பள்ளியில் கணக்கு வாத்தியாரிடம் கடுமையாக தண்டனை வாங்கும் மாணவன், கணக்கு வாத்தியார் காணாமல் போக மாட்டாரா என்று ஏங்குவது போல், சங்கருக்கு வந்த கோபத்தில் அவன் மேனேஜர் ராமச்சந்திரன் எப்படியாவது ஒழிந்தால் சரி என்று விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டான்.
ராமச்சந்திரனின் உத்தரவுக்கிணங்க அவர் சொல்வதையெல்லாம் முழுமையாக செய்தாலும் அவர் சங்கரை ” இந்த விஷயத்தில் இப்படி செய்திருக்க வேண்டும்” “அந்த கஸ்டமரை அப்படி ஹாண்டில் பண்ணியிருக்க வேண்டும்” என்று ஆயிரம் அறிவுரைகள்.
புஸ்தகத்தில் படிக்கும் “கேஸ் ஸ்டடிஸ் ” “கஸ்டமர் நடத்தை”, “கஸ்டமர் சைக்காலஜி ” எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே பிரதிபலிப்பதில்லை என்பது ராமச்சந்திரனுக்கு தெரிந்திருந்தும், தான் மானேஜர், என்ற தோரணையில் அந்த உயர்விடத்திலிருந்து புத்திமதிகள் புகட்டிகொண்டேயிருப்பார்! போதாக்குறைக்கு அவர் கம்பெனி முதலாளிக்கு தூரத்து சொந்தம்!
கம்பெனியை விட்டு விலகி வேறு வேலையில் சேரலாம் என்றால் , கொரோனாவுக்குப் பின்யுகத்தில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு, அதிலும் இப்போதைய உயர் சம்பளம், அலவன்ஸ், எல்லாம் புதிய வேலையில் கானல் நீர்!
காரை ஒட்டிக்கொண்டிருந்த சங்கரின் மனதில் சஞ்சலங்கள்; ஆற்காட் சாலையில் ஏற்கனவே ஏகப்பட்ட டிராபிக் நெரிசல்கள்; மெட்ரோ பணியால் கொத்து பரோட்டாவான ரோட்டில் மக்கள் டூவீலர்களில் முதுகு வலி, உடல் வலி வர, குதித்து, குதித்து, மேடு, பள்ளம், தெருப்புழுதி, புகை எல்லாம் ஜாக்கிரதையாக சமாளித்து அவரவர் அவரவர் இடத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர்.
வழியில், வட பழனி சிக்னல் அருகில், கார் டயர் பஞ்சர் ஆகி சாலையில் நின்றுகொண்டு மொபைல் போனில் மெக்கானிக்கை வரச்சொல்லிக்கொண்டிருந்தார் ராமச்சந்திரன்!
ஆயிரம்தான் இருந்தாலும், தன் மானேஜரை பார்த்து விட்டு சடன் பிரேக் போட்டு காரை அவர் அருகில் நிறுத்தினான் சங்கர். மானேஜரை நோக்கி, “சார்! என் காரில் ஏறிக்கொள்ளுங்கள்! நாம் ஆபிஸ் போய், நம் கம்பெனி மெக்கானிக்கை அனுப்பி, கார் டயர் பஞ்சர் சரி செய்து விடலாம்” என்றான்.
ராமச்சந்திரனும் கடும் வெய்யிலிலும், புழுதிப்படலத்திலும், டிராபிக் ஜாமிலும் வெகு நேரம் நின்று களைத்திருந்ததால், சங்கர் சொல்வது சரி என்று, காரில் அமர்வதற்கு கார் கதவை, கடும் வாகன ஓட்டத்திற்கிடையில் திறந்தார்.
ஓ! காட் ! அந்த நேரம் பார்த்து பின்னால் வந்த செங்கல் லோடு ஏற்றிவந்த மஞ்சள் லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ராமச்சந்திரன் மீது மோதி, அவர் தூக்கி எறியப்பட்டு அருகில் இருந்த மின் கம்பத்தில் தலை அடிபட்டு அகோரமாக ரத்த வெள்ளத்தில் அகால மரணம்!
சங்கர் ஸ்தம்பித்து , மீண்டு, காரிலிருந்து இறங்கி அவரை நோக்கி ஓடினான். அதற்குள் கூட்டம் கூடி அவரவர் தங்கள் வருத்தத்தை அருகில் நின்ற பெயர் தெரியாத மற்ற மனிதர்க்கு தெரிவித்து விட்டு நகர்ந்தனர். நல்லது செய்யப்போய், நாமே அவர் மரணத்திற்கு காரணம் ஆகிவிட்டோமே என்று வருந்தினான் சங்கர்.
ராமச்சந்திரன் இல்லா ஆபீஸ் உலகம் அதன் வணிகக்கூர்மையை இழந்தது. நாளாக நாளாக , சங்கரின் விற்பனைத்திறன் குறைந்து அவனால் சரிவர “வணிகக்குறிக்கோள்” எனப்படும் டார்கெட்களை அடைய முடியாமல் அவன் பணித்திறன் மங்கி, மழுங்கி அற்புத சேல்ஸ்மேன் என்ற பீடத்திலிருந்து ஆவெரேஜ் சேல்ஸ்மேன் ஆனான். ராமச்சந்திரன் இருக்கும்வரை ஒரு சில கணங்களில் அவர் இறக்கவேண்டும் என்று வக்கிர ஆசைப்பட்ட சங்கர், அவர் இறந்த பின்பு அவர் இருப்புக்காக ஏங்கினான்.
கொரோனா காலத்திற்குப் பிந்தைய வேலைவாய்ப்பு நிலைமை இந்தக் கதையில் சரியாகக் குறிப்பிடப்படுகிறது. கதாபாத்திரத்தின் நிலைமை சமுதாய நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அதே போல, வடபழனி ஆற்காடு சாலையின் இன்றைய உண்மையான நிலைமையைக் குறிப்பிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.
மெட்ரோ இரயில் திட்டத்திற்காக எத்தனை மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களின் இந்தச் சிரமங்கள் நினைவு கூரப்படுமா?
அப்பகுதி வாழ் மக்களும், வழக்கமாக அந்தச் சாலையில் செல்லும் பயணிகளும் இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இப்போது உதவிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால மெட்ரோ இரயில் நிர்வாகத்திற்கு இதெல்லாம் தெரிய வருமா?
இது வடபழனி ஆற்காட் சாலைக்கு மட்டுமல்ல. உள்கட்டமைப்பு வேலைகள் நடக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் பொருந்தும். இவ்வாறான உள்கட்டமைப்புகள், மக்களின் பெரும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அரசும், அதிகார நிர்வாகிகளும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்கள் மக்களிடம் பணிவாகவும், ஒத்துழைப்புடனும், உதவியாகவும் நடந்து கொள்வதுடன், இத்தகைய திட்டங்களைப் பின்னர் மக்கள் மீது சுமையாகத் திணிக்காமல் இருந்தால் அதுவே கைமாறு செய்வதாக இருக்கும்.
இந்தக் கதையை விட அதன் விவரிப்பில் இடம் பெற்றுள்ள இந்த காட்சியும், கருத்துமே முக்கியத்துவம் பெறுகின்றன. கதையின் கருப்பொருளும், தலைப்பும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.