும் சரியாகாத முதுகுவலி. பகலில் சூரிய ஒளிக் கூச்சத்தில் கண் தெரிவதில்லை . இரவில் மாணிக்கனை உமிழ்ந்து அந்த ஒளியில் இரை தேட வேண்டியதிருந்தது. உடல் நீளம் குறுகி கழுத்துப் பக்கம் சின்னச் சிறகுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. எலி சீரணமாவதில்லை. மிக்ஸியில் அடித்துக் கொடுத்தால் சாப்பிட எளிதாக இருக்கும். சட்டை உரிப்பதன் இடைவெளிகள் நீண்டு விட்டன. விந்து சுரப்பில்லை. பாம்பு முயன்றால் எட்டுப் பத்து அடிகள் பறக்க இயலும் தற்போது.
இந்தியாவில் கால் பட்டதும் பேராசிரியருக்கு ஆசிய ஆப்பிரிக்க தொல்மொழி ஆய்வு நிறுவனத்தில் இயக்குனராகப் பதவி கிடைத்தது. பல கட்சிக் கூட்டாட்சி மையத்தில், பேராசிரியரின் முதல் மனைவியின் சித்தப்பா, 84 வயது இளைஞர், அவரது கட்சியின் ஒரேயொரு பாராளு மன்ற உறுப்பினர், பண்பாட்டுத் துறை அமைச்சர் (கேபினட் அந்தஸ்து) ஆகியிருந்தார்.
இனிமேல் பேராசிரியர் சிவலோகம் அல்லது வைகுந்தம் அல்லது இரண்டுமான பதவி சேரும்வரைகவலை இல்லை. சம்பளத்தைப் போல இன்னொரு மடங்கு பயணப்படி, பஞ்சப்படி, ஆய்வுப்படி, அதிநேரப் படி, சோற்றுப்படி, வீட்டுப்படி, வேலையாட்கள் படி, புத்தகங்கள் படி, அப்படி, இப்படி எனப் படிகள் பதினெட்டு.
தமிழச் சாதியும் என்ன தவம் செய்தது எனத் தெரியவில்லை . விமான நிலையத்தில் இருந்து விரைந்து, பல்கலைக்கழக வளாகப் பெரும்பாம்புகளிடம் கெஞ்சிக் கெரவிப் புதிய முகவரி கேட்டு, அரவம் பயணம் மேற்கொண்டது. வஞ்சம் தீர்க்கும் பயணம். வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் வயசாளிப் பாம்பின் குலமானம் இனமானம் காக்கும் பயணம். வழியில் இட்லி சாம்பார் கிடைக்குமா, இடியாப்பம் சொதி கிடைக்குமா, தயிர் சாதம் கிடைக்குமா, கையில் எடுத்து வந்த இட்லி மிளகாய்ப் பொடி, வடுமாங்காய், ஆவக்காய், வேப்பிலைக்கட்டி, கை முறுக்கு, அதிரசம் எல்லாம் பூசணம் பூத்தோ காம்பல் வீசியோ கெட்டுப் போகாதிருக்குமோ என்றெல்லாம் அதற்கு அக்கறை இல்லை.
சித்ரா பௌர்ணமிக்குள் பேராசிரியரைப் போட்டுத் தள்ளா விட்டால் அடுத்து கொய்ராலா அமாவாசைக்குக் காத்திருக்க வேண்டும். அதுவும் தாண்டிவிட்டால் அனந்த பட்சத்து அநங்கன் திதி ஒன்றுதான் மாற்று. வஞ்சம் தீர்ப்பது என்பது சாலைக்கடை முட்டை புரோட்டாசாப் பிடுவது அல்ல. நிறைய வரைமுறைகள் உண்டு. நெஞ்சில் கருதிய வஞ்சம் தீராவிட்டால், புலவர் பாடாது ஒழிக தன் நிலவறை என்றும் தன் மனைவி தவளைகளையோ எலிகளையோ புணர்ந்து இனவிருத்தி செய்யக் கடவள் என்றும் அடுத்த ஆடிக்கழிவு சட்டை உரிப்பு வரும்முன் எரிபுகுந்து உயிர்மாய்ப்பேன் என்றும் பாம்பு வஞ்சினம் வேறு பூண்டிருந் தது.
சிறுவாணி சாலையில், பேரூர், மாதம்பட்டி தாண்டி இருட்டுப் பள்ளம் தானும் விட்டு பாம்பு ஒய்ந்த கதியில் ஊர்ந்து கொண்டிருந்தது. நல்ல தணுப்பான காட்டுப்பாதை. கரும்பு, வாழை, தெங்கு, கமுகு, வெற்றிலைக் கொடிக்கால்கள், அகத்தி, புளியமரங்கள் அடர்ந்த வயல்கள், தோப்புகள். வெயில் உறைக்கவில்லை .
நிறைய கொங்கு வேளாள, பலிஜா-கம்மவார் நாயக்க, தட்சிணமாற நாடார், தேவேந்திர குல வேளாள, கள்ள, மறவ, தேவ, மலையாள நாயர், பணிக்கர், இருபத்தி நான்கு மனைச்செட்டி, ஆரிய வைசியச் செட்டித் தவளைகள் உண்ணக் கிடைத்தன. தந்திரசாலிகளான பார்ப்பளத் தவளை களும் வெள்ளாளத் தவளைகளும் கொழுப்பு வற்றிப் போய் கிடைத்தன.
ஆராய்ச்சி மையம், பெரிய வளாகம், வளாகத்தின் உள்ளேயே குடியிருப்புகள். மிகவும் அறிவார்த்தமான சூழல். திரைப்படக் கவிஞர், பெருங்கொண்ட கவிக்கோ , கவிப் பேரரசு, உலக ஐ.நா. சபை கவி செக்ரட்டரி ஜெனரல், குஜ்ஜல நாயக்கன்பட்டி பொன்தூசிக் கவிராயனின் காலம் பற்றிய ஆய்வு அதி தீவிர கதியில் பதினேழு பேர் கொண்ட குழுவால் செய்யப்பட்டு வந்தது. அவரது 13,847-வது திரைப்படப் பாடல் ஒலிப்பதிவாகும் தினத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஆய்வு நூலை வெளியிட்டு, கவிஞருக்கு புதியதோர் ‘பாட்டுக்கொரு புலவன்’ பட்ட மும் தண்ணீர் இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஐம்பது ஏக்கர் வாழைத் தோட்டத்துக்கான இலவச மானியப் பட்டாவும் வழங்குகிறார்.
தன் சாதியும் பிற சாதியுமான பாம்புகளின் குடியிருப்புகள் இருந் தமை பாம்புக்கு வசதியாகப் போயிற்று. நிலாவில் அமர்ந்து கதைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எல்லாம் கணக்கெடுத்து, சிடுக்கில்லாமல் திட்டம் செய்து, பேராசிரியரைக் குறிவைத்து, தோது பார்த்துக் காத்துக்கிடந்து கவாத்து செய்தது பாம்பு. தற்செயலாய் தன்னிலும் கிழடானதுறவிப் பாம்பொன் றைப் பார்த்தது. வெளிப்படத்தில் இசுலாமியப் பிறை, உட்படத்தில் சூலாயுதம், கழுத்தில் சிலுவை. சினிமாக்களில், சீரியல்களில் நடிக்கும் பாம்பு அல்ல. உண்மையிலேயே முற்றும் துறந்த ஞானிப் பாம்பு. இதுவரை கண்டிராத மிக அபூர்வமான இனம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை அவதரிக்கும் இறைத் தூதனாகவும் இருக்கலாம்.
பேராசிரியர் கொலஸ்ட்ரால் லிபிட் புரொஃபைல் குறைக்க, உண்டபின் பெர்முடாஸ் அணிந்து நடைபழகும் முன்னிராக் காலம். சரசரவெனக் காலில் ஏறி, தொடையில் போட்டுவிட வேண்டும் என்று கருதிக் கூட்டிக் காவல் கிடந்தது பாம்பு. துறவியோ உபதேசிக்கும் மன நிலையில், பாம்புக்கோ கிட்டிய அவசரம் போய்விடக் கூடாதே எனும் தவிப்பு. சித்ரா பௌர்ணமிக்கு இன்னும் மூன்று இரவுகளே இருந்தன.
துறவிப் பாம்பு, தத்துவ வாசிப்பு ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டது. அல்தூசர், நீட்சே, காரல்மார்க்ஸ் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, பாம்பாட்டிச் சித்தர் என மட்டில்லாப் படிப்பு, மூன்று மணிக்கூர் கொல்லாமை பற்றியும் கொன்று தின்னாமை பற்றியும் பாடம் நடத்தியது.
துறவிப் பாம்பு என்ன தின்னும்? வரகரிசிச் சோறும் மொர மொரெனப் புளித்த மோருமா? இல்லை கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற எளிய செரிமான சைவங்களா? துறவியோ, ‘இன்னா செய்தார்க்கும் இனி யவே செய்யாக்கால்’ என திருக்குறளை மேற்கோள் காட்டியது. ‘ஒரு கன் னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு’ என பைபிளைச் சொன் னது.
“பேராசிரியருக்கு உன் மீது எந்தப் பகையும் கிடையாது. மேலும் நீ பார்ப்பனனும் அல்ல; வடமொழிப் பற்றாளனும் அல்ல. அச்சம் காரண மாயும் தற்காப்பு உணர்ச்சி காரணமாயும் நடந்த விபத்துத்தானே அது?” – துறவி.
“அந்த விபத்தில் நான் செத்திருக்கவும் கூடும் அல்லவா?” பாம்பு.
”சாத்தியம்தான். ஆனால் பரத கண்டத்தில் தினமும் விபத்தில், தப்பான மருத்துவத்தில், காவல் நிலையங்களில், பயங்கரவாதத்தில், இனக் கலவரத்தில், கொள்ளை நோயில், தற்கொலையில், நீரில், தீயில், பாம்பு கடித்து, விஷச் சாராயம் குடித்து, கொலைப்பட்டு, புல் தடுக்கி, நாட்டைக் காத்து. கொழுத்துச் சாகிறவர் எத்தனைபேர்?” – துறவி.
பேசப்பேச பாம்புக்கு கண்ணில் பகைக்குறி மறைய, தயை பிறந்தது. தயையும் கொடையும் பிறவிக்குணம் என்றாலும் விதிவிலக்கு களும் உண்டுதானே மீதிக்காலத்தை ஆசாரியப் பாம்பின் காலடியிலேயே தத்துவ விசாரத்தில் கழித்துவிடலாம் என்றும் விலைமதிப்பற்ற தன் ஒரே சொத்தான நாக மாணிக்கனை தத்துவ ஸ்ரீ பாம்பணை பீடத்தின் மடத் துக்கு விருப்பக்கொடை எழுதிவைத்துவிடலாம் என்றும் தோன்றியது.
பேராசிரியர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று வஞ்சம் மறந்தது நெஞ்சம். ஆசார்யன் பூஜ்ய ஸ்ரீ இந்திர ஜால கனக சபாபதி புள் வரிப் பாம்பன் சுவாமிகள் பணிவிடைகள் – உணவு தேடல், வால் அமுக் குதல், இரவுக்கு இரகசியமாக சர்வ ஜாதிப் பேரிளம் பெண் பாம்புகளை செட்-அப் செய்தல் எல்லாம் போகவும் பாம்பிடம் நேரம் மிகுந்திருந்தது.
முன்பு விட்டுப் போன ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கலாம் என, இருள் பார்த்து, ஆளரவம் தேர்ந்து பேராசிரியரின் படிப்பறைக்குள் நுழைந்தது. இயக்குனரான பின் பேராசிரியர் மின் கட்டண பில், டெல போன் பில், உணவு விடுதி பில் போன்றவற்றை மட்டுமே படித்தாலும், இன்னும் பல ஆய்வுக் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களிலும் உறுப்பி னராக இருந்தார். அஃதெல்லாம் மொய் எழுதுவது போலதான். நமக்குச் செய்தால் நாம் திருப்பிச் செய்யவேண்டும்,
பொன்னந்திப் பொழுது. மேசைமீது விரித்த கோலத்தில் அவரது சமீபத்திய ஆய்வுக் கட்டுரை கிடந்தது. ‘மலையாளத்தின் புள்ளுவன் பாட்டும் தமிழின் வள்ளுவக் கோட்பாட்டு வழக்குகளும்’ என்ற ஆய்வின் சில பக்கங்களை மேய்தலுற்றது பாம்பு. கதவருகே மனித நிழலாட்டம். மனதில் மீண்டும் கொழும்புக் குடையடி நாடகம். பாம்பின் மனது கல்லாக இறுகியது. மடிந்து போயிருந்த வஞ்சம் சுரந்தேறி நஞ்சாகத் திரண்டது. துறவிப் பாம்பிடம் பின்னால் ஒரு பாவமன்னிப்பும் சிவதீட்சையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தோன்றியது. இத்தனை நாட்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு ஒரு பிராயச் சித்தமாக இருந்துவிட்டுப் போகட்டும் எனவும் தோன்றியது. சேதுவில் பாலம் கட்ட அணில் சுமந்த மணல் போல, தொல் தமிழ்க் குடிக்குச் செய்யும் சேவையாகக்கூட அமையலாம். “வக்காளி, வரட்டும்” எனப் பாம்பு காத்திருந்தது.
– விகடன் பவழவிழா மலர், 2002