நிர்வாண நகரத்தில் கோவணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 9,088 
 
 

குளியலறைக்கு வெளியே போடப்பட்டிருந்த மேட் வழுக்கி, தடுமாறி கீழே விழப்போய், ஒருவாறு சுதாரித்து அருகிலிருந்த ஜன்னலை பிடித்துக்கொண்டு நின்று பெருமூச்சுவிட்டுக்கொண்ட மறுநொடியே என் கண்கள் வலதுபுறம்தான் திரும்பியது…

“பார்த்து போங்க பெரியவரே!” கணினியின் திரையை விட்டே கண்களை விலக்காமல் சொல்கிறான் ஜெகா.. இடறியதை பார்த்திருக்க மாட்டானென்று நினைத்தேன், ஓரக்கண்ணால் பார்த்திருக்கக்கூடும்.. அவன் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு,
குளியலறைக்குள் நுழைந்துவிட்டேன்…

ஜெகா சொன்ன ‘பெரியவரே’ என்னை எரிச்சலூட்டியது, அதை அவனுமே அறிவான்… அறிந்ததனால்தான் என்னை எரிச்சலூட்டுகிறான் போலும்!… என்னைவிட மூன்று வயது இளையவன் என்பதற்காக, நாங்கள் இணைந்து வாழத்தொடங்கிய இந்த இருபது வருடங்களாகவே என்னை சீண்டுவதற்கான ஆயுதமாக வயதை எடுத்துக்கொள்கிறான்…

குளியலறையின் கண்ணாடியின் முன் அரை நிர்வாணமாக நின்றேன்.. பார்ப்பதற்கு ஒன்றும் அப்படி வயதானவனாக தோற்றமளிக்கவில்லை… நீண்டகாலமாக பயன்படுத்திய அழகுசாதன கிரீம்களால், முகத்தில் சுருக்கங்கள் மட்டும் எட்டிப்பார்க்கிறது… தலைமுடிகள் நரைத்த சுவடே தெரியாமல் கருப்புச்சாயத்தை முக்கிக்கொள்வதால், உடலின் ரோமங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் ’50 வயசு, 50 வயசு’ என்று அபாய மணி
அடித்துக்கொண்டிருக்கிறது… மற்றபடி… ஊஹூம்… நிச்சயம் எவராலும் 50 வயதென கூறிட முடியாதுதான்…

இதென்ன முட்டாள்த்தனமான கவலை?… வயது ஆவதென்ன கிரிமினல் குற்றமா? ஏன் அதற்குப்போய் இவ்வளவு கவலைப்படுகிறேன்?… இது இன்று நேற்றல்ல, இருபது வயது முதலாகவே வயதை குறைத்துக்காட்ட எத்தனிக்கும் முயற்சியின் நீட்சிதான்.. யாராவது ஒருவர் “ஐயோ உங்கள பாக்க அவ்ளோ வயசான மாதிரியே
தெரியலைங்க!” என்று சொல்லிவிட்டால், அப்படியே பறப்பது போல உணர்வு உண்டாகும்.. அதேநேரத்தில் இப்படி ஜெகா சொல்வதைப்போல எவரேனும் குத்திக்காட்டினால், டை அடித்த தலைக்கு மேல் கோபம் வருகிறது…

“பெரியவரே, பாத்ரூம் போய் பத்து நிமிஷம் ஆகுது, இன்னும் தண்ணி சத்தமே கேட்கலையே?… அப்டி என்ன பண்றீங்க?” ஜெகா அடுத்த அம்பை பாய்ச்சினான், அழுத்தக்காரன்… தண்ணீரை வேகமாக திறந்துவிட்டேன், மீண்டும் என்னை மேலும் கீழுமாக கண்ணாடியில் பார்த்துவிட்டு குளிக்கத்தொடங்கினேன்…

நான்கு வாரத்தில் சென்னையின் மெட்ரோ தண்ணீர் பழக்கப்பட்டுவிட்டது…தொடக்கத்தில் லேசான பிசுபிசுப்பாய் இருப்பதை போல தோன்றியது வெறும் மாயையோ? என இப்போது தோன்றுகிறது… வீரானத்திலிருந்து தண்ணீர்
கொண்டுவருவதாக எப்போதோ செய்தி படித்த நியாபகம், இன்னும் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் வந்திடாதது மனதிற்கு நிறைவை தருகிறது…

சிந்தனையை தண்ணீர் பக்கம் திருப்பிட முயற்சித்தும், குளித்து முடித்தவுடன் பழைய ‘வயது’ நினைவு எட்டிப்பார்த்துவிட்டது…

தலையில் வழிந்துகொண்டிருந்த தண்ணீரை துடைத்துக்கொண்டே வெளியே வந்தேன்… வாயிலில் கிடந்த மேட்டில் தடுமாறிடக்கூடாது என்கிற கவனத்தோடு காலை சுதாரித்து வைத்து நடந்தேன்… தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த ஜெகா, என்னை பார்த்ததும் வேகமாக எழுந்துவந்து துண்டை வைத்து என் தலையை துவட்டத்தொடங்கினான்…

“இப்டி தண்ணி வழியிறதோட இருந்தா, தலைதான் வலிக்கும்… உனக்கு சைனஸ் இருக்குங்குறது மறந்துடுச்சா?” அக்கறையோடுதான் கண்டித்தான்…ஏற்கனவே வயது பிரச்சினையில் வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த மனது, “எது வந்தாலும் உன்னை மருந்து தேய்ச்சுவிட சொல்லமாட்டேன், கவலைப்படாத…”

வெடுக்கென விலகிக்கொண்டேன்..

“ஓஹோ.. நாங்க தேய்ச்சுவிடாம, உங்களுக்கு ஜான் ஆப்ரஹாம் வந்து தேச்சுவிடுவானோ?… ஆனாலும் கிழவனுக்கு ரொம்பத்தான் ஆச” என் கன்னத்தை கிள்ளினான், எனது எரிச்சல் பல செண்டிகிரேடுகள் உயர்ந்திருந்தது…துண்டை தூக்கி தூர வீசிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்துகொண்டேன்… எதிர்த்துப்பேசவில்லை, அவனிடம் பேசித்தான் என் கோபத்தை புரியவைக்க வேண்டுமென்கிற அவசியமும் இல்லை… எதிர்பார்த்ததுபோலவே என்னருகில் அமர்ந்து, தோளை தொட்டு முகத்தைப்பார்த்தான்.. மூடப்பட்டிருந்த ஜன்னலிலேயே எனது பார்வை பதிந்திருந்தது..

“ஜன்னல் நல்ல மரத்துலதான் விசு பண்ணிருக்காங்க” சிரித்தான்…நான் பதில் சொல்லவில்லை… “ஆனாலும் என் தேக்கு மரம் அளவுக்கு வராது”

தலைமுடிகளை கலைத்துவிட்டான்…

“எனக்குதான் வயசாச்சே!”

“வயசானா என்ன?… நீ வைரம் பாய்ஞ்ச தேக்குமரம்… அவனவனும் அறுபது எழுபது வயசுல மேக்கப் போட்டுகிட்ட சின்ன பொண்ணுக கூட ஜோடியா சினிமால நடிக்கிறாங்க… உனக்கென்ன அப்டி வயசாச்சு?… இப்பவும் ஜீன்ஸ் பேன்ட்னு போட்டின்னா, ஜான் ஆப்ரஹாமுக்கு போட்டியா பாலிவுட்டை கலக்கலாம் தெரியுமா?”

அந்தர் பல்டி என்கிற வார்த்தைக்கு அப்போதுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது… ‘பொய் சொல்லாத!’னு சொல்ல தோனல.. அந்த கற்பனையின் சுவை என்னை வசீகரித்தததனால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்ய விருப்பமில்லை…

“இதல்லாம் எதுக்கு ஜெகா?… இன்னும் நாம சின்ன பசங்களா?…”

“இதைத்தான் நான் சொன்னேன், அதுக்குதான் நீ கோவிச்சுகிட்ட”

“அதை சொல்லல, இந்த விளையாட்டல்லாம் இப்போ எதுக்கு?”

“சீரியசாவே வாழ்க்கை நகர்றதுல லைப் போர் விசு… அப்பப்போ நம்மள வார்மப் பண்ணிக்க, இப்டி சின்ன சின்ன சண்டைகள் இருக்குறதில தப்பில்ல” அவன் சொல்வதும் சரிதான்… எப்போதும் வேலை, பணம், டாக்ஸ், பீபி மாத்திரை’ன்னே வாழ்க்கை நகர்வதில் சுவாரசியங்கள் இல்லாமல் போவதுண்டு…

அமெரிக்காவிலிருந்து ஒரு மாத விடுப்பிற்கு இந்தியா வந்ததில், 28 நாட்கள் ஓடிவிட்டது… இங்கும்கூட பழைய நண்பர்களை கண்டபோது, அதே பிஸ்னஸ், ஷார் மார்க்கெட் புலம்பல்கள்தான்… அவ்வப்போது பழைய நினைவுகளை மீட்டெடுத்த இடங்களுக்கு செல்கையில் மட்டும் மனதில் ஒரு இனம் புரியாத பரவசம்..

மற்றபடி இருபது வருடங்களுக்கு முன்னிருந்த சென்னையின் ரசனைமிக்க விஷயங்கள் இப்போதில்லை என்றே தோன்றுகிறது…

“இப்போ எங்க போறோம் விசு?”

“வேளச்சேரிக்கு”

“அங்க என்ன?”

“ஒரு முக்கியமான ஆளை பார்க்க”

“யாருன்னு சொல்லக்கூடாதா?”

“அதை போனப்புறம் தெரிஞ்சுக்கக்கூடாதா?” ரகசியங்கள் ஜெகாவிற்கு பிடிக்காதவை, அதனால்தான் சாதாரண ஒரு விஷயத்திற்கு இந்த அளவிற்கு காட்சி அமைப்புகளை உருவாக்குகிறேன்… நிச்சயம் அவன் நினைவுகள் முழுக்க இப்போது வேளச்சேரியை வலம்வர தொடங்கியிருக்கும்.. அதை எதையும் பொருட்படுத்தாது,
கால் டாக்சியில் ஏறினோம்…வேளச்சேரியின் முகவரி சொன்னதும் சிநேகமான புன்னகையுடன் வாகனத்தை
ஓட்டத்தொடங்கினார் ஓட்டுனர்.. மத்திம வயதினர், சென்னையின் பரபரப்பிற்கு மத்தியில் அப்படியோர் புன்னகை மெலிதான ஆச்சர்யத்திற்கு உரியதுதான்…

கண்ணாடி வழியே சாலையோரங்களை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த ஜெகா, “சென்னை, ட்ராபிக் நிறைந்த சொர்க்கம்ல?” ஏதோ கவிதைக்கு முயற்சி செய்கிறான் போலும், நான் சிரித்துக்கொண்டேன்…

“மெட்ராஸ சொர்க்கம்னு சொல்ற மொத ஆள் நீங்கதான் சார்” ஓட்டுனர்தான் எதிர்வினை புரிந்தார்…

“ஏங்க, நல்ல ஊர் தான?”

“நல்ல ஊர்தான் சார்… பொதுவா மத்த ஊர்க்காரங்க அப்டி சொல்லமாட்டாங்க…அவங்க என்னமோ வானத்துலேந்து குதிச்சா மாதிரியும், இங்க உள்ளவங்கதான் தப்பு செய்றதுக்குன்னே பொறந்த மாதிரியும் பேசுவாங்க… நீங்க வெளிநாட்லேந்து வர்றீங்களா சார்?”

“ஆமா… யு.எஸ்’லேந்து… எப்டி கண்டுபிடிச்சீங்க?”

“பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் சார், பார்த்ததும் பெரும்பாலும் கணிச்சிடுவேன்… வெயில்ல நிக்குறவங்களுக்குதானே நிழலோட அருமை புரியுது!”

அளவாக சிரித்தார்… சரியாகத்தான் சொல்கிறார்… சென்னையின் மீதான பிடிப்பு, கலிபோர்னியாவிற்கு போனபிறகுதான் அதிகமானது…

“அடுத்தமுறை நிச்சயம் இன்பாவையும் கூட்டிட்டு வரணும் விசு, அவன ரொம்ப மிஸ் பண்றேன்” ஜெகாவின் முகம் சுருங்கிப்போனது.. அவன் கையை அழுத்தப்பிடித்து ஆறுதல் சொன்னேன்.. உண்மைதான் அவன் பிறந்ததிலிருந்து இவ்வளவு நாள் அவனைவிட்டு பிரிந்திருந்ததில்லை… வந்திருந்தால் நிறைய
கேள்விகளை கேட்டிருப்பான், அவனுக்கு புது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்…

“வேணாம் விசு… இன்பாவுக்கு இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல, இப்போ சென்னைல அடிக்கிற வெயிலை இவனால தாங்கிக்கமுடியாது.. அவன் என்கூட இருக்கட்டும், நீங்க போயிட்டு வாங்க” என்று அந்த மருத்துவ நண்பன் சொல்லும்போது என்னால் மறுக்கமுடியவில்லை… வேறு வழியின்றி இருவரும் அவனைவிட்டு பறந்துவந்துவிட்டோம்…

“பரவால்ல விடு ஜெகா, நம்ம இன்பா பெரியவன் ஆனப்புறம் இங்கயே நல்ல பொண்ணா பார்த்து கட்டிவச்சிடலாம்…”

“அவனுக்கு இப்போதான ஆறு வயசு, அதுக்குள்ள கல்யாணப்பேச்சா?”

“ஏன் பேசக்கூடாது?…. எப்போவா இருந்தாலும் நாமதான பண்ணிவைக்கணும்?”

“நமக்கு நம்ம பெத்தவங்கதான் செஞ்சு வச்சாங்களா?”

“அதுவும் இதுவும் ஒண்ணா ஜெகா?”

வார்த்தைகள் மெள்ள மெள்ள சூடாகி, ஒருகட்டத்தில் அனல்காற்று அந்த மகிழுந்தை ஆக்கிரமித்திருந்தது… சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை…

“கேட்குறேன்னு தப்பா நினைக்காதிங்க, யாரு சார் அந்த இன்பா?” வாகன ஓட்டுனர் மீண்டும் தொடங்கினார்…

“எங்க பையன்” இருவருமே ஒரே குரலாய் சொன்னோம்…

“அப்டின்னா?” ஏதோ ஒரு அனுமானத்திற்கு வந்துவிட்டாலும், தொக்கி நின்ற சந்தேக பிசுறுகளை களைவதற்காக கேட்டார்…

“அப்டின்னா எங்க பையன்தான்… நாங்க கே கப்புள்… எங்களுக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த பையன் இன்பா…” இதைசொல்ல ஜெகாவிற்கு தயக்கமில்லை… இந்திய சட்டத்தால் எங்களை ஒன்றும் செய்துவிடமுடியாது
என்கிற மெல்லிய துணிச்சலும் அந்த வார்த்தைகளில் தெரிந்தது..

“ஓஹோ… சரி சரி” நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கான பெரிய ‘ஓஹோ’ அது இல்லை, சற்று சிறிய அளவிலானதுதான்,,,

“இதப்பத்தியல்லாம் உங்களுக்கு தெரியுமா?” நான்தான் ஆச்சர்யத்தோடு கேட்டேன்..

“ஓரளவு தெரியும் சார்… கொஞ்சம் படிச்சிருக்கேன்… ஒருதடவ இங்க பேரணி நடந்தப்போகூட பார்த்திருக்கேன்…” சகஜமாக சொன்னார்…

“அதை தப்புன்னு நினைக்குறீங்களா?”

“என்ன சார் மீடியாக்காரன் மாதிரி கேட்குறீங்க?… என்னை கே’வா மாற சொன்னாதான சார் தப்பு, நீங்க அப்டி இருக்குறதில தப்பு சொல்ல நான் யார் சார்?” மிகவும் முதிர்ச்சியான புரிதல்…

“சென்னைல இப்டி புரிதல் உள்ள ஆள பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல… சந்தோஷமா இருக்குப்பா..” ஜெகா உருகிப்போனான்…

“இதுல என்ன சார் புரிதல் இருக்கு?.. நீங்க இப்போ என் கஸ்டமரா வந்ததால நான் இப்டி பேசுறேன்… ஒருவேளை என் பையன் கே’வா இருந்தா நான் இப்டி ரியாக்ட் பண்ணிருப்பனான்னு சொல்லமுடியாது பாருங்க…”

“அப்டியா?.. அப்போ நீங்களும் அடுத்தவங்க மனசை புரிஞ்சுக்கலைன்னுதான அர்த்தம்?”

“அம்மணமா திரியுற ஊருல, கோவணம் கட்டினாக்கூட அது முட்டாள்த்தனமாதான் தெரியும் சார்… அதனால அசிங்கம்னு தெரிஞ்சாலும் இங்க அம்மனமாதான் திரியனும்… இங்க அடுத்தவன் வெறுக்குறாங்குற காரணத்தால்தான் பெரும்பாலான ஆட்கள் இதை எதிர்க்குறான் .. மத்தபடி யாருக்கும் பெருசா அடுத்தவங்க மேல
கோபமல்லாம் இல்ல சார்…”

அவர் சொல்வதும் சரியாகத்தான் பட்டது… ஆனாலும் என் தங்கை போல ஒருசில ஆட்கள் இங்கும்கூட என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பது, ஓட்டுனர் சொன்ன உதாரணத்தை மீறிய பக்குவம்தான்…

வேளச்சேரியை அடைந்துவிட்டோம்… வாகனத்தை அருகில் நிறுத்துமாறு கூறிவிட்டு, நானும் ஜெகாவும் இறங்கி குடியிருப்புக்குள் நுழைந்தோம்..

மூன்றாவது மாடிக்கு செல்லவேண்டும்.. “லிப்ட் பழுதடைந்துள்ளது” என்கிற பதாகை எரிச்சலூட்டியது… ஜெகாவிற்கு ஆஞ்சியோ செய்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது, விமானத்தின் படிக்கட்டுகளை ஏறவே மூச்சுவாங்கி சிரமப்பட்டு ஏறினான்… அவனை மூன்று மாடிகள் வரை படியேற்றி இம்சிக்க விரும்பவில்லை…

“சரி ரிட்டர்ன் போய்டலாம் ஜெகா, அடுத்தமுறை பார்த்துக்கலாம்…” அரைமனதோடுதான் சொன்னேன்…

“பரவால்ல… நான் கார்ல வெயிட் பண்றேன், நீ பார்த்துட்டு வா.. உன் தங்கச்சியும் ரொம்ப சந்தோஷப்படுவா…” தோள் தட்டி சொன்னான்…

“ஏய், இது கயல் வீடுன்னு உனக்கெப்டி தெரியும்?” ஆச்சர்யம் தாங்காது கேட்டேன்…

“இத கண்டுபிடிக்க சி,பி,ஐ’யா வரணும்… உன் முகத்த பார்த்தாவே பளிச்சுன்னு தெரியுது, நீ எந்தெந்த விஷயத்துக்கு எப்டி ரியாக்ட் பண்ணுவன்னு கூடவா எனக்கு தெரியாது?” அதுதான் ஜெகா, அவ்வளவு அழகாக
அனுமானிப்பான்.. புரிதல் விஷயத்தில் அவன் சிவாஜி என்றால், நான் பவர் ஸ்டார் தான்… அவன் சொல்வதும் சரிதான், நான் மட்டும் படியேறத்தொடங்கினேன்…

இந்த இருபது வருடங்களில், என் குடும்பத்து நபர்களில் கயலிடம் மட்டும்தான் அவ்வப்போது தொடர்பில் இருக்கிறேன்… மூன்று ஆண் பிள்ளைகளுக்கு அடுத்ததாக பிறந்த பெண் என்பதால், எங்கள் எல்லோருடைய எக்ஸ்ட்ரா பாசத்துக்கு சொந்தக்காரி அவள்… மற்ற அண்ணன்மார்களைவிட, அவளுக்கு என்னிடத்தில்
கொஞ்சம் கூடுதல் பிணைப்பு… என் பாலீர்ப்பை வெளிப்படுத்தியபிறகு, வீட்டிலிருந்து பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வெளியேறி அமெரிக்கா சென்றபிறகு, தங்கையுடன் மட்டும் பேசவேண்டுமென்கிற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்ததுண்டு… அவள் பேசுவாளா? என்கிற தயக்கத்தோடு அலைபேசியில் அழைத்தபோது, பழைய பாசத்தோடு பேசியதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி…

அப்போது மீண்டும் துளிர்த்த உறவின் நீட்சியாக அவள் வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அழுத்துகிறேன்…

மூன்றாவது முறை அழுத்தியபிறகு, கையில் கரண்டியுடன் கதவை திறந்தாள் கயல்… சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமமும், வெள்ளைக்கல் மூக்குத்தியுமாக, நெற்றியில் வழிந்த வியர்வையை தோளை உயர்த்தி துடைத்துக்கொள்வதை பார்க்கும்போது ஓரிரு வினாடிகள் என் அம்மாவை பார்ப்பது போலவே தெரிந்தது…

கண்களை சுருக்கி உற்று கவனித்தவள், சட்டென சுதாரித்து, “அண்ணே… வாண்னே..” என்று பரபரப்பாய் என் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்…

“ஐயோ அண்ணே… திடீர்னு சொல்லாம வந்து… வீடல்லாம் இப்புடி கெடக்கு”

அவசரமாக சோபாவில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்திவிட்டு, கையால் தூசியை தட்டிவிட்டு, என்னை அமரச்செய்தாள்…

சமையலறைக்குள் விசில் சத்தம் கேட்டிட, தலையில் தட்டியபடி, “அச்சச்சோ அடுப்புல வச்சத மறந்தே போயிட்டேன்” என்று ஓடினாள், ஓடிய வேகத்தில் திரும்பியவள் “என்னண்ணே குடிக்குற?… முன்னமாதிரி காபிதான?” இன்னும் பதட்டமாகத்தான் தெரிகிறாள் கயல்…

“நீ முதல்ல உட்காரும்மா… தங்கச்சி வீட்டுல என்ன பார்மாலிட்டி வேண்டிக்கெடக்கு?, சும்மா உக்காரும்மா” அருகில் அமரச்செய்து அவளை ஆசுவாசப்படுத்தினேன்…

சிரித்துக்கொண்டாள்… குடும்பப்பொறுப்புடன் கயலை பார்ப்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது..
“மச்சான், பிள்ளைகள்லாம் எங்கம்மா?” சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே கேட்டேன்…

“திருச்சிவரைக்கும் ஒரு வேலையா போயிருக்கார்னே, பசங்க ஸ்கூலுக்கு போய்ட்டாங்க… நீ எப்போ யு.எஸ்.லேந்து வந்த?”

“ஒரு பிஸ்னஸ் விஷயமா வந்து ஒரு மாசத்துக்கிட்ட ஆச்சு… இன்னும் ரெண்டு நாள்ல ரிட்டர்ன் போகணும்”

“இப்பதான் என்ன பாக்கனும்னு தோனுச்சாக்கும்?” உரிமையோடு கோபித்துக்கொண்டாள்… இப்படி உரிமைகள் எடுத்துக்கொள்ள உறவுகள் இல்லாது தவித்த நாட்கள் மனத்திரையில் தோன்றி மறைந்தன…

“அப்டி இல்லம்மா… நேரமே இல்லாத அளவுக்கு பிஸ்னஸ் வேலைம்மா, அதான்… சரி, நீ நல்லா இருக்கியா?… எல்லாரும் எப்புடி இருக்காங்க?”

“அதல்லாம் ஒன்னும் கொறை இல்லைண்ணே… பெரியண்ணேதான் இன்னும் உம்மேல கோவம் குறையாம இருக்கு.. என்ன பண்றது, எல்லாம் நம்மள மீறி நடந்திடுச்சு” காபி குவளையை ஆற்றிக்கொண்டே ஆற்றாமையை வெளிப்படுத்தினாள்…

“அவங்க கெடக்குறாங்க விடும்மா… நீ என்னைய புரிஞ்சுகிட்டதே போதும்.. ஆமா, ஆள் ஏன் இப்புடி இளைச்சு போய்ட்ட?” காபியை குடித்துக்கொண்டே கேட்டேன்…

“அப்புடியல்லாம் இல்லைண்ணே… நல்லாத்தான் இருக்கேன்… சின்ன வயசுல உருண்டை சைஸ்ல பார்த்துட்டு, இப்போ பாக்குறதுக்கு அப்புடி தெரியுது போல… நீதான் ஆளு அப்புடியே இருக்கண்ணே…” கயலின் கண்களில் பாசம் மிளிர்ந்தது…

வேகமாய் ஓடிப்போய் அவளுடைய திருமண ஆல்பத்தை எடுத்துவந்து, என்னருகில் அமர்ந்து ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அழகாக விளக்கம் சொன்னாள்… “தாலி எடுத்துக்கொடுத்தது நம்ம பெரிய தாத்தாதாண்ணே…”, “சின்னண்ணன் வெட்கப்படுறத பாரு”, “தேவகோட்டை மாமா, சீர் எடுக்குற பிரச்சினைல கோவிச்சுகிட்டு போயிட்டாரு” அவள் கல்யாணத்தை என் மனக்கண் முன்பு திரைபோல ஓடச்செய்தாள்..

“நீ இல்லாத ஒரு கொறைய தவிர, எல்லாமே நிறைவா இருந்துச்சு…” சொல்லும்போது அவள் கண்கள் கலங்கியிருந்தது… தலையை வருடி கயலை தேற்ற முயன்றேன்…

அழைப்புமணி ஒலிக்க, கண்ணீரை துடைத்துக்கொண்டே கதவை திறந்தாள் கயல்… மூச்சிரைக்க நின்றான் ஜெகா… கயலைப்பற்றி அவனிடம் நிறைய சொல்லியிருக்கிறேன், அவளை பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் மெள்ள ஒவ்வொரு படியாக ஏறி வந்திருக்கக்கூடும்… கயலுக்கு அடையாளம் தெரியவில்லை, கண்களை சுருக்கி பார்த்தவாறே, “யாருங்க வேணும்?” என்றபோது, அவர்களின் அறிமுகங்களை நானே செய்துவைத்தேன்…

அதுவரை மலர்ந்திருந்த கயலின் முகம், “இவன்தான் என் வாழ்க்கைத்துணைவன் கயல்… பேரு ஜெகா..” என்று சொன்னபிறகு காய்ந்த வற்றலை போல சுருங்கிவிட்டது…

சம்பிரதாயத்துக்கு, “வாங்க… உட்காருங்க” என்று சொன்னாளே தவிர, பழைய உற்சாக பேச்சு எதுவும் இப்போதில்லை…

ஜெகாவாகவே பேசுவதற்கான சூழலை உருவாக்கியும்கூட, அதற்கும் பட்டும்படாத பதில்கள்… மூச்சிரைக்க, வியர்வை வழிய வந்தவன் ஆசுவாசமாகிட ஒரு குவளை தண்ணீர் கூட கொடுக்கவில்லை… ஏதோ மனதை நெருடியது, தவறாக நடப்பதாக உறுத்தியது…

இதனை ஜெகா உணர்வதற்கு முன்பு அங்கிருந்து கிளம்புவதுதான் உத்தமம்…

“சரி கயல், நாங்க கிளம்புறோம்… மதியம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்றபடி எழுந்தேன்… கயல் தடுக்கவில்லை… “இருந்து சாப்ட்டு போண்னே” என்று வாய்வார்த்தையாக கூட சொல்லவில்லை… சூழலின் வீரியம் எதுவும் ஜெகாவிற்கு புரியாததால், இயல்பான விடைபெறுதலோடு வாசலை நோக்கி
நடந்தான்…

நானும் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகையில், “அண்ணே ஒரு நிமிஷம்…” என்றாள் கயல்…

“என்ன?” என்று தலையை உயர்த்தி கேட்டேன்…

“நீ என் அண்ணன்… நீ எப்பவேணாலும் இங்க வரலாம், போகலாம்… பத்து நாள் இருந்துட்டுகூட போகலாம்… ஆனா, லைப் பார்ட்னர்னு இப்டி கண்டவங்களையும் இனி கூட்டிட்டு வராத… இது பத்து பேமிலி குடியிருக்குற அப்பார்ட்மெண்ட்”

முகத்தை திருப்பிக்கொண்டாள்…

வார்த்தைகளின் நெருப்பு என்னை அப்படியே பொசுக்கியது…

“ரொம்ப சந்தோசம்… இப்டி வெளிப்படையா பேசுனதுக்கு… இனி உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன், கவலைப்படாத…” அவள் கைகளில் ஒரு நூறு ரூபாய் தாளை திணித்தேன்…

“எதுக்கு?” என்பதுபோல என் முகத்தை பார்த்தாள்…

“உன் வீட்டுல குடிச்ச காபிக்கு…” சொல்லிவிட்டு மீண்டுமொருமுறை அவள் முகத்தை திரும்பி பார்த்திடாமல் வாசலை நோக்கி நடந்தேன்…

படிக்கட்டுகளில் மெள்ள இறங்கிக்கொண்டிருந்த ஜெகாவின் அருகே சென்று, அவன் கையை எனது தோளோடு அணைத்தவாறே அரவணைத்து அழைத்து சென்றேன்…

குட்டித்தூக்கம் கலைந்து, கொட்டாவியோடு எங்களை பார்த்ததும் எழுந்தார் ஓட்டுனர்… கைக்கடிகாரத்தை பார்த்தவாறே, “என்ன சார் அதுக்குள்ளையும் வந்துட்டீங்க?… எப்டியும் விருந்து முடிச்சிட்டுதான் வருவீங்கன்னு
எதிர்பார்த்தேன்…” சிரித்துக்கொண்டே சொன்னார்…

பதிலெதுவும் சொல்லாமல் காருக்குள் ஏறி அமர்ந்தேன்… ஜெகாவிற்கு இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது… தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவன் முன் நீட்டினேன்… குடித்துக்கொண்டே என்னை அதிசயமாக பார்க்கிறான்… என் முகமாற்றம் அவனுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்கும்… எதையும் கவனிக்காததை போலவே அமர்ந்திருந்தேன்..

ஐந்து நிமிட பயணத்தில் அமைதி மட்டுமே நிலவியது… ஓட்டுனருக்கே பொறுக்காமல், “என்ன சார் இவ்ளோ அமைதியா வர்றீங்க?… எதுவும் பிரச்சினையா?” கண்ணாடி வழியே என்னைப்பார்த்து கேட்டார்… ஜெகாவும் என்
பதிலுக்காக காத்திருப்பதை போல, கண்கொட்டாமல் என் கண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான்….

“ஒண்ணுமில்லப்பா… நிர்வாணமா திரியுற ஊருல, நான் கட்டியிருக்குற கோவணம் அசிங்கமா தெரியுது!… அவ்ளோதான்…” அவர் சொன்னதையே, அவருக்கான கேள்வியின் பதிலாக சொல்லி முடித்தேன்… சொல்வதன் உள்ளர்த்தம் புரியாமல் ஓட்டுனர் விழிக்க, எல்லாவற்றையும் ஊகித்துவிட்டதை போல எனது கையை தன்
கையால் இறுக்கமாக அழுத்தினான் ஜெகா… அந்த அழுத்தத்தில், அதுவரை என் மனதை அழுத்திய வலிகள் கரைந்துபோய் கண்களின் நீராய் கசிந்தது…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *