கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,510 
 

கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு் வெளியே செல்ல வேண்டும். இதுதான் பாமாவின் ஆசை.

திருமணத்தன்று கைபிடித்தது. அப்போது 20 வயது.

திருமணமான புதிதில் ஊட்டி போனபோது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள்.

”என்னங்க நாம கைகோர்த்துக்கிட்டு போலாமா..”

கிண்டலாய்ப் பார்த்தவர் சொன்னார்.

”நீ கண்ட சினிமாவையும் பார்த்து கண்ட புஸ்தகத்தையும் படிச்சு கெட்டுப் போயிருக்குறே.”.

40 வயதில் ஒரு முறை இந்த ஆசை வந்தது.

“பிள்ளைகள் முன்னாடி என்ன இதெல்லாம் வேண்டாத ஆசை “என்றார்.

அதன்பின் எப்போதுமே அவள் கேட்பதில்லை.

அந்த ஆசை நிறைவேறவேயில்லை.

எங்கே சென்றாலும் கணவன் முன்னே வேகவேகமாக செல்ல பின்னே ஓடியே பழக்கமாகிவிட்டது. பின்னால் மனைவி வருகிறாளா இல்லையா எனக்கூட திரும்பிப் பார்க்காமல் செல்பவரிடம் எப்படிக் கேட்பது?

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி வரப்போகிறது. அப்போதாவது கையைப் பிடித்துக் கொள்ளலாம் என ஆசையோடு இருந்தாள்.

படியில் ஸ்லிப்பாகி கால் ஃப்ராக்சராகி விட்டது கணவருக்கு.

கால் கட்டோடு எழுந்து பால்கனிக்கு செல்ல முயன்றவர் தடுமாறினார். தடுமாறியவரைத் தோள்பிடித்து நிற்க வைத்தாள். கைபிடித்து அழைத்துச் செல்ல கை நீட்டியபோது,

“நீ போய் கிச்சன் வேலையைப் பாரு” என்றபடி அப்போதும் கைபிடிக்காமல் பிடிவாதமாய் வாக்கரைப் பிடித்து நடக்கும் கணவரைக் கண்டு விக்கித்து நின்றாள் பாமா.

– தேனம்மை லக்ஷ்மணன் (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *