பயிற்சிமுகாம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 1,887 
 

அத்தியாயம் ஒன்று | அத்தியாயம் இரண்டு | அத்தியாயம் மூன்று

பெரிய டேவிட்!

ஜீவன் பொதுவாகவே ‘எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?… என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும் சென்று வருவது அங்கிருந்து அறிந்தவற்றை அராலித் தோழர்களும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான். அதாவது ஒரு தபால்காரனின் வேலை தான் என்னுடையது என்பதை உணர்ந்திருந்தான். ஏ.ஜி.ஏ பொறுப்பாளர் மாலித் தோழர் தான் அவனுடைய குருஜி. காரைநகர்… முதலிய தீவுப்பகுதிகளில் எல்லாம் இவரின் கால் பதியாத இடமில்லை என்றுச் சொல்லுவார்கள்.

ஜீவன் இயக்கத்திற்கு வர முதல், சங்கானை, வட்டுக்கோட்டை, தெற்கு அராலிக் கிராம வாசிகசாலைகளிற்கெல்லாம் சென்று பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவன். அச்சமயம் முறையான புத்தகங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை. சஞ்சிகைகளில் வரும் தொடர்களை விடாமல் வாசிக்கிறதுக்காக செல்ல வேண்டி இருந்தது. அப்படித் தான் எழுத்தாளர் பாலகுமாரனின் “தாயுமானவர் “தொடரை குமுதத்தில் வாசித்தான். சிவசங்கரியின் “ஒரு மனிதனின் கதை” தொடர், முகமத் அலியின் ” ஜெயித்துக் கொண்டே இருப்பேன் ” தொடரையும் மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். முழுதையுமே சஞ்சிகைகளிலே வாசித்தவன். ஆனால் நெடுகவல்லவா செல்கிறான். அத்தியாயம் வாசிச்சு முடிந்திருக்கும். பத்திரிகைகள் வாசிக்கிறது குறைவாகவே இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். தலையங்கத்தைத் தட்டுவான் என்று சொல்லலாம். ஆனால் சஞ்சிகைகளை மேய்வான். ஒரு கட்டத்தில் விளம்பரம் , நகைச்சுவைத் துணுக்குகள் என வாசிக்க ,மேய இல்லாது ஏற்பட்டிருந்தது. அந்தக் குணம் மாலியோடு வடையும் ,தேனீரும் குடிக்கிற போது வடை சுற்றி வந்திருந்த பேப்பர் துண்டையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தான். ” நீ எதையுமே வாசிக்கிற பிரகிருதி ” என மாலி சொல்லிச் சிரித்தான்.

பாசறை வகுப்புகள் என ஏதாவது வைக்கப்பட்டால் ” நீ அங்கே போய் வா ” என அனுப்பினான். அப்படி ஒரு தடவை ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக இரவும் பகலும் நடைப்பெற்ற பாசறை வகுப்புக்குப் போய் ” பெண்ணடிமைத்தன‌ம், இயக்க வரலாறு, …அது, இதுவென சிலதை அறிந்தான். இயக்கப் பிரசுரங்கள் வந்து சேரும். ” நிர்மாணம் ” போன்ற தரமான சஞ்சிகை , பத்திரிகைகள் கூட விற்பதற்காக வரும். அவற்றை வாசிக்கவும் தோழர் தந்தார். அப்படி,அங்கே இருந்து தங்கதுரையோ…யாரோ ஒருவர் எழுதிய ” உட்கட்சி ஜனநாயகம் ” என்ற நூல் கூட வாசித்திருக்கிறான். மாலித் தோழர் விற்கவும் எடுத்து கொடுத்திருக்கிறார். அவற்றை அராலித் தோழர்களுடன் முதலில் கிராமத்தில் விற்றுப் பார்த்தான். பெரிதாக வாங்கவில்லை. சங்கரத்தை, சங்கானைக்குப் போகும் வழியில் இருக்கும் ஓடைக்கரைப்பக்க விவசாயக் குடும்பங்களில் எல்லாம் அராலித் தோழர்களுடன் சென்று விற்றான். வட்டுக்கோட்டைப் பொறுப்பாளர் ” என்ன நீ , எங்கடப் பகுதிக்குள் எல்லாம் வாராய் ” என்று சிரித்தார். அந்தத் தோழர் அவனுடன் யாழ் இந்துக்கல்லூரியில் கூடப் படித்த நண்பன்.” நாம் போகாத பக்கங்கள் தான் நீ போறாய் ? , எப்படி வாங்கிறார்களா? ” என்றும் கேட்டான். ” வாங்கிறார்களோ இல்லையோ தேனீர் எல்லாம் போட்டுத் தந்து ,நிறையக் கேட்கிறார்கள். சிறுவனுடன், சிறுமிகள் கூட கேட்கிறார்கள். நாம் தாம் தாமரைத்தோழர்கள் ஆச்சே, வாயாலே வங்காளத்திலும் தமிழீழம் நிறுவி விடுவோமே !. பதில் சொல்ல நான் வாசித்த சிவப்பு மட்டைப் புத்தகங்கள், தவிர கொண்டு போறதில் ஒரு எழுத்து கூட விடாமல் வாசித்து விட்டிருப்பேன்…எல்லாம் உதவுகின்றன ” என்றான்.உண்மையிலே அது புதிய அனுபவம் தான்.

மாலி சொன்னான். ” விற்கிறப் பணத்திலே போக்குவரத்துச் செலவு என தேனீர், வடைக்கு என எடுக்கலாம். நீ எடுக்காமல் அப்படியே கொண்டு வாராய் ” என்றான். ஆதவன் தோழரும் ஒன்றைக் குறிப்பிட்டார். ” கஸ்டப்பட்ட பகுதித் தோழர்களிடம் கொடுக்கிற போது பணத்தைக் கொண்டு வந்து தர மாட்டார்கள் . அதற்காக அவர்களைப் புறக்கணித்து நடக்காதே. அவர்களிடமும் விற்கத் தொடர்ந்தும் கொடுத்து வா. நாளைக்கு விடுதலைப் போராட்டத்தில் கடைசி வரையில் நிற்கப் போகிற தோழர்கள் அவர்கள்” என்பான். அவன் இந்தியாவில் பயிற்சியுடன் சமூக விஞ்ஞான வகுப்பையும் எடுத்தவன். ஜீவன் அவனுடைய புத்திமதிகளையும் பின் பற்றுகிறவன்.

பெரிய டேவிட் ,தொடக்கக்காலத் தோழர் (போராளிகள் எனப்படுகிறவர்களில் ஒருவர்) அந்த ஏ.ஜி.ஏ பிரிவிலேயே வழிகாட்டி போல இருந்தார். ஆனால், அரசியல் அமைப்பு வேலைகளில் தலையீடு புரிகிறதாக’ மற்றைய ஏ.ஜி.ஏ அரசியல் பிரிவினர்கள் சதா விமர்சனம் செய்தனர். இவர்களுடைய பிரிவினர் அந்த மாதிரியான தோழர்களிற்கு மரியாதைச் செய்வதை விடவில்லை. அதனால் இவர்களது அமைப்பையும் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். பல கட்டமைப்புகளில் பல்கலைக்கழகத்தில் படித்த தோழர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களால் இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பெரிய டேவிட் மணமானவர். அவரிற்கு சிறுமி மகள் ஒருத்தியும் இருந்தாள். அவர் அவ்விடத்து தோழரும் இல்லை ஆனால், உண்மை பேசுகிறவர், நேர்மையானவர் என்ற மதிப்பு நிலவியது. குடும்பம் இந்தியாவும் இங்கேயும் என வள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவரும் செல்வார். வந்து விடுவார். ஒருமுறை மகளுக்கு மஞ்சட்காமாலை வந்தது என இந்தியாவிற்கு கொண்டு சென்று வைத்தியம் பார்த்து , அவரின் மனைவி மகளோடு திரும்பி வருகின்றபோது வள்ளத்தை படையினர் பார்த்து விட்டனர். சூடு பட்டதில் படகு கவிழ்ந்து இருவரையுமே கடல் காவு கொண்டு விட்டது. ஓட்டிகள் கையறு நிலையில் நீந்தி வந்து சேர்ந்தார்கள். அந்தச் சோகத்தின் வலி அங்கிருந்த தோழர்கள், மக்களுக்குத்தான் தெரியும். ஆதவன் இவரையும் “பார், இயக்கத்தை விட்டு ஓடாத தோழர் இவர் ” என்கின்றவன்.

– தொடரும்…

(பதிவுகள் இணைய இதழிலும் இத் தொடர் வெளியாகி இருக்கிறது)

Print Friendly, PDF & Email

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)